அகதிகள் முகாமிற்குள் ஆட்டோ நுழைந்தது. சவியை தூக்கிக் கொண்டு குரு கீழே இறங்க ராதாவோடு தானும் இறங்கினாள் அஞ்சலி. மருத்துவர் சொன்னது போன்றே ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் இருந்து மறுநாள் ராதாவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தாள் அஞ்சலி.
Advertisement
அங்கு வருவதற்கு அவள் அத்தனை எளிதில் சம்மதித்திருக்கவில்லை.
“என்ன பண்ணப் போற..? திரும்பவும் கடல்ல போய் குதிக்கப் போறியா..? பிரச்சனையை எதிர்கொள்ள முடியாம சாவுதான் அதுக்கு முடிவுன்னு நினைச்சா உலகத்துல எந்த மனுஷனும் உயிரோடவே இருக்க முடியாது. ஒவ்வொரு உயிரும் இந்த உலகத்துல வாழத்தான் படைக்கப்பட்டிருக்கு. அதற்கான நேரம் வரும்போது தெய்வமே அந்த உயிரை எடுத்துட்டு போயிடும். போற உயிரை யாராலும் புடிச்சு வைக்க முடியாது. அதே நேரம் நாமளே நம்ம உயிரை அழிச்சுக்கிற உரிமையும் நமக்கு கிடையாது…”
“அறிவுரைகள் சொல்றதெல்லாம் ரொம்ப ஈஸிதான் சார். அனுபவிக்கிறவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்… என்னோட நிலைமையில நீங்க இருந்திருந்தா இந்த முடிவுதான் சரின்னு உங்க மனசும் சொல்லி இருக்கும்…”
Advertisement
விரக்தியாக பேசியவளை அழுத்தமாக பார்த்து வேதனையோடு புன்னகைத்துக் கொண்டான் குரு.
“அப்படியா..? உலகத்திலேயே யாருமே அனுபவிக்காத பெரிய கஷ்டத்தை நீ அனுபவிச்சிட்டியா..? நான் கடந்து வந்த கஷ்டங்கள்ல கால் பங்கு கஷ்டம்கூட உனக்கு இல்ல… அதுக்கே சாகணும்னு முடிவு பண்ணிட்டியே…”
சொன்னவனை விழி உயர்த்தி அவள் பார்க்க அவனோ இழுத்து பெருமூச்சு விட்டான். ராதாவும் அவனைத்தான் வேதனையோடு பார்த்தார்.
“சரி விடு… உனக்கு சாகணும்னு இப்போ விதி இல்ல. அதனாலதான் நீ என் கண்ணுல பட்டுட்ட. என் அத்தை வீடு இங்கேதான் இருக்கு. அங்கே வா… எதுவா இருந்தாலும் பேசி ஒரு முடிவு பண்ணலாம்…”
அதன்பின் ராதாவும் நிறைய சமாதான வார்த்தைகள் கூறி அன்றைய நாள் அவளுடனே அவர்களும் கழிக்க தனக்காகவும் தன் மகளுக்காகவும் யாரோ இருவர் வாழ வைக்க போராடுகிறார்கள் என்ற எண்ணம் அஞ்சலிக்கும் எழாமல் இல்லை. மகளை சென்று பார்த்தவளுக்கு பெற்ற மனம் துடித்துக் கதறியது.
குரு சொன்னதைப் போல் எனக்கு பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்துவிட்டாள் இவள். எனக்கு பிறந்த ஒரே காரணத்துக்காக இவள் ஏன் தன் வாழ்வை தொலைக்க வேண்டும்..?
மகளைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்து அழுதாள்.
மறுநாள் காலை இருவரையும் டிஸ்சார்ஜ் செய்து ராதாவின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் குரு.
அவனைப் பற்றிய எந்த விபரமும் அவளுக்கு தெரியாது. தன்னுடன் பணியாற்றும் ஒரு ஆசிரியன். தன் வீட்டிற்கு அருகில் புதிதாக குடி வந்திருப்பவன். அவன் பெயர் குமரகுரு. அதை தாண்டிய எந்த ஒரு விபரமும் அவளுக்கு தெரியாது. அகதிகள் முகாமிற்குள் ஆட்டோ நுழைந்ததும்தான் குழப்பத்தோடு அவர்களைப் பார்த்தாள் அஞ்சலி.
“நீ..நீங்க… நீங்க…”
தயக்கத்தோடு பேச்சை தொடராமல் நிறுத்தியவளை மெல்லிய புன்னகையோடு ஏறிட்டான் குரு.
“ஆமா நாங்கதான்… நாங்க எல்லாருமே இலங்கை அகதிகள்…”
அவன் பதிலில் அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.
