Skip to content
Post Views: 1,935
“ஏய்.. சீட்டி என்ன சொல்லிட்டு இருக்க? சின்ன மருமக அது இதுன்னு.. பெரியவங்கள இப்படி தான் மரியாதை இல்லாம பேசுறதா?
சித்தின்னு சொல்ல மாட்டியா?” மதுராம்பாள் கண்டிக்க,
“ஹாங்.. எங்கள கண்டிக்க மட்டும் வரிஞ்சு கட்டிட்டு வந்துடுவ. ஏன்னா எங்கப்பா அம்மான்னாவே உனக்கு எப்பவும் இளக்காரம் தான்!”
“ஏண்டி இன்னமும் வாச தெளிக்காம இருக்கீங்கன்னு கேட்டா, நீ என்ன பேசிட்டு இருக்க?”
Advertisement
“ஆமா அப்படி தான் பேசுவேன். எங்கம்மாவுக்காக நான் தானே பேசணும்” என்றாள் மதுராவும் விடாமல்.
இன்று இதற்கு ஒரு முடிவு எட்டி விட வேண்டுமென்றே!
“ஏய்.. சும்மா இருடி.. இருங்க அத்தை, நான் வர்றேன். கொஞ்சம் கண் அசந்துட்டேன்”. என்று தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு வானதி எழ முயற்சிக்க,
Advertisement
“அம்மா.. உன்னை படுன்னு சொன்னேன்”. என்று அவள் அம்மாவை அழுத்திப் பிடித்துக் கொண்டு விட்டாள் மதுரா.
Advertisement
“ஏய்.. என்ன இது இப்படி காலங்கார்த்தால வம்பு பண்ணிட்டு” என்று மதுராம்பாள் மேலும் இரைய,
சத்தம் கேட்டு சதீஷ் அவன் அறையில் இருந்து எழுந்து வந்து விட்டான். பின்னாலேயே நைட்டியில் சூர்யாவும்.
“என்னம்மா இங்க பிரச்சினை. ஏன் இப்படி கத்திட்டு இருக்கீங்க?”
Advertisement
“அது ஒண்ணுமில்லடா. நீ போ. படுத்துக்கோ. இந்த சீட்டிய தான் திட்டிட்டு இருந்தேன்”.
“ஹாங்.. சொல்ல மாட்டியே. இன்னிக்கு எங்கம்மாவை வாச தெளிக்க விட மாட்டேன். வேணுமின்னா நீ போய் தெளி!
இந்த வீடு பொது தானே? எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கு தானே? அப்போ கடமையும் இருக்கணும்.
ஒரு நாள் எங்கம்மாவுக்கு முடியலன்னா சித்தி வாச தெளிச்சு கோலம் போட்டா தான் என்ன? உடம்பு முடியலைன்னாலும் எங்கம்மாவே தான் செய்யணுமா?
அம்மாவுக்கு நைட் பூராவும் வீசிங். தூங்கவே இல்லை. இரண்டு மணிக்கு தான் தூங்கினதே! அவங்கள போய் தொல்லை பண்ணுற அப்பாயி?”
“ஏய்.. என்ன சொல்ல வர. உங்க சித்தப்பாவே வாரம் ரெண்டு நாள் தான் ஊரில் இருந்து வர்றார்.
அந்த ரெண்டு நாள் கூட என்னை நிம்மதியா தூங்க விட மாட்டிங்களா?” சிடுசிடுத்தாள் சூர்யா.
“ஓ.. அப்ப மத்த நாள்ல எல்லாம் நீங்க என்ன வேலை பண்ணிட்டு இருந்தீங்க இந்த வீட்டுல?”
“அதான் சொன்னேன்ல. உங்கம்மா உனக்கும் உன் தங்கச்சிக்கும் சமைச்சுட்டு இருக்கிறத டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் நான் அடுப்படிக்கே வர்றதில்ல!”
