Skip to content
Post Views: 15,512
அத்தியாயம் 3
அழைப்பு மணியின் ஒலியில் கதவைத் திறந்தார் நாராயணி. வாயிலில் நின்று இருந்தவனைக் கண்டதும் முகம் சுருங்கிவிட, “சவிதா..” எனக் குரல் கொடுத்த படியே உள்ளே சென்றார்.
Advertisement
“என்ன அத்தை?” என்றவாறே வந்தவர் இளஞ்சேரலைக் கண்டதும், “டேய்.. வா.. வா.. என்ன வாசல்லயே நின்னுட்ட?”
Advertisement
“வானு கூப்பிடாம, எப்படி வர்றதாம்.?”
Advertisement
“ரொம்பப் பெரிய மனுசனா ஆகிட்ட. உன்னை வானு வேற கூப்பிடணுமா? ஏழு வருசம் இங்கதான இருந்த, அப்புறம் என்னவாம்.?”
Advertisement
“ஆனா, நானு வெளியப் போயி பத்து வருசம் ஆச்சே? இப்ப, இந்த வீட்டுக்கு அந்நியமா மாறிட்டேன்!”
சற்றே முகம் வாட, “ஏன்டா இப்படிப் பேசுற? அதான் நான் கூப்பிடுறேன்ல.?” என்றவாறே அவனின் கைப்பற்றி அழைத்துச் சென்றார் சவிதா.
உள்ளே நுழைந்ததுமே ஆடவனின் கண்கள் தேடியது என்னவோ, அவளைத்தான். ஆனால் பாவைதான், பார்வையில் படுவதாய் இல்லை.
அவர் தந்த தேநீரை அருந்தியவன், கொண்டு வந்த புடவையைக் கொடுத்தான்.
“அம்மாக்குச் சாமிக் கும்பிட்டதா சேரா.?”
“ம்ம்.. இங்க இருந்தப்ப என்னை உங்களோட சொந்தப் பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டீங்க அத்தை. அம்மா சேலையை, வேற யாருக்கும் கொடுக்க மனசு வரல. அதான் இங்க கொண்டு வந்திட்டேன்.”
புன்னகைத்தவர், “எப்படி இருக்க.?”
“எனக்கென்ன, ராஜா மாதிரி இருக்கேன். கண்டிஷன் போடவும், கேள்வி கேட்கவும் யாரும் இல்ல!”
“நிறையவே மாறிட்ட.”
அவன் புன்னகைக்க, “இங்க இருந்தப்ப, நீ பேசுற சத்தம், பக்கத்துல இருக்கிறவங்களுக்குக் கூடக் கேட்காது. ஆனா இன்னைக்கு, என்ன போடு போடுற.?”
“பிழைக்கணுமே அத்தை? வாய்தான் மூலதனம். அது இல்லாம ஒண்ணும் செய்ய முடியாது!”
“அதென்னமோ நிஜம்தான்.”
அவன் சிரிக்க, “சாப்பிட்டுதான போவ.?”
“இல்ல அத்தை, கிளம்புறேன். விடிஞ்சா ஞாயித்துக்கிழமை வேற! கடையில வியாபாரத்தைப் பார்க்கணும்.”
“எப்பவும் ஓடிக்கிட்டே இருப்பியா.?”
“பின்ன, அதுக்குத்தான உசுரு இருக்கு? தாத்தா எங்க?”
“உள்ள படுத்திருக்காரு!”
“நான் கேட்டேனு சொல்லுங்க.”
“பார்த்திட்டுப் போடா.”
“ஆச்சி இருப்பாங்க. வேண்டாம்!”
“அதுக்காக அப்படியே இருக்க முடியுமா? அவங்களுக்குக் கடைசிக் காலத்துல செய்யணும்ல? பேரன்னு இருக்கிறது, நீயி ஒருத்தன் தான?”
ஒரு பெருமூச்சை வெளிவிட்டவன், “அவங்கதான் என்னைப் பேரனா ஏத்துக்கலயே அத்தை? அப்படி என்ன தப்பு செஞ்சிட்டாங்க, என்னோட அம்மா? காதலிச்சவரைக் கல்யாணம் செஞ்சு வைங்கனு கேட்டது தப்பா? அவங்க, அம்மா அப்பாவும் ஒத்துக்கல.
