Skip to content
Post Views: 2,622
கைக்கெட்டும் தூரத்தில் நீ. ஆனாலும் கைக்கெட்டாத தூரத்தில் நீ.
நீர் தளும்பும் விழிகளுடன் நீ நிற்கும் திரையின் மறுபுறத்தில் நான்.
கஷ்டப்பட்டு கண்விழித்தேன் நான். அந்த நிலையிலும் மருத்துவர் சொன்ன வார்த்தைகள் தெளிவாக என் செவிகளில் விழுந்தன.
“ஐ ஆம் ஷூர். ஷீ இஸ் பிரெக்னென்ட்!”
Advertisement
நான் எங்கிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளவே சில நொடிகள் பிடித்தன. நான் எனது ஹோட்டல் அறையில்தான் இருந்தேன். நான் படுத்திருந்த கட்டிலின் அருகே ஷ்யாம் அமர்ந்திருந்தான். அவனது முகத்தில் குழப்பமும், அதிர்ச்சியும் ஒரு சேர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன.
“ஆர் யூ ஃபீலிங்க் பெட்டெர் நவ்?” டாக்டர் கேட்க மெல்ல தலையசைத்தவள் எழுந்து அமர முயல எனக்கு உதவி செய்தார் அந்த மருத்துவர்.
நான் சரியாக அமர்ந்தவுடன் “கர்ப்பமா இருக்கீங்களாமா நீங்க?” அடுத்தக் கேள்வியை வீசினார் மருத்துவர். கத்தியின் முனையை விட இரு மடங்கு கூர்மையான பார்வையால் என்னை துளைத்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
Advertisement
இத்தனை நாட்கள் யாருக்கு எது தெரியக்கூடாது என்று போராடினேனோ அது இன்று எனது கையை மீறி வெளிச்சத்துக்கு வந்துவிட்ட அதிர்ச்சியிலிருந்தேன் நான். எனது இதயம் கண்மண் தெரியாமல் துடித்துக்கொண்டிருந்தது.
Advertisement
‘பதில் சொல்லுங்க சந்தியா மேடம்” இது மருத்துவர்.
ஆழ்மூச்சு எடுத்துக்கொண்டேன். இதற்கு மேல் இதை மூடி மறைக்க எந்த சாத்தியமும் இல்லை என்பது தெளிவானது எனக்கு.
“எஸ் டாக்டர்” ஒப்புக்கொண்டேன் நான்.
Advertisement
“எத்தனை மாசம்?”
“இது ஆறாவது மாசம்”
எனது பதிலில் ஷ்யாமின் முகமும், ஏன் மொத்த உடலும், மனமுமே கூட இறுகி நிற்பதை என்னால் நன்றாக உணர முடிந்தது.
‘என்ன யோசித்துக் கொண்டிருப்பான் என்னை பற்றி? எத்தனை கேவலமாக நினைத்துக் கொண்டிருப்பான் என்னைப் பற்றி?’ நினைக்கும் போதே உடல் கூசியது எனக்கு. அவன் முகம் பார்க்கும் தைரியம் சுத்தமாக காணாமல் போனது
“ஒகே மா. இந்த மாதிரி நேரத்திலே வர சாதாரண மயக்கம்தான் இது, மத்தபடி பி.பி, சுகர் லெவல் கூட செக் பண்ணேன். அதுவும் நார்மலாதான் இருக்கு. ஸ்ட்ரெஸ் இல்லாம ரெஸ்ட் எடுங்க”
“ஒகே டாக்டர்”
“பேபி மூவ்மென்ட்ஸ் நார்மலா இருக்கில்லமா?”
“எஸ் டாக்டர்” ஷ்யாமின் கண்கள் என்னை கிழித்துக் கூறு போட்டுக் கொண்டிருந்தன.
“உங்க வீட்டுக்காரர் ஊரிலே இருக்காராமா?”
“ஆங்?” மருத்துவரின் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்தேன் நான்.
“இல்லமா உங்க ஹஸ்பண்ட் எங்கேன்னு கேட்டேன்?”
“அவர் ஊரிலே இருக்கார் டாக்டர்” என்றேன் நான். வேறென்ன சொல்லி வைக்க? கை முஷ்டிகள் இறுக இருக்கையை விட்டு எழுந்துவிட்டிருந்தான் ஷ்யாம்.
