Skip to content
Post Views: 9,197
அத்தியாயம் 1
“சிஸ்டர், ரூம் நம்பர் 352.. எந்த பக்கம் போகனும்” வரவேற்பில் நின்று கொண்டிருந்த செவிலியரிடம் கேட்டார், ஒரு ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணி. உடன் இன்னொரு பெண்மணியும், இரண்டு ஆண்களும் இருந்தனர்.
Advertisement
“மூனாவது மாடி போகனும். அங்கே வலது பக்கம் இருக்க ஐந்தாவது வரிசையில இரண்டாவது ரூம். ஆனா இத்தனை பேர் போக முடியாது” என்றாள் அந்த செவிலியர்.
“நாங்க பேஷண்டோட பேரண்ட்ஸ். எங்களுக்காக காத்துட்டு இருப்பாங்க. முதல்ல எல்லாரும் பார்த்துட்டு வந்துடறோம். அப்புறம் யாராச்சும் ஒருத்தர் மட்டும் தான் கூட இருப்போம்” என்றார் அந்த பெண்மணி விளக்கமாக.
Advertisement
Advertisement
அதற்குள் கணினியில் நோயாளியின் விபரத்தை பார்த்த செவிலியர், கவலை தோய்ந்த குரலில் “நேத்துல இருந்து புருஷனும் பொண்டாட்டியும் தனியா அல்லாடுறாங்க. இப்ப தான் வரீங்க.. போய் பாருங்க” என்று கூறிவிட்டு தனது வேலையை தொடர்ந்தாள் அந்த செவிலியர்.
இவர்கள் நால்வரும் விரைந்து ரூம் நம்பர் 352 சென்றனர். கட்டிலில், சத்தெல்லாம் வடிந்து மிகவும் களைப்பாக படுத்திருந்தாள் ஒரு பெண்.
Advertisement
இவர்கள் நுழையவும், உள்ளிருந்த செவிலியர் ”இப்ப தான் தூங்குறாங்க. சத்தம் போடாம பார்த்துட்டு போங்க” என்றாள்.
பெண்கள் இருவரும், மெதுவாக அந்த பெண்ணின் தலையை கோதிவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டனர். நால்வர் கண்களும் கலங்கி இருந்தது.
ஆண்கள் இருவரும் “முழிச்சதும் கூப்பிடுங்க, வெளியே உட்கார்ந்திருக்கோம்” என்று வெளியே வந்துவிட்டனர்.
இவர்கள் வந்த அரவத்தில் பெண்ணின் தூக்கம் களைந்து விட்டது. ஆனால் இவர்கள் யாரையும் பார்க்க விரும்பாது கண்களை மூடியே படுத்திருந்தாள்.
பெண்கள் இருவரும் மெல்லிய குரலில் பேச தொடங்கினார்கள். “கடவுள் நம்மளை இப்படி சோதிக்க கூடாது அஞ்சு” என்றார் மஞ்சுளா, அந்த பெண்ணின் தாயார்.
“அந்த கடவுள் தான் இதை கடந்து வருவதற்கு நமக்கும், நம்ம பிள்ளைகளுக்கும் சக்தி கொடுக்கனும் மஞ்சு” என்றார் அஞ்சனா, அந்த பெண்ணின் மாமியார்.
இருவரும் விசும்பினார்கள். ஒருவர் கையை மற்றவர் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிக்கொண்டனர்.
“நமக்கு ஏன் இப்படி நடக்கனும் அஞ்சு”
“அதான் எனக்கும் புரியல. நம்ம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்”
“இந்த பொண்ணாச்சும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம். படிச்சு படிச்சு சொன்னேன். கீழ பாத்து நடக்குனும்ன்னு “
“குருவும் அவசர பட்டிருக்க வேணாமுன்னு தோணுது. செகண்ட் ஒப்பீனியன் கேட்டிருக்கனும். நம்ம கிட்ட கேக்காம அவன் கையெழுத்து போட்டிருக்க வேணாம்.”
இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு எரிச்சலாக இருந்தது அந்த பெண்ணிற்கு. அவள் முகச்சுருக்கத்தை வைத்து அவள் விழித்து விட்டாள் என்று அறிந்துகொண்டு, இருவரும் அவளிடம் விரைந்தனர்.
“தங்கம், எப்படி டா இருக்க?” என்றார் குரல் தழுதழுக்க மஞ்சுளா.