“ஏன்.. அடுப்படியில மட்டும் தான் வேலை இருக்கா? வாசல் தெளிக்கிற வேலை இருக்கு. பட்டியை சுத்தம் பண்ற வேலை இருக்கு.
பாத்திரம் விளக்குற வேலை இருக்கு. உதவி பண்ணனும் நினைப்பு இருந்தா எவ்வளவோ செய்யலாம்!” என்றாள் மதுராவும் விடாமல்.
“ஏய்.. ஸ்வீட்டி என்ன இது சித்தின்னு மரியாதை இல்லாம பேசிட்டு..” என்று சதீஷ் இடையிட,
“நீங்க சும்மா இருங்க. இப்ப என்னடி.. என்னை போய் சாணி அள்ள சொல்றியா?
இது கம்ப்யூட்டர்ல வேலை செய்யுற கை. சாணி அள்ளுற கை இல்ல? என்னால எல்லாம் முடியாது!
இப்ப என்னன்ற?”
“அப்ப… எங்கம்மாவை மட்டும் சாணி அள்ளிப் போட நேர்ந்து விட்டுருக்காங்களா?
என்ன அப்பாயி நீயே சொல்லு.
வீடு பொது. மாடு பொது. ஆனா வேலை மட்டும் எங்கம்மா மட்டும் தான் செய்யணும்!”
“அவங்க தானே ஆரம்பத்துல இருந்து செஞ்சாங்க. இப்ப என்ன புதுசா.. நான் வந்தவுடன் போட்டி போடுறீங்க?”
“ஆரம்பத்தில் இருந்து செஞ்சாங்க தான்!
நம்ம வீடுன்னு நினைச்சு செஞ்சாங்க.
ஆனா நீங்க நேத்து ஏம்மா.. இப்படி குடிக்க வாங்கின தண்ணில குளிக்கவெல்லாம் செஞ்சு தண்ணீ கேன் பில்லை ஏத்தி வச்சுருக்கன்னு கேட்டா, மாடு பொது தானே? அதன் வருமானம் பொது தானேன்னு கேக்குறீங்க இல்ல? மாடு பொதுன்னா சாணியும் பொது தான்.
போய் அள்ளிப் போடுங்க” என்றாள் மதுராவும் விடாமல்!
சதீஸ்க்கு இப்போது எல்லாம் புரிந்தது.
“நீ ஏண்டி. உனக்கு குடிக்க தானே தண்ணீர் கேன் போட சொன்னேன்.
அதுவும் நம்ம ஊர் காவேரி தண்ணிய விட வேற எது நல்லது?
ஆனாலும் சொன்னா கேக்க மாட்டேங்கிறன்னு தான் கேன் போட சொன்னதே! இதில நீ அதிலயே குளிக்கவும் செய்றது டூ மச்!
அண்ணி.. நான் நாராயணன் அண்ணன் கிட்ட பேசிக்கிறேன்.
வாட்டர் கேன் காசை பால் கணக்குல கழிக்க வேண்டாம். நான் தனியா தந்துடறேன்ன்னு சொல்லிடறேன்.
ஏய். சூர்யா. நீயும் அண்ணிகிட்ட மரியாதையா நடந்துக்க.
அவங்களுக்கு வேலையில ஹெல்ப் பண்ணு.
நீயும் இந்த வீட்டு மருமக தானே!
ஸ்வீட்டி.. இனி இந்த மாதிரி யெல்லாம் சித்தி கிட்ட சண்டை போட கூடாது சரியா?
சூர்யா.. அவ சின்ன பொண்ணு. அவ கிட்ட போய் மல்லுக்கு நிக்காதே! எல்லோரும் இத்தோட இத விடுங்க” என்று சொல்லி உள்ளே போய் விட்டான் சதீஷ்.
