Skip to content
Post Views: 510
வசீகரன் அழைப்பை துண்டித்ததால் சின்னபொண்ணு உடனடியாக, சரவணன் மற்றும் நடராஜன் இருவருக்கும் போன் செய்து விவரம் சொன்னாள். அவர்களும் வசீகரன் சொன்ன பதிலை தான் சொன்னார்கள்.
ரஞ்சனிக்கு போன் செய்த போது, “அண்ணி அம்மாவுக்கு கேஸ்டிரிக் பிரச்சனைனால நெஞ்சுவலினு நினைச்சுக்குவாங்க. கப்போர்ட்ல கேஸ் மாத்திரை இருக்கு பாருங்க. அதை கொடுங்க. சரியாயிடும்” என்று அவளும் அழைப்பை துண்டித்திருந்தாள்.
Advertisement
என்ன செய்வதென்று தெரியாமல் ரஞ்சனி சொன்ன மாத்திரையை அலமேலுவுக்கு கொடுத்தாள். ஆனால் அலமேலு உடனே அதை வாந்தி எடுத்து விட்டு வலியில் அதிகமாக துடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் உடல் வியர்வையில் மொத்தமாக நனைந்து விட்டது.
Advertisement
அறையில் இருந்தபடி, “காளியப்பா” என்று உரக்க கத்தினாள். அவர் ஓடி வந்ததும் “வெளியில எதாச்சும் ஆட்டோ இருந்தா சீக்கிரம் கையோட கூட்டிட்டு வாங்க” என்றாள்
Advertisement
அவரும் தலைதெறிக்க ஓடி சென்றார். அவர் வருவதற்குள் சின்னபொண்ணு அலமேலு பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் அவரின் மருத்துவ அறிக்கைகளை தேடி எடுத்து வைத்தாள். காளியப்பா ஆட்டோ டிரைவருடன் வீட்டிற்குள் ஓடி வர, மூவருமாக அலமேலுவை தூக்கி கொண்டு ஆட்டோவில் ஏற்றினார்கள்.
Advertisement
சின்னபொண்ணு அலமேலுவை தன்மடியில் கிடத்திக் கொண்டு, “அத்தே பயப்படாதீங்க. எதுவும் ஆகாது” என்று மந்திரம் போல மருத்துவமனை அடையும் வரை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தாள். ஆனால் அதற்குள் அலமேலு மயங்கி இருந்தார்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தபோது அவர்கள் முதலுதவி செய்துவிட்டு ஐசியூவிற்கு கொண்டு சென்றார்கள்.
வசீகரனுக்கு மனம் நெருடலாகவே இருந்ததால் மீண்டும் மனைவிக்கு அழைத்தான். அழைப்பை ஏற்றவள் ஓவென்று அழவும், “என்னாச்சு சின்னு” பதட்டத்துடன் கேட்டான்.
“என்கூட பேசாதே போ” என்று அழுதுக் கொண்டே கைப்பேசியை காளியப்பாவிடம் கொடுத்துவிட்டாள்
“வசி தம்பி, உங்கம்மாவுக்கு ரொம்ப முடியாம போயிடுச்சுப்பா. ஆஸ்பத்திரிக்கு கொண்டாந்துருக்கோம். ஐசியூக்கு இட்டுக்குனு போயிருக்காங்க. பாவம் பாப்பா ரொம்ப பயந்துடுச்சு” என்றதும் தலையில் கைவைத்துக் கொண்டவன் மருத்துவமனை பெயரை கேட்டுக் கொண்டு உடனே கிளம்பினான்.
வசீகரன் பதட்டத்துடன் காரில் ஏறி செல்லும் வழியிலேயே குடும்பத்தினருக்கு கைப்பேசியில் அழைத்து விவரம் சொல்ல அனைவரும் உடனே மருத்துவமனைக்கு கிளம்பி விட்டனர்.
வசி மருத்துவமனையை அடைந்தபோது சின்னு ஐசியூ எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“சின்னு” என்று குனிந்து அவள் தோளை தொட்டதும், அவன் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள்.
