Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 22

அத்தியாயம் 22



Advertisement

 

ஒலித்த கைப்பேசியை‌ எடுத்துப் பேச்சைத் துவக்கினாள் செந்தமிழ்.

Advertisement

“சொல்லுங்க அண்ணி.”

Advertisement

மறுபுறம் கீதா, “இன்னைக்கு ஊருக்கு வர்றதா சொல்லி இருக்கான், உன்னோட வீட்டுக்காரன்.”

Advertisement

“யாரு, உங்க தம்பியா.?”

“ரெண்டுமே ஒருத்தன் தான.?”

“என்னைப் பொறுத்த வரை, வேற வேற. உங்க தம்பி, ஏதோ ஓரளவுக்கு நல்லவரு.‌ ஆனா என்னோட புருஷன், சரியான திமிர் பிடிச்சவரு‌. பிடிவாதக்காரர்.”

கீதா சிரித்து, “என்னதான் பிரச்சனை, உங்க ரெண்டு பேருக்கு நடுவுல?”

“அதை, அவருக்கிட்டயே கேட்கிறது தான.?”

“ஏன், நீயி சொல்ல மாட்டியா?”

“எனக்கே தெரியலயே.?‌” என்றவளின் குரலில் மிதமிஞ்சிய வலியும் ஏமாற்றமும் அப்பட்டமாய்த் தெரிந்தது.

உண்மைதான். கணவனது நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று அவளிற்குத் தெரியாது. அறிந்து கொள்ள முயன்றும், முடியவில்லை.‌ தமிழ் உறுதியாய் உரைத்தபின், சேரல் கைப்பேசியில் கூட அழைக்கவில்லை. சவிதாவிடம் மட்டுமே, நாள் ஒன்றுக்கு இரு முறை பேசினான்.‌ அதை, அவளும் அறிந்தே தான் இருந்தாள்.

‘தம்பியானவன், தனது வினாவிற்குப் பதில் அளிக்கவில்லை!’ என்றதுமே, திங்கட்கிழமை அன்றே தமிழை அழைத்துப் பேசி விட்டாள் கீதா. மூன்று நாட்களாய் நாத்தனாருக்கும் கொழுந்தியாவிற்கும் இடையே தொடர்பு இருந்து கொண்டே தான், வருகிறது.

உண்மையை உரைக்க வேண்டுமானால், தற்போது வரையிலான கணவனது நடவடிக்கைகளை அறிந்து வைத்திருக்கிறாள் தமிழ்.

கீதா சமாதானமாய், “சேரல், காரணம் இல்லாம எதுவும் செய்ய மாட்டான்.‌ ஊருக்கு வந்ததும், நீயும் கொஞ்சம் கோவப்படாம என்னனு விசாரி‌.”

“ம்ம்.. பார்க்கிறேன் அண்ணி.”

“கல்யாணம் ஆகி பதினோரு நாள்தான் ஆகுது.‌ அதுக்குள்ள அஞ்சு நாளா, ஆளுக்கொரு பக்கமா இருக்கிறது சங்கடமா இருக்கு.”

“இதுக்கு, நானு காரணம் இல்ல. எல்லாம் உங்க தொம்பி தான்.”

“ரொம்பக் கோவமா இருக்கியா.?”

“இருந்தா,‌ என்ன செய்யப் போறீங்க.?”

“என்னால என்ன செய்ய முடியும்? அவனை வேணும்னா நாலு அடி போட்டு, இதுமாதிரி எல்லாம் நடந்துக்காதடா கிறுக்கு பயலேனு சொல்லலாம்.”

“அதை, முதல்ல செய்யிங்க அண்ணி. அப்பவாது புத்தி வருதானு பார்க்கலாம் அவருக்கு.”

“எப்படி என்னோட புருஷனை அடிக்கலாம்னு சண்டைக்கு எதுவும் வரமாட்ட இல்ல, நீயி.?”

“நிச்சயமா வரமாட்டேன். வேணும்னா, அடிக்கிறதுக்கு உலக்கை வாங்கித் தர்றேன்.”

