Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-03

அத்தியாயம் -3
மாநிலத் தலைநகரான சென்னையின் புகழ் பெற்ற இருபாலர்கள் இணைந்து படிக்கும் கலைக் கல்லூரி. அந்த வருடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை முடிந்திருந்தது. இன்றைக்கு முதல் நாள் கல்லூரி ஆரம்பம்.
அங்கங்கே ஏப்ரல், மேயிலே பாட்டு பாடியபடி மாணவர்கள் நடக்க, மாணவிகளோ உள்ளுக்குள் ரசித்தாலும், வெளியில் முகத்தைச் சுருக்கியபடி சென்றனர்.
எத்தனை வருடங்கள் கடந்தும் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே பாட்டிற்கு இணை வேறு பாடல்கள் இல்லை. முதல் வருட மாணவர்களுக்கான வரம்பிற்கு உட்பட்ட ராகிங்களும் அங்கே அங்கே நடந்தது.


Advertisement

கல்லூரிப் பேருந்து வர, அதிலிருந்து இறங்கும்போதே அடையாள அட்டையை அணிந்தபடி தான் எல்லோரும் இறங்கினர்.
மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் வருடத்திற்கு ஏற்றவாறு வேறு வேறு நிறங்களில் அடையாள அட்டையும், கல்லூரி நிர்வாகப் பிரிவினருக்கும், பேராசிரியர்களுக்கும் வேறு வேறு நிறங்களில் அடையாள அட்டையும் கொடுக்கப் பட்டிருந்தது.
பேராசிரியர்களில் சிலர் ஒன்றாக பேருந்தில் வருகின்றனர். மாணவர்கள் ஒருபுறமும், பேராசிரியர்கள் ஒருபுறமும் பிரிந்து சென்றனர். பேராசிரியர்களில் பலர் நடுத்தர வயதில் இருக்க, வெகு சிலர் மட்டுமே  பின் இருபதுகளில் இருந்தனர். அதில் நிலவழகியும் ஒருத்தி. கடந்த மூன்று வருடங்களாக இந்த கல்லூரியில் அசிஸ்டண்ட் லெக்சர்ராக வேலைப் பார்க்கிறாள்.

Advertisement

நிலவழகி மாணவர்களுக்கும், சக ஆசிரியர்களுக்கும் நிலா மேம். யாரும் முழுப் பெயர் சொல்வதில்லை. அதை அவளும் அனுமதிப்பதில்லை. சிரித்த முகத்தோடே நிலா மேம்னு சொல்லுங்க போதும்னு சொல்லி விடுவாள் நிலா என்னும் நிலவழகி. அந்த முழுப் பெயர் அவளுக்கு வேறு சிலரை நினைவுப் படுத்துவதால் மற்றவர்களைப் பொருத்தவரை அவள் நிலா மட்டுமே.

Advertisement

சக பேராசிரியர்களோடு பேசியபடி நிலா நடக்க, அவளின் தோழியான ஆதிரை “நிலா, இன்னிக்கு நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு புது புரொஃபசர் வரப்போறதா மெசேஜ் வந்துதே” என்றாள்.
“எஸ் ஆதி. நேத்திக்கு நம்ம ஹெச்ஓடி குரூப்லே போட்டிருந்தாரே.”
“யார், என்னனு தெரியுமா நிலா?”

Advertisement

“யாருக்குத் தெரியும்? நான் மெசேஜ் பார்த்திட்டு குரூப்லே ஒரு தம்ஸ்அப் போட்டேன் அவளோதான். அவரும் பேர், டீடெயில்ஸ் எதுவும் சொல்லலையே”
“உனக்குத் தான் இந்த காஸ்ஸிப் பிடிக்காதே. நாங்க அதுக்கு ஒரு குரூப் வச்சிருக்கோம். அதில் லேடஸ்ட் இன்ஃபர்மேஷன் எல்லாம் வந்திருக்கு”
“ஓ.” எனக் கூறினாள் நிலா.
