Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 27

அத்தியாயம் : 27

அக்கா வீட்டிற்குள் வராமல் மலைப்பகுதியில் இருப்பதும், அத்தான் அறைக்குள்ளே அடைந்து கிடப்பதையும் கண்டு அபிநயா, அவன் அறை கதவைத் தட்டி நடந்ததை சொல்ல, அவன் தம்பிகள் மூவரையும் உணவருந்த சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே சென்று கதவைப் பூட்டிக் கொண்டான். பாட்டி பேசிய வார்த்தைகளின் வீரியம் அவனை நிலை கொள்ளாமல் ஆக்கியது. ஆனந்தியும் அவன் மனதைக் காயப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள, தனக்கு என்று எதுவும் இல்லாமல் மனம் உடைந்து போனான்.

“அக்கா வெளியே போனவங்க இன்னும் வரல அத்தான். அவங்களும் இன்னும் சாப்பிடாம தான் இருக்காங்க”

அவன் பதில் தராமல் படுக்கையிலேயே இருந்தான். அவள் தனது அன்பை ஏற்காமல் புறக்கணித்து, தன்னை விட்டுப் போகவும் துணிந்ததை அவனால் ஏற்க முடியவில்லை. மனம் முழுவதும் வேதனையால் துடித்தது.



Advertisement

மாலை பொழுது மங்கி இரவு ஆரம்பம் ஆகியது. மனவேதனையில் மூழ்கியிருந்த ஆனந்தி, வீசிய தென்றலின் குளுமையில் எப்போது உறங்கினாள் என்று தெரியாமல் மரம் ஒன்றின் நிழலில் சாய்ந்திருந்தாள். சுற்றியிருந்த காட்டின் அமைதியை உடைத்து, தனக்குப் பின்னால் ஏதோ ஒரு சலசலப்பும் கனமான காலடி ஓசையும் கேட்பதை உணர்ந்து திடுக்கிட்டு மெல்லக் கண்களைத் திறந்தாள்.
அதன் பிறகே இருட்டியிருப்பது தெரிந்தது. இங்கிருந்து எப்படி வீட்டிற்குச் செல்வது என்று நினைத்தபடி அவள் இருக்க, ​எதிரே கரிய நிறத்தில் உருவங்கள் அசைவதைக் கண்டதும் அவளது இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. ஒரு கூட்டம் காட்டுப் பன்றிகள் அவளிருக்கும் திசையை நோக்கி வந்து கொண்டிருந்தன. தூக்கக் கலக்கம் சட்டென விலக, பதறியடித்து எழுந்தவள் அங்கிருந்து தப்பியோட முயன்றாள்.
​அவசரத்தில் செருப்பு எங்கு கிடக்கிறது என்று கூட பார்க்காமல் ஓடியதில், தரையில் சிதறிக் கிடந்த கூர்மையான கற்களும், முட்களும் பெரும் சவாலாக அமைந்தன. அவை பாதத்தில் குத்தி ஏறி வலியைத் தர, சீராக ஓட முடியாமல் தடுமாறி தள்ளாடினாள்.
​தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற நிலையில், “ஆனந்த்!” என்று அனிச்சையாக அலறியபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள். அடுத்த நொடி, இரு வலிமையான கரங்கள் அவளைச் சுற்றிக் கொண்டு, அப்படியே மேலே தூக்கியது. அந்தத் தொடுகையும், அவனது அணைப்பின் கதகதப்பும் அவளுக்குப் பரிச்சயமானவன் அவன் தான் என்பதைச் சொல்லாமல் சொன்னது. மரண பயம் மறைந்து, அவனது மார்பில் நிம்மதியாகத் தஞ்சமடைந்தாள்.
தாமதிக்காமல் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு, அருகிலிருந்த ஒரு மரத்தின் கிளைக்குத் தாவினான் ஆனந்த். அவன் மார்பில் முகம் புதைத்து, தன் இதயத் துடிப்பு அடங்கும் வரை அவனை இறுகப் பற்றிக் கொண்டாள் ஆனந்தி. பன்றிகள் அங்கிருந்து கலைந்து சென்ற பிறகும், அவள் அவனிடமிருந்து விலகவில்லை.

