Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் – 14

“ம்..உ…ம்.உ…” என்ற முனங்கல் சத்தம் கேட்டு சொர்ணம்‌ தலையை திருப்பி திருப்பி அக்கம் பக்கம் பார்த்தார். ஆனால் யாருமே அவரின் பார்வை வளையத்திற்குள் விழவில்லை. பிரம்மை என எண்ணிக்கொண்டு திரும்ப, மீண்டும் அதே சத்தம்… அது அழுகுரல்…

“அட யாரு ம்மா அது? புருஷெங்கூட சண்டன்னா வீட்டுக்குள்ள போய் அழுவ வேண்டியது தான. ஏன் பேய் மாதிரி ராத்திரி நேரத்தில அடுத்தாளுக்கு கேக்குற மாதிரி அழுகுற.. அமைதியா அழும்மா… யாருக்கும் கேக்காம… ” என மிரட்டியவருக்கு யார் என்று தெரியாது.



Advertisement

ஆனால் சத்தம் நின்றபாடு இல்லை.. “ஏய்.. எவடி அவ… முன்னாடி வாடி… ஊ.. ஊ… நாய் மாதிரி ஊளையிட்டுட்டு.. ” எனக் கத்த, பாரதி மாடி படிக்கட்டின் அடியில் இருந்து வெளிப்பட்டாள்.‌

Advertisement

“நீ தானா… நாங்கூட மூனாது மாடில இருக்கே அதுன்னு நினைச்சேன்.. நேத்து பூராம் அந்த பொம்பள இப்படித்தா நேரம் காலம் பாக்காம கதவ தட்டி ‘எம்புருஷெ என்னை அடிக்கிறான். என்னன்னு வந்து கேளுங்க’ன்னு ஒரே அழுவ. அதுகளால ராத்தூக்கமே இல்ல. அதுகளுக்கு பஞ்சாயத்து பண்ணி அனுப்புறதுக்குள்ள ஐய்யோன்னு ஆகிடுச்சி.

Advertisement

இன்னைக்கும் அப்படித்தா அழுவுதுன்னு நினைச்சிட்டேன். ஆமா நீ என்னாத்துக்கு இங்க உக்காந்திருக்க? ஏன் அழுவுற? அம்ம அடிச்சிட்டாளா? இருக்காதே.. அந்த பிள்ளப்பூச்சி வாயையே திறக்காது. அடிக்கவா செய்யப்போது.” எனப் பேசிக் கொண்டே போக, பாரதி அழுகையை நிறுத்தவில்லை.

Advertisement

“அடச்சீ நிறுத்து… காது வலிக்கிது.. ” என்க, பாரதி சோர்வுடன் படிக்கட்டில் ஏறினாள்.

“ஏய்… நான் சொன்ன டீக்கடைக்கி வேலைக்கி போனியா இல்லையா. “

“போனேன்… ஆனா இனி போக மாட்டேன்…”

“ஏன்?”

“ஏன்னா… ஏன்னா… அங்க வர்ற ஆளுங்க.. என்ட்ட.. என்ட்ட..” என அழ,

“அடச்சீ சொல்லித் தொலஞ்சிட்டு ஒப்பேரி வை.”

” தப்பு தப்பா பேசுறாங்க.. என்னையும் வான்னு தனியா கூப்பிடுறாங்க. இங்க இங்கல்லாம் தொட்டு தொட்டு பேசுறாங்க..” என உடலின் அங்கங்களைக் சுட்டிக்காட்டி தீய தொடுகை என சொல்ல,

“உனக்கு பிடிச்சிருக்கா.. ” என்றார் சொர்ணம்.

“என்ன.”

“அவெ தொட்டது உனக்கு பிடிச்சிருந்ததா ன்னு கேட்டேன்.. “

“ச்சீ.. சாக்கடைக்குள்ள ஊறுர புழு எம்மேல ஏறின மாதிரி இருந்தது.. உவ்வா… “

“நிஜ புழுவா இருந்தா என்ன செஞ்சிருப்ப… “

“தட்டி விட்டு ஏறி மிதிச்சிருப்பேன்.”