“ராஜாத்தி.. கவலை படாத டா.. வலிக்குதா?” என்றார் அஞ்சனா கனிவாக.
இருவருக்கும் பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள் அந்த பெண்.
“ஆமா எங்கே குரு?” என்று கேட்டார் அஞ்சனா.
அதுவரை இவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த செவிலியர் “இவங்க வீட்டுக்காரர் மருந்து வாங்க போயிருக்கார்” என்று விடை அளித்தார்.
“சாப்பிட ஏதாச்சும் கொடுக்கலாமா?” என்று செவிலியரிடம் வினவினார்கள்.
“கஞ்சி இல்லனா பால் கொடுக்கலாம்”
“நான் போய் உங்க அண்ணனை வாங்கிட்டு வர சொல்றேன்”என்று எழுந்தார் மஞ்சுளா.
“இருங்க நான் வந்து எடுத்து கொடுக்கிறேன். அந்த பைல ஹாட் பாக்ஸும் பிளாஸ்க்கும் இருக்கு” என்று அஞ்சனாவும் உடன் எழுந்து கொண்டார்.
வெளியே செல்லும் முன், “தண்ணி குடிக்கிறியா?” என்று மகளை கேட்டார்.
அதற்கும் பதில் கூறாமல் இருக்கவும், “என்னடி என்ன கேட்டாலும் பேசாம இருக்க?”
“துக்கமா இருந்தா ஒரு மூச்சு அழுதுடு ராஜாத்தி. உள்ளுக்குள்ளே வச்சிக்காதா டா” என்றார் அஞ்சனா.
அதற்கும் பதில் இல்லாது போகவும், “வீக்கா இருக்கும்ல.. முதல்ல சாப்பிட கொடுப்போம்..” என்று விரைந்து சென்று கணவர்களை கஞ்சியும் பாலும் வாங்கி வருமாறு கூறினார்கள்.
அப்பொழுது அங்கே வந்தான் கந்தகுரு, அந்த பெண்ணின் கணவன்.
“குரு..” என்று இரண்டு பெண்மணிகளும் அவனது தோள்களை ஆளுக்கொரு பக்கம் பிடித்து கொண்டனர்.
“கவலை படாதப்பா, ஏதோ கெட்ட நேரம்”
“தனியா சமாளிக்க தடுமாறி போய்ட்டியா?” என்று இவர்களே அவனுக்கு ஆறுதல் கூறி, அவன் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டனர்.
பிறகு “வாங்க, போய் அவளை பார்க்கலாம்.”
“எங்க கிட்ட ஒரு வார்த்தை பேசலை. தனியா இருக்க விடக் கூடாது. மனசு உடைஞ்சு போய்டுவா”, என்று பேசாத மகனைப் பற்றியும் கவனிக்காது உள்ளே சென்றனர்.
“அருணா..” என்ற கணவனின் அழைப்பில், “அப்பாடா.. வந்துட்டீயா?” என்று கண்ணில் சொல்ல இயலாத தவிப்புடன் கணவனை நோக்கினாள் அருணாளினி.
வாங்கி வந்த மருந்துகளை செவிலியரிடம் கொடுத்துவிட்டு மனைவி அருகில் அமர்ந்துகொண்டான்.
“ஏன் இப்படி ஆச்சுன்னு டாக்டர் சொன்னார்களா?” என்று விசாரித்தார் மஞ்சுளா.
அதுவரை பரிதவிப்புடன் படுத்திருந்த அருணாளினியின் கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தது. அந்த நேரம் அப்பாக்கள் உணவு வாங்கி வந்தனர்.
“போதும் அருணா, நிறைய அழுதுட்டோம்.. அமைதியா இரு” என்று மனைவியின் கையை பிடித்துக்கொண்டான் குரு.
மகளின் அழுகையை பார்த்து, தாங்க முடியாமல் அவளது அப்பா ஆனந்தனும் குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினார்.
இதை பார்த்த கந்தகுருவின் அப்பா வடிவேலன் இரண்டு பெண்களையும் முறைக்கவும், கொஞ்ச நேரம் இரண்டு அம்மாக்களும் அமைதியாக இருந்தனர்.
ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும்.