“சரிம்மா. டேக் ரெஸ்ட். டேக் கேர்” என்னிடம் சொல்லிவிட்டு ஷ்யாமிடம் விடைப் பெற்று கிளம்பி விட்டிருந்தார் மருத்துவர். அவரை அனுப்பிவிட்டு கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தான் ஷ்யாம்.
சங்கீதா அவளது உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க, நானும் அவனும் மட்டுமே இப்போது எனது அறையில் இருந்தோம். கட்டிலை விட்டு மெதுவாக எழுந்து நின்றேன் நான்.
பேன்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு என்னைத் தலை முதல் கால் வரை ஆராய்ந்தான் ஷ்யாம்.
‘என்ன ஓடுகிறது உனது மனதில்? எத்தனைக் கேவலமாக நினைத்து வைக்கிறாய் என்னை? இன்னொருவன் குழந்தையை சுமந்து கொண்டு என்னிடம் காதல் நாடகம் ஆடுகிறாய் என்றா?’ மனம் சுழல தவிப்புடன் அவன் கண்களுக்குள் பார்த்தேன் நான்.
“ஜூஸ் வாங்கி வெச்சிருக்கேன் குடி” என்றான் ஷ்யாம்
“ஷ்யாம்?”
“ஜூஸ் குடி முதல்லே” மெலிதான சூடு இருந்தது அவனது குரலில். அவசரமாக பழச்சாற்றை எடுத்து பருகி முடித்தேன் நான்.
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு என்னை நேராக பார்த்தான் அவன்.
“குழந்தை நம்ம குழந்தையா சந்தியா?”
தலைமுதல் கால் வரை மொத்தமாக குலுங்கி ஓய்ந்தது எனக்கு. இப்படி தடாலடியாக கேட்பான் என நான் நினைக்கவே இல்லை.
“இல்ல ஷ்யாம் அது…”
என்ன பதில் சொல்வது என்று எனக்கு புரியவே இல்லை. நான் ஆம் என்று சொன்னால் சாருவுடனான அவனது திருமணம் என்னவாகும்?”
“என்ன இல்ல ம்?” உறுமினான் அவன் “உன் வயித்திலே இருக்கிற குழந்தை என் குழந்தைதான்னு நான் சத்தியமே பண்றேன். என் கண்ணுக்குள்ளே பார்த்து இல்லைன்னு சொல்லு பார்ப்போம்”
அவனது குரலில் இருந்த உறுதியிலும் அழுத்தத்திலும், அதற்கு மேலாக அதிலிருந்த நம்பிக்கையிலும் ஆடிப்போனேன் நான்.
“எத்தனை பெரிய வார்த்தைகள் அவை!” பல ஆண்கள் அவர்களது துணை மீது வைக்கத்தவறும் நம்பிக்கையை என்னவன் என் மீது வைத்திருந்ததில் பேரானந்தம் எனக்கு. அவன் கண்களுக்குள் பார்த்த நொடியில் குளம் கட்டிக்கொண்டன என் கண்கள்.
“எ.. எப்படி ஷ்..ஷ்யாம் இவ்வளவு கரெக்டா?” தடுமாறி வந்தன எனது வார்த்தைகள்.
“அதான் அடி வயித்திலிருந்து கத்தினியே எஸ். ஐ லவ் திஸ் இடியட். ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்ன்னு. அது ஒண்ணு போதாதா? உன்னை எனக்கு நல்லா தெரியும் சந்தியா. என்னைத் தவிர வேறே யாரையும் உன்னாலே நினைக்கக் கூட முடியாதுன்னு தெரியும். டாக்டர் இந்த விஷயத்தை சொன்ன மறு நிமிஷம் மடமடன்னு கணக்கு போட்டு முடிச்சிட்டேன்”
அவன் சொல்ல ஆனந்தத்தின் எல்லையில் நின்றேன் நான். என் மீது அவன் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை ஒன்றே போதுமென தோன்றியது எனக்கு. அவனோடு நூறு ஆண்டுகள் வாழ்ந்து விட்ட நிறைவு.
