Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…30

தூறல் – 30
ஆத்திரத்தோடு குருவின் வீட்டிற்குள் அருண் நுழைய அவன் பின்னே இன்னும் சில நபர்கள்… வாசலில் கூட்டமாய் இன்னும் சிலர்… புரியாமல் கேள்வியோடு குரு கண்கள் சுருக்கி நிற்க அவன் எதிர்பார்க்காத தருணம் பட்டென அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அருண். 


Advertisement

சட்டென எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட இந்த நிகழ்வில் தடுமாறி நின்ற குருவின் சட்டையை கொத்தாய் பிடித்திருந்தான் அருண். 
“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையா பக்கத்திலேயே இருந்து சத்தம் இல்லாம ஏகப்பட்ட வேலையை பண்ணிட்டியேடா..”

Advertisement

Advertisement

சீற்றமாய் பேசியபடி மீண்டும் அவனை அடிக்க கை ஓங்கி இருக்க சுதாரித்து அந்த கையை முறுக்கிப் பிடித்திருந்தான் குரு. 
இதற்குள் அருணின் பின்னே நின்ற வேறு சில ஆண்களும் குருவை அடிப்பதற்கு முறுக்கிக் கொண்டு வர இவன் ஒருவனால் மற்றவர்களை சமாளிக்க முடியாமல் போனது நிஜம்தான். ஆனாலும் முயன்று அனைவரையும் பிடித்துத் தள்ளினான்.

Advertisement

இதற்குள் விபரம் தெரிந்து ராமலிங்கமும் காமாட்சியும் வேகமாக உள்ளே ஓடி வந்திருந்தனர். அஞ்சலியின் பெற்றோரும் மிரண்டு நெஞ்சில் கை வைத்தபடி அங்குதான் நின்றிருந்தனர். முதலில் அவர்கள் வீட்டிற்கு சென்று அங்கு ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தானே இங்கே வந்து நிற்கின்றனர் அனைவரும். அந்த தெருவில் நிறைய பேர் வீட்டின் முன்னே கூடி இருந்தனர். அருணும் அவனது குடும்பத்தாரும் அசிங்கமான வார்த்தைகளால் சத்தமிட்டு கத்திக் கொண்டிருந்தனர்.
குருவை அடிக்க பாய்ந்தவர்களை இராமலிங்கமும் இன்னும் சிலரும் சேர்ந்து பிடித்து தள்ளி நகர்த்தினர். எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து சண்டையிட்டு உருட்டி எடுக்கும் தீவிரத்துடன்தான் இருந்தான் குருவும். ஆனால் ராமலிங்கம் இடைப்பட்டு அடிதடி வராமல் பிடித்து நகர்த்தி இருந்தார்.
“என்னய்யா இது..? உங்க பாட்டுக்கு வந்து தனியா இருக்கிற ஒருத்தனை போட்டு அடிக்க வர்றீங்க..?” சத்தமான குரலில் கேட்டார் ராமலிங்கம்.
நடக்கும் கலவரங்களில் அனைத்து விபரங்களையும் தெரிந்து வந்திருக்கிறான் அருண் என்பது குருவிற்கு புரிந்தாலும் எப்படி அறிந்து கொண்டான் என்று மூளை யோசித்துக் கொண்டிருக்கும்போதே ராமலிங்கத்தின் முகத்தின் முன்னே தனது செல்போனை நீட்டி இருந்தான் அருண். 
“பாத்தீங்களா… நல்லா பாருங்க…” என்று அவரிடமும் காமாட்சியிடம் இன்னும் அங்கிருந்த அனைவரிடமும் போனை திருப்பி காட்டிக் கொண்டிருந்தான். 
அதில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் வேட்டி சட்டையில்‌ கையில் சவியை வைத்துக் கொண்டு குருவும் பட்டுப் புடவையில் அஞ்சலியும் கோவில் பிரகாரத்தில் நெருக்கமாக நின்று பிரார்த்தனை செய்வது போன்றும், இருவரும் கைகோர்த்தபடியே குழந்தையோடு பிரகாரத்தை சுற்றி வருவது போன்றும், முன்னே மண்டபத்தில் அமர்ந்து சிரித்துப் பேசுவது போன்றும் நிழற்படங்கள் வரிசையாக வந்து விழுந்தன. 
