Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தென்றல் 31

“ஓ… நீங்க வரதட்சணைய எதிர்பாக்குறீங்க! சரியா?” பாரதியின் குரலில் எக்கச்சக்க ஏளனம். அது மாலதியைக் கோபமேற்றி இருக்க வேண்டும்.

“ஆமாண்டி… அது தா. ஒரு பொண்ணுக்குப் புகுந்த வீட்டுல மதிப்பு கிடைக்கிறதே அவ கல்யாணத்தப்ப அப்பன் வீட்டுல இருந்து எடுத்திட்டு வர்ற சீரும் நகநட்டையும் வச்சி தா. ஒண்ணுமே இல்லாமா வந்தவளும் அந்த காலத்துலயே அத்தன சவரன் போட்டு வந்த எனக்கும் சம மரியாதையா!!



Advertisement

நீ பிச்சை எடுத்தாலும் எங்க பொண்ணுக்கு நாங்க செஞ்ச அளவுக்கு கொண்டுட்டு வர முடியாது. இல்ல உங்கப்பெ அவ்வளவு சேத்து வச்சிட்டு போனானா!! கஞ்சிக்கு வழியில்லாதவள எல்லாம் மருமக ன்னு ஏத்துக்கிட்டு சரிக்கு சமமா நடத்தணுமாம்ல.” என்க, மாலுவின் பேச்சு அதிகம் என்று உணர்ந்த வீட்டார் அவருக்கு கண்டப்பார்வையைக் கொடுத்ததுடன், சமாதானம் செய்ய பார்த்தனர் பாரதியை.

Advertisement

ம்ஹீம்… ‘நானும் இவளும் ஒன்னா.. ‘ என்ற பாரதியின் வார்த்தையிலேயே நின்றார் மாலதி.

Advertisement

“பார்த்தா… யோவ் பார்த்திபா… ” என வீடு அதிரும்படி கத்தினாள் பாரதி.

Advertisement

பார்த்திபன் வேகவேகமாக “என்னாச்சி மைம்மா.. ” என்றபடி கீழே வர, உடன் அவனின் தோளைத் தொத்திக் கொண்டு விஷாலினியும் சண்முகமும் வந்தனர். பாரதி அவன் அணிந்திருந்த பனியனின் பின் பக்கம் சென்று இழுத்து பிடித்து பார்த்தாள்.

“ம்ச்… என்ன பண்ற மணி… ” எனப் பல்லை கடிக்க,

“ஒன்னு பாக்கணும்.. “

“என்ன பாக்கணும்? “

“அது இந்த துணிக்கடைக்கு போனா அங்க நாம வாங்குற சட்டைக்கு பின்னாடி அதோட வில இருக்கும். அதத்தா தேடுறேன். உன்னோட வில என்னன்னு தெரிஞ்சி குடுக்கணும்ல. சொல்லு, உனக்கு என்ன ரேட்? கண்டிப்பா நான் அஞ்சு பத்து குறைக்க மாட்டேன். சொன்ன விலைய விட ஜாஸ்தியாவே குடுத்து வாங்கிட்டு போறேன்.” என்க,

“என்ன உளறுற… விடு என்னை. ” என அவளின் கையில் இருந்த தன் பனியனை உருவிக் கொண்டவனுக்கு அவள் என்ன பேசுறாள் என்பது புரியவே இல்லை.

“சொல்லு பார்த்திபா. உன் ரேட் என்ன? எங்க ஒட்டி வெச்சிருக்க.” என்றவள் அவனைச் சுற்றி சுற்றி வந்தாள்.

” உனக்கு என்ன வேணும் மணி? ஏ இப்படி நடந்துக்கிற?”

“அது ஒன்னுமில்ல பார்த்தா. உங்க சித்தி தா சொன்னாங்க. பொண்ணுக்கு மதிப்பு அவ போட்டுட்டு வர்ற நகைய பொருத்துன்னு. உங்க சித்தப்பாவோட வொர்த்து இத்தன சவரனு சொன்னாங்க. உன்னோட ஒர்த்து என்னென்னு நான் பாத்தாத்தான கரெட்டா செட்டில் பண்ண முடியும்.” என்க, அவன் புருவங்களைச் சுருக்கினான்.

