தன் முன் தேவ தூதனை போல் வசீகர புன்னகையுடன், இதழில் பூத்த குறுஞ்சிரிப்புடன் தன்னையே உற்று பார்த்தபடி நின்ற பார்த்திபனின் பார்வை அவளுள் காதலெனும் தீயை மூட்டிவிட்டது. இந்த நொடி… அவனின் அழைப்பை ஏற்று உடன் சென்று தனக்கு கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க தோன்றியது. யாருக்காகவும் பார்த்திபனை இழக்கும் துணிவு பாரதியிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
“சொல்லு மைம்மா… நமக்குள்ள என்ன.. ” எனக் கேட்டவனின் கேள்வி அவளின் செவிக்குள் செல்லவே இல்லை. மெல்ல அவளின் காது மடலருகே தன் இதழை கொண்டு சென்றவன்,
” என்ன இருக்குன்னு உனக்கு தெரியலயா? பட் எனக்கு தெரியும்..” என மெல்லிய குரலில் அவனின் மீசை முடிகள் செவி மடலில் உரச பேச, தன் தேகச் சிலிர்ப்பு அதற்கான பதில் காதல் என்று சொல்லிட மாட்டானா என்று ஏங்கியது. விழிகள் அவனின் மேல் நிலை குத்தி நிற்க,
” பத்து இன்ச்…”
“ஹாங்…”
“கேப் மைம்மா… நமக்குள்ள இருக்குற கேப். ஒரு அடின்னா நூறு சென்டி மீட்டர். அதே இத இன்ச்ல சொல்லணும்னா நெருக்கி 40 இன்ச் வரும்னு நினைக்கிறேன். அவ்ளோ கிடையாதுல. அதுனால ஒரு அடி ஸ்கேல் அளவுக்கு தா கேப். ஸாரி மைம்மா எனக்கு கணக்கு அவ்ளவா வராது.. ” என்றவனைத் திட்ட வார்த்தைகளை எங்கிருந்து எடுப்பது
“போய்யா..” எனப் பல்லை கடித்தவள் நடந்து செல்ல, பூஜா அழைத்தாள், வரச் சொல்லி. திரும்பி பார்த்திபனை அவள் பார்க்க, அவனும் கெஞ்சிய படி நின்றான்.
வின்சென்ட்டின் கார் சாலைக்கு மறு புறம் இருந்தது. சாலையை கடந்து செல்ல வேண்டும். இரு புறமும் வாகனங்கள் வருகிறதா என்று பார்த்தபடி நின்றவளின் கன்னத்தில் வந்து விழுந்தது அந்த மழைத்துளி. சின்ன தூறலாக இல்லாது பெரிய நீர் திவளையாக அது விழ,
‘நம்ம கிட்டத்தா குடை இருக்கே.. எதுக்கு நனையணும்.. ‘ எனக் குடை விரித்து நின்றாள். அவளின் முதுகில் வந்து ஒன்றிக் கொண்டான் பார்த்திபன்.
“யோவ்.. நீ தா லெதர் ஜாக்கெட் போட்டிருக்கேல்ல.. அப்பறம் எப்படி நனைவ… தள்ளி நில்லுய்யா…” என்றாள் முதுகில் உணர்ந்த ஆடவனின் வெம்மையைத் தாள முடியாது.
“ஜாக்கெட், பாடியத்தா கவர் பண்ணும் மைம்மா. தலை… அதுல கொஞ்சோண்டு முடியும் இருக்கு. ஈரமாகிடுச்சின்னா ஜலதோஷம் பிடிக்கும். எனக்கு வேற இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம். அப்ப மூக்கு உறுஞ்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லு. அத்தோட எனக்கு ஊசின்னா பயம். அத விட பயம் என் உயிர் தோழனே உயிர காப்பாத்துறேன்னு சொல்லி ஊசியால குத்துவான். நான் கத்துவேன். எதுக்கு இதெல்லாம்.. ” என நீண்ட விளக்கம் தந்தவனை ஈவு இரக்கம் பார்க்காமல் நனைய விட்டு விட்டு குடையுடன் நடந்து சென்றாள் அவள்.
