Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 7

அத்தியாயம் 7



Advertisement

“அக்கா.. பெரியப்பா..‌” என்றபடியே இல்லத்திற்குள் நுழைந்த சேரலின் குரலில் கணவனின் அருகே இருந்து, சற்று தள்ளி நின்றாள் கீதாராணி.

Advertisement

மோகனும் தனது பங்கிற்கு ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை இயக்க.. கூடத்தில் அவனைக் கண்டதும், “எப்ப வந்தீங்க மாமா?”

Advertisement

“இப்ப தான் மாப்ள. ஒரு பத்து நிமிசம் இருக்கும்!”

Advertisement

“எப்படி இருக்குது உங்கம்மா?”

அவன் பதிலுரைக்காமல் மெலிதாய்ப் புன்னகைக்க,‌ “என்ன இருந்தாலும் பெத்தவங்க. மத்தவங்க குறையா பேசும் போது, மனசுக்குச் சங்கடமாத்தான் இருக்கும்!” என்றவனை இடைமறித்து, “அதுனால, பேசாம இருக்கிறதே நல்லது!” என்றாள் கீதா.

தலையசைத்த சேரல், “சரி சரி, உன்னோட மாமியாவை எதுவும் சொல்லல.”

“அது கிடக்குது.‌ நீயி எதுக்கு அவ்வளவு வேகமா ஓடி வந்த.?”

“அப்பா எங்கக்கா.?”

“நம்ம தபால்காரரோட குலசாமி கோயில்ல, வெள்ளிக்கிழம கிடா வெட்டாம்.‌ ஆடு பார்த்து வாங்குறதுக்காக, அப்பாவைக் கூட்டிட்டுப் போயிருக்காரு!”

“சரிக்கா, அப்பா வந்ததும் வர்றேன்.”

“அது என்னடா, வர்றேன்னு ஓடுற? முதல்ல, இப்ப வந்ததுக்கான விவரத்தைச் சொல்லு!”

“இல்லக்கா, அப்பாவும் வந்திடட்டும்!”

“ஓஹோ.. அப்ப என்கிட்ட எல்லாம் சொல்ல மாட்டியா.?”

“ஐயோ அக்கா!”

மோகன், “விடு ராணிமா,‌ அதான் மாமா வரட்டும்னு சொல்லுறானே.?”

“சரி சரி, அவரு வந்த பின்னாடியே சொல்லட்டும்.‌ ஹுக்கும்!‌” என அவள் இதழ்களைச் சுளித்துக் கொண்டு செல்ல, “அம்மா.. ராணிமா. நில்லு தாயி! கோவிச்சிக்காத.‌” என அவளின் கைப்பற்றி நிறுத்திய சேரல், “கல்யாணத்தைப் பத்திப் பேசுனேல.?”

முகம் மலர்ந்தவள், “டேய்! சம்மதமா உனக்கு?‌ பொண்ணு பார்க்கட்டுமா.?”

“அந்தக் கஷ்டம் எல்லாம், வேணாம் உனக்கு. நானே பார்த்திட்டேன். நீயும் பெரியப்பாவும் வந்து பேசி, தட்டை மாத்தினா மட்டும் போதும்!”

“அடடா! அவ்வளவு தூரத்துக்குப் போயிட்டியா நீயி.? எவடா அவ?‌ எனக்குத் தெரியாம, இவ்வளவு நாளும் என்னோட தம்பியை முந்தியில முடிஞ்சு வச்சவ?”

சற்றே கலக்கமாய்ப் பார்த்தவன், “அப்படி எல்லாம் இல்லக்கா.”

“நானு உன்கிட்ட விளக்கம் கேட்கல, யாருனு தான் கேட்டேன்.”

“ஜெயராம் மாமா மக!”

கீதா திகைப்பாய், “தமிழ் பிள்ளையா.?”

“ஆமா.”

“அன்னைக்கு ஃபோன் பேசுனப்ப, ஏதேதோ பேசி எனக்கே காது குத்திட்டீல.?”

