நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-15
அத்தியாயம் – 15
“கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் செல்லப் பூனையாய் நினைவுகள். எனில் காலம் தீரத் தீரத் தீராத பிரியமாய் காதல்!”
மருத்துவமனையில் மித்ரன் வீசிய அந்த வார்த்தை ..”உன் எல்லை என்னன்னு தெரிஞ்சு நடந்துக்கோ” என்றது , ஆதிரையின் இதயத்தில் ஒரு மெல்லிய கோட்டை இழுத்திருந்தது. வீட்டிற்கு வந்த பிறகும் அந்தப் பனிப்போர் ஓயவில்லை. ஆதிரை எந்திரத்தனமாகத் தன் வேலைகளைச் செய்தாள். ஆனால் அவன் முகத்தைப் பார்த்தாள் இல்லை. மித்ரன் தவித்துப் போனான். ஆதிரையின் மௌனத்தைக் கலைப்பது அவனுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அவனது விழிகள் அவளைத் துரத்தினாலும், அவனது ஈகோவும் ஒரு பக்கம் அவனைத் தடுத்தது. கடந்த இரண்டு தினங்களாக அந்த வீட்டில் மௌனம் தான் ராஜ்யம் செய்தது. இருவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. பிள்ளைகளுக்காகவும், அவர்களின் தேவைகளுக்காகவும் மட்டும் “என்ன ஏது” என்ற அளவில் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர்.
Advertisement
பட்டும் படாமலும் நகர்ந்த அந்த இரண்டு நாட்களில், மித்ரன் தன் தவறை உணர்ந்து தவிப்பதும், ஆதிரை தன் காயத்தை மறைக்க மௌனத்தை ஆயுதமாக்குவதும் அந்த வீட்டுச் சுவர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஆதிரை ஏற்கனவே ஒரு வார விடுப்பு சொல்லியிருந்த நிலையில், கவினின் உடல்நிலை காரணமாக மேலும் இரண்டு தினங்கள் கூடுதலாகிவிட்டது. இன்று அவள் CECRI ஆய்வகத்திற்குச் சென்றாக வேண்டும். கிளம்பும்போது மித்ரனிடம் அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
“கண்மணி அம்மா, நான் லேப் போயிட்டு வரேன். எல்லாம் சமைச்சு டேபிள்ல வச்சிருக்கேன், சாப்பிடுங்க,” என்று மட்டும் கூறிவிட்டு, வாசலில் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்த மித்ரனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அங்கு அப்படி ஒரு ஆளே இல்லாதது போலத் தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
Advertisement
கிட்டத்தட்ட எட்டு நாட்கள்! மருத்துவமனை வாசம், கவினின் உடல்நிலை என ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஆதிரை மீண்டும் CECRI அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அந்த பத்து நாட்களில் அவளது உலகம் கவினையும் மித்ரனையும் சுற்றியே சுழன்றிருந்தது. இன்று மீண்டும் ஃபைல்கள், கணினியில் ஆராய்ச்சி என அமர்ந்திருந்தபோது, ஏதோ ஒரு புதிய தெம்பு அவளுக்குள் இருந்தது. சில நேரங்களில் வேலைப் பளுவே ஒரு மருந்தாக அமையும். பல சூழல்களில் நமது வேலைதான் நம்மை முன்னோக்கித் தள்ளும், ஊந்துசக்தியாக மாறும். சொல்லப்போனால், இந்த வேலையும் அலுவலகச் சூழலும்தான் கடந்த இரண்டு வருடங்களாக ஆதிரையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது.
Advertisement
எட்டு நாட்களுக்கு முன்னால் இருந்த ஆதிரைக்கும், இன்று அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ஆதிரைக்கும் எத்தனை வித்தியாசம்! அந்த நாட்கள் அவளது மனதின் அடுக்குகளை மெல்லப் புரட்டிப்போட்டிருந்தன.
ஆதிரை தன் கணினியில் ஆழ்ந்திருந்தாள். அந்த ஸ்மார்ட் சென்சாரின் செயல்பாடுகளை மென்பொருள் மூலம் சிமுலேட் (Simulate) செய்து, அதன் முடிவுகளைத் திரையில் ஓடவிட்டுக் கொண்டிருந்தாள். எண்களும் வரைபடங்களும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தபோது, மீரா அவளது தோளைத் தட்டினாள்.
