நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-16
அத்தியாயம் – 16
“பூ மலர்த்தும் வனத்தினில்… உலர்ந்து கருகிக் கிடக்கும் மலர்க்கொடி. உள் மனதினில் உறைந்திருக்கும் குரூரமும் சேர்ந்தது காதல்!”
ஆதிரை வீட்டிற்குள் நுழைந்தபோது, வரவேற்பறையில் கவினும் கண்மணியும் மிக உற்சாகமாக இருந்தனர். அம்மா வந்துட்டாங்க!” என அவர்கள் காட்டிய இன்முகத்தில், ஆதிரையின் அந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது.
Advertisement
“ஸ்நாக்ஸ் சாப்பிட்டீங்களா ?” என அவள் கேட்க, அவர்கள் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதாகத் தலையாட்டினர். ஆதிரை மெல்ல சமையலறைக்குள் சென்றாள். இன்று அலுவலகத்தில் நடந்த அந்தச் சம்பவங்கள் அவளை ஒருவிதமான மனச்சோர்விற்கு, உள்ளாக்கியிருந்தது.
கவினும் கண்மணியும் யூனோ (Uno) கார்ட்ஸ் விளையாடத் தொடங்கியிருந்தனர். கவினும் மித்ரனுமாய் யூனோ விளையாடி விளையாடி அந்த விளையாட்டில் அவன் நிபுணணகி இருந்தான். கண்மணிக்கு அவன் தான் அந்த விளையாட்டைக் கற்றுக் கொடுத்திருந்தான்.
ஆதிரை ஒரு கோப்பை தேநீரைத் தயார் செய்துகொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள். அந்தத் தேநீர் கோப்பையின் சூடு அவளது உள்ளங்கைகளில் இறங்கியபோது, மீண்டும் மித்ரனின் நினைவு அவளைச் சூழ்ந்தது.
Advertisement
அவன் மேடையில் நின்றிருந்த விதம்… அது ஒரு சாதாரணப் பேச்சாளனின் உடல்மொழி அல்ல. “எப்படி இவனால் மட்டும் இவ்வளவு மிடுக்காக இருக்க முடிகிறது?” கூட்டத்திற்கு நடுவே, பல முகங்கள் தெரிய, அவளது முகம் மட்டும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அவன் அவளைத் தேடிப் பிடித்து, நேருக்கு நேர் அவள் கண்களைப் பார்த்துப் பேசிய அந்தத் தருணம்… அந்தப் பார்வையில் இருந்த தீர்க்கம்… அவனது அந்தக் கம்பீரம், அவளது விழிகளை விட்டு அகல மறுத்து அடம்பிடித்தது.
Advertisement
ஒரு விஞ்ஞானியாக அவளது அறிவு அவனுக்கு “சபாஷ்” சொல்லத் துடித்தது. அவன் கொடுத்த அந்தத் தரவு விளக்கம் (Data Presentation) அத்தனை துல்லியம். ஆனால், ஒரு மனைவியாக அவளது இதயம் இன்னும் ரத்தம் வடித்துக் கொண்டிருந்தது. “அவன் யாராக இருந்தால் எனக்கென்ன? அவன் அறிவாளியாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரு நல்ல கணவனாகத் தோற்றுவிட்டான்,” என்று தனக்குள் ஒரு கசப்பான முடிவுக்கு வந்தாள். வீட்டிற்குள் அந்த ‘ஹீரோ’வை ஒரு அந்நியனைப் போலக் கடந்து செல்லத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
இங்கு யூனோ விளையாட்டினில், கவின் ஒவ்வொரு கார்டையும் கவனமாக நகர்த்தினான். சொல்லப்போனால் ஒரு சிறிய போர்க்களமே உருவாகியிருந்தது. கவினும் கண்மணியும் ‘யூனோ’ கார்டுகளை வைத்துக் கொண்டு ஒரு மினி உலகப்போரே நடத்திக் கொண்டிருந்தனர்.
டேய் கவின்! இப்போ எதுக்கு கலரை மாத்துன? என்கிட்ட நாலு ரெட் கார்டு இருந்துச்சு தெரியுமா? இது சீட்டிங்!” என்று கண்மணி சிணுங்கினாள்.