“சரிப்பா” என்று சொல்லி என்று வானதியும் சொல்லி விட்டு, எழுந்து பின் பக்கம் போக,
அதற்குள் அதி காலையிலேயே எழுந்து வயலுக்கு போய் இருந்த அருளும் வந்து விட அவரிடம் நடந்ததை சொன்னார் மதுராம்பாள்.
“ஸ்வீட்டிம்மா.. ஏண்டா அப்பாயி கிட்ட இப்படி சண்டை போடுற? பாரு எவ்வளவு வருத்தப்படுறாங்க” அருகே அழைத்தான் அருள்.
அவள் இடுப்பில் இருந்த லக்கி, அப்பாவிடம் தாவியது.
லக்கியின் நெற்றியில் இருந்த வியர்வையை தன் மேல் துண்டு கொண்டு துடைத்தவாறே மதுராவை அழைத்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டு கேட்க,
“பின்னே என்னப்பா.. இந்த அப்பாயிக்கு இவ்வளவு ஓர வஞ்சனை!
நேத்து சித்தி பேசும் போது கண்டுக்காம தான் இருந்துச்சு.
ஒரு நாள் அம்மா வேலை செய்யலன்னா எப்படி திட்டுது பாரு!
நாமன்னா அதுக்கு எப்பவும் இளக்காரம் தான்!”
“பாருடா..பாருடா. எப்படி பேசுறான்னு?”
“பின்னே பேசாம.. என்னையும் எங்கப்பா அம்மா மாதிரி வாயை மூடிட்டு இருக்க சொல்றியா?
அன்னிக்கு என்ன சொன்ன?
உங்கப்பா என்ன நோட் நோட்டா சம்பாரிக்கிறானான்னா?
எங்கப்பாவ படிக்க வைச்சுருந்தா எங்கப்பாவும் நல்ல வேலைக்கு போய் நோட் நோட்டா சம்பாரிச்சுருப்பாரு.
சாமி விடாது. பூதம் விடாதுன்னு சொல்லி அவர இங்கையே நிப்பாட்டி வச்சுட்டு.. இப்ப எங்கம்மாவ வேலைக்காரி மாதிரி நடத்துறீங்க!”
“ஏய்.. என்னடி இது? பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு?” மதுராம்பாள் பதற,
“பின்னே என்னவாம்? பெரிய சித்தி வந்தா ஒரு வேலை செய்ய விட மாட்டே!
அவ இன்னிக்கு வந்துட்டு நாளைக்கு போறவன்னு சொல்லிட்டு.
ஆனா இங்கையே இருக்கிற சின்ன சித்தியையும் உக்கார வச்சுகிட்டு எங்கம்மாவை தானே வேலை சொல்ற? எங்க அவங்கள போய் சொல்லிப் பாரேன்!
சதீஸ் சித்தப்பா கிட்ட பயம்!
இதே எங்கப்பான்னா பயம் இல்லை! அப்படி தானே?
இன்னிக்கு இவ்வளவு நடந்தும் கூட கடைசியில எங்கம்மா தானே வாச தெளிக்க போனாங்க!
யாரு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.
நீ ஓரவஞ்சனைக்காரி தான்!
ஏன் எங்க விஷயத்துலேயே எடுத்துக்க.. என்னைக் கொஞ்சுற அளவு நீ லக்கியை என்னிக்காவது கொஞ்சி இருக்கியா?
அட்லீஸ்ட் தூக்கியாவது வச்சுருக்கியா? இதுலே தெரியுது உன் ஓரவஞ்சனை புத்தி!”
மதுராம்பாளுக்கு அதிர்ச்சி!
“ஏய்.. அப்படியெல்லாம் இல்ல. இது வேற விசயம்! பெரியவங்க விசயம் உனக்கு புரியாது. நீ போடி அங்கிட்டு” என்று அவளை துரத்தி விட்டார் மதுராம்பாள்.