அந்த ‘ஸ்மார்ட் சென்சார்’ ஆராய்ச்சித் திட்டத்தில் டாக்டர் பொற்சோழன் தலைமையில் மூன்று பெண்களும், ஐந்து ஆண்களும் கொண்ட குழு தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தது. அதில் ஆதிரைக்கு ஒரு நல்ல தோழியாக மாறியிருந்தாள் மீரா. பெயருக்கேற்றபடி எல்லையற்ற அன்பையும், பேச்சையும் கொண்டவள்.
Advertisement
“ஹேய் ஆதி… என்ன இன்னைக்கு முகத்துல ஒரு தனிப் பொலிவு தெரியுது? அந்த எட்டு நாள் லீவுல ஏதோ மேஜிக் நடந்திருக்கு போலயே!” என மீரா குறும்புடன் இழுத்தாள்.
ஆதிரை பதறிப்போய் நிமிர்ந்தாள். “அ… அதெல்லாம் ஒன்னுமில்லையே மீரா. “இல்லையே… கண்ணுக்கு மை இட்டிருக்க, கூந்தலைத் தளரப் பின்னி மல்லிகைப் பூ வச்சிருக்க… இதெல்லாம் அந்த பழைய ஆதிரைக்கிட்ட இருக்காதே!”
ஆதிரை தன் தலையில் இருந்த மல்லிகைப் பூவை மெல்லத் தொட்டுப் பார்த்தாள். ஒரு கணம் அவளுக்குள் சுருக்கென்றது. மித்ரன் “Know your limits” என்றதை நினைத்து தான் உள்ளுக்குள் உருகிக் கொண்டிருக்கிறோம் என்று பார்த்தால், இதென்ன இன்று இவ்வளவு அழகாகத் தயாராகி வந்திருக்கிறோம்? அவன் முன் தோற்றுப் போனது போலத் தெரிந்த அந்தத் தோற்றம் அவளுக்கே ஒரு நொடி நெருடலாக இருந்தது.
“சொல்லுடி என்ன விஷயம்?” என மீரா விடாமல் துளைத்தாள்.
“சும்மா இரு மீரா, வேலையைப் பாரு…” எனத் தன்னைத் தானே நொந்து கொண்டவள், வேலையில் தீவிரமாகக் கவனத்தைத் திருப்புவது போல மழுப்ப முயன்றபோதுதான், வராண்டாவில் அந்த மாஸ் என்ட்ரி நிகழ்ந்தது.
“டோக்… டோக்…” என ஷூ கால்களின் சத்தமும், “May I come in?” என்ற மெல்லிய வினவலுமாக அந்த ஆய்வகத்தின் நிசப்தம் கலைந்தது. ஒரு கம்பீரமான ஆளுமையின் நிழல் நுழைவாயிலில் விழ, அங்கிருந்த ஒட்டுமொத்தக் குழுவின் கவனமும் அங்கே திசை திரும்பியது
டார்க் புளூ (Dark Blue) நிறச் சட்டையும், கச்சிதமான பிளாக் பேன்ட்டும் அணிந்து, ‘டாப்பர் லுக்’கில் அங்கே நின்றிருந்தான் மித்ரன். காலையில் வீட்டில் பார்த்த அந்த சாதாரண மித்ரன் அல்ல இவன். ஒரு தொழில்முறை நேர்த்தியுடன், தன்னம்பிக்கை ததும்பும் மிடுக்கோடு அவன் உள்ளே வர, ஆய்வகத்தில் இருந்தவர்களின் பார்வைகள் இயல்பாகவே அவன் மீது நிலைத்தன.
“ஏய் ஆதி! ஏதோ கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ போல. நம்ம டிபார்ட்மென்ட்டுக்கு தான் வராரு போலயே,” என மீரா அவளது கையை கிள்ளி ரகசியம் பேசினாள்.
மித்ரனின் விழிகள் கூட்டத்திற்குள் மிகச் சரியாக ஆதிரையைத் தேடிப்பிடித்தன. அவளது முகத்தில் தெரிந்த அந்தத் திகைப்பைக் கண்டதும், அவனது உதட்டோரத்தில் ஒரு மெல்லிய சவாலானப் புன்னகை அரும்பியது.
