Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-17

அத்தியாயம் – 17

“ இயல்பாக இரு என்பதாகத் திருப்பி அனுப்புகிறது கரை. இயல்பே இதுதான் எனத் திரும்பவும் வருகிற அலை… காதல்.”

மண்டபத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில், அரியமான் கடற்கரைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த குஷி பீச், உண்மையில் இயற்கையின் மடியில் ஒளித்து வைக்கப்பட்ட ஒரு ரகசியத் தீவு போலத்தான் காட்சியளிக்கும். அத்தனை அழகு. நகரத்துக் கடற்கரைகளைப் போல ஆரவாரம் இல்லை, கூட்ட நெரிசல் இல்லை. இரைச்சலான வியாபாரக் குரல்களோ, பிளாஸ்டிக் குப்பைகளோ அங்கே இல்லை. அங்கே ஒலிப்பது இரண்டே இசைகள்தான்!  ஒன்று மோதிச் சிதறும் அலைகளின் ஓசை, இன்னொன்று சவுக்குத் தோப்புகளின் ஊடே புகுந்து வரும் காற்றின் மெல்லிய சீறல்.



Advertisement

இங்குள்ள கடல் நீர், மற்ற கடற்கரைகளைப் போலன்றி, ஒருவிதமான மரகதப் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் அத்தனைத் தெளிவாகக் காணப்படும். அலைகள் இங்கே கரையை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து வராமல், ஒரு ஏரியின் அமைதியுடன் மெல்ல வந்து முத்தமிட்டுச் செல்லும். அந்த அலைகளின் மென்மைக்குக் காரணம், கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகளும், தட்டையான தரைப்பகுதியும்தான்.

ஆர்ப்பாட்டமில்லாத அலைகளும், வரிசையாய் நிற்கும் பனை மரங்களும், சவுக்குத் தோப்புகளும் அந்த இடத்திற்கு ஒரு தனி அழகைத் தரும். வெண்மையான மணல் பரப்பு, எந்தவித மாசும் இன்றிப் பட்டுப் போல விரிந்து கிடக்கும். அந்த மணலில் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகமான அனுபவம்.

அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கார் கடற்கரை ஓரத்தில் நின்றது. கதவு திறந்ததும் கவினும் கண்மணியும் மணல் பரப்பை நோக்கி ஓடினர்.

Advertisement

அடிவானத்தில் சூரியன் மறைந்து வானம் ஆரஞ்சு, ஊதா மற்றும் தங்க நிறங்களாகப் பிரிந்து கடலின் நீல நிறத்தோடு கைகோர்த்திருந்தது. அந்தி வெயில் கடலின் மேல் விழுந்து தண்ணீர் முழுக்கத் தங்கக் காசுகளைத் தூவிவிட்டது போல ஜொலித்துக் கொண்டிருந்தது.

Advertisement

“மெதுவா போங்கடா…” என ஆதிரை பின்னாலேயே குரல் கொடுத்தபடி நடந்தாள்.

மித்ரன் காரைப் பூட்டிவிட்டு, கைகளை பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தபடி மெதுவாக அவளுக்குப் பின்னால் நடந்தான்.

அப்போது வீசிய அந்த கடல் காற்று, வெறும் காற்றாக இல்லாமல் ஒரு மெல்லிய இசையாக அவர்களுக்கு இடையே தவழ்ந்தது.

Advertisement

அது மித்ரனின் களைப்படைந்த முகத்தில் மோதியபோது, அவனது ரணமான மனதிற்கு ஒரு சிறிய ஒத்தடம் கொடுத்தது போல இருந்தது. அந்தக் காற்று ஆதிரையின் கலைந்த கூந்தலை அவளது முகத்தில் அள்ளி வீசியது, அவளது சிவந்த முகத்தை மறைக்கும் ஒரு திரை போல!

