Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 29

அத்தியாயம் 29

 



Advertisement

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த தமிழ், கூடத்தில் நின்றிருந்த குமாரைக் கண்டு திகைத்தாள்.

Advertisement

Advertisement

“எப்ப வந்த.?”

“இப்பதான்.”

Advertisement

“வந்தா, சொல்ல மாட்டியா, சத்தம் கொடுக்காம நிக்கிற.?”

“கூப்பிட வாய்த் திறந்தேன், அதுக்குள்ள வந்திட்ட..டீங்க..‌” என இழுத்துப் பேசியவனை ஆழ்ந்து பார்த்தவள், “என்ன விசயம்.?”

“கல்லாக் காசைக் கொடுக்கணும்.”

“அவருக்கிட்ட இல்ல கொடுக்கணும், ஃபோன் போட்டியா..?”

“எப்படியும், இந்நேரம் அண்ணே வீட்டுல இருக்க மாட்டாருனு தெரியும். அதான் ஃபோன் போடல. காசை, இங்க கொடுத்திடலாம்னு வந்தேன்!”

பணத்தை எண்ணி சரிபார்த்துக் கொண்டவள், “சரி, நானு சொல்லிக்கிறேன்!” என்றிட, அவனோ அசையாமல் நின்றான்.

“என்ன?”

“சம்பளம்..”

“அதை, அவருதான் தரணும். எனக்கு அதுக்கு அதிகாரம் இல்ல.”

“அண்ணே கறிக்கடை வச்சிருக்கிறது, பிடிக்கல போல?”

“காசைக் கொடுத்திட்ட இல்ல, கிளம்பு!”

“கல்யாணம் ஆன மறுநாளே கடைக்கு வந்து நிக்கிறாரு, அவரு. என்னனு பார்த்தா, இதுதான் காரணமா.?”

தமிழிற்கு ஐயோ என்றிருந்தது‌. இதுவரை என்னதான் தங்களிற்குள் கருத்து வேற்றுமை இருந்தாலும், மூன்றாவது ஆள் அதைப் பேச அனுமதித்தது இல்லை. அவள் தனது அன்னையிடம் கட்டுப்படுத்த இயலாது பகிர்ந்து கொண்டாலுமே, சவிதா அதைப் பக்குவத்துடன் கையாண்டார். ஆனால் இவன்..?

சினம் ஏற.. “உன்னோட வேலை, கடையில மட்டும் தான். வீட்டுக்கும் உனக்கும் சம்பந்தமே கிடையாது‌. என்கிட்ட பேச வேண்டிய அவசியமும் இல்ல.‌ போ வெளிய!” என்றவளைப் பார்த்துச் சிரித்தவன்,

“அண்ணே, பிழைக்கத் தெரியாத ஆளா இருக்காரு. சம்பாதிக்கிறதை அடுத்தவனுக்கும் ஊருக்கும் கொடுத்திட்டு, அழகுக்காக உங்களைக் கட்டிக்கிட்டு, ஆசைக்கு வாழ முடியாம.. எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறாரோ.? கறி கடைக்காரன்னா என்ன கேவலமா.? என்னோட பொண்டாட்டி எல்லாம், நானு சொல்லுறதை அப்படியே கேட்பா. ஆனா, இப்ப குடிக்கிறேனு போயிட்டா‌. நானு வேணும்னா, இந்தக் கவுச்சி வாடை பழக்கமாகுறதுக்கு ஒரு வழி சொல்லவா?”

தமிழின் பொறுமை, காற்றில் பறந்தது. அதற்குமேல் ஒரு சொல்லைக் கேட்பதற்கும், அவள் தயார் இல்லை‌.‌ அத்தோடு அவன் மது போதையில் இருப்பதை உணர்ந்து கொண்டவள், உடனடியாய் வெளியேற்றிட எண்ணி, கணவனிற்குக் கைப்பேசியில் அழைத்தாள்.

மறுபுறம் பதில் வராமல் இருக்க.. அவளை மேல் இருந்து கீழ் வரை பார்வையால் அளந்த குமார், “யாருக்கு ஃபோனு.!”

“அவருக்குத்தான்.”

“வர நேரமாகும், ஆஸ்பத்திரிக்குப் போறதா சொன்னாரு.”

சட்டென்று தமிழிற்குப் பதற்றம் தொற்றிக் கொள்ள, “ஹாஸ்பிடலுக்கா.?”

“மதியம் கறி வெட்டுறப்ப, விரல்ல வெட்டுப் பட்டு ஏகப்பட்ட ரெத்தம் போயிடுச்சே. தெரியாதா.?”