​மெல்ல மரத்திலிருந்து கீழே இறங்கியவன், அவளைத் தரையில் விடாமல் கைகளிலேயே ஏந்தி வந்து வீட்டிற்குள் விட்டான். அவள் மன்னிப்பை யாசிக்கும் விழிகளுடன் ஏதோ சொல்லத் துவங்க, அவளது கண்களைக் கூட நேராகப் பார்க்காமல், ஒரு வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து மௌனமாக வெளியேறினான் ஆனந்த். அந்த மௌனம், காட்டுப் பன்றிகளை விட அவளை அதிகம் வதைத்தது.

தன் மீது இத்தனை நேசம் கொட்டுபவனைத் தொடர்ந்து காயப்படுத்தி வருகிறோமே! என்று கலங்கினாள் ஆனந்தி. இரவு உணவிற்கும் அவன் வராததால், ஒரு உறுதியான முடிவுடன் அவனது அறையை நோக்கித் தன் அடிகளை எடுத்து வைத்தாள்.

Advertisement

கதவைத் தட்டிக்கொண்டு எப்படி உள்ளே செல்வது என்பதில் சிறு தயக்கம் இருந்தது. ஆனாலும், அந்தத் தயக்கத்தைத் தள்ளிவிட்டு மெல்லக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். அங்கே அவன் படுக்கையில் கண்களை மூடி, நெற்றியில் கை வைத்தபடி படுத்திருந்தான்.

Advertisement

அவனது சோகமே உருவான அந்தத் தோற்றமும், மனதிற்குள் குமுறலாய் வெடிக்கும் உணர்வுகளும், கண்ணோரம் கசிகின்ற நீரும் அவளுக்குள் சொல்ல முடியாத அளவிற்கு வேதனையைத் தந்தன. செய்யாத தவறுக்காகத் தண்டனை அனுபவித்துவிட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அவனது நிலை, அவள் மனதில் பாசத்தையும் இரக்கத்தையும் ஒருசேரச் சுரக்கச் செய்தது. ‘நல்லவர்கள் என்று தான் நினைத்திருந்த அப்பாவும் அம்மாவும் இப்படிப்பட்டவர்களா?’ உண்மை தெரிந்த நொடியிலிருந்து அவனது உள்ளம் துடிப்பதைக் கண்டு, அவனுக்காக மருகினாள் ஆனந்தி. என்ன சொல்லி அவனைத் தேற்றுவது என்று தெரியாமல், அவனையே பார்த்தபடி நின்றாள்.

​அங்கிருந்த கைப்பேசி, அடிக்கடி ஒளிரும் திரையைக் காட்டித் தனது இருப்பைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அவன் அதை எடுக்கக்கூட முற்படவில்லை என்றால், அவனது மனம் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கும் என்று எண்ணி ஆனந்திற்காகக் கவலைப்பட்டாள். அறையைச் சுற்றிப் பார்த்தவாறே, மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துகொண்டிருந்த அந்தத் திரையின் அருகில் சென்றவள், அதில் தெரிந்த பிம்பத்தைக் கண்டு திகைத்துப் போனாள். மஞ்சள் நிறப் புடவையில் தெரிந்த அந்த உருவம்… அது அவளேதான்!

அன்றொரு நாள் சின்னக் குழந்தைகளுடன் அவள் மழலையாய் சிரித்துக்கொண்டிருந்த புகைப்படம் அது! அதைப் பார்த்தவள், ஒரு கணம் ஸ்தம்பித்து சடாரென அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது விழிகளும் அவளைத்தான் ஊடுருவிக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் துளியும் பொய்க்கலப்பில்லை. கபிலன் சொன்ன ஒவ்வொன்றும் நிதர்சனமான உண்மை என்பதை அவளது மனம் ஆழமாக உணர்ந்து கொண்டது.

Advertisement

​அவனது தீர்க்கமான பார்வை அவளை விட்டு அகலாமல் இருக்க, கையில் இருந்த கைப்பேசியை மேசையின் மீது வைத்துவிட்டு, மெல்ல அவன் அருகில் சென்றாள்.