Advertisement
கவின் தன் கையில் இருந்த கார்டுகளை விசிறி போல ஆட்டியபடி, “கண்மணி, இது சீட்டிங் இல்ல… இதுக்கு பேருதான் ‘ பிரடிக்டபிலிட்டி அனாலிசிஸ் (Predictability Analysis). உன்கிட்ட என்ன கலர் இருக்கும்னு நான் கெஸ் பண்ணி, உன்னோட பாதையை பிளாக் பண்றதுதான் இந்த கேமோட பியூட்டியே!” என்றான் ஒரு சிறு விஞ்ஞானியைப் போல.
“டேய் கவின்! இது அநியாயம்… என்கிட்ட ‘ப்ளஸ் ஃபோர்’ (Plus 4) கார்டு இருக்கும்போதே நீ எப்படி கேமை முடிப்ப? ஒழுங்கா அந்த கார்டை எடு!” என்று கண்மணி கத்தினாள்.
கவின் ஒரு கார்டை டேபிளில் தட்டிப் போட்டுவிட்டு, மிக நிதானமாகச் சொன்னான், “கண்மணி, இது வெறும் விளையாட்டு இல்ல, இது ஒரு மேனேஜ்மென்ட் லெசன். உன்கிட்ட எவ்வளவு பெரிய பவர் இருந்தாலும், அதைச் சரியான நேரத்துல பயன்படுத்தத் தெரியலன்னா, அந்த பவர் வேஸ்ட். ‘ப்ளஸ் 4’ கார்டை கையிலேயே வெச்சுட்டு நீ வேடிக்கை பார்த்தது உன் தப்பு!”
கண்மணி அவனை முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன்னாள், ” உனக்குத் தெரியும் நான் ‘ப்ளூ’ கார்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்னு. நீ வேணும்னே கலரை மாத்தி ‘UNO’ சொல்லிட்டே!”
கவின் ஒரு குறும்புச் சிரிப்புடன், “பாரு கண்மணி, நாம ஒரு கலருக்காகக் காத்திட்டு இருப்போம், ஆனா வேற ஏதோ ஒரு கலர் தான் நம்ம முன்னாடி வந்து நிக்கும். வர்றதை ஏத்துக்கிட்டு விளையாடுறவன் தான் வின்னர். நீ இன்னும் அந்தப் பழைய ‘ப்ளூ’ கார்டையே நினைச்சுட்டு இருந்தா எப்படி?”
ஆதிரைக்குச் சிரிப்பு வந்தது. இதெல்லாம் அந்த மித்ரனின் வேலைதான்! “டேய் கவின், பிரடிக்டபிலிட்டி, மேனேஜ்மென்ட் லெசன்… இதெல்லாம் யாருடா உனக்குச் சொன்னது?” என்று அவள் கேட்க, “மை டாட், மை டாட்!” என கட்டை விரலை (Thumbs up) உயர்த்தி அவன் பெருமையாகச் சொன்னான்.
ஆதிரை கவினைப் பார்த்து கிண்டலாகக் கேட்டாள், “ஏன்டா கவின், உங்க அப்பா உனக்கு சொல்லிக் கொடுத்த அந்த ‘மேனேஜ்மென்ட்’ லெசன்ல, ‘கார்டு விளையாடும்போது மத்தவங்க கார்டை எட்டிப் பார்க்கக்கூடாது’ன்னு சொல்லிக் கொடுக்கலையா? ”
கவின் உடனே தன் அப்பாவைப் போலவே கண்ணைச் சிமிட்டி, “அதுக்கு பேரு எட்டிப் பாக்குறது இல்லம்மா… அது ‘மார்க்கெட் ரிசர்ச்!” என்று சொல்ல, ஆதிரை தலையில் அடித்துக்கொண்டாள். “அடேங்கப்பா… அசகாய சூரன்டா அவன்! பிள்ளையை ரொம்ப நல்ல்ல்ல்லா வளர்த்திருக்கான்!”.
அதே நேரம் வீட்டை நோக்கித் தன் காரைச் செலுத்திக் கொண்டிருந்த மித்ரனின் கைகள் ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்தாலும், அவனது சிந்தனை முழுவதும் அந்த ஆய்வகத்தின் மேடையில் தான் இருந்தது. ஒரு தேர்ந்த விஞ்ஞானியாக, தனது ஆராய்ச்சியில் இருந்த அந்த ஒரு சிறிய ரிசர்ச் கேப்(gap)பை ஹார்டுவேர் மற்றும் மெட்டீரியல் அரிப்பு (Corrosion) குறித்த சிக்கலை – அவள் அத்தனை பேர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டியது பிரமிக்க வைத்தது. அவன் எதிர்பார்த்தது ஆதிரையின் மௌனத்தை அல்லது அவளது தவிப்பை. ஆனால், அவள் பதிலடி கொடுத்த விதம் முற்றிலும் வேறானது.