குழந்தைகள் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து மணலில் வீடு கட்டத் தொடங்கினர். “அப்பா… வந்து ஹெல்ப் பண்ணுங்க!” என கண்மணி கூப்பிட, மித்ரன். குழந்தைகளோடு சேர்ந்து மணலில் அமர்ந்து வீடு கட்டத் தொடங்கினான். கண்மணி மணலைச் சேர்க்க, மித்ரன் அதை அமர்த்தி உறுதியாக்கினான். “அப்பா… இங்க ஒரு சின்ன கதவு வைங்க, அப்போதான் அலை வந்து நம்ம வீட்டுக்குள்ள நுழையும்!” என்று கவின் சொல்ல, மித்ரன் மென்மையாகச் சிரித்தான்.

ஆதிரை சற்று தள்ளி மணலில் அவர்களைப் பார்த்திருந்தாள்.

மித்ரன் மணலில் அந்தச் சிறு வீட்டைத் தத்ரூபமாகக் கட்டிக் முடித்தான். அவனது கைகள் மணலைச் சேர்த்து அணைத்து, கோபுரம் சீர் செய்வதில் மும்முரமாக இருந்தன. ஆனால், அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒருவிதமான இயந்திரத்தனம் இருந்தது. அவனது நினைவெல்லாம் ஆதிரை என்கிற அவனது மனையாளைத் தான் சுற்றிச் சுற்றி வந்தது. கண்கள் மணல் வீட்டைப் பார்த்தாலும், உள்மனம் சற்று முன்பு நடந்த அந்தச் சம்பவத்தையே ‘ரீவைண்ட்’ செய்து கொண்டிருந்தது.

“எதுவும் கூறாமல், எந்த விளக்கமும் தராமல் உனக்கு என்னை புரிய வேண்டும் …இல்லையா ஆதி??” அவனுக்கு மனதெல்லாம் ரணமாக இருந்தது. அந்த ரணம், அலைகள் மணலை அரிப்பது போல அவனது நிதானத்தை அரித்துக் கொண்டிருந்தது. எதையும் விவரிக்க முடியாத ஒரு வலி அவன் பார்வையில் தெரிந்தது. பெரிதாக, அயற்சியாக இருந்தது.

குழந்தைகள் இருவரும் அலைகளோடு விளையாடத் தொடங்கினர். அலை வரும்போது பயந்தது போல பின்னால் ஓடி வருவதும், அலை பின்வாங்கும்போது அதன் பின்னால் ஓடிச் சென்று கடலைத் தொட்டுவிட்டு வருவதுமாக அவர்கள் குதூகலித்தனர். அவர்களது அந்தச் சிறு சிரிப்பொலி அலைகளின் ஓசையையும் மீறி அந்தப் பரப்பில் எதிரொலித்தது.

அந்தக் கடற்கரை மணலில், வெகுத் தொலைவில் இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர் தொட முடியாத தூரத்தில் தள்ளித் தள்ளி அமர்ந்திருந்தனர்.

“அப்பா… அம்மா… வாங்க!” என அவர்கள் கைகளை அசைத்துத் தங்களை நோக்கி அழைக்க, மித்ரன் மெல்ல எழுந்தான். அவன் ஆதிரையைத் திரும்பிப் பார்த்துவிட்டு அலைகளை நோக்கிச் சென்றான்.

ஆனால் ஆதிரை, “இல்ல… நான் வரல!” என மணலிலேயே நின்று கொண்டாள்.

ஆதிரைக்கு அந்த அலைகளோடு விளையாடத் தோன்றவில்லை. ஒருவிதமான மன அமைதியின்மையில் அவள் அங்கேயே உறைந்து நின்றாள். கரையை நோக்கி ஆக்ரோஷமாக வரும் அலைகளும், பின்வாங்கிச் செல்லும்போது கரையின் மணலைத் தன்னோடு அள்ளிக்கொண்டு போகும் அந்த அழகும் அவளுக்குப் பிடிவாதமான ஒரு மௌனத்தைத் தந்தது. அவளது மனம் அந்த அலைகளைப் போலவே முன்னும் பின்னுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

திடீரென, கடலின் ஆழம் திரட்டி வந்த ஒரு மிகப்பெரிய அலை, ஆர்ப்பரித்துக் கொண்டு கரையை நோக்கி வந்தது. “ஐயோ… பெருசா வருது! ஓடு… ஓடு!” என கவின் கத்த, பயந்து பின்னோக்கி ஓடினர்.