“அப்ப அத செஞ்சிருக்க வேண்டியது தான.. ” என்க, பாரதி முழித்தாள்.

“இதோ பாரு… ஆம்பளைங்க மொத்தம் ரெண்டே ரெண்டு ரகம் தான். ஒன்னு நாய் மாதிரி எவ கிடப்பான்னு நாக்க தொங்கப் போட்டுட்டே எல்லார் மேலயும் கை வைக்கிறவெ. இன்னொன்னு பொம்பளைங்க சந்தர்பத்த யூஸ் பண்ணி படுக்க கூப்பிடுறவெ. முத சொன்னவனுக்கும் ரெண்டாவதா சொன்னவனுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல. ரெண்டுக்குமே கழுத்துக்கு கீழ இருக்குற உடம்பு தான் முக்கியம்.

நீ செத்தா கூட உங்கிட்ட கிடைக்கி சுகத்த மட்டும் தான் பாப்பானுங்க. அனுபவிப்பானுங்க. இந்த ரெண்டுக்குள்ளையும் அடங்காத ஆம்பளைங்க ரொம்ப கம்மி. அவனுங்கல்லாம் வைக்க போர்க்குள்ள விழுந்த ஊசி மாதிரி. கண்ணுக்கு சிக்காம இருப்பானுங்க.

உனக்கு அவ தொடுறது பிடிச்சிருந்தா அனுபவிச்சிக்க. அவெங்கிட்ட இருந்து நிறைய காசு கிடைக்கும். நீ என்ன சொன்னாலும் சரின்னு பல்ல காட்டிட்டு கேப்பானுங்க. ” என்க, அருவெருப்பில் பாரதியின் முகம் சுருங்கியது.

“எனக்கு அது பிடிக்கல… அம்மா சின்ன வயசுல சொல்லித்தா என்ன வளத்தாங்க. இங்க இங்கல்லாம் யாரையும் தொடவிடக்கூடாதுன்னு.. எனக்கு வேண்டாம்.. நான் அந்த மாதிரி ஆம்பளைங்க இருக்குற இடத்துல வேலைக்கி போக விரும்பல. ” எனச் சொல்லி அழ,

“நீ வேல செய்யாம உனக்கு காசு கொண்டாந்து குடுக்க அப்பனா இருக்கான்!!.. அந்த தறுதல உங்காத்தாலுக்கு மட்டும் புருஷனா இருந்திருந்தா இன்னேரம் உம்மேல கைவைக்க எவனாவது வருவானா. இல்ல உங்காத்தாவும் தங்கச்சிய தூக்கிட்டு செக்கு மாடு மாதிரி அடுப்பு மேட்டுல கிடப்பாளா! ம்.. அப்பெ சரியில்லன்னா அடுத்தவெ தொடத்தா செய்வான்.

ஆனா அத மறுக்குற உரிம உனக்கு இருக்கு. உன்னால அத தடுக்கு முடியும். உ விருப்பம் இல்லாம உன்ன யாரும் நெருங்க முடியாது. நெருங்க விடவும் கூடாது. நீ நெருப்பா இருந்து உன்ன தேடி இதம் காணலாம்னு பறந்து வர்ற விட்டில் பூச்சிகள பொசுக்கி எரிக்கணும். “

“ஆனா எப்படி… என்னை விட பெரிய ஆளுங்க. அவங்கள எதுக்க எங்கிட்ட பலம் இல்லையே.. “

“ஏன் இல்ல.. இந்த ரெண்டு கை எதுக்கு இருக்கு… டீ ஆத்த மட்டுமா இருக்கு. இந்த தொண்டைய சோத்த உள்ள இறக்க மட்டுமா வச்சிருக்க. உன்னோட பார்வையால உன்ன சுத்து வளையம் போடு. அது உன்ன நெருங்கி வர்றவனுக்கு பயத்த தரணும்.. நீ போட்டு வைச்சிருக்குற எல்லைக்குள்ள எவெ கால வைக்க நினச்சாலும் உன்னோட குரலுக்கு அவெ அஞ்சணும். அது எல்லாத்தையும் மீறி உம்மேல கைய வைக்க நெருங்குனா அவெ மூஞ்ச உடைக்கவும், முக்கியமானத அறுத்து எறியவும் உங்கை தயாரா இருக்கணும்.. புரியுதா…