“நக வேணுமாம் உங்க சித்திக்கு. தங்க நகக்கட வைச்சிருக்குறவங்க, மருமகள கிட்ட தங்க நகைய எதிர்பார்க்கிறாங்க. ஒரு வேளை கட நட்டத்துல ஓடுதோ. இருக்கும் இருக்கும். இந்தம்மாவே இருக்குற எல்லாத்தையும் அள்ளி போட்டுக்கிட்டா விக்க கடைல எங்க தா இருக்கும்! சொல்லு…” என காலை வேலையிலும் அம்மன் போல் சகல அலங்காரத்துடன் நின்ற மாலதியை கை காட்டி சொல்ல,

“ஏய்… என்னடி நக்கலா? வாய் அதிகம் பேசுன…” மாலதி, நேகா பிடித்திருந்த கரத்தை உருவிக்கொண்டு பாரதியிடம் சண்டைக்கு நின்றார்.

” என்ன பண்ணுவிங்க. ஹாங்… ஒரு பொண்ணோட குணத்த வச்சி மதிப்பு தர்றத விட்டுட்டு அவ கொண்டு வர்ற பொன்ன பாக்குற உங்க மேல வரதட்சணை கொடுமன்னு கேஸ் குடுத்து கம்பி எண்ண வச்சா சரியா இருக்கும். மனுஷனோட பண்ப பாக்காமா பணத்த பாக்குற ஜென்மம். ” என்க,

மாலு வேகமாக தன் கணவனின் அருகில் சென்று கண்ணீர் வடித்தார். என்ன நடந்தது என்று மாணிக்கத்திற்கும் சுகுமாரனுக்கும் தெரியாது. கடைக்கு சென்று விட்டு அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தனர்.

“நான் அப்பவே சொன்னேன்ல மச்சான். இந்த மாதிரி பஜாரியல்லாம் வீட்டுக்குள்ளயே விடுறது தப்புன்னு. நீங்க மருமகளாக்கி அழகு பாத்திங்க. இன்னைக்கி அது, நடு வீட்டுல வந்து நின்று நாட்டாம பண்ணிட்டு இருக்கு. நாம அவள கொடுமப்படுத்துறோம்னு கேஸ் குடுக்கப் போறாளாம்.” என சண்முகம் ஏற்றி விட்டார்.

மனைவியின் பேச்சு ஸ்பீக்கர் உதவி இல்லாமல் கேட் வாசல் வரை கேட்ட காரணத்தால், என்ன நடந்திருக்கும் என்று யூகித்த சுகுமாரன் பாரதியை ஒன்றும் சொல்லாது மெச்சும் பார்வை பார்த்தார். ஆனாலும் கட்டின மனைவியை விட்டுக் கொடுக்க முடியாது அல்லவா!

அதனால் ஆதரவாக பேச, பாரதி பேச என வீடு மீன் மார்க்கெட்டாக மாறும் முன், பார்த்திபன் பாரதியை இழுத்து வந்து விட்டான் தனியாக.

“யோவ்… விடுயா என்னை. இன்னைக்கி அந்த பொம்பளைய ஒன்னுக்கு ரெண்டா கவனிச்சிட்டு வர்றேன். என்னம்மா வாய் பேசுது.. “

“நீ பேசுறத விட கம்மியாத்தா பேசுறாங்க. ஏன் டி மல்லுக்கு நிக்கிற. அவங்க திட்டுனா இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விட்டுட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான. அத விட்டுடு குழாயடி சண்ட போடுற.”

“நீ கேப்பைய்யா. கேப்ப… ஏன்னா அது உ சித்தி தான. உக்காந்து க்ளாஸ் ரூம்ல பாடம் நடத்துற மாதிரி உ சித்தி சொல்றத கவனமா கேப்ப. நான் ஏன் கேக்கணும். அதுவும் கண்டபடி என்னை பேசும் போது காத பொத்திட்டு கேக்க நான் என்ன பார்த்திபனா! பாரதி… அப்படில்லா கேட்டுண்ணு இருக்க மாட்டேன். நாஸ்தி ஆக்கிடுவேன். ” என எகிற, அவளின் கோபத்தில் சிவந்த மூக்கை தன் விரலால் கவ்வி இழுத்தான் பார்த்திபன்.