“என்ன ஓ..  ன்னு நிறுத்திட்ட?”
“வேறே என்ன சொல்ல?”
“யார், பேர் எல்லாம் தெரிஞ்சிக்க ஒரு கியுரியாசிட்டியே இல்லையா?”
“ம்ச். இது பெரிய விஷயமா என்ன? மிஞ்சிப் போனா இன்னும் இருபது நிமிஷத்தில் தெரியப் போகுது? இதுக்கு என்ன கியுரியாசிட்டி வேண்டியிருக்கு?” என்றாள் நிலா.
“ம். நீ தேறவே மாட்ட. உனக்கு வேண்டாட்டியும், எனக்கு சொல்லலைனா மண்டை வெடிச்சிடும்.” என்ற ஆதிரா “அவர் பேர்..” எனக் கூறும்போது, மாணவர்கள் மத்தியில் சலசலப்புக் கேட்க இருவரின் கவனமும் அங்கே சென்றது.
கல்லூரி பேருந்து இல்லாமல், தனியாக தங்களது வாகனங்களிலும் பலர் வந்து கொண்டிருந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவரைச் சுற்றி ஒரு கும்பல் கூடியிருந்தது. அவர்களின் உற்சாகக் குரலில் ஏதோ வண்டியைப் பற்றி எனப் புரிந்தது மற்றவர்களுக்கு.
ஆதிரா “இந்தப் பசங்களுக்கு வண்டி மேலே அப்படி என்னதான் கிரேஸோ? புதுசா ஒரு வண்டியைப் பார்த்தா ஆ னு பார்க்கிறது?” என்றாள்.
“ஹேய், நாம எப்படி சரீஸ் பார்க்கிறோமோ, அப்படி தான் பாய்ஸ்கு. அவங்களோட லைப் டைம் என்ஜாய்மெண்ட்டே வண்டியில் டிராவல் பண்ணறது தான்” என்றாள் நிலா.
இதைச் சொல்லும்போதே நிலாவின் மனதிற்குள் அவனின் குரல்.
“ஹேய்.. அழகி என்ன இப்படிக் கேட்கற? எங்க அப்பா அந்த புல்லட் வண்டியை எப்படி மெயின்டய்ன் செய்வார் தெரியுமா? இப்போவும் புல்லட்டை அவரைத் தவிர யாரும் எடுக்கக் கூடாது. நானும் எதுக்கு எல்லாமோ பெட் கட்டி அவர் கிட்டேயிருந்து வண்டி கேட்கறேன். மனுஷன் அசைய மாட்டேங்குரார்”
“அப்படினா நீங்களும் அதே மாதிரி வண்டி வாங்கிக்க வேண்டியது தானே. நான் வேணும்னா அப்பாவை வாங்கித் தரச் சொல்லட்டுமா?”
“ம்ச். என்னாலே வாங்க முடியாதா என்ன? பழைய காலத்து வண்டி மாதிரி வராதுமா. அதோட அவருக்கு அது பொக்கிஷம். அதை அவர் கிட்டேயிருந்து வாங்கறது எனக்குப் பெருமை. பார்க்கலாம். நிச்சயம் ஒருநாள் நடக்கும்”
இந்த பேச்சுக்கள் எல்லாம் நினைவில் ஓடியது. இப்போது சாதரண பேச்சுக்கள் என்று தோன்றினாலும், அன்றைக்கே இவை எல்லாம் அவனின் குணத்தை எடுத்துச் சொல்லியது என நிலாவிற்குப் புரியவில்லை.
ஒரு பெருமூச்சுடன் நிலாவும், ஆதிராவும் தங்கள் நடையைத் தொடர, மாணவர்கள் ஓ என்ற சத்தத்துடன் அந்த வண்டிக்கு வழிவிட்டனர்.
