Skip to content
Post Views: 13,633
அத்தியாயம் 27
Advertisement
“சேரா.. சேரா..” என்ற அழைப்பில் வெளியே வந்தவன், “வாங்க ஐயா.. வாங்க வாங்க..” என வரவேற்றுவிட்டு, “இவர்தான், இப்ப ஊராட்சி மன்ற தலைவரா இருக்காரு!” என்று உடன் வந்த மனைவிக்கும் அறிமுகம் செய்து வைத்தான் இளஞ்சேரல்.
Advertisement
தமிழ் மரியாதைக்காகக் கைக்கூப்பி வணங்க.. அவன், “உள்ள வாங்கய்யா.”
Advertisement
“இல்லப்பா. வேலை கிடைக்குது. உன்கிட்ட கறிக்குச் சொல்லீட்டுப் போகலாம்னு வந்தேன்.”
Advertisement
“எவ்வளவு.?”
“நூறு கிலோ ஆட்டுக்கறி. ஐநூறு கிலோ கோழிக்கறி வேணும் சேரா.”
“என்ன விசேஷம்.?”
“பேரனுக்கு, அடுத்த மாசம் மொட்டை எடுத்துக் காது குத்துறேன். பத்திரிக்கை எல்லாம் ரெடியாகி வந்திடுச்சு. அதான் உன்கிட்ட முன்னாடியே சொல்லி வைக்கலாம்னு..”
“ம்ம்.. கொடுத்திடலாங்க ஐயா.”
“சரி, கிலோவுக்கு எவ்வளவு.?”
“உங்களுக்கு என்ன, தனியா ஏத்தியா சொல்லப் போறேன்.? அதே ஆயிரம் தான். கோழிக்குப் பார்த்துக்கலாம்.”
“குறைச்சுச் சொல்லுவனு பார்த்தா, என்னப்பா நீயி.?”
“இல்லாத பட்டவங்க இல்லையே நீங்க? பேரனுக்குச் செய்யிறதுல என்னங்க ஐயா கணக்கு? இருக்கிறவங்க கொடுக்கலாமே.?”
“கொடுக்கலாம் தான். ஆனா செலவு எக்குத்தப்பா ஆகிடுச்சு சேரா. கொஞ்சம் பார்த்துச் சொல்லு!”
“சரி. கிலோவுக்குத் தொள்ளாயிரம் போட்டுக்கலாம்.”
“எண்ணூறா போடேன்?”
“உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம். ஒண்ணு செய்யிவோம். ஆடுகளை வாங்கிருங்க நீங்க. உரிச்சு, உங்களுக்கு வேணும்கிற ரகத்துல வெட்டித் தர்றேன். கூலி முப்பதாயிரம் கொடுத்திடுங்க.”
“என்னப்பா, இப்படிச் சொல்லுற..?”
“பின்ன, என்னங்க ஐயா? மொத்தம் அறுநூறு கிலோ வெட்டணும். நானு ஒருத்தன் செய்யிற வேலை இல்ல. ஆறு ஏழு பேரை வேலைக்குப் போடணும். அவங்களுக்குச் சம்பளம், டீ காபி சாப்பாடு செலவு இதெல்லாம் பார்க்கணும்ல?”
“சரி சரி, கோவிச்சுக்காத. இன்னும் ஒரு அம்பதை குறைச்சிக்க.”
“வெட்டு ரகம் என்னோடதுனா, சரி. உங்க எதிர்பார்ப்புக்கு வேணும்னா, தொள்ளாயிரத்துக்குக் குறையாது!”
“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”
“பிரியாணி, சுக்கா, குழம்பு, கிரேவினு நீங்க கேட்கிறது படி வெட்டுனா.. உங்க ரகம். இந்தமாதிரி எதுவும் இல்லாம, மொத்தமா எலும்புக்கறியா போட்டா.. எங்க ரகம். குடலையும் ஈரலையும் தனியா வெட்டித் தந்திடுவோம். மத்த ஐட்டம் எல்லாம் கணக்குல சேராது.”
“இதென்னப்பா இப்படிச் சொல்லுற?”
“நூறு கிலோனா, அதுக்குத் தகுந்த மாதிரி நானு ஆடுகளைத் தூக்கணும்ல? ரெண்டு மூணு நாளு தொழுவுல வச்சுப் பார்க்கணும், பராமரிக்கணும். ஒரு பைசா குறையாது. சரின்னா.. அட்வான்ஸ் அம்பதாயிரம் கொடுத்திடுங்க. இல்லையினா, உங்க வசதிக்கு கறி தர்ற வேற எவனையாது பாருங்க!” எனக் கறாராய்ப் பேசுபவனிடம் மறுமொழி உதிர்க்க இயலவில்லை அவரால்.
