Skip to content
Post Views: 2,943
வேர்க்க விறு விறுக்க அந்த ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டிருந்தான் ரேவந்த்.
அவன் சென்னை வந்து மூன்று நாட்கள் ஆகின்றன.
ஒரே வீட்டில் இருந்து கொண்டு தங்கையிடம் நின்று பேச கூட நேரமில்லை.
சென்னை வந்திருப்பது ராமநாதன் அங்கிள் வர சொன்னதால்.
Advertisement
இங்கு சென்னையில் இருக்கும் கார்மென்ட் ஃபேக்டரியில் முதல் யூனிட்டில் இருக்கும் ஒரு சூப்பர்வைசர், அங்கு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு ரொம்பவும் தொல்லைகள் கொடுப்பதாக
மனித வளமேம்பாட்டு அதிகாரி (HR மானேஜர்) ஹரி, அவரின் தனிப்பட்ட கவனத்துக்குக் கொண்டு போய் இருந்ததால்,
“என்னால் முடியவில்லை. நீ ஒரு டென் டேஸ் இங்க இருந்து கவர்ன் பண்ணு” என்று சொல்லி வரவழைத்து விட்டார் ராம் அங்கிள்.
Advertisement
அவனும் இங்கு வந்து ஹரியிடம் பேசிய போது தான் தெரிந்தது, அப்படி தொல்லைக் கொடுக்கும் சூப்பர்வைசர் சூர்ய குமார்,
Advertisement
ஜெயந்தின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்து அவன் ஆதரவில் இருப்பவன் என்று.
அலுத்துப் போய் விட்டிருந்தது ரேவந்திற்கு.
இது என்ன தலைமுறை தலைமுறையாக தொடரும் சாபமா?
Advertisement
இப்படி தான் சொந்தக்காரர்கள், சொந்தக்கார்களுக்கு வேண்டியவர்கள் என்று பல ஆட்களை தொழிற்சாலையில் விட்டு அங்கங்கே ஒவ்வொருவர் தலைமையில் குழுக்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என்று இருந்து கொண்டு மிகவும் தொல்லைக் கொடுத்தார்கள் ரேவந்த்தின் தாத்தாவுக்குமே!
தாத்தா சுப்ரமணியம், தனியே சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.
யாரையும் களையவும் முடியவில்லை. அப்படியே களைந்தாலும் அவர்களின் வேர் எதுவரை இருக்கிறது என்றும் அறியவும் முடியவில்லை.
இல்லை தொடர்ந்து வைத்துக் கொள்ளவும் முடியவில்லை.
குழு சண்டைகள், ஈகோ சண்டைகளால் உற்பத்தியையே பாதிக்க செய்தார்கள் அவர்கள்!
அவர் இப்படி தனியே போராடிக்கொண்டிருக்கும் போது மகன் படித்து முடித்து விட்டு வந்து பொறுப்புகளை பகிர்ந்து கொள்வான் என்றே அவர் எதிர்பார்த்திருக்க, ரேவந்தின் அப்பா சித்தார்த்துக்கோ ஐடி துறையில் விருப்பம்.
அதுவும் அமெரிக்காவில் வேலை பார்க்க விருப்பம்!
அதை தன் மனைவி சுபத்ரா அம்மாவின் கண்ணீர் கலந்த மிரட்டல்களால் தடுத்து விட்டார்.
ஆனால் சித்தார்த் அம்மாவுக்கு கட்டுப்பட்டு அமெரிக்கா செல்லவில்லை என்றாலும் தன் அப்பாவின் தொழிலிலும் பங்கு எடுக்கவில்லை.
மாறாக ஒரு பி.பி.ஓ(BPO) கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து தன் கோபத்தைக் காட்டினான்.
ஆரம்பத்தில் சென்னையில் வேலைப் பார்த்தவன், ப்ரமொசனில் திருச்சியில் புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருந்த கிளைக்கு மாற்றல் ஆனான்.