அஞ்சலியின் பிறந்தநாளின்போது அவர்கள் கோவிலுக்கு சென்றபொழுது எடுத்த புகைப்படங்கள்தான் அவை என்பது குருவிற்கு புரிந்தது. அன்றைக்கு கோவிலில் கூட்டம் அதிகம்தான். எப்பொழுதும் வெளியூர் ஆட்கள் அங்கு குழுமித்தானே கிடப்பர். 
அப்படி கூட்டத்தோடு குடும்பத்தோடு வந்திருந்த அருணுக்கு நெருக்கமான நண்பன் ஒருவனின் கண்களில்தான் இவர்கள் விழுந்திருந்தனர். ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ராமேஸ்வரம் வந்தபோது அருணின் நண்பனான சுரேஷ் என்பவனின் கண்களில்தான் அஞ்சலி விழுந்திருந்தாள். அவன் அருணுக்கு நெருக்கமான நண்பன் என்பதால் அஞ்சலியை நன்றாகவே தெரியும். அஞ்சலி வீட்டை விட்டு எங்கேயோ கண்காணாமல் வெளியேறிச் சென்றுவிட்டதுவரை அனைத்து விபரங்களும் அவனுக்கு தெரியும். 
இத்தனை மாதங்கள் கழித்து திடீரென அஞ்சலி அவனது கண்களில் பட அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் அவர்களை படம் பிடித்திருந்தான். கோவிலில் இருந்து வெளியே வந்த பின்பு உடனடியாக அருணுக்கு இவற்றை அனுப்பி வைத்து விபரத்தை தெரிவித்து விடவேண்டும் என்று எண்ணியவன் தீர்த்த குளங்களுக்கு சென்றபோது அவனது செல்போன் தவறி தண்ணீரில் விழுந்திருந்தது. 
தண்ணீர் இறங்கியதால் அவனது கைப்பேசியும் பழுதாகியிருக்க உடனடியான தகவலை அருணுக்கு அவனால் தெரிவிக்க முடியவில்லை. கைப்பேசியை வேலைக்கு கொடுத்தால் முழுதாக ஒன்று அல்லது இரண்டு நாட்களாகும் என்று தெரிய வந்து சுற்றுலா சென்ற இடத்தில் பழுது பார்க்க முடியாமல் ஊருக்கு வந்த பின்புதான் கைப்பேசி வேலைக்கு கொடுத்திருந்தான் சுரேஷ். 
அதனால் மூன்று நாட்கள் தாமதமாகித்தான் அருணுக்கு தகவலையே கூறி இருந்தான் சுரேஷ். இவன் தகவல் கூறிய நேரம் அருணும் ஊரில் இல்லை… அஞ்சலி ஆந்திராவில் இருப்பதாக யார் மூலமோ கிடைத்த தகவலை பெற்றுக் கொண்டு அங்கு சென்றவனுக்கு சுரேஷ் மூலம் கிடைத்த தகவல் பெறும் அதிர்ச்சியாகிப் போனது. அவள் ராமேஸ்வரத்தில்தான் இருப்பாள் என்று இவன் யோசிக்கவில்லை. இருவரும் குழந்தையோடு கோவிலுக்குச் சென்று திருமணம் செய்ய உத்தேசித்துள்ளனர் என்றுதான் யூகித்திருந்தான். 
அவ்வப்போது அஞ்சலியின் வீட்டில் வந்து கத்தி சத்தமிட்டு பிரச்சனைகள் செய்து போனவனுக்கு அடுத்த வீட்டில் குடியிருக்கும் குருவைப் பற்றி தெரிந்து இருக்கவில்லை. அதனால் உடன் இருப்பவன் யார் என்று அவன் விசாரித்த போதுதான் அவன் அஞ்சலி பணி செய்த பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர் என்பதும் அருகாமையிலேயே குடியிருப்பவன் என்பதும் தெரிய வந்தது. கூடுதலாக இலங்கையில் இருந்து வந்த அகதி என்ற செய்தியும் கிடைத்திருந்தது. இத்தனை தகவல்களையும் சேகரித்துக் கொண்டு அவன் மதுரை வந்தபோது சில நாட்கள் கழிந்தும் போயிருந்தது. 
அனைத்தையும் கூறிய அருண் வெறியோடு குருவை நெருங்க சிறிதும் பயமின்றி நிமிர்ந்தபடி தானும் அதே வெறியோடு எதிர்கொண்டான் அவனும். 