“ஆமா. இத ஒண்ணும் சொல்லிடுவீங்க! நியாயத்தை யார் சொன்னா என்ன?” என்று முனகிக் கொண்டே லக்கியைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றாள் மதுரா.
“ஏண்டா நீயும் அம்மாவை ஓரவஞ்சனைக்காரியா நினைக்கிறியா?” என்றார் அழுகிற மாதிரி!
“அப்படியெல்லாம் இல்லம்மா.. அது ஏதோ சின்ன பிள்ளை ஏதோ பேசிட்டு போகுது விட்டுத் தள்ளு.
அப்புறம் அப்பாயின்னு உன் கிட்ட தானே வரும்! கொஞ்சும்! அப்புறம் நீயும் கொஞ்சுவ அவளை!”
“என்னமோ போடா.. நீ நம்பினா சரி தான்!” என்றவருக்குள் வேறு சிந்தனை!
மதுரா கேட்டது எல்லாம் நியாயம் தான்!
சாமிப் பேரை சொல்லி அருளின் படிப்பை நிறுத்தியது எவ்வளவு பெரிய தவறு என்று அவருக்கு காலம் கடந்து தான் புரிந்தது!
அந்த குற்ற உணர்வில் இருந்தவருக்கு, செந்தில் கொடுத்தது அடுத்த அதிர்ச்சி!
அப்புறம் அருளுக்கு மூன்றாவதும் பெண்ணாக பிறந்து விட பேரதிர்ச்சி!
பெரிதாக படிக்காமல், விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் தன் மகன் மூன்று பெண்களை எப்படி தனியே கரையேத்துவான் என்ற பயம் அவருக்கு அதிகம் வந்து விட்டது!
ஏற்கனவே செந்தில் கிட்டத்தட்ட மாமனார் வீட்டோடு போய் விட்டான்!
இனி.. சதீஷை யாவது தக்க வைத்துக் கொள்ள எண்ணியே உள்ளூரில் பெண் பார்த்து அவனை சம்மதிக்க வைத்து, சின்ன மருமகளை வீட்டோடு வைத்துக் கொண்டு இருந்தார்.
சூர்யாவுக்கு குணம் பத்தவில்லை என்று ஆரம்பத்திலேயே புரிந்தாலும்,
தான் ஏதாவது சொல்லி அதையே சாக்கிட்டு அவள் சதீஷை அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டால்,
இருக்கும் தம்பியின் ஆதரவும் அருளுக்கு இல்லாமல் போய் விடும் என்று நினைத்தே வீட்டில் நடக்கும் விஷயங்களைக் கண்டும் காணாது இருந்து வந்தார்!
ஆனால் இந்த சீட்டி? என்ன வார்த்தை சொல்லிட்டு போய்ட்டா?
சின்ன பிள்ளையாக இருந்தாலும் அவள் சொல்வதும் நியாயம் தானே!
தான் இன்னமும் அருளுக்கும் வானதிக்கும் அநியாயம் தான் செய்கிறோமோ என்று நினைப்பும் வர,
ச்சே.. ச்சே இந்த மாதிரி சின்ன சின்ன சண்டைகள் எந்த குடும்பத்துல இல்லை!
எல்லாம் சரியாகிடும் என்று நினைத்துக் கொண்டார்.
ஆனால் அவையெல்லாம் தப்புக் கணக்கு என்று அடுத்து வந்த சில வருடங்களில், அவரின் அந்திம காலத்தில் அவர் படுத்த படுக்கையாக இருந்த போது தான் அவர் உணர்ந்தது விதியின் சதி!
—–
அடுத்த கோடை விடுமுறை!
மதுரா ஆவலுடன் எதிர்பார்த்த இனிய நாட்கள்!
அவளை ஏமாற்றாமல் அந்த வருடமும் வந்திருந்தான் ரேவந்த்!
இந்த முறை கையில் புதியதாக ஒரு கேமிரா!