“கரெக்டா பாயிண்ட்டைப் பிடிச்சிட்டாளே கள்ளி!” – நினைக்கும்போதே அவனையும் அறியாமல் உதட்டில் ஒரு பெருமிதப் புன்னகை அரும்பியது.
வீட்டில் அமைதியாக, அடக்கமாக, பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு, மௌனத்தையே ஆயுதமாக ஏந்திய அந்த ஆதிரையா இது? கையில் பாயிண்டருடன், ஒட்டுமொத்த விஞ்ஞானிகள் கூட்டத்தையும் தன் பக்கம் திருப்பிய அந்த ஆளுமை … அந்த நிமிர்வு… அபாரம்.
அவளது சிந்தனைகள், அவளது கூர்மையான அறிவுத்திறன் அவளை இன்னும் எங்கோ கொண்டு செல்லும் என்று அவனுக்குத் தோன்றியது.
“நீ இன்னும் பல மைல் கற்களைத் தாண்டப்போகிறாய் ஆதிரை” என மெல்ல முணுமுணுத்தபடி காரை விட்டு இறங்கினான் மித்ரன்.
மித்ரன் வீட்டிற்குள் நுழைந்தபோது அவனது மனநிலை முற்றிலும் வேறாக இருந்தது. ஆதிரையின் அந்த அறிவுத்திறன் அவனுக்குள் ஒரு புதிய காதலைத் தூண்டியிருந்தது.
அவன் நேராக அவளை நோக்கி நடக்க, கவின் உற்சாகமாகக் கத்தினான், “அப்பா! கரெக்டா வந்தீங்க… கண்மணி ‘ரிவர்ஸ்’ கார்டு போட்டு கேமையே குழப்பிட்டாப்பா!”
மித்ரன் ஆதிரையையே பார்த்தபடி, “ரிவர்ஸ் கார்டு போட்டா என்ன கவின்? மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்,” என்றான்.
நேராக ஆதிரையினருகில் வந்து, தன் வலது கையை உற்சாகமாக நீட்டினான்.
ஆதி! நிஜமாவே இன்னைக்கு நீ ‘கிரேட்’ (Great). அந்த ரிசர்ச் கேப்பை (Research Gap) நீ பிடிச்ச விதம் இருக்கே… அமேசிங்! வாழ்த்துகள்!” எனச் சொல்லி மித்ரன் கைகுலுக்க கை நீட்டினான். மிஸஸ் ஆதிரை… அந்த நீங்க… இப்போது ‘ஆதி… நீ…’ என்றானது.
ஆதிரை அவன் நீட்டிய கையை ஒரு கணம் வெறித்துப் பார்த்தாள். அவளது மௌனத்தை ஒரு புன்னகையால் கடந்து சென்ற மித்ரன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அலட்சியமான அழகோடு தன் ஷூ லேஸ்களை அவிழ்த்தவன், சட்டையின் முன் இரு பட்டன்களை அநாயாசமாகக் கழற்றினான். ஒரு நீண்ட களைப்பான நாளுக்குப் பிறகு அவன் உடல் அந்த சோபாவில் சாய்ந்த விதம்… தன் கரங்களை அகல விரித்து சோபாவின் மேற்கட்டைகளில் வைத்த அந்த விதம், நீல நிறச் சட்டை அவன் தேகத்தோடு ஒட்டியிருந்த விதம்… அந்த கம்பீரமான ஆதிக்கம்… ஆதிரையின் மனதின் நிதானத்தை மெல்லச் சிதைத்தது.
“அந்த நீல நிறச் சட்டை, ‘வா… வந்து என் தோளில் சாய்ந்துகொள்’ என அவளை அழைப்பது போலவே ஒரு மாயையை உருவாக்கியது.”
“கண்மணி குட்டி, அப்பாக்குத் தண்ணி எடுத்துட்டு வாடா…” என்று அவன் சொல்ல, கண்மணி ஓடிப் போய் தண்ணீரோடு வந்தாள்.