ஆம்பள சுகத்துக்கு நீ அடங்கி போனா உன்ன வேசியா மாத்தி ஊருக்கே விருந்தாகிடுவானுங்க. கூடாது… நாம எப்படி இருக்கணும்னு நாம தான் முடிவு பண்ணணும்.. நாம தான் வாழ்ந்தும் காட்டணும்.. எவனோட நிழலும் நமக்கு தேவையில்லங்கிற திமிரோட வாழணும்.

அப்படி இருந்தா உனக்கு பஜாரி ரவுடின்னு நிறைய பேரு கிடைக்கும். என்னை கேட்டா அது ஆம்பளைங்க குடுக்குற வேசி பட்டத்த விட மேலான பட்டம்னு சொல்லுவேன். என்ன புரிஞ்சதா! அமைதியா இருந்தா அடங்கி தா போகணும்.. ” என்று சொல்லி ஏற்றி விட, பாரதிக்கு ஒரு புது தெம்பு பிறந்தது.

மறுநாள் காலையில் வழக்கம் போல் டீக்கடைக்கு செல்ல, “இன்னா பாப்பா.. கண்ணு ரெண்டும் கேவக்கா கணக்கா சிவந்து நிக்கிது. ராத்திரி மாமெ நினப்புலயே இருந்தியா. ஒரு ஜாட காட்டிருக்க கூடாது. பின்னாடியே வந்திருப்பேன்ல… ஹி…” என வழிந்தவனுக்கு வயது நிச்சயம் நாற்பது இருக்கும்.

எப்பொழுதும் அது போன்ற பேச்சுக்கள் காதில் விழுந்தால் காது கேளாதது போல் விலகிச் செல்வாள். அது அந்த கயவர்களுக்கு ஓடும் மானை வேட்டையாடும் சுவாரஸ்யத்தை தரும். பின்னாலேயே சென்று வேண்டும் என்றே பேசி உரசுவர்.

இன்று சொர்ணம் ஆற்றிய சொற்பொழிவு வேலை செய்தது. தன் பார்வைத் தீயால் தன் எதிரில் நின்றவனை முறைத்து பார்க்க,

” இன்னா பாப்பா வரட்டா…”

“என்ன வேணும்…” எனக் குரல் உயர்த்தினாள்.

“ரெண்டு மசாலா வட… கூடவே வாழக்கா பஜ்ஜி இருந்தாலும் உங்கையால போட்டு எடுத்து வை.. ” என்று இளித்தான்.

அவள் காகிதத்தில் அவன் கேட்டதை எடுத்து வைத்து கையில் தராமல் மேஜை மீது வைத்து விட்டு வேலையை கவனித்தாள்.

“பாப்பா காசு…” என நூறு ரூபாய் தாளை நீட்டினான் அவன். அதை வாங்கும் சிறுமியின் கரத்தை இறுக்கி பிடித்து நசுக்கி, தன் கரை விழுந்த பற்களை காட்டி இளிக்க,

“யோவ்… விடுய்யா.. ” என ஆவேசமாக உருவிக் கொண்டவளை நெருங்க வந்தான் அவன்.

“இப்ப உனக்கு என்னய்யா வேணும். வந்தியா வடைய வாங்கி தின்னியா. போய்க்கின்னே இருக்கணேம்.. அத விட்டுட்டு பல்லானத பேசிட்டு கைய பிடிச்சிட்டு நின்ன. சுடுதண்ணிய தூக்கி மூஞ்சில ஊத்திடுவேன்.” எனக் கத்த, நான்கைந்து தலைகள் திரும்பி பார்த்துவிட்டு சென்றன. சில தலைகள் அங்கு நடப்பதை, நடு வீதியில் போடும் கலைக்‌ கூத்து நாடகமாக எண்ணி வேடிக்கைப் பார்க்க, அந்த ஆசாமிக்கு அசிங்கமாகிப் போயிற்று.