அப்போது தான் சித்தார்த் ஸ்ரீமதியை சந்தித்தது.
அவள் பெரிதும் படிப்பு இல்லாத குடும்ப பின்னணியை சேர்ந்தவள்.
அவள் வீட்டின் முக்கிய தொழில் விவசாயம்.
கூடவே ஸ்ரீரங்கம் மொத்த விலை பூ சந்தையில் அவர்களுக்கு ஒரு பெரிய மொத்தவிலை கடையொன்றும் இருந்தது.
அவள் வீட்டில் அவளே முதல் பட்டதாரி.
அவள் அண்ணன்கள் எல்லோரும் கை நாட்டுகள் இல்லை என்றாலும் இருவருமே கல்லூரிப் படிப்பு வரை போக வில்லை.
ப்ளஸ் டூ வோடு படிப்பை நிறுத்திக் கொண்டு குடும்ப தொழிலில் ஈடுபட்டார்கள்.
சித்தார்த் ஸ்ரீமதியை வேலைக்கு இன்டர்வியூ செய்த போது, எழுத்து தேர்வில் தேர்வாகி இருந்தவள், நேர்முகத் தேர்வில் கொஞ்சம் தடுமாற, அவள் குடும்ப பின்னணியை கேட்டு விட்டு, அவளுக்கு கொஞ்சம் சொல்லிக் கொடுத்து தேர்வு செய்தான்.
அவளின் அமைதியான அழகும், குணமும் பிடித்துப் போய் விட்டது சித்தார்த்துக்கு!
அவனிடம் ஏற்பட்ட நன்றி உணர்வே காதலாகி விட்டது ஸ்ரீமதிக்கு.
காதலித்தார்கள்.
எதிர்ப்பு வந்தது.
மீறி திருமணம் செய்தார்கள்.
ரேவந்தும் பிறந்து விட்ட பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீ மதி வீட்டில் ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால் சித்தார்த் வீட்டில் ஏற்றுக் கொள்ள வில்லை அப்போதும்.
ரேவந்த் அப்படியே அவன் தாய் வழி தாத்தாவை ரெங்கசாமியை மாமன்கள் செல்வமணியை சிவமணியை உரித்து வைத்து பிறந்து இருந்தான்!
அதுவே அவர்களை சித்தார்த் ஸ்ரீமதியை ஏற்றுக் கொள்ள வைத்திருந்தது.
ரேவந்த்தை அடிக்கடி ஸ்ரீரங்கத்தின் அருகே இருக்கும் அவர்கள் கிராமத்து வீட்டுக்கு தூக்கி வந்து விடுவார்கள் மாமன்கள்!
அடுத்து வந்த சில வருடங்களில் சித்தார்த் அப்பா சுப்பிரமணியம் தொழிற்சாலைகளை தனியே நிர்வகிக்க போராடி, அதிலேயே அவருக்கு மன அழுத்தம் அதிகமாகி நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார்.
இறக்கும் முன், சித்தார்த்தை ஸ்ரீமதியை அழைத்து பேசினார்.
“டேய்.. அம்மாவுக்கு வீட்டை விட்டால் வேற ஒண்ணும் தெரியாது. நானும் இன்னும் ரொம்ப காலம் இருக்க மாட்டேன்.
ஆனா அவளையும், அவளோட நம்ம பரம்பரை சொத்தான இந்த ஃபேக்டரிகளையும் தனியே விட்டுட்டு போறேன்.
இப்பவாவது நீ வந்து எடுத்துப் பார்த்துக்கப்பா.. இல்லைனா என் கட்டை வேகாது” என்று சொல்லி அழுதார்.
“நான் பார்த்துக்கிறேன்ப்பா.. நீங்க வருத்தப்படாதீங்க” என்ற சித்தார்த்தின் உறுதிமொழியைக் கேட்ட பின்னே தான் அவர் தன் இந்த உலகை விட்டு நிம்மதியாக சென்றார்.
நிர்வாகம் சித்தார்த் கைக்கு வந்தது.
