Skip to content
Post Views: 4,000
இரு கிளைகளாய் பிரியும் சாலைகளின் முன் நின்று கைப்பற்றிக்கொள்கிறாய் நீ.
துணை வருகிறாயா விடை தருகிறாயா புரியாத குழப்பத்தில் நான்!
எங்கே இருக்கிறேன் நான்? புரியவில்லை எனக்கு. எங்கேயோ வானத்தில் மிதந்து கொண்டு இருக்கும் உணர்வு. தூரத்தில் எங்கேயோ ஒரு பாடல் கேட்பதை போல் ஒரு உணர்வு.
அதனோடு சேர்ந்து ஒரு குழந்தையின் அழுகுரலும் கேட்கிறது. அது எனது குழந்தையின் அழுகுரலா. பதைபதைக்கிறது எனக்கு. எழ முயல்கிறேன். முடியவில்லை. இன்னுமாக அதிகமாகிறது குழந்தையின் அழுகுரல்.
Advertisement
“எங்கே இருக்கிறேன் நான்? எப்படியாவது எழுந்து விட முடியாதா என்னால்? ஐயோ எனது குழந்தை இப்படி அழுகிறதே! என்னால் ஏன் எழ முடியவில்லை.
‘பா…ப்…பா” எங்கோ தூரத்தில் கேட்கிறது ஏதோ ஒரு குரல்.
யாரது தெரியவில்லை. கையையும் காலையும் யாரோ கட்டி வைத்திருப்பதைப் போல் தோன்றியது. என்னவாயிற்று எனக்கு? இறந்துவிட்டேனா என்ன?
Advertisement
மறுபடியும் குழந்தையின் அழுகுரல். எனது பலம் மொத்தத்தையும் திரட்டி எழ முயல்கிறேன்.
Advertisement
“சந்தியா.. சந்தியா கண்ணை திறந்து பாரேன்” ஒரு பெண் அழைக்கிறாள் என்னை என்று புரிகிறது. யாரது?
“நல்லா ரெஸ்பாண்ட் பண்றா இன்னைக்கு” யார் குரலோ கேட்கிறது எனக்கு. மறுபடி மறுபடி கண்திறக்க முயல்கிறேன். இதோ திறக்கிறேன். திறந்துவிட்டேன். மங்கலான வெளிச்சத்தில் ஏதேதோ முகங்கள் தெரிகின்றன. கண்களை இமைத்து பார்க்கிறேன்.
“பாப்பா” ஒரு குரல் மறுபடி மூடிக் கொள்கின்றன இமைகள்
Advertisement
“சந்தியா” இன்னொரு குரல். அதெல்லாம் யார் குரல் என்பது புரியவில்லை. திறக்கிறேன் இமைகளை. குழந்தையின் அழுகுரல். குலுங்குகிறது எனது உடல்.
“கு..ழ..ந்..தை” உலர்ந்த வாய் வழி காற்றாய் வெளி வருகிறது அந்த வார்த்தை.
“பாப்பா” ஒரு ஆண்குரல் அழைக்கிறது என்னை. நெற்றி சுருக்கி பார்க்கிறேன்.
“பாப்பா. என்ன பாப்பா அப்படி பார்க்கிறே?”
“என்னை தெரியலையா பாப்பா?’ அழைத்தது யாரென தெரியவில்லை எனக்கு. கண் இமைத்து பார்க்கிறேன் நான்.
“சித்தாரா அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை போலிருக்கே”
“இரு இரு கொஞ்ச நேரம் ஆகும். பத்து நாள் கோமாலே இருந்திருக்கா. நீ என்ன சினிமாலே வர மாதிரி உடனே எழுந்து நடந்திடுவான்னு நினைச்சியா?.” அவர்கள் இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.
“கு..ழ..ந்..தை” மறுபடியும் எழுத்துக்களை கோர்க்கிறேன் நான்.
“இதோ இதோ “ எனது அருகில் குழந்தையை கொண்டு வருகிறாள் அவள்.
விழிகளை இமைத்து குழந்தையை பார்க்கிறேன். அழகு கண்கள். நேர்த்தியான முகம். விழிகளை உருட்டி என் பக்கம் பார்க்கிறது அது. மெதுவாய் புன்னகைக்கிறேன். சற்று நேரம் குழந்தையையே பார்த்தவள் மனதிற்குள் வந்து நிற்கிறான் என்னவன்.