“அத்தைக்கு முடியலனு சொன்னா, ஏன் எல்லாரும் நம்பாம ஒரே மாதிரி பேசறீங்க? அவங்களுக்கு எதாச்சும் ஆயிட்டா என்ன பண்றது?” என்று அவன் மார்பில் சாய்ந்து கதறி அழுதாள்.
“நான் வந்த நேரம் மாமியாரும் போயிட்டாங்கனு சொல்லுவாங்களே, அதுகூட பரவாயில்ல, என்னையெல்லாம் திட்டறதுக்கு கூட எங்க வீட்ல அம்மாவோ பாட்டியோ இல்ல, இவங்க திட்டினா கூட அத்தைங்கிற உறவுல பெரியவங்கனு இருக்காங்களேனு நான் நினைச்சிட்டு இருந்தேன். அவங்க வலியில துடிச்சத பாத்து எனக்கு பயமா இருந்துச்சு மாமு.
என் அப்பா கூட இப்படி தானே நெஞ்சுவலியில துடிச்சிருப்பாரில்ல? அவர் துடிக்கறது தெரியாம நான் மாட்டு கொட்டகையில லஷ்மி கூட இருந்துட்டேனே. வலியில கத்த கூட முடியாம அவர் உயிர் பிரிஞ்சதே எனக்கு தெரியலயே. நான் போய் பாக்கலனா அத்தையும் அப்படி தானே போயிருப்பாங்க. வீட்ல இத்தனை பேரு இருந்தும் நாம அவங்கள அம்போனு விட்டா எப்படி மாமு?” என்று அவள் அவன் மார்பில் சாய்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே நடராஜன், சரவணன், ரஞ்சனி மூவரும் வந்திருந்தார்கள்.
அவள் மிகவும் பயந்து போயிருக்கிறாள் என்று புரிய அவளின் தலையை தடவி விட்டு, “அம்மாவுக்கு எதுவும் ஆகாது சின்னு, வா போய் டாக்டர்கிட்ட பேசிட்டு வருவோம்” என்று அவளையும் அழைத்துக் கொண்டு மருத்துவரை காண சென்றார்கள்.
“சிவியர் அட்டாக் தான் வந்திருக்கு. இந்த பொண்ணு கரெக்ட்டான நேரத்துல கொண்டு வந்து சேர்த்துட்டாங்க. அஞ்சு நிமிஷம் லேட் ஆகியிருந்தாலும் காப்பாத்தியிருக்க முடியாது. ரெண்டு நாள் அப்ஷர்வேஷன்ல இருக்கட்டும். மெடிசனே இப்போதைக்கு போதும், தேவைப்பட்டா ஆஞ்சியோ பண்ணிக்கலாம்”
மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு அனைவரும் ஐசியூவிற்கு முன்னால் வந்தார்கள். வசீகரன் லதாவிற்கும் தகவல் சொல்லியிருந்தால் அவள் ஆதிக்கை தூக்கி கொண்டு வந்திருந்தாள்.
சரவணன் அவளை கண்டு முகத்தை திருப்பி கொள்ளவும் குழந்தையை இறக்கி விட்டாள். அவன் தத்தி தத்தி நடந்து தன் தந்தையை நோக்கிசெல்லவும் முதன் முறையாக யார் உதவியுமின்றி நடந்து வரும் மகனின் நடையில் சரவணனின் உள்ளம் துள்ளியது. அவன் தளிர்நடையிட்டு விழுந்து விடாமல் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் போதெல்லாம் அவன் தடுமாறி விழக்கூடாதே என்று தந்தையின் மனம் பதறியது. இதற்கு மேல் மகனின் பிஞ்சுகால்களை நோக விடக்கூடாது என்று ஓடிச்சென்று அவனை தூக்கி உச்சிமுகர்ந்தான்.
லதா சின்னபொண்ணுவின் அருகில் அமர்ந்து அலமேலுவின் உடல்நலத்தை பற்றி விசாரித்தாள்.
