Skip to content
Post Views: 4,916
தூறல் – 36
அன்றைய நாளை வெளிச்சமாக்க மட்டுமல்ல… இரு அழகிய உள்ளங்களின் இருண்ட வாழ்வை ஒளிமயமாக்கவும் தனது மஞ்சள் முகத்தால் புவியெங்கும் வெளிச்சக் கீற்றுகளை பரப்பியபடி மெல்ல மேலெழும்பிக் கொண்டிருந்தான் கதிரவன்.
Advertisement
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் மண்டபத்தில் மணமக்கள் கோலத்தில் மகிழ்வோடு நின்றனர் குமரகுரு, புஷ்பாஞ்சலி இருவரும். கழுத்தில் மாலையோடு நின்றிருந்த இருவரையும் பார்த்த ராதாவினால் பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவர் காண ஏங்கிக் கிடந்த தன் மருமகனின் கோலம்…
Advertisement
Advertisement
முன்னர் கண்டும் இனிமையை முழுதாக மனதில் சுமக்க முடியாமல் வடுவை மட்டுமே சுமந்து வாழ்ந்து வந்த காலம்…
இன்று அவன் மீண்டும் ஜனித்ததாக இவரது மனதிற்குள் அப்படி ஓர் ஆனந்தப் பூரிப்பு. அவனது வாழ்க்கையை மீட்டெடுத்த இரு தேவதைகளும் அவன் அருகே… ஒன்று தோளை அணைத்துக் கொண்டு… மற்றொன்று தோளை உரசிக் கொண்டு…
Advertisement
தாயும் தந்தையும் நிற்கும் கோலத்தில் குட்டி திராட்சை கண்களை அழகாய் உருட்டி ஆனந்தமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சவி. நடப்பது பெரிதாக ஒன்றும் புரியவில்லை. அவள் கண்கள் விவரித்த கேள்வியை புரிந்து கொண்டான் அவள் தகப்பன்.
“இன்னைக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாண நாள்டா தங்கம்… அதனால அப்பா அம்மா கழுத்துல புதுசா இன்னொரு தாலி கட்டப் போறேன்…”
இனி இதுதானே இவள் மனதில் இனிமையாக பதிய வேண்டும்.
மகிழ்வோடு தலையை ஆட்டிக் கொண்டவளை லதாவிடம் ஒப்படைத்து தன்னவளுக்கு தாலி கட்ட தயாராகி நின்றான் குரு.
கர்ணன் லதா இருவரும் அந்த ஜோடிப் பொருத்தத்தில், தங்கள் மகளின் வாழ்வு புணரமைக்கப்பட்ட மகிழ்ச்சியில் கலங்கிய கண்களோடு அவர்களையே மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
கபிலன் கொஞ்சம் சுயநலவாதிதான்… அதையும் தாண்டி தங்கையின் மீது பாசமானவனும்கூட… தங்களின் தேர்வு பொய்த்துப் போய் தங்கையின் தேர்வு சீர்பெற்றுப் போனதில் அவனுக்குள்ளும் அத்தனை நிறைவு.
ராமலிங்கமும் காமாட்சியும் உடன் பரசுராமனும் சேர்ந்து கொண்டு திருமணத்திற்கான வேலைகளை முன் நின்று செய்திருந்தனர்.
நிறைவான நெருக்கமான அன்பு கொண்டவர்கள் மட்டும் உடன் இருக்க பூஜை செய்து எடுத்து வந்து கொடுக்கப்பட்ட மஞ்சள் நிற மங்கள நாணை தனது மீனாட்சியின் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சிட்டு நிறைவாக நின்றிருந்தார் அவளது சொக்கநாதர்.
கழுத்தில் தாலி ஏறிய அந்த தருணம்…
குமரகுருவின் முழுமை பெற்ற பத்தினியாக புஷ்பாஞ்சலி மாறிய அந்த தருணம்…
தனிமைச் சூழலைத் தகர்த்தெறிந்து தன்னவளை தன் உடைமையாக்கி தன் வாழ்வின் மற்றொரு பரிமாணத்தில் பரிபூரணமாய் குரு நுழைந்திருந்த அந்த தருணம்…
இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்து நிறைவாக பார்த்துக் கொண்ட அந்த பார்வையில் நேசத்தின் விதை நித்திலமாய் மாறி அவர்களது இதயச் சிப்பிக்குள் பத்திரமாய் பதுங்கிக் கொண்டது.
