Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…32

தூறல் – 32
மகளின் விழிகளில் தெரிந்த அமர்த்தலை பார்த்த பெற்றவர்களுக்கு வலியை தாண்டிய கனிவும் நிம்மதியும் பிறந்தது. இத்தனை நாள் பிரிவில் அவள் முகத்தில் ஏக்கம் தெரியவில்லை… தனி பொலிவும் பளபளப்பும் நிமிர்வும் அதிகரித்துதான் தெரிந்தது. 


Advertisement

இன்னொரு அதிசயமாக மூன்று ஆண்டுகளாக எந்நேரமும் கையணைப்பில் வைத்து வளர்த்த பேத்தி அவர்களின்புறம் பார்வையைத் திருப்பாமல் வந்த நொடியிலேயே அப்பா என்று குருவை தாவி அணைத்து அவனோடு ஒன்றிக் கொண்ட அந்த காட்சி அமைப்புகளில் கள்ளத்தனம் இல்லாத நிஜநேசம் வெளிப்பட்டதில் தங்கள் மகளின் எதிர்காலம் பூரணம் அடைந்த திருப்தி அவர்களின் முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. 
மகிழ்ந்த கண்ணீரோடு இதழ்களில் புன்னகையை தேக்கி “அஞ்சலிம்மா…” என்று குரல் தழுதழுக்க அழைத்தார் லதா. 

Advertisement

Advertisement

அந்த நெகிழ்ந்த அழைப்பில் அவளுக்கும் தொண்டையை அடைத்துக் கொண்டுதான் வந்தது. ஆனாலும் இன்னும் கோபம் கொஞ்சமாய் தேங்கி நிற்கிறதே. 
“சாகலம்மா… உயிரோடதான் இருக்கேன்… சாவோட விளிம்புவரைக்கும் போனவளை அழகான உலகம் உனக்காக காத்துட்டு இருக்கு… கூடவே பயணிக்க நான் இருக்கேன்னு என் கைப்புடிச்சு இழுத்துட்டு வந்து வாழணும்ங்கிற ஆசையை என் மனசுல தேக்கி வச்சிருக்கார் என் குரு…” 

Advertisement

என் குரு என்ற அழுத்தமான அவளது இறுதி உச்சரிப்பில் அவன்மேல் அவள் கொண்டுள்ள நேசம் பட்டவர்த்தனமாக தெரிந்தது. 
“வரவே கூடாது… உங்க யார் முகத்தையும் பார்க்கவே கூடாதுன்னுதான் இருந்தேன். ஆனா கண்டவனோட பணம் என் பேர்ல இருக்கிறது எனக்கு அருவெறுப்பா கூசுற மாதிரி இருக்கு. அந்த ஒன்ன சொல்லிதானே உறவை புதுப்பிக்க அலையுது அந்த கூட்டம். எல்லாத்தையும் மொத்தமா முடிச்சு வைக்க நான் இங்கே வந்துதானே ஆகணும்… அதுக்காகத்தான் வந்தேன்…” 
“அப்போ நாங்களும் உனக்கு வேணாமா தங்கம்… எங்க உறவையும் மொத்தமா முடிச்சுக்க போறியா..?” குரல் கமற கேட்டார் கர்ணன். 
“அப்படியெல்லாம் இல்லைங்க… நீங்க ஏன் அவ்வளவு யோசிக்கிறீங்க..?” என்று வேகமாக இடைமறித்த குருவை திரும்பிப் பார்த்து அவள் முறைக்க அமைதியாக இரு என்று கண்மூடித் திறந்து அவள் விரல்களுக்கு மெல்ல அழுத்தம் கொடுத்து இருந்தான் அவனும். 
அவர்களது உடல் மொழியும் அந்த பார்வை வருடல்களும் சின்ன சின்ன விஷயங்களில் கூட தென்பட்ட அக்கறையும் உரிமையும் அங்கு இருந்தவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. 
“தங்கக்குட்டி… சவிம்மா… அம்மாச்சி தாத்தாகிட்ட வர மாட்டீங்களா..?” 