“ஷ்யாம்” மெதுமெதுவாய் விரிகின்றன அவனது நினைவுகள். மெதுவாய் விழிகளை நிமிர்த்துகிறேன்.
“தெரியுதில்ல? என்னை தெரியுதில்ல” என்கிறான் அவசரமாய்.
கஷ்டப்பட்டு ஆம் என தலையசைக்கிறேன் நான்.
அந்த நொடி என்ன நிகழ்ந்தது என்பதை புரிந்துக்கொள்ளவே எனக்கு சில நிமிடங்கள் பிடித்தன. எனது முகத்தை அப்படியே அள்ளி மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டிருந்தான் ஷ்யாம். அவனது பல நாள் தாடி எனது முகமெங்கும் உரசிச் செல்ல அவனது கண்ணீர் எனது கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது.
பல நாட்களாக மேகத்துக்குள் ஒளிந்து கிடக்கும் மழை நீர் திடீரென ஒரு நாள் பொழிந்து விடுவதைப்போல் பொழிந்துக் கொண்டிருந்தது அவனது முத்தமழை. அவன் இத்தனை நாள் உள்ளுக்குள் மறைத்து வைத்திருந்த காதல் எனது கண் முன்னே முழு வடிவம் கொண்டு நின்றிருந்தது.
முழுவதுமாக ஒரு நிமிடம் கழித்து விலகினான் என்னை விட்டு. அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துக்கொண்டு கண்களை மூடி சாய்ந்துக்கொண்டான். அவனது கண்ணீர் இன்னும் நிற்கவில்லை என்று தோன்றியது.
எத்தனை நாட்கள் நான் இந்த நிலையில் இருந்தேன் என சரியாக தெரியவில்லை. ஆனாலும் நான் இருந்த நிலை அவனை மிகப்பெரிய மனப்போராட்டத்துக்கு தள்ளி இருக்க வேண்டும் எனத் தோன்றியது எனக்கு. அங்கே உடைந்து வெளி வந்திருக்க வேண்டும் அவன் காதல்.
எனது கன்னங்களில் அவனது கண்ணீரின் ஈரமும், இதழ்களின் ஈரமும் இன்னமும் நிறையவே மிச்சமிருந்தன. பழைய நினைவுகள் எல்லாம் மனதினுள் வெளிச்சம் பெற்றிருக்க, இத்தனை நாள் எனக்கு கிடைத்துவிடாதா என நான் ஏங்கிக் கொண்டிருந்த அவனது காதலையும், அதன் அடையாளமாக அவனது முத்தங்களையும் ரசிக்க முடியாத ஒரு அழுத்தமான குற்ற உணர்வு என்னை அழுத்திக் கொண்டிருந்தது.
சாரு அவள் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தது எனது மனம். அப்போது எனது கரத்தை அழுத்தியது இன்னொரு கரம்.
“ஹேய்… லூசு.. என்னைத் தெரியுதா இல்லையா?” அவள் பக்கம் விழிகளை திருப்புகிறேன். கண்களில் கண்ணீர் வழிய நிற்கிறாள் சித்தாரா. புன்னகைக்கிறேன்.
“எனது கை மீது ஓங்கி அடிக்கிறாள் ஒரு அடி “ஏன்டி இப்படி பண்ணே. ஏன் இப்படி பண்ணே? அறிவு கெட்டவளே”
அதற்குள் வேறு சில மருத்துவர்கள் உள்ளே வர சில பரிசோதனைகள் தொடர, குழந்தையும் ஷ்யாமும் அந்த அறையின் ஓரத்திலேயே இருந்தார்கள்.
கிட்டதட்ட மூன்று மணி நேரங்களுக்கு பிறகு கொஞ்சம் தெளிந்திருந்தேன் நான். எழுந்து அமர்ந்திருந்தேன். மெல்ல பேச ஆரம்பித்திருந்தேன்.
சித்தாராவின் உடை அலங்காரத்தில் கூட நிறைய மாற்றங்கள் . ஏதோ ஒரு பழைய நிறம் மங்கிய உடையில் இருந்தாள். எப்போதும் இருக்கும் பளீர் முகம் எங்கோ சென்று மறைந்திருந்தது.
அவளிடம் எதனால் இந்த மாற்றம்?