மித்ரன் அந்தத் தண்ணீரை வாங்கிக் குடித்தபடியே, தன் பார்வையை மீண்டும் ஆதிரையின் மீது நிலைக்க வைத்தான். பின் மீண்டுமாய்… ‘ஆதீ! ஐ அம் ஹேப்பி ஃபார் யூ… மா!’ என மிக மென்மையான குரலில் சொன்னான். அந்த ‘மா’ என்கிற ஒற்றைச் சொல்லில் அத்தனை அணுக்கம் “கன்க்ராட்ஸ்…” என்றவன், தன் வலது கரத்தை மீண்டும் ஒருமுறை அவளை நோக்கி நீட்டினான்.
ஆதிரை அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், தன் தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர முற்பட்டாள்.
மித்ரனின் முகம் சட்டென வாடியது. நீட்டிய கை அப்படியே காற்றில் நிற்க, அவனது ஈகோ மெல்லத் தலைதூக்கியது.
கோப்பையுடன் அவள் சமையலறைக்குள் நுழைய, மித்ரன் தன் நீட்டிய கையை மெல்ல மடக்கிக்கொண்டான்.
ஆதிரை சமையலறைக்குள் நுழைந்த வேகத்தில் மித்ரனும் அவளது பின்னாடியே சென்றான்.
“என்னடி உனக்கு அவ்வளவு கோபம்? ஒரு மனுஷன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து, பக்கத்துல நின்னு ‘ஈ’னு பல்லைக் காட்டிட்டு கை நீட்டுறேன்…?” எனச் சற்றே எரிச்சலுடன் கேட்டான்.
ஆதிரை சட்டெனத் திரும்பி அவனை ஏறிட்டாள். அவளது பார்வையில் ஏளனம் மின்னியது.
அவள் தன்னை இவ்வளவு அலட்சியப்படுத்துவதை அவனது ஈகோவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “என்னடி உனக்குள்ள அவ்வளவு திமிர்? எதாச்சும் பேசுடி… இப்படிப் பேசாமலே இருந்து சித்திரவதை பண்றே!” என்று கர்ஜித்தபடி, அவளது கையைப் பற்றி இழுத்து அங்கிருந்த தேக்கு மரக் கதவின் பின்னால் அவளைச் சாய்த்தான்.
திடீர் தாக்குதலில் ஆதிரை அதிர்ந்து போனாள். கதவிற்கும் அவனுக்கும் இடையில் அவள் சிறைபட்டாள்.
அவளது முன் நெற்றியில் சரிந்து கிடந்த கூந்தல் இழைகள், அந்த கோலிக்குண்டு போன்ற கண்கள், அவளது கூர் நாசி, அந்த நாசியின் நுனியில் படர்ந்திருந்த சிறு வியர்வைத் துளி, தேநீர் பருகியதன் விளைவோ அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்போ, ஈரமாக மின்னிய அவளது இதழ்கள், தன்னை மீறி அந்தக் கணம் அவள் உதட்டைக் கடித்தபடி நின்றது, அனைத்துமாய் அவன் முன்னே அத்தனை வசீகரமாய் விரிந்தது. அதுவே மித்ரனைத் தன் கட்டுப்பாடு இழக்கச் செய்து அவளை நோக்கி ஈர்த்தது. அவனது நிதானம் முற்றிலும் கைவிட்டுப் போயிருந்தது.
கோபத்தில் லேசாகச் சிவந்து, அக்னித் துளிகளைச் சிந்துவது போல மித்ரனைத் துளைத்த அந்த விழிகளும், ஏறி இறங்கிய அவளது மூச்சுக்காற்றும் அவனது கட்டுப்பாட்டைச் சிதைத்தே விட்டன. அந்தச் சின்னஞ்சிறு இடைவெளியில் அவனது வாசமும், அவளது மேனியின் சிலிர்ப்பும் ஒன்றோடு ஒன்று கலந்து அந்த இடத்தின் வெப்பத்தை உக்கிரமாக்கியது.
அவள் “விடு” என்று சொல்லத் துடித்த அந்த நொடியில், மித்ரன் அவளுக்கு ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை. மாறாக, அவளது முகத்தை தன் இரு கைகளுக்குள் சிறை பிடித்தான். அந்தச் செவ்விதழ்களில் தனது ஆக்ரோஷமான தேடலைப் பதித்தான். நீண்ட நாட்களாகத் தேக்கி வைத்திருந்த தாகமும், தன் மேலிருந்த கோபமும், அவள் மீதிருந்த அடங்காத காதலும் கலந்து தெறித்திருந்தது அந்த முத்தம்… அது மென்மையானது அல்ல!