“குரு, டாக்டர் கிட்ட பேசிட்டியா? அடுத்த முறை நம்ம கவனமா இருக்கனும் இல்லையா? என்ன காரணம்ன்னு சரியா சொன்னாங்களா? நீங்க சரியா கேட்டிருக்க மாட்டிங்க. நாங்க போய் பேசிட்டு வரோம்” என்று அம்மாக்கள் இருவருமே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டார்கள்.
“டாக்டர் எப்ப ரவுண்ட்ஸ் வருவாங்க? இங்கேயே கேட்டுப்போம்” என்றார் அஞ்சு.
இவர்களை திருத்த முடியாது என்று இரண்டு தந்தைமார்களும் வெளியே சென்றுவிட்டனர்.
“சிஸ்டர் கொஞ்சம் இவங்க இரண்டு பேரையும் வெளியே அனுப்புங்க” என்றாள் அருணாளினி.
“என்ன அருணா, வந்ததுல இருந்து நானும் பார்க்கிறேன், எங்க கிட்ட முகம் கொடுத்து பேசமாட்டேங்கிற”
“நடந்த அசம்பாவிதத்துக்கு நாங்க காரணம்னு சொல்லாம சொல்றீயா ?”
“கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம நீங்க இரண்டு பேரும் கவனக்குறையா இருந்துட்டு, எங்க மேல பழிய போட பார்க்குறீங்களா?”
இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டே சென்றனர்.
“எல்லாத்துலயும் அவசரம். விபத்து நடந்தா, அந்த சமயத்துல பதட்ட படாம இருக்கனும். நீ ஏன்டா எங்களை கேக்காம அசரப்பட்டு கையெழுத்து போட்ட.
நாங்க இருந்திருந்தா செகண்ட் ஒப்பீனியன் வாங்காமா ப்ரொசீட் பண்ணியிருக்க விட்டிருக்கவே மாட்டோம். முடிஞ்ச அளவு இதை நடக்காமா தடுத்திருப்போம்”
“வருத்தமா இருப்பீங்கன்னு, நாங்க ஒன்னும் சொல்லாம இருந்தா அமைதியா இருந்து எங்க மேலயே கோபத்தை காட்றீங்க”.
இருவரும் நிப்பாட்டுவதாக தெரியவில்லை.
“இந்த இரண்டு மெத்த படிச்ச மேதாவிகளையும் தயவு செய்து அனுப்பு, குரு” என்றாள் கோவமாக அருணா. அவளது முகமெல்லாம் ரத்தமென சிவந்துவிட்டது.
“ப்ளீஸ் .. போங்க இரண்டு பேரும்” என்றான் குரு மனைவியின் நிலையை பார்த்து பயந்துகொண்டே.
“பாரு அஞ்சு, அம்மான்னு கூட பாக்காம எப்படி பேசறாங்கன்னு” என்று மூக்கை உறிஞ்சினாள் மஞ்சுளா.
“அவங்க பேசறதை பெருசா எடுத்துக்க கூடாது மஞ்சு. இந்த மாதிரி சமயத்துல டிப்ரெஷன் போக வாய்ப்பு இருக்கு. நம்ம டாக்டர்கிட்ட சொல்லி கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணுவோம் “
செவிலியருக்கே பொறுக்க முடியவில்லை.
“ஏம்மா இங்க இருந்து வெளிய போங்க. டாக்டர் வர நேரமாயிடுச்சு. வந்தா என்னைத் தான் சத்தம் போடுவாங்க.” என்றார்.
“டாக்டர் வர நேரமா? நல்லதா போச்சு, நம்ம எல்லாம் தெளிவா கேட்டுப்போம்” என்றார் மஞ்சு.
மீண்டும் இருவரும் பேசத் தொடங்கினார்கள்.பக்கத்தில் கஞ்சி குடிப்பதற்கு ஒரு சில்வர் கிண்ணமும், டம்ளரும் இருந்தது.
அருணாளினி, முதலில் அந்த கிண்ணத்தை தூக்கி தன் தாயின் மீது எறிந்தாள், அது குறி தவறாமல் அவர் நெற்றியை பதம் பார்த்தது.
“அம்மா…” என்று அலறினார்.
“என்ன பண்ற நீ” என்று அஞ்சனா கேக்கும் பொழுதே டம்ளரை எடுத்து அவரை நோக்கி வீசி அவர் நெற்றியையும் பதம் பார்த்துவிட்டாள்.
“அம்மா..” என்று அலறுவது இவரது முறையாயிற்று.