சரி, பெரியப்பா பெரியம்மா புரிஞ்சிப்பாங்கனு இவங்கக்கிட்ட வந்திருக்காங்க. இவங்களும் வாசலோட வச்சு அனுப்பிட்டாங்க. கடைசி வரைக்கும் பிறந்த வீட்டு சொந்தமே இல்லாம, போய்ச் சேர்ந்திட்டாங்க. மாமாவும் நீங்களும் மட்டும் அன்னைக்கு வரலேனா, இந்நேரம் நான்..?” எனத் தொண்டை அடைக்கப் பாதியிலேயே நிறுத்த, கணவனது சிறியதந்தையின் மகள் வயிற்றுப் பெயரனது தலையை ஆதரவாய் வருடிக் கொடுத்தார் சவிதா.
“மன்னிச்சிடுங்க அத்தை. இன்னைக்கு ஏதோ மனசு கேட்காம..”
“உன்னைப் பெத்தவ ஞாபகம் வந்திடுச்சா.?”
கலங்கிய கண்களை அவர் அறியாமல் துடைத்து, “கிளம்புறேன்.” என்றான்.
எதுவும் பேசினால் மேலும் வருத்தம் கொள்வானோ என்றெண்ணி, தலையை மட்டும் அசைத்தார்.
வாசல் வரை வந்து வழியனுப்ப, விடைபெற்று வெளியேறிய தருணம், சுற்றுச் சுவரைக் கடந்து உள்ளே அடியெடுத்து வைத்தாள் அவள்.
சட்டென்று வானிலை மாற்றம் அடைந்தது. மெலிதான சாரல் மழைத் துவங்க.. அவளைக் கண்டவனின் உள்ளே இருந்த வலியும் சரிந்து, மனநிலையும் மாற்றம் கண்டது.
இளஞ்சேரலைக் கடந்து தன்னை நோக்கி வந்த மகளைப் பார்த்த சவிதா, “என்ன, எனக்கென்னனு வர்ற.?”
“வேற எப்படி வரணும்?”
“அவன் வந்திருக்கான். ரெண்டு வார்த்தைப் பேசுனா என்ன?”
“நான் எதுக்குப் பேசணும்.?”
“உன்கிட்டச் சொன்னேன் பாரு. உன்னோட ஆச்சி புத்தி அப்படியே இருக்கு!”
அன்னையை முறைத்தவள் எதுவும் பேசாது இல்லத்திற்குள் செல்ல, நொடி நிதானித்துப் பாவையவளின் அசைந்தாடும் பின்னலை பார்த்துவிட்டுப் புன்னகையுடன் நடந்தான் அவன்.
சவிதா, “சேரா.. தூரல் போடுது பாரு. உள்ள வா, கொஞ்ச நேரம் கழிச்சுப் போயிக்கலாம்!”
‘உள்ளே சென்றால், அவளை இன்னும் சிறிதுநேரம் பார்க்கலாம்!’ என மனம் ஆசைக் கொள்ள, ‘நேரம் கடந்து கொண்டிருக்கிறது. நாளை உனக்கான பணிகள் காத்திருக்கின்றன!’ என்று கடமையை அறிவுறுத்தியது மூளை.
‘ஆசையா? கடமையா?’ என்ற பட்டிமன்றத்தில், உணர்ச்சியானது மனதை வெற்றி பெற வைத்து, அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றது.
ஈரமான உடையை மாற்றச் சொல்லி, பெயர்த்தியின் தலையைத் துவட்டத் துவங்கினார் நாராயணி.
சேரலிடம் துண்டைக் கொடுத்த சவிதா, “இருந்திட்டு நாளைக்குப் போகலாம்ல.?”
“என்னோட வேலையைப் பத்தித் தெரிஞ்சே, இப்படிச் சொன்னா எப்படி அத்தை.?”
இருவரது உரையாடலையும் கேட்டு, முதியவரும் அவளும் உள்ளே சென்றுவிட, “உன்னை, நாங்க சரியா கவனிக்காம விட்டுட்டோமா?”
“ஏன் அத்தை இப்படிப் பேசுறீங்க?”
“நீயா ஊருக்குப் போனதும், உன்னை அடிச்சாவது எங்கக்கூட கூட்டிட்டு வந்திருக்கணும்னு தோணுது!”
அவன் சிரிக்க, “ரத்னம் அண்ணே, ஆதிக்குடில்ல எப்படி வாழ்ந்தவருனு தெரியுமா? ஊராட்சி மன்ற தலைவரா இருந்தவருடா. உங்கம்மா மட்டும் என்ன, டீச்சர்! ஆனா நீயி.?”
