Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 26

அத்தியாயம் 26

 



Advertisement

கால்களிலும் உடலிலும் சாணியும் சகதியுமாய் இல்லத்தின் வாயிலில் நின்றிருந்த குமாரைப் பார்த்த தமிழ், உள்ளே சென்று உறங்கிக் கொண்டிருந்த சேரலை எழுப்பி விபரத்தை உரைத்தாள்.

Advertisement

வெளியே வந்தவன், “அட நாரப்பயலே, இன்னமும் குளிக்காம சுத்திக்கிட்டு இருக்க.?”

Advertisement

“தொழுவை சுத்தம் செஞ்சிட்டு, இப்பதான் அண்ணே வர்றேன்.”

Advertisement

“சரி, முதல்ல போயி குளி. சாப்பிட்டியா.?”

“ம்ம்.. பிரியாணி, தலைப்பா கட்டியில.”

“ஏன் வீட்டுக்குப் போகலயா.?”

“அங்க போயி, என்ன செய்யப் போறேன்.?”

“ஏன்டா, உன்னோட வீட்டுக்காரம்மா சோறாக்கி வச்சிருக்கும்ல.?”

“அவ எங்க, இங்க இருக்கா?”

சேரல் புரியாமல் பார்க்க, “சண்டை போட்டு, ஆத்தா வீட்டுக்குப் போயி நாலு நாளு ஆச்சு‌.”

“என்ன சண்டை?”

“ஏன் குடிக்கிற?‌ எங்க போற, வர்றனு கேள்விக் கேட்டுக்கிட்டே இருந்தா, மனுசன் எப்படி வீட்டுல நிம்மதியா இருக்கிறது? பத்தாததுக்குத் தொடக்கூடாது.. அது இதுனு ஆச்சா பூச்சானு கத்துனா, அப்புறம் எதுக்கு நீயினு கேட்டு ரெண்டு அடி போட்டேன். போயிட்டா.”

“அடிச்சியா? உனைய திருப்பி‌ அடிக்கலயா அந்தப் பிள்ள?”

“திருப்பி வேற அடிப்பாளா அவ? கைக்காலை உடைச்சு விட்டுட மாட்டேன்?”

“உனக்குப் போயி பொண்ணைக் கொடுத்தாங்க பாரு, அவங்களைச் சொல்லணும். ஒழுக்கமா போயி, அந்தப் பிள்ளைக்கிட்ட சமாதானம் பேசி, சேர்ந்து வாழுற வழியைப் பாரு.!”

“ம்ம்.. பார்க்கலாம் பார்க்கலாம்.” என அசட்டையாய் பதில் தந்தவன், ‘திருந்துவான்!’ என்று தோன்றவில்லை சேரலிற்கு.

முன்பானால், மறு சிந்தனையின்றி அடித்து விடுவான்.

சென்ற முறை நடந்த நிகழ்விற்குப் பின்னர்.. கீதா, “அடிக்கிற வேலை, வேணாம் சேரா. ஒரு நேரம் போல, ஒரு நேரம் இருக்காது. உனைய எனைய மாதிரி அசிங்கத்துக்கும், பழி, பாவத்துக்கும் அஞ்சுறவன் இல்ல அவன்.

வேலைனு அவனோட அம்மா, கேட்டு வந்திச்சு. சம்பளத்தைக் கொடுத்து, கூட வச்சிக்கிட்ட. ஆனா, இப்ப பழக்க வழக்கம் சரியா இல்ல. கையில காசு சேரவும்.. மரியாதை இல்லாம நடந்துக்கிறான். பேச்சும் வரைமுறை இல்லாம, மாறிப் போச்சு. சரி வந்தா பாரு, இல்லையினா மெல்ல மெல்ல தள்ளீடு. வேலைக்கு, வேற ஆளைப் போட்டுக்கலாம்!” என உரைத்து இருந்தாள். பரமசிவமும் கூட, கல்லாவில் பணம் எடுப்பதைப் பற்றி முன்னரே சொன்னார்.

ஆனால், சேரல் இன்னும் எந்த முடிவிற்கும் வரவில்லை. தவறுகிறான் என்பதற்காக, சட்டென்று தவிர்ப்பது அவனின் குணமன்று. அதனால் தனது அதிகாரத்தைச் செலுத்தாது, பார்வையால் மட்டுமே குமாரைத் தொடர்ந்தான்.