“ஏய் என்னடி வாய் ரொம்ப தா பேசுற. ஆம்பள இல்லாத வீட்டாச்சே ஒத்தாசைக்கி வரலாம்னு பேசுனா இந்த மொற மொறைக்கிற. பெரிய கண்ணகி பரம்பரையோ. இந்த குரலை உசத்துற வேலை எல்லாம் உங்கிட்ட வச்சிக்க கூடாது.. எவெனுக்கோ பிள்ளப் பொத்தான்னு சொல்லி தான் உங்கப்பெ உங்காத்தாள விட்டுட்டு போனான். அவெங்கிட்ட வச்சிக்க உ ஜாம்பத்த..” எனச் சத்தமாக பேசிவன்,

பின் மெதுவான குரலில்.. ” ஆமா உங்காத்தா பிள்ள பெத்து குடுக்குறத சேவையா செய்யுறாளாமே. எனக்கும் பெத்து குடுக்க சொல்லு. இல்ல நீயே குடுத்தாலும் சரிதா. இன்னைக்கி ராத்திரி ரெடியா..ஆ..ஆ….ஆ… ” என அலறல் சத்தம் மட்டுமே கேட்டது.

காரணம் நிஜமாகவே கொதிக்கும் நீரைத் தூக்கி அவனின் முகத்தில் ஊற்றி விட்டாள் பாரதி.

” இனி என்னாண்ட வம்பு பேசுன.. அடுத்து எண்ண சட்டிக்குள்ள தா கிடப்ப. வெட்கமே இல்லமா வான்னு கூப்பிடுற. உ பொண்டாட்டி போதலயா உனக்கு. உனக்கு புள்ள தான வேணும். இன்னைக்கி நைட் உம்பொண்டாட்டிய எங்கூட அனுப்பி வை. அடுத்த பத்து மாசத்துல உன்ன நைனா கூப்பிட புள்ள வந்திடும். என்ன அனுப்புறியா? ” என விழி உருட்டு ஆக்ரோசமாக நின்றவளை வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது மற்றவர்களால்.

“இனி எவனாது என்னாட்ட வந்து வழிஞ்சின்னு நின்னா… அவனுக்கு அது தா கடசி நாளு.. ” என்றவள் துணிச்சலுடன் நடந்து சென்றாள் பாரதி.

அவளின் நடையில் ஒரு கம்பீரம் இருந்தது. எத்தனை நாளைக்கு தான் இவனைப் போன்ற கயவர்களுக்கு பயந்து ஒடுங்கி நடப்பது. இனி கூடாது என்ற நிமிர்வுடன் தான் நடந்து சென்றாள். இப்போது வரை அப்படித்தான்.

காலை ஏழு மணி…

“பூரணி ரெடியாகிட்டியா.. வேன் வந்திடும்…” என்றபடி பாரதி டப்பாவில் உணவு அடைத்தபடி கத்திக் கொண்டிருந்தாள்..

வீட்டில் அவளும் அவளின் தங்கையும் மட்டுமே இருந்தனர். ரத்னா காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைக்கு சென்று விட்டார். இரு நாள் விடுப்பின் காரணமாக தாமதமாக எழுந்து பழகிய தங்கையை, உலுக்கி அடித்து தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்பி, குளிக்க செய்ய வைத்து தலை சீவி சமையலை முடிப்பதற்குள்… ஷப்பா… ‌என்றாவிட்டது பாரதிக்கு.

“கண்ணாடிய எத்தன தடவ பாத்தாலும் இருக்குற மூஞ்சி தா தெரியும்.. புதுசா எதையும் காட்டாது.. ” எனக் குரல் கொடுத்தாள் பாரதி, ஐந்து நிமிடங்களாக கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த தங்கையிடம்.