அந்த வண்டியில் அமர்ந்திருந்தவர் ஹெல்மெட் அணிந்திருக்க முகம் தெரியவில்லை. வண்டியின் பின்புறம் மட்டுமே பார்த்த நிலாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அது திருச்சி ரிஜிஸ்டிரேசன் நம்பர். மேலும் இந்த வண்டியும் அவளுக்குப் பழக்கமான ஒன்றாகவேத் தெரிய அவளுக்குள் திகைப்பு.
நிலா நகராமல் நிற்கவும், “நிலா, டைம் ஆச்சு.” என்றாள் ஆதிரா. அதில் சுதாரித்த நிலா ஆதிராவோடு தங்களது ஸ்டாஃப் ரூம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.
ஏற்கனவே மற்ற பேராசிரியர்கள் வந்திருந்தனர். அன்றைக்குத் தான் அந்த வருடத்தின் முதல் நாள் என்பதால், எல்லா டிபார்ட்மெண்ட் பேராசிரியர்களுக்கும் ஒரு சின்ன மீட்டிங் நடக்க இருந்தது. அதனால் தங்கள் பொருட்களை அவர்கள் இடத்தில் வைத்து விட்டு, மொபைல் மட்டும் எடுத்துக் கொண்டு மீட்டிங் ஹால் நோக்கிச் சென்றனர்.
கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் இருவரும் வழக்கமான வரவேற்புரை, கல்லூரியின் வரலாறு எனச் சில நிமிடங்கள் பேசிவிட்டு, எல்லோரையும் அனுப்பி வைத்தனர்.
பின் அவர்கள் டிபார்ட்மெண்ட் ஹெட் தனது அறைக்கு மற்ற பேராசிரியர்களை அழைத்தார்.
“குட் மார்னிங் ஆல். நேத்திக்கு நம்ம குரூப்லே புது லெக்சரர் வரார்னு மெசேஜ் பண்ணியிருந்தேன் இல்லையா. இவர் தான் மிஸ்டர். எழிலன்” என்று கூற, நிலா சட்டென்று அதிர்ந்து பார்த்தாள். அதே நேரம் எழிலனின் பார்வை முழுதும் அவளிடமே இருந்தது.
கடந்த இரு நாட்களாகவே நிலா ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வுகளில் சிக்கியிருந்தாள். எதையோ நினைத்து அவள் மனம் ஏங்கியதோ அல்லது எதிர்பார்த்ததோ என அவளுக்கேப் புரியவில்லை. பின் விடுமுறையில் வீட்டில் சும்மா இருப்பதால் தேவையில்லாத சிந்தனைகள் வருகிறது. கல்லூரி செல்ல ஆரம்பித்ததும் சரியாகிவிடும் என தன்னைத் தேற்றிக் கொண்டாள் நிலா.
நிலாவிற்கு இன்றைக்கு எழிலனை இங்கேப் பார்த்ததும், தன் உள்ளுணர்வு இதைத் தான் கூற வந்ததோ என்ற எண்ணம் தோன்றியது.
இவர்களின் டிபார்ட்மெண்ட் ஹெட் மேலும் ஏதோ பேச நிலா எழிலனைப் பாராமல் அவரைக் கவனித்தாள்.
டிபார்ட்மெண்ட் ஹெட் ஒவ்வொருவரையும் பெயரைக் கூறி எழிலனுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தார்.
ஆதிராவை அறிமுகப்படுத்த, அவள் “ஹலோ, வெல்கம் சர்” எனக் கூறினாள்.
“தாங்க்ஸ் மேடம்” எனப் பதில் கூறினான் எழிலன்.
நிலாவினை அறிமுகப்படுத்த வர எழிலன் “நிலவழகி மேடம்” என அவனே பெயரைக் கூறினான். அதிலும் அந்த அழகிக்குக்  கொடுத்த அழுத்தத்தில் நிலா சட்டென்று நிமிர்ந்து முறைத்துப் பார்த்தாள்.
எழிலனோ லேசாக கண் ஓரம் மட்டும் சுருங்க, அவளைப் பார்த்துச் சிரித்தான். அதில் இன்னுமே கோபம் கொண்டு ஏதோ சொல்ல வர, டிபார்ட்மெண்ட் ஹெட் பேச்சில் நிறுத்தினாள்.