வேறு கடைக்காரனைப் பிடிக்கலாம்தான். ஆனால் இதுவரை அவருக்குப் பழக்கம் இல்லை. அவர்கள் எதுபோலான ஆடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தெரியவில்லை. ‘சரியாகக் கொடுத்து விடுவரா, இல்லை கடைசி நேரத்தில் சொதப்பி விடுவார்களா?’ எனப் பல சிந்தனை.
‘தெரியாத தேவைதையை விடத் தெரிந்த பிசாசு சிறந்தது!’ என்றொரு எதார்த்தச் சொல் உண்டு. தற்போது, அவருக்குச் சேரல் அப்படித்தான் தெரிந்தான்.
“இப்போதைக்கு ஐயாயிரம் வச்சிக்க!” என அவர் வியாபாரத்தை உறுதி செய்ய, “சரிங்க ஐயா. அப்புறம், நம்ம ஊரு ரோடு விசயமா பேசி இருந்தேனே?”
“அது என்ன, என் கையிலயா இருக்கு? கவர்மெண்ட் காரன்ல செய்யணும்?”
“அவன் செய்யணும்னா, முதல்ல நீங்க கேட்கணும். எப்ப ரோடு வரும்னு கேட்டீங்களா?”
“அதெல்லாம் பேசி இருக்குப்பா. சீக்கிரம் வந்திடும்.”
“ம்ம்.. இதையே தான் நாலு வருசமா சொல்லுறீங்க. பார்ப்போம்!” என்றவன் பெற்றுக் கொண்ட பணத்திற்கு ஆதாரமாய்க் காகிதத்தில் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.
தமிழிற்கு ‘முப்பத்தைந்து கிலோ கறிக்கே முதல்நாள் ஓடியவன்.. அறுநூறு கிலோவிற்கு எப்போதில் இருந்து, என்னென்ன செய்வானோ?’ என்று இருந்தது. ஆனால் அவளின் எண்ணம் போல், எவ்வித செயல்பாடும் இல்லை அவனிடம். பின்னர்த் தான் தெரிந்தது, அனைத்திற்கும் ஆட்கள் வைத்திருக்கிறான் என்று.
அவர் கறி கேட்டது, சரியாய் ஞாயிற்றுக் கிழமை அன்று. விடுமுறை தினத்திற்கான வியாபாரமும் சேர்ந்து கொண்டது. பரமசிவத்தின் இல்லத்திற்கு ஒருமுறை சென்ற பொழுது, “அக்கா மொத்தக் கறிக்கு ஆர்டர் வந்திருக்கு. மாமாவுக்குத் தோது இருந்தா கடைக்கு வரச்சொல்லு.” என்று கறி கொடுக்க வேண்டிய தேதியைச் சொன்ன தம்பிக்கு, “நானு, அவரைக் கூட்டிட்டு வந்திடுறேன்டா!” என அவள் அளித்த பதிலில் தான்.. தமிழ் அறிந்து கொண்டாள், கீதாவும் கறிக்கடைக்குச் செல்வாள் என்று.
நாட்கள் ஆமையாய் நகர்ந்தது. கணவனையும் அவனது தொழிலையும் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டாள் தமிழ். எனினுமே.. ஆடவனின் மீதிருந்து வெளிப்படும் வாசம், அவளிற்கு ஒவ்வாமையையே கொடுத்தது. முடிந்த அளவு, பொறுத்துக் கொண்டாள்.
உண்மையில், மனைவிக்கு அந்த விசயத்தில் சிரமம் இல்லாமல் பார்த்துக் கொண்டான் சேரல். அதனால் இதுவரை பெரியதாய் எவ்வித பிரச்சனையும் எழவில்லை.
* * *
“இந்தாங்க அத்தான், பணம்.” என்று மனையாள் கொடுத்ததை வாங்கி எண்ணிப் பார்த்தவன், அருகே நின்றிருந்த ஆட்டுக்காரரிடம் நீட்டினான் சேரல்.
வாங்கி பத்திரப் படுத்தியவர், “சரிங்க தம்பி, ஆடுகளைத் தொழுவுல இறக்கிட்டுக் கிளம்புறேன்!” என விடைபெற, “ஒரு டீயைக் குடிச்சிட்டுப் போங்க!” என்று எதிரே இருந்த தேநீர் கடைக்கு அனுப்பிவிட்டு, தமிழின் புறம் திரும்பினான்.