வந்த பின் தான் தன் அப்பா எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்று புரிந்தது.
மிகவும் கஷ்டப்பட்டே நிர்வாகத்தை சரி செய்ய முயன்றான்.
கணவனுக்கு தொழிலில் கைக் கொடுத்தாள் ஸ்ரீமதியும்!
அவளின் பங்கு டிசைனிங் செக்சனில் கூடுதலாக!
இதில் அடுத்து வந்த சில வருடங்களில் ஸ்ரீமதி மீண்டும் கர்ப்பம்!
ரேஷ்மா பிறந்தாள்.
ரேவந்தை சுமந்த போது கிடைக்காத பிறந்த வீடு புகுந்த வீடுகளின் ஆதரவும் அன்பும் இப்போது தான் கிடைத்தது ஸ்ரீமதிக்கு.
இரண்டு குழந்தைகளையும் பராமரித்துக் கொண்டு கணவனின் தொழிலுக்கும் உதவ முடியவில்லை ஸ்ரீமதியால்.
விளைவு ஊட்டியில் போர்டிங் பள்ளியில் சேர்க்கப்பட்டான் ரேவந்த்!
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி விடுமுறைக்கு அம்மாச்சி வீடு வந்து விடுவான் ரேவந்த்!
ஒரு பட்டதாரி கூட இல்லாத அந்த கிராமத்து விவசாயப் பண்ணைக் குடும்பத்தின் வாரிசு, ஊட்டி கான்வென்டில் படிப்பது குறித்து அவன் தாத்தா பாட்டிக்கு மிகவும் பெருமை.
ஆனால் ரேவந்த் அதை ரசிப்பான் தவிர கர்வம் கொண்டதில்லை!
அவனுக்கு என்று ஒரு பெரிய நண்பர்கள் குழு அந்த கிராமத்தில் இருந்தது.
அவர்களும் எப்போதடா ரேவந்த் லீவுக்கு வருவான் என்றே காத்திருப்பார்கள்!
அவர்களுடன் சேர்ந்து வீட்டினருக்கு தெரியாமல் போய் ஆற்றில் குளிப்பது, தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, கொய்யா, மாமரத் தோப்புகளில் பழங்கள் பறித்து சாப்பிடுவது, ஓணான்களைப் பிடித்து விளையாடுவது, கபடி ,கிட்டிப்புள் விளையாடுவது என்று அசல் கிராமத்து பையனாகவே மாறி விடுவான் ரேவந்த்.
அவன் நண்பர்களும், ஸ்ரீரங்கம் வரும் வெள்ளைக்காரர்களிடம் ரேவந்த்தை ஆங்கிலத்தில் உரையாட வைத்து, எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும். எங்க கிட்டயும் ஆள் இருக்கு என்று பெருமை பீற்றிக் கொள்வார்கள்!
அவர்கள் அவனுக்கு வைத்த பட்டப்பெயர் தான் “ஊட்டி”!
ஆனால் ரேவந்திற்கு அந்த இனிய பொற்காலம் எல்லாம் அவன் பிளஸ்டூ படிக்கும் வரை தான் கிட்டியது!
அதன் பின், அவனை சித்தார்த் தொழிற்சாலைக்கு அழைத்து செல்ல துவங்கி விட்டார்.
தன் பிள்ளைகள், தனக்குப் பிறகு, தன்னைப் போல திடீரென்று நிர்வாகத்துக்கு வந்து கஷ்டப்பட்டு விடக் கூடாது என்று ரேவந்த் ரேஷ்மா இருவரையுமே தொழில் கற்றுக் கொள்ள பழக்கத் தொடங்கி விட்டார்!
விதியும் ஏதோ முன் கூட்டியே அவருக்கு அறிவுறுத்தியது போல!
அதனால் ரேவந்த் தன் தந்தையுடனே செமஸ்டர் லீவில் முழுவதுமே ஃபேக்டரியே கதியென்று கிடந்தான்.