“நிலா மேடமை ஏற்கனவே தெரியுமா எழிலன்?”
“தெரியும் சர்.” என்றவுடன் என்ன சொல்லப் போகிறான் என திடுக்கிட்டுப் பார்த்தாள் நிலா.
எழிலன் அவளைப் பார்த்தபடியே “நிலா மேடம் எங்க காலேஜ்லே தான் யு.ஜி படிச்சாங்க. எனக்கு ஜூனியர் தான்” எனக் கூற, நிலா பெருமூச்சு விட்டாள்.
இப்போது டிபார்ட்மெண்ட் ஹெட் “எஸ் எஸ். ஐ ரிமெம்பர். அவங்க இன்ஃபர்மேஷன்லே பார்த்த நியாபகம் இருக்கு. வெல். நிலா நீங்களும், மற்ற எல்லோரும் சேர்ந்து கோஆர்டினேட் பண்ணி, எழிலனுக்கு சப்போர்டிவா இருங்க” என்றார்.
அது ஒண்ணு தான் குறைச்சல் என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியில் புன்னகையுடன் “கண்டிப்பா சர்” என்றாள்.
பின் எழிலன் புறம் திரும்பி “ஹலோ சீனியர். இங்கேயும் எனக்கு சீனியரா வந்தததிற்கு வாழ்த்துகள்” எனக் கூறினாள்.
“தாங்க்ஸ் நிலவழகி மேடம். இனிமே ஒண்ணா தானே வொர்க் பண்ணப் போறோம். பார்த்துக்கலாம்” என்றான் எழிலன்.
“சர், என்னை நிலானு கூப்பிட்டால் போதும். ஃபுல் நேம் சொல்லணும்னு அவசியம் இல்லை.”
“நீங்க ஜூனியரா இருக்கும்போது அப்படிக் கூப்பிட்டதா தான் நியாபகம்”
“இருக்கட்டும் சர். இங்கே எல்லாருக்கும் நான் நிலா தான். சோ நீங்களும் அதையே கன்டினியூ பண்ணினா பெட்டர்”
“ம். சரி நிலா மேடம். பார்த்துக்கலாம்” என மீண்டும் கூறிவிட்டு அடுத்த நபரை அறிமுகமாக்கிக் கொள்ளச் சென்றான்.
நிலாவின் மனமோ ‘சப்பா. இப்போவே கண்ணைக் கட்டுதே’ என்ற நிலையில் இருந்தது.
எல்லோரிடமும் அறிமுகம் முடிந்ததும், டிபார்ட்மெண்ட் ஹெட் மீண்டும் பேசினார்.
“மிஸ்டர் எழிலன், திருச்சி அருகில் புகழ் பெற்ற கலைக் கல்லூரியில் பேராசிரியாராக இருந்திருக்கிறார். ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி முடித்து விட்டு, மேலும் ஒரு ஆராய்ச்சி செய்வதற்காக சென்னை வந்திருக்கிறார். அப்படியே நம் கல்லூரியிலும் பேராசிரியராக சேர்ந்திருக்கிறார். அவரை எனக்கு உதவியாகவும் இருக்கச் சொல்லி மேனேஜ்மெண்ட் மூலம் பர்மிஷன் வாங்கியிருக்கிறேன். நம்ம டிபார்ட்மெண்ட் சம்பந்தபட்ட எந்த விஷயமும் இவர் மூலமும் நீங்க சால்வ் பண்ணிக்கலாம்.” என்றார் டிபார்ட்மெண்ட் ஹெட்.
நிலா தனக்குள், இது வேறேயா என நினைத்தாள்.
அறிமுகப்படலங்கள் முடிந்த பின் அவரவர் வேலைக்குத் திரும்பலாம் என தலைவர் சொன்னதும், தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
ஆதிரா, நிலா இருவரும் ஒன்றாகச் சென்றனர்.