பின்னோக்கி ஓடி வந்த வேகத்தில் கவின் மித்ரன் மீது பலமாக மோத, எதிர்பாராத அந்தத் தாக்கத்தில் நிலைதடுமாறிய மித்ரன், அப்படியே பின்னால் நின்றிருந்த ஆதிரையின் பக்கம் சரிந்தான்.

மித்ரன் அந்தத் தள்ளாட்டத்தில் ஆதிரையின் மீது சாய்ந்தது முற்றிலும் ஒரு விபத்துதான். அவன் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை, சரியத்தான் செய்தான். அந்தத் தாக்கத்தில் நிலைதடுமாறியவன், தன் பாரம் அவள் மீது விழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, பின் தன்னையே நிலைநிறுத்திக் கொண்டான்.

ஆதிரை ஏதோ ‘தீ’யைத் தொட்டவள் போல சட்டென்று விலகி நின்றாள். அவளது முகம் சிவந்திருந்தது. அவன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு அவளை ஏறிட்டான்

குழந்தைகள் இருவரும் அந்தப் பதற்றமான சூழலை அறியாமல், தங்கள் உலகத்தில் மூழ்கிப் போனார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் ஓடிச் சென்று கடலோரத்தில் சிப்பிகள் தேட ஆரம்பித்தனர்

அலைகளின் சத்தத்தையும் மீறி, “ஹேய்… ரொம்ப தூரம் போயிடாதீங்கடா!” என ஆதிரை உரக்கக் கூவினாள். சிறுவர்கள், அப்படியே கரையோரமாகவே நடந்து தூரம் சென்றனர்.

இப்போது அந்தக் கடற்கரையின் பரப்பில், மித்ரனும் ஆதிரையும் மட்டுமே அந்த மௌனத்தைப் பகிர்ந்து நின்றனர்.

மித்ரனுக்கு ஆதிரையின் அந்த எதிர்வினை அத்தனை ஆழமாக வலித்தது. தான் நிலைதடுமாறியபோது அவளைப் பற்றியது ஒரு தற்காப்புதான் என்றாலும், அவளோ ஏதோ ஒரு ‘தீ’யைத் தொட்டது போலத் தெறித்து விலகியது சுட்டெரித்தது.

அவனது கண்கள் மெல்ல மெல்லக் கலங்கத் தொடங்கின. அவன் தன் கையை நீட்டி, “ஏன் அங்கேயே நிக்கிற? வா… வந்து அலைலயாவது காலை நனைச்சுக்கோ…” என கண்கள் கலங்கித் ததும்பி அழைத்தான்.

ஆதிரைக்கு மித்ரனின் கோபத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி உண்டு, அவனது அதிகாரத்தை எதிர்க்கும் துணிச்சலும் உண்டு. ஆனால், மித்ரனின் கலங்கிய கண்கள்… அதை மட்டும் அவளால் எப்போதுமே தாங்கிக் கொள்ள முடிந்ததே இல்லை. மித்ரனின் அந்த நிலை, ஒரு போர்வீரன் தன் அத்தனை ஆயுதங்களையும் இழந்துவிட்டு, களத்தில் நிராயுதபாணியாக நிற்பது போல இருந்தது.

ஆதிரை அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகளில் இன்னும் அந்த மருத்துவமனை வார்த்தைகளின் தழும்பு இருந்தது. “இல்ல… நான் இங்கேயே என் ‘லிமிட்’ல நின்னுகிறேன்,” என்றாள், குரலில் ஒரு மெல்லிய நடுக்கத்துடன்.

இதற்கு மேல் மித்ரனால் தாங்க முடியவில்லை. அந்த வார்த்தை அவனையே திருப்பித் தாக்குவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் விறுவிறுவென அவள் அருகில் சென்று, அவளது கையை அழுத்தமாகப் பற்றினான்.

ஆதிரை பதறிப்போய் கையை விடுவிக்க முயல, மித்ரன் அவளது பிடியைத் தளர்த்தவில்லை, மாறாக அவளது கையை அப்படியே தன் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டான். “இங்க பாரு ஆதிரை… இதோட வேகம் உனக்குப் புரியுதா?  மித்ரன் அவளது கண்களை ஆழமாகப் பார்த்துச் சொன்னான்:

“என்ன நீ இவ்வளவு தண்டிக்காதே ஆதி!”