அறிவுரையைக் கேட்டு நடப்பவன் என்றால், ‘சரி தவறை’ கற்றுத் தரலாம்.‌ செவி கொடுத்து கேட்காதவனை விட்டு, நாம் விலகிச் செல்வதே சாலச் சிறந்தது. இல்லையேல், சிக்கலில் சிக்க வைத்து விடுவர்.. இதுபோல் சிக்கல் காரர்கள்.‌ தொழில் முறையில், சேரலுமே அதை நன்கு உணர்ந்து இருந்தான்.

சம்பளத்தைக் கொடுத்ததும் வாங்கியவன், “அண்ணே, நானு நாளைக்கு லீவு.”

“ஞாயித்துக்கிழமை லீவுனு சொல்லுற? நானு ஒருத்தனா, எப்படிடா கடையைப் பார்க்கிறது.?”

“அதுக்கு என்ன அண்ணே செய்யிறது? சொந்தக்காரன் ஒருத்தன், அவங்க கோயில்ல கிடா வெட்ட ஆள் வேணும்னு கேட்டான். ஆயிரத்து ஐநூறு ரூபா.‌ ஒத்த ஆடுதான்..‌ உரிச்சு, வெட்டிக் கொடுத்தாப் போதும்‌. இங்க, எப்படியும் நாளைக்கு நாலு ஆடு அறுப்பீங்க. நாளு முழுக்க வேலை செஞ்சா, ஆயிரத்தி ஐநூறு தான் தருவீங்க.?‌ அதான், அங்க போறேன்.”

“என்ன.. காசு குறைவா தர்றேன்னு சொல்லிக் காட்டுறியா.?”

அவன் கைகளைப் பின்பக்கம் கட்டியபடி வேறு திசையில் பார்த்து நிற்க, “நானு, நீயி செய்யிற வேலைக்குக் கூலியைத் தர்றேன். அவன், ஒரு உசுரைக் கொல்லுற பாவத்துக்கும் சேர்த்துக் காசைத் தர்றான். இதுநாள் வரைக்கும், உன்னோட கையில அந்த ரெத்தக் கரை படாம பார்த்துக்கிட்டேன்டா‌‌. இல்லையினா, எனக்கா ஆடு அறுக்கத் தெரியாது.? வேலைக்கான சம்பளம் வேற, பாவத்துக்கான கூலி வேற. ரெண்டுக்குமான வித்தியாசம் புரியல‌ உனக்கு. சரி போ!” என்றவன் இல்லத்திற்குள் செல்ல.. அதுவரை வாயிலில் நின்று அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ், கணவனைப் பின்தொடர்ந்து வந்தாள்.

“ஏன் அத்தான்?‌ அவன் செய்யப் போறது பாவம்னா, நீங்களும் ஒரு காலத்துல அதைச் செய்யத் துணிஞ்சவரு தான.?”

திரும்பிப் பார்த்தவன் மெலிதாய்ப் புன்னகைத்து,‌ “உனக்கு எப்படித் தெரியும்.?”

“அண்ணிக்கிட்ட கேட்டேன்.”

“ராணி, கதை சொல்லுச்சாக்கும்?”

“நானு கேட்டதுக்குப் பதில்.?”

“அது, இள ரெத்தம் தமிழ்மா. பின்னாடி நடக்கிறதை யோசிக்காது.‌ ஆனா, இப்ப அப்படி இல்ல.‌ ஒரு விசயத்தைச் செய்யிறதுக்கு முன்னாடி, பலதையும் யோசிச்சுதான் செய்யிவேன்.‌

தான் செய்யிற தொழிலால தான், ராணிக்குக் குழந்தை இல்லாம போயிடுச்சோனு பெரியப்பாக்கு ஒரு எண்ணம். அதுனாலயே‌, எனைய அதைச் செய்ய விடல. நானுமே, அதைப் புரிஞ்சிக்கிட்டு தான், அக்கா சொல்லுறதைக் கேட்டு நடந்துக்கிறேன்.”

“இப்ப மட்டும், ஒரு உயிரைக் கொல்லுறது பாவம் இல்லயா அத்தான்.? நீங்க கொல்லலைனாலும், கூறு போட்டு விக்கிறீங்க!”

“எவ்ரித்திங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்.‌ வாழ்க்கையே போர்க்களம் தமிழ்மா. அதுல ஜெயிக்கணும் எனக்கு, அதுவும் நேர்மையா. அன்னைக்கு என்னோட தேவை, சம்பாத்தியம் மட்டும் தான்.‌ நானு பார்த்த பல தொழில்ல, இதுவும் ஒண்ணு.‌ மத்ததை விட, சம்பாத்தியம் அதிகமா இருந்திச்சு. அது எனக்குத் தேவையாவும் இருந்திச்சு. என்ன, பாவம் கொஞ்சம் கூட. அதைச் சரி செய்யத்தான், என்னால எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மத்தவங்களுக்குச் செய்யிறேன்.‌ நான் இப்படித்தான்.”