அவனுக்கு பேசன்(Passion)ப்ரோபெசன்(Profession)ஹாபி என்று எல்லாமே அவன் பிசினெஸ் தான் என்று ஆகி விட்டது நாளடைவில்!
ரேஷ்மா அவள் அம்மாவோடு டிசைனிங் ஏரியாவில் கவனம் செலுத்தினாள்!
அவன் தாய்வழி தாத்தா பாட்டியும் அடுத்து வந்த சில வருடங்களில் இறந்து போய் விட்டார்கள்!
அதற்கு சென்று வந்த பின், கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் போது மட்டும் ஒரே ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று வந்தான்!
அவன் அம்மாச்சி வீட்டில் ஒரு சொத்து விற்பனைக்கு அவன் அம்மா ஸ்ரீமதியும் கையெழுத்து போட வேண்டியிருந்ததால்!
அதன் பின், இதோ இன்று வரை போக முடியவில்லை!
அவன் பெற்றோர் இறப்புக்கு வந்த மாமன்கள், ராம் அங்கிளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி பழைய மாதிரி நெருங்கி வர முடியவில்லை!
ஒவ்வொரு முறையும் தாங்கள் இன்னார் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வந்து தங்கை பிள்ளைகளை பார்ப்பது அவர்களுக்கு ஒரு வித அவமானத்தை ஏற்படுத்தி விட,
அப்படி போயும் கூட சில சமயங்களில் ரேவந்த்தை நேரில் சந்திக்க முடியாமலும் போய் விட, பின் வருவதையே நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.
அப்புறம் சில காலம் போனில் அழைத்து பேசியவர்கள், ரேவந்த்தின் அவசரம், நேரமின்மைப் பற்றி தெரியாமல், வெள்ளந்தியாக வள வளவென்று பேசிக் கொண்டு இருந்ததால், ரேவந்தே அவர்களின் அழைப்பை ஏற்காமல் விட்டு விட தொடங்கினான்.
பின் ஒரு நாள் சாகவாசமாக பேசி அவர்களை சமாதானம் செய்து கொள்ளலாம் என்று!
ஆனால் அவனுக்கு தங்கையிடம் உட்கார்ந்து பேசவே நேரம் இல்லை!
எங்கே மற்றவர்களிடம் பேசுவது?
அப்படியே இருந்த ஒரே ஒரு நல்ல உறவும் துண்டித்துப் போய் விட்டது!
அப்பா வழி சொந்தக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் மீண்டும் பழைய நிலைமைக்கு நிர்வாகத்தை கொண்டு வந்து விட்டு விடும் அபாயம் இருப்பதால்,
ராமநாதன் வெட்டி விட்டு துரத்தி விட்ட உறவுகளை அவன் மீண்டும் நாடவே இல்லை!
சுபத்ரா பாட்டியின் மறைவுக்கு பின்னே யாருமே இல்லாத நிலை இப்போது!
இனி, ரேஷ்மாவின் கல்யாணத்தின் போது தான் மாமன்களை சமாதானம் பேசி அழைத்து வர வேண்டும்!
அதற்கு முதலில் ரேஷ்மாவுக்கு வரன் பார்க்க வேண்டும்!
என் மனதில் யுவி இருக்கிறான்.
அவன் பெற்றோர் மிகவும் நல்லவர்கள்! ரேஷ்மாவை மகள் போல நடத்துவார்கள்
அவளின் விருப்பத்தை, அவளின் தொழிலைப் பற்றி புரிதல் உள்ளவர்கள்!
நல்ல மன முதிர்ச்சி உடையவர்கள்!
ராம் அங்கிளின் மனைவி பார்வதி ஆண்ட்டி போல கிடையாது!
ராமநாதன் அங்கிளுக்கு இப்படி ஒரு மனமுதிர்ச்சி இல்லாத மனைவி, ஒழுக்கம் இல்லாத மகன் ஜெயந்த்!