“நீயி நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லக்கா!”

“என்ன இல்ல? என்ன இல்லனு கேட்கிறேன்? நானு கேட்டேன்லடா உன்கிட்ட? என்னடா சொன்ன நீயி.? வந்திட்டான் பெரிசா.. அக்கா சொக்கானுட்டு, போடா!” என்றவள்  சமையல் அறைக்குச் செல்ல, “அக்கா அக்கா..” என்றபடியே பின் தொடர்ந்தான் சேரல்.

சென்ற பணி முடிந்து வந்த பரமசிவம், கூடத்தில் இருந்த மருமகனிடம் ஊரிற்குச் சென்ற விபரத்தை விசாரிக்க.. வெளியே வந்த கீதா, “இந்தாங்கப்பா தண்ணி!” எனச் செம்பை நீட்டினாள்.

வாங்கி வயிறு குளிர அருந்தியவர்.. மகளின் பின்பக்கம் சுருங்கிய முகத்தோடு நின்றிருந்த பெறாத மகனைக் கண்டு, “என்ன ‌சேரா, கடை முடிஞ்சிடுச்சா? அதுக்குள்ள ‌வந்திட்ட.?”

“இல்ல பெரியப்பா.‌ நேத்து ஞாயித்துக்கிழமை வேலை செஞ்ச அலுப்பு. அந்தக் குமார் பயலும் குடிச்சிட்டு சுருண்டிட்டான். ரொம்ப நேரம் உட்கார முடியல. அதுனால வித்த வரைக்கும் போதும்னு, எடுத்து வச்சிட்டு வந்திட்டேன்‌‌.”

“சரி சரி, சாப்பிட்டியா.?”

“ஒண்ணும் கிடையாதுனு சொல்லீடுச்சு அக்கா.?”

அவர் மகளைக் கேள்வியாய்ப் பார்க்க, “அப்படியே, நீயி செஞ்ச வேலையையும் சொல்லுறது தான.?”

பரமசிவம் அவனிடம், “என்னய்யா.?”

சேரல் அமைதிக் காக்க, “பொண்டாட்டிய ரெடி பண்ணிட்டானாம், பரிசத்துக்கு நம்மளை அழைக்க வந்திருக்கான்.”

அவன் பாவமாய்ப் பார்க்க.‌. மூத்தவர் சிரித்து,‌ “என்ன நடந்துச்சு?”

கீதா விபரத்தை உரைக்க.. அவர் மனத்தாங்கலாய், “என்கிட்ட சொல்லி இருக்காலாமே சேரா?”

“இல்லப்பா. நீங்க பேசப் போயி, மாமா வீட்டுல முடியாதுனு சொல்லிட்டா எல்லாருக்குமே சங்கடம். அதுவே நான்னா, என்னோட போயிடும். அதான்.”

கனிவான பார்வையுடன் தலையசைத்தவர், “எப்பப் பரிசம்.?”

“அதெல்லாம் இல்லப்பா. அக்கா என்மேல இருக்கிற கோபத்துல அப்படிச் சொல்லுது. நீங்க வந்து பேசி, இனிமேல் தான் நாள் எல்லாம் பார்க்கணும்!”

“பொண்ணு பார்த்திட்டேன் அண்ணே. நீங்கதான் தேதி பார்த்துச் சொல்லணும்னு இதே மாதிரி தான், உன்னோட அப்பனும் வந்து நின்னான். இன்னைக்கு நீயி!” என்றவரின் குரல் வலியில் தோய்ந்திருந்தது.

சேரல் அருகே செல்ல.. கீதா தந்தையின் கைப்பற்றி, “என்னப்பா இது, சின்னப் பிள்ள ‌மாதிரி? அது எப்பவோ நடந்தது. இப்பப் போயி?”