“தேங்க்ஸ்! சொன்னதும் காசைக் கொண்டு வந்ததுக்கு. அக்கா மார்க்கெட்டுல இருக்கேன்னு சொல்லீடுச்சு. அதான் உனைய வரச் சொல்ல வேண்டியதா போச்சு.”
“இதுல என்ன இருக்கு.? எக்ஸ்ட்ரா தேங்க்ஸ் வேற!”
“நீயிதான், கடைப்பக்கம் வர சங்கடப்படுவியே.? அதான்.”
சுற்றிலும் பார்த்தவள், “இன்னைக்குக் கிளீனா இருக்கு, இந்த இடம்?”
“கடை முடிஞ்சிடுச்சு. இப்பதான் கழுவி விட்டேன்! அப்படி ஓரமா உட்காரு!” என அவளைப் பக்கத்தில் இருந்த மளிகைக் கடையின் முன்பு அமர வைத்தவன்.. கரைத்து வைத்திருந்த சாண நீரைத் தெளித்து, சுற்றிலும் துடைத்தான். கற்பூரத்தை தூளாக்கி தூவி விட்டவன் கைக்கால்களைச் சுத்தம் செய்துவிட்டு வர, கடையின் முன்பு வந்து நின்றான் சாரங்கன்.
சேரல் அவனை ஏற இறங்க பார்க்க, “எனைய வரச் சொன்னீங்களாம்?”
“நானு சொல்லி, பதினஞ்சு நாளு ஆச்சே?”
அவன் வேறுபுறம் பார்க்க, “இவன் சொல்லி, நாம போகணுமானு இருந்திருப்ப? காயத்திரி போனு முதல்ல கெஞ்சி, போறியா இல்லயானு இப்ப மிரட்டி அனுப்பி இருப்பா. என்ன சரியா.?”
சாரங்கன், ‘எப்படி இவ்வளவு சரியா சொல்லுறான்.?’ என்று கேள்வியாய்ப் நோக்க.. முகத்தை வைத்தே அகத்தை உணர்ந்தவன், “பதினேழு வயசுல இருந்து எவர் துணையும் இல்லாம, தனியா உழைச்சு இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். சொந்தம், தொழிலு, கொடுத்து வாங்குறதனு.. சுத்தி இருக்கிற ஊருகள்ல பாதிப் பேருக்கு மேல பழக்கம். மூஞ்சியைப் பார்த்தே, எவன் எப்படிப் பட்டவன்னு கண்டுபிடிச்சிடுவேன். காயத்திரிய ஒன்பது வயசுல இருந்து பார்க்கிறேன். அவ எப்படிப்பட்ட பொண்ணுனு தெரியும். உன்னைப் பத்தியும் ஓரளவுக்குக் கணிப்பு இருக்கு.”
“இருந்திட்டுப் போகுது, என்ன பேசணும்.?”
“நானு பேசணும்னு சொல்லவே இல்லயே.?” எனச் சிரித்த சேரல் அவனது முகம் கடுகடுப்பதைக் கண்டு, “அவளை நிஜமாவே கட்டிக்கிற எண்ணம் இருக்கா? இல்ல, சும்மா சுத்திக்கிட்டு இருக்கியா.?”
“அதைக் கேட்க, நீ யாரு.?”
“ம்ம்.. மரியாதைத் தேய்ஞ்சிடுச்சு. காயத்திரியோட அப்பா கேட்டா, பதில் சொல்லித்தான ஆகணும்? நானு, இப்ப அவரோட இடத்துல இருந்து கேட்கிறேன். சொல்லு!”
“உன்கிட்ட எல்லாம் சொல்லணும்னு அவசியம் இல்ல எனக்கு.” என்றவன் அங்கிருந்து நகர, அடுத்த நொடி சாரங்கனின் உடையைப் பிடித்து இழுத்து கறி வெட்டும் கட்டையில் தலையை அழுத்தி இருந்தான் சேரல்.
“ஏய்.. ஏய்..” எனத் திணறியபடி அவன் விடுபட முயல, “வீணா அசையாத. உனக்குத்தான் சேதாரம் ஆகும். கேட்டா, சொல்ல மாட்டியோ? அப்புறம் என்ன வெண்ணைக்குடா, என்வீட்டுப் பொண்ணுக்கூடச் சுத்துற.? கறிக்கடைக் காரன், தோலை உரிச்சு ஆடோட ஆடா கட்டித் தொங்க விட்டுடுவேன் பார்த்துக்க!”