‘ஐயோ! கையில காயமா? எப்படிக் கவனிக்காம விட்டேன்.?’ என எண்ணியவளின் முகத்தில் கலக்கம் படர.. ஓரடி முன்னேறியவன், “நல்ல பொண்டாட்டி. கட்டுன புருசனைப் பத்தி எதுவும் தெரியல. அவனோட வாழவும் பிடிக்கல. அப்புறம் என்ன இதுக்கு..” என்றவனின் பேச்சு, அவள் விட்ட அறையில் நின்று போனது.

“குடிச்சிட்டு வந்து, உன்னோட மனசுல இருக்கிற வக்கிரத்தை எல்லாம் கொட்டுறியா? போடா!” என்றவள் அவனது முதுகின் புறம் கை வைத்து இல்லத்திற்கு வெளியே தள்ள, சரியாய் மோகனுடன் வந்து இறங்கினான் சேரல்.

நடப்பது ஒன்றும் புரியாமல் பார்த்தவன், “என்னடா, இந்தப் பக்கம்.?”

அவன் பதற்றத்துடன், “சம்பளம்?” என உளரலாய்‌ உரைக்க, “உனைய குடிச்சிட்டு, என்னோட வீட்டுப் பக்கம் வராதனு சொல்லி இருக்கேன்‌. காசே, உன்கிட்ட தான இருக்கு?‌ சம்பளத்தை வாங்க வந்தானாம். போ! மாமா, இவனை வீட்டுல இறக்கி விட்டுடுங்க. எங்கேயாவது விழுந்து தொலைச்சிடப் போறான்!” என்று மோகனுடன் அனுப்பிவிட்டு, மனைவியின் அருகே வந்தான்.

குமாரின் நடவடிக்கையை உரைப்பதை விட.. கணவனது உடல்நிலை முக்கியமாய்த் தோன்ற, “என்னாச்சு அத்தான், ஏதோ விரலை வெட்டிக்கிட்டீங்களாம்?”

“ம்ப்ச்ச்.. அது ஒண்ணுமில்ல. கறியோட ஈரத்துல கையை வச்சிருக்கோம்ல? கொஞ்சம் சுதாரிப்பு இல்லாம இருந்திட்டேன்‌. வெட்டும் போது, கத்தி விரல்ல இறங்கிடுச்சு!” எனத் தனது இடக்கரத்தைக் காட்டினான்.

நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இரண்டிலும் கட்டுப் போடப்பட்டிருக்க, “அச்சோ! என்ன அத்தான் இது?” எனக் கரத்தைப் பற்றியவள், அனலைத் தாங்கிட இயலாது திகைப்பாய்ப் பார்த்தாள்.

“காய்ச்சல் அடிக்கிது, அத்தான்.?”

“லைட்டா தான். மாமாவோட போயி, டாக்டரைப் பார்த்து ஊசி போட்டுட்டேன்.”

“ஏன், என்கிட்ட எதுவுமே சொல்லல.? நானும் மதிய நடந்த விசயத்துல, உங்களைச் சரியா பார்க்காம விட்டுட்டேன்.‌ ஆனா.. அப்பவும் காய்ச்சல் இல்லையே.? என்ன திடீர்னு.?”

“உடம்பு அலுக்க வேலை பார்க்கிறோம்ல? தூக்கமும் இல்ல, அதான். ரெண்டு நாள்ல சரியாகிடும். வா உள்ள..” என அழைத்துச் சென்றவன், “அவன் வந்தா, இனி உள்ள விடாத தமிழ்மா.”

அவள் கேள்வியாய் நோக்க, “ஆளு சரியில்ல.”

“அப்புறம் ஏன் வேலையில வச்சிருக்கீங்க.?”

“சட்டுனு அனுப்பிட முடியாது. நம்மளுக்குத் தகுந்த ஆள் வேணும்ல? ரங்கன், நல்லா வேலை செய்யிறான். ஆனா கறி வெட்டுற பக்குவத்துக்கு வரல. ஒரு வாரத்துல ஆளைப் பிடிச்சிட்டு, இவனை அனுப்பிடுவேன்.”

‘தற்போது இருக்கும் நிலையில் எதுவும் உரைக்க வேண்டாம்!’ எனப் புறம் தள்ளியவள், “முடியாததோட ரெண்டு தடவை வேற குளிச்சிருக்கீங்க?”

“என்ன செய்ய? நீயிதான், குளிக்கலேனா உள்ள விட மாட்டியே?”

அவள் பாவமாய், “என்ன அத்தான்?”

“ஏய்.. விளையாட்டுக்குத்தான் சொன்னேன்.” எனப் புன்னகைத்தவனைப் பற்றி, “உன்னோட வீட்டுக்காரன் நம்புற மாதிரியே பொய்ச் சொல்லுவான். நிஜத்துக்குப் பேசுறானா, விளையாட்டா சொல்லுறானானு தெரிஞ்சிக்கிறது ரொம்பச் சிரமம்!” என்று கீதா சொன்னது, எவ்வளவு உண்மை எனத் தற்போது உணர்ந்தாள்.