“நிலா, புதுசா வந்திருக்கிற புரொஃபசர் உன்னோட சீனியர்னு சொல்லவே இல்லையே?” எனக் கேட்டாள்.
“ஹேய்.. எனக்கே இப்போதான் தெரியும். நீ வேறே?”
“சரி. சரி. சர் காலேஜ்லே எப்படி? பார்க்க ஆளு ஸ்மார்ட்டா இருக்கார். அப்போ இன்னும் சார்மிங்கா இருந்திருப்பார். எக்கச்சக்க மேட்டர் ஓடியிருக்குமே. அதை எல்லாம் டைம் இருக்கும்போது  ஒண்ணு ஒண்ணா சொல்லு. தெரிஞ்சிக்கிட்டா அவசர ஆத்திரத்துக்கு உதவும்” என்றாள் ஆதிரா.
“எதுக்கு? அதை அப்படியே உன்னோட குரூப்லே போட்டு காஸ்ஸிப் பண்ணவா? எனக்கு எதுவும் தெரியாது. தெரிஞ்சாலும் சொல்ல மாட்டேன். கிளாஸ் ஆரம்பிக்கிற டைம் ஆச்சு. போகலாம்” எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள் நிலா.
ஆதிராவிடம் கூறிவிட்டாலும், நிலாவின் எண்ணங்களோ எழிலனைச் சுற்றித் தான் சென்றது. எழிலனை முதல் முதலில் பார்த்த நினைவுகள் வந்தது. அவளின் இளங்கலைப் படிப்பின் முதல் நாள் மேடையில் கடவுள் வாழ்த்துப் பாடியது எழிலன் தான். ‘சிவமயமாகத் தெரிகிறதே’ பாடல் பாடினான். அந்த நிமிடம் அவன் குரலில் விழுந்தவள் தான் நிலா.  வெளியில் ஏதோ சத்தம் கேட்டு தலையைக் குலுக்கித் தன்னைச் சரி செய்துக் கொண்டாள் நிலா.
நிலா சென்றபிறகு அவர்களின் ஹெச்ஓடி எழிலனிடம் “மிஸ்டர் எழிலன், உங்க ஜூனியர்தான் நிலானு சொன்னீங்க. அவங்களைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்னு தெரியலை. அவங்க மேரீட் அண்ட் சிங்கிள் பேரண்ட். அவங்க ஃபேமிலி பெரிய இன்டஸ்ட்ரியிலிஸ்ட். நிலாவோட ஆசைக்காக இங்கே வேலைக்கு அனுப்பாறாங்க. நம்ம காலேஜ் ஓனருக்கு ரொம்பவே வேண்டியவங்க. யார் இந்த டிபார்ட்மெண்ட் வந்தாலும், அவங்களுக்கு எந்த டிஸ்டர்பன்ஸ் இருக்கக் கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்கார். வேலை தவிர வேறே எதுவும் அவங்க கிட்டே பேசக் கூடாதுனு ஆர்டர். இது உங்களுக்கு ஒரு இன்ஃபர்மேஷனா சொல்றேன்” என்றார்.
எழிலன் மனதிற்குள் இன்னும் இந்த பில்ட்டப் வேலையை நிலா குடும்பத்தினர் விடவில்லையா எனக்  கடுப்பானான்.
ஹெச்ஓடி நிற்பதை உணர்ந்தவனாக “சூர் சர். நான் அப்படிப்பட்டவன் இல்லை. அவங்களை எதுவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்றான் எழிலன்.
“சாரி மிஸ்டர் எழிலன். உங்களை மட்டுமா குறிப்பிட்டுச் சொல்லலை. இது பொதுவான இன்ஸ்ட்ரக்ஷன் தான்” என்றார் ஹெச்ஓடி.
எழிலனும் “எனக்குப் புரியுது சர். டோன்ட் வொர்ரி” எனப் பதில் கூறினான்.