நான்கு விழிகளும் ஒன்றை ஒன்று ஆசையுடனும் ஏக்கத்துடனும் நோக்கின. இவ்வளவு தூரம் சொல்லியும் தனது நேசத்தை ஏற்காமல் இருப்பவளிடம் எப்படி தெரியப்படுத்துவது என்று அவன் ஊமையாக இருக்க, அவனது நெற்றியில் இருந்த கைகளில் மீது மெல்ல விரல்களால் தீண்டினாள் ஆனந்தி.

அவன் கண்கள் தவிப்பில் மூழ்கின; உதடுகள் ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தோற்றன. அவளது விரல்கள் தன் கையைப் பற்றிக்கொண்டிருந்த மென்மையில், தன் பிடியை இறுக்கிக்கொண்டான் ஆனந்த்.

“சாரி! நான் உங்க மனசுல இருப்பது தெரியாம தப்பா நடந்துக்கிட்டேன். இனி நீங்க என்ன சொன்னாலும் கேட்டு அதுபோல் நடந்துக்கிறேன்”

அவன் நம்ப முடியாமல் நோக்க, “நேத்து நீங்க கேட்டதற்குச் சம்மதம் சொல்லத்தான் நான் வந்திருக்கேன்” என்று கூறி அவனது ஆச்சரியத்தை மேலும் அதிகரித்தாள்.

அவனை மெதுவாக எழுந்து அமர உதவியவள், “வீட்டுல எல்லாரும் நீங்க சாப்பிடாம இருப்பதை நினைச்சு வருத்தப்படுறாங்க. வந்து சாப்பிடுங்க!” என்று அழைப்பு விடுத்தாள்.

அவன் நடப்பவை யாவும் கனவோ என்று எண்ணியபடி இருக்க, “ப்ளீஸ் ஆனந்த்! என் மேல் உள்ள கோபத்தில் சாப்பிடாம பட்டினி கிடக்காதீங்க. இனிமேல் நான் உங்க விருப்பம் போல நடந்துக்கிறேன்” என்றாள் ஆனந்தி.

“ஆபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றியதால் ஏற்பட்ட இரக்கமா?” அவள் இல்லை என்று தலையசைக்க, “பிறகும் ஏன் என்னை விட்டுப் போக பார்த்த?” என்றான்.

எத்தனை முயன்றும் அவன் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டது. அதைத் தெரிந்து கொண்டு அவள் அவனது தோளில் சாய, அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டான் ஆனந்த்.

“நீ இல்லாம என்னால இருக்க முடியாது; உன்னைப் பாக்காம இருந்தா எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும். எங்க அப்பா அம்மா செய்த தப்புக்காகவும், உன்னை ஏதாவது செய்துடுவார்களோன்னு பயந்து தான் என்னை விட்டுப் போக பார்த்தியா?”

எப்படி சொல்லி அவன் மனதை மாற்றுவது என்று தெரியாமல் அவள் திணற, “இந்த உலகத்துல உன்னைத் தவிர எனக்குன்னு யாருமில்லை. நீயும் என்னை விட்டுப் போனால் நானும் ஒரேடியா…” என்றவனின் உதட்டை கை கொண்டு மூடினாள் ஆனந்தி. இருவருக்கும் பேச்சு வர மறுத்தது. தொண்டையை ஏதோ ஒன்று இறுக பற்றியது.

“நிஜமாவே உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? என்னைத் திருமணம் செய்துக்க உனக்குச் சம்மதம் தானா? இல்லை, என்மேல் ஏற்பட்ட பரிதாபத்தில் சொல்றியா?” என்று அப்போதும் சந்தேகத்துடன் கேட்டான் ஆனந்த்.