“யோவ்… என்ன நேரத்துல என்னய்யா பண்ற?”

“உன்ன சின்ன வயசுல குளிக்க வைக்கும் போது சரியா இத மட்டும் இழுத்து விடாம விட்டுட்டாங்க போல. சைனாக்காரி மாதிரி இருக்கு மூக்கு மட்டும். அதுவும் நீ கோபத்துல பேசும் போது அது சிவக்குது பாரேன். சூப்பரா இருக்கு மைம்மா. ” என மீண்டும் பிடித்து இழுக்க, அவனைத் திட்டி தீர்த்தாள் பாரதி.

பாரதி போல் பதிலுக்கு பதில் பேசாது. அமைதியாக வழக்கம் போல் அவளின் திட்டுகளை வாங்கிக் கொண்டான் அவன். நல்ல வேளையாக அவளின் அலைபேசி அழைக்க, அதில் பேச வேண்டி இருப்பதால் பார்த்திபனை விட்டு விட்டு சென்றாள் அவள்.

“பைக்க எடுதின்னு நான் சொல்ற இடத்தாண்ட வா.. ” எனச் சொல்லி வைத்தாள்.

“எங்கம்மா கிளம்புற?” எனக் கேட்டார் மாணிக்கம்.

அவர் பாரதியை இதற்கு முன் பார்த்திருக்கிறார். பார்த்திபனின் தோழியாய் அல்ல. மெக்கானிக்காக. ஒரு முறை அவரின் கார் நடு சாமத்தில் பழுதாகி நிற்க, அவள் தான் சரி செய்து தந்தாள். அது போதுமே… தன் மகனை போல் வெட்டியாக ஊர் சுற்றாது பொறுப்பாக வேலை செய்கிறாள் பெண் எனப் பிடித்து விட்டது.

‘ஒருவேளை அதுனால தா மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரோ… இருக்கும் இருக்கும். அவரு எதிர்பாக்குற பத்து பொருத்தமும் பாரதிட்ட பக்காவா இருக்கும் போது. வேற யாரு அவருக்கு வேணும். ‘

“ஷெட்டுக்கு… ” என்றாள் பாரதி. அவரை உறவு முறை சொல்லி அழைப்பதில் தயக்கம் இருந்தது பாரதிக்கு.

“ஷெட்டா… என்ன ஷெட்டு?”

“மெக்கானிக் ஷெட்டு. ” எனக் கடையின் பெயரை சொல்ல,

“அங்க தா வேல பாக்குறியாம்மா?” என்னார். அவரின் கணிந்த குரல் பாரதிக்குப் பிடித்திருந்தது. தான் முதலாளி என்ற ஆணவம் இல்லாது தன்னை நிமிர்ந்த பார்வை பார்த்து மரியாதையுடன் பேசும் மாணிக்கத்தை பார்க்கையில், ‘இந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்.’ என்ற பாடல் வரிகள் நினைவு வந்து பார்த்திபனை திரும்பி பார்க்க, அவன் மும்முரமாக தன் அத்தை மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.

“வேல எல்லாம் பாக்கல. அது என்னோட கட… அஞ்சு வர்ஷமா அதுக்கு ஓனரு நாந்தா. நான் ஒன்னும் அனாத கிடையாது. எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. அம்மா தங்கச்சி இருக்காங்க. சொந்தமா வீடும் இருக்கும். அவங்க கேட்ட மாதிரி நக வாங்கி போடுற அளவுக்கு சம்பாத்தியமும் இருக்கு. ” என சொல்லி செல்ல, மாணிக்கம் புன்னகைத்தார்.

இது போதுமே அவரை கவிழ்க்க, கடைக்கு ஓனர். குடும்பத்தின் பொறுப்பை தோளில் சுமக்கும் பொறுப்புள்ள மகள். ஆஹா! ஆஹா.! பத்து பொருத்தம் இல்லை. பத்தாயிரப் பொருத்தமும் பொருந்தும் போலயே.