ஆதிரை ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனாள். “மித்ரன்!” என்று தன் முழு ஆக்ரோஷத்தையும் திரட்டி, பலத்துடன் அவனைத் தள்ளினாள். சற்றும் எதிர்பாராத அந்த உந்துதலில் மித்ரன் பின்வாங்கி நிலைதடுமாறினான். கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காகத் தட்டுத்தடுமாறி அருகில் இருந்த அந்த மர வேலைப்பாடுகள் நிறைந்த ஷெல்ஃபைப் பலமாகப் பற்ற முயன்றான்.
அந்த வேகத்தில், ஷெல்ஃபின் கூர்மையான ஒரு முனை அவனது கையை ஆழமாகப் பதம் பார்த்தது. அவனது வலது கையில் நீண்ட கீறல் விழுந்து, அடுத்த நொடியே ரத்தம் கசியத் தொடங்கியது.
ஆதிரை அப்போதுதான் மீண்டு, அவனது காயத்தைப் பார்த்தாள். அவளுக்கு ஒரு குரூரத் திருப்தி மேலோங்கியது.
அவளது கண்களில் வழிந்த கண்ணீர் அவமானத்தால் வந்ததா அல்லது ஆத்திரத்தால் வந்ததா என்று அவளுக்கே தெரியவில்லை. நேராகக் குளியலறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டாள்.
முத்தம், அதிலும் இதழ் முத்தம் என்பது காதலின் உன்னதமான தருணங்களில் மட்டுமே பரிமாறப்பட வேண்டிய ஒன்று. அன்பின் மொழி அது. காமத்திலோ அல்லது ஆத்திரத்திலோ விளைகின்ற தீண்டல் சுகம் தராது.
முகம் முழுக்கத் தண்ணீரை அள்ளித் தெளித்தாள். “என்னை ‘லிமிட்ல நில்லு’ன்னு சொல்லிட்டு, இப்போ அவன் லிமிட் எங்க போச்சு? லிமிட்டாம்… லிமிட்டு!” – அவளது உதடுகள் கசப்புடன் முணுமுணுத்தன.
மித்ரனைச் சக்தி கொண்டு உந்தித் தள்ளிய அந்தத் திருப்தி, ஆதிரையின் முகத்தில் ஒருவிதமானத் தீவிரத்தை ஏற்படுத்தியிருந்தது
அவள் குளியலறையை விட்டு வெளியே வந்த அதே விநாடி, “அம்மா… அப்பா…” என்று கத்தியபடி கவினும் கண்மணியும் சமையலறைக்குள் ஓடி வந்தனர்.
மித்ரன் இன்னும் நிலைகுலைந்து அங்கேயே நின்றிருந்தான். பிள்ளைகளின் வருகை அவனுக்கு ஒரு தற்காலிக விடுதலையைத் தந்தது போல இருந்தாலும், அந்தக் கீறலின் வலியை விட ஆதிரையின் கண்கள் காட்டிய அந்த ஏளனம் அவனைத் துளைத்துக் கொண்டே இருந்தது.
ஆதிரை சட்டெனத் தன் முகபாவனையை மாற்றிக்கொண்டாள். பிள்ளைகளுக்கு முன்னால் தன் காயங்களைக் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை.
கண்மணி “அம்மா… ப்ளீஸ்… நாம இன்னைக்கு குஷி பீச் (Khushi Beach) போலாமா?
“கவினுக்கு இப்ப தான்மா உடம்பு சரியாயிருக்கு”.
“ இப்ப போனா தான் மா அவனுக்கும் ஜாலியா இருக்கும்?”
கவின் தன் பங்கிற்கு மித்ரனின் கையைப் பற்றினான். “ஆமாப்பா… பீச் போலாம். நான் மணல்ல விளையாடணும்.”
மித்ரன் அவளைப் பார்த்தான். ஆதிரை மித்ரனை பார்த்தாள். அவர்கள் இருவருக்குமே கடற்கரையில் போய் நெஞ்சில் தேங்கிக் கிடக்கும் பாரம் குறையும் வரை ‘ஓ’வென்று கத்தி அழத் தோன்றியது