இருவரும் அவரவர் நெற்றியை கைகளால் பிடித்து கொண்டனர். ரத்தம் கசிந்தது. பின் அவர் அவர் கையில் இரத்தத்தை பார்த்து இருவரும் வாயடைத்து நின்றனர்.
“என்ன பேச்சு வரலையா? இத்துனூண்டு ரத்தத்தை பார்த்து பேச்சு நின்னு போச்சா? ரத்தமும் சதையுமா எங்க புள்ளய வாரி கொடுத்துட்டு நிக்கிறோம். இப்பவும் எங்களை என்ன பேச்சு… போய்டுங்க இங்க இருந்து.“ என்று நிறுத்தி நிதானமாக கூறினாள் அருணாளினி.
இவர்கள் அலறும் சத்தம் கேட்டு உள்ளே வந்த தந்தைமார்கள், அருணாளினி பேச்சை கேட்டு ”நல்லா வேணும் இரண்டு பேருக்கும்” என்று கூறி மறுபடியும் வெளியே சென்று அமர்ந்துவிட்டனர்.
இந்த பொண்ணு அவங்க இரண்டு பேர் மண்டையும் உடைக்கிறதுக்கு பதிலா வாயை உடைச்சிருக்கலாம் என்று நினைத்துக் கொண்ட செவிலியர்,” வெளியே போங்க அம்மா இரண்டு பேரும்” என்றார்.
“எங்களுக்கு பர்ஸ்ட் எயிட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க சிஸ்டர்” என்றார் அஞ்சனா மெதுவாக.
“நீங்க செகண்ட் தேர்ட் ஒப்பீனியன் எல்லாம் வாங்கிட்டு அப்புறம் பண்ணிக்கோங்க” என்றார் செவிலியர் கடுப்பாக.
——————-
மஞ்சுளா– ஆனந்தன். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அவர்களது மூத்த பெண் தான் அருணாளினி. அருணாவின் தங்கை ரித்விகா, பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள்.
ஆனந்தனின் தங்கை அஞ்சனா. அவரது கணவர் வடிவேலன். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அவர்களது மூத்த மகன் கந்தகுரு. இரண்டாவது மகன் அபிநந்தன், பொறியியல் கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான். கடைக்குட்டி அபிநயா சித்தா மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள்.
சொந்தம் விட்டு போகக் கூடாது என்று பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணம் தான் அருணாளினி கந்தகுரு இருவரதும்.
——-
மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது அவர்கள் இருவரும் வெளியே சென்றதும்.
“நான் போய் அவங்க நாலு பேரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு வர்ரேன்” என்று கூறி கந்தகுரு வெளியே வந்தான்.
“மாமா, இந்தாங்க வீட்டு சாவி. நீங்க எல்லாரையும் கூட்டிட்டு கிளம்புங்க” என்று அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தான். அவர் பதிலை எதிர் பார்க்காமல் மீண்டும் ரூம் உள்ளே வந்து விட்டான்.
மனைவி அருகில் அமர்ந்து கொண்டான். “இது எல்லாம் எடுத்துடு குரு”என்றாள் அருணாளினி. அவர்கள் வைத்து சென்ற கஞ்சியும் பாலையும் காட்டி.
உடனே அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டான்.
“பின் ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்தேன், இரு “ என்று சுடு தண்ணீரில் ஆற்றி கொடுத்தான்.
வறண்ட தொண்டையில் இதமாக இறங்கியது.
“உங்களை பார்த்தா தான் களைப்பா தெரியரீங்க, போய் சாப்பிட்டு வாங்க” என்றாள்.
அந்த செவிலியரும், “நான் பார்த்துகிறேன் சார், போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தார்.
சாப்பிட்டு வந்து மீண்டும் மனைவி அருகில் அமர்ந்து கொண்டான்.
செவிலியர், “எதாவது தேவை என்றால், இந்த பெல்லை அடிங்க, உடனே யாரவது வந்திடுவோம். இரண்டு பேரும் கொஞ்சம் தூங்குங்க” என்று கூறி வெளியே சென்று விட்டார்.
இருவரும் கண்களை வெறுமனே மூடிக்கொண்டிருந்தனர். தூக்கம் வரும் என்று தோன்றவில்லை.
நேற்றைய நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக மனக்கண் முன் வந்து கொண்டே இருந்தது. இருவரது கண்களிலும் கண்ணீர் கோடாய் இறங்கியது.
error: Content is protected !!