இந்த வருடமும் முதல் வருட வகுப்பே நிலாவிற்கு  முதல் வகுப்பாக இருந்தது. முதலில் மாணவர்களோடு அறிமுகங்களை முடித்துக் கொண்டு, வரலாறு தான் இவர்களின் பாடம் என்பதால், அதைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் கூறினாள்.
நிலாவின் வகுப்பு முடிந்து மணி அடிக்கவும், “நாளைக்குப் பார்க்கலாம் ஸ்டூடண்ட்ஸ்” எனக் கூறிவிட்டுக் கிளம்பினாள்.
அன்றைய நாள் முழுதும் எல்லா வகுப்பிற்கும் சென்று இன்ட்ரோ கிளாஸ் முடித்துவிட்டு மாலையில் கிளம்பத் தயாரானாள் நிலா.
ஆதிரா, நிலா இருவரும் கல்லூரி பேருந்து நோக்கி வர, பட படவென புல்லட் சத்தம். அதைப் பார்த்ததும் தான் காலையில் மாணவர்கள் சூழ தரிசனம் கொடுத்தது எழிலன் தான் என இருவரும் புரிந்துக் கொண்டனர்.
எழிலன் வெளியே செல்ல, மற்ற இருவரும் பேருந்தில் ஏறினர். நிலாவிற்குள் ஒரு குறுகுறுப்பு. எழிலன் சென்னையில் எங்கே தங்கியிருக்கிறான் என யோசித்தாள்.
ஆதிராவிற்கு தெரிந்திருக்கலாம். இதற்குள் அவளின் வம்பர் மகா சபை எழிலனின் மொத்த பயோடேடாவும் எடுத்திருப்பார்கள். கேட்கலாமா என்று நினைத்தவளுக்கு, அதுவே ஆதிராவிற்கு சந்தேகத்தைத் தூண்டிவிடுமோ என எண்ணி விட்டுவிட்டாள்.
வேளச்சேரி ஸ்டேஷன் அருகே நிலா, ஆதிரா மற்றும் சில மாணவர்கள் இறங்கினர்.
“நிலா, அப்பா வந்துடுவாங்களா?” எனக் கேட்டாள் ஆதிரா.
“வந்துருவாங்க ஆதி. வீட்டிலிருந்து கிளம்பிட்டதா மெசேஜ் பண்ணினாங்க.” எனப் பதில் கூறினாள் நிலா.
அப்போது படபடவென ஒலிக்கும் புல்லட் சவுண்ட் கேட்க, ஆதிரா ஆச்சரியத்துடன் திரும்பினாள் என்றால், நிலாவிற்கோ இங்கே எங்க வருகிறார் எழிலன் எனக் கேள்வி குடைந்தது.
ஆதிரா புல்லட் பார்த்துவிட்டு நிற்க, நிலா அவஸ்தையுடன் நெளிந்தாள்.
இவர்கள் அருகில் வந்ததும், வண்டியை நிறுத்தி விட்டு ஹெல்மெட் கழற்றினான் எழிலன்.
“ஹலோ ஆதிரா மேடம், என்ன இங்கே நீக்கறீங்க?” எனக் கேட்டான் எழிலன்.
“என் கியூட்டியை இங்கே தான் விட்டுட்டு வருவேன். அதை கூட்டிட்டுக் கிளம்பனும்.”
“ஓ. உங்க சைல்ட் இங்கே வெயிட் பண்ணுவாங்களா?”
“சர். எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை” என்றாள் ஆதிரா.
“அப்போ கியூட்டினு சொன்னீங்க?” என எழிலன் கேட்கவும், நிலா சத்தமாகச் சிரித்து விட்டாள்.
நிலாவின் சிரிப்பை ஆதிரா அறியாமல் எழிலன் பார்க்க, ஆதிராவோ “என்ன சிரிப்புனு கேட்டேன்?” என நிலாவைக் கேட்டாள் ஆதிரா.
“நானாவது எதுவும் பெட் அனிமல் நேமானு தான் கேட்டேன். இவர் உன் கியூட்டியைப் போய் சைல்ட்னு சொல்லவும் சிரிப்பு வந்துடுச்சு.” என மீண்டும் சிரித்தாள் நிலா.