“நீயும் உன் மாமியாரும் பண்ண காரியத்தினால உண்மையாவே நெஞ்சுவலி வந்தாலும் நடிப்புனு நாங்க நினைச்சுட்டோம். வேண்டா மட்டும் சுதாரிக்காம இருந்திருந்தா அம்மா போயிருப்பாங்க. நாங்களும் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியில இருந்திருப்போம். இதுக்கு தான் சொல்றது, பொய் சொல்றதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு. பொய்யா நடிச்சது இப்போ உண்மையாயிடுச்சு பாத்தியா?” சரவணன் லதாவை குத்திக் காட்டி பேசவும் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அன்றிரவு முழுவதும் அனைவருமே மருத்துவமனையில் உறங்காமல் இருந்தனர். மறுநாள் காலை அலமேலு கண்விழித்ததும் அனைவரும் அவரை பார்க்க சென்றார்கள். அவர் யாரையும் பார்க்காமல் சின்னபொண்ணுவை தீர்க்கமாக பார்க்கவும் அவள் அவரருகே சென்றாள்.
“நான் சொல்றதும் செய்யறதும் தான் சரின்னு யாருக்கும் அடங்காமலே வாழ்ந்துட்டேன். ஆரம்பத்துல என் புருஷன் என்னை திட்டி அடிச்சு பாத்துட்டு, போய் தொலைனு விட்டுட்டாரு. அவர் என்னை திட்டி அடிச்சிருந்தா கூட எனக்கு புத்தி வந்திருக்குமானு தெரியாது. ஆனா யாருமே என்கிட்ட பேசாம மெளனமா இருந்தத தான் என்னால தாங்கிக்கவே முடியல.
நான் எவ்வளவு துரோகம் பண்ணியும் நீ என்னை ஒரு வார்த்தை கூட கேள்வி கேக்கல. உனக்கு முழுவிவரம் தெரியாதுனு மிதப்புல இருந்தேன். ஆனா ஒரு கட்டத்துல உனக்கு விஷயம் தெரிஞ்சிருக்குனு தெரிஞ்சதும், நீயேன் என்னை கேள்வி கேக்காம மெளனமா ஒரு பார்வை மட்டும் பாத்துட்டு போறேனு எனக்குள்ள குடைஞ்சிட்டே இருந்துச்சு.
இவங்க எல்லாம் என்னை திட்டினது கூட எனக்கு பெரிசா தெரியல. உன்னோட மெளனம் தான் எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. அப்போ இருந்தே நெஞ்சுல பாறாங்கல்ல ஏத்தி வச்ச மாதிரி பாரம். அந்த பாரத்த சுமந்துட்டு இருந்த எனக்கு, உன்கிட்ட மன்னிப்பு கேட்டா அது குறைஞ்சுடும்னு தெரியவே இல்ல.
அன்னைக்கு சரவணன் லதாவ கேள்வி கேட்டு ஒரு அறைவிட்டதும், அவ உடனே மன்னிச்சிடுங்கனு கேட்டுட்டா. உன்கிட்டயும் மன்னிப்பு கேட்டிருப்பானு நினைக்கிறேன். ஆனா நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பும் கேக்காம குற்ற உணர்ச்சிய உள்ள வச்சுக்கிட்டு புழுங்கிட்டு இருந்தேன். திடீர்னு நெஞ்சுவலி வந்ததும் என் புருஷன் எப்பவும் சொல்ற கர்மா தான் நினைவுக்கு வந்துச்சு. நான் செஞ்ச பாவம், சொன்ன பொய் எனக்கே தானே வந்து சேரும்? அதனால இந்த முறை நெஞ்சுவலினு சொல்லாமலே போயிடலாம்னு நினைச்சேன்.
ஆனா நீ என்னை பாத்துட்டு பதறிட்டு வந்தப்போ ஐயோ இந்த தங்க புள்ளையவா வேணாம்னு நினைச்சேன்னு இன்னும் நெஞ்சில பாரம் கூடிருச்சு. வீட்ல அத்தனை பேரும் நான் நடிக்கறேன்னு உன்கிட்ட சொன்னாலும் நீ என்னை தூக்கி உன் மடியில வச்சிட்டு கதறி அழுதப்போ நான் செத்துட்டேன்மா. அலமேலுங்கிற கர்வி முழுசா சிதறி சின்னாபின்னமாகிட்டா.