வெளிப்பட்ட கண்ணீரோடு கைகளை விரித்து ஏக்கத்தோடு கேட்ட லதாவிடம் மெல்லிய வெட்கத்தோடு சிரித்த சவியை தானே அவரிடம் கொடுத்திருந்தான் குரு. 
அவளும் ஆசையாக அவர்களோடு ஒன்றிக் கொண்டாள். பேத்தியை மாறி மாறி தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தனர் இருவரும். மகளிடம் மட்டுமல்ல… பேத்தியிடம்கூட தனிப் பொலிவும் அழகும் தனித்து தெரிந்தது. இத்தனை நாட்களாக அவர்கள் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.
கடிகார முள்ளையே பார்த்தபடி அமர்ந்திருந்தார்களோ என்னவோ..? சொன்னது போன்றே சரியாக மூன்றே மணி நேரங்களில் அருணின் பரிவாரம் ஆரவாரத்தோடு அங்கே வந்து இறங்கி இருந்தது. 
முன்னே நடந்து வந்த மொத்த குடும்பத்தினரையும் பார்த்த அஞ்சலியின் முகத்தில் அத்தனை வெறுப்பு. முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டவள் குருவை ஒட்டியபடி சென்று நின்று கொண்டாள்.
வந்தவர்கள் கையில் தேவையான காகிதங்கள்… கூடுதலாக வக்கீலையும் அழைத்து வந்திருந்தனர். 
காமாட்சி சொன்னது போன்றே மூக்கில் பெரிய பேண்டேஜ் போட்டபடிதான் வந்திருந்தான் அருண். ஆனால் அவன் கண்களில் கனலாய் கோபம் கனன்று கொந்தளித்தது. அவனது பெற்றோரும் கூட அஞ்சலியை பார்த்த பார்வையில் அத்தனை ஆத்திரம். 
அருகில் மலைபோல் அரணாக அவளவன் இருக்க அவர்களை எதிர்கொள்வதில் இவளுக்கு என்ன பயம்..? கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டிக்‌ கொண்டு அவனை உரசியபடி நின்று எதிரில் நின்றவர்களை நேர்கொண்டு நிமிர்ந்துதான் பார்த்தாள் அஞ்சலி. 
“ஓடுகாலிச் சிறுக்கி… ஒட்டிக்கிட்டு நின்னு எப்படி பாக்குறா பாரு..?” 
உதட்டுக்குள் பல்லை கடித்து முணுமுணுத்த வசந்தி இன்னும் கூடுதலான கெட்ட வார்த்தைகளையும் வாயோடு முணுமுணுத்தார். உரக்கப் பேசியிருந்தால் எதிரில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பவன் வாயில் வெற்றிலை பாக்கு போட வைத்திருப்பானே. 
தொண்டையை செருமிக் கொண்டு முன்னே வந்த வக்கீல் அஞ்சலியிடம் பேசத் தொடங்கினார். 
“அசோக் பேர்ல இருக்கிற பணம் மொத்தமும் உங்களுக்குதான் உரிமையானது. கூடுதலா அவருக்கு மகளும் இருக்கிறதால முழுக்க முழுக்க நீங்கதான் உரிமைப்பட்டவங்க. ஆனா அதேநேரம் நீங்க இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் பட்சத்துல அந்த பணம் முழுக்க அவங்க குடும்பத்துக்கு உரிமையாயிடும். ஆனா குழந்தைக்கு பாத்யப்பட்ட பணத்தை முறையா நீங்க வாங்கிக்கலாம். நீங்க வேற ஒருத்தரை திருமணம் செய்துக்கிட்டதா இவங்க சொல்றாங்க. எனக்கு முறையான டாக்குமெண்ட்ஸ் கொடுத்துட்டீங்கன்னா சட்டப்படி என்ன பண்ணனுமோ அதை பண்ணிடுவேன். நீங்க இன்னொருத்தருக்கு மனைவி அப்படிங்கிற பட்சத்துல அந்த பணத்தை அவங்க குடும்பத்துக்கே கொடுக்கறதுல நீங்க ஒரு என்ஓசி யில கையெழுத்து போடணும்…” 
தெளிந்த குரலோடு அவர் கூறிக் கொண்டிருக்க வெறியோடு முன்னே வந்து நின்றிருந்தார் வசந்தி. 