அவனது தோள் மீது தன் கைகளைப் போட்டு அணைத்துக் கொண்டவள், ஆனந்தின் மார்பில் உரிமையுடன் சாய்ந்துகொண்டாள். “உங்களைப் பார்த்த முதல் நாள் நீங்க பேசிய வார்த்தைகளும், அந்தச் சிரிப்பும் எனக்குள் ஒருவிதப் பயத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், தொடர்ந்து வந்த நாட்களில் உங்களை விலக்கி வைப்பதற்காகக் கடுமையைக் கையாண்டேன். இந்த ஊருக்கு வந்தபோதும் சரி, தங்கியிருந்த நாட்களிலும் சரி… இது உங்க வீடுன்னு எனக்குத் தெரியாது. சொல்லப்போனால், இந்த வீட்டின் வாரிசா நீங்க இருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன். நான் இந்த வீட்டை விட்டுப் போகும் வரை உங்களைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா, கடைசியில் வந்து நின்ன உங்களைப் பார்த்ததும் எனக்கும் அதிர்ச்சிதான். அதிலும் அன்னைக்கு கபிலனிடம் சொல்லி என்னைச் சீண்டியது போல, இப்போதும் அபிநயா முன்பு ‘ராட்சக்ஷி’ன்னு பேசிய கோபம்தான் உங்களை இன்னும் தள்ளி வைக்கக் காரணமானது” என்றாள்.

அவன் அசடு வழிந்தபடி, “அது வந்து… சும்மா ஒரு கெத்து காட்டத்தான்…” என, அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

அவளது சிரிப்பை ரசித்தவன், அவள் இதழோரம் முத்தமிட்டான்.

“பாட்டி அப்படிச் சொன்னதைக் கேட்டு உனக்குக் கோபம் வரலயா? நாளை என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விஷயம் தெரிய வர்றப்போ என்ன நடக்கும்னு உனக்குப் பயமில்லயா? இவ்வளவு பெரிய வீடு, சொத்து, வசதி இருந்தாலும் இதில் எதுவுமே எனக்குச் சொந்தமானது கிடையாது. சென்னையில் நான் பார்க்கும் வேலையும், அங்குள்ள வீடும் மட்டும்தான் எனக்குரியவை. இந்த வீட்டு வாரிசாக நீ என்னை நினைக்காம, என் உழைப்பை மட்டுமே நம்பி என்னைத் திருமணம் செய்யணும்.

சிறு வயதிலிருந்தே மாமா மீது எனக்கு மிகுந்த பாசம் இருந்தது; ஆனால் அவர் எங்களை விட்டுப் பிரிஞ்சதும், வீட்டுல அடுத்தடுத்து நடந்த பிரச்சனையும், எங்க அத்தை பிரதீபா இறந்து போனதும் அவர் மீது வச்சிருந்த பாசத்தை குறைச்சிடுச்சு… என் அம்மாவும் அவரைப் பற்றித் தவறாகவே சொல்லி வளர்த்ததால், நான் அவரைப் பற்றி நினைச்சுப் பார்த்ததே இல்லை. இப்போ பாட்டி சொன்னதைக் கேட்டு எனக்கே பெரிய அதிர்ச்சியா இருக்கு!” என்றான்.

அவன் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்கும் வரை அமைதி காத்தாள் ஆனந்தி.

“நிச்சயமா இங்கு நடப்பது எதுவுமே எனக்குத் தெரியாது ஆனந்தி! என் பெற்றோர்தான் இதுக்கு எல்லாம் காரணம்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. என்னை நீ திருமணம் செய்துகிட்டா இந்த வீட்டுல உரிமையோடு இருக்க முடியாது. சென்னையில் உள்ள வீட்டுலதான் வசிக்கணும். உனக்குத் தேவையானவை அனைத்தையும் நான் வாங்கித் தருவேன். அப்படியும் நீ என்னை மணக்கச் சம்மதிக்கிறாயா?”

அவனது பரிதவிப்பு மிகுந்த கேள்விக்கு அவள் சாந்தமாகத் தலையசைக்க, நெகிழ்ந்துப்போன ஆனந்த் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“நான் இந்த வசதியையோ, சொத்தையோ பார்த்துச் சம்மதம் சொல்லலை. உங்க நேர்மையான குணம், பெற்றோர் செய்த தவறுக்காக வருந்தும் நல்ல மனது, குடும்பத்தினர் நல்லா இருக்கணும்னு நினைக்கும் அந்த உயர்ந்த உள்ளம்… இவைதான் எனக்குப் பிடிச்சிருக்கு. எல்லாத்துக்கும் மேலாக, இவ்வளவு வசதியான வீட்டுப் பெண்ணான அபிநயாவை வேண்டாம்னு ஒதுக்கிட்டு, என்னையே விரும்பிய உங்க அன்பு எனக்குப் போதும்!”