“காரணம் இருக்குமா. நடக்குறது எல்லாம் அப்படி! எனக்குத் தெரிஞ்சு, மூணு தலைமுறையா இவங்க பரம்பரையில வாழ்ந்த தம்பதிங்க எல்லாருமே ஒருத்தர விட்டு ஒருத்தர் பிரிஞ்சதே இல்ல. அதை அவங்க பாக்கியம்னு எடுத்துக்கிறதா?‌ இல்ல, பிள்ளைக வாங்கிட்டு வந்த சாபம்னு நினைக்கிறதானு புரியல.?”

மோகன் புரியாமல், “என்ன மாமா, சொல்லுறீங்க..?”

“ஆமா மாப்ள.‌ சேரல் மட்டும் இல்ல, அவனோட அப்பன் ரத்தினமும் தாய்த்தகப்பன் இல்லாம சுயம்புவா வளர்ந்தவன் தான்.”

“ஏன்? அவரோட‌ அம்மா அப்பாவுக்கு என்னாச்சு.?”

“ரத்னத்தோட தாத்தா இறந்தப்ப.. அவரோட சம்சாரம் அந்தச் சிதையில விழுந்து செத்திட்டாங்களாம். ரத்னத்தோட அம்மாவும் அப்பாவும் வயல்ல கரண்டு கம்பியில காலை வச்சு, மின்சாரத்தால இறந்து போனவங்க. ரத்னமும் கங்காவும் கூட, பள்ளிக்கூடக் கட்டிடம் இடிஞ்சு விழுந்துதான் ஒண்ணா போனாங்க. அப்ப இருந்துதான் ஊருக்குள்ள பஸ்ஸே வர்றது இல்ல. இன்னமும் அந்தப் பள்ளிக்கூடத்தை எடுத்துக் கட்டல. ஊருக்காரவங்க எல்லாரும் சேர்ந்து ஸ்கூலுக்கும் பஸ்ஸுக்கும் எத்தனையோ தடவை மனு கொடுத்திட்டோம். ஆனா எதுவும் நடக்கிறது மாதிரி தான் தெரியல!” என அவர் பெரூமூச்சை விட, அவ்விடத்தில் அசாதாரணமான அமைதி சூழ்ந்து கொண்டது.

 

* * *

 

ஜக்கையனின் ஆடுகளைப் பார்ப்பதற்காக, மாலை நேரத்தில் அருகே இருந்த கிராமத்திற்குச் சென்றான் சேரல். ஊர் எல்லையில் வீற்றிருக்கும் கருப்பசாமி கோவிலின் பின்பக்கம் நின்று இருந்தவர்கள் பார்வையில் பட, சிந்தனையுடன் பயணத்தைத் தொடர்ந்தான்.

“மாமா.. சேரல் வந்திருக்கேன்.” என வாயிலில் இருந்தே குரல் கொடுக்க.. மேற்கூரை தணிவாய் இருந்த இல்லத்தில் இருந்து வெளியே வந்தார் ஜக்கையன்.

“வா மாப்ள..”

புன்னகைத்து தலையசைத்தவன், “ஆஸ்பத்திரியில அத்தைக்கு என்ன சொன்னாங்க மாமா.?”

“ஒண்ணுமில்லயா, ஏதோ பூச்சிக் கடிச்சுப்பிடுச்சு. இவ கொசுவா இருக்கும்னு நினைச்சு, சாதாரணமா அடிச்சுத் தட்டி விட்டுட்டா.‌ அதோட கொடுக்கு உள்ள போயிடுச்சு போல. அதுதான் வலியையும் வீக்கத்தையும் கொடுத்து இம்சையைக் கூட்டிடுச்சு.”

“இப்படியும், வலி தேடி வருது பாருங்க மனுசனுக்கு.”

“அந்த மட்டோட போச்சுனு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான் மாப்ள.”

“அதுவும் சரிதான் மாமா. இப்ப எப்படி இருக்கு.?”

“வலியும் வீக்கமும் குறைய மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க. அந்தக் கொடுக்கை வெளிய எடுக்கணுமாம். ஆப்பரேஷன் செய்யணும்னாங்க.”