“என்னங்க பெரிய சட்டத்தை பத்தி அவகிட்ட பேசிகிட்டு இருக்கீங்க..? கேடுகெட்டு ஓடிப்போனவளுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் எல்லாம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. ஒத்தப்பைசா பாக்கி இல்லாம எல்லாத்தையும் எங்க பேருக்கு எழுதி மாத்தி குடுக்கணும். எவனுக்கோ பொண்டாட்டியா குடும்பம் நடத்த ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எங்க வீட்டு குழந்தை அவகிட்ட ஏன் இருக்கணும்..? அந்த குழந்தையையும் எங்ககிட்ட ஒப்படைச்சிரணும். அதுக்கப்புறம் அவ எவன்கூட போனா எங்களுக்கு என்ன..? இருந்தா எங்களுக்கு என்ன..? இப்பவே எல்லாத்தையும் முடிச்சுவிட்டு கணக்க தீர்த்து விடுங்க…” 
திமிர் குறையாமல் பேசிய வசந்தியை தீயென முறைத்தபடி வெறியோடு அவரை நோக்கி குரு முன்னேற அவசரமாக அவன் கையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தினாள் அஞ்சலி. 
அவனை நகர்த்திவிட்டு முன்னே வந்தவள் அமர்த்தலாக வசந்தியின் முன்னே சென்று நின்றாள். 
“எப்படி எப்படி..? புள்ள உங்களுக்கு வேணுமா..? ஏன் நல்லபடியா ஊர் போய் சேரணும்னு ஆசை யாருக்குமே இல்லையா..?” கம்பீரமாய் கேட்டவளை கோபமாய் பார்த்தபடி நெருங்கி வந்தான் அருண். 
“அவங்க கேட்டதுல என்னடி தப்பு..? எங்க வீட்டு சொத்து எதுவுமே வேணாம்னு சொல்லிட்டேல்ல… புள்ளைய மட்டும் நீ எப்படி வச்சுக்க முடியும்..? அவ எங்க குடும்பத்து வாரிசு. கையெழுத்து போட்டு குடுத்துட்டு பிள்ளையும் எங்ககிட்ட ஒப்படைச்சிட்டு எவன்கூட வேணாலும் போ… எத்தனை பேர்கூட வேணாலும் போ…” 
அடி வாங்கியும் வாய் பேச்சு குறையாதவனை மீண்டும் முறுக்கிக் கொண்டு ஓடி வந்தான் குரு. கர்ணனும் ராமலிங்கமும் அவனை இழுத்துப் பிடித்து நகர்த்தினர். 
ஆத்திரத்தில் உடல் நடுங்க பிடரியை அழுத்தமாக வருடி கோபத்தில் சிவந்த முகத்தை அழுத்தமாக தேய்த்துக் கொண்டிருந்தான் குரு. தன் மகளை என் வீட்டு சொத்து என்று அவர்கள் சொல்வதை அவனால் வார்த்தைக்கு கூட கேட்க முடியவில்லை. உண்மை அதுவாககூட இருக்கலாம்… ஆனால் நிஜநேசம் வேறல்லவா. 
பொங்கும் ஆத்திரத்தோடு வேக மூச்சுகளை விட்டபடி நின்றிருந்தவனின் கரத்தை அழுத்தமாகப் பற்றினார் ராமலிங்கம். அவனை தடுத்துப் பிடிக்காமல் விட்டால் அனைவரையும் அடித்து துவம்சம் செய்துவிடுவான் என்பது அவருக்கும் தெரிந்தது. 