“பசு மாட்டோட கன்னுக்குட்டியையும் கடத்திட்டு போயிட்டியாடா..? கல்யாணம் பண்ணி எங்க ஒளிச்சு வச்சிருக்க அவள..? அவள வச்சு தொழில் பண்ற பிளான்ல தள்ளிட்டு போயிட்டியாடா..?” 
சொன்ன வார்த்தையை முடிக்கவில்லை… அருணின் மூக்கிலிருந்து கொடகொடவென ரத்தம் கொட்டியது… ஆஆஆ என்று அலறியபடி மண்டியிட்டு விழுந்திருந்தான் அருண். 
குத்திய கை முஷ்டியை உதறிக் கொண்டு இன்னும் ஆத்திரத்தோடு அவனை நெருங்கி தலைமுடியை கொத்தாய் பிடித்து தூக்கி இருந்தான் குரு. 
அவனது உயரத்திற்கும் அந்த ஆஜானுபாகுவான உடல் அமைப்பிற்கும் அவன் முகத்தில் தெரிந்த உக்கிர அவதாரத்திற்கும் உடன் வந்த கூட்டம் சற்று பயந்து பின் வாங்கித்தான் நின்றிருந்தது. 
“என்னடா சொன்ன..? எங்கே திருப்பி சொல்லு பாக்கலாம்..?” 
பல்லைக் கடித்தபடி கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாமல் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. 
“உன்ன மாதிரி ஒரு சில்லற நாய்க்கு அவ கழுத்த நீட்டுவான்னு நெனச்சியா..? ஆமாடா… அவ என்கூடதான் இருக்கா..? என் பாதுகாப்புலதான் இருக்கா..? அவ என் பொண்டாட்டிதான்… சவி என் குழந்தைதான்… உன்னால என்னடா பண்ண முடியும்..?” 
நெஞ்சை நிமிர்த்தி உச்சக் குரலில் சத்தமாக கேட்டவனை அவன் மட்டுமல்ல சுற்றிலும் இருந்தவர்கள் அனைவருமே அதிர்ந்துதான் பார்த்தனர். குறிப்பாக கர்ணனும் லதாவும் அகன்றிருந்த விழிகளை சிமிட்டாமல் அதிர்ந்து போய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். 
“என்னடா பாத்துட்டு இருக்கீங்க..? இவன அடிச்சு நொறுக்கி கொல்லுங்கடா…” 
மூக்கை பிடித்துக் கொண்டு முனகலாக 
சத்தமிட்டு இருந்தான் அருண். மீண்டும் ஆட்கள் குருவை அடிக்க நெருங்கி வர ராமலிங்கமும் இன்னொரு நபரும் அரண் போல் நின்று அவர்களை பிடித்து தூரத் தள்ளினர். எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் ஆங்காரத்தோடுதான் இருந்தான் குருவும்.
“கர்ணா… உன்கிட்டயும் லதாகிட்டயும் பேசணும்… இப்ப வந்து பேசலாம்னுதான் நானும் காமாட்சியும் கிளம்பினோம்… அதுக்குள்ள இந்த நீச நாயிக கூட்டம் தேவையில்லாம வந்து பிரச்சனையை கிளப்பிட்டு இருக்கு…” கடுப்போடு கூறினார் ராமலிங்கம்.
“யாருய்யா நீ..? பக்கத்து வீடுதானே… நீதான் அந்த ஓடுகாலிச் சிறுக்கியை இவனுக்கு *** குடுத்தியா..?” 
வாய் கூசாமல் அருணின் அப்பா மூர்த்தி சத்தமிட அவரின் கன்னம் அடுத்த நொடி பழுத்திருந்தது. வெறியோடு ஓங்கி அறைந்திருந்தான் குரு. வயது மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பவன் இந்த வார்த்தையில் மொத்த பொறுமையையும் இழந்திருந்தான். 
அடுத்தடுத்து சத்தங்களும் அடிதடியும் கலவரமும் சலசலப்புமாக அந்த இடமே பரபரப்பாக மாறி இருந்தது. இடுப்புச் சேலையை இழுத்து சொருகிக் கொண்டு முன்னே வந்தார் அருணின் அம்மா வசந்தி. 