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்க, “ஒண்ணுமில்ல, தெரிஞ்ச பையன்தான். கொஞ்சம் திமிரா பேசுனான், அதான். நீங்க போயி வேலையைப் பாருங்க!” என்றான்.
சேரலைப் பல ஆண்டுகளாய்த் தெரியும் என்பதால், மேற்படி எதுவும் கேட்காமல் சென்றனர் அவர்கள்.
தமிழிற்குத்தான். மூச்சுப் பேச்சே வரவில்லை. துவக்கத்தில் ஏதோ சாதாரணமாய்ப் பேசிக் கொண்டிருந்தவர்களின், அடுத்தடுத்த செயல்பாடு அவளை அச்சம் கொள்ள வைத்தது. அதில் முக்கியப் பங்கு வகித்தவன், சேரல் தான்.
“தமிழ்மா..” என்ற உருகிய அழைப்பில் நேசம் சொட்டச் சொட்டப் பார்வையில் அத்தனை கனிவுடன் நடந்து கொள்பவனா இவன்? என நெஞ்சடைத்துப் போனாள். அத்தனை சினம் கண்களில், முகம் காட்டிடாததை அவனின் உக்கிரப் பார்வைச் சொன்னது.
“அச்சோ.. டேய்.. என்ன செய்யிற சேரா? விடு அவனை!” எனக் கீதா பிரித்துவிட, “அக்கா, ஒரு நிமிசம் இரு. இவனை நாலு அறை விட்டாதான், மனசு ஆறும் எனக்கு!”
“சும்மா இருடா!” எனத் தம்பியை அமைதிப் படுத்தியவள் சாரங்கனிடம், “என்னடா விவகாரம்?”
“ஒண்ணுமில்ல அத்தை. சும்மாதான்!”
“சும்மாவா.? விட்டா, அவன் உன்னோட கழுத்தை அறுத்திருப்பான். சேரல் வலுவான காரணம் இல்லாம அப்படிச் செய்ய மாட்டான். என்ன செஞ்ச நீயி.?”
“இவனைத் தெரியுமா அக்கா உனக்கு?
“என்னோட நாத்தனாரு மகன், சேரா.”
“நானு இங்க வர்றதுக்கு முன்னாடியே. உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுல? அதான் தெரியல. இவன்கூடப் பேசுனதுக்குத்தான், உன்னோட மாமியாக்கிழவி பஞ்சாயத்து வச்சுச்சாக்கும்?”
“முடிஞ்சதைப் பத்தி ஏன்டா பேசுற.?” எனப் பழையவைகளைப் புறம் தள்ளியவள், “என்ன நடந்துச்சு, எதுக்கு இப்படி இவனை அடிச்சிட்டு இருக்க?”
“நம்ம கருவாச்சிக்கூடச் சுத்திக்கிட்டு திரியிறான். என்னனு விசாரிச்சா, திமிரா பதில் சொல்லுறான்.”
கீதா.. சாரங்கனைப் பார்க்க, தலைக்குனிந்து நின்றிருந்தான்.
“நல்ல பையன் சேரா, இப்பதான் இப்படி மாறிப் போயிட்டான்.”
“என்னக்கா சொல்லுற.?”
“எல்லாம், என்னோட மாமியாவால. அது அசிங்கமா பேசவும், இப்படி ஆகிடுச்சேனு வீட்டுப் பக்கமே வராம இருந்திட்டான். அப்புறம் தான், இவ்வளவு மாற்றம்.”
சாரங்கன், “சங்கடமா போச்சு அத்தை. உங்களை எப்படிப் பார்க்கிறது, பேசுறதுனு ஒருமாதிரி ஆகிடுச்சு. நாம உரிமையா பழகப்போயி, இப்படி அவச் சொல்லு வந்திடுச்சே? சொந்த ஆச்சியே பேசுனா, ஊருல மத்தவங்க என்ன நினைப்பாங்களோனு பயம். அதுவும் நீங்க மாமாக்கூட வீட்டை விட்டுப் போகவும், என்மேல கோபம் போலனு நினைச்சிட்டேன்.”
“அதெல்லாம் இல்ல ரங்கா. நீயி, ஏன் இப்படி உன்னோட வாழ்க்கைய கெடுத்துக்கிற? வேல வெட்டிக்குப் போறது தான?”
“ம்ம்..” என அவன் தலையசைக்க.. சேரல், “நல்லவேள, நீயி வந்த ராணி. இல்லேனா.. இந்நேரம் உன் மருமகனோட தோலை உரிச்சு, உப்புக் கண்டம் போட்டிருப்பேன்.”