“அப்பாடா… இப்பத்தா புயல் அடிச்சி ஓஞ்ச மாதிரி இருக்கு.” எனச் சந்ரு நினைத்தான். அனந்த தாத்தாவின் அறையில் இருந்து கொண்டு ஹாலில் நடந்த களேபரத்தை வேடிக்க பார்த்துக் கொண்டிருந்தான். சொல்லப் போனால் மாலுவைப் பாரதி வெளுத்து வாங்கும் போது விசில் அடித்து கைத் தட்டவில்லை. மற்றபடி தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சியாக பார்த்தது போல் ஒரு சந்தோஷத்தை அவனின் முகத்தில் காண முடிந்தது.

“வந்த புயல் உன்னோட மாமியார வேரோட சாஞ்சிட்டு போயிடுச்சி போலயே. ” என்றது அனந்த தாத்தா தான். சந்ருவின் தலைக்கு மேல் தலை வைத்து கதவிடுக்கு வழியே எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

“என் மாமியாரு ஆல மரம் மாதிரி. சிங்கில் புயலுக்கெல்லாம் சாச்சிட முடியாது. ஒரு அஞ்சாறு புயல் வந்து தாக்குனாத்தா சாயும்.”

“இந்த டயலாக்க நேகாக்கா கேட்டா உங்கள தூரத்தி தூரத்தி அடிக்க மாட்டாங்க.” என்றது ஒரு பெண் குரல்.

“என்ன தாத்தா திடீர்னு லேடிஸ் வாய்ஸ்ல மிமிக்ரி பண்றிங்க?” எனத் தாத்தாவின் வாயை திறக்க,

” டேய் நான் இல்ல டா.”

“அப்ப யார் பேசுறத ரூம்க்குள்ள இருந்து தான சத்தம் வந்தது. இங்க உங்களையும் என்னையும் தவிர வேற யாரும் இல்லயே.”

“இருக்கேன்… நான் இருக்கேன்.. ” என்றபடி கட்டிலுக்கு அடியில் இருந்து எழுந்து வந்தாள் பூஜா.

“சப்பா… கட்டிலுக்கு கீழ நமக்கு வசதியா இல்ல. நான் பாத்ரும்ல ஒழிச்சிக்கிறேன்னு சொன்னேன். கேட்டிங்களா தாத்தா. ஒரே தூசி… ச்ச.. ” எனக் கைக் கால்களில் ஒட்டியிருந்த சிறு தூசியை தட்டி விட,

“நீயா… நீ எதுக்கு இங்க வந்த? ” என்ற சந்ரு ஷாக்காகி விட்டான்.

“ஏன் வரக்கூடாதா? இது என்னோட தூரத்து அத்த வீடு தான. நானும் சொந்தக்காரி தான. “

“நீ எப்படி வந்த? எப்ப வந்த? ஏன் வந்த? “

“காலைல சாப்பாட்டுக்கே வந்திட்டேன். உங்க மாமியார் கண்ணுல மாட்டுனா நான் காலி. அதா தாத்தாகிட்ட சரணடஞ்சிட்டேன். ” எனச் சொல்லி அனந்த் தாத்தாவை அணைத்துக் கொள்ள,

“கூட்டு களவாணிங்களா நீங்க?”

“ச்சச்ச… இது காலைல அமைச்ச கூட்டணி டா. பாரதிய பாக்கணும் சொன்னா. அதா வான்னு கூட்டீட்டு வந்து அடைக்கலம் குடுத்தேன். “

“அடைக்கலமா!! ” என வாயை பிளக்க

“தாத்தா அடுத்த தடவ என்னை கட்டிலுக்கு அடில ஒழிய சொல்லாதிங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு.”

” கஷ்டப்பட்டு தா ஆகணும். நீ பண்ண காரியம் அப்படி.” என்றபடி கதவைத் திறந்து கொண்டு வந்தான் ராம்.