பலமுறை , எதையுமே யோசிக்காமல் சட்டென்று ரேஷ்மாவிற்கும் அவனுக்கும் யாரும் இல்லை என்று அவர்கள் மனம் நோக அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
ராம் அங்கிளின் உதவிகளை அடிக்கடி சொல்லி வேறு காண்பிப்பார்.
“ஜெயந்த் அப்பா மட்டுமில்லே.. உங்களை எல்லாம் உங்க சொந்தக்காரங்க முழுங்கி ஏப்பம் விட்டுட்டு போய் இருப்பாங்க” என்று!
அது உண்மை தான் என்றாலும் எத்தனை முறை இதை கேட்பது!
மேலும் அவருக்கு ஜெயந்திற்கு ரேஷ்மாவைக் கட்ட வேண்டும் என்று விருப்பம்!
காரணம் அவளின் பங்கு சொத்துக்கள்!
ஆனால், ஏதோ பெரிய மனது வைத்து, மீடியாவில் இருக்கும் ஒரு பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்டு தியாகம் பண்ணப் போவது போல பேச்சு இருக்கும்!
ஜெயந்திற்கும் கேரக்டர் சரியில்லை! சகவாசங்கள் சரியில்லை!
அங்கிள், நம்மைப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு அவரின் சொந்த மகனை கவனியாமல் விட்டு விட்டாரோ என்ற குற்ற உணர்வு மட்டுமே ரேவந்த்,
ரேஷ்மா இருவரையும் அவனிடம் பொறுத்துப் போக வைத்தது!
ஆனால் அங்கிளுக்கு ஒரு நாளும் ரேஷ்மாவை அவர் மருமகளாக்கி கொள்ள விருப்பம் இல்லை என்று தெரிந்து கொஞ்சம் நிம்மதி!
சீக்கிரம் யுவியோடு அவளைப் பேச வைத்து கல்யாணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும்.
அப்புறம் ஸ்ரீரங்கம் சென்று மாமாக்களைப் பார்த்து, கல்யாண ஏற்பாடுகளை அவர்கள் தலைமையில் பொறுப்பில் நடத்த வேண்டும்!
ஸ்ரீரங்கம் என்று நினைத்தவுடன் அவனுக்கு அவன் அம்மாச்சி வீட்டோடு கூடவே அவளின் நினைவும்!
அவள் இப்போதும் அங்கு இருப்பாளா?
அவளை கடைசியாக பார்த்தது, அவன் அம்மாவோடு சொத்து கிரயம் செய்து கொடுக்க போன போது!
அப்போது பஸ்ஸில் நடந்தவை!
அவனால் அவளுக்கு ஏற்பட்ட அந்த காயம்!
அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டு, தன்னை கீழே விழுந்து விடாமல் அவள் பார்த்துக் கொண்டது!
அப்போதும் அவள் கண்ணில் இருந்த அந்த நேசப்பார்வை!
அப்போது மட்டுமா, சின்ன வயதில் இருந்தே அவனை காணும் போதெல்லாம் அந்த பார்வையை அவன் உணர்ந்து இருக்கிறான்!
இன்னும் மறக்கவில்லை அவன்!
இப்போதும் அவள் அங்கு இருப்பாளா?
ம்ஹும்.. சான்சே இல்லை! அவளுக்கு எல்லாம் இந்நேரம் கல்யாணம் ஆகி பிள்ளையை ஸ்கூலில் சேர்த்து இருந்தாலும் இருப்பா!
ஆனா. எனக்கு இன்னும் அவள் நினைவு இருக்கே!
இப்போதும் யாராவது பெண் பார்க்கட்டும்மா என்று கேட்டு வந்தால், அவன் மனதில் முதலில் நினைவு வருவது அவள் முகம் தான்!
இப்படியாக பல்வேறு சிந்தனைகளோடு ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தவனை கலைத்தது ரேஷ்மாவின் குரல்!
“ரேவந்த்.. உனக்கும் கிரீன் டீ வேணுமா?”