மித்ரன் இவர்கள் அருகில் வரவும், சரியாக அதே நேரத்தில் டாக்டர் பொற்சோழன் தன் கேபினை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
“வெல்கம் டாக்டர் மித்ரன்!” என ஒரு பிரம்மாண்டமான வரவேற்புப் புன்னகையுடன் மித்ரனை வரவேற்ற பொற்சோழன், அவனைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றார்.
ஆதிரைக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அந்த ஆய்வகத்தின் கண்ணாடித் கதவுகளுக்கு அப்பால் இருவரும் அமர்ந்து பேசிக் கொள்வது ஆதிரைக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் பேசிக் கொள்ளும் விதம், ஒரு புதிய அறிமுகத்தைப் போலத் தெரியவில்லை. பொற்சோழன் எதையோ விவரிக்க, மித்ரன் தன் அலைபேசியில் ஏதோ ஒரு தரவைக் காட்டி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தான்.
“என்னது? இவங்களுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா? ஐயையோ… என்ன நடக்குது இங்கே?” – ஆதிரை தனக்குள் அலறினாள்.
மித்ரனின் முகத்தில் ஒரு நிதானமான புன்னகை. பொற்சோழனோ மித்ரன் சொன்ன ஏதோ ஒரு கருத்துக்கு ஆச்சரியப்பட்டு சிரிக்கிறார். பார்ப்பதற்கு அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்களைப் போல அத்தனை அன்யோன்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
தான் மௌனத்தை ஆயுதமாக்கி, அவனை அறவே தவிர்த்துவிட்டு இங்கே வந்து சேர்ந்தால், இவன் அவளது ஒட்டுமொத்தப் பாதுகாப்பு வளையத்தையும் மிகச் சாதாரணமாக உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டான். அவளது ‘மெண்டார்’ பொற்சோழனிடமே இவன் கை குலுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தபோது, ஆதிரைக்குள் கனல் மூண்டது.
ஆதிரையின் கண்கள் மட்டும் அந்தக் கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி மித்ரனையே வட்டமிட்டன. மித்ரன் தன் அலைபேசியிலிருந்து தலையை உயர்த்தி, மிகச் சரியாகத் தன்னைப் பார்த்த ஆதிரைக்கு ஒரு ‘கண்ணசைப்பில்’ ஒரு சவாலை விடுத்தான்.
சரியாக அந்த நேரத்தில் வசந்த், ஆதிரையின் மற்றொரு லேப் மேட் (Lab mate), அவர்கள் அருகில் வந்தான். “ஆதிரை… மீரா… தெரியுமா விஷயம்? சார் தான் நம்ம ‘ஸ்மார்ட் சென்சார்’ புராஜெக்டுக்கு எக்ஸ்டர்னல் எக்ஸ்பர்ட்டா அப்பாயிண்ட் ஆகியிருக்காரு. இன்னைக்கு செமினார் ஹால்ல சாரோட ஸ்பெஷல் டாக் இருக்கு. எல்லாரையும் உடனே அங்கே அசெம்பிள் ஆகச் சொல்லியிருக்காங்க!” என தெரிவித்தான்.
டாக்டர் பொற்சோழன் மித்ரனைத் தட்டிக் கொடுத்து, “வாங்க மிஸ்டர் மித்ரன், எல்லாரும் வெயிட் பண்றாங்க” என்று சொல்லியபடி முன்னே சென்றார். செமினார் ஹால் முழுவதுமே நிசப்தம் நிலவியது.
டாக்டர் பொற்சோழன் ஒரு சிறு அறிமுகத்தைக் கொடுக்க, மித்ரன் தன் கையில் இருந்த பாயிண்டரை அழுத்தினான்.
திரையில் ” Smart Sensor Network: Rameswaram-Madurai Corridor Analysis – Existing patterns and strategies” என்ற தலைப்பு மின்னியது.