“அடடா! உடனே செஞ்சிடுங்க மாமா. தள்ளி எதுவும் போட்டுடாதீங்க.”

“ம்ம்.. செய்யணும்யா‌. அவதான், இந்த வீட்டோட அச்சாரமே. நாலு நாள் படுத்திட்டா, என்னமோ எனக்கு ரெண்டு கையுமே ஒடிஞ்ச மாதிரி இருக்கு. கூடமாட வந்து, குட்டிகளைப் பார்க்கலேனாலும் பரவாயில்ல. ஏதோ, வீட்டு அளவுக்குப் பொம்பளைனு ஒருத்தி இருந்தா போதும்!”

“சரிதான் மாமா.”

“நீயும் தான், சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கிறது.?”

மெலிதாய்ச் சிரித்தவன், “செய்யிவோம் மாமா.”

“என்னய்யா சிரிக்கிற.? நீயி சரினு மட்டும் சொல்லு, என்னோட மகளைக் கட்டித் தர்றேன்‌.”

“அதுசரி! குட்டிகளைப் பார்த்திடுவோமா.?”

“வாய்யா..” என அழைத்துச் சென்றவர்,

“காயத்திரி.” என்று குரல் கொடுக்க, எந்தப் பதிலும் வரவில்லை.

“பட்டிய சுத்தம் செஞ்சு வையினா, அப்படியே போட்டுட்டு இவ எங்க போனானு தெரியலயே.?‌ வேலைக்கு ஆகாதவளைப் பெத்திட்டு, நானு படுற பாடு இருக்கே!” என அவர் புலம்பிய படியே, ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல, பின்தொடரந்தான் சேரல்.

ஒவ்வொரு ஆடாய்த் தூக்கிப் பிடித்து எடைப் பார்த்தவன், நான்கை தேர்வு செய்து, “எவ்வளவு மாமா..?”

“கொடுக்கிறதைக் கொடுய்யா..”

“நாலும் சேர்த்து முப்பது கிலோவுக்கு இருக்கும்‌. கழிவு எல்லாம் போக இருபத்து நாலு, இருபத்தஞ்சு தான் வரும். கிலோவுக்கு எழுநூறு, பதினேழு ஐநூறு. சரிதானா மாமா.?”

“கொஞ்சம் சேர்த்து கொடு மாப்ள, ஆஸ்பத்திரி செலவு வேற கிடக்குது!”

சின்னதாய்ச் சிரித்தவன்.. பணத்தைக் கொடுக்க, வாங்கி எண்ணிப் பார்த்தவர், “என்னய்யா பதினேழு தந்திருக்க.? ஏற்கனவே அஞ்சு கொடுத்திட்டுப் போனியே?” என அவர் கணக்குச் சொல்ல, “அது, கணக்கு இல்ல மாமா‌. இதுதான் ஆட்டோட காசு!”

“அப்ப, அந்தக் காசு.?”

“எப்படியும் அத்தைக்குப் பழம் ஹார்லிக்ஸுனு வாங்கிட்டு வந்திருக்கணும். அதுக்கு வச்சுக்கங்க!”

“ஏது ஐயாயிரமா.?”

சிரித்தவன், “ஆப்பரேஷனுக்கு என்ன செய்யப் போறீங்க மாமா.?”

“நகைய விவசாயக் கடன்ல வச்சுக்கலாம்னு இருக்கேன். காயத்திரி கல்யாணத்தை இந்த வருசம் முடிச்சுப் புடலாம்னு பார்த்தேன். இனி எங்க? வீட்டுக்காரி சரியாகி, கடனைக் கட்டித் திருப்பவும் தான், அதைப் பத்தி யோசனைச் செய்யணும்.”

“சரிங்க மாமா, அவசரத்துக்கு எதுவும் தேவையினா ஃபோனைப் போடுங்க!” எனும் பொழுதே, காயத்திரி வந்து சேர்ந்தாள்.