“சொந்த வீடு, நாடு, பூமி, வாழ்ந்த இடம் இது எல்லாத்தையும் தொலைச்சிட்டு அகதின்னு ஒரு பட்டத்தோட வாழற எங்களோட வலிகள் எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாரு…”
அவன் வார்த்தை மட்டும் அல்ல விழிகளும் வலிகளை சுமந்திருந்தன.
உண்மைதானே… இது எத்தனை கொடூரமான வாழ்க்கை… இதைத்தான் குறிப்பிட்டு இருப்பாரோ.
“உள்ளே வா…”
வீட்டை திறந்து கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார் ராதா.
“எவ்ளோ வருஷமா இங்க இருக்கீங்க..?”
குரு இழுத்துப் போட்ட இருக்கையில் அமர்ந்தபடியே கேட்டாள் அஞ்சலி.
“மூனு வருஷம் முடிஞ்சிடுச்சு…”
“உங்க… உங்க குடும்பம்…” தயங்கியபடியே கேட்டாள்.
“இதோ இவங்கதான்…” தன் அத்தையை சுட்டிக் காட்டியவன் “இந்த முகாமில் இருக்கிற மக்கள்தான்… இப்ப கூடுதலா இங்கே இருக்கிற தமிழ் மக்களும்தான்…”
வலியைகூட புன்னகையாக மாற்றி தெளிவாகப் பேசியவனை ஆச்சரியமாகத்தான் பார்த்தாள் அஞ்சலி.
“அத்தை… நீங்க கதைச்சிட்டு இருங்க… நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வந்துடறேன்… நீங்க எதுவும் பண்ண வேண்டாம்…”
சொன்னவன் அஞ்சலியிடம் அனுமதி கேட்காமலேயே சவியையும் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு கடைக்கு கிளம்பி இருந்தான்.
“நீங்க அவரோட அத்தையா அம்மா…?”
தன் எதிரில் அமர்ந்திருந்த ராதாவிடம் பேசத் தொடங்கி இருந்தாள் அஞ்சலி.
“ஆமாம்மா… என்னோட அண்ணன் பொடியன்தான் குமரன்…”
குமரன் என்றவுடன் சட்டென அவளுக்குள் குழப்பம் தோன்றியது. அங்கு எல்லோருமே அவனை குரு, குரு சார் என்றுதானே அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
“எங்க எல்லாருக்கும் அவன் குமரன்தான்…”
“இலங்கையில நீங்க எல்லாம் எந்த ஊரு..?”
“முல்லைதீவுதான் எங்க எல்லாருக்கும் சொந்தமான இடம். அழகுக்கும் பசுமைக்கும் குறைவே இல்லாத ஊர். வசந்தங்கள் கொட்டிக் கிடக்கும் வையக பூமின்னு சொல்லுவாங்க. அழகு இருக்கிற இடத்துல ஆபத்தும் இருக்கும்னு சொல்றது எங்க விஷயத்துல உண்மையாகிப் போச்சு. சுனாமில நிறைய அழிஞ்சு போச்சு.. அதுக்கப்புறம் போர்… அதுலயும் பாதி ஊர் அழிஞ்சது… இப்போ மூனு வருஷத்துக்கு முன்ன வந்த புயல்ல எங்க பகுதி முழுக்க கடல் கொண்டு போயிடுச்சு. மீட்புக் குழு மூலமா நாங்க எல்லாரும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். எனக்கு குழந்தைகள் இல்ல. கணவர் மட்டும்தான்… அவரையும் கடல் கொண்டு போயிடுச்சு…”
சொன்னவர் பூத்திருந்த கண்ணீரை சுண்டி விட்டுக் கொள்ள அஞ்சலியின் இதயத்தில் பாரம் ஏறிப் போனது.
“கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும்மா…”
அவரது கரத்தை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.
“அவராவது வயசானவர்… உடல் நலம் இல்லாமதான் இருந்தார். மிஞ்சிப்போனா ஒரு ரெண்டு மூனு வருஷம் அவர் ஆயுள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். அவ்வளவுதான்… ஆனா குமரன் தொலைச்ச வாழ்க்கையை எல்லாம் திருப்பி எடுக்க முடியுமா..?”
சொன்னவரின் குரல் தழுதழுத்திருக்க கண்கள் கண்ணீரை சொரிந்தன.
“எ..என்னம்மா… என்னம்மா சொல்றீங்க..?”