“நல்ல பொண்டாட்டி!” என்றிட, சிரித்தபடி பேச்சை நிறுத்தினாள் தமிழ்.

 

* * *

 

காலை எட்டு மணி அளவில் குமாரிடம் கடையின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இல்லம் வந்து சேர்ந்தான் சேரல். குளிப்பதற்காகச் சென்றவனின் கைப்பேசி சப்தமிட, எதிர் பக்கம் சொன்ன செய்தியில் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“என்ன அத்தை சொல்லுறீங்க.?”

“ஆமா சேரா. ‘திடீர்னு லெட்டர் எழுதி வச்சிட்டுக் கிளம்பிப் போனா எப்படி இருக்கும்’னு அவருக்கும் தெரியட்டும்னு, தமிழ் எழுதி வச்சிட்டுப் போயிருக்காடா.”

“எங்க.?”

“அதான் தெரியலயே.?”

“ஃபோன் போட்டீங்களா.?”

“ரிங் போயிக்கிட்டே இருக்கு, ஆனா எடுக்க மாட்டிறா.”

“ரூம்ல என்னென்ன இருக்கு, இல்லனு பாருங்க அத்தை.”

அவசரமாய் அறைக்குள் சென்று ஆராய்ந்தவர், “ஹேண்ட் பேக், டிராவல் பேக் எதையும் காணோம்.‌”

“இவளை! வேணும்னே செய்யிறா அத்தை.”

“அதான், நல்லா தெரியிதே? கையில பணம் வச்சிருக்கிறாளா.? எங்க போயிருக்கா, என்ன செய்யிறா ஒண்ணும் தெரியல.”

“காசு எல்லாம் இருக்கும். வர்றப்ப, அவ பேக்ல பணம் வச்சிட்டுதான் வந்தேன். நீங்க கவலைப் படாதீங்க, கூட்டிட்டு வந்திடலாம்.‌ நானு உடனே கிளம்பி வர்றேன்!” என்றவன் நீராடி நேரத்தைக் கடத்த விரும்பாது, உடையை மட்டும் மாற்றினான்.

சவிதாவும் சேரலும் மாறி மாறி தமிழிற்கு அழைப்பு விடுத்தபடியே இருக்க, மறுபுறம் பதில் தான் வருவதாய் இல்லை.‌ இருவரது பொறுமையையும் ஏகத்திற்கும் சோதித்துப் பார்த்தாள் அவள்.

கதவைப் பூட்டிக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தை இயக்கியவன், மீண்டும் கைப்பேசியில் அழைக்க.. சிறிது தூர இடைவெளியில் கேட்டது, ஒலி.

அனிச்சையாய் திரும்பிட, இல்லத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் தமிழ்.

அவசரமாய் இறங்கியவன், “புத்தி, இருக்குதா இல்லையா? என்ன, விளையாட்டு இது? இப்படித்தான் எல்லாரையும் பதற வைப்பியா.?” எனக் குரல் உயர்த்தி வினவ, கண்களால் கதவைக் காட்டினாள் அவள்.

அவன் பூட்டைத் திறக்க.. உள்ளே சென்றவள் அடுத்த நொடியே அன்னைக்கு அழைத்து, “உன்னோட மருமகன் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன், பதறாம இரு!” என்று உரைத்து, சவிதா எதுவும் பேசும் முன்னரே வைத்து விட்டாள்.

பின்னோடு வந்த சேரல், “இங்க வந்து சொல்லுறதுக்கு, அங்கேயே சொல்லீட்டு வந்திருக்கலாம்ல? அத்தையாவது பயப்படாம இருந்திருப்பாங்க. அப்படி என்ன பிடிவாதம்?”

“முதல்ல குளிச்சிட்டு வந்து, அப்புறம் எதுனாலும் பேசு, போ. ரொம்பத்தான் பொண்டாட்டி மேல பாசம், குளிக்காம கூடக் கிளம்பிட்டான். எங்கம்மா அதுக்கும் மேல, நானு கிளம்பி மூணு மணி நேரம் கழிச்சுதான், ரூமுக்கே போயி பார்த்திருக்கு!”