அப்பொழுது பெரிய கடை வாசலில் கடை விரித்து சின்ன வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பாட்டி, மழையில் நனையாது தன் பொருட்களை பாதுகாக்க திண்டாடிக் கொண்டிருந்தார். வேகமாக பாரதியின் கையில் இருந்த குடையைப் பிடுங்கி அவரிடம் கொடுத்து தன் கருணை குணத்தை காட்டினான் பார்த்திபன். பாரதி தான் மழையில் நனைந்த படி நின்றாள்.
” யோவ்… என்னய்யா பண்ணிட்ட… அது ஏங்கொட ய்யா.. ” எனக் கத்தியவள் மழையில் நனையாது இருக்க ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றாள். மழை வேறு ஜோராக பொழியத் தொடங்கியது.
“உ வள்ளல் குணத்த காட்டாம இருந்திருந்தா இன்னேரம் நான் நனஞ்சிருக்க மாட்டேன்.” எனச் சலித்துக் கொண்டவளுக்கு பாட்டியிடம் கொடுத்த குடையை வாங்க மனம் வரவில்லை. அவளுமே அவருக்கு உதவி செய்து விட்டு தான் மரத்தடியில் ஒதுங்கினாள்.
முணுமுணுவென அவள் முணங்கிக் கொண்டே இருக்க, நொடியும் தாமதிக்காது தன் லெதர் ஜாக்கெட்டை கழட்டி, அதைக் குடை போல் தலைக்கு மேல் போர்த்தியவன், அவளின் இடையணைத்து தன்னோடு சேர்த்து நிறுத்தினான்.
” இப்ப நமக்குள்ள ஒரு மில்லி மீட்டர் கேப் கூட இல்ல. பாத்தியா.. ” என்றவன் அவள் திமிறும் முன் இடையில் இருந்த கைக்கு அழுத்தம் தந்து, தரையில் இருந்த பெண்ணவளின் கால்களை மிதக்கச் செய்து, தூக்கி கொண்டு காரை நோக்கி நடந்தாள். அவளின் திமிறல்கள் பார்த்திபனிடம் செல்லாக்காசாகிப் போனது தான் பரிதாபம்.
ம்… பரிதாபம் தான். அவளை இறக்கி விட்ட பின் அவன் தான் பரிதாபமாக கன்னத்தில் கைவைத்த படி நின்றான். ஒரே ஒரு அறை… ரோடு என்றும் பார்க்கவில்லையே. தன் மனம் நேசித்துக் கொண்டிருக்கும் ஆடவன் என்றும் பார்க்கவில்லையே. அடித்த வேகத்தில் பார்த்திபன் சினிமா படங்களில் காட்டுவது போல் காரில் மோதி நின்றான். காரின் உள்ளே இருந்த இருவரும் வேகமாக வெளியே வர,
“இன்னாய்யா நினச்சின்னு இருக்க. நீ எத்தனாலும் செய்வ. நான் கம்முன்னு பொத்திட்டு இருப்பேன்னா. ஏதோ உன்னிய ஏமாத்திட்டோமேன்னு குத்த உணர்வுல உன்ட்ட சகிச்சிக்கின்னு பழகினா! இவ இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவான்னு நீ உ இஷ்டத்துக்கு என்ட உரிம எடுத்துக்கிவியா… இதுக்கு முன்னாடி நீ பூஜாக்கு பேசுன பையன்னு ஒன்னியும் சொல்லாம இருந்தேன். இனி நீ யாரோ… தேவையில்லாம என்ட நெருங்கி, அடிவாங்கி சாவாத.. சொல்டேன்…” என்றவள் மழையில் நனைந்த படியே செல்ல, பின்னாலேயே பூஜாவும் கத்திக் கொண்டே ஓடினாள்.
“ஸாரி பார்த்திபன்… அவளுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஸாரி… ஆனாலும் நீங்க பண்ணது தப்பு. ஒரு பப்ளிக் ப்லேஸ்ல அவ கிட்ட இப்படி நீங்க மிஸ்பிகேவ் பண்ணிருக்க கூடாது. அதுக்கு இது சரியான தண்டனை தா..” என்று விட்டு தான் சென்றாள் பூஜா.
கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்தவன் வாங்கும் இரண்டாவது அடி அது. இரண்டு அடியுமே அவளைத் தொட்டதால் கிடைத்த பரிசு..