உன் அப்பா உயிரு போக ஒரு வகையில நான் காரணம்னு தெரிஞ்சும் நீ என் உயிரை காப்பாத்த துடிச்சே பாரு? செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு. உன்கிட்ட மன்னிப்பு கேக்காம போனா என் கட்டை வேகாதுனு அந்த நிமிஷம் தோணுச்சு. சாகறதுக்குள்ள உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு செத்துட்டா கூட பரவால்லனு நினைச்சேன்.
நீ என்னை ஆட்டோவுல மடியில வச்சிட்டு அழுதப்போ, மன்னிச்சிடுனு சொல்லிடணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன். என்னால பேசவே முடியல. ஐயோ மன்னிப்பு கேக்கறதுக்கு எத்தனையோ வாய்ப்பு இருந்தும் கேக்காம விட்டுட்டேனே. இப்போ மன்னிப்பு கேக்க நினைச்சாலும் என்னால கேக்க முடியலயே. ஒரே ஒரு தரம் எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்ட பின்னாடி என் உசுர எடுத்துக்கோ இறைவானு நான் வேண்டிக்கிட்டேன். அதுக்கப்புறம் எனக்கு எதுவுமே நினைவில இல்ல. என்னை தயவுசெஞ்சு மன்னிச்சிடும்மா” என்று இருகரம் கூப்பிய அலமேலுவின் விழிகளில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
“அத்தே ரொம்ப எமோஷனலா பேசாதீங்க. உங்க உடம்புக்கு நல்லதில்ல. உங்க பையனுக்கு பெரிய இடத்து பொண்ணை கட்டிவைக்கணும்னு நீங்க நினைச்சிருக்கீங்க. அத கூட தாங்க முடியாத அளவுக்கு என் அப்பாவோட இதயம் பலவீனா இருந்திருக்கு. நானும் அவர் பக்கத்துல இருந்திருந்தா உங்கள காப்பாத்தின மாதிரி அவரையும் காப்பாத்தியிருக்கலாமேனு இப்போ தோணுது. ஆனா நடந்ததை மாத்த முடியாதே” என்றாள் பெருமூச்சுடன்
“முத்துமாணிக்கம் அண்ணன் சாகறதுக்கு நான் தான் காரணம்ங்கிற இருந்தத மறந்துட்டு உன்னை வேலைக்காரியா நடத்தினேன், எங்கே உன்னை வசி கல்யாணம் பண்ணிக்குவானோனு நெஞ்சுவலினு நாடகம் ஆடினேன். இதுக்கெல்லாம் எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் செஞ்சதுக்கு மன்னிப்பு இருக்கானு தெரியல. ஆனா மன்னிப்பு கேக்கறத தவிர எனக்கு வேற வழி தெரியல” என்றார் அனைவரையும் பார்த்து.
அலமேலு தவறே செய்துவிட்டாலும் கடைசி வரைக்கும் தான் செய்தது சரிதான் என்று வாதாடுவாரே தவிர தன் தவறை ஒத்துக்கொண்டு இதுவரையில் மன்னிப்பு என்ற வார்த்தையை அவர் கேட்டதே இல்லை. அதனால் அவர் உண்மையாகவே தன் தவறை உணர்ந்து வருந்தியிருக்கிறார் என்று நடராஜன் உணர்ந்துக் கொண்டார்
“பரவால்ல அலமு, நடந்தது நடந்து போச்சு. இனிமேலாச்சும் வீட்டுக்கு வந்த மருமகளுங்கள உன் மகளா நினைச்சுக்கோ. உனக்கு நெஞ்சுவலினு சின்ன மருமக போன் பண்ணப்போ நாங்க நிஜமாவே நம்பல. வசி போன் பண்ணப்போ கூட முழு நம்பிக்கை இல்ல. இவ நடிக்கிறானு தான் நினைச்சிட்டு வந்தேன். உன்னால சரவணனும் லதாவும் வேற பிரிஞ்சிட்டாங்க” என்றார் நடராஜன்
“சரவணா தப்பெல்லாம் என்மேல தாண்டா. லதாவ மன்னிச்சிடுடா” என்று அலமேலு சொல்லவும் அமைதியாகவே நின்றிருந்தான்.