எனது கண்களில் கண்ணீர் வழிய, அதைப் பார்க்க விரும்பாதவன் போல் அந்த பெரிய கண்ணாடி ஜன்னலின் அருகே சென்று இரவு நேர சிங்கப்பூரை வெறிக்கலானான். சில நொடிகளில் சுதாரித்துக்கொண்டு அவனருகில் சென்று நின்றேன்.
“தேங்க்ஸ் ஷ்யாம்…”
“எதுக்கு?”
“என்னோட லவ் மேலே இவ்வளவு நம்பிக்கை வெச்சதுக்கு”
“ஆமாம் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்றான் படீரென. அவனது முகம் கல்லாக இறுகிப் போயிருந்தது.
அவனது நிலை மிக நன்றாக புரிந்தது எனக்கு. இதுவரை அவன் முன்னால் அவனது ரசிகையாக பரவசத்துடன் நின்றிருக்கிறேன், அவனிடம் இசை கற்றுக்கொள்ளும் மாணவியாக ஒரு வித மரியாதையுடன் நின்றிருக்கிறேன், அவனது காதலியாக, அவனது காதலை யாசிக்கும் யாசகியாகக் கூட நின்றிருக்கிறேன் ஆனால் இன்று மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி நிரம்பி நிற்கும் ஒரு குற்றவாளி போலத்தான் நின்றிருந்தேன்.
நான் செய்த காரியத்தினால் எழுந்த குற்ற உணர்ச்சி அல்ல அது. நான் எனது குழந்தையை எனக்குள்ளே உருவாக்கிக் கொண்டதை என்றுமே குற்றமாக கருதியதில்லை. என் குழந்தை எனது பொக்கிஷம்.
ஆனால் என்னால் ஷ்யாம் எந்த நிலையில் நிற்கிறான் என்பதை நினைக்கும் போதே எனக்கு உறுத்தல் அதிகமானது.
அவனுக்கு இந்த விஷயம் தெரியாத வரையில் எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் இப்போது? இப்படி ஒரு நிலை வரவே வராது. அவனுக்கு விஷயம் தெரியாமலே போய்விடும் என நான் நினைத்தது எத்தனை பெரிய முட்டாள்தனம்.
‘அதை விட பெரிய முட்டாள்தனம் நீ அவனுடன் சிங்கப்பூர் கிளம்பி வந்தது. ஒரு நப்பாசையில் கிளம்பி வந்தது எத்தனை பெரிய விளைவுகளை கொடுத்திருக்கிறது!’ குத்தியது எனது மனது.
‘ஆம் அது இப்போது அவனை எத்தனை பெரிய தர்மசங்கடத்தில் தள்ளி இருக்கிறது’
அவன் நிலை எனக்கு நன்றாக தெரியும். அவனால் சாருவை விட முடியாது. அதே நேரத்தில் தனது குழந்தை என்று தெரிந்த பிறகு எனது மகனையும் அவனால் விட்டுத் தர முடியாது.
நான் செய்த செயலின் வீரியம் இப்போது எனக்கு மெல்ல மெல்ல புரிந்தது.
“இது அவனுக்கு நான் செய்த மிகப்பெரிய தவறு”
அந்த தப்பை சரி செய்ய முடியாத தூரத்துக்கு நான் வந்து நிற்பதும் எனக்கு தெளிவாகவே புரிந்தது.
“ஸோ.. சித்தாரா இதுக்கு உடந்தை இல்லையா?” சட்டென கேட்டான் ஷ்யாம்.
“அய்யோ இல்லை ஷ்யாம். இந்த விஷயத்தில் அவளுக்கு தெரியாமத்தான் நான் பண்ணேன். என் வயித்திலே குழந்தை வந்த பிறகு தான் அவளுக்கு விஷயம் தெரியும். சத்தியமா” படபடத்தேன் நான்.
“அப்போ இன்னைக்கு காலையிலே பார்த்தோமே அந்த நிரஞ்சனா உனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கணும் ரைட்? அதுக்கு அப்புறம் சித்தாரா உனக்கு துணையா இருக்கா ரைட்?” இரவு வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே அவன் படு துல்லியமாக கேட்க அதிர்ந்து போனேன் நான்.
