Skip to content
Post Views: 408
தேவை… பாவை பார்வை -4
“ம்மா… ஈஸ்வர்ட பேசுனியா? இல்லையா?…” என்று வீட்டினுள் நுழையும் போதே கேள்வியை கேட்டுக் கொண்டே வந்தாள், அவனின் அக்கா லீலாவதி.
“ஏண்டி வரும் போதே இப்படி தொண, தொணன்னு கேட்டுட்டே வருவியா?… உள்ள வந்து கேட்டாதான் என்ன?…” என்று மகளை சாடினார், காமாட்சி.
“நான் தொணதொணக்குறது இருக்கட்டும்… நீ என்னத்துக்கு இப்போ என்னைய சாடி பேசுற?…”
Advertisement
“அடப்போடி… நான் என்னாத்தன்னு உங்கிட்ட சொல்லுறது…” என்று அலுப்பாக கூற,
“நீ மெதுவா அலுத்து முடிச்சிட்டு அப்பறம் சொல்லு… இப்போ ஒரு டீ போட்டுக் கொண்டாயேன்… குடிச்சிட்டே பேசுவோம்…”
“நானே இப்போதான் காலை சாப்பாடு முடிச்சிட்டு வந்து உக்காந்திருக்கேன்… நீ என்டயே வந்து டீ கேக்குற… உனக்கு வேணும்னா போயி போட்டு குடி… அதுல ஒரு வாய் எனக்கும் சேத்து போட்டு கொண்டா…”
Advertisement
“அடபோமா… நானே இந்த வெயில்ல பஸ் ஏறி வந்திருக்கேன்… நீ என்னடான்னா வந்ததும் என்னையவே வேலை வாங்குற…”
Advertisement
“அப்போ கம்முனு குந்து… ஒரேடியா மதியத்துக்கு சாப்டுக்கலாம்…”
“என்னாது!” என்று அதிசயமாக தாயை பார்க்க,
“எதுக்கு இப்போ என் மொகரைய பாக்குற…”
Advertisement
“மணி பதினொன்னு தான் ஆவுது… அதுக்குள்ள நீ சோறாகிட்டேன்னு சொல்லுற…”
“அதுக்குதானா… நேத்து வச்ச குழம்பு இருக்கு… ராவுக்கும் சேத்து சோத்தை மட்டும் வடிச்சேன்… நீ சொல்லாம கொள்ளாம வந்திருக்க… அதுனால உனக்கும் சேத்து தான் இருக்கு… நல்ல வேல, உனக்காக இன்னொரு வாட்டி சோறு வடிக்குறது மிச்சமாச்சி…” என்றார் தற்பெருமையாக,
“ஒரு சோத்தை வடிச்சிட்டு, சவடால் பேசுற… இருக்கட்டும்… அப்பா எங்க? கிளம்பிட்டாரா?…”
“அப்பறம் சோத்தை வடிக்காம என்னத்த சாப்புடுறது?… கடைக்கு போவாம இங்கயே இருந்து என்னத்த பண்ண சொல்லுற…”
“ம்மாவ்… எதுக்கு இப்போ நான் பேசுறதுக்குலாம் நீ இப்படி குதர்க்கமாவே பேசிட்டு திரியுற…”
“நீ எதுக்கு இப்போ சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்து, இங்க என்னைய கேள்விக்கேட்டுட்டு இருக்க…”
“அப்போ நான் இங்க வரக்கூடாதுன்னு சொல்லுறியா?…”
“ஏய்… என்னத்துக்கு வந்து தொலைஞ்சன்னு முதல்ல சொல்லு… அத சொல்லாம, என் வீட்டுலயே உக்காந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்க…”
“உன்னைய பாத்துட்டு போலாம்னு வந்தேன்ல… எனக்கு இது தேவ தான்… உனக்கு அம்புட்டு இருக்குன்னா… உன் மவ, எனக்கு இருக்காதா…”
“இங்க பாரு லீலா… நீ என்னைய என்னாத்துக்கு பாக்க வந்தேன்னு சொல்லு… வந்ததும் வராததுமா ஈஸ்வர கேக்குற… நீ விசயம் இல்லாத வரமாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்… அதுனால மொத என்ன காரியம் உனக்கு ஆகணும்னு வந்தேன்னு சொல்லு…”