“சகல… உனக்கும் இந்த பொண்ணு இங்க ஒழிஞ்சிருக்குறது தெரியுமா? “

“தெரியும்மாவா! என்னை யார் கண்ணுக்கும் படாம கூட்டீட்டு வந்து ஒழிய இடம் பாத்து குடுத்ததே அவரு தா. நன்றி ராம்மண்ணா.. ” என்றாள் பூஜா.

“என்ன சகல இது? இந்த பொண்ணாலதா நேத்து நம்ம குடும்பமே அவமானப்பட்டுச்சி. நடக்க இருந்த கல்யாணத்துல வேற பொண்ணு மாதிரி போச்சி. இது பண்ண கலாட்டாவால தா நம்ம தாத்தாக்கு ஹார்ட் அட்டாக் வர இருந்தது. அதெல்லாத்தையும் மறந்திட்டு இவள எதுக்கு ஒழிச்சி வச்சி ஐஸ் பாய் விளையாடிட்டு இருக்க.”

“நான் ஒன்னும் பொய் சொல்லி பார்த்திபன் கல்யாணத்த நிறுத்தல. நான் முதல்ல அந்த ஃபோட்டோவ பாத்ததும் யாரோ மாஃபிங் பண்ணிருக்காங்கன்னு தா நினைச்சேன். ஆனா கல்யாண சர்டிபிகேட்… அது உண்ம. அதுல இருந்த பார்த்திபன் கையெழுத்து உண்ம. தீர விசாரிச்சிட்டு தா நான் கல்யாணத்த நிப்பாட்டி கல்யாணம் பண்ணி வச்சேன். ஹாங்… ” என ரோசமாக சொன்னாள்.

“பூஜா சொல்றது சரிதா. அந்த சர்டிபிகேட் நிஜம். போலி கிடையாது. அந்த ஃபோட்டோவும் தா. ” என்றான் ராம்.

“அதெப்படிய்யா நம்ம மாப்ள யாருக்கும் சொல்லாமா கல்யாணம் பண்ணுவான். குறிப்பா எங்கிட்ட கேக்காம எதுவும் பண்ண மாட்டான் என் மாப்ள. வந்துட்டானுங்க போலிய எல்லாம் நிஜம்னு சொல்லிட்டு”

“நிஜம் தா சந்ரு அண்ணா. நீங்களும் வேணும்னா கேளுங்க. நான் கருப்பசாமிக்கு கால் பண்றேன். அவன் சொல்லுவான் என்ன நடந்தததுன்னு. ” என்றாள் பூஜா.

“நான் யார் சொல்றதையும் நம்ப மாட்டேன். என் மாப்ள அப்படி கிடையாது.” எனக் குரல் உயர்த்த,

“செத்த அமைதியாத்தா பேசேன்டா. வெளில உ பொண்டாட்டி கால் மேல கால் போட்டு உக்காந்திருக்கா. “

அது நம் அகிலுவின் குரல்…

“அகிலா… நீயா!! உனக்கும் இந்த பொண்ணு இவனுங்க ஒழிச்சி வச்சி விளையாடுறது தெரியுமா? ” என மீண்டும் வாயை பிளக்க,

“மூடுடா… கொசு போய்ட போது. எம்புருஷன் கண்ணசைவ வச்சே நான் அவரு என்ன நினைக்கிறாருங்கிறத கண்டு பிடிச்சிடுவேன். அதுமட்டுமில்லாம எம்புருஷன் எங்கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டாரு.” அகிலா பாட்டியின் முகத்தில் வெட்கமும் கர்வமும் நர்த்தனம் ஆடியது.

“அப்ப ஏன் மாப்ளய பாரதிக்குத் தாலி கட்ட சொன்னாரே உங்க புருஷர்…ரு.”

“நான் சொன்னதுனால தா எம்மகெங்கிட்ட சரின்னு சொன்னாரு. அவரு சொல்லன்னா மாணிக்கம் எப்படி பாரதி கூட பார்த்திபன் கல்யாணத்த நடத்தி வச்சிருப்பான்.” அகிலா பாட்டி.

என்னங்கடா இது ஒரு குடும்பமே சேந்து ஒருத்தன் கல்யாணத்துல இத்தன தகிடுதத்தோம் வேலை பாத்து வச்சிருக்கு.

தென்றல் வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!