“நான் பாக்க பையன் மாதிரியா இருக்கேன்? ” என்றவளின் குரலில் அதீத கவலை இருந்தது.

” உனக்கு இன்னும் பன்னிரண்டு வயசு தா ஆகுது. கொஞ்ச நாள்ல நீ பெரிய மனுசியா ஆகுடுவ. அப்ப வளர வேண்டிய எல்லாம் சரியா வளந்திருக்கும்‌.‌ அன்னைக்கி சொல்லுவ. நான் பொண்ணுன்னு.”

“நான் அத கேக்கல.. ” என்றாள் சோகமாக.

” காலைலயே செண்டிமெண்ட் சீனுக்கு என்ன அவசியம் வந்தது.”

“நான் பாக்க அப்படியே அப்பா மாதிரி இருக்கேன்னா! அதா அம்ம எங்கிட்ட பேச மாட்டேங்கிது. நான் மூஞ்சிய மாத்தி ஆப்ரேஷன் செஞ்சிட்டு வந்தா பேசுமா அது.”

“லூசு மாதிரி கண்டதையும் உலறாம கிளம்புற வழியப்பாரு. ” என டிப்பன் பாக்ஸ் பையில் எடுத்து வைத்து லன்ச் பாக்ஸை நீட்டினாள்.

“என்ன சாப்பாடு வச்சிருக்க.. “

“தயிர் சாதமும் உருளக்கிழங்கும். கூடவே ஊறுகாயும் வச்சிருக்கேன். மிச்சம் வைக்காம இன்னைக்காது சாப்பிடு.” எனச் சொல்லி முடிப்பதற்குள் பூர்ணி குதிக்கத் தொடங்கிவிட்டாள்.

“எப்ப பாரு இத மட்டுமே வைக்கிற. தக்காளி சாதம்… தயிர் சாதம்… புளி சாதம்ன்னுட்டு.. ஏன் உனக்கு வேற மாதிரி சமைக்கவே தெரியாதா? பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சா மட்டும் பத்தாது‌. அதுக்கு தக்ன படி சாப்பாடும் குடுக்கணும். கூட படிக்கிற பிள்ளைங்க எல்லாம் சான்வெஜ், பீசான்னு கொண்டு வரும் போது நா… சோத்து டப்பாவ திறந்தாலே கேலி பண்ணி சிரிக்கிறாளுக. அட்லிஸ்ட் சப்பாத்தியவாது நடுவுல காய வச்சி சுருட்டி தரலாம். எதுவும் பண்ண மாட்டேங்கிற இப்ப நீ.. ” எனக் கடுகடுக்க,

“உனக்கு நான் டெய்லி வெரைட்டி சாதமாக வச்சித் தர்றேன்னு சந்தோஷப்படு. இல்லன்னா வெறும் சோறும் தண்ணியும் தா சாப்பாடு.”

“அப்ப என்ன மெர்ஸ்ல சாப்பிட விடு. உன்ன விட அவங்க தர்ற கிச்சடி சூப்பரா இருக்கும்.” என்க, தங்கையின் அருகில் வந்தவள்,

“மெர்ஸ் தான.. உன்ன ஹாஸ்டல்லயே தங்க வைக்கிறேன்.. நல்லா மூணு வேளையும் ஜெயில் கைதி மாதிரி தட்ட தூக்கிட்டு போய் சாப்பிடு.. “

“ஹாஸ்பிடல்லா… நான் உ சாப்பாடு நல்லாலன்னு எதிர்த்து பேசுனேன்னு சொல்லியா என்னை அங்க அனுப்ப போற… வேணாம்க்கா.. ப்ளிஸ்.. உன்னோட தயிர் சாதம் தேவாமிர்தமா இருக்கு… நம்புக்கா… சூப்பர் டேஸ்ட்.” எனச் சரணடைய,

“கேன்டீன்ல இருக்குற ரதியக்கா சொன்னாங்க. எல்லாரும் சேந்து ஆறு மாசம் வடக்க சுத்திப்பாக்க சுற்றுலா போறதா. நிறைய கோயிலுக்கு போய் நிறைய சாமிய பாக்க பனி மழையெல்லாம் ஏறுற மாதிரி ஒரு ட்டூர ராஜா ஏற்பாடு பண்ணிருக்குறதா சொன்னாங்க.. அதுக்கு எப்படியாது அம்மயையும் அனுப்பி வைக்கணும்.