“ஒரு வேளை தொடக்கூடாத இடத்த தொட்டுட்டோமோ. இல்லயே.. இடுப்புல தான கை வைச்சேன்… அது சென்சார் ப்ளேசா!! தொடக்கூடாதா இடமா! இல்லையே.. அப்றம் என் என்னை அடிச்சா. ம்.. சரியாத்தான தூக்குனேன். குழந்தைய தூக்குற மாதிரி.. தப்பா நினச்சிட்டாளோ. ” என மழையில் நனைந்து கொண்டும் காரில் சாய்ந்து கொண்டும் ஆழ்ந்த யோசனையில் இருந்தவனை வின்சென்ட் தான் வீட்டில் கொண்டு வந்து போட்டான்.
பாவம்… அவனு உறக்கமே வரவில்லை. பெண்ணிடம் அடி வாங்கியதாலா?
“மாம்ஸ்… மாம்ஸ்… என்னை அடிச்சிட்டா மாம்ஸ். எனக்கு எவ்ளோ வலிக்கிதுன்னு தெரியுமா?” என்றவனின் குரலிலேயே தெரிந்து கொள்ளலாம் அவன் உள்ளே இறக்கிய சரக்கின் போதையை.
“எங்க மாப்ள அடிச்சா? யாரு அடிச்சா? ” என்ற சந்ரு சைடு டிஷ்களை பரப்பி தன் மாப்பிள்ளையின் க்ளாஸ் காலியாக இருப்பதை உணர்ந்து நிரப்பினான்.
“இல்ல கன்னத்துல. பாரு கை ரேக எடுக்குற அளவுக்கு என்னை அடிச்சிட்டா.”
“அடிச்சிட்டாளா.. ” எனப் பொங்கி எழுந்து பாரதியை திட்ட,
“நீ ஏன் மாம்ஸ் துடிக்கிற?. என்னை தான அடிச்சா. நாந்தா ஷாக் ஆகணும்.. துடிக்கணும்.. எம் பசிக்கி நீ சாப்டா என்ன அர்த்தம். ம்… நாந்தா சாப்பிடணும். நாந்தா மைம்மாவ திட்டணும். ஆனா திட்ட மனசு வரலயே மாம்ஸ். மனசு வரலயே. அவ்ளோ சாஃப்ட்டான என் மனச.. ஒரே அடில உடச்சிட்டு போய்ட்டா மாம்ஸ… போய்ட்டா.. ” எனச் சொல்லி அழ, அவனை ஏற இறங்க பார்த்தவன்.
“நீ என்ன பண்ண மாப்ள அடிக்கிற அளவுக்கு. “
“நான் அப்படி என்ன தப்பு பண்ணேனானா… ம்… அது தெரியலயே மாம்ஸ்.. மறந்துடுச்சின்னு நினைக்கிறேன். ஆனாலும் எதுக்கு என்னை அடிக்கணும். ஏய் மைம்மா…. இப்ப இப்ப நீ இங்க வரணும். எனக்கு காரணத்த சொல்லணும். ஐ வான்ட் ரீசன்… மைம்மா… வாடி இங்க.. ” எனக் கத்தினான்.
“ஷூ…ஷூ….. ” என்றான் சந்ரு.
“ஷூ வாசல்ல இருக்கே மாம்ஸ். உனக்கு வேணுமா? இரு நான் நேகாக்கு கால் பண்ணி எடுத்திட்டு வர சொல்றேன். இல்ல கீழ தான இருக்கா… நானே போய் கூட்டிட்டு வந்து, ஷூ வ எடுத்து தர சொல்றேன். நேகா… நேகா…”
“கத்தாத மாப்ள… அமைதியா இரு. குடும்பம் மொத்தமும் கீழ தா இருக்கு.”
“இருக்கட்டும் எனக்கு என்ன? ஏய் மைம்மா… மைம்மா… ” எனக் கத்த, அமைதியாக பேசும்படி சந்ரு கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“அதெப்படி மாம்ஸ் அமைதியா இருக்குறது. இந்த பொம்பளைங்க நம்மல கடுக தாளிக்கிற மாதிரி தாளிச்சி எடுத்து ஊத்துவாளுக. அத பாத்திட்டு எப்படி மாம்ஸ் சும்மா இருக்குறது. ம்.. நாமெல்லாம் வீர ஆண் மகன்கள். லைக் சிங்கம் மாதிரி. அப்படி பட்ட நமக்கு மரியாத தர மாட்டாள்களாமா… ம்.. தர மாட்டாள்களா. தனி ஒரு ஆண் மகனுக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால்..”