இனி எதையுமே அவனிடம் மறைக்கும் எண்ணம் எனக்கில்லை
“ஆமாம் ஷ்யாம். நான் தான் நிரஞ்சனாக்கு பணம் கொடுத்து வறுப்புறுத்தி பண்ண வெச்சேன்” நான் சொல்லி முடிக்க சரேலென என் பக்கம் திரும்பினான் ஷ்யாம்.
“பெல்டை கழட்டி உன்னை விளாசினா என்னனு தோணுது” அவன் விழிகளில் அப்படி ஒரு ரௌத்திரம். “வயித்திலே பிள்ளை இருக்கேன்னு பார்க்கிறேன்”
“ஷ்யாம். சாரி ஷ்யாம். ரொம்ப சாரி. உங்க நிலை எனக்கு நல்லா புரியுது. ஆனா..’
“எவ்வளவு பெரிய தப்பு பண்ணி வெச்சிருக்கே அப்படிங்கிறது உனக்கு புரியுதா இல்லையா? என்னாலே இந்த ஜென்மத்திலே உன்னை மன்னிக்க முடியாது” இடைப்புகுந்து கத்தினான் அவன்.
“ஷ்யாம் ஒரு நிமஷம் நான் சொல்றதை நிதானமா கேளுங்க. என்னாலே தனியா வளர்க்க முடியும் அப்படிங்கிற முழு நம்பிக்கையிலேதான் நான் குழந்தையை ஏத்துகிட்டேன். முதலிலும் உங்களை தொந்தரவு பண்ணும் எண்ணமில்லை. இனிமேலும் உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்ச பிறகும் உங்களை கண்டிப்பா தொந்தரவு பண்ண மாட்டேன்” அவனுக்கு புரிய வைக்க முயன்றேன் என் நிலையை.
“எதுவும் பேசாதே.” என்றான் இடி குரலில் “என்ன பண்ணி வெச்சிருக்கே தெரியுமா நீ? உன் வாழ்க்கையோட சேர்த்து நம்ம குழந்தை வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்து வெச்சிருக்கே. நீ என்ன குந்தி தேவியா? அவ கர்ணனை பெத்தெடுத்த மாதிரி நீ குழந்தை பெத்துக்க போறே”
“இல்ல ஷ்யாம் நான் குழந்தையை அப்படி எல்லாம் விட்டுட மாட்டேன்”
“வாயை மூடு” என்றான் தீ பார்வையுடன் “உன்னை ரொம்ப சின்ன பொண்ணு அப்பாவி பொண்ணுன்னு நினைச்சேன். எந்த பொண்ணும் செய்ய நினைக்காத ஒரு காரியத்தை செஞ்சு வெச்சிருக்கே. என்ன தைரியம் உனக்கு?”
“எனக்கு உங்க மேலே அவ்வளவு லவ் ஷ்யாம். நீங்க எனக்கு இல்லைன்னா அட்லீஸ்ட் உங்க குழந்தையாவது எனக்கு வேணும்னு தோணிச்சு” எனது நிலையை அவனுக்கு கொஞ்சம் புரியவைக்க முயன்றேன்.
“மண்ணாங்கட்டி லவ்” வெடித்தான் எரிமலையாய். “நாமும் வாழ்ந்து அடுத்தவங்களையும் வாழ வைக்கறதுதான் லவ் இதுக்கு பேர் லவ் இல்லை. முட்டாள்தனம். லவுக்காக கையை வெட்டிகறது, காலை வெட்டிகறது மாதிரி இதுவும் ஒரு முட்டாள்தனம்.”
“முதலிலே நம்ம நாட்டுக்குன்னு ஒரு கலாசாரம் இருக்கு. நம்மை சுத்தி ஒரு சமூகம் இருக்கு. இதை எல்லாம் மீறி என்ன வேணும்னாலும் செய்திட முடியும்னு உனக்கு யார் சொன்னாங்க?”