“அவ்வளவு வலி தாங்க முடியலைடா உன்னாலே.. அதோட சேர்த்து நிறைய ரத்தப்போக்கு, உன்னோட மனசிலே இருந்த டென்ஷன் எல்லாம் சேர்த்து அப்படியே கோமாக்கு போயிட்டே சந்தியா. பத்து நாள். எனக்கும் ஷ்யாமுக்கும் போராட்டம்” என்றாள் ஷ்யாமின் முகம் பார்த்துக் கொண்டே.
அவனது முகத்தில் உணர்வுகளை துடைத்த பாவம். உள்ளுக்குள் என்னை முத்தமிட்ட குற்ற உணர்வு உழன்று கொண்டிருக்க வேண்டுமென தோன்றியது.
“பயந்துட்டேன்டி ரொம்ப பயந்துட்டேன்” இப்போது அவள் குரல் தழுதழுத்தது. “நான் என்னையும் அறியாம செஞ்ச தப்புதான் உன்னோட இந்த நிலைக்கு காரணம்ன்னு பயந்துட்டேன்” அவள் சொல்ல குழப்பத்துடன் அவள் முகம் பார்த்தேன்.
“நீ என்ன தப்பு பண்ணே?”
“என்னை நம்பி என்னோட ஆராய்ச்சிக்காகத்தானே ஷ்யாம் அவனோட ஸ்பெர்ம் கொடுத்தான். அதை நான் பாதுகாப்பா வெச்சிருந்திருக்கணும். அது அவனோடதுன்னு நான் வெளியிலே சொல்லி இருக்கக்கூடாது. பெரிய தப்பு.. நீ கோமாக்கு போனதுக்கு அப்புறம்தான் மனசு நடுங்க ஆரம்பிச்சது. உனக்கு பிரச்சனை அதனாலேதானோன்னு பயம். சாருவோட மனசு எவ்வளவு கஷ்டபட்டிருக்குமோன்னு ஒரு தவிப்பு. ஷ்யாம்கிட்டே ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டேன்டா. இருந்தாலும் இன்னமும் மனசு ஆறலை.” பேசிக்கொண்டிருந்தாள் சித்தாரா.
மெல்ல சிணுங்க ஆரம்பித்த குழந்தையை கைகளில் ஏந்திக்கொண்டான் ஷ்யாம். ஒரு சின்ன நீல நிற மெத்தையின் நடுவில் பூத்து கிடந்தது அந்த பூக்குவியல். அதை மெல்ல அசைத்து தூங்க வைத்துக்கொண்டிருந்தான் அவன். அதை கைகளில் தாலாட்டிக்கொண்டே ஜன்னலுக்கு அருகில் சென்று நின்றுக்கொண்டான் ஷ்யாம்.
“நிஜமாவே இந்த பத்து நாளிலே எத்தனை கோவிலிலே உனக்காக நான் வேண்டிக்கிட்டேன்னு எனக்கே தெரியலை. நீ பிழைச்சு உனக்கு, சாருக்கு ஷ்யாமுக்கு மூணு பேருக்கும் எப்படியாவது நல்ல வாழ்க்கை அமையணும் வேண்டியிருக்கேன். அதுவரைக்கும் எனக்கு பண்டிகை, கிடையாது, பிறந்தநாள் கிடையாது எந்த சந்தோஷமும் கிடையாது. அதோட சாப்பாட்டில் உப்பு சேர்த்துக்கறது இல்லை. ”
“அய்யோ..” பதறினேன் நான் “உப்பில்லாத சாப்பாடா? ஏன் சித்து எப்படியெல்லாம்?”
“இல்லடா நான் செஞ்சது சரிதான்” என்றாள் அவள்.
“இதெல்லாம் வேண்டாம் சித்து. தப்பு செஞ்சது நான்” நான் கெஞ்சலாக சொல்ல
“நீ வேறே நான் வேறேன்னு நான் எப்பவும் நினைச்சது இல்லை. ஆண்டவன் கொஞ்ச நாளிலே எல்லாத்தையும் சரி பண்ணிடுவான் பார்” என்றவள் ஷ்யாமின் மீது பார்வையை பதித்து மீட்டாள் “ஷ்யாமோட மனசும் இப்போதான் வெளியிலே வந்திருக்கு.”
என்னிடம் நிஜமாகவே பதிலில்லை.