“எதுக்கு அத்தான் அவ்வளவு சம்பாதிக்கணும், மத்தவங்களுக்குச் செய்யணும்.? நம்ம அளவுக்குச் சின்னதா வேற தொழில் கூடச் செய்யலாமே.?”

“நீயி இப்போதைக்கான நிலைமையைச் சொல்லுற. பத்து வருசத்துக்கு முன்னாடியான என்னோட தேவைக்கு ஏத்தமாதிரி தான,‌ நானு தொழில் செய்ய முடியும்.?”

“அப்படி என்ன தேவை? அப்பா சொன்னதைக் கேட்காம, படிப்பைத் தொலைச்சிட்டு ஓடி வர்ற அளவுக்கு.?”

அவளை வலியுடன் பார்த்தவன், “மாமாவோட உயிர்தான், தேவையா இருந்துச்சு தமிழ்மா.”

“உங்களைப் பத்தின கவலையால தான், அப்பாவுக்கு முடியாம போச்சு. ஒருவேள அங்கேயே இருந்திருந்தா, அவருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்காது!”

“வெளிப் பார்வைக்குத் தெரியிறது எல்லாம், உண்மை இல்ல! நானு வந்ததால, மாமாக்கு அட்டாக் வரல. அவருக்கு அட்டாக் வந்ததால, ஃபர்தர் டிரீட்மெண்டுக்கு என்னோட படிப்புச் செலவு தடையா இருந்திடக் கூடாதேனு தான் வந்திட்டேன்.”

திகைப்பாய்ப் பார்த்த தமிழ், “என்ன சொல்லுறீங்க, அத்தான்?”

“மாமாக்கு அப்பப்ப லைட்டா நெஞ்சு வலி வந்திருக்கு. அது, வாயு பிரச்சனையா இருக்கும்னு நினைச்சு விட்டுட்டாரு. நாம ஃபர்ஸ்ட் டைம் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனது, ஞாபகம் இருக்கா.?”

அவள் தலையசைக்க, “டாக்டர் ஆஞ்சியோ பண்ணணும்னு சொல்லி இருக்காங்க.‌ ஆனா நம்ம எல்லாக்கிட்டயுமே சொல்லாம மறைச்சிட்டாரு. அத்தை, மாமாக்கிட்ட இதைப் பத்தி ரெண்டு மூணு தடவை பேசிப் பார்த்திருக்காங்க. அவர் கேட்காததால, ஆச்சி தாத்தாக்கிட்டச் சொல்லீட்டாங்க.‌

ஆச்சி.. ‘அவனோட படிப்புக்காக, உன்னோட உயிரை ஏன்டா இப்படி இக்கட்டுல விடுற’னு கேட்டு மாமாவைச்  சத்தம் போடும் போது,‌ நானு அதைக் கேட்டுட்டேன். நானும் மாமாக்கிட்ட இதைப் பத்திப் பேசுனேன், ஆனா அவரு பெருசா எடுத்துக்கல.

தாத்தாவோட பணத்தை டெபாசிட் பண்ணிட்டதால, உடனே எடுக்க முடியாத சூழ்நிலை. என்னைக் காலேஜ்ல சேர்க்க டொனேஷன் கொடுத்தவருக்கிட்ட.. ‘நான் படிக்கல, பணத்தைத் திருப்பித் தர்றீங்களா’னு கேட்டேன்.

அவர் நம்ம நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு சரினு சொன்னதால, இங்க கிளம்பி வந்திட்டேன்.‌ அந்தச் சமயம் தான்.. மாமாக்கு வலி அதிகமாகி, ஆஞ்சியோபிளாஸ்ட் பண்ணீங்க.‌

அம்மா அப்பா இறந்த பின்னாடி, நான் அங்க வராம இருந்திருந்தா.. செலவைச் சுருக்கி, மாமா தன்னோட உடம்பை ஆரம்பத்துலயே கவனிச்சிருப்பாரேனு ஆச்சிக்கு என்மேல கோபம். அதான்‌.. ‘எல்லாருக்குமே எதுக்குத் தொந்தரவா இருக்கணும், நம்ம வாழ்க்கையை நாம பார்த்துக்கலாம்’னு கிளம்பிட்டேன். மாமா.. குணமாகி வந்து திரும்பக் கூப்பிடும் போதும், இதுனால தான் வரல.