அவள் உச்சி வகிட்டில் குங்குமம் இட்ட அந்த நொடியில் அவன் விரல்கள் தன்னிச்சையாக நடுங்கின. அவனது மறு கரத்தை அழுத்தமாகப் பற்றி விரல்களைக் கோர்த்து அவனது மனநிலையை சமன் செய்திருந்தாள் அவன் சரிபாதி.
தன் நண்பனை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தான் பரசுராமன்.
அருகிலேயே ஒரு உணவகத்தில் அனைவரும் காலை உணவை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.
காமாட்சியும் லதாவும் இணைந்து ஆரத்தி சுற்ற தன் கணவனின் கைப்பிடித்து உரிமையோடு தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் அஞ்சலி.
“நீ நெனச்ச மாதிரிதான் இந்த வீட்டுக்குள்ள திரும்பவும் வந்திருக்க…” என்ற லதாவிடம் ஓர் அமர்த்தலான புன்னகையை கொடுத்து தன்னவனின் அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரம் அனைவரும் அமர்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருக்க பரசுராமனுடன் பேசியபடியே தனியே வந்தான் குரு.
“பரசு… எங்க கல்யாணத்தை ப்ராப்பரா ரிஜிஸ்டர் பண்ணணும்டா… அப்புறம் அஞ்சலிக்கு விசா பாஸ்போர்ட் இதெல்லாம் தயார் பண்ணனும். இந்தியா இலங்கை அரசாங்க விதிமுறைகள் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் குழப்பம் இல்லாம அடுத்தடுத்து பண்ணனும்… அதுக்கு நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்…”
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்டா… நீ நிம்மதியா இரு… அப்போ பொண்டாட்டி பிள்ளையோட இலங்கைக்கு போற ஆசை உனக்கும் வந்துருச்சு இல்லையா..?”
“எனக்கு வந்ததோ இல்லையோ… அவளுக்கு வந்துருச்சுடா…” என்றவன் கண்களை திருப்பி காதலோடு தன் கண்மணியை பார்த்தான்.
“பரசுன்னு உனக்கான ஒரு நண்பன் தமிழ்நாட்டுல உனக்காக எப்பவும் இருப்பான்னு மறக்காம இருப்பியாடா..?”
சிரித்தபடிதான் கேட்டான்… ஆனால் அவன் குரல் கொஞ்சம் அடைத்திருந்தது.
“டேய் பைத்தியக்காரா…” என்றபடியே அவனை இடுப்போடு பிடித்துக் கொண்டான் குரு.
“நமக்குள்ள இருக்கிறது விட்டுப் போற பந்தமா..? அது என்னவோ இங்கே நான் வந்ததுல இருந்து எனக்கு நெருக்கமா வந்து நின்னவங்க எல்லாருமே என்னை கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்த்தி நிக்க வச்சவங்கதானே. இது என்னோட மாமனார் ஊருடா… இந்த பந்தம் எப்பவும் தொடரும்… எங்கே இருந்தாலும் என் நண்பனை தேடி நான் ஓடி வருவேன்… இன்னும் சொல்லப்போனா எனக்கு இங்கே ரொம்ப பிடித்தமாயிடுச்சு… நெருக்கமும் ஆயிடுச்சு… ஆனா எதிர்காலத்துல என் பிள்ளைங்க வளர்ந்து ஆளாகும்போது ஒரு அப்பாவா முழுமையான வீச்சுல அவங்களுக்கு சில பல விஷயங்கள் செய்ய முடியாம போயிடுமோன்னு கொஞ்சம் கலக்கமா இருக்குடா… நான் சட்டத்தையோ அரசாங்கத்தையோ குறையா சொல்லவே இல்ல…”
“இப்பவும் நம்ம மக்கள் நம்ம இனம் அப்படிங்கிற எண்ணத்திலதானே இலங்கை மக்கள் எந்த சூழ்நிலையில எப்போ வந்தாலும் முழுமையா அவங்களை ஏத்துக்கிட்டு அவங்களுக்கான வாழ்வாதாரத்தை சரி பண்ணி கொடுக்கிறாங்க. அண்டை நாட்டுல நம்ம மக்கள் இருக்காங்க… நம்மளை பார்த்துப்பாங்க அப்படிங்கிற நம்பிக்கையிலதானே அங்கே இருக்கிறவங்களும் இங்கே வர்றாங்க. அந்த பந்தத்திலயும் புரிதல்லயும் இப்போவரைக்கும் எந்த குறையும் இல்ல. யாரும் குறைப்பட போவதும் இல்ல… நான் சொல்ல வர்றது என் அஞ்சுவையும் சவியையும் இனி வர்ற நாட்கள்ல எந்த குறையுமே இல்லாம வச்சுக்கணும் என்டு ஆசைப்படறேன்டா. அதுக்காகத்தான் திரும்பவும் இலங்கைக்கே போகலாம் என்டு எனக்குள்ளேயும் எண்ணம் உருவாகிடுச்சு. அந்த எண்ணத்தை இன்னும் ஆழமா விதைச்சதே அஞ்சுதான். என்னைவிட அவதான்டா ரொம்ப தெளிவா சில பல முடிவுகள் எடுத்திருக்கா…”
குரு பேசியவற்றை தலையாட்டி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பரசுராமன் அதில் தெரிந்த நிதர்சனங்களை புரிந்து ஆமோதிப்பாய் புன்னகைத்தான்.