உடனடியாக பிரிண்ட் போடும் போலராய்ட் வகை இன்ஸ்டன்ட் ப்ரிண்டரோடு கூடிய கேமிராவோடு!
“அக்கா.. நடராஜ் மாமா தோப்புல சினிமா ஷூட்டிங் எடுக்கிறாங்கக்கா.
வாக்கா நாமளும் போய் வேடிக்கை பார்க்கலாம்” என்று மதுராவை அழைத்தாள் இனியா.
“ஏய்.. தலைக்கு எண்ணெய் வச்சுருக்கீங்க. குளிச்சுட்டு தான் வெளியே போகணும்” என்று வானதி அதட்ட,
“சரிம்மா” என்று அவசர அவசரமாய் குளித்து முடித்தார்கள் சகோதரிகள் இருவரும்.
குளித்து முடித்து தலையில் கட்டிய துண்டுடனே இடுப்பில் லக்கியையும் தூக்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினார்கள் இருவரும்!
யாரோ புதுமுக நடிகர்கள்! பேர் கூட தெரியவில்லை.
வேடிக்கை பார்த்தார்கள்.
சும்மா சும்மா ஒரே காட்சியையே பலமுறை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டவர்களுக்கு அது போரடிக்கவே கிளம்பி வந்து விட்டார்கள்.
எதிரில் கழுத்தில் மாட்டிய கேமிரா சகிதம் வந்தான் ரேவந்த்!
“மாமா.. எங்களையும் போட்டோ எடுக்கிறீங்களா?’ என்று இனியா கேட்க,
“ரெண்டு பிலிம் தான் இருக்கு. லோட் பண்ணிட்டு வந்து எடுக்கட்டா?” என்று கேட்டவன்,
“இல்லை இப்போ ரெண்டு மட்டும் எடுக்கிறேன். அப்புறம் வேற எடுக்கலாம்” என்று சொல்லி எடுக்க போக,
அப்போது தான் இனியாவின் கவுன் ஜிப் போடப்படாமல் இருப்பதை கவனித்த மதுரா அதை போட்டு விட முயன்றாள்.
அப்போது பார்த்து ஒரு போட்டோ எடுத்து விட்டான் அவன்!
“அச்சோ.. கீழே குனிஞ்சுட்டியே! சரி இன்னொன்னு ட்ரை பண்ணலாம்” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்த அந்த போட்டாவை எடுக்க, அவன் கையில் இருந்ததை பிடுங்கி கொண்டு,
“இல்ல போதும்” என்று சொல்லி விட்டு இனியாவையும் இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினாள் மதுரா.
“ஏய்.. ஓடாதே நில்லு. இன்னொரு ஸ்நாப் எடுக்கலாம். இரு.” என்றவனிடம் “இல்ல வேண்டாம்” என்று திரும்பி ஒரு முறை பார்த்து சொல்லி விட்டு ஓடி விட்டாள் அவள்!
அவள் திரும்பிப் பார்த்த போது அவளை மட்டும் ஒரு போட்டோ எடுத்து இருந்தான் ரேவந்த்!
வீட்டுக்கு திரும்பிய மதுராவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது!
இந்த ஒரு வருடத்தில் ரேவந்த்தின் புறத் தோற்றத்திலும் குரலிலும் மாற்றங்களை கண்டவளுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது!
புதிதாக அவன் முகத்தில் அரும்பி இருக்கும் மீசையோடு அவனைக் கண்டவளுக்கு அவன் முகத்தைப் பார்க்கவே வெட்கம் வெட்கமாக இருந்தது!
அது தான் ஓடி வந்து விட்டாள்!
அடுத்து சில நாட்களில் அவர்கள் தெருவில் இருக்கும் ரேவந்த் குடும்பத்தின் சொந்தக்கார பெண் ஒருவள் சடங்காகி விட, பெரிதாக விழா எடுத்து இருந்தார்கள்!