நாம போன்னு சொன்னாலாம் அது கேக்காது. ராஜா சொன்னா உடனே சரின்னு கேட்டுக்கும். அதா ராஜாவ பாத்து பேசப் போறேன். நான் வேலை வேலைன்னு ஓடுனா நீ தனியா கெடப்ப. அது உனக்கு நல்லது இல்ல. அதா‌ன் ஆறு மாசத்துக்கு மட்டும் ஹாஸ்டல்ல சேக்கலாம்னு உங்க பிரின்சிபால்ட்ட கேட்டிருக்கேன்.. “

“அப்ப எல்லாத்தையும் பக்காவா ப்ளான் போட்டு வச்சிட்டு, என்னை சமைக்கிறேங்கிற பேர்ல கொடுமப்படுத்துறியா.. என்னை ஜெயில் குள்ள தள்ளுறதுல உனக்கு அப்படி என்ன பேரானந்தம்.. போ… நான் இனி வீட்டுக்கே வரல.. நாளைக்கே நான் ஹாஸ்டலுக்கு போறேன்.” எனச் சொல்லி கோபமாக பையை மாட்டிக் கொண்டு செல்ல,

“அப்ப இந்த வார கடைசில போட்ட தீம் பார்க்கு ப்ளானையும் கை விட்டுட சொல்ற.” என்றாள் குறுநகையுடன்.

“தீம் பார்க்கா…” என வேகமாக விழி விரிய வந்து கேட்டாள் சிறுமி.

“ம்… பூஜா என்னை பாக்க வர்றேன்னு சொன்னா. அதுனால.. ” என இழுக்க,

” பூஜாக்காவா.. நான் வேண்ணா லீவ் போட்டுடவா..‌” என வார இறுதி நாளுக்காக தொடக்கத்திலேயே விடுப்பு எடுக்க நினைத்த தங்கையை பஸ் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி விட்டு, சொர்ணத்தை பார்க்க சென்றாள். அதான் மகன் கார் ரிப்பேர் என்றாரே, அதற்காக அவரின் வீட்டிற்கு சென்றாள்.

முதலில் பாரதி வசிக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்டின் முதல் தளத்தில் தான் இருந்தார். பின் மகன்கள் இருவரும் பெரிய வீடு கட்ட அவர்களுடன் அங்கேயே சென்று விட்டார். மாதம் தவறாது வாடகை வாங்க மட்டுமே வருவார்.

சொர்ணத்தின் குடும்பம் ஆதி முதலே சென்னை தான். அதனால் அங்கு உள்ள அனைத்தும் அத்துப்படி அவருக்கு. கணவன் அந்த ஏரியாவில் ஒரு அரசியல்வாதியின் பெரிய கையாக இருந்து இறந்து போய்விட்டார்.

முதலாமவன் தவசிதாசன்.

‘இவரு நமக்கு தேவையில்ல‌. ஏன்னா நம்ம இந்தக் கதைல இவர சேத்துக்கல.’

அடுத்ததாக ராஜா… இவனை நம் ஹீரோக்களில் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் நம்ம பாரதியின் நலன் விரும்பி. அவன் தயவால் தான் அந்த ஏரியாவில் யாரும் அவளை நெருங்க பயப்படுகின்றனர்.

காரணம் அவன் கோவக்காரன்.. பதினைந்து வயதிலேயே‌ மார்க்கெட்டில் வைத்து ஒரு ரவுடியின் மகனின் கையை வெட்டி தகராறு செய்து ஜெயில் வரை சென்று வந்தவன்.