அந்த வார்த்தைகள் அவனுக்குப் பெரும் தைரியத்தை அளித்தன; அணைப்பின் அழுத்தம் கூடியது.

“இப்போதாவது உண்ணாவிரதத்தை முடிச்சுட்டுச் சாப்பிடப் போகலாமா?”

“ம்கூம்…”

“ஏனாம்?”

“நீ வெளியே போனாலே உன் தம்பிகளைப் பார்த்ததும் என்னைக் கண்டுக்கவே மாட்டே!” என்று சிறு குழந்தையைப் போலச் சிணுங்கினான்.

அவள் சிரித்துக்கொண்டே, “ம்ம்… கல்யாணம் வரை கொஞ்சம் அடங்கி இருக்கலாம். அப்புறம் சென்னைக்குப் போன பிறகு பாதி நேரம் உங்களோடுதானே இருப்பேன்!” என்றாள் ஆனந்தி. ‘கல்யாணம்’ என்ற வார்த்தை அவனுக்குள் மகிழ்ச்சி அலையைப் பரப்பியது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், முகம் முழுவதும் முத்தங்களால் நனைத்தான்.

தன்னை முழுவதுமாகப் புரிந்துகொண்டு, வாழ்நாள் துணையாக வரப்போகும் மனைவி அமைவது ஒரு வரம். அந்த வரத்தை அவன் இறைவனிடம் பெற்றிருந்ததால்தான், குடும்பத்தில் நடந்த மொத்த அசம்பாவிதத்திற்கும் தன் பெற்றோரே காரணம் என்று தெரிந்தும், இவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை தனக்கு உரியது இல்லை என்று அறிந்தும், அவள் தன்னைத் திருமணம் செய்யச் சம்மதித்திருப்பதாக எண்ணினான். ஆனால், ஆனந்தி யார் என்று தெரிய வரும்போதுதான், அவனுக்கு இன்னும் பல உண்மைகள் புரியவரும்.

வெளியே சென்றால் எங்கே இந்தக் கனவு கலைந்துவிடுமோ என்று பயந்தவன் போல, அவளை விடாமல் தனக்குள்ளே இறுக்கி அணைத்துக்கொண்டான். இத்தனை நாட்களாக அவளிடம் பேச நினைத்ததையெல்லாம் மனம் விட்டுப் பேசினான்; அவள் மனதில் இருப்பதையும் தெரிந்துகொள்ள முயன்றான். அவளும் பசியால் இருப்பதை உணர்ந்து மெல்ல அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுதலை செய்து வெளியே அழைத்து வந்தான்.

வரவேற்பு அறையில் அனைவரும் சோகத்துடன் சோஃபாவில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இவர்கள் இருவரின் சிரித்த முகம் மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. ஓடிவந்த நகுலன், “அக்கா! உங்களைக் கல்யாணம் செய்ய சம்மதம் சொல்லிட்டாங்களா அத்தான்?” என்று ஆவலாகக் கேட்டான்.

“இல்லையே! உங்க அத்தான் சாப்பிட வராத கவலையில் தானே நீங்க எல்லாரும் இருந்தீங்க. உங்களுக்காக பாவம் பார்த்துக் கூப்பிட்டு வந்தேன்” என்று ஆனந்தி மழுப்பலாக சொல்ல, இருவரின் முகத்தையும் பார்த்த நகுலன், அத்தானின் சிரிப்பைக் கண்டு உண்மையை உணர்ந்து, “ஹேய்!” என்று சத்தமிட்டான். உடனே மற்ற இரு சகோதரர்களும், அபிநயாவும் ஓடி வந்து அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் காட்டும் உண்மையான பாசத்தை உணர்ந்து ஆனந்தின் கண்கள் பனித்தன.