“அடப்பாவி! ஆட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் இல்லையாடா.?”
“ரெண்டு உடம்புலயும் இருக்கிறது, கறிதான?”
“உன்னோட கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். ச்சீ போடா!” எனக் கீதா பேச்சை முடிக்க, சாரங்கனைப் பார்த்தான் சேரல்.
“எனக்குத் தப்பான எண்ணம் எல்லாம் இல்லண்ணே. காயத்திரி கூட மனசாரத் தான் பழகுறேன். என்னனு தெரியல, எந்தத் தொழிலுமே ஒத்து வர மாட்டிது. அதுனால மனசுமே, எதுலயும் ஒட்டாம இருக்கு.”
அவனைச் சிந்தனையுடன் நோக்கியவன், “ஒண்ணு செய், நாளையில இருந்து, இங்க கடைக்கு வந்திடு. ஒரு மாசம், என்கூட இரு. அப்புறம் என்ன செய்யலாம்னு பார்க்கலாம். அதுவரைக்கும் அவளைப் பார்க்காத. ஒழுக்கமா இருந்தேனா, உன்னோட சம்பாத்தியத்துக்கு நானு பொறுப்பு. ஜக்கையன் மாமாக்கிட்டயும் பேசுவேன், எல்லாம் உன்னோட நடத்தையில தான் இருக்கு. சரித்தானா.?” என்றிட.. தலையசைத்த ரங்கன், “வர்றேன் அத்தை!” எனக் கீதாவிடம் விடைபெற்றுச் சென்றான்.
“மார்க்கெட்டுல இருக்கேன்னு சொன்ன. இப்ப என்னனா, இங்க வந்து நிக்கிற.?” என்று சேரல் தமக்கையிடம் திரும்ப, “கடையில எதுவும் முக்கியமான வேலை போல, அதான் கூப்பிட்டியோனு நினைச்சு வந்தேன்.”
“ஆட்டுக்காரரு நாளைக்கு ஊருக்குப் போறாராம். அதுனால இன்னைக்கே வந்திட்டாரு. அவருக்குக் கொடுக்கிறதுக்குக் காசு கொண்டு வர சொல்லலாம்னு தான்.”
“குமாரு எங்க.?”
“அந்த நாயி, குடிச்சிட்டு எங்க உருண்டுட்டு கிடக்குதோ? கடை பக்கமே வரல.”
“அவனை முதல்ல அனுப்புற வழியைப் பாருடா. மாசம் ஒருதடம், இந்த மாதிரி பஞ்சாயத்து.”
“ம்ம்.. சரிக்கா.”
“கடை முடிஞ்சிடுச்சா, கிளம்புவோமா.?”
“ஹான். ஆட்டோவை வரச் சொல்லுறேன். அப்படியே நட..”
“ஏன்டா, வண்டி என்னாச்சு?”
“அப்புறம், என்னோட பொண்டாட்டி எப்படி வருவா.?”
“தமிழா.?” எனக் கீதா கேள்வியாய்ப் பார்க்க, சற்றுத் தள்ளி நின்றிருந்தவளைக் காட்டினான்.
“என்னடா சொன்ன, அந்தப் பிள்ளயோட மூஞ்சி அரண்டு போன மாதிரி இருக்கு.?”
“ஒண்ணும் சொல்லலையே.?” என்றவாறே வியர்த்து வடிய நின்றிருந்தவளின் அருகே சென்றவன், “தமிழ்மா..” என அழைக்க,
படபடப்புடன் அவனை நோக்கியவள், “உங்களுக்கு இவ்வளவு கோவம் வருமா அத்தான்.? அந்தப் பையனோட தலையை இப்படி அழுத்துறீங்க? ஏதாவது ஆகிடுச்சுனா..?”
“பயந்துட்டா போல, சமாதானம் சொல்லிக் கூட்டிட்டு வா. நீயி கறி வெட்டுறவன், அவளுக்கு அந்த வாடையே ஆகாது. நல்லா ஜோடி சேர்ந்தீங்க!” எனக் கீதா சிரித்து விட்டு முன்னே செல்ல, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல தமிழ்மா. சும்மா, கோபத்துல கை நீட்டுறது தான். நீயி கொலை காரன் அளவுக்கு யோசிக்கிற? வா..” என்றவன் கைப்பற்றி அழைத்துச் செல்ல, தெளியாத முகத்தோடே கணவனுடன் நடந்தாள் செந்தமிழ்.
error: Content is protected !!