Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 33

அத்தியாயம் 33

 

 



Advertisement

அரக்கப் பரக்க நள்ளிரவில் மருத்துவமனையை அடைந்தான் சேரல்.

சவிதா வியப்புடன், “என்னடா இப்ப வந்து நிக்கிற.?

Advertisement

Advertisement

“தமிழ் எப்படி இருக்கா அத்தை, டாக்டர் என்ன சொன்னாங்க.?”

“இன்னும் ஒண்ணும் சொல்லல. வலி விட்டு விட்டு வருது. பார்த்துக்கிட்டு இருக்காங்க.”

Advertisement

சற்றே நிம்மதி மூச்சு விட்டவன், “நீங்க ஃபோன் போடவும் பயந்திட்டேன்.”

“என்ன பயம்? பிரசவ வலி வராம, பிள்ள எப்படிப் பிறக்கும்?”

“பக்கத்துல இருந்திருந்தா, ஒண்ணும் தெரிஞ்சிருக்காது.‌ அவ்வளவு தூரம்னதும், கொஞ்சம் சங்கடம் ஆகிடுச்சு.‌ மதியமே வர்றீங்களா அத்தான்னு வேற கூப்பிட்டாளா.? நானுதான், அதான் நாளைக்குப் போறோம்லனு விட்டுட்டேன். நீங்க என்னனா, பதினோரு மணிக்கு வலி வந்திடுச்சுனு ஃபோன் போடுறீங்க.”

மெலிதாய்ச் சிரித்தவர், “நல்லாதான் இருக்கா. இப்ப வரைக்கும், அவக்கூடத் தான் இருந்திட்டு வந்தேன். பஸ் எதுவும் கிடையாதே ராத்திரி நேரத்துல, எப்படி வந்த.?”

“மோகன் மாமாவும் வேலையா வெளியூர் போயிட்டாரு. அதுனால பைக்லயே வந்திட்டேன் அங்க இருந்து.”

“அடப்பாவி! எவ்வளவு தூரம்.?”

“என்ன, ஒரு மூணு மணி நேரம்‌‌. அதை விடுங்க, நானு தமிழைப் பாக்கணுமே.?”

“டெலிவரி வார்டுக்குள்ள உனைய விடுறாங்களானு தெரியலயே சேரா.?”

“கேட்டுப் பாருங்க அத்தை.‌ இல்லேனா நானு பேசுறேன்!” என்றவன் ‘முடியாது!’ என உரைத்த மருத்துவரிடம் அரை மணி நேரமாய்ப் பேசி அனுமதி வாங்கினான்.

பிரசவ அறைக்குள், வலியினால் அரை மயக்கத்தில் இருந்தாள் அவள்.

“தமிழ்மா..” என்ற அழைப்பில் இமைகளைப் பிரித்துக் கணவனைப் பார்க்க முயன்றவளின் விழியோரம் நீர் வெளியேற.. துடைத்து விட்டு, “ஒண்ணுமில்ல. பயப்படாத, சரியா.?”

அவள் தலையை மட்டும் அசைக்க, “ரொம்ப வலிக்கிதா.?”

“ஆமா..‌” என்றவளின் குரல் அருகில் இருப்பவரின் செவியைக் கூட அடைய இயலாத அளவிற்கு, பலகீனமாய் இருந்தது.

“ப்ளீஸ் பொறுத்துக்கோ, வேற வழி இல்ல..”

கணவனது சொற்கள், கண்களில் நீரோடு சேர்த்து புன்னகையையும் வர வைக்க, “காலையில தான் வருவீங்கனு நினைச்சேன்.”

“கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன். நீயி கூப்பிட்டதும் வந்திருக்கணும், ஸாரிமா‌.”

அவனது கரத்தைப் பற்றிக் கொண்டவளின் கையில் தட்டிக் கொடுத்தவன், சில நிமிடங்கள் அருகில் இருந்து விட்டு வெளியே வந்தான்‌‌.

நொடிகள் நிமிடங்களாய் மாறி, நேரத்தை அதிகப்படியாய் நீட்டித்து, சேரலிற்கு அவஸ்தையையும் பதற்றத்தையும் கொடுத்தது. கிழக்கே கதிரவனின் ஒளி பரவும் நேரத்தில், அவனின் மகன்.. தாயவளை மறுப்பிறப்பு எடுக்க வைத்து தானும் வெளி வந்தான்.

விபரம் அறிந்த அடுத்த நொடியே, கிளம்பி விட்டாள் கீதா.

“ஏன்டா, ராத்திரியே என்கிட்டச் சொல்லல?” என்று தம்பியிடம் சண்டை வேறு.