“படிப்புல ரொம்ப கெட்டிக்காரன் குமரன். பேராதனை பல்கலைக்கழகத்தில பட்டப்படிப்பு படிச்சு உடனடியா அங்கே இருக்கிற பாடசாலையில அவனுக்கு வேலையும் கிடைச்சது. சின்ன வயசிலேயே நல்ல சம்பளத்தில் நல்ல வேலைக்கு சேர்ந்துட்டான். அவன் படிக்கிற காலத்திலேயே என் மச்சாள் (அண்ணி) உடல்நலக் குறைவினால இறந்துட்டாங்க. இவன் ஒரே பையன்தான். எங்களை சூழ்ந்த சொந்தங்கள் எல்லாம் இவனை காட்டிதான் குழந்தை வளர்த்துவாங்க. அப்படி ஒரு நல்லொழுக்கம். தூரத்து சொந்தத்துல 26 வயசிலேயே ஒரு நல்ல பெட்டையை (பெண்ணை) பார்த்து கல்யாணம் பண்ணி வச்சோம்…”
“அவ பேரு தீபா… நல்ல பெட்டை… இவனுக்கு ஏத்த பொருத்தமான பொண்ணு… சந்தோசமா குடும்ப வாழ்க்கையை ஆரம்பிச்சு ஒரே வருஷத்துல அதுக்கு அடையாளமா ஒரு மகளும் பிறந்தா அவ பேரு சைந்தவி. புருஷனும் பொண்டாட்டியும் சவின்னுதான் அவளை கூப்பிடுவாங்க…”
பெயரைக் கேட்டவளுக்கு உடல் ஒரு நொடி நடுங்கி மீண்டது. அந்த பெயரிலும் தன் மகளின் மீதும் அவனுக்கு ஏன் அப்படி ஒரு பற்றுதல் வந்தது என்பது இந்த நொடி அவளுக்குப் புரிந்தது… நெஞ்சை ஏதோ அடைத்தது.
“சந்தோசமா வாழ்ந்தா அந்த கடவுளுக்கு பொறுக்குறது இல்லையே… குழந்தைக்கு முழுசா ரெண்டு வயசு முடிஞ்சு பிறந்தநாளுக்கு கோயிலுக்கு போயிட்டு மூனு பேரும் வண்டியில வரும்போது டிப்பர் லாரி மோதி ஆளுக்கு ஒரு பக்கமா சிதறி விழுந்துட்டாங்க…”
சொன்னவர் அந்த பழைய தாக்கத்தில் மேற்கொண்டு பேச முடியாமல் குனிந்து தலையில் கை வைத்துக் கொண்டார். பொட்டு பொட்டாக கண்ணீர் அவர் மடியில் விழுந்தது. மெல்ல நகர்ந்து அவர் அருகில் வந்து அவரது தோளை இதமாகப் பற்றினாள் அஞ்சலி.
மூக்கை உறிஞ்சிக் கொண்டு கண்களை துடைத்துக் கொண்டவர் “பச்ச மண்ணு… ரெண்டு வயசுக் குழந்தை… அந்த இடத்திலேயே தலை சிதறி இறந்து போயிட்டா… தீபாவுக்கும் தலையில நல்ல அடி… இவனுக்கும் கை கால் எல்லாம் பயங்கர காயம்… மயக்கமான நிலையிலதான் ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரியில கொண்டு போய் சேர்த்தோம். கோமாவிலேயே இருந்து ரெண்டு வாரத்தில தீபா உயிரும் போயிடுச்சு…”
“காயத்தை மட்டும் கொடுத்துட்டு இவன் உயிரை எடுத்துக்க விரும்பல அந்த கடவுள். அந்த நிலைமையில அவன் மனநிலை எப்படி இருந்திருக்கும்..? யோசிச்சு பாரு. உடல் காயமெல்லாம் ஆறுச்சு… மனக்காயம் மட்டும் ஆறவே இல்ல… பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சான்… வேலைக்கு போகல…பசி தூக்கம் இல்லாம பித்து பிடிச்சவன் மாதிரி இருந்தான்… நாங்க எல்லாரும் சுத்தி சுத்தி அவனுக்கு பாதுகாப்பா இருந்தோம். எங்கே மனசு வெறுத்து அவனும் தற்கொலை பண்ணிக்குவானோன்னு பயம்… அவனை பார்த்து கலங்கியே என் அண்ணனும் அடுத்த ஆறு மாசத்துல போய் சேர்ந்துட்டார்…”
“உயிர்ப்பே இல்லாம வெறும் ஜடமா நடமாடிக்கிட்டு இருந்தான். இந்த கஷ்டமெல்லாம் பத்தாதுன்னு கடல் பொங்கி வந்து மொத்தமா ஊரையே தண்ணியில இழுத்துட்டு போயிடுச்சு. அப்பவும்கூட எங்க உயிரை மட்டும் எடுத்துக்க அந்த கடவுளுக்கு விருப்பம் இல்ல போல… சரி அவனே விரும்புறப்ப எடுத்துட்டு போகட்டும்னு எங்களை நாங்களே தேத்திக்கிட்டுதான் இங்கே வந்தோம். எங்க வாழ்க்கை, மனசு, சிந்தனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறுச்சு. அவன் படிச்ச படிப்புக்கு வாழற காலம்வரைக்கும் உருப்படியா இருக்கணும்னு யோசிச்சுதான் இங்கே இருக்கிற பாடசாலையில வேலைக்கு சேர்ந்தான். அவனோட திறமையை பார்த்துதான் மதுரை கிளைக்கு அவங்களே விரும்பி கூப்பிட்டாங்க. அவனுக்குப் வாழ்க்கையில ஏதாவது ஒரு மாற்றம் வேணும்னு தோணுச்சு. கிளம்பி அங்கே வந்துட்டான். இப்ப சொல்லு… இந்த வயசுக்கு அவன் கடந்து வந்த கஷ்டத்தை விடத்தான் உனக்கு பெரிய கஷ்டம் வந்துடுச்சா..?”
