Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

72. மதுமதி - மதுரம் தூவும் மழையே

மதுரம் தூவும் மழையே 1

எதிர்பார்ப்போடு பொங்கி வரும் கடலலைகள் ஏமாற்றமாய் மீண்டும் கடலுக்குள்ளே திரும்புவது போலத்தான், மதியூரனின் வார்த்தைகளும் தொண்டைக்குழியிலிருந்து மேலே வருவதும் பின் விழுங்குவதுமாக இருந்தன.

அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அவளிடம், அவளால் தனக்குள் உண்டான மாற்றத்தையும் மயக்கத்தையும், அவள் மீது வைத்திருக்கும் பிரியத்தையும் காதலையும் சொல்லத்தான் வார்த்தைகளை மெல்லுவதும் விழுங்குவதுமாக இருந்தான்.

அவனது அவஸ்தைகளை உணராதவள், ‘பேச வேண்டும்’ என்று அழைத்து வந்துவிட்டு, கடலை வெறிக்க வைத்த அவன் மீது எரிச்சலோடு இருந்தாள்.

‘எதற்கு அழைத்து வந்தான்? என்ன பேசப் போகிறான்?’ என யோசித்தபடியே, அந்த மாலை வேளையில் வீசும் கடற்கரைக் காற்றைக் கூட ரசிக்காமல் சிடுசிடுப்புடன் உட்கார்ந்திருந்தாள்.



Advertisement

அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் சிறுவனும் சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்தனர். அதைக் கண்டவனின் கண்களில் அத்தனை ரசனை. பக்கத்தில் அமர்ந்திருப்பவளுடன் இதுபோலச் சிறுவயதில் விளையாடிய நினைவுகள் படையெடுத்தன.

அவள் ஒருத்தி மட்டுமே இன்னும் அவனது நட்பு வட்டத்தில் இருக்கிறாள். யாரிடமும் அவன் அதிகமாக நட்பு பாராட்டியதில்லை. பள்ளி, கல்லூரி காலங்களில் கூட ஒதுங்கியேதான் இருப்பான். அதையும் மீறிப் பேசினால் கேலி, கிண்டல் செய்து அன்றைய நாளின் பொழுதுபோக்காக அவனை மாற்றி விடுவார்கள். அப்படிப்பட்ட கூட்டங்களுக்கு மத்தியிலும் தோழியென இன்றுவரை இருப்பது அவள் மட்டுமே! அவள்தான் அர்ச்சனா, அவனது சிறுவயதுத் தோழி.

தன்னை நீங்காது தன்னுடன் பயணிக்கும் தோழியின் மேல் காதல் துளிர்க்க, மனைவியாகக் கடைசி வரை அவளைத் தன்னோடு வைத்துக்கொள்ளும் பேராசை அவனுக்கு. அவனது ஆசையையும் காதலையும் சொல்லத்தான் கடற்கரைக்கு அவளை அழைத்து வந்திருந்தான்.

Advertisement

“மதி! எதுக்காக என்னை வரச் சொன்ன? ஏதோ சொல்லணும்னு சொன்னியே, சொல்லு! இப்போ நீ சொல்ல ஆரம்பிச்சாதான் நாளைக்குள்ள சொல்லி முடிப்ப! சீக்கிரமா வந்த விஷயத்தைச் சொல்லுடா!” என்று வேகப்படுத்தினாள்.

Advertisement

மற்றவர்கள் கேலி கிண்டல் செய்யும் போது உண்டாகும் வலியை விட, நெருங்கியவர்களே அவன் குறையை அறிந்து கேலி செய்வதுதான் அவனுக்குள் பெரும் வலியை உண்டாக்கியது. ஆனாலும் நெருங்கியவர்கள் மேல் கோபம் கொள்ளாது தனக்குள்ளே வைத்துப் புழுங்கும் ரகம் அவன். அர்ச்சனா சொன்னதில் மதிக்கு உள்ளே வலி உண்டானது. ஆனாலும் அவளென்பதால் தன் வலியை காட்டிக்கொள்ளாது அமைதி காத்தான்.

“என்ன சொல்ல வந்த மதி? சீக்கிரம் சொல்லேன்.”

“அ… அ… அ… அ… அச்சு! நா… நா… நா… நா… உ… உ… உன்னை க்கா.. கா… காத… காதலிக்கிறேன்டி” என்று நிதானமாகச் சொல்ல நினைத்தவன், அவள் அவசரப்படுத்தியதும் பதறித் திக்கித் திணறிக் கூறி முடித்தான். அதைச் சொல்வதற்குள் அவன் பட்ட பாடு அவனும் அவனைப் படைத்த கடவுளும் மட்டுமே அறிவார்கள்.