மருத்துவர் வந்து, “அவங்களை நிறைய பேச வைக்காதீங்க, எல்லாரும் வெளியே இருங்க” என்றதும் அனைவரும் வெளியே வந்து அமர்ந்தனர்.
சரவணனும் வசீகரனும் ஒன்றாக ஒரு இடத்தில் நின்றிருந்தனர். லதா இருவரிடமும் சென்று பேசலாம் என்று அவர்களை நோக்கி சென்றாள்.
அவள் வருவதை கண்டு சரவணன் வேறுபக்கமாக செல்ல, வசீகரன் அவன் பின்னாலேயே சென்றான்.
“சரவணா, தப்பு செஞ்சவங்கள ஒதுக்கி வைக்கணும்னு நினைச்சா எல்லாரும் தனியா தான்டா வாழணும். அம்மாவும் தான் தப்பு செஞ்சாங்க. அவங்களையும் வீட்டை விட்டு துரத்த வேண்டியது தானே, ஏன்டா துரத்தல?”
சரவணனிடம் பதில் இல்லை
“ஏன்னா ஒரு மகனா உன் அம்மாவ உன்னால துரத்த முடியாது. வேற வீட்ல இருந்து கட்டிட்டு வந்ததால அண்ணிய உன்னால ஈசியா துரத்த முடிஞ்சிச்சு இல்ல? அவங்க செஞ்சது தப்பு தான். இல்லங்கல. அதுக்காக அவங்களோட உறவே வேணாம்னு முடிவெடுக்கறது எல்லாம் ரொம்ப அதிகம்டா.
கொஞ்சம் யோசிச்சு பாரு. காலேஜ் படிக்கும் போது நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு உருகி உருகி லவ் பண்ணீங்க? பணக்கார வீட்ல பொறந்திருந்தாலும் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உன்கூட வர அண்ணி தயாரா இருந்தாங்க. அவங்க வீட்ல சொத்து எதுவும் தரமாட்டேன்னு மிரட்டினதுக்கு கூட நீதான் வேணும்னு நின்னு உன்னை கல்யாணம் கட்டிக்கிட்டாங்க. இதெல்லாம் மறந்து போச்சாடா?
உன்னை நம்பி வந்தவங்கள வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னது தப்பு சரவணா. எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள வச்சி பேசியிருந்திருக்கணும். அவங்களும் தான் உன் அளவுக்கு படிச்சிருக்காங்க. ஆனாலும் கல்யாணத்துக்கு பிறகு உன்னையும் குழந்தையையும் தான் உலகம்னு நினைச்சிட்டு வீட்லயே இருந்தாங்க.
ஏதோ போறாத காலம் அவங்களுக்கு சின்னுவ பிடிக்காம போயிருச்சு. அம்மா கூட சேர்ந்துக்கிட்டு தப்பு பண்ணிட்டாங்க. கொலை செஞ்சவனுக்கே பாவ மன்னிப்பு கொடுத்துடறாங்கடா. அண்ணி செஞ்சது மன்னிக்க முடியாத குத்தம் இல்ல. நீ யாருக்காக கோவிச்சுக்கிட்டு அண்ணி கூட சண்டை போடறீயோ, அவங்க ரெண்டு பேரும் நல்லா தான்டா பேசிட்டு இருக்காங்க? புரியலயா? அண்ணி சின்னுவுக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டிருக்காங்க. ரெண்டு பேரும் தினம் வீடியோ கால்ல பேசிட்டு தான் இருக்காங்க. நீ வீண்பிடிவாதம் பிடிக்காம அண்ணி கூட சேர்ந்து வாழற வழிய பாரு” என்று வசீகரன் சொல்லவும் சரவணன் ஆழ்ந்த யோசனையுடன் அவனையே பார்த்திருந்தான்.
“அன்னைக்கு என்ன சொன்னே? நான் உனக்கு பின்னாடி தான் பொறந்தேன்னு தானே சொன்னே? மூத்தது மோழை, இளையது காளைனு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா?” என்றான் குறும்பு புன்னகையுடன்
‘மூத்தவனனா உன்னை விட இளையவன் நான் தான் சுட்டி’ என்று மறைமுகமாக சொல்கிறான் என்று சரவணனுக்கு புரிய, அவன் தம்பியின் காதை பிடித்து திருகினான்.