அத்தைக்கிட்ட ஃபோன்ல பேசுனப்ப, மருந்து மாத்திரைக்கு ரொம்பச் செலவாகுறது தெரிஞ்சிச்சு.‌ நீயும் வளர்ந்திட்ட, மாமாவாலயும் சரியா வேலைக்குப் போக முடியல.‌ அதுனால, நானு சம்பாதிக்க வேண்டிய தேவை.

என்னை ஏழு வருசம் பார்த்துக்கிட்டவருக்கு, நான் செய்யணும்ல? கறிக்கடையைப் போட்டேன், ஆரம்பத்துல வந்த வருமானத்தை எல்லாம்.. மாமாவோட மருந்து செலவுக்காகக் கொண்டு வந்து தந்தேன்.‌ அதுவரைக்குமே, தாத்தாவோட பென்ஷன்ல தான் செலவைச் சமாளிச்சிக்கிட்டு இருந்தாங்க அத்தை.

ஆனா.. என்ன முயற்சி செஞ்சும், முடியல.‌ மருந்து மாத்திரை மாமாவோட வாழ்நாளைக் கூட்டுச்சே தவிர, அவரைக் காப்பாத்திக் கொடுக்கல. எல்லாம் முடிஞ்சிடுச்சு!” எனப் பெருமூச்சு விட்டவனை, இன்னதென்று புரியாமல் பார்த்து நின்றாள் தமிழ்.

அன்னை சவிதா உட்பட.. எவருமே அவளிடம் நடந்தவைகளை உரைக்க வில்லை.‌ சேரல், பணம் தருவது தெரியும் தான்.‌ இருந்தும், ‘சொல்லாமல் போனானே?’ என்ற சினம் அவளின் கண்களை மறைத்து விட்டது‌. அதனால் பேசாமலேயே இருந்து விட்டாள்.

“ஏன்.. யாருமே என்கிட்ட, எதுவுமே சொல்லல அத்தான்?”

“அப்ப, நீயி சின்னப் பொண்ணு. ஸ்கூல் கூட முடிக்கல‌. எப்படிச் சொல்லுவாங்க, உன்கிட்ட?”

அவள் எதுவும் பேச தோன்றாது இருக்கையில் அமர.. அருகே சென்ற சேரல், “தமிழ்மா..” என அழைத்தான்.

அவனின் முகத்தை நிமிர்ந்து நோக்கியவள், “நானும் அப்பாவும் தான், ரொம்பக் குளோஸ். அவரைப் பத்தி எனக்கு எல்லாமே தெரியும்னு நினைச்சிருந்தேன் அத்தான். ஆனா, என்கிட்ட கடைசி வரைக்கும் தன்னோட உடல்நிலையைப் பத்தி ஒரு வார்த்தைக் கூடச் சொல்லல. ஏன் இப்படிச் செஞ்சாரு?”

“இதுக்காகத்தான்! மாமா இறந்து மூணு வருசம் ஆச்சு. இப்ப சொன்னதையே, உன்னால தாங்கிக்க முடியல.‌ இதையே அப்ப சொல்லி இருந்தா, நீயி முழுசா உடைஞ்சிடுவ‌.”

“நானு, அப்பாக்காக எதுவுமே செய்யல அத்தான். கடைசி நிமிசம் வரைக்கும், அவர்தான் எனக்காக உழைச்சிருக்காரு. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, ஏதோ என்னால முடிஞ்சதைச் செஞ்சி..” என்றவளை இடைமறித்தவன், “நீயும், எனைய மாதிரி படிப்பை விட்டுட்டு வேலைக்குப் போறேன்னு கிளம்பிடுவியோனு, மாமா பயந்திட்டாரு தமிழ்மா.”

“இப்பப் படிச்சு மட்டும், என்ன செஞ்சிட்டு இருக்கேன்?”

“அதை இப்பவே சொன்னா எப்படி? இன்னும் காலம் இருக்கு, நானும் இருக்கேன்.”

அவள் கேள்வியாய்ப் பார்க்க, “நாளைக்கு, என்ன வேணும்னாலும் நடக்கலாம். அதுனால இன்னைக்கு நம்மளால என்ன செய்ய முடியுமோ, அதைச் செஞ்சிடணும். என்ன செய்யலாம்னு, நீயி முடிவு எடு. அதை‌ எப்படிச் செய்யலாம்னு நானு வழியைச் சொல்லுறேன்.‌”

“ஆனா அத்தான்..” எனத் திணறியவளின் முகத்தில்‌ குழப்பம் ததும்ப, “நேரமாச்சு, பட்டிக்குப் போயிட்டு வர்றேன்!” என்று கிளம்பிச்‌ சென்றான் சேரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!