மருத்துவமனையில் கொடுத்த நீர் ஆகாரத்தை மட்டும் குடித்துவிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் தமிழ். அனைவரும் இயல்பிற்குத் திரும்ப, ஐந்து மணிநேரம் ஆனது‌‌.

கை விரலிற்கு மோதிரம், கழுத்திற்குச் சங்கிலி, வகை வகையாய் வண்ண வண்ணமாய் உடைகள், பிள்ளை பெற்றவளிற்கு நாட்டு மருந்துகள் எனக் கைக் கொள்ளாத அளவிற்கு வாங்கி வந்திருந்த தமக்கையை மூச்சடைக்கப் பார்த்த சேரல், “என்னக்கா இது? என்ன அவசரம், எல்லாத்தையும் இப்பவே செய்யணுமா?”

“அதுக்காக, பிள்ளைய பார்க்க வர்றப்ப வெறும் கையை ஆட்டிட்டு வரச் சொல்லுறியா.? என்னோட மருமகனுக்கு, நானு செய்யாம வேற யாரு செய்யிவா.? மாமா சம்பாதிக்கிறதை, வச்சிருந்து என்ன செய்ய.? உன்னையும், உன்னோட மகனையும் தவிர்த்து, யாரு இருக்கா எங்களுக்குனு..” என்றவள், குழந்தையின் பிஞ்சு விரல்களில் சில நொடிகளில் கொடுத்து வாங்கி, “இந்தாங்க அத்தை!” எனச் சவிதாவின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டாள்.

நாராயணிக்கு.. கீதா தனது பெயர்த்திச் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் இல்லை எனினும், தற்போது குழந்தைக்காகச் செய்வதை மறுப்பதற்கு வாய் வரவில்லை.‌ அதனால்.. முன்பு போல் சொல் அம்புகளை எய்யாமல், அமைதியாய் இருந்து கொண்டார்.

ஒரு மாதம் மட்டுமே பிறந்தகத்தில் மனைவியையும் குழந்தையையும் விட்டு வைத்தான் சேரல்.

முப்பத்தோராம் நாள் பெயர் சூட்டும் விழாவிற்கு ஆதிக்குடிலில் தனது இல்லத்திலேயே ஏற்பாடு செய்துவிட்டு, சரியாய் முப்பதாம் தினத்தன்று அழைத்துச் செல்ல வந்து விட்டான்.

“என்னடா.? அவ, அங்க வந்து குழந்தையை வச்சுக்கிட்டுத் தனியா எப்படிச் சமாளிப்பா? பிள்ளைக்கு, முதல்ல தலை நிக்கட்டும்‌. மூணாவது மாசம் வந்து கூட்டிட்டுப் போ!” என அன்னையாய்ச் சவிதா தனது கவலையையும் எதிர்பார்ப்பையும் உரைக்க,

“இல்ல அத்தை, ஏற்கனவே இரண்டரை மாசக் கணக்கு ஆகிப்போச்சு. இவ்வளவு வருஷம் தனியாவே இருந்திட்டு, இப்பதான் அவ வந்தா. அதுக்குள்ள பிரசவம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க? நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்.‌ தமிழ், ஒண்ணுமே செய்ய அவசியம் இருக்காது. எல்லா வேலையையும் நானே பார்த்துக்கிறேன்.‌

உதவிக்கு அக்காவும் இருக்குல்ல? நீங்களும் வந்து போங்க. இல்லையினா ஒரு நாலஞ்சு மாசத்துக்கு, ஆச்சித் தாத்தாவோட வந்து அங்கேயே இருங்க! கூட்டிட்டுப் போறேனே அத்தை?” என்றிட, அவரால் ‘வேண்டாம்’ என உரைக்க இயலவில்லை.

தங்களது வழக்கப்படி சடங்கு மற்றும் முறைகளைச் செய்து, தாய் சேய்யுடன் மூத்தவர்களும் கிளம்பினர்.

மகனிற்கு யுகபாலன் எனப் பெயர் தேர்வு செய்திருந்தனர் தமிழும் சேரலும்‌. பத்து நாட்கள் உடன் இருந்து பார்த்து விட்டுப் பெரியவர்கள் வந்துவிட, கீதா தான் முழுமையாய்க் கவனித்துக் கொண்டாள்.