அவன் அவளையே பார்த்திருக்க, “என்ன, அப்படியே நிக்கிற.? இப்ப நீயி பாத்ரூம்குள்ள போறியா? இல்ல, இங்கேயே ரெண்டு குடம் தண்ணிய தூக்கி ஊத்தி விடவா.?”

சேரல் முறைத்து விட்டுச் செல்ல, பாட்டிலில் கொண்டு வந்திருந்த நீரை அருந்திவிட்டுக் கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள் செந்தமிழ்.

குளியலறையில் இருந்தவனிற்கு.. அவளாக வந்தது ஒருபுறம் மூச்சு முட்டும் அளவிற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் ‘ஏன் இப்படிச் செய்கிறாள்?’ என்று குழப்பத்தில் உழன்றது மனம்.

வெளியே வந்தவனிடம், “திரும்பி நில்லு!”

‘என்னாச்சு இவளுக்கு, என்ன செய்யப் போறா.?’ என மூளைக்குள் குடைய.. வெளியே கேட்கத் தோன்றாது, சொன்னதைச் செய்தான் சேரல்.

கழுத்தைச் சுற்றிப் போட்டு முன்பக்கமாய்த் தொங்க விட்டிருந்த துவாலையை.. பின்புறம் இருந்தே உருவியவள், அதே வேகத்தில் தனது இரு கரங்களையும் கணவனது முதுகில் அழுத்தமாய்ப் பதித்திருந்தாள்.

தமிழிற்குமே உள்ளங்கைகள் எரிய, சேரலிற்கோ பின்புறம் காந்தியது.

‘அவளிடம், எந்தச் சூழலிலும் சினமே கொள்ளக் கூடாது!’ என உறுதி ஏற்றிருந்தவன்.. ஒரு நொடி அதனை மறந்து வலியினைச் சகிக்க இயலாது, “ஏய்..” என்றபடி திரும்ப, “நீயும், அஞ்சு நாளைக்கு முன்னாடி, இதைத்தான் எனக்குச் செஞ்சிட்டு வந்த!” என்று கண்கள் சிவக்க கத்தினாள் தமிழ்.

அவன் மறுமொழி இன்றி அமைதியாக.. “ஆட்டை வெட்டுறதுக்கு முன்னாடி மாலை போட்டு அலங்காரம் செஞ்சு கொட்டு அடிச்சுக் கூட்டிட்டுப் போறது மாதிரி.. மறுவீட்டுக்குப் போவோம்னு கார்ல எல்லாம் கூட்டிட்டுப் போயி, விட்டுட்டு வர்றதுனு முடிவெடுத்து செலவுக்குப் பணத்தை எல்லாம் வச்சிட்டு வந்திருக்க.

அந்த ஆட்டுக்குத் தெரியாது‌, தன்னை வெட்டத்தான் போறாங்கனு. நானும் அப்படிதான் லூசு மாதிரி..” என்றவளிற்கு அழுகை வர, அடக்கிக் கொண்டு, “ஆடு மேய்க்கிற உனக்கு, வேற எதை உதாரணமா சொன்னாலும் புரியாது. அதுனால தான், அதையே சொல்லுறேன்! வந்த வேலை முடிஞ்சிடுச்சு‌, கிளம்புறேன்.‌ இந்தா உன்னோட காசு, எனக்குத் தேவையில்ல.” எனப் பணத்தை உணவு மேஜையில் வைத்துவிட்டு, பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் தமிழ்.

அவள் பேசியதை விடச் சிந்திய கண்ணீரில் சேரலின் மனம் கனக்க, “தமிழ்மா, எங்க போற.?”

“எங்கேயோ போறேன்.”

“லூசு மாதிரி செய்யாத, பேக்கைக் கொடு!”

“ஒரு மண்ணும் வேணாம்.”

“ஏன்மா, இப்படிப் பேசுற.?”