“அவன் ஊருக்கு வந்துட்டான்னு, நீ தான் எனக்கு சொன்ன… அவன் வந்து ஒரு வாரம் ஆவப்போது… அவன் எனக்கு ஒரு வார்த்தை கூட பேசல… இதுலாம் என்னனு அவன்ட நீ கேக்கமாட்டியா?… அவனோட மூத்தவ தானே…” என்று ஈஸ்வரை குத்தம் சொல்ல,
“இதைக் கேக்கத் தான் மெனக்கெட்டு, ஊரிலிருந்து கிளம்பி வந்தியா?…”
“ம்மாவ்… என்ன?… நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், ரொம்ப ஏத்தமா பேசிட்டு இருக்க…”
“நீ தான் அவன் ஊருக்கு வந்துட்டான்… அவனுக்கு லீவு இல்ல, நான் போயி பாக்க போறேன்… நீயும் வாரியனு கேட்ட… நானும் என்ன விசயம்னு கேட்டுட்டு போலாம்னு வந்தா… நீ என்னமோ, என்கிட்ட சாமியாடிட்டு இருக்க…” என்று கோவமாக தாயிடம் எகிற,
“அடியே கூறுகெட்டவளே, எனக்கே ஒன்னும் பிடிபடாம, நானே அல்லாடிட்டு இருக்கேன்… இதுல இவ வந்துட்டா, அங்கேந்து பஸ் புடிச்சி விசாரிக்க…” என்று அங்கலாய்க்க,
“என்ன மோவ் சங்கதி, ஏதாவது உன்னைய பேசிட்டானா?… என்னனு சொல்லு, நான் அவனை கிழிச்சி தொங்கவிட்ருறேன்…” என்று அவளின் அன்னையை ஒட்டிப் பேச,
“என்னத்த ம்மா லீலா, தொங்கவிடுற?…” என்று இவளை பார்த்து கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார், சந்தானம்.
தந்தையை பார்த்ததும், பம்மிக்கொண்டு எழுந்து நிற்க, அவளின் அன்னையும், “இவரு எப்போ வந்தாருன்னு தெரியலே…” என்று தயங்கி எழுந்து நின்றார்.
“என்ன கேட்டுட்டு இருக்கேன்… பதில் சொல்லாம முழிச்சிட்டு நிக்குற?…” என்றார் அதட்டலாக,
“அது வந்துங்க அப்பா…” என்று என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்து, தன் தாயை பார்க்க,
அவளின் பார்வையை உணர்ந்து, “என்ன ஆத்தாளும், மகளும் சேர்ந்து அடுத்து யார் குடிய கெடுக்கலாம்னு திட்டம் தீட்டுறிங்களோ…”
அவருக்கு பதில் சொல்லாமல் இருவரும் மவுனமாக பார்க்க,
“அப்போ அதுதான் இங்க நடந்துருக்கு அப்படிதானே?…”
“இல்லங்க…” என்று காமாட்சி பேசவர,
“ஏய்…ச்ச்சீ… வாய்மூடு… உன்னைய என்கிட்டே பேசக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல… கட்டுன பாவத்துக்காக உன்னைய தலைமுழுகியும் இந்த வீட்டுல வச்சிருக்கேன்… நீ ஏதாவது பண்ணுனனு தெரிஞ்சது, அடுத்து உன்னைய கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போகக் கூட தயங்கமாட்டேன்…” என்று ரௌத்திரமாக எச்சரிக்கை செய்ய,
இதற்க்கு முன்பும் பேசியிருக்கிறார் தான்… வாணி வீட்டிலிருந்து வெளியேறியது தெரிந்து கூட, உன்னை தலைமுழுகிவிட்டேன் என்றதோடு வேறு பேச்சே இதுவரையில் அவரிடமிருந்து வந்தது இல்லை… ஆனால் இப்போது கொலை செய்துவிடுவேன் என்று கணவர் பேசியதை கேட்டு, விழி பிதுங்கி பீதியாக காமாட்சி பாத்து நிற்க,
அவரது மகளோ “அடுத்து நமக்கு என்னவோ…” என்று நடுங்கி அவரை பார்த்திருந்தாள்.