பாலனிற்கு அத்தையின் மடி மெத்தையாகவும், மாமனின் தோள் ஊஞ்சலாகவும் மாறியது‌. சேரல் உரைத்தபடியே.. தமிழிற்கு ஒரு வேலையையும் வைக்கவில்லை. தமக்கையும் தம்பியுமாய் இணைந்து, மூன்று மாதங்களிற்கு அவளைப் படுக்கையை விட்டு நகராது பார்த்துக் கொண்டனர்.‌

அதிலும் ஆடவனிற்கு மேகப் பொதியாய் இருக்கும் மகனையும், பிரசவத்தில் சற்றே உடல் தளர்வான மனைவியையும் லேசாய்த் தொடுவதற்கே பயமாய் இருந்தது, கத்திப் பிடித்து வலுவேறி காய்த்துப் போன கரம், ‘அவர்களிற்கு வலித்து விடுமோ?’ என்று.

கடை முடிந்து வந்து.. உறங்கும் மகனின் காலை ஒற்றை விரலால் லேசாய்த் தொட்டு ரசித்த கணவனைப் பார்த்துச் சிரித்த தமிழ், “என்ன அத்தான் இது.? தொட்டுத் தொட்டுப் பார்க்கிறீங்க? அவன் உங்க புள்ள, ஒரு தடவைக்கூட நீங்க இன்னும் சரியா தூக்கிக் கொஞ்சவே இல்ல தெரியுமா.?”

“இவன், பிறந்த ஆடுகளை விடச் சின்னதா இருக்கான் தமிழ்மா. தூக்குறப்ப வலிச்சதுனா, அழுதுடுவான்ல.?”

“அதுசரி.. ஆடு மேய்ச்ச புத்தி, போகுதானு பாரு?” என அவனது முன்நெற்றியை மறைத்திருந்த முடியைப் பற்றி ஆட்டியவள், “பேரு கறிக்கடைக்காரன், செய்யிறது வெட்டுற தொழிலு‌. ஆனா, பச்சக் குழந்தையைத் தூக்க பயம்!”

அவன் சிரிக்க, “இதுவரைக்கும் யாருக்காவது பயந்திருக்கீங்க..?”

லேசாய்த் தலையசைத்தவன், “முதல்ல உனக்கு, அடுத்தது இவனுக்கு!”

வியப்புடன் நோக்கியவள், “என்னை நினைச்சு என்ன பயம்.?”

“என்னைப் புரிஞ்சிப்பியா, நானு செய்யிற தொழிலை ஏத்துப்பியானு தான்.”

தமிழ் சிரிப்புடன், “எதுக்கும் யாருக்கும் பயப்படாதவரை, நாங்க பயப்பட வச்சிட்டோமா.?”

அவனும் சிரித்து, “நீயி வாந்தி‌ எடுக்கிறதை நிறுத்தினதுக்கு அப்புறம் தான், நிம்மதியா இருக்கு.‌ இப்ப உனக்கு, என்கிட்ட இருந்து வர்ற ஸ்மெல் பிரச்சனை இல்லேல மா.?”

“நானு, முன்னாடியும் பிரச்சனைனு சொல்லலியே.? மனசுக்கும்.. என்னோட.. என்.. என்ன சொல்லுறதுனு தெரியல.‌ அது, ஒருமாதிரி உணர்வு அத்தான். நீங்கதான் அதுக்கு அவசியம் இல்லாம, உடனுக்குடனே குளிச்சிடுறீங்களே.? அது போதும்.”

“ம்ம்.. உன்னை ரொம்பப் படுத்துறானா குட்டிப் பையன்?”

“தலை நல்லா நின்னிடுச்சு, அதுனால குப்புற கவுந்துக்கிட்டுக் கழுத்தைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்‌. ஒரு   அடி, அங்க இங்க நகர விட மாட்டிறான்.‌ எப்பவும் பக்கத்துலயே இருக்கணுமாம். அதுலயும் அண்ணியோட குரலை வச்சே, அவங்களைக் கண்டுபிடிச்சிடுறான் தெரியுமா? அண்ணே தோள்ல தூக்கி வச்சு ஆட்டிப் பழக்கி, என்னையும் அதே மாதிரி ஆட்டச் சொல்லுறான்.‌

என்ன.. பரமசிவம் மாமாவைப் பார்த்தா தான், மூஞ்சியைச் சுருக்குறான். அவரோட பெரிய மீசைய பிடிக்கல போல! உங்களை மாதிரியே, பசி தாங்க மாட்டிறான். வந்ததும்.. ‘பசிக்குது தமிழ்மா’னு நீங்க பாட்டுப் பாடுற மாதிரி, இவனும் கத்தி ஊரையே கூட்டுறான்.” என நாள் முழுவதும் பார்க்கும் சிறிய இளவரசனின் செயல்பாடுகளை உரைத்தாள் தமிழ்.