“நல்லாதான இருக்கேன், அப்புறம் என்ன?”
“இந்தக் கறிக்கடை எல்லாம் நமக்குத் தேவையா சேரா? ஒரு உசுரை எடுத்து, அதோட இரத்த வாசத்துல வாழணுமா.?”
மெலிதாய்ச் சிரித்தவன், “ஏன் அத்தை? நீங்க.. ஆடு, கோழி, மீன் எல்லாம் சாப்பிடாமலா இருக்கீங்க.?”
அவர் பதிலின்றி அமைதியாக, “எல்லாமே தொழில் தான். அதுல எந்தளவுக்கு நாம நேர்மையா இருக்கோமோ, அது அந்தளவுக்கு நம்மளை உயரத்துக்குக் கொண்டு போகும்!”
“ம்ம்..” எனப் பெருமூச்சு விட்டவர், மகளிற்குத் தேநீரைக் கொடுக்கச் சென்றார்.
அவள் அன்னையிடம், “என்ன, உன்னோட மருமகன்கிட்ட கதைப் பேசி முடிச்சிட்டியா.?”
“நீயி, ஏன் இப்படிச் செய்யிற? இங்க இருந்தப்ப எல்லாம், அவன் கூட நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்த?”
“அப்பா.. காசைக் கொடுத்துக் காலேஜ்ல சீட் வாங்கிட்டு வந்தா, ஊருக்கே போறேன்னு ஓடிட்டான். இவன்கூடப் படிச்சவங்க எல்லாம், இப்ப எப்படி இருக்காங்கனு தெரியுமா? இவனும் இருக்கான் பாரு, கைலியும் சட்டையுமா!
இங்க வரும் போதாவது நீட்டா பேண்ட் சர்ட் போட்டா, என்ன.? யார் பேச்சையும் கேட்க மாட்டான், திமிர் பிடிச்சவன். இதுல, இவன்கிட்ட நான் பேசணுமா? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, பேச? அவனை, உன்னோட நிறுத்திக்க. என்னை எல்லாம் இதுல இழுக்காத!” என்றவள் எழுந்து அவளறைக்குச் செல்ல,
“உன்னோட வேலையை மட்டும் பாரு. என்னோட பேத்தியை கட்டாயப் படுத்தாத. போனவன் அப்படியே போகாம, எதுக்கு இப்படி அப்பப்ப வந்து நிக்கிறானோ.. தெரியல!” என்ற மாமியாரின் சொற்களில், கனத்த மனதுடன் வெளியே வந்தார் சவிதா.
கூடத்தில் அமர்ந்திருந்தான் சேரல்.
‘இவர்கள் பேசியது எதுவும் அவனின் செவிகளை எட்டி இருக்கக் கூடாது!’ என்ற வேண்டுதலுடன் அவனருகே செல்ல, புன்னகைத்தான்.
சில நிமிடங்கள் அமைதியாய்க் கடந்திருக்க, “அத்தை..”
அவர், “என்னடா.?” என்ற படியே கேள்வியாய் நோக்க, “நான் உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கிறேன், தப்பா நினைச்சிக்காதீங்க?”
சவிதா சிரித்து, “பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”
அவனும் சிரித்து, “தோணிச்சு, விசயம் அந்த மாதிரி!” எனச் சற்றே தயங்கியவன், “தமிழை, எனக்குக் கட்டித் தர்றீங்களா.?”
அவர் திகைப்பாய் நோக்க, “சரி, இல்லைனு ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுங்க அத்தை! இப்படியே பார்த்தா, என்ன அர்த்தம்?”
“என்ன நினைச்சுடா, இப்படிக் கேட்கிற.?”
“எல்லாம் உங்க மகளை நினைச்சுத்தான்!”
“அவ, உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டிறாளே?”
அவன் சிரிக்க, “டேய், நிஜத்தைச் சொல்லு!”
“கேளுங்க, சொல்லுறேன்!”
“என்ன திடீர்னு?”
“திடீர்னு எல்லாம் இல்ல, மூணு வருசமாவே!”
அவர் குழப்பமாய்ப் பார்க்க, “மாமா, இறந்ததுக்கு வந்து, ரெண்டு நாள் தங்கி இருந்தேன்ல? அவ அழுதுக்கிட்டே இருந்ததைப் பார்க்கவும், மனசுக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு. மாமாவும் தமிழும் எவ்வளவு நெருக்கம்னு, எனக்கு நல்லா தெரியும்.