இப்போது மகளை பார்த்து, “உன்னைய தான் கட்டி குடுத்தாச்சுல அப்பறம் என்ன?… பிறந்த வீட்டுக்கு வந்தியா… சாப்டியா, உனக்கு தேவையானதை கேட்டு வாங்கிட்டு போனியானு இருக்கணும்னு, உங்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன் தானே… இங்க வந்து என்ன உங்க அத்தாக்கு, கொம்பு சீவிட்டு உக்காந்திருக்கியா?…”
“இரு மாப்புள கிட்ட சொல்லுறேன்…” என்று தன் சட்டை பையிலிருந்து போனை எடுத்துக் கொண்டே, “நீ இங்க புறப்பட்டு வந்திருக்குறது முதல்ல அவருக்கு தெரியுமா…” என்று அவளிடம் வினவ,
அவளோ பதறி, “அப்பா… ப்பா… வேணாம் ப்பா… நான் இனிமே இங்க வர கூட மாட்டேன் ப்பா… எதோ தெரியாம…” என்று வெடவெடத்துக் கொண்டே பேச,
“வீட்டுக்கு வாழவந்த பொண்ணுகிட்ட, நீ பேசுனது கூட தெரியாமத் தான் பேசியிருக்க… அப்படித் தானே?” என்று காட்டமாக கேட்டுவிட்டு, “பெத்த கடனுக்காக தான் உன்னையும் விட்டு வச்சிருக்கேன்… உன்னை பெத்த பாவத்தை நான் எங்க கொண்டி கரைக்குறதுனு தெரில…” என்றார் சற்று வேதனையுடன்,
நல்லா வந்து வாச்சிருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் எனக்குன்னு… “எப்போ வந்த நீ?… உங்க அம்மா உனக்கு ஏதாவது சப்புடா குடுத்தாளா…” என்று மகளிடம் வினவ,
மகளோ என்ன சொல்வது கூடத் தெரியாமல் தன் அப்பனை பார்த்து முழிக்க,
“ஏய்… உன்மவளுக்கு என்ன குடுத்த?…” என்று மகளிடம் கேட்டதையே கேட்க,
காமாட்சி அடுத்து நமக்கு சங்கு தான் என்ற நினைப்பில் கணவனின் முகத்தை கலவரமாக பாக்க,
“பெத்த பொண்ணுக்கு கூட உனக்கு செய்யுறதுக்கு வக்கில்ல… நீயெல்லாம் என்னாத்துக்கு தான் இருக்கியா உசுரோட…” என்று அவரை அற்பமாக பேச,
எதுவும் பேச இயலாமல் சமயக்கட்டை நோக்கி சென்றார் காமாட்சி.
அப்பாவின் இன்றைய அவதாரத்தை பார்த்து வாயடைத்து நின்றாள், லீலாவதி.
“இந்தா லீலா, வா வந்து சாப்புடு… நானே உன்னையக்கொண்டி உன் வீட்டுல சொல்லி விட்டுட்டு வரேன்… இதுக்கபரமாச்சும் யார் குடியையும் கெடுக்காம இருக்குற வழியை பாரு… ” என்று சொல்லிவிட்டு, தன் அறையின் உள்ளே சென்றார்.