“உன்னை கண்திறக்க வைக்க என்னென்னமோ செய்தோம் “மலரே மௌனமா” உன் வாழ்கையிலே ரொம்ப முக்கிய இடம் வகிச்ச பாட்டு. அந்தப் பாட்டு தர்பாரி கானடா ராகம். அது ஸ்ட்ரெஸ் ரிலிவர். கொல்கத்தாலே கூட ஒரு பொண்ணு அந்த ராகத்தினாலே கோமாலே இருந்து வெளியே வந்திருக்கா. அதுதான் திரும்ப திரும்ப உனக்கு அந்த ராகம் கேக்கறா மாதிரி செய்தோம். மியூசிக் தெரபி. அதோட உன் குழந்தையோட குரல். இது எல்லாம் சேர்ந்து கொஞ்ச கொஞ்சமா உன்னை எழுப்பிடுச்சு பொண்ணே” என்றாள்
கண்ணீர் நிரம்பிய கண்களை நான் மெல்ல மூடிக்கொண்டேன். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குள்ளே ஈட்டியாய் இறங்கியிருந்தது. திரும்பவே இல்லை ஷ்யாம்.
“என்னுடைய கண்மூடித்தனமான முடிவு. எனது மகனையும் சேர்த்து எத்தனை பேரை வருத்திக் கொண்டிருக்கிறது?”
ஏதேதோ எண்ண ஓட்டங்கள் எனக்குள்ளே. இப்போது குழந்தையை கைகளில் ஏந்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஆனாலும் கேட்கவில்லை ஷ்யாமிடம்.
“குழந்தை என்ன சாப்பிடும்?” மெல்ல கேட்டேன் நான்.
“உன்கிட்டேதான்” சொன்னாள் சித்தாரா “கொஞ்சம் குடிக்க வெச்சோம். கொஞ்சம் பம்ப் பண்ணி எடுத்தோம்”
“ஓ” மெதுவாக தலையசைத்தேன் நான்.
இப்போது சாருவிடம் நான் பேசிய பேச்சுக்களும் மெல்ல நினைவுக்கு வந்தன.
“எப்போதாம் அவர்கள் இருவருக்கும் திருமணம்?” தெரியவில்லை எனக்கு.
அப்போது அறையின் கதவு தட்டப்பட்டது. சாருவும், தனாவும் உள்ளே வந்தார்கள். கொஞ்சம் அதிர்ந்தவன் போல்தான் திரும்பினான் ஷ்யாம்.
அவன் உடல் மொழியில் நிறையவே தடுமாற்றம். நண்பனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் அவனுக்கு இல்லை என்பது எனக்கு தெளிவாக புரிந்தது. ஒரு வேகத்தில் எனக்கு முத்தமிட்ட குற்ற உணர்வு மேலோங்க அவன் நிற்பது புரிந்தது.
“எப்படி சந்தியா இருக்கீங்க?” கேட்டான் தனா. புன்னகையுடன் தலையசைத்தேன் நான்.
சைகையால் என்னை நலம் விசாரித்தாள் சாரு. தலையசைத்தேன் நான்.
ஷ்யாமின் அருகில் சென்று குழந்தையை கைகளில் வாங்கிக்கொண்டாள் சாரு. விழிகளில் தவிப்பு மேலிட அவளையே சில நொடிகள் பார்த்திருந்தவள் பின்னர் என்னை நானே திட்டிக்கொண்டு பார்வையை குழந்தையை விட்டு திருப்பிக்கொண்டேன்.
அவனை கையில் வாங்கி அள்ளிக்கொள்ள துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.
“அவன் சாருவுக்கே சொந்தம்.” சொல்லிக்கொண்டேன் நான்.
எதை புரிந்துக்கொண்டானோ தெரியவில்லை அடுத்த நொடி பெரிதான அழுகை எனது மகனிடத்தில்
அடுத்த சில நொடிகளில் சாருவின் கைகளிலிருந்து ஷ்யாமின் கைக்கு இடம் மாறியது குழந்தை. அவன் என்னை நோக்கி வருவதும் புரிந்தது. குழந்தையின் அழுகுரல் என்னை உலுக்கிகொண்டிருந்தது
குழந்தையை கையில் வாங்கிக்கொண்டால் அதை யாரிடமாவது திரும்பக் கொடுப்பேனா என்பது எனக்கே நிச்சியம் இல்லை, அது கண்டிப்பாக தேவை இல்லாத குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.
குழந்தையை என்னை நோக்கி நீட்டினான் ஷ்யாம். கண்களை மூடிக்கொண்டு தலையசைத்தேன் நான்.
“எனக்கு வேண்டாம்” இதை சொல்லும்போது எனது உயிருக்குள் சூறாவளி.