“லிமிட்ஸ் தாண்டக்கூடாதுன்னு சொன்னது, உன் கையைப் பிடிக்கக் கூடாதுங்கிறதுக்காக இல்ல … பிடிச்சா விடத் தோணாதுங்கிற பயத்துலதான்!”

ஆதிரையின் மனதிற்குள் இருந்த அந்தப் பிடிவாதக் கோட்டை மித்ரனின் ஒற்றை வாக்கியம் சுக்குநூறாக உடைத்திருந்தது. அவனது நெஞ்சின் மீது அவளது கையை வைத்து அவன் சொன்ன அந்த விளக்கம், அவளுக்குள் ஒரு குளிர்ச்சியான மழையைப் பொழிந்தது போலிருந்தது. அலைகள் பின்வாங்கும்போது மணலை இழுத்துச் செல்வதைப் போல, மித்ரனின் அந்த ஒற்றை வாக்குமூலம் அவளது மனக்கசப்பை மெல்ல இழுத்துச் சென்றது.

ஆதிரை மெல்லத் ஈர மணலில் கால் பதித்து,  அலைகளில் கால் நனைத்தாள். அந்தக் குளிர்ச்சியான நீர் அவள் பாதங்களைத் தீண்டியபோது, அவளுக்குள் இருந்த அத்தனை பாரமும் ஒரு நிமிடம் கரைந்து போவது போல் இருந்தது.

“நீங்க சொன்ன அந்த வார்த்தை கொடுத்த வலிக்கு… இந்தத் தண்டனை எல்லாம் கம்மிதான் மித்ரன்! ஆனா… உங்க தவிப்பைப் பார்க்கும்போது எனக்கும் கஷ்டமா இருக்கு,” என அவள் சொல்ல, மித்ரனின் முகம் சட்டென்று மென்மையானது.

“ஸாரிமா…” – மிக மென்மையாக, அவளது இதயத் துடிப்புக்கு மிக அருகில் ஒலித்தது அவனது குரல். அருகே வந்து நின்றிருந்தான் அவன்.

ஆதிரை பதில் சொல்லவில்லை, அவனது கரத்தினை மெல்லத் தன் கையில் ஏந்தி, அதில் இருந்த அந்தச் சிறு கீறலைப் பார்த்தாள். அவளது விரல்கள் மெல்ல அந்த காயத்தை நீவின. மௌனமாக அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள். மித்ரன் அவளை மெல்லத் தன் அணைப்பிற்குள் இழுத்துக் கொண்டான்

குஷி கடற்கரையின் அலைகள் அவர்கள் இருவரையும் ஒன்றாக நனைத்தது..

மித்ரனின் மனம் ஒரு நிம்மதியான அலைவரிசையில் இருந்தது. ‘இனி எல்லாம் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கை அவனுக்குள் ஆழமாகப் பதிந்தது. ஆதிரையின் அந்த நனைந்த சிரிப்பும், அவள் காட்டிய  அந்த  அணுக்கமும்  அவனது பயத்தைப் போக்கியிருந்தது.

மறுபுறம், ஆதிரை, அவளது மனம் மித்ரனிடமே இருந்தது. அவனிடம் பேச வேண்டும், நிறையப் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளது மௌனம் இப்போது கசப்பானதாக இல்லை.  அது ஒரு இனிமையான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது.

அந்த அழகான அமைதியை உடைத்துக்கொண்டு, தூரத்திலிருந்தே கவினும் கண்மணியும் ஓடி வந்தனர். மணலில் கால் புதைய அவர்கள் ஓடி வந்த வேகத்தில், அந்தக் கடற்கரையே உயிர்பெற்றுத் தெரிந்தது.