“நீயே இவ்ளோ யோசிக்கும் போது நான் யோசிக்க மாட்டேனாடா? வேண்டா என்கிட்டயும் லதா மன்னிப்பு கேட்டதா சொன்னா. அதுல கோபம் கொஞ்சம் குறைஞ்சது, ஆனா உடனே மன்னிச்சு ஏத்துக்கிட்டா செஞ்ச தப்ப மறுபடியும் செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்? இப்படி மறக்கவே முடியாத மாதிரி எதாச்சும் செஞ்சா தான் இன்னொருமுறை தப்பு செய்ய யோசிப்பா. டைவர்ஸ் பண்றேன்னு மிரட்டினேனே தவிர வேற எதுவும் நான் செய்யலையேடா” என்றான் சரவணன் அவன் காதருகே குனிந்து மெல்லிய குரலில்
“அத ஏன்டா ரகசியம் மாதிரி சொல்றே?” வசி புருவம் உயர்த்த
“லதா, தூரத்துல நின்னுட்டு நாம பேசறத கவனிச்சிட்டு இருக்கா. அதுக்கு தான்”
“ஓ அந்தளவுக்கு அன்டர்ஸ்டான்டிங்ல இருக்கீங்களா? நடத்துங்க நான் போறேன்” என்று வசீகரன் சின்னு இருந்த இடத்தை நோக்கி செல்ல, “வசி” என்று மச்சினனை அழைத்தாள் லதா.
அவன் திரும்பி “சொல்லுங்க அண்ணி” என்றான்
“என்னை மன்னிச்சிடுங்க வசி. உங்ககிட்ட பேசறதுக்கே எனக்கு கூச்சமா இருந்துச்சு. அதனால தான் இதுவரைக்கும் உங்ககிட்ட பேசாம இருந்தேன். இனிமே என்னால வேண்டாவுக்கு மட்டுமில்ல யாருக்கும் பிரச்சனை இருக்காது”
“நல்லது அண்ணி”
“நான் செஞ்ச தப்பை சுட்டி காட்டிட்டே இருந்தீங்க, ஆனா எனக்கு தான் உறைக்கல. ஆனா உங்க அண்ணா உறைக்கிற மாதிரி சொல்லிட்டாரு. இனிமே எந்த தப்பும் நடக்காது”
“அண்ணி, சரவணன் கிட்ட நான் எதுவுமே சொல்லல”
“தெரியும் வசி, நீங்க சொல்லலனாலும் செஞ்ச தப்பையும் உண்மையையும் எப்பவும் மறைக்கமுடியாது அது வெளியே வந்தே தீரும்னு நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்
உங்க விஷயத்துல நான் பண்ண துரோகத்தை மறந்துட்டு நீங்க எனக்காக சரவணன் கிட்ட சண்டையெல்லாம் போட்டு பேசாம இருந்ததா வேண்டா சொன்னா. இப்பவும் நீங்க எனக்காக தான் அவர்கிட்ட பேசிட்டு இருந்தீங்கனு நினைக்கிறேன். அவரை வற்புறுத்தாதீங்க, அவரா எப்போ என்னை மன்னிக்கிறாரோ மன்னிக்கட்டும். அதுவரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன்” என்று பேசிக் கொண்டே இருந்தவள் மயங்கி சரியவும் அவளை தாங்கி பிடித்தவன், “சரவணா” என்று கத்தினான்.
சரவணனும் பதட்டத்துடன் ஓடி வந்து லதாவை தூக்கி கொண்டு அலமேலுவை பரிசோதித்த மருத்துவரிடம் செல்ல, அவர் அவளை பரிசோதித்து பார்த்துவிட்டு, “கர்ப்பமா இருக்காங்கனு நினைக்கிறேன். டெஸ்ட் எடுத்துட்டு கன்பார்ம் பண்றேன்” என்றார்.
அதற்குள் மயக்கம் தெளிந்திருந்த லதா, “கர்ப்பமா தான் இருக்கேன் டாக்டர், ஆல்ரெடி செக்கப் பண்ணிட்டேன்” என்றாள்.