“ஆச்சி அவ்வளவு சொல்லியும்.. நீயி பார்த்துப்பனு, உனைய நம்பி தானடா கட்டிக்கிட்டு வந்தேன். ஆனா, என்ன செஞ்சு வச்சிருக்க.? எங்கப்பா, உனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தாரா.? அப்படி என்ன கோவம். என்மேல? இல்ல, ஆச்சி பேசுனதுக்கு என்னைப் பழி வாங்குறியா.? எதுவா இருந்தாலும், சொல்லித் தொலை!”

“ப்ச்ச்.. எதுக்கு இப்படிப் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற.? கோவம் எல்லாம் எதுவும் இல்ல.”

“எனைய, நீயி முதுகுல குத்தீட்ட தெரியுமா.? மனசு வலிக்குது!”

“தமிழ்மா..” என அவளின் கைப்பற்றிச் சமாதானம் செய்ய முயல, “ரெண்டு நாள்னு சொல்லீட்டு, இங்க வந்து நாலு நாளா ஊரைச் சுத்தீட்டுத் திரிஞ்சிருக்க? உனக்கு வேலை இருந்தாக்கூட, சரினு நானு விட்டிருப்பேன்‌. இத்தனைக்கும், திங்கட்கிழமை கடையே போடல நீயி.‌ ஆனாலும், வேணும்னே வராம இருந்திருக்க இல்ல?”

சேரல் சற்றே திகைப்புடன், “உனக்கு எப்படித் தெரியும்.? யாரு சொன்னா.?”

“அதெல்லாம் எனக்கும் ஆள் இருக்கு. நீயி மட்டும்தான், எங்கம்மாவையே ஸ்பையா வச்சிருப்பியா.?”

“அந்த ராணி, சொல்லுச்சாக்கும்? அதைப் போயி அப்புறம் பார்த்துக்கிறேன். ஆனா தமிழ்மா, இப்படி எல்லாம் புருஷனை ஆள் வச்சு கண்காணிச்சா, நானு எப்படிப் பிழைக்கிறது சொல்லு.?”

“மேய்க்கிறது ஆடு, இதுல பேச்சைப் பாரு!”

அவன் சிரித்து, “என்ன கோவம் போயிடுச்சா.?”

“அதெல்லாம் போகல, அதுனால நானு கிளம்புறேன்.”

“அடிக்கிறதுக்காகக் கிளம்பி வந்தியாக்கும்?”

“அங்க வச்சு உன்னைய அடிச்சா, பஞ்சாயத்துக்கு ஆள் வருமே.?”

அவனின் சிரிப்பு அதிகரிக்க, “சரி, எங்க போற.?”

“எங்கம்மா வீட்டுக்கு.”

“அதுக்கு எதுக்கு இப்படிப் பேக்கைத் தூக்கிட்டு வந்த? வச்சிட்டே வந்திருக்கலாம்ல.?”

“உனக்கு, என்னைப் பார்த்தா கேலியா இருக்கு.?” என மீண்டும் அவனை அடிக்க, “கத்திப் பிடிச்சுக் கறி வெட்டி, வலு ஏறுன உடம்பு.‌ எனக்குப் பெரிசா வலிக்காது.‌ பிஞ்சுக் கையை வச்சிருக்க, உனக்குத்தான் வலிக்கும். பார்த்துக்கோ!”

அவள் முறைத்துவிட்டுத் திரும்பிக் கொள்ள, “உடனே வர வேண்டிய சூழ்நிலை. நீயி, ரெண்டு நாளைக்கு ஆச்சித் தாத்தாக்கூடச் சந்தோஷமா இருப்பனு தான் விட்டுட்டு வந்தேன் தமிழ்மா. மத்தபடி வேற எந்த எண்ணமும் இல்ல, சரியா.?”

அவனை நம்பாமல் பார்த்தவள், “நிஜமா.?”

“நிஜமா தான்!”

“அப்புறம் ஏன் பேசல.?”

“நீதான பேசாதனு சொன்ன? பொண்டாட்டிப் பேச்சை மீறலாமா, சொல்லு.?”

“நீயி, அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்ல.‌ சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி பேசுறவன். தேவைக்குத் தகுந்த மாதிரி, தன்னையே மாத்திக்கிறவன்.”