அப்றம் சின்ன சின்ன கட்ட பஞ்சாயத்து, அடி தடின்னு சின்ன சைஸ் ரவுடியா மாறிட்டான். கூடவே சில கூடா நட்புகளும் உண்டு. படிக்கவில்லை என்றாலும் கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடுவான்.

பாரதியிடம் சுடுநீரில் குளித்து எழுந்தவன் அவளைப் பழி வாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் சென்று பிரச்சனை செய்து ரோட்டில் நின்று அசிங்கமாக ஏச… சொர்ணம் தான் மகனை அனுப்பி வைத்தார்.

அவனால் தான் அந்த ஏரியாவில் பாரதிக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவளுக்கு மட்டுமல்ல ரத்னாவிற்கும் தான். அவனால் தான் தொழில் கற்றுக் கொண்டாள் அவள். கார் செட்டில் ஒற்றை பெண்ணாய் பல நாள் வேலை செய்தவளுக்கு பணம் தந்து, இடம் தந்து, புதிதாக ஒரு கடை திறக்க வைத்த நலன் விரும்பி அவன்.

ஆறு ஆண்டுகள் இடைவெளி இருக்கும் பாரதிக்கும் அவனுக்கும் உள்ள வயது வித்தியாசம்.. அவர்களின் உறவை நட்பு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இருவரும் அதிகமா பேசிக் கொண்டது இல்லை. தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து இயல்பாய் இருந்தது இல்லை. என்ன என்றால் என்ன என்று மட்டுமே பேசிக் கொள்வர். அதே‌நேரம்‌ பிறர் அறியாதவாரு கள்ள பார்வை பார்த்து கொள்வர் இருவரும். அதை காதல் என்றும் சொல்ல முடியாது. அது ரசனை…

இருவரும் ஒருவருக்கு ஒருவர் ரசிகர்கள். தூர நின்று பிறரின் செயல்களை ரசித்து பார்ப்பர். அவனால் அவளும் அவளால் அவனும் கவரப்பட்டனர். பாலினத்தால் அல்ல. தைரியத்தால்… இருவருக்குமே அது அதிகம் தான். அதனால் வந்த ஈர்ப்பு.

எங்கே அதிகம் அவனிடம் பேசினாலோ அல்லது அவளிடம் பேசினாலோ தங்களின் உறவில் தவறான சாயம் பூசப்படும் என்பதால் இருவரும் விலகி நின்று பழகினார். ஆனால் உதவி என்று வாயைத் திறக்கும் முன் உணர்ந்திருப்பர்.

பாரதி தன் மோட்டார் பைக்கில் வந்திறங்க, சொர்ணம் தான் வரவேற்றார். கார் வீதியில் நிற்க, பாரதி தன் வேலையை தொடங்கினாள்.

“பெருசா இழுத்து வச்சிடிச்சா… இல்ல சின்னதா… “

“சின்ன பிரச்சன தாம்மா. இதோ முடிச்சிட்டேன்.” என ஸ்டாட் செய்து கொடுத்தாள்.

“க்கும் இவ்ளோ தானாக்கும்… நானும் சின்னவன பாருடான்னு சொன்னேன். காதுலயே வாங்காம போய்ட்டான்… *** பயெ… ஒரு பேச்ச கேக்குறது இல்ல. எப்ப பாரு அந்த மூட்டுச் சந்துல உக்காந்து ரயில் வண்டி கணக்கா பொகய விட்டுட்டு எவனையாது மிரட்டீட்டே இருக்க வேண்டியது.” என மகனைப் பாராட்டிக் கொண்டிருந்த வாய் மூடி விட்டது. அதான் ராஜா வந்து விட்டானே. அவன் முன்னால் அவனைத் திட்டுனால் பதிலுக்கு நம்ம சொர்ணத்தின் வாயில் நாக்கு என்ற ஒன்று இல்லாதது போல், கேள்வி கேட்டு, பதில் பேச முடியாம செய்து விடுவான்.

அதனால் நைசாக சொர்ணம் நழுவிக் கொள்ள, பாரதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல இருந்தான் ராஜா.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!