மித்ரன் பேசத் தொடங்கியபோது, அவனது குரல் அந்த ஹால் முழுவதும் கணீரென்று ஒலித்தது. அவன் ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசவில்லை. மேடையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு மிக நிதானமாக, அதே சமயம் ஒரு சிறுத்தையின் லாவகத்துடன் நடந்தான். மித்ரனின் மேடை ஆளுமை (Stage Presence) அத்தனை பேரையும் கட்டிப்போட்டது. அவன் பேசும்போது முன் வரிசையில் இருந்த சீனியர் விஞ்ஞானிகளை மட்டும் பார்க்காமல், கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஆராய்ச்சி மாணவர்களையும் தன் வசீகரப் பார்வையால் உரசிச் சென்றான். அவன் வெறும் புள்ளிவிவரங்களைப் பேசவில்லை. அந்தத் தரவுகளோடு விளையாடினான்.
ஆதிரை அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தான் நன்றாகத் தெரியுமே, இது போன்ற கருத்தரங்குகளிலும் விளக்கக்காட்சிகளிலும் அவன் ஒரு வேங்கையைப் போலப் பாய்வான் என்று! தன்னை வீட்டில் அத்தனை தூரம் தவிக்க விட்டுவிட்டு, இங்கே வந்து ‘ஹீரோ’ போல வலம் வரும் மித்ரனைப் பார்க்கப் பார்க்க அவளுக்குள் ஆத்திரம் இன்னும் அதிகமானது.
மித்ரன் முடிக்கும் தருவாயில், “யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?” எனக் கேட்டான்.
யாரும் கைதூக்கும் முன்னே, ஆதிரை சட்டென எழுந்து நின்றாள். “மிஸ்டர் மித்ரன்… நீங்க சொன்ன இந்த டேட்டா இன்டக்ரேஷன் மாடல் (Data Integration Model) ரொம்ப நல்லா இருக்கு.
பட் தேர் ஈஸ் ஆன் இம்பார்டன்ட் ஃபிளா… டோன்ட் யூ சீ யுவர் டிசைன்ஸ் லிமிட்டேஷன்??”
( வாசகர்களின் மைண்ட் வாய்ஸ்: “அடப்பாவிகளா… ஒருத்தன் ‘லிமிட்ஸ்’ (Limits)னு ஆரம்பிச்சா, இப்போ இன்னொன்னு ‘லிமிட்டேஷன்’ (Limitations)னு வந்து நிக்குது! )
“தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் நிலவும் மிக அதிக உப்புத்தன்மை காரணமாகச் சென்சார்களில் ஏற்படும் தரவுப் பிழைகளை நீங்கள் எப்படிச் சரிசெய்யப் போகிறீர்கள்? நீங்கள் காட்டிய ஸ்லைடில் இதற்கான ‘காம்பன்சேஷன் அல்காரிதம்’ இருப்பதாகத் தெரியவில்லையே?”
அவள் வீசிய அந்தத் தொழில்நுட்பக் கேள்வி, மித்ரன் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு ‘பிரிசிஷன் அட்டாக்’ (Precision Attack).
ஆதிரை அங்கேயே நிறுத்திவிடவில்லை. “கூடுதலாக, அந்த உப்புக்காற்று சென்சாரின் பாதுகாப்பு உறையை (Coating) அரித்துவிடுமே (Corrosion)? சென்சாரே சிதைந்து போனால், அது கொடுக்கும் டேட்டா எப்படிச் சரியாக இருக்கும்? இதற்கு எந்த மெட்டீரியலைப் பயன்படுத்தப் போகிறீர்கள்? உங்கள் ஸ்லைடு முழுக்கச் சாஃப்ட்வேர் பற்றி மட்டுமே இருக்கிறது, இந்த ஹார்டுவேர் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையே?”
அவன் கண்கள் திரையில் இருந்த மென்பொருள் கட்டமைப் (software architecture) ஸ்லைடை ஒருமுறை வெறித்துப் பார்த்தன.
மித்ரன் நெற்றியில் ஒரு மெல்லிய வியர்வைத் துளி அரும்பியது. மேடையில் அத்தனை பேர் முன்னிலையிலும் அவன் ஒரு நிமிடம் ‘பிளாங்க்’ ஆனான்.
மித்ரனின் அந்தத் தடுமாற்றத்திற்குப் பின்னால் ஒரு நுட்பமான காரணம் இருந்தது. அது அவனுக்குப் பதில் தெரியவில்லை என்பதற்காக அல்ல; ஆதிரையின் அந்தத் தொனி (Tone) அவனை ஒரு நொடி நிலைகுலையச் செய்தது.