“ஓய். என் கியூட்டியைக் கிண்டல் பண்ணின, அப்புறம் நான் ஒரு ரைட் ஓட்டறேன்னு கேட்கும்போது தரமாட்டேன் பார்த்துக்கோ” என்றாள் ஆதிரா.
எழிலன் அவர்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்ப்பதை உணர்ந்து ஆதிரா லேசாக வழிந்தபடி “கியூட்டி என்னோட ஸ்கூட்டி பேர் சர்” என்றாள்.
இப்போது எழிலனும் சிரித்து விட்டான். “வண்டிக்கு இப்படிப் பேர் வச்சு நான் கேட்டதில்லை” என்றான் எழிலன்.
“அதே தான் சர். சின்ன வயசிலிருந்து வண்டி ஓட்டனும்னு ஆசை. வீட்டில் விடலை. நான் வேலைப் பார்த்து என்னோட சம்பளத்தில் இஎம்ஐ போட்டு வாங்கின வண்டி. அதான் கியூட்டினு பேர் வச்சேன். அதுக்கு இந்த நிலா பெட்ஸ்கு வைக்கிற பேரை வண்டிக்கு வச்சிருக்கனு ஒரே கிண்டல். என்னைப் பொறுத்தவரை என்னோட பெட் கியூட்டி தான்” எனக் கூறவும்,  “சாரி ஆதிரா மேடம். எனக்கு உங்க பீல் புரியுது” என்றான் எழிலன்.
அதற்குள் நிலாவிற்கு ஃபோன் வர எடுத்துப் பேசினாள்.
“ஓ. நீ வந்திருக்கியா? சரி. ஸ்டேஷன் வாசலில் இருக்கிற எடிஎம் கிட்டே நிக்கறேன்.” எனப் பேசினாள் நிலா.
மறுமுனையில் ஏதோ மீண்டும் பேச “சரி. சரி. இன்னும் இருட்டலை. சூரிய வெளிச்சம் நிறைய இருக்கு. இருந்தாலும் லைட் வெளிச்சம் வர இடத்தில் தான் இருக்கேன் போதுமா” என்றபடி ஃபோனை வைத்தாள் நிலா.
ஆதிரா “யாருடி உன் பாசமலரா?” எனக் கேட்டாள்.
“அவனே தான். அப்பாவை வரச்சொன்னா அவனை அனுப்பி விட்டுருக்கார். போற வழியெல்லாம் அட்வைஸ் பண்ணியேக் கொல்வான்” என்றாள் நிலா.
“நல்லா வேணும். என் கியூட்டியைக் கிண்டல் பண்ணின தானே. நல்லா அட்வைஸ் மழை பொழியட்டும்” எனக் கூறிவிட்டு ஸ்டேஷன் உள்ளே சென்றாள்.
ஆதிரா ஸ்டேஷனில் விட்ட வண்டியை எடுக்கும் நேரத்திலும் எழிலன் அங்கேயே நிற்க, நிலாவின் மனம் படபடத்தது.
இவர் இங்கேயே ஏன் நிக்கறார் என யோசிக்கும் போதே ‘கடவுளே, இப்போ அந்த வளந்தவன் வேறே வருவானே. ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம். இங்கே பார்த்திட்டு என்ன சொல்லுவானோ’ எனப் பதறினாள் நிலா.
“ஏன், உன் பாசமலர் என்னை என்ன பண்ணிடுவான்?” என எழிலன் கேட்டதும் திடுக்கிட்டாள்.
இத்தனையும் அவள் மனதுக்குள் பேசுகிறாள் என்று நினைத்திருக்க, நிலாவோ வெளிப்படையாக முணுமுணுத்திருக்கிறாள். அது எழிலன் காதிலும் விழுந்திருக்கிறது என இப்போதுதான் புரிந்தது நிலாவிற்கு.
-தொடரும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!