அவள் முகத்தை பார்த்தபடியே கேட்க குருவின் கதை முழுக்க கேட்டவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு அழுகை பீறிட்டு வந்தது. தன்னையும் மீறி முகத்தை மூடி அழுதாள்.
எத்தனை வேதனைகளையும் கவலைகளையும் இதயத்தில் சுமந்து இறுக்கமாக அவன் நாட்களை நகர்த்தி இருக்கிறான்.
தன் வாழ்வின் பொக்கிஷங்களை இழந்தவனுக்கு அந்த இழப்பின் வலி இன்றுவரை எத்தகைய தாக்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்டவனைத்தான் வார்த்தையாலும் பார்வையாலும் எரித்துக் கொன்று கொண்டிருந்தேனா..?
அவள் வாழ்வில் அவள் பார்த்து கடந்து வந்த ஆண்களின்மேல் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் அவன் மீதும் திரும்பி இருந்தது. யார் மீதும் அவளுக்குத்தான் நம்பிக்கையே இல்லையே… ஆண்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள், சந்தர்ப்பவாதிகள், உடல் இச்சையை விரும்புபவர்கள், அதற்காகவே பெண்களை போகப் பொருளாக பார்ப்பவர்கள் என்ற எண்ணம் மட்டுமே அவளது ஆழ்மனதில் தங்கிப் போயிருந்தது. அதன் வெளிப்பாடுதான் அவனிடம் அவள் காட்டிய உதாசீனம்.
இன்றோ அவன் மொத்தக் கதையையும் கேட்டவளுக்கு ராதா கேட்டதைப் போல் அவன் கடந்து வந்த வலிகளைவிட தான் எதிர்கொண்ட வலிகள் அத்தனை ஒன்றும் கொடுமையானது அல்லவே என்றுதான் தோன்றியது.
இத்தனையும் கடந்தும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறானே… பிறகு நான் மட்டும் ஏன் வாழக்கூடாது..? ஏன் எதிர்த்து போராடக் கூடாது..?
இந்த நொடி இந்த எண்ணம்தான் அவள் மனதில் தோன்றியது.
பெயரில்கூட பொருந்திப் போயிருந்த தன் மகளின்மேல் அவனுக்கு இயல்பாக ஏற்பட்ட அந்த பாசம் எத்தகையது என்பது புரிந்து போனது. இழந்தவனுக்குத்தானே அந்த பொருளின் அருமையும் பெருமையும் தெரியும்.
அவள் மகளின் ரூபத்தில் அவன் மகளை பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன். அதில் கொஞ்சமே கொஞ்சம் மனது இதமாகிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கும்போது அவன்மேல் சொல்ல முடியாத ஒரு உணர்வுத் தாக்கம் எழுந்தது.
இவர்கள் பேசி முடித்திருக்க குருவும் உணவுப் பையோடு வீட்டிற்குள் நுழைந்திருந்தான்.
அவர்கள் இருவருக்கும் உணவை எடுத்து வைத்து சவிக்கு ஒரு தட்டில் பரிமாறிக் கொண்டு தன் மடியில் அமர்த்தி ஆத்மார்த்தமான புன்னகையோடு அவளுக்கு அவன் ஊட்டத் தொடங்க, உண்ணத் தோன்றாமல் அவனையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. நெஞ்சம் அவனுக்காக விம்மித் தணிந்தது.