அதற்கு இரு குடும்பங்களும் போய் இருந்தனர்.
ரேவந்த் தன் கேமிரா கொண்டு கேட்டவர்களுக்கு எல்லாம் போட்டோ எடுத்துக் கொடுத்தான்.
அவன் பின்னே சுற்றிய சிறுமிகளை எல்லாம் கொல்ல வேண்டும் போல ஆத்திரம் வந்தது மதுராவிற்கு!
அவங்க தான் பின்னாடி சுத்தினா, இவனும் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கான் பாரு என்று உள்ளுக்குள் அவனைத் திட்டிக் கொண்டே இருந்தாள்.
இரு.. இரு.. நான் பெரிய மனுசி ஆகும் போது, நீ வந்து போட்டோ எடுக்கல அப்போ இருக்கு உனக்கு!
அது சரி. அது எப்படி அவன் லீவுக்கு வரும் போது தான் அது நிகழும் என்று நிச்சயம்?
ஒரு வேளை வருட மத்தியில் ஆகி விட்டால், அவன் எப்படி வருவான்?
ம்ம். என்று பெருமூச்சு விட்ட படியே அவனையே அவனறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.
அந்த வருடம் ஏகாதசி வந்தது.
ரேவந்த்தின் தாத்தாவும் பாட்டியும் அதி காலையிலே எழுந்து குளித்து முடித்து சொர்க்க வாசல் மிதித்து விட்டு, பந்தலில் இறக்கி வைக்கப்பட்ட ரெங்கநாதர் உற்சவர் சிலையை வணங்கி விட்டு வந்திருந்தார்கள்.
“முத்தங்கி சேவை பார்க்கணும்டா” என்றார் தாத்தா ஈசி சேரில் சாய்ந்தவாறு!
“பார்க்கலாம்ப்பா. இன்னிக்கு வேண்டாம். இந்த வருசம் ரொம்ப கும்பல்! பாஸ் கிடைக்கல.
ராப்பத்து முடியறதுக்குள்ள ஒரு நாள் பாஸ் வாங்கிட்டு வரேன்.
நீங்களும் அம்மாவும் ஒரு நாள் போய் சேவிச்சுட்டு வாங்க” என்றான் செல்வமணி ரேவந்தின் தாய் மாமன்!
“சரிடா” என்று சேரின் பின் புறம் நன்றாக சாய்ந்தவரின் முகத்தில் ஏதோ வேதனை சாயல்!
“என்னப்பா பண்ணுது?’’ என்று கேட்டான் செல்வமணி.
“கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாப்பா” என்று சொல்ல, அவன் கொண்டு வந்து கொடுப்பதற்குள் அவர் தலை கீழே சாய்ந்தது!
கொடுத்து வைத்தவர்!
வைகுண்ட ஏகாதசி அன்றே வைகுண்ட பதவி!
“அப்பா..” என்று செல்வம் அலற, மற்றவர்கள் ஓடி வந்தார்கள்!
“என்னப்பா என்று அப்பாவுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டவாறு வந்தார் சுந்தரவல்லி பாட்டி
அருகே வந்தவருக்கு விசயம் புரிய,
ஒன்றும் சொல்லாமல் அருகே இருந்த சேரில் அமர்ந்தார்.
“அம்மா.. அம்மா என்னாச்சும்மா. ஏன் இப்படி இருக்கீங்க?” என்று அவர் தோள் பற்ற, அவர் முகம் வெளுக்க மகனை நோக்கி விட்டு,
“இரு” என்று சொல்லி விட்டு பாத்ரூம் சென்று வந்தார்.
வந்தவர் கணவரின் காலடியில் உட்கார்ந்து தலை சாய்த்தார்.
சாய்த்தவரின் தலை அப்படியே இருந்தது.
ஒரு போதும் கணவரை விட்டு பிரியாத அவர், இப்போதும் அவரோடு பயணத்தில் இணைந்து கொண்டு விட்டார்!