இவ்வளவு நேரம் மேடையில் அவன் எந்தக் கம்பீரத்துடன், எந்த அதிகாரத்துடன் ஒரு பிரசென்டேஷனைச் செய்தானோ, அதற்குச் சற்றும் குறையாத மிடுக்கில் இருந்தது ஆதிரையின் கேள்வி. அவளது அந்தத் தன்னம்பிக்கை நிறைந்த, உறுதியான, ஆணித்தரமான ஹெட்ஸ்ட்ராங் டோன் அவனை ஒரு கணம் வியக்க வைத்தது.
மெல்லச் சுதாரித்துக் கொண்டவன், ஒரு தீர்க்கமான புன்னகையை உதிர்த்தான்.
“ஆமாம்… டாக்டர் பொற்சோழன் கூட இதைப் பத்திதான் பேசிட்டு இருந்தோம். இந்த சென்சாருக்கான மெட்டீரியல் டிசைன் ஆஸ்பெக்ட்ஸ் இன்னும் முழுமை அடையல. அதை நீங்கதான் டிசைன் பண்ணித் தரப்போறீங்கன்னு அவர் சொன்னார், சீனியர் ரிசர்ச்சர் மிஸஸ் ஆதிரை,” என்றான். அந்த ‘சீனியர் ரிசர்ச்சர் மிஸஸ் ஆதிரை’யை அவன் அவளது கண்களை பார்த்தபடி மிக அழுத்திச் சொன்னான்.
“இன்பேக்ட், இட்ஸ் எ கைண்ட் ஆஃப் மெர்ஜர் (Merger). எங்க சாஃப்ட்வேரும், உங்களோட ஹார்டுவேர் அறிவும் சேர்ந்தாதான் இந்த வொர்க் முழுமையடையும். தட்ஸ் வேர் திஸ் புராஜெக்ட் ஸ்டாண்ட்ஸ்! “இட்ஸ் எ கைண்ட் ஆஃப் மெர்ஜர்” என்று சொல்லும்போது, தன் இரு கைகளையும் மிக அழகாகக் கோர்த்து காட்டினான்.
மித்ரன் மேலும் சில தொழில்நுட்பக் கேள்விகளுக்கு மிகவும் லாவகத்துடன் பதிலளித்துவிட்டு, டாக்டர் பொற்சோழனுடன் உரையாடிக்கொண்டே அரங்கத்தை விட்டு வெளியேறினான்.
“ஏய் ஆதி! என்னடி நடக்குது இங்கே? உனக்கும் அந்த மித்ரன் சார் க்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கா? ‘மிஸஸ் ஆதிரை’ன்னு அவ்வளவு அழுத்தமா உன் பேரைச் சொல்றாரு. நீ என்னடான்னா இவ்வளவு நேரம் எதுவுமே தெரியாத மாதிரி அமைதியா உட்கார்ந்திருக்க? என்னடி?” என மீரா கேள்விகளால் ஆதிரையைத் துளைத்தாள்.
ஆதிரை பதில் சொல்ல முடியாமல் தன் லேப்டாப் பேக்கிற்குள் எதையோ தேடுவது போலப் பாவனை செய்தாள்.
“அவர் ஏதோ புராஜெக்ட் டீடெயில்ஸ் பார்த்திருப்பார்டி… அதுல என் பேரு இருந்திருக்கும், அதான் சொல்றாரு,” என்று ஆதிரை மழுப்பலாகச் சொன்னாள்.
ஆதிரைக்குள் மித்ரன் கடைசியாகப் பார்த்த அந்த அழுத்தமான பார்வை இன்னும் நிழலாடிக் கொண்டிருந்தது. “உண்மையைச் சொன்னால் நீ நம்ப மாட்டாய் மீரா… அவன் என் கணவன், இல்லை இல்லை… அவன் என் வாழ்நாள் சவால்!” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவள், வெளியே மட்டும் ஒரு செயற்கையான புன்னகையை உதிர்த்துவிட்டுத் தன் ஆய்வகத்தை நோக்கி நடந்தாள்.