“ம்ம். போடு” என்று சொல்லியபடி வியர்வைத் துடைத்துக் கொண்டு இறங்கியவன் பாத்ரூம் நோக்கி செல்ல,
“ப்ரேக்பாஸ்ட் ப்ரெட் ஆம்லேட் போட்டு தரட்டா?” என்றாள் தங்கை.
“இல்ல.. வந்து சொல்றேன்” என்றவன் குளித்து விட்டே வந்தான்.
வந்தவன்,
“இன்னிக்கு என்னமோ எனக்கு பொங்கல் வடை சாம்பார் இட்லி சாப்பிடனும்னு தோணுது!”
“நான் வேணுமின்னா ஆர்டர் பண்ணட்டா?”
“இல்ல.. ஆபிஸ் போறப்ப வழியில பார்த்துக்குறேன்”. என்றவாறு டீக்கப்புடன் சோபாவில் அமர்ந்தவன் டிவியைப் போட்டான்.
“லஞ்ச்க்கு என் கூட சாப்பிட வர்றியா? நல்ல ஹோம் மேட் புட் தான் வர வைப்பாங்க மதுரா.
நீ இன்னும் என் ஆபிஸ் வரவே இல்லை!
இனாகுரேசன் அப்போ வந்தது தான்! அதுக்கப்பறம் இன்னும் வரவே இல்லை!
வந்து பாரு என் ஆபிஸ் இப்போ எப்படி இருக்குன்னு!”
“எப்படி இருக்கும்.. அதான் அடியாள் வச்சு இருக்கியாமே?”
“யார் நீ மதுரா மேம சொல்றியா? நீ நினைக்கிற மாதிரி இல்லடா அவங்க!”
“என்ன நான் நினைக்கிற மாதிரி இல்ல?
ஜெயந்த் பார்க்க ஒருத்தனை கன்னத்தில் அடிச்சுருக்கா! அதுக்கு என்ன சொல்ற?”
“ம்.. ச்ச்.. அது வேற டீலிங் உனக்கு தெரியாது!
யாராச்சும் அவங்க மேல கம்ளைன்ட் பண்ணியிருக்காங்களா இது வர?
ஏன்..அன்னிக்கு உன் பிரன்ட் யுவி கூட வந்தாரு. அவர் ஏதாச்சும் தப்பா சொன்னாரா அவங்கள பத்தி!”
“எங்க அவன் போன் பண்ணிப்போ நான் மீட்டிங்கில் இருந்தேன். நான் பண்ணினப்போ அவன் மீட்டிங்கில் இருந்தான்!
அப்படியே நாங்க பேசிகிட்டாலும் அவளை பத்தி பேசற அளவு அவ ஒர்த் இல்லை!”
“ரேவந்த்.. அவங்கள பத்தி தெரியாம, நீ இப்படி பேசுறது சரியில்ல..”
“அய்யோ அம்மாடி சாமி விடு.. உன் பிஏ ரொம்ப நல்லவ.. ஒத்துக்குறேன்!
நாம சேர்ந்து இருக்கிறதே கொஞ்ச நேரம் தான்!
அதில ஏன் தேவையில்லாம பேசி சண்டைப் போடணும்! விடுடி..” என்று சட்டென்று சமாதானக் கொடியை பறக்க விட்டான் ரேவந்த்!
“இல்லடா.. அந்த ஜெயந்த் சொன்னான்னு எல்லாம் நீ அவங்கள தப்பா நினைக்காதே!” என்று சொல்லி அவன் அருகில் உட்கார்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் ரேஷ்மா.
“வா.. நாம ரெண்டு பேரும் வடிவேல் காமெடி பார்க்கலாம்!”
“ம்ம். சரி.. நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர் இல்லை அவரோட காமெடி எல்லாம்!”
“ம்ம்” என்றவன்,
“ நீ ஸ்ட்ரெஸ் பஸ்டர்ன்னு சொன்னவுடனே தான் எனக்கு நினைவு வருது..