கதறி தீர்த்து விட்டார்கள் மக்கள் இருவரும்!
ஸ்ரீமதிக்கு செய்தி போய் அவள் அடுத்த ஃப்ளைட்டில் ஓடோடி வந்து விட்டாள்.
ரேவந்தைக் அழைத்து வர கார் அனுப்பப்பட்டது!
மதுராம்பாள் குடும்பம் மொத்தமும் ஓடி வந்து அடுத்த காரியங்களுக்கு உதவினார்கள்.
ஊரே திரண்டு வந்து இறுதி மரியாதை செய்தது!
எல்லாம் முடிந்து விட்டது!
ரேவந்த் உடனே கிளம்பி விட்டான்!
அவன் ப்ளஸ் டூ மாணவன் என்பதால் அப்போது போய் விட்டு பதினாறாம் நாள் மீண்டும் வர இருந்தான்.
பதினாறாம் நாள்!
அம்மா மண்டபத்தில் காவிரிக் கரையில் வைத்து எல்லா சடங்குகளும் முடிந்த பின், குளித்து விட்டு குளிர் தாங்காமல் ஒரு ஜெர்கினை அணிந்து கொண்டு வாசலில் போடப்பட்டிருந்த பந்தலில் தனியே உட்கார்ந்து இருந்தான் ரேவந்த்.
காபி டம்ளர்களை ஒரு ட்ரேயில் வைத்துக் கொண்டு எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள் மதுரா.
வயிற்றில் ஏதோ புது விதமாக வலி! இரண்டு நாட்களாகவே!
காலையில் கை நிறைய வெந்தயம் எடுத்து முழுங்கி விட்டு தான் வந்திருந்தாள்! ஆனாலும் வலித்தது!
சமாளித்துக் கொண்டு தான் நடமாடிக் கொண்டு இருந்தாள்.
ரேவந்திடம் காபியை கொடுத்து விட்டு அவள் திரும்பிய போது அவள் உடையில் மாற்றம் கண்டவன், டக்கென்று தன் ஜெர்கினை எடுத்து அவள் பின்னே போர்த்தினான்!
“ஏய்.. ஸ்வீட்டி.. ட்ரேயை என் கிட்ட கொடு” என்று வாங்கி அருகில் வைத்தவன், அவன் ஜெர்கினை நன்றாக அவளைப் போட்டுக் கொள்ள வைத்து விட்டு, “வீட்டுக்கு போ முதல்ல” என்றான்!
“ஏன்?”
“உன்னை போன்னு சொன்னேன். நான் போய் ஆண்ட்டிய வர சொல்றேன் நீ வீட்டுக்கு போ முதல்ல!
சயின்ஸ்ல படிக்கல நீ? உன் பிரண்ட்ஸ் அப்புறம் உன் அம்மா கூடவா சொல்லி தரல?”
அவளுக்கு தன் நிலை அப்போது தான் புரிந்தது!
அச்சோ.. கடவுளே அவன் பார்த்து சொல்லும்படியா ஆகிடுச்சே! அம்மா சொல்லியிருந்தாங்க அப்பவே.
நான் எப்படி அஜாக்கிரதையாக இருந்தேன்!
இப்ப இவன் சொல்லி… அச்சோ. அவளை வெட்கம் பிடுங்கி தின்றது!
அவள் முக சிவப்பைப் பார்த்தவன் முகத்தில் லேசாக புன்னகை வந்து விட, அவ்வளவு தான் எடுத்தாள் ஓட்டம்!
வானதியை தனியே அழைத்துப் பேசினான் ரேவந்த்!
அன்று ஓடியவளுக்கு, அதற்கு பின் அவனை இப்படி வெகு அருகில் பார்க்கும், பேசும் சந்தர்ப்பம் பல வருடங்களுக்கு அமையவே இல்லை!
error: Content is protected !!