“ஓகே, ப்ரக்னன்சி சிக்கா இருக்கும், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புங்க, நான் வார்டுக்கு போகணும்” என்று விட்டு மருத்துவர் வெளியேறியதும் சரவணன் லதாவின் அருகில் அமர்ந்தான்.
“லதா கர்ப்பமா இருக்கேன்னு ஏன் என்கிட்ட சொல்லல?”
“நான் கர்ப்பம்னு தெரிஞ்சதும் நேரா உங்கள பாக்க காலேஜ்க்கே வந்துட்டேங்க. ஆனா நீங்க ஆதிக்கை காரணம் காட்டி என்கூட சேர்ந்து வாழலாம்னு நினைச்சிடாதேனு சொன்னீங்க. அந்த நேரத்துல நான் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னா, நான் உங்ககூட சேர்றதுக்காக தான் சொல்றேன்னு நினைச்சுப்பீங்கனு நான் சொல்லாமலே ஆதிக்கை கூட்டிட்டு கிளம்பிட்டேன்ங்க”
“சாரி லதா” என்று அவளின் தலையை அவன் தன் மார்போடு சேர்த்து அணைக்க, “நான் தான் உங்க கிட்ட சாரி சொல்லணும். என்னை மன்னிச்சிடுங்க சரவணன்” என்றாள் லதா
“க்கும்” வசீகரன் கனைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.
“டாக்டர் சொன்னாங்க, நீ மறுபடியும் அப்பா ஆயிட்டியாமே, வாழ்த்துக்கள்டா. கல்யாணமான புது ஜோடி நாங்க ரிலீஸ் பண்றதுக்குள்ள நீ முந்திக்கிட்டே” என்றான் வசீகரன்.
“எக்ஸ்பெக்ட் பண்ணலடா” வெட்கத்துடன் புன்னகைத்தான் சரவணன்.
“ஓகே உங்க ரெண்டு பேருக்கு நடுவுல கெளசிக்கா நான் இருக்க விரும்பல” என்று வசீகரன் வெளியே சென்றதும், சரவணனும் லதாவும் தங்களுக்குள் மனம் விட்டு பேசிக் கொண்டார்கள்.
லதாவை மருத்துவரிடம் கூட்டி சென்றதை பார்த்து சின்னபொண்ணும் ஆதிக்கை தூக்கி கொண்டு அவர்கள் பின்னால் ஓடி வந்தாள். ஆனால் குழந்தையோடு இருந்ததால் அவள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எதிரே இருந்த காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
வசீகரனை கண்டதும் அவனருகே வந்தவள் “மாமு, அக்காவுக்கு என்ன ஆச்சு?” என்று விசாரித்தாள்
“கர்ப்பமா இருக்காங்கடி”
“இன்னொரு பாப்பா வரப்போகுதா?”
“ம்”
“எனக்கும் ஆசையா இருக்கு மாமு”
“உனக்கும் பாப்பா வேணுமா?” மெல்லிய குரலில் கேட்டான்
“ம்” என்றாள் நாணத்துடன்
“நீயே ஒரு பாப்பா, உனக்கொரு பாப்பாவா? எக்ஸாம் முடியறவரைக்கும் படிக்கறதுல மட்டும் தான் கவனம் இருக்கணும். இல்லனா ஹாஸ்டல்ல சேர்த்துடுவேன்” பொய்யாக மிரட்டினான்.
“உங்க நெஞ்சு மேல ஆதிக் படுத்திருக்கறத பாத்தப்போ எவ்ளோ அழகா இருந்துச்சு தெரியுமா?”
“வேணும்னா நீ வந்து படுத்துக்க, அத விட அழகா இருக்கும்” என்று அவன் கண்சிமிட்ட, “ச்சீ” என்று சிணுங்கினாள்
“அப்புறம் எப்படிடி பாப்பா வரும்?” அவன் குறும்பு பார்வை பார்க்க, அவள் வெட்கத்துடன் தலை கவிழ்ந்துக் கொண்டாள்.
(தொடரும்)
error: Content is protected !!
Super sis