கூட்டத்தில் உள்ளே நின்றிந்தருந்த லீலாவோ, தந்தை பேசிவிட்டு சென்றதை கேட்டு, ஆணி அடித்தார் போல நின்றுவிட்டு, பின்பு “நாம என்ன பேச இங்க வந்தோம்?… ஆனா இப்போ நாம நினைச்சது, நடக்காது போலயே… எதுவும் நம்மால பண்ணமுடியதோ…” என்று பெருமூச்சினை வெளியேற்றிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
– – – – –
மதனின் அறையிலிருந்து வெளியே வந்து, தன் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு, டெஸ்க்டாப்பில் தன் லீட் மதன், சொன்ன கரெக்ஷனை மது செய்துக் கொண்டு இருக்க,
அவள் கீபோர்டு தட்டும் வேகத்தை பார்த்து, பக்கத்து சீட்டில் இருந்த ரேகாவோ, “மது… என்னாச்சு? இந்த தடவையும் அவன் கரெக்ஷன் சொல்லிருக்கானா?…” என்று கடுப்பாக கேட்க,
“ஆமாம்டி… அவன் எதோ வேணும்னே பண்ணுற மாறி இருக்கு… நான் போட்டதுக்கும் ரிசல்ட் வருது தான்… ஆனா இவன் தலையை சுத்தி மூக்கை தொடுற மாறி போட சொல்லுறான்…”
“என்னவாம் இப்போ அவனுக்கு?…”
“இப்போ நாம இருக்குற ப்ராஜெக்ட் இந்த மன்த் எண்ட் தானே ஓவர் ஆகுது…”
“ஆமாம்… அது தான் தெரிஞ்ச கதையாச்சே… அதுனால தானே நான் லாஸ்ட் மினிட்ல முடிச்சிக்கலாம்னு இருக்கேன்… நீதான் பறந்து பறந்து முடிக்குற…”
“நீ என்கிட்ட, இப்போ மண்டைல கொட்டு வாங்க போற பாரேன்…”
“ஏண்டி… உண்மையை சொன்னாக் கூட கொட்டுவேன்னு சொல்லுவியா?…”
“நான் அந்த ரிசோர்ஸ் இன்டெர்வியூல செலக்ட் ஆகிட்டேனு, என் மெயில் உங்கிட்ட காமிச்சேன்ல… அப்பறமும் இப்படி சொல்லுற… அப்போ உன்னைய கொட்டாம வேற என்ன பண்ணுறது…” என்று திட்ட,
“ச்ச… ஆமா மது, நானும் என் பார்ட் இந்த ப்ரொஜெக்ட்ல முன்னாடியே முடிச்சிருக்கலாமோ… நீயும், விமலும் மட்டும் அடுத்து ஒரே ப்ராஜெக்ட்ல இருப்பீங்க… நான் மட்டும் இந்த போரிங் ப்ராஜெக்ட்டை வச்சிட்டு உக்காந்திருக்கணும்…” என்று சோகமாக சொல்ல,
“இந்த அறிவு இப்போ வந்து என்ன பண்ணுறது… நான் சீக்கரம் முடின்னு சொல்லும் போதுலாம் மேடம், தூசு போல தட்டிவிட்டு இன்னும் டைம் இருக்குனு தெனாவெட்டா சொன்னாங்களே… மறந்து போச்சா?…” என்றால் கேலியாக,
“ஹாய்…ஹலோ…வணக்கம்…வந்தனம்…நமஸ்தே…” என்று விமல் அவர்களிடம் வர,
“இதுக்கு மேல வேற தெரியாதா…” என்று அவனை பார்த்து கோபமாக ரேகா கேட்க,
“என்ன மது… ரேக்ளா ரொம்ப சூடா இருக்கா போலையே… ஒரு ஆம்லெட் போட்டு எடுக்கலாமா அந்த சூட்டுல…” என்று தன் தோழியுடன் வினவ,
“ஹா ஹா ஹா…” என்று மது சிரிக்க,
“டேய் விம்… கடுப்ப கிளப்பாத சொல்லிட்டேன்…ஒழுங்கா ஓடிப்போயிடு… இல்லனா அவ்வளோதான் நீ…”
“ரேகா ரொம்ப சோகமா இருக்க விமல்… நீ இப்போ போய்ட்டு அவளை கிண்டல் பண்ணிட்டு இருக்க…” என்று கூறி மது சிரிக்க,
“அச்சோ… சாரி ரேகா… எந்த கப்பலையாவது கவுத்துட்டியா?… அதான் சோகமா இருக்கியா…” என்று கேட்டுவிட்டு மதுவிடம் ஹை-ஃபை அடிக்க,
ரேகா இருவரையும் முறைத்து தள்ள, நண்பர்கள் இருவரும் சேர்ந்து இன்னும் நன்றாக சிரித்தனர்.
“போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா… ரெண்டு பேரும் ஒரே ப்ரொஜெக்ட்ல இருக்க போறீங்கன்னு சீன் ஆஹ் போடுறீங்க…” என்று பேச,
“ஹா ஹா… ரெக்ஸ்… நாங்க ஒண்ணுமே அதை பத்தி பேசல… நீயா தான் பேசுன… இப்போ எங்களை திட்டுற…” என்று அவளிடம் மொழிந்து விட்டு,
விமலிடம், “ரேகாக்கு நம்ம கூட இந்த நியூ ப்ரொஜெக்ட்ல இல்லனு ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியா…” என்று அவளின் சோகமான செய்தியை சொல்ல,
“நீ முதல்ல மாறமாட்டேனு சொல்லிட்டு, நாங்க நீ மாறிக்கோன்னு சொன்னதுக்கு அப்பறம் தானே ஓகே சொன்ன… போடி… பெருசா என்னைய சொல்ல வந்துட்டா…” என்று அவளை ரேகா பேச,
“டி ரேகா, நாம என்ன பேசிட்டு இருந்தோம்…நான் என்ன சொல்ல வந்தேன்… நீ இப்போ எப்படி டாபிக்கை மாத்தி வச்சிருக்க பாரு…” என்று மது சொல்ல,
“ஹேய்… இரு மது… நான் இவகிட்ட ஒன்னு கேட்டுக்குறேன்… அதுக்கப்பறம் நீங்க கண்டிநியூ பண்ணுங்க…” என்றான் அவசரமாக இடையிட்டு,
ரேகா, “அப்படி என்ன கொஸ்டின் கேக்க போற நீ…” என்றும் விமலை பார்க்க,
“இந்த ப்ரொஜெக்ட்ல எங்க கூட ஜெயின் பண்ணலன்னு சோகமா?… இல்ல ப்ரகதீஷ் பேட்ச்ல ஜெயின் பண்ண முடியலன்னு வருத்தமா?…” என்று கேள்வி ரேகாவிற்குகாக இருந்தாலும், அவனின் பார்வை மதுவை ஆராய்ந்தது.
அவளோ ஒரு மாறுதலும் இன்றி எப்போவும் போல இருக்க, இப்போது விமலிடம் இன்னும் குழப்பமே மிஞ்சியது.
“இது ஒரு நல்லா கொஸ்டின் டா விம்… இப்போ நான் என்ன சொல்லுறதுனா…” என்று ஆரம்பிக்க,
“நீ புடுங்குறது பூரா தேவை இல்லாத ஆணி தான்…” என்று அவளுக்கு கொட்டு வைத்துவிட்டு,
“இப்போ நீ என்ன சொல்ல வந்தேன்னு சொல்லு மது…” என்றான் விமல்.
“அடேய்… உனக்கு இருக்குடா இன்னைக்கு… வச்சிக்குறேன் அப்பறம்…”
“நீ அப்பறம் வச்சிக்கோ…” என்று அவளிடம் சொல்லிவிட்டு,
மதுவிடம் சீரியஸ் ஆக, “சொல்லு மது… ஏன் மதன் ரூமுக்கு போயிட்டு, போயிட்டு வந்த?… அது தான் சொல்ல வந்தியா?”