“என்றால்.. “
“என்றால்… ம்… என்ன மாம்ஸ் சொல்லலாம். பூமிய அடிச்சிவோம்னு சொல்லலாமா. இல்ல துவச்சிடுவோம்னு சொல்லலாமா. ரெண்டுல எதுன்னு முடிவு பண்ணி சொல்லு மாம்ஸ்.” என இரு கரத்தையும் நீட்டி சந்ருவிடம் தொட்டச் சொன்னவன், போதையில் கண் மண் தெரியாது காற்றில் தடவிக் கொண்டிருந்தான்.
“மாம்ஸ்… மாம்ஸ்… நான் ரொம்ப நேரமா கைய நீட்டுறேன். நீ தொடவே இல்ல. எங்க மாம்ஸ் இருக்க.. மாம்ஸ்..” என கத்திக் கொண்டே இருக்க,
“இரு மாப்ள.. உ விரலத்தா தேடிட்டு இருக்கேன். கண்டு பிடிச்சா ரெண்டுல ஒன்ன தொடுறேன்.” என இருவரும் மொட்டை மாடியில் நின்று கொண்டு அலப்பறை செய்து கொண்டிருந்தனர்.
“என்ன பண்ணிட்டு இருக்கிங்க. நம்ம வீட்டுக்குள்ள இந்த கருமத்த கொண்டு வந்தது அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா. ” என்றாள் மயூரி. இருவரையும் காணாது தேடி வந்ததுள்ளாள்.
“ஓ… நல்லாவே தெரியும்.. அவருக்கும் ஒரு கட்டிங் ஏற்பாடு பண்ணிருக்கோம். க்ளாஸ்க்கு ரெடி… ” என சந்ரு தன் பாக்கெட்டில் இருந்த ப்ளாஸ்டிக் டம்ளரை காட்டினான். தலையில் அடித்துக் கொண்டாள் மயூரி.
“ஹேய்… மையூ… மையூ… இங்க வா.. இங்க வா… வந்து இப்படி உக்காரு.. கம்.. நகண்டு உக்காரு மாம்ஸ்..” என்றவன் மயூரி அமர இட ஒதுக்கீடு செய்து கொடுக்க, மயூரி அமர்ந்துகொண்டாள்..
“மையூ.. இது ரெண்டுல ஒன்ன தொடேன்.. ” என இரு கரத்தையும் விரித்து பத்து விரலையும் நீட்ட,
“இதுல ஒன்ன தொடணுமா! ஏன்?”
“நீயும் ஏம்மா கேள்வி கேட்டே கொல்லுற. ஒன்னு தொடத்தான சொன்னோம். உ சொத்துல பங்கா கேட்டோம்.. ” என்றான் சந்ரு. பார்த்திபன் எந்த விரலில் எதை வைத்தேன் என விளக்கம் கொடுத்தான். அப்போது மனைவியைத் தேடி ராமும் மாடிக்கு வர,
“எதுக்கு பார்த்தி இதெல்லாம்?”
“இதெல்லாம் ஆம்பளைங்களோட மரியாதை சம்மந்தப்பட்டது சகல…”
“ஆமா மாமா. எங்கள மதிக்காம பொண்ணுங்க நடந்துக்கிட்டா அவங்க மூஞ்சி முன்னாடி போய் டவுன் டவுன்னு கத்தும் போது ஒரு பன்ச் டயலாக் சொன்னா நல்லா இருக்கும். அதுக்கு தா இது… நீங்க கூட எங்க போராட்டுத்துல கலந்துக்கலாம்.” என அழைப்பு விடுத்தான்.
“இப்ப பாக்குற எல்லா பொண்ணுங்களும் அடிக்கிறாளுக மாமா. அத தட்டிக் கேட்டு மெரினால போராட்டம் பண்ணப் போறோம். அது ஜல்லிக்கட்டு போராட்டத்த விட பெருசா இருக்கும். அது நடந்தாத்தா இனி ஆம்பளைங்கள அடிக்காம இருப்பாளுக.”
“அடிக்காமலா… உன்ன யாரு அடிச்சா பார்த்தி..” என உடன் பிறந்த சகோதரி துடிக்க.
“எல்லாம் அவ தா..”
எவ… என்பது போல் பார்த்தவர்களுக்கு ஃப்ளாஷ் பேக் ஓட்டிக்காட்டினான் சந்ரு.. அதுவும் அறைகுறையாக.