நானு இங்க இருந்த ஏழு வருசமும், மாமா பக்கத்துல தான படுத்துக்குவா? நிஜமாவே, அப்ப ரொம்பப் பயமா இருந்திச்சு அத்தை, ‘எப்படி இவ, அதுல இருந்து மீண்டு வரப் போறா’னு. ஆனா பரவாயில்ல, சமாளிச்சிட்டா.
என்னனு தெரியல, இங்க வர்றப்ப எல்லாம்.. ‘எப்படி இருக்கா? நல்லா இருக்காளா? மாமாவ நினைச்சு இன்னும் அழுவாளா’னு மனசு அடிச்சிக்கும். நமக்காக ஒருத்தர் அப்படி இல்லையேனு, ஒரு ஏக்கம்.
அவளைச் சும்மா கூட்டிட்டுப் போயி, வச்சிக்க முடியாதுல? உங்க மகளை, நீங்க எப்படிக் கொடுப்பீங்க? அதான், கட்டித் தர்றீங்களானு கேட்கிறேன்!”
அவனைக் கனிவுடன் பார்த்தவர், “உள்ள, அவ உன்னைப் பத்தி என்ன பேசுனானு தெரியுமா.?”
அவன் சிரித்து, “தமிழுக்கு என்மேல வருத்தம், ஒழுங்கா படிக்கலேனு. இங்க இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி, ஒழுங்கா காலேஜ் போயி படிக்கிற வழியைப் பாருனு சொன்னா. ஆனா நானுதான்..”
“அதையே தான், இப்பவும் சொல்லுறா. நீட்டா, டிரஸ் பண்ண தெரியலயாம். திமிரு அதிகமாம். அப்புறம் எப்படி உன்னைக் கல்யாணம் செஞ்சிக்க, சரினு சொல்லுவா.?”
“அவளுக்கு என்மேல கோபம் தானே தவிர, வெறுப்பு இல்ல அத்தை. இதுவும் ஒருவகையான அக்கறை மாதிரிதான். புரிஞ்சிக்குவா என்னை!”
“ஆனா.. சேரா. அத்தை மாமா எல்லாம்.?”
“உங்களுக்குச் சம்மதமா.?”
அவர் அமைதியைப் பதிலாகத் தர, “தாத்தா புரிஞ்சிப்பாரு. ஆச்சியையும் தமிழையும் தான் சமாளிக்கணும்!”
“அதை யார் செய்யிறது?”
“தாத்தாக்கிட்ட பேசி சம்மதிக்க வச்சிட்டா, அவரே ரெண்டு பேர்க்கிட்டயும் பேசிடுவாரு!”
“நல்லா, தெளிவா தான் யோசிக்கிற!”
சின்னதாய்ச் சிரித்தவன், “நீங்க, ஒண்ணுமே சொல்ல மாட்டிறீங்களே?
“நான் பார்க்க, வளர்ந்தவன் டா நீ! சந்தோஷம் தான் எனக்கு. ஆனா..”
“ஆனா.. என்ன அத்தை?”
“உனக்கே தெரியும். தமிழ், யோசிக்காம பேசிடுவா. அது எதிர்ல இருக்கிறவங்களுக்குக் காயத்தைக் கொடுக்குமேனு கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்க மாட்டா. உன்னை எந்த அளவுக்குப் புரிஞ்சுப்பானு தெரியல. மனசு ஒத்து, சேர்ந்து வாழுவாளானு தான்.. “
“என்னைத் தான? பேசுனா, பேசிட்டுப் போறா! நான், அவளைப் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்பட வேண்டாம்!”
அவர் சிரிப்பால் சம்மதத்தைத் தெரிவித்து, “நானும் மாமாக்கிட்டப் பேசுறேன்!”
தலை அசைத்தவன், “மழை நின்னுப் போச்சு. கிளம்புறேன்!” என வெளியேற, அவன் பார்வையில் பட்டதும், தனது அறையில் அதுவரை திறந்து வைத்திருந்த ஜன்னல் கதவை மூடினாள், சவிதா ஜெயராமின் மகள் செந்தமிழ்.
அதைக் கண்டவனின் இதழ்களில், தானாய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
error: Content is protected !!