நான் மூணு நாளா நம்ம கபிலனோட ஸ்போர்ஸ் க்ளபில் ஈவனிங் ஒரு ஒன்னவர் பிக்கிள் பால்(Pickle Ball) விளையாடிட்டு இருக்கேன்!”
“பிக்கிள் பாலா என்ன அது?”
“அது டென்னிஸ், பாட்மிண்டன் அப்புறம் டேபிள் டென்னிஸ் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான கேம்!
சும்மா ப்ரண்ட்லியா ஆடுறப்போ நல்லா ஸ்ட்ரெஸ் குறையும்!”
ரேவந்த் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே டிவியில் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வடிவேல் சைக்கிள் சொல்லிக் கொடுக்கும் காட்சி வந்தது!
அதைப் பார்த்தவுடன் ரேவந்த் சிரிக்க தொடங்கினான்.
கண்ணில் நீர் வரும்வரை!
ரேஷ்மா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்
“டேய்.. என்னடா…இப்படி சிரிக்குற? வேற எதோடும் இத ரிலேட் பண்ணிட்டு சிரிக்கிறியா?”
“..ம்ம்.. ஆமா..” என்று இடையில் கொஞ்சம் சிரிப்பை நிறுத்தியபடி சொன்னான்.
“நான் லக்கிய பத்தி நினச்சுட்டேன். அவ என் கிட்ட இப்படி தான் பண்ணினா!”
“லக்கியா? யார் அது!”
“அவளா? அவ தான் என்னோட பிக்கில்பால் கோச்.
கபிலோட பிரன்ட்ன்னு ஆரம்பத்தில் கொஞ்சம் மரியாதை தான் பேசினா..
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அது தேஞ்சு.. இதோ இதில் வடிவேல் பேசுற மாதிரி பேச ஆரம்பிச்சுட்டா.
எனக்கு ஒரே ஷாக்.
அப்புறம் அவ கிட்ட கொஞ்ச நேரம் பேசின உடனே எனக்கு அவளை ரொம்ப பிடிச்சு போய்டுச்சு!
அவள பேச சொல்லி அப்படியே வாழ்நாள் பூராவும் கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு!
சரியான வாயாடி.. அப்புறம் அவ பேசுற அந்த ஜென் ஸி(Gen Z) டெர்ம்ஸ் எல்லாம் நாம புரிஞ்சுக்க கொஞ்ச நாள் ஆகும்!
லக்கி ஒரு ஏஞ்சல்!”
“என்னடா.. எனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிட்டு தான் நீ பண்ணிக்குவன்னு சொல்லிட்டு இருந்த?
இப்ப சார் பேச்சை பார்த்தால், எனக்கு அண்ணியார் வந்து தான் கல்யாணம் பண்ணி வைக்கணும் போலயே!”
“ஏய்.. சீ.. அவ குட்டிப் பொண்ணுடி.. ஆனா க்யுட்டி பொண்ணு! குட்டி ஏஞ்சல்!
அவ வயசு என்ன? என்னோட வயசு என்ன? உனக்கு அப்புறம் அம்மாவுக்கு இன்னொரு பொண்ணு பொறந்து இருந்தா நான் எப்படி கொஞ்சுவேனோ அப்படி தான் நான் அவ கிட்ட ஃபீல் பண்றேன்!
அதெல்லாம் உனக்கு புரியாது. உனக்கு அந்த மதுரா பேச்சு தான் இனிக்கும்! ஒரு நாள் இருக்கு அவளுக்கு!”
அய்யோ திரும்பவும் அவங்கள திட்ட ஆரம்பிச்சுட்டியா? நீ அவங்கள பார்த்து பேசினா தான் அவங்கள பத்தி முழுசா புரியும்!
பாவம் ரேஷ்மா.. ரேவந்த் மதுரா சந்திப்பே அடியில் தான் ஆரம்பிக்க போவது அறியாமல் சொன்னாள்!
error: Content is protected !!