அம்மா என கவினும், அப்பா என கண்மணியும் போட்டி போட்டுக்கொண்டு கத்தியபடி அவர்களை நோக்கி வந்தனர். அவர்கள் கைகளில் இருந்த சிப்பிகள் அந்தி வெளிச்சத்தில் மின்னின. குழந்தைகள் வந்து சேர்ந்ததும், அவர்கள் நால்வருமாய் அங்கிருந்து நகர்ந்து கரையினில் அமைதியாய் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு முன்னே, அந்த நான்கு உயிர்களும் ஒரு வரிசையில் அமர்ந்திருந்த காட்சி, சிதைந்திருந்த ஒரு ஓவியம் மீண்டும் உயிர் பெற்றது போலிருந்தது. மித்ரனின் ஒரு பக்கம் கவினும், மறுபக்கம் ஆதிரையும் அமர்ந்திருக்க, ஆதிரையின் மடியில் கண்மணி சாய்ந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் மித்ரன் எழுந்து, ஐஸ்கிரீம் வாங்கி வர, அந்த நாள் இன்னும் குதூகலமாகிச் சென்றது.

அன்றைய இரவு அவ்வளவு ரம்மியமாய் நகர்ந்தது. கடற்கரையிலிருந்து மணலோடும், கடல் காற்றின் ஈரத்தோடும் வீடு திரும்பிய நால்வரும், வரிசையாகக் குளித்து முடித்து புத்துணர்ச்சியோடு வெளிவந்தனர். மித்ரன் தன் அலைபேசியில் சுவிக்கி(Swiggy)யில் சப்பாத்தி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்தான்.

அந்த உணவின் மணம் வீடெங்கும் பரவ, நால்வரும் ஹாலில் பாய் விரித்து, டிவியில் கார்ட்டூன் பார்த்தபடியே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்த பின்பும் குழந்தைகள் இருவரும் தூங்குவதாகத் தெரியவில்லை. அவர்கள் டிவியில் மூழ்கியிருக்க, ஆதிரைக்கோ “பிள்ளைகள் எப்பொழுது தூங்குவார்கள்?” என்ற தவிப்பு உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் மித்ரன் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தான். அவன் குழந்தைகளுடன் டிவியைப் பார்ப்பது போலத் தெரிந்தாலும், அவனது கவனம் முழுவதும் தன் அலைபேசியின் மேலேயே இருந்தது. இடையிடையே போனை எடுத்துப் பார்த்த வண்ணம் இருந்தான்… ஏதோ ஒரு முக்கிய தகவலையோ அல்லது அழைப்பையோ எதிர்பார்ப்பது போல!

ஆதிரையின் தவிப்பு அவளது உடல் சோர்விடம் தோற்றுப்போனது. அன்றைய தினத்தின் அந்தப் களைப்பும், அலைகளில் விளையாடிய அயற்சியும் அவளை மெல்லத் தூக்கத்தின் மடியில் தள்ளியது. சிறிது நேரத்திலேயே ஒருவருக்குப் பின் ஒருவராக மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினர். ஹால் முழுக்க ஒரு நிசப்தம் நிலவியது,

மித்ரன் மெல்ல எழுந்து டிவியை அணைத்தான். மங்கலான நைட்லேம்பை மட்டும் எரியவிட்டு, தரையில் பாயில் உறங்கிக் கொண்டிருந்த ஆதிரைக்கும், பிள்ளைகளுக்கும் போர்வையைச் சரிசெய்து போர்த்தினான். அந்த வெளிச்சத்தில் ஆதிரையின் அமைதியான முகம் அவனுக்குள் ஒரு நிம்மதியைத் தந்தது. அதன்பின் அவனும் அவர்கள் அருகே மெல்ல வந்து படுத்துக்கொண்டான்.

ஆனால் அவனது கண்கள் உறக்கத்தைத் தழுவவில்லை. சரியாக அந்த நேரத்தில் அவனது அலைபேசி ஒரு மெல்லிய அதிர்வோடு ஒளிரத் தொடங்கியது. அவன் எதிர்பார்த்த அந்த மெசேஜ் வந்திருந்தது.

மெல்லத் தன் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தினான். அடுத்த தினத்தின் வேலைகளை ஒவ்வொன்றாய் மனதிற்குள் ஸ்க்ரோல் (scroll) செய்தபடி, அவனும் மெல்ல உறங்கிப் போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!