“எங்கேயோ இருந்து வந்தவன் எல்லார் மேலயும் கை வைக்கிறான்… டேய் கணேசா… பாண்டி… போலீஸ்க்கு போன் போடு… என் பேத்திய கடத்திட்டு போயிருக்கியான்… அந்த ஓடுகாலி காசை எல்லாம் இவன் பேருக்கு எழுதி வச்சுட்டா போல… ஆளு ஓங்குதாங்கா இருக்கியான்னு இவே வலையில விழுந்து கெடக்கிறா போல… என் பேத்தியும் அந்த கேடு கெட்டவ பேருல இருக்கிற காசும் என் கைக்கு வந்தாகணும்… கூப்பிடுடா போலீஸை… இவனையும் அந்த சிறுக்கியையும் கைய கால ஒடச்சு டேசன் கம்பியை எண்ண வைக்கணும்… கூப்பிடு…” 
பஜாரிபோல் பெரும் குரலெடுத்து அந்தப் பெண் சத்தமிட்டுக் கொண்டிருக்க வெறியோடு அவளை நோக்கி நெருங்கிய குருவை இறுக்கிப் பிடித்தார் ராமலிங்கம். 
“பொறுமையா இரு குரு… காமு… குருவை உள்ள கூட்டிட்டு போ… நான் பாத்துக்குறேன்…” 
அவன் முதுகைப் பிடித்து அறையை நோக்கி நகர்த்தித் தள்ளினார் ராமலிங்கம். 
“நீ யாருய்யா அவன காப்பாத்துறதிலேயே குறியா இருக்க..? உனக்கும் காசுல கமிஷன் கொடுக்கிறேன்னு சொன்னாளா அந்த சிறுக்கி..?” 
வாய் கூசாமல் பேசிக் கொண்டிருக்கும் வசந்தியை அற்பப் புழுவைப்போல் பார்த்தார் ராமலிங்கம். 
“அடச்சீ… வாய மூடு… நீ எல்லாம் ஒரு பொம்பளைன்னு… காசுக்காக நீ எல்லாம் என்ன வேணாலும் பண்ற கேவலமான பிறவிதானே… போலீசுக்கு போறியா..? நீ என்ன போலீசுக்கு போறது..? நான் கூப்பிடுறேன் போலீஸை… உன் குடும்பம் எம்புட்டு பிராட் வேலை பண்ணி இருக்குன்னு எடுத்து வைக்கட்டுமா..? செத்துப்போன உன் பையன் ஒன்னாம் நம்பர் ஃபிராடுன்னு தெரிஞ்சும் ஒரு அப்பாவி குடும்பத்த ஏமாத்தி கல்யாணம் கட்டி குடும்பமா நீங்க பண்ணின திருகுதாள வேலையப் பூரா நான் சொல்லட்டுமா..? விருப்பமே இல்லாத புள்ளைய வலுக்கட்டாயமா மிரட்டி சந்தையில விலை போகாத உன் ரெண்டாவது மகனுக்கு கட்டி வைக்கச் சொல்லி பாடாப்படுத்தி அந்த புள்ளைய ஊர விட்டே துரத்தினீங்களே… அம்புட்டையும் நானும் போலீஸ்ல சொல்றேன்…” 
“என்ன சொன்ன..? பேத்தியா..? எங்க இருந்து வந்தா உனக்கு பேத்தி..? அந்த குழந்தையை வச்சுதான் காசு வாங்க முடியும் கல்யாணம் பண்ண முடியும்னுதானே மொத்த குடும்பமும் நாக்க தொங்கப் போட்டு நாயா அலையுறீங்க… நீயே தூக்கி குடுத்தாலும் அந்த காசுல ஒத்த நயா பைசாவக்கூட அந்த புள்ளையோ இவனோ தொடக்கூட மாட்டாங்க. இவே மானஸ்தன்… யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிற..? இவன் முன்னால நின்னு பேசற தகுதிகூட இருக்கா உங்க எல்லாருக்கும்..?” 
ஆத்திரத்தோடு வசந்தியிடம் சத்தமிட்டுப் பேசிய ராமலிங்கம் குருவிடம் திரும்பி “குரு… போனை போட்டு அஞ்சலியை உடனே கிளம்பி வரச் சொல்லு. இந்த பிரச்சனையை இன்னைக்கே பேசி முடிப்போம். எவே என்னத்த கிழிக்கிறாய்னு நாமளும் பார்ப்போம்… கூப்பிடு அவளுக்கு…” 
உரிமையான கட்டளையோடு கூற அதனை மீறாதவனாய் உடனடியாக அஞ்சலிக்கு அழைத்திருந்தான் குரு. 