முகத்திலும் குரல் தொனியிலும் எவ்வித மாற்றமும் இல்லை. விளையாட்டு என உதிர்த்து சிறு புன்னகையைச் சிந்தவில்லை எனில், “அச்சோ! இப்படிச் சொல்லிட்டாரே அத்தான்.?” என்று மனம் நொந்திருப்பாள் அவள்.

“தமிழ்மா.. கை ரொம்ப வலிக்கிது. சட்டையை மட்டும் கழட்டி விடேன்.” என்று அவளின் உதவியுடன் மாற்றியவனிடம், “இந்த அளவுக்கு, வலிக்குமா அத்தான்.?”

“வலிக்குமா வா.? கையையே வெட்டுன மாதிரி ‌ரணமா இருக்கும்.” என இரவு உணவை உண்ணத் துவங்கினான்.

முகம் தவிர, உடல் முழுவதும் குண்டூசியால் அங்கங்கு குத்துவது போன்றதொரு வலி. கத்தியை அழுத்திப் பிடித்துப் பணி செய்ததால், கை விரல்களைப் பாதி அளவிற்குத் தான் மடக்க முடிந்தது‌. அவள் தந்த இட்லியைப் பிய்ப்பது கூடச் சிரமமாய் இருந்தது.

“என்னாச்சு அத்தான்.?”

“வலிக்கிது.” என முகம் சுளித்தான்‌.

“ஊட்டவா.?”‌ என்று அவள் வினவும் பொழுதே, “சேரா..‌” என்றபடி‌க் கணவனுடன் வந்தாள் கீதா.

“வா அக்கா.”

“என்னடா?‌ காய்ச்சல்னாரு மாமா?”

“ம்ம்.‌. முடியல..”

“தீபாவளி, பொங்கலு, இந்தமாதிரி மொத்த வியாபாரம்னா.. உனக்கு உடனே காய்ச்சல் வந்திடுமே?”

அவன் சிரிக்க, “சிரிக்காதடா. அவ்வளவு கஷ்டப்படணும்னு என்ன அவசியம்? முடியாது, வேற ஆளைப் பார்த்துக்கோங்கனு சொல்ல வேண்டியது தான?”

“எல்லாருக்கும் சம்பளம் எல்லாம் போக, முப்பதாயிரம் லாபம். நீயி தருவியா என்ன.?”

“உனக்கு நல்லது சொல்ல வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்!”

“சரி, சொல்லாத! கிளம்பு!”

“கொழுப்பைப் பார்த்தீங்களா மாமா, இவனுக்கு?” எனக் கணவனிடம் உரைக்க, சிரித்தான் மோகன்‌. தமிழின் முகத்திலும் கூடப் புன்னகை‌.

“அதுசரி, எங்களுக்கு எங்கடா சம்பளம்.?”

“அந்தா சட்டைப் பையில தான் காசு இருக்கு, வேணும்கிறதை எடுத்துக்க.”

“ரொம்ப வலிக்கிதா என்ன.?”

“முதுகுல எல்லாம் குத்துது அக்கா!”

இடக்கையால் தேய்த்து விட்டவள், “சாப்பிட்டியா.?”

“மதியம் கஞ்சி குடிச்சதோட சரி.”

“அட கிறுக்குப் பயலே! செஞ்ச வேலைக்கு, இந்நேரம் வயிறு குடலைத் தின்னிருக்கும்.‌ வெறும் வயித்தோட நைட்டும் பகலும் இருந்ததுதான், கேஸ் ஏறி குத்துது போல.”

“ம்ம்‌‌.. அதுக்கும் சேர்த்து தான் ஊசிப் போட்டேன்.‌ ஆனா கேட்கல.”

“அது, சாதாரண மனுசங்களுக்குக் கேட்கும்‌. உனைய மாதிரி, கட்டையால உடம்பைச் செஞ்சவனுக்கு எல்லாம் கேட்காது‌. மனுசன் மாதிரி வேலை செஞ்சா பரவாயில்ல, பிசாசு மாதிரி உழைச்சா? தமிழ், வாய் அகலமான ஒரு செம்பை எடுத்துட்டு வா!” என அனுப்பியவள் சேரலை, “கிழக்குப் பார்த்துச் சம்மணம் போட்டு தரையில உட்காருடா!” என்றாள்.