இப்படிப்பட்ட அன்பான பிள்ளைகளைச் சொந்த வீட்டிலேயே சுதந்திரமாக வாழவிடாமல் செய்த தன் அப்பாவின் மீது அவனுக்குக் கோபம் வந்தது. தவறு செய்துவிட்டுப் பெரிய மனிதத் தோரணையில் வலம் வரும் அவரை, அந்த இடத்திலிருந்து கீழே இறக்க அவனது உள்ளம் துடித்தது. தன் அப்பா செய்த தவறுகள் அனைத்தையும் களைந்து, பாசத்திற்குரியவர்களுக்கு நியாயம் செய்ய உறுதி பூண்டான். எந்த ஜாதியிலிருந்து பெண் எடுத்தார் என்பதற்காக மாமாவை வீட்டை விட்டுத் துரத்தினாரோ, அதே ஜாதியைச் சேர்ந்த மக்களை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உரிமை பாராட்ட வேண்டும் என எண்ணினான். ஆனந்தியைத் திருமணம் செய்ய அவர் எத்தனை தடைகள் விதித்தாலும், அத்தனையையும் தூசாகத் தட்டிவிட்டு அவர் முன்பே வாழ்ந்து காட்ட வேண்டும் எனத் தீர்மானித்தான். இந்த வீட்டில் பிறந்த வாரிசுகளை அடிமையாக நடத்தி, தாய்மாமன் அன்புச்செல்வனின் அன்பைப் பெற விடாமல் தடுத்தவருக்குத் தக்க பதிலடி தந்து, மாமாவை மீண்டும் இதே வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்; பாட்டியின் கண்ணீரைத் துடைத்து, இனிவரும் காலத்திலாவது அவர் தன் மகனுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்று தனக்குள் சபதம் செய்துகொண்டான்.

அம்பிகாவும் ஜானகியும் அவர்கள் அருகில் வந்து, ஜோடிப் பொருத்தம் மிக அருமையாக இருப்பதாகக் கூறி வாழ்த்தினார்கள். ஆனால், அவனது அம்மா இளவரசியால் அங்கு நடப்பவற்றை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவரை ஒரு பார்வை பார்த்தவன், ஏதும் பேசாமல் ஆனந்தியையும் அழைத்துக்கொண்டு உணவருந்தச் சென்றான்.

சிறுவர்கள் அவர்களைத் தொடர்ந்து செல்ல, பெரியவர்கள் அவர்களைத் தடுக்கவில்லை. மேஜையில் உணவுகள் அணிவகுக்க, அனைவரும் மகிழ்ச்சியுடன் உண்ணத் தொடங்கினர்.

ஆனந்தியின் மனதிற்குள் சில திட்டங்கள் உருவாயின. இப்போதைக்குத் தான் யார் என்பதை அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டாம்; செல்வாவைச் சந்தித்து இங்கு நடக்கும் அனைத்தையும் பற்றிப் பேச வேண்டும். அடுத்ததாகத் தனது விசாவை நீட்டிப்பதற்கும், அமெரிக்காவை விட்டு நிரந்தரமாக இந்தியாவிலேயே குடியேறுவதற்கும் தனது வழக்கறிஞரிடம் தெரிவிக்க வேண்டும். தம்பியைச் செல்வாவின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, இதே வீட்டில் ஆனந்துடன் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தீர்மானித்தாள்.

உணவு முடிந்த பின்னரும் அனைவரும் பேசிக்கொண்டிருக்க, வீட்டிற்கு வந்திருந்த ஆண்கள் இருவரிடமும் ஜானகியும் அம்பிகாவும் நடந்த விஷயங்களை தெரியப்படுத்தினர். அவர்களும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அபிநயாவிற்கு இதில் விருப்பமில்லை எனும்போது, நேசிக்கும் இரு உள்ளங்களைப் பிரித்து வைக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.

ஆனால், ராஜேந்திரன் என்ன சொல்வாரோ என்ற பயம் மட்டும் அனைவர் மனதிலும் எஞ்சியிருந்தது. பாட்டியின் அறைக்குச் சென்று அவர் காலை தொட்டு வணங்கிய ஆனந்த், தனது அப்பாவால் ஏற்பட்ட பழிகளுக்குத் தானே விடையாக அமைவதாகக் கூறினான். விரைவில் மாமாவை அழைத்து வந்து அவருடன் இணைந்து வாழ வழி செய்வதாக உறுதி அளித்தான். தான் ஆனந்தியை விரும்புவதையும் அவளையே மணக்க ஆசைப்படுவதையும் சொன்னான். அன்று மாமாவின் வாழ்வில் விளக்கேற்ற உதவியது போல, தன் திருமணத்திற்கும் பூரண சம்மதம் தர வேண்டும் என்று வேண்டினான்.