“ஆமா… அதென்னடா பேச்சுவாக்குல பிள்ளைங்கன்னு பன்மையில சொல்ற… அப்போ அடுத்து களப்பணிதானா..?”
அவன் வயிற்றில் குத்தி குறும்புச் சிரிப்புடன் கண் சிமிட்டிய நண்பனின் முதுகில் ஓங்கி அடித்து வெட்கத்தோடு சிரித்தான் குரு.
“சரிடா… உன் கல்யாண சந்தோஷத்துல என் கல்யாணத்தை மறந்துடாதே… நானும் எளிமையா பண்றதால எனக்கும் பெரிய வேலை எல்லாம் ஒன்னும் இல்ல… பத்துநாள்தான் இருக்குது மச்சி… கல்யாணத்துக்கு முதல் நாளே வந்துருடா…”
“டேய்… முதல் நாள் காலையிலேயே என் குடும்பத்தோட அங்கே இருப்பேன்…” உறுதியாக கூறியிருந்தான் குரு.
மதிய உணவிற்குப் பின் குரு மற்றும் அஞ்சலியோடு இணைந்து பணிபுரிந்த புரியும் ஆசிரியர்கள் பள்ளியின் தாளாளர் முதல்வர் என்று அனைவரும் அஞ்சலி வீட்டை நோக்கி படையெடுத்து இருந்தனர்.
“குரு சாரோட சேர்ந்து திரும்பவும் இங்கேயே வேலையை கண்டினியூ பண்ணப் போறியா அஞ்சலி..?” உடன் பணிபுரிந்த ரேவதி அஞ்சலியிடம் கேட்டாள்.
“இல்ல ரேவதி… நான் ஏற்கனவே ராமேஸ்வரத்துல வேலை செஞ்சுட்டு இருக்கேன். அங்கேயும் பெரிய கிளாசுக்குதான் எடுக்கிறேன்… சட்டுனு அப்படி எல்லாம் வர முடியாது. சனி ஞாயிறு லீவ் அப்படிங்கறதால இந்த ரெண்டு நாளும் பிரச்சனை இல்ல. ஞாயிறு நைட் திரும்ப ராமேஸ்வரம் கிளம்பிடுவேன். முழு பரீட்சை முடிஞ்சுதான் என்ன பண்ணப் போறோம்னு நாங்க ரெண்டு பேருமே முடிவு பண்ணுவோம்…”
“குரு சார் செம ஸ்மார்ட்டு டி…” என்ற ரேவதியை அஞ்சலி கண்கள் குறுக்கி பார்க்க “ஏய்… நான் வேலையை சொன்னேன்டி… நீ வேற எதுவும் நினைச்சுக்காத… நம்ம ஸ்கூலோட ரொம்ப ஒன்றிப் போயிட்டார்…ரொம்ப டேலண்ட்… திரும்பவும் அவரை ராமேஸ்வரத்துக்கு கடத்திட்டு போயிடாதே… நீயும் இங்கேயே வர்ற மாதிரியே பிளான் பண்ணிட்டு வா… சரியா..?”
சரி என்று சிரிப்போடு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள் அஞ்சலி.
கணவன் மனைவி ஆனபின் இருவருக்கும் தனிமையில் பேச பத்து நிமிடங்கள்கூட சேர்ந்ததுபோல் கிடைக்கவில்லை.
அந்த தெருவில் பழக்கவழக்கத்தில் இருந்தவர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து சென்று மாலை மயங்கி இருள் கவிழ்ந்த பின்தான் வீட்டில் ஒருவித அமைதி நிலவி இருந்தது.