Advertisement

மதி தன் காதலை மொழிந்ததும் கலகலவெனச் சிரித்தாள் அர்ச்சனா! அவளது சிரிப்புக்குப் பின் பொதிந்திருக்கும் அர்த்தத்தை அவனால் யூகிக்க முடியவில்லை.

“ஏ… ஏ… ஏ.. ஏன் சி… சி… சிரிக்கிற அச்சு?”

“சிரிக்காம என்ன பண்ணச் சொல்ற? நீ சொன்னதைக் கேட்டு எனக்குச் சிரிப்புத்தான் வருது மதி!”

“அ… அ… அச்சு!”

“சாரி மதி! நீ இப்படி காதலைச் சொல்லுவனு எதிர்பார்க்கல. ஏன் நீ என்னை காதலிப்பன்னு கூட நான் எதிர்பார்க்கல. எப்போ இருந்து உனக்கு என் மேலே காதல்?”

“சி… சி… சின்ன வ… வ… வயசுலே இ… இருந்தே உ… உ… உன்னை எ… எனக்குப்… பி… பிடிக்கும் அ… அச்சு. எ… எ… எனக்காக ச… சப்போர்ட் ப… ப… பண்ணுவ! யா… யா… யாரையும் எ… எ… என்னை கே… கே… கேலி செ… செய்ய வி… விட… மாட்ட! எ… என… எனக்காகப் பே… பேசுவ! அ… அது… அதுவே… எ… என… எனக்கு உன் மே… மேல… கா… காத… காதல் வரக் கா… கா… காரணமா இ… இ… இருந்தது அச்சு” என்று ஒருவாறு சொல்லி முடித்தான்.

“ஒரு ஃப்ரெண்டா நான் உனக்கு சப்போர்ட் பண்றதால உனக்கு என் மேலே காதல் வந்திருக்கலாம். ஆனா எனக்கு உன் மேலே எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லை மதி. என்னால நீ பேசுறதைப் பொறுமையா கேட்க முடியும் மதி. ஆனா காதலியா, மனைவியாகும்போது வாழ்நாள் முழுக்க என்னால முடியாதுடா! எனக்கு அந்தப் பொறுமையும் இல்லை… நீ உன் காதலையே இழுத்து இழுத்துதான் சொன்ன, இதுல எங்க நீ ரொமான்ஸா பேசுவ? நீ ரொமான்ஸா பேசினா நிச்சயம் எனக்குச் சலிப்புதான் வரும் மதி! இதுல மட்டும் இல்ல, எல்லா நேரமும் எப்படா இவன் பேசி முடிப்பான்னுதான் தோணும்…?! என்னை நீ எப்படி நினைச்சுக்கிட்டாலும் பரவாயில்லை, இதுதான் உண்மையான காரணம். இத்தனை நாள் ஃப்ரெண்ட்டா கூட இருந்தேன் தான், அதுக்காக வாழ்க்கை முழுக்க உன்னோட மனைவியா வர முடியாது மதி! ஐ ஆம் சாரி” என மனதிலுள்ளதைத் தெளிவாகச் சொல்லிவிட்டாள்.

அவளது பதில் அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நத்தை போலக் கூட்டுக்குள் ஒடுங்கிப்போனவனை வெளிக்கொண்டு வந்தவள் அவள். இன்று மொத்தமாகக் கூட்டுக்குள் அடைத்துவிட்டாள். கொஞ்சமும் எதிர்பாராத பதிலைக் கொடுத்து அவன் மனதை முற்றிலுமாக உடைத்துவிட்டாள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவளுக்குக் கவலையில்லை. உண்மையான காரணத்தைச் சொல்லாமல் மழுப்பிச் சாயம் பூசி ஏதேதோ காரணத்தைச் சொல்வதை விட, நேரடியாகச் சொல்லிவிடுவதே மேல் என்று கத்திரியைப் போல நறுக்கென்று சொல்லிவிட்டாள். அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை.

“போ…. போ… போலாம் அச்சு” என இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்றுணர்ந்து எழுந்துகொண்டான்.

“ம்ம்” என்று அவளும் எழுந்துகொண்டாள். அவனோடு மண்ணில் கால் புதைய நடந்தாள். இருவரும் தங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். அவளோ வண்டியிலிருந்த ஹெல்மெட்டை எடுத்து அணிய, மதியோ சற்றுத் தயங்கி, “அ… அ… அச்சு!! சா… சா… சாரி!”

“எதுக்கு?”

“எ… எ… எ… என் வி… வி… விருப்பத்தைச் சொ… சொல்லி உ… உ… உன்னைச் ச… சங்கடப்… ப… ப… படுத்திட்டேன். அ… அதுக்குத்தான் சாரி.”