“ஷ்யாம் கொஞ்சம் முயற்சி செஞ்சா குழந்தையை நான் நல்லபடியா வளர்த்திடுவேன் ஷ்யாம். எத்தனையோ பேர் சிங்கிளா இருக்கிறவங்க குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலையா? நான் பெத்து எடுத்து வளர்க்கப் போறேன் அதுதான் வித்தியாசம். ஷ்யாம் எனக்கு சமூகம் பத்தி எல்லாம் கவலை இல்லை” என்றேன் மெதுவாக
“உன்னை இந்த பூமிக்கு கொண்டு வந்த அப்பா அம்மா பத்தியாவது கவலை இருக்கா? உனக்கு நல்ல வழி சொல்ல உங்க அப்பா இருந்திருக்கணும். எல்லா பொண்ணுங்களுக்கும் அப்பாதான் க்ளோஸ். நிஜமா உன்னை கேட்க உங்க அப்பா இருந்திருந்தா நீ இப்படி பண்ணி இருப்பியா? இப்பவும் அவர் மரியாதையும் உன்னை இத்தனை நாள் கௌரவமா வளர்த்த அம்மாவோட மரியாதையும்தான் கெட்டுப்போகும். உங்க அம்மா உன்னை சரியா வளர்க்கலைன்னு சொல்வாங்க”
இந்தக் கேள்விக்கு என்னிடம் ஏனோ பதிலில்லை,
“சரி நாளைக்கு அந்த குழந்தைக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அப்பா எங்கேன்னு கேட்டா என்ன சொல்லுவே?”
“உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா உங்க பேரை நான் கண்டிப்பா எடுக்க மாட்டேன் ஷ்யாம்.”
“இது உனக்கு முட்டாள்தனமா தோணலையா? அதுக்கு மேலே நம்ம பிள்ளை எவ்வளவு அவமானத்தை சந்திக்கணும்னு யோசிச்சியா?”.
“அது மாதிரி கேள்விகளை எப்படி சந்திக்கணும்ன்னு நான் அவனுக்கு கண்டிப்பா கத்து கொடுப்பேன் ஷ்யாம். நீங்க பெருமை படற மாதிரிதான் உங்க குழந்தையை வளர்ப்பேன்””
‘”சந்தியா இந்த டயலாக் எல்லாம் கேட்க ரொம்ப நல்லா இருக்கு,. ஆனா கஷ்டம்மா. பாவம் சந்தியா அந்த ஜீவன். உன்னோட சுயநலத்துக்காக நீ அது வாழ்க்கையோட விளையாடி இருக்கே. நினைச்சாலே மனசு பதறுதுடி எனக்கு. என்ன சொன்னாலும் அப்பா அம்மா சேர்ந்து வாழ்ந்தாதான் அந்த குழந்தைக்கு நிம்மதி. மரியாதை”
“அண்ட் ஐ அம் ஹெல்ப்லெஸ். இப்போ என்னாலே உன்னை கல்யாணமும் பண்ணிக்க முடியாது பாப்பா” உச்ச தொனியில் ஆரம்பித்த வார்த்தைகள் இயலாமையும், ஆற்றாமையும் சேர்ந்து சற்றே உடைந்தன.
ஒரு ஆழ் மூச்சு எடுத்துக்கொண்டு சில நொடிகள் வெளியில் வெறித்தவனின் தோள் மீது நான் கை வைக்க
“கையை எடு” அணுகுண்டாய் வெடித்தான் அந்த கோபக்காரன் “என்னாலே இந்த ஜென்மத்திலே உன்னை கல்யாணம் பண்ண முடியாதுன்னு உனக்கு நல்லாத் தெரியும். அதனாலே என்னை எப்படியாவது கார்னர் பண்ணனும்ன்னு இந்த காரியத்தைப் பண்ணி வெச்சியா நீ?” பார்வையாலேயே எரித்தான் ஷ்யாம்.
“என் லவ் மேலே சத்தியமா இல்லை ஷ்யாம்” கொஞ்சம் உடைந்தது என் குரல். கண்களில் கண்ணீர் “கல்யாணம் எல்லாம் வேண்டாம். எனக்கு உங்க குழந்தை மட்டும் போதும்.”
சில நொடிகள் கனத்த மௌனம் அங்கே, ஜன்னலின் வழியே இருட்டையே பார்த்துக்கொண்டிருந்தவன் என் பக்கம் திரும்பி அடுத்த குண்டை என் மீது வீசினான்.
“ஆனா நான் என் குழந்தையை உன்கிட்டே வளர விடறதா இல்லை”
error: Content is protected !!