லதா, காமாட்சி, ராதா மூவரும் தனியே அமர்ந்து தங்களுக்குள் கிசுகிசுப்பான குரலில் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கவனித்தபடியே பரசுராமனை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்த குருவிடம் வந்தாள் அஞ்சலி.
“அம்மு எங்கே அஞ்சு..?”
“தூங்கிட்டா… காலையில இருந்து ஒரே ஆட்டம்… நம்மளோட சேர்ந்து சீக்கிரம் வேற எழுந்துட்டாளா… அதான் அசந்து போய் படுத்துட்டா…”
தலைநிறைய வைத்திருந்த மல்லிகைப்பூ கொஞ்சமாய் வாடி, முகமும்கூட மெல்லியதாய் சோர்ந்து, பட்டுப் புடவையும், உச்சி வகிட்டில் குங்குமமும், நெஞ்சுவரை புரண்ட புதிய மஞ்சள் தாலியுமாய் தன்னருகில் நின்ற மனையாளை இதழ் விரிந்த புன்னகையுடன் ஆசையாகப் பார்த்தான் குரு.
“அமிதாப்பச்சன் ஆளை முழுங்கற மாதிரி பாக்குறாரே… என்னவாம்..?”
அவன் முகத்தை பார்க்காமல் வேறெங்கோ கண்களை வைத்தபடி குறும்பாய் கேட்டாள் அஞ்சலி.
“என் செல்லக் கிறுக்கியை நான் ரசிக்க இனி யார் என்ன தடை போட்டுட முடியும்…” என்றவன் இன்னும் அவளை நெருங்கி வந்து நின்றான்.
“உங்க மச்சினன் தனியா ஒக்காந்து இருக்கார்… போய் அவருக்கு கம்பெனி கொடுங்க…” செல்லப் பார்வையோடு அவனை ஏறிட்டபடி கூறினாள் அஞ்சலி.
“அவர் எங்கே தனியா இருக்கார்..? அவர் பொண்டாட்டி கூட வீடியோகால் பேசிட்டு இருக்கார்…” என்றவன் மென்மையாக அவள் விரல்களை பற்றினான்.
“எப்படி பொண்டாட்டி தாசனா இருக்கிறதுன்னு அவனைப் பார்த்து கத்துக்கோங்க…”
“நீ எனக்கு பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்னாடியே நான் உனக்கு தாசன் ஆயிட்டேனேடி…” என்று சிரித்தவனிடம்,
“அதெல்லாம் இருக்கட்டும்… பெரிசுக மூனும் ரொம்ப நேரமா மாத்தி மாத்தி காதை கடிச்சுட்டு இருக்குதுகளே என்ன சமாச்சாரம்னு ஏதாவது தெரியுமா..?”
தள்ளி நின்றிருந்த தங்கள் வீட்டு பெண்கள் மூவரையும் பார்த்தபடியே கேட்டாள் அஞ்சலி.
“ஆமாடி… நானும் கவனிச்சேன்… என்ன ரகசியம் பேசுறாங்க..?”
“வேற என்ன..? நம்ம சாந்தி முகூர்த்தத்தை இந்த வீட்ல நடத்தறதா..? அந்த வீட்ல நடத்துறதா..? இங்கே அலங்காரம் பண்றதா..? அங்கே அலங்காரம் பண்றதா..? இப்படி பண்ணலாமா..? அப்படி பண்ணலாமான்னு முட்டி முட்டி பெரிய ஆலோசனை நடந்துட்டு இருக்கு ஒரு மணி நேரமா…”
அஞ்சலி கூற எதுவும் பேசாமல் இதழ் கடித்தபடி ஏதோ யோசித்தவன் அவளது முகம் பார்த்தான்.
“இந்த சம்பிரதாயம் எல்லாம் நமக்கு வேணும்னு உனக்கு தோணுதாடி..?”
“புரியல வாத்தியாரே… கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க…” என்றவள் அவனை ஒரு இருக்கையில் அமர்த்தி தானும் அருகே அமர்ந்து கொண்டாள்.
“இந்த மாதிரி ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் நமக்கு வேண்டாம் அஞ்சு… நமக்குள்ள எல்லாமே இயல்பாதானே நடந்தது… நம்ம விஷயத்துல எல்லாமே அப்படியே நடக்கட்டும்டி… இந்த அலங்காரம், பால் சொம்பு, பலகாரம், பத்திக்குச்சி இதெல்லாம் வேணுமா..?”
அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடியே அவன் கேட்க இதழ்களுக்குள் புன்னகையோடு அமைதியாக அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
“சவி உன்னையோ என்னையோ விட்டுட்டு தனியா படுப்பாளா..? இப்ப நல்லா தூங்குறவ கொஞ்ச நேரத்துல எழுந்துப்பா… இப்போ தூங்கிட்டதால நைட் அவ்ளோ சீக்கிரம் நித்திரை கொள்ளவும் மாட்டா… அவளை கதற கதற மத்தவங்ககிட்ட விட்டுட்டு நாம ரெண்டு பேரும் சந்தோஷமா தனி அறையில போய் இருப்போமா..? இருக்கத்தான் முடியுமா..? நாம ரெண்டு பேரும் கணவன் மனைவியா மனசார உள்ள இணைஞ்சு ரொம்ப நாள் ஆச்சு இல்லையா..? ராமேஸ்வரத்தில நிறைய பேருக்கு ஏன் அங்கே இருக்கிறவங்க எல்லாருக்குமே நம்மள கணவன் மனைவியாத்தானே தெரியும். நாம ஏற்கனவே புருஷன் பொண்டாட்டிதான்டி… இப்ப நான் உன் கழுத்துல கட்டி இருக்கிற இந்த மஞ்சள் தாலி என்னை தனியா அடையாளப்படுத்தி காட்டப்போறது எனக்கு ஒரு தனி கர்வம்… இன்னைக்கும் என்னைக்கும்… அதுக்காக இந்த ஃபார்மாலிட்டியான விஷயம் நமக்கும் ஏன்..? நம்மளை இப்படியே இதே மாதிரியே அமைதியா விட்டுட்டா போதுமே… நம்ம வாழ்க்கையை நமக்கு தோணும்போது நாம ஆரம்பிக்கப் போறோம்… எக்ஸ்ட்ராவா மத்த விஷயங்கள் எல்லாம் இப்போ எதுக்கு..? நான் சொல்றதுல உனக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்காடி..? ஏதாவது பேசுடி கடங்காரி… மத்த நேரம் எல்லாம் டப டபன்னு தகர டப்பா மாதிரி உருட்டிக்கிட்டே இருப்ப… இப்ப நான் பேசிக்கிட்டே இருக்கேன்… நீ பேசாமலே உக்காந்திருக்க…”
அவள் பேசவே வாய்ப்பளிக்காமல் அவனே அனைத்தையும் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவள் பதில் பேசவில்லை என்பதாக கூறி அவளை முறைத்தான்.
தலைசாய்த்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் “அதான் நீயே எல்லாமே பேசிட்டியேடா… என் மனசுல நினைக்கிறதை எல்லாம் நீ யோசிக்கிற… நீ யோசிக்கிறதை எல்லாம் நான் பேசுறேன்… இனி நான் என்ன தனியா பேசணுமாம்..? பெரியவங்க அவங்க ஆசைக்கு ஏதோ பேசுறாங்க… பேசிட்டு போகட்டும்… இன்னைக்கு நைட் நீ, நான், சவி மூனு பேரும் நம்ம வீட்டுக்கு போறோம் சரியா… என் புருஷன்கூட நான் வாழ ஆரம்பிக்கிறதுக்கு இவங்க என்ன நேரம் குறிச்சு கொடுக்கிறது..? எனக்கும் என் புருஷனுக்கும் எப்ப தோணுதோ அது எந்த நேரமா இருந்தாலும் அது தானாவே நடக்கும். சரிதானடா என் தென்னைமரமே…”
மூக்கை சுருக்கி ஆசையாக கூறியவளை அந்த நொடியே அள்ளித் தூக்கி தன் மடியில் வைத்து இறுக்கி அணைத்துக் கொள்ள ஆசை பிறந்தது அவனுக்கு.
“நீ இப்படி எல்லாம் பேசினா எனக்கு இப்பவே ஆசை வந்துடும் போல இருக்கேடி கிறுக்கி…” என்றவன் யாரும் அறியாமல் அவள் விரல்களில் மென்மையாக முத்தம் பதித்திருந்தான்.
அவன் முன் நெற்றிமுடியை கோதி சரிசெய்தவள் “போய் சவி பக்கத்தில படுத்து நல்லா தூங்கி எந்திரிங்க… நான் பெருசுங்களுக்கு நடுவுல புகுந்து ஆட்டையை கலைச்சிட்டு வரேன்…” என்று கூறி எழுந்து சென்றிருந்தாள்.
காதலோடு அவளையே பார்த்திருந்தவன் சவி படுத்திருந்த அறைக்குள் நுழைந்திருந்தான்.
(தொடரும்)
error: Content is protected !!