“இட்ஸ் ஓகேடா, நான் பெருசா எடுத்துக்கலை” என்றாள் எதார்த்தமாக.

ஆனால் அவனோ, ‘தன் காதலைத்தான் அவள் பெருசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்கிறாளோ’ என்று எண்ணிக் கொண்டு உள்ளுக்குள் துவண்டு போனான். கல்லூரியில் பயிலும்போதே அவள் மீது அவனுக்குக் காதல் துளிர்விட்டது. இப்போது அவனுக்கு வயது இருபத்தேழு! பத்து வருடக் காதல் அவளது ஒற்றைப் பதிலால் சிதைந்து போனது.

“ஆங்! சொல்ல மறந்துட்டேன் மதி! நான் ஒரு பையனை லவ் பண்றேன். அவரும் தான். எங்க லவ்வ வீட்ல சொல்லிட்டோம். அல்மோஸ்ட் வீட்ல அக்சப்ட் பண்ணிட்டாங்க… சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம்” என்றாள் குதூகலமாக.

“சொ… சொ… சொ… சொல்லவே இ… இ…. ல்லியே அச்சு! எ… எ… எனிவே க… க… க… காங்கிராட்ஸ்டி.”

“வீட்ல ஒத்துக்கற வரைக்கும் பிரைவேட்டா வச்சிருந்தோம் மதி! இப்போதான் ஒத்துக்கிட்டாங்களே, சோ வெளிய சொல்றோம்… ஓகே பாய் மதி!” என்று வண்டியை உயிர்ப்பித்து பறந்துவிட்டாள்.

ஆனால் அவனோ, உயிர்ப்பைத் துறந்து வாகனங்களோடு வாகனமாக உயிரற்று நின்றிருந்தான். கண்ணெதிரே அனைத்தும் மங்கலாகத் தெரிய, கண்களில் கண்ணீர் கடல் சூழ நின்றிருந்தான். நிராகரிப்பு அவனுக்குப் புதிதல்ல! திக்கித் திக்கிப் பேசும் அவனுக்குப் பலரும் வாய்ப்பு அளிக்காமல், அதைக் குறையாய்க் கண்டு நிராகரித்ததுதான் அதிகம்.

டப்பிங் ஆர்டிஸ்டாக வேண்டும் என்பது அவனது கனவு. ஆனால் அதற்குப் பெரும் தடையாக இருப்பது திக்கித் திக்கிப் பேசும் பிரச்சினைதான். நிறைய ஆடிஷனுக்குச் சென்று நிராகரிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறான். யாருமே அவனது வாசிக்கும் திறமையைப் பார்க்கவில்லை. பேசும்போதே திக்குபவன் எவ்வாறு வாசிக்கப் போகிறான் என்று அவனை நிராகரித்திருக்கிறார்கள். ‘நிராகரிப்பு’ என்ற வார்த்தை அவனுடன் பிரிக்க முடியாத பந்தமாகிப் போனது.

கடற்கரையிலிருந்து எப்படி வீட்டிற்கு வந்தான் என்று தெரியவில்லை. எப்படியோ வந்து சேர்ந்துவிட்டான். தாயும் மகளுமாக இருவரும் அமர்ந்து எதையோ கொரித்தபடி சீரியல் பார்த்துக்கொண்டிருந்தனர். தள்ளாடிய நடையுடன் அறையை நோக்கிச் சென்றவனைத் தடுத்தது தாயின் குரல்.

“என்ன சொன்னா என் மருமக? கல்யாணம் பண்ணிக்கலாம்னுட்டாளா?!” என நக்கலாக வினவினார்.

மகனின் வலிக்கு நிவாரணியாக இல்லாமல் மேலும் ரணமாக்கும் விதமாகத்தான் பேசினார். “அம்மா! அண்ணன் அமைதியா இருக்கிறதைப் பார்த்தா அர்ச்சனா வேணாம்னு சொல்லிருப்பான்னு நினைக்கிறேன்” எனத் தங்கை கணிக்க,

“என்னடி நினைக்கிறேங்கிற! அதான் நடந்திருக்கும். அவ இவனோட ஃப்ரெண்டா இருந்தா உடனே கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிச்சிடுவாளாக்கும்… திக்குவாயனை எவடி கட்டிப்பா?! இத்தனை நாள் அவ இவனுக்குத் தோழியா இருந்ததே பெரிய விஷயம். இதுல அவளைப் பொண்டாட்டியாக்கப் போறானாமே! பேராசை உங்க அண்ணனுக்கு! எத்தனை பொண்ணுங்க பார்த்தாச்சு, இவன் வாயைத் திறந்ததுமே வேணான்னுட்டாளுங்க. ஆனா பாரு, என் அண்ணன் பொண்ணு பெரிய மனசு பண்ணி இவனைக் கட்டிக்க முன்வந்திருக்கா, மைனர் வேணாம்பாராம். அந்தப் புள்ள மனசை கஷ்டப்படுத்தினான்ல, இவனுக்கு வேணும்… இப்பவும் இன்னும் கெட்டுப் போகல அவ, இவனுக்காகக் காத்திருக்கா. இவனைச் சரின்னு சொல்லச் சொல்ல என் மருமக ரெடியாகத்தான் இருக்கா இவனைக் கட்டிக்க!”