அடிதடி என்று ஆகாமல் அனைத்தையும் சுமூகமாக முடிக்கும் எண்ணத்தோடுதான் இருந்தான் குரு. ஆனால் இப்படி ஒரு எதிர்பாராத நிகழ்வு நடக்கும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. அனைத்தும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ராமலிங்கம் சொன்னது போல் இன்றே அனைத்தையும் முடித்து தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போனது என்பது புரிந்தது. 
ராமலிங்கம் போட்ட சத்தத்தில் கொஞ்சம் மிரண்டுதான் போயிருந்தது அருணின் கூட்டம். இனி அவர்களிடம் பேச முடியாது என்பதுபோல் மொத்த கோபத்தையும் கர்ணனின் மீது திருப்பியபடி அங்கு பாய்ந்து கொண்டிருந்தனர் அனைவரும். அதிலும் வசந்தி வாய் திறந்தால் வாய்க்கால் முழுக்க சாக்கடைதான்.
“சத்தமில்லாம பக்கத்து வீட்டுக்காரன்கூட அந்த அடங்காத சிறுக்கிய எங்கேயோ அனுப்பி விட்டுட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி புருஷனும் பொண்டாட்டியும் வீட்ல உக்கார்ந்து இருந்தீங்களா..? ஊராய்ன் காசுக்கு உங்களுக்கெல்லாம் அம்புட்டு ஆசையா..? மேயிறதுக்கு கண்டவன் வேணும்… ஆனா வாழறதுக்கு எம்புள்ள சேர்த்து வச்ச காசு வேணுமோ உன் மகளுக்கு..? அதுக்கு வேற ஏதாவது தொழில் பண்ணி சம்பாதிக்கலாமே… அதான் வாட்டசாட்டமா இருக்கானே… அவனை வச்சே தொழிலை நடத்த வேண்டியதுதானே…” 
வசந்தியின் கேட்கவே சகிக்காத விஷம் தடவிய வார்த்தைகளில் அஞ்சலியிடம் அனைத்து விபரங்களை பேசிக் கொண்டிருந்த குருவின் கவனத்தில் அவள் பேசிய அனைத்தும் விழ போனை அங்கேயே போட்டு வெறியோடு வசந்தியை நோக்கி பாய்ந்து வந்தான் குரு. 
விட்டால் அனைவரையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்யும் அத்தனை ஆத்திரமும் அவன் மூளை முழுக்க ஏறி இருந்தது. உச்சபட்ச கோபத்தில் உடல் நடுங்கவும் தொடங்கியது. ராமலிங்கமும் இன்னும் சிலரும் அவனை அடக்கி ஓரமாக அமர்த்த பெரும்பாடுபட்டனர். 
எதிர்முனையில் அனைத்தையும் கலவரத்தோடு கேட்டுக் கொண்டிருந்த அஞ்சலிக்கு அங்கு நடந்து கொண்டிருக்கும் சலசலப்பும் சத்தமும் ஓங்கிய குரல்களும் தெளிவாக கேட்டு பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. சட்டென குருவின் குரலும் நின்று போனதில் மிரண்டவள் “குரு… ஹலோ… குரூஊஊ…” என்று கத்திக் கொண்டிருந்தாள். வேகமாக கைப்பேசியை எடுத்து காதில் வைத்தார் காமாட்சி. 
“அஞ்சலி நான் காமாட்சி பேசுறேன்… தாமதிக்காம உடனே கிளம்பி இங்கே வா…” என்றார் பரபரப்பான குரலில். 
“அ..அக்கா… அக்கா… அ..அவரை ஏதாவது பண்ணாங்களா.? அ..அவருக்கு ஏதாவது ஆபத்தா..? பிரச்சனையா..?” அழுகையோடு கேட்டாள். 
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… நாங்க எல்லாம் இருக்கோம்ல.. பிரச்சனைதான்… எல்லாத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்ல.. நீ உடனே கெளம்பி வா… குருவோட அத்தையையும் கூட்டிட்டு வா… தாமதம் பண்ணாத…” என்றவர் ஃபோனை வைத்து குருவின் அருகில் சென்று அரண்போல் நின்று கொண்டார்.
சலசலப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!