‘ஹேய்…லூசு என்னாச்சு உனக்கு?” இது சித்தாரா. “குழந்தையை கையிலே வாங்கு முதலிலே”
‘வேண்டாம் சித்து” கண்களை திறக்கவில்லை நான்.
“முதலில் குழந்தையை வாங்கு சந்தியா”
உன்கிட்டே குழந்தையை வளர விடறதா இல்லை என்று முன்பு சொன்னவனின் இப்போதைய அழுத்தம் திருத்தமான தொனியில் சடக்கென கண் திறந்தேன் நான்.
“பத்து நாளா சரியா சாப்பிடலை அது. பாவம். முதலிலே அதுக்கு பசியாத்து. அப்புறம் மத்தது எல்லாம் பேசிக்கலாம்” ஒரு தந்தையின் ஆணையாக வந்தன வார்த்தைகள்.
அதற்கு மேல் மறுப்பு சொல்ல எதுவும் இல்லை. சட்டென கைகளில் வாங்கிக்கொண்டேன் அந்த பூப்பந்தை. நான் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க இதழோரம் தேங்கி இருந்த ஒரு துளி புன்னகையும் ஒரு அழுத்த மூச்சுமாக என் முகம் பார்த்துவிட்டு பதில் பேசாமல் அறையை விட்டு வெளியேறினான் என்னவன். அவனோடே வெளியேறினர் தனாவும் சாருவும்.
குழந்தைக்கு பசியாத்து சந்தியா” சொன்னாள் சித்தாரா. என்னருகே வந்து எனக்கு உதவினாள் அவள்.
இந்த உலகத்தில் யாருமே குழந்தைக்கு இப்படி ஒரு குற்ற உணர்வுடன் பாலூட்டி இருப்பார்களா தெரியவில்லை. வாய் பேச முடியாத அந்த பெண்ணின் உள்ளம் என்னால் என்னென்ன வலிகளை அனுபவிக்கிறதோ?. நான் உருவாக்கி வைத்திருக்கும் சிக்கலின் வீரியத்தில் அழுந்தியது மனம்.
தனது நெஞ்சறிந்து தவறு செய்துவிட்டு, பின்னர் அதை உணர்ந்து, தீர்த்து விட முடியாமல் தவிக்கும், கூனி குறுகி நிற்கும் மனதின் வலியின் முன்னால் மரண தண்டனை கூட சிறியதுதான் என்று தோன்றியது.
“குழந்தைக்கு பால் கொடுக்கும் போது சந்தோஷமான மனநிலையில் இருக்கணும். இப்போ எதுவும் யோசிக்காதே” ஆணையிட்டாள் சித்தாரா.
சரியென தலையசைத்து விட்டு ஆசைத் தீர பார்த்தேன் கையையும் காலையும் அசைத்துக்கொண்டிருந்த அந்த முத்தாரத்தை
அத்தனை மகிழ்ச்சியும், நிறைவுமாய் பசியாறிக்கொண்டிருந்தான் எனது மகன். நெஞ்சோடு சேர்த்துக்கொண்டேன் அந்த ஏதுமறியா பிஞ்சை. அவனை சாருவிடம் கொடுத்து விடும் எண்ணம் மகா பாவம் என்று தோன்றியது எனக்கு.
ஆனாலும் ஷ்யாம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்பட்டே ஆக வேண்டும் அல்லவா?
“சாரிடா கண்ணா.” ஏனோ சொல்லிக்கொண்டேன் எனது மகனிடம். மனம் ஆறவில்லை எனக்கு.
“எல்லா தவறுகளுக்குமே பிராயச்சித்தம் என்று ஒன்று உண்டுதானே?”
“இறைவா நான் செய்த பாவத்தை மன்னித்து இந்த ஒரு சூழ்நிலையை சாரு, ஷ்யாம், குழந்தை மூவருக்கும் எந்த பாதகமும் இல்லாமல் கையாளும் சக்தியை மட்டும் கொடுத்து விடு.. இனி எனது இசையின் மூலம் எனக்கு கிடைக்கும் பணம் அனைத்தும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காகவும், வாய் பேச முடியாத, பார்வை இல்லாத மாற்று திறனாளிகளுக்காகவும் செலவிடுகிறேன்’ கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டேன் நான்.
அரை மணி நேரம் கழித்து உள்ளே வந்தார்கள் மற்ற மூவரும். சித்தாரா எனதருகில் இருந்தாள். குழந்தை உறங்கி விட்டிருந்தான்..
error: Content is protected !!