“அண்ணா… அடி வாங்கி சாகாம அவன் இங்கே இருந்து போற மாதிரி எனக்கு தெரியல… பிரச்சனை பெரிய அளவில வந்துடக்கூடாதுன்னுதான் பொறுமையா நின்னுட்டு இருக்கேன். வக்கீல்கிட்ட சொல்லி அஞ்சலி எங்கே கையெழுத்து போடணுமோ அதை வாங்கி கொடுங்க. அந்த குடும்பம் வாயை மூடிக்கிட்டு இப்ப வெளில போயாகணும். தேவையில்லாம என் புள்ளையைப் பத்தி பேசி பிரச்சினையை கிளப்பினா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன். நான் சொன்னதுதான்… அஞ்சலிக்கோ சவிக்கோ எந்த பிரச்சனை வந்தாலும் என்னோட இன்னொரு முகத்தை அவங்க எல்லாரும் பார்க்க வேண்டியது வந்துடும். அவங்களுக்கு பேசி புரிய வைங்க… நான் முன்னே போனா என் வாய் பேசாது கைதான் பேசும்…” 
பொங்கி வந்த வெறியை அடக்கியபடி பேசினான் குரு. அவனை முதுகை தட்டி சமாதானம் செய்தவர் வசந்தி மற்றும் அருணிடம் சென்றார். 
“ஏப்பா… உங்க குடும்பம் அடங்கவே மாட்டீங்களா..? வேணும்னே வம்பு இழுக்கணும்னு நோக்கத்தோடவே வந்து நிக்கிறீங்களா..? உங்க காசு உங்களுக்கு வந்துடும்… அதுல எந்த குழப்பமும் இல்ல… ஆனால் புள்ளைய கேட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணினா கோர்ட் வரைக்கும் போகக்கூட நாங்க தயாரா இருக்கோம். பெத்த தாய்கிட்ட இருந்து புள்ளைய பிரிக்கிற உரிமை யாருக்கும் கிடையாது… படிச்சவன்தானே நீ..? தெரியுமா தெரியாதா..?” 
கணுகணுவென கோபம் கிளர்ந்தாலும் பொறுமையாக நிதானமாகவே பேசினார் ராமலிங்கம். 
மலத்தை மிதித்தவளைப் போல் அங்கு நின்றவர்களின் முகங்களை அசூசையாய் பார்த்த அஞ்சலி வக்கீலிடம் திரும்பினாள். 
“நீங்க சொன்ன மாதிரி இவர்தான் என்னோட கணவர்… இனி என்னோட வாழ்க்கை இவரோடதான். அதனால பழைய உறவால என் பேர்ல இருக்கிற பணம் எதுவுமே எனக்கு தேவையில்ல. எங்க கையெழுத்து போடணுமோ சொல்லுங்க கையெழுத்து போட்டு குடுத்துடறேன். கூடுதலா இன்னொன்னும் சொல்றேன்… என் குழந்தைக்கு ஒரு ரூபா அந்த காசு வேண்டாம்… மொத்த பணமும் அவங்களுக்கே குடுத்துடுறேன்…” 
திட்டவட்டமாக அவள் கூற அவள் பேச்சில் தெரிந்த உறுதியை தெரிந்து கொண்டவர் அதற்கு தகுந்தாற்போல் பத்திரம் தயார் செய்து இன்னும் கையில் இருந்த வேறு சில காகிதங்களையும் அவளிடம் கொடுத்து ஒவ்வொன்றிலும் கையெழுத்து போடும்படி கூறினார். ஒவ்வொன்றையும் வாங்கி தெளிவாக ஆராய்ந்து படித்துப் பார்த்து முடித்தவள் அனைத்திலும் கையெழுத்து போட்டு அவரிடம் நீட்டி இருந்தாள். 
“அவ்வளவுதானே சார்… இனி இவங்க போகலாம்… இனி எனக்கும் அவங்களுக்குமான உறவு மொத்தமா முடிஞ்சு போயிருச்சு… அதுக்கு நீங்கதான் சாட்சி…” 
நிமிர்ந்து சொன்னவளை முறைத்தபடி வந்தார் வசந்தி. 
“ஏய் பணத்தைக் கொடுத்து முடிச்சிட்ட… ஆனா புள்ளைக்கு என்ன வழி..?” 
மீண்டும் பிரச்சனையை தொடங்கினார். குழந்தையின் மேல் உள்ள பாசத்தில் அவளை எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும் என்று எண்ணமெல்லாம் அவர்கள் யாருக்குமே இல்லை. அப்படி பாசம் இருந்ததாகவும் தெரியவில்லை. அஞ்சலியின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியிலும் கோபத்திலும் அவளை இன்னும் வதைக்க வேண்டும் என்றுதான் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தனர். அது மற்றவர்களுக்கும் தெரியாமல் இல்லை.