அவர் அவ்வாறு சொன்னதும் வேகமாக எழுந்து உள்ளே சென்று கதவைப் பட்டெனச் சாத்திக்கொண்டான்.

“இந்தக் கோபத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… பணமும் கொடுத்து, நகையும் போட்டு, இவனை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொல்லி எல்லாத் தொழிலையும் பார்த்துக்கிற அந்தஸ்தையும் தர்றேன்னு என் அண்ணனே சொல்லும்போதே இவனுக்கு என்னடி? வெட்டிப் பய! தாலியைக் கட்டி ராஜாவா இருப்பானா! வேணாம்னு சொல்லி வீம்பு பண்றான். கடைசி வரைக்கும் ஒத்தக்கட்டையா நிக்கப் போறான் உன் அண்ணன், பார்த்துக்க…” என அண்ணன் மகளை வேணாம் என்கிற ஆதங்கத்தில் மகனென்று பாராமல் சாபம் விட்டார்.

கற்பகத்தை வெறித்த மதிவதனி, மீண்டும் தொலைக்காட்சியில் கண்களைப் பதித்தாள். சாத்திய கதவில் சாய்ந்தவனுக்கோ பூமியில் அல்லாது வேற்று கிரகத்தில் தனித்துவிட்டது போல மூச்சுத் திணறிப் போனது.

ஒருபுறம் காதல் நிராகரிக்கப்பட்ட வலி! மறுபுறம் தன்னை விற்கக் காத்திருக்கும் தாய்! அவனுக்கு என்று யாருமே இல்லாத உணர்வு. தன் கஷ்டங்களைப் பகிரத் தோழியாவது இருந்தாள். ஆனால் இன்று அவளும் இல்லை. இனி அவளை அழைத்துத் தன் காதல் காயத்தை மேலும் பெரிதாக்கிக்கொள்ளும் எண்ணமில்லை.

அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. அவன் ஆசைப்பட்ட எதுவுமே அவனுக்குக் கிடைத்ததில்லை. ‘உலகிலேயே அதிர்ஷ்டம் கெட்ட உயிரினம் என்றால் நான் ஒருவனே’ என்று எண்ணுமளவிற்கு அவனுக்குள் விரக்தி!

“இதற்கு மேல் உயிர் வாழ வேண்டுமா?” என்ற ரீதியில் தற்கொலை செய்துகொண்டால் என்ன? தன்னுடைய இறப்பு யாருக்கும் எந்தப் பாதிப்பும் தரப் போவதில்லை. ஒரு வாரச் சடங்கில் தன் இறப்பில் உண்டாகும் லாப, நஷ்டக் கணக்கைத் தன் தாய் பார்ப்பாரே தவிர, தனக்காக ஒரு நாள் கண்ணீர் விடுவதே அதிசயம்! தங்கையும் “சொத்துல பங்கு போட ஆள் இல்லை, அப்பாடா” என நினைத்துக்கொள்வாள். வேறென்ன இருவரும் எண்ணி விடப்போகிறார்கள்?

தன் இறப்பில் கூட உண்மையாகக் கண்ணீர் விடும் ஒரு நபரும் இல்லை என்று நினைக்கையிலேயே உள்ளுக்குள் கசந்தது அவ்வுண்மை. இதற்கு மேல் உயிர் வாழ வேண்டுமா? மின்விசிறியில் தாயின் புடவையைப் போட்டுத் தற்கொலை செய்ய முயற்சிக்க, அதைத் தடுக்கும் விதமாக அவனது அலைபேசி அலறியது.

“ப்ச்” என்ற சலிப்புடன் அலைபேசியைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தது. தற்கொலை எண்ணத்தைச் சற்றுத் தள்ளி வைத்து அழைப்பை ஏற்றான்.

ஒரு பெண்ணின் அழகான குரல் கேட்டது. அவனது வாழ்க்கையையே மாற்றப் போகும் பெண்ணின் குரலது. அங்கு என்ன சொல்லப்பட்டதோ, தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருந்தான். சேலையும் அவிழ்ந்து விழுந்தது. எரியும் தணலில் சில்லென்று வீசும் காற்றைப் போல, இந்த விரக்தியிலும் பலரது நிராகரிப்பு மத்தியிலும் அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்வானா மதியூரன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!