பேரனின் மன விருப்பத்தை அறிந்ததோடு, அவன் நேசிக்கும் பெண்ணையும் தமக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஆனந்தவல்லி உடனே சம்மதித்தார். ஆனந்த் அவளைத் திருமணம் செய்துகொண்டால் கடைசிவரை இருவரும் தங்களுடனே இருப்பார்கள் என்று மகிழ்ச்சி அடைந்தார். அவனது பெற்றோரைப் பற்றிச் சொன்னதால் ஏற்பட்ட பயத்தில்தான் வீட்டை விட்டுப் போகத் துணிந்ததாக நினைத்துக்கொண்டார்.

​அதேநேரம், அவர் மனம் ஒன்று மட்டும் உறுதியாக எண்ணியது; ‘தன் மகனின் வாழ்க்கையைச் சீரழித்தது போல, பேரனின் வாழ்க்கையையும் அழிக்க நினைத்தால், அதற்கு மேல் மருமகனின் நடவடிக்கையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. மகளின் வாழ்க்கையை விடப் பேரனின் வாழ்க்கை முக்கியமானது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்.

மறுநாள், அபிநயாவை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் செல்வதாகக் கூறி, செல்வாவை அங்கே வரவழைத்திருந்தாள் ஆனந்தி. அவனிடம் வீட்டின் தற்போதைய நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தாள். முழு விபரங்களையும் கேட்டறிந்த செல்வா மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்; அவள் ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பதாகப் பாராட்டினான். அத்தை மகனுக்குத் தானே உரிய சிகிச்சை அளித்து, விரைவில் நலம் பெறச் செய்வதாக உறுதியளித்தவன், ஆனந்தி திருமணம் செய்துகொண்டு அதே வீட்டில் வசிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தான்.

இதற்கிடையில், வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்திருந்த ஆனந்த், ஆனந்தியைக் காணாமல் அவள் கோவிலுக்குச் சென்றிருப்பதை அறிந்து, தானும் காரை எடுத்துக்கொண்டு அங்கே வந்துவிட்டான். வேகவேகமாகப் படிக்கட்டுகளில் ஏறி வந்தவன், அங்கே அபிநயா நிற்பதைக் கண்டதும் கையாட்டினான். அவள் அத்தான் வருவதைக் கண்டு அதிர்ந்து போனாள்.

அவன் செல்வாவுடன் ஆனந்தி பேசுவதைப் பார்த்தால் சிக்கலாகிவிடும் என அஞ்சினாள். உடனே ஆனந்தியை அழைக்க முற்பட்டபோது, அவள் கைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

இருவருக்குள்ளும் எல்லாம் சரியாகிவிட்டாலும், குடும்ப ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்களா என்பது அவளுக்குத் தெரியவில்லை. எனவே, மீண்டும் ஒரு பிரச்சனை வந்துவிடக் கூடாது என நினைத்த அபிநயா, அங்கிருந்த பாறையில் தனது வலது கால் பெருவிரலை ஓங்கி இடித்தாள். நகம் பிளவுபட்டு ரத்தம் கொட்டியது. “அக்கா! காலில் கல் பட்டு பலமா வலிக்குது!” என்று அவள் கத்த, செல்வா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். “அச்சச்சோ! ஏன்மா கவனமா இருக்கக்கூடாதா?” என்றவன், ஆனந்தியின் தோளில் தட்டி வெளியே பார்க்கச் சொன்னான்.

அங்கே ஆனந்த் வருவதையும், அபிநயாவின் அழுகையையும் கண்டதும் அவள் பதறியடித்து ஓட, அவளுக்கு முன்னதாக வந்து அடிபட்ட இடத்தில் முதலுதவி செய்தான் செல்வா.

அவளது கண்கள் அவனை விட்டு அகல மறுத்தன. கைகள் வேதனையுடன் அவனை ஆதரவாகப் பற்றிக் கொண்டன. செல்வா அவள் முகத்தைப் பார்க்க, அதிலிருந்த ஏக்கம் அவனுக்குப் புதிராக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!