“பட்டிய பாருனா.. எங்க போயி ஊரைச் சுத்தீட்டு வர்ற.?” என ஜக்கையன் மகளைக் கண்டிக்க, “சும்மா அப்படியே சிநேகிதிகளைப் பார்க்கப் போனேன்பா.”

“அதுக்குனு நேரம் காலம் இல்லயா.? உங்கம்மாவுக்கு முடியலேனு தான, உனைய பார்க்கச் சொன்னேன்? அவ படுத்ததும் போதும், உன்னோட இஷ்டத்துக்கு ஆடிக்கிட்டுத் திரியிற. போ, வேலையப் பாரு!” என்று சத்தம் இட, அனிச்சையாய் அவளின் கண்கள் கலங்கி விட்டது.

“சரி மாப்ள..” என்றவர் மனைவிக்கான மருந்துகளைக் கொடுக்கச் செல்ல, ஆடுகளை அடைத்திருக்கும் பட்டிக்குச் சென்றான் சேரல்‌.

“ஏய்..‌ கருவாச்சி. நாலு குட்டி வாங்கியிருக்கு. பார்த்துச் சூதானம்!”

“எப்ப கொண்டு போறீங்க?”

“தினமும் ஒண்ணா தூக்கிக்கிறேன்!”

“அதுவரைக்கும் தீவனத்துக்கு யாரு காசு தர்றதாம்.?”

“அதெல்லாம் உங்கய்யாக்கிட்ட தந்தாச்சு!”

“என்ன மாப்ள, கிளம்பலயா.?” என்ற ஜக்கையனின் குரலில் திரும்பியவன், “மாமா, உங்க மகளைக் கட்டித் தர்றேன்னு சொன்னீங்களே.?”

சிரித்தவர், “நாளை குறிச்சிடுவோமா.?”

காயத்திரி கலவரத்துடன் நோக்க, “கருப்பசாமிதான, உங்களுக்குக் குலசாமி மாமா?”

“ஆமா மாப்ள.”

“சும்மாவே எனக்கும் அவளுக்கும் ஆகாது. நீங்க, காலம் முழுக்கச் சிக்க வைக்கப் பார்க்கிறீங்க.? கருப்பருக்கிட்ட கேளுங்க, எம் பொண்ணுக்குப் பிடிச்ச மாதிரி மாப்ளய‌ கண்ணுல காட்டுயானு. யாருக்குத் தெரியும், நீங்க கேட்காமலேயே கூட, காட்டலாம்!” என்றவன் அவள்புறம் திரும்பி, “என்ன சரிதானா.?”

காயத்திரி திருதிருவென விழிக்க, “அடிக்கடி கருப்பருக்கிட்ட போகாத, அடிச்சிடப் போறாரு. அப்புறம் அதுக்கு வேற, மந்திரிக்கிறதுக்கு ஆளைத் தேடணும்.!”

அவள் திகைப்புடன், “மாமா அது.!” எனத் திணற, முறைத்து விட்டு நகர்ந்தான் சேரல். அதுவரை அவனின் சொற்களில் இருந்த கேலி தொலைந்து, அதன் ஆழம் அச்சத்தைத் தோற்றுவித்தது.

தன்னருகே வந்தவனைப் பார்த்த ஜக்கையன், “என்ன விவகாரம், நீயி இப்படிப் பேசுறவன் இல்லையே?”

“தாய்மாமா மகளைப் பேசி முடிச்சிருக்கு மாமா, அதான். நீங்க சங்கடப்படக் கூடாதுல.?”

“இதுல என்னய்யா சங்கடம்? ஏதோ என்னோட ஆசையைச் சொன்னேன். நீயி நல்லா இருந்தா, சரிதான். விசேஷத்துக்குச் சொல்லி அனுப்பு.”

“நீங்க இல்லாமயா? நேர்லயே வந்து, உங்களைக் கூட்டிட்டுப் போறேன்.”

“சரிய்யா சரிய்யா..” என்றவர் விடைக் கொடுக்க, கிளம்பினான் சேரல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!