மோகனிடம் பத்து ரூபாய் நாணயத்தை வாங்கி, சிறிய துணி ஒன்றில் முடிச்சிட்டு நெருப்பைப் பற்ற வைத்து.‌. செம்பினுள் போட்டு அவனிற்கு வலிக்கும் இடத்தில் கப்பென்று கவிழ்த்து வைத்தாள்.

உள்ளிருக்கும் அனலிற்குத் தோலை இறுக்கிப் பிடித்தபடி, செம்பு உடலோடு நின்று கொண்டது.

தமிழ் புரியாது விழித்து, “என்ன அண்ணி இது.?”

“வாயுப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்புக்குச் செய்யிற கை வைத்தியம். நெருப்பு அணைஞ்சதும் தோல்ல இருக்கிற நுண்துளை வழியா உடம்புக்குள்ள இருக்கிற காத்தை வெளிய இழுத்திடும். அப்புறம் வலி கொஞ்சம் குறையும்!” என்றவள் பத்து நிமிடங்கள் காத்திருந்தாள். செம்பு பிடிமானம் இன்றி, அப்படியே நின்றிருந்தது.

“இப்ப, எப்படி இருக்கு சேரா?”

“பரவாயில்ல. ஆனா உட்கார முடியல அக்கா.”

“சரி, இப்பப் போதும். சரியாகிடுச்சுனா பாரு.‌ இல்லேனா நாளைக்கு ஒரு தடவைச் செய்யிவோம்!” என்றவள் சிறிது சிறிதாய் நீரை ஊற்றி செம்பை எடுத்தாள். வட்டமாய் அச்சுப் பதிந்து சிவந்திருந்தது, அவனின் முதுகில்.

துணியால் துடைத்து விட்டவள், “பெருங்காயத்தூள் போட்டு, நல்ல சூடா தண்ணிக் கொடு தமிழ்‌! அதைக் குடிச்சிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடு. ரெண்டு மூணு நாளைக்கு வேலையைக் குறைச்சுக்க. முதல்ல நல்லா தூங்கு! படுக்கிறதுக்கு முன்னாடி இவனுக்கு முதுகு, கைக்கால்ல எல்லாம் நல்லா தைலம் தேய்ச்சு விடுமா!” என இருவரிடமும் உரைத்துவிட்டுக் கிளம்ப, “இந்தாக்கா.” என்று பணத்தை நீட்டினான் சேரல்.

“என்னடா.?”

“வைத்தியம் பார்த்ததுக்கு, வெறும் கையோடவா அனுப்புவாங்க? பிடி!” என்றிட, வாங்கிக் கொண்டு சென்றாள்.

அடைமழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. கீதாவும் மோகனுமே, உறங்காமல் விழித்து வேலை செய்தவர்கள் தான். ஆனால் இளையவனிற்கு ஒன்று என்றதும், மணி இரவு ஒன்பதைக் கடந்த பின்பும் கூடப் பார்ப்பதற்காக வந்து விட்டாள் தமக்கை.

‘அவளிடம் சேரல் அவ்வளவு பணிவுடனும் உரிமையுடனும் நடந்து கொள்வது ஏன்.?’ எனத் தமிழால் நன்றாய் உணர முடிந்தது. அத்தோடு கணவனைப் பற்றியுமே புரிந்து கொண்டாள்.

சேரலிற்கு என்ன தரப்படுகிறதோ, அதையே தான் அவனும் மற்றவரிற்குத் தருவான்.‌ அன்பானாலும் சரி, அடி என்றாலும் சரி.

சாரங்கன் பேசியதற்காகத் தலையை அழுத்தியவன், ‘அண்ணே!’ என்றழைத்த ஒற்றைக் காரணத்திற்காகவே சினத்தைப் புறம்தள்ளி இயல்பாய் நடந்து கொண்டதே,‌ அதற்குச் சான்று.

தமிழ் ஊட்டி விட, உண்டு முடித்தான். தைலம் தேய்த்து உதவியவளிற்கு அவன் நன்றி உரைக்க, “இப்ப, நானு இருக்கிறேன்‌. தேய்ச்சு விட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி என்ன செஞ்சீங்க.?” என்றாள் அவள் ஆர்வத்துடன்.

“அதான், அக்கா இருக்கே? இந்தமாதிரி எல்லாம் வேலை பார்க்கிறப்ப, இங்க வரவே மாட்டேன்.‌ பெரியப்பா வீட்டுலயே படுத்திடுவேன்.‌”

“அண்ணியைப் பார்த்தா, கொஞ்சம் பொறாமையா இருக்கு. எப்படி இருக்காங்க.?”

மெலிதாய்ச் சிரித்தவன், “அம்மாவை மாதிரி. அவங்களும் இப்படித்தான். சரி படு, நேரமாச்சு பாரு!” என்றுவிட்டுத் தூங்க, தமிழும் சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!