மீண்டும் அங்கு சலசலவென கூச்சலும் சத்தமும் கிளம்பி இருந்தது. 
“இவங்ககிட்ட என்னடா நயமா பேசிக்கிட்டு..? ‍ மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது… புடுங்கிதான் எடுக்கணும்…” என்ற வசந்தி விறுவிறுவென நடந்து லதாவின் கையில் இருந்த சங்கவியை வெடுக்கென பிடுங்கிக் கொள்ள பயத்தில் “அப்பா…” என உச்சக்குரலில் கத்தி இருந்தாள் சவி. 
அந்த நேரத்தில்கூட அவள் அம்மா என்று அலறவில்லை… அப்பாவைத்தான் அழைத்தாள். அவனை நோக்கி தன் கைகள் இரண்டையும் விரித்து கத்தினாள் சவி. கைகளையும் கால்களையும் உதறிக் கொண்டு பேயிடம் அகப்பட்டவள் போல் வசந்தியிடம் இருந்து துள்ளி இறங்க அவள் முயல அவளோ விடாமல் இறுக்கி பிடித்து அங்கிருந்து நகர முயல தான் கட்டியிருந்த லுங்கியை இழுத்து மடித்துக் கொண்டு புயலென வசந்தியை நோக்கி வந்த குருவின் கண்களில் அவளை கொன்று போடும் ஆவேசம். அந்த பார்வையில் மிரண்டு இரண்டு அடிகள் நகர்ந்தாலும் சவியை விடாமல் இறுக்கி பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற அவள் முயற்சி செய்ய ஆளாளுக்கு அவளை மறித்துப் பிடித்திருந்தனர். 
குருவின் ஆவேசத்தை பார்த்து எங்கே வெறியில் வசந்தியை ஒரே அடியில் அடித்துக் கொன்று விடுவானோ என்று பயந்துதான் பல பேர் சேர்ந்து அவனை இறுக்கமாக அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தனர். தன் மகள் பரிதவிப்போடு தன்னை நோக்கி கை நீட்டி அழுவதை தாங்கவே முடியாதவன் கட்டிடமே இடிந்து விழும்படி கத்திக் கொண்டு தன்னை பிடித்திருந்தவர்களை தள்ளிக் கொண்டு முன்னேற வேகமாக சென்று சவியை வசந்தியிடம் இருந்து வாங்கி இருந்தார் வக்கீல். 
“ஏம்மா… என்னம்மா பண்றீங்க… புத்தியோடதான் வேலை செய்றீங்களா..? நீங்க பண்றது நியாயம் கிடையாது. பெத்த தாய்கிட்ட இருந்து புள்ளைய பிரிக்கிற உரிமை யாருக்கும் கிடையாது. அந்த பொண்ணே விருப்பப்பட்டு குழந்தையை உங்ககிட்ட கொடுத்தாதான் உண்டு. அதோட குழந்தைக்கும் அந்த விருப்பம் இருக்கணும். குழந்தை இந்த கதறு கதறுது… மனசாட்சி இல்லாம புடுங்கிட்டு போறீங்க… உங்க பணம் உங்களுக்கு வந்தாச்சு… இந்த மாதிரி எல்லாம் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டீங்கன்னா போலீஸ் மூலமா கோர்ட்டுக்கு போக வேண்டியது இருக்கும்…”
சட்ட நடைமுறைகளையும் கோபத்தோடே விளக்கினார் வக்கீல். 
இதற்குள் அவரிடம் இருந்து தனது மகளை வாங்கி இருந்தான் குரு. அவனை இறுக்கி கழுத்தோடு கட்டிக் கொண்டவள் கால்களையும் அவன் முதுகுக்கு பின்னே இறுக்கமாக பிணைத்துக் கொண்டாள். 
அவன் தோளில் அழுத்தமாக முகத்தை புதைத்துக் கொண்டவள் அவளுக்கு அவன் யார்..? அவன் அவளுக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவன்..? அவனுக்கும் அவளுக்கும் இடையே உள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை அங்கிருந்த கூட்டத்திற்கு தெளிவாகவே உணர்த்தியிருந்தாள். 
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!