“ச்ச… நீ செம ஷார்ப்டா விம்… ஐயம் ப்ரௌட் ஆப் யூ…” என்று சிலாகித்து ரேகா சொல்ல,
“ம்க்கும்… கிழிஞ்சது போ…” என்று மெதுவாக சொல்ல,
“என்னடா கிழிஞ்சது?…” என்று ரேகா கேட்க,
“அதானே… இதுலாம் இவளுக்கு நல்லா கேட்கும்… நான் இவளை நினைக்குறதுமட்டும் தெரியாது, இந்த மரமண்டைக்கு… மரமண்டை… மரமண்டை…” என்று அவளை பார்த்து புலம்பிக் கொண்டே கடிய,
இவர்கள் பேசுவதை பார்த்த மதுவோ, விமலின் முணுமுணுப்பை பார்த்து அட்டகாசமாக சிரிக்க,
ரேகா, “இப்போ நீ எதுக்குடி இப்படி சிரிக்குற…”
அவளுக்கு “ஒரு இளிச்சவாய் உன்கிட்ட மாட்டிட்டு படுற பாட்டை பாத்து சிரிக்குறா… நல்லா வருவா மது நீ… என் நிலைமை எவனுக்கும் வரக்கூடாது…” என்று இப்போது வாய்விட்டு சொல்ல,
இவன் சொன்னதும் மது இன்னும் வாயை பொத்திக் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க,
“என்னனு சொல்லிட்டு தான் சிரியேன் லூசே…” என்று மதுவை கடித்துக் கொண்டு,
“டேய் விம்… ப்ளீஸ் டா, நீயாச்சும் சொல்லேன்…” என்று சலுகையாக கேட்க,
“சொல்லலாமே…” என்று சொல்ல வர, அவனின் போன் அலறியது.
இருவரையும் பொதுவாக பார்த்துவிட்டு, போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க,
மறுமுனையில் பேசிய நபரோ, “உன்னைய நான் அவங்கக்கூட அங்க அரட்டை அடிக்கவா போக சொன்னேன்… மதுகிட்ட என்ன விஷயம்ன்னு கேளுடா தத்தி…” என்று திட்டிவிட்டு போன் கட் ஆகியிருந்தது.
“இது எனக்கு தேவை தான்… இந்த கண்கொத்தி பாம்போட கண்ணை முதல்ல நோண்டனும்…” என்று போனை பார்த்து பேச,
“என்ன விமல்… எனி இஸ்ஸுஸ்?” என்று மது கேட்க,
அவன் பதில் சொல்ல வரத்துக்குள், அதே நபரிடம் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் வர, இவனை என்று பல்லைக்கடித்துக் கொண்டே அதை திறக்க, *”இன்னுமாடா நீ கேக்குற பாடிசோடா…” என்று வந்திருக்க,
“என்னடா இப்போ போனை பார்த்து முறைக்குற…” என்று ரேகா இப்போது கேட்க,
இவன் என்னைய என்ன வேல பாக்க வைக்குறான் பாரு… இதுல நான் பாடிசோடாவாம்… என்னடா நடக்குது இங்கன்னு கேட்டா, நான் லீட் சொன்னதை செய்யுன்னு நிக்குறான்… இங்க நான் பேசுனத்துக்கு ஏதாவது ரியாக்ஷன் வரும்னு பாத்தா, இந்த மது, ஆட்டுக்கல்லை முழுங்குன மாறி இருக்கா… இந்த ப்ரகதீஷ் பயலை… என்று அவனை மனதினுள் கடிய,
இவர்கள் மூவரும் அமர்ந்திருப்பதை அவ்வழியாக வந்த மதன் பார்த்துவிட்டு, “மது முடிச்சிடீங்களா?… கொஞ்சம் கேபின் வரைக்கும் வந்துட்டு போங்க சீக்கரம்…” என்று சொல்லிவிட்டு அவர்களை கடந்து சென்றான்.
“சரி… நான் அவனை என்னனு கேட்டுட்டு வரேன்…” என்று கடுப்பாக மது எழுந்து செல்ல,
“அய்யயோ… இவன்ட நான் இப்போ என்னன்னு சொல்லுறதுனு தெரியலையே… டேய் விமல், உன்னைய அவன் இப்போ நொங்க போறேன்…” என்று அவனுக்கு அவனே பேசிக்கொண்டே பிரகதீசை பார்க்க சென்றான்.
பார்வை வீசும்…
error: Content is protected !!