அவனுமே, மகனின் நடவடிக்கைகளையும் குறும்புகளையும் அறிவான் தான். ஏனோ மனைவி சொல்லச் சொல்ல, அனைத்தும் புதியதாய்த் தோன்றியது.‌ அக்குரலில் குழந்தையோடு சேர்த்து, அவளின் முகப் பாவத்தையும் அல்லவா ரசிக்க வைக்கிறாள்.‌

“சரி. வாங்க அத்தான், அவன் முழிக்கிறதுக்கு உள்ள சாப்பிட்டு வந்திடுவோம்.”

“நீயி இன்னும் சாப்பிடலயா தமிழ்மா.?”

“சாப்பிட்டனே, பதினோரு மணிக்கு. ஆனா திரும்பவும் பசிக்கிது.”

“ரெண்டு மணி நேரம் ஆச்சா.? அதான், நீயி சாப்பிடுறதை எல்லாம் அவனுக்குப் பாலா கொடுத்திடுறியே.? அதுனால, ரெண்டு ஆளுக்குச் சேர்த்து இல்ல, சாப்பிடணும்.?”

“ம்ம்.. நீங்க சொல்லுற அளவுக்குச் சாப்பிட்டா, வீங்குன பூசணிக்கா மாதிரி ஆகிடுவேன்.”

“அப்பவும், நீயி என்னோட பொண்டாட்டி தான.? இதே அழகோடதான இருப்ப?”

“போதும் போதும், ரொம்பத்தான்!” என்றவள் உணவைப் பரிமாற, இருவருமாய் உண்டனர்.

வெளிப்புறம் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை அறிவித்தபடி வண்டி ஒன்று சென்றது, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பெயரில்.

உணவை முடித்ததுமே  வெளியே சென்ற‌ சேரல், மாலையில் பரபரப்புடன் இல்லம் வந்து சேர்ந்தான்.

“தமிழ்மா உன்னோட ஆதார் கார்ட், வோட்டர் ஐடி எல்லாம் எடு!”

அவள் கேள்வியாய்ப் பார்த்து, “எதுக்கு அத்தான்?”

“கவுன்சிலர் எலெக்ஷன் வருது‌,‌ நீயி அதுல நிக்கப் போற.”

சற்றே திகைத்தவள், “என்ன விளையாடுறீங்களா.?”

“இல்ல. உண்மையாதான் சொல்லுறேன்.”

“அத்தான்.?”

“நமக்குக் கல்யாணம் ஆனதுமே சொன்னேன், ‘என்ன செய்யிறதுனு முடிவெடு‌. அதுக்கான வழியை நானு காட்டுறேன்’னு. ஒரு வருசம் ஆச்சு, நீயி இதுவரைக்கும் எதுவுமே சொல்லல.”

“ஆமா.. நானு இதைப்பத்தி எல்லாம் யோசிக்கிற நிலைமையில தான் இருந்தேன் பாருங்க? முதல்ல இந்தக் கறிக்கடைக் காரனைப் புரிஞ்சிக்கவே, தினம் தினம் மனசோட போராட வேண்டியது இருந்திச்சு. அது முடியிறதுக்குள்ள, உங்க மகன் வேற வந்திட்டான்.‌ இனி ஸ்கூலுக்கு அனுப்புற வரைக்கும், இவனோட போராடணும்?”

“எதுக்குப் போராடப் போற?‌ குழந்தையைப் பத்தி நீயி கவலைப்படாத. அக்கா பார்த்துக்கும்.”

“அதுக்காக, நானு எலெக்ஷன்ல நிக்கணுமாக்கும்.?”

“ஏன், நின்னா என்ன? வீடும் அடுப்படியும் மட்டும் போதும்னு நினைக்கிறியா தமிழ்மா.?‌‌ எனக்கு.‌. உனைய இது ரெண்டுக்குள்ளேயே சுருக்கிறதுல விருப்பம் இல்ல. நீயி, என்னோட மனைவியா மத்தவங்களுக்குத் தெரியிறதை விட.. நானு உன்னோட கணவனா அறிமுகம் ஆகுறதைத் தான், பெருமையா நினைக்கிறேன்.‌

கறிக்கடைக் காரன்றதை விடக் கவுன்சிலரோட வீட்டுக்காரன்னு கெத்தா சொல்லிக்கலாம்ல?‌ அதோட உனக்கே தெரியும், நானு எதுக்கு இந்த முடிவுக்கு வந்தேன்னு!” என்றவன்.‌. பேசிப் பேசியே அவளின் சம்மதத்தைப் பெற்று, தேர்தலில் போட்டி இடுவதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!