அவன் புன்னகைத்து, “இதுவரைக்கும்.. எனைய, உன் அளவுக்கு யாரும் சரியா புரிஞ்சிக்கிட்டது இல்ல தமிழ்மா.”

“இனிக்க இனிக்கப் பேசி, நல்லவன் மாதிரி நடிக்கிற சந்தர்ப்பவாதி.”

“அப்பதான் பிழைக்க முடியும். சந்தர்ப்பவாதி, நேர்மையாவும் உண்மையாவும் இருக்கக் கூடாதா.?”

அவள் ஒரு பெருமூச்சை விட்டு, “சரி, இப்பவாது சொல்லு. ஏன் இப்படிச் செஞ்சனு?”

“நமக்குள்ள நிரந்தரப் பிரிவோ பிரச்சனையோ, வர்றதை விரும்பல நானு.‌ அதுக்கு, இந்தத் தற்காலிக இடைவெளி அவசியம்னு தோணிச்சு.”

“ஒண்ணும் புரியல எனக்கு.”

“புரிய வேண்டாம். இப்படி இருக்கிற‌ தமிழ்மா தான், எனக்கு வேணும். சின்னபிள்ள மாதிரி!”

அவள் முறைக்க,‌ “ஊருக்கு எல்லாம் போகாத, இங்கேயே இரு!”

“ஏன்? திரும்பவும் நீயி, இப்படிச் செய்ய மாட்டனு என்ன நிச்சயம்?”

“செய்ய மாட்டேன், தமிழ்மா.”

“நானு ஏற்கனவே சொல்லி இருக்கேன். நீயி, எனக்காகச் செய்யாத எதையும்.. என்கிட்ட இருந்தும் எதிர்பார்க்காதனு. எனக்கு எதைத் தர்றியோ, அதுதான் உனக்குத் திருப்பிக் கிடைக்கும்.!”

தலையசைத்துச் சிரித்தவன், “சரி, ஞாபகம் வச்சிக்கிறேன்.‌ ஆமா, இந்த அத்தான் எங்கப் போனான்?”

“அவன் செஞ்ச வேலைக்கு, ஒரு அடியோட நிப்பாட்டுனதே பெரிய விசயம். இதுல பொத்தான்னு வேற கூப்பிடணுமா? இதுக்கு மேல ஏதாவது பேசுனான், அப்புறம் அவன் செத்தான் என்கிட்ட!”

“சரி, விடு! ஆனா உன்கிட்ட ஒரு விசயத்தைச் சொல்லணும்.”

அவள் கேள்வியாய் நோக்க, “கறிக்கடையிலயும் சரி, ஆடு தூக்கப் போற இடத்துலயும் சரி.. தொழிலைப் பத்தின நினைப்பைத் தவிர, வேற எதுவும் என்னோட யோசனைக்கே வராது. அதுக்காக உனைய மறந்திட்டேன், நம்ம உறவை விட அது முக்கியம்னு அர்த்தம் இல்ல.

கறிக்கடைக்காரன் தான், என்னோட அடையாளம். அதையும் என்னையும் பிரிக்க முடியாது. நீயும், கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி செய்யி.

என்னோட மாமன் பொண்ணு, என் உசுருக்குச் சமம்‌. அவளை, அப்படி எல்லாம் போகட்டும்னு விட்டுட மாட்டேன். விலக்கியும் வைக்க மாட்டேன். எதுனாலும் சரி, இனி வீட்டுக்குள்ளேயே அடிச்சிக்கலாம். சண்டைப் போட்டுக்கலாம். ம்ம்.?”

அரைமனதாய்த் தலையசைத்தவள், “நல்லா பேசிப் பேசியே ஆளைக் கவுத்திடு‌. இங்க வந்து, இதை நல்லா பழகி வச்சிருக்க.!”

சின்னதாய்ச் சிரித்தவன், “கொஞ்சம் சிரிக்கிறது. பாரு, கண்ணெல்லாம் கலங்கி முகமே ஒருமாதிரி இருக்கு!” என்ற சேரல் மனைவியின் விழியோரம் துடைத்துவிட, தமிழின் இதழ்கள் மெல்ல மலர்ந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!