Skip to content
Post Views: 1,862
மதுரா கொண்டு வந்த டாக்ஸியில் ஏறி, கொஞ்ச தூரம் போன பின்னே தான், தன் கையில் தன் ஹான்ட் பேக் இல்லாதது ரேஷ்மாவுக்கு நினைவு வந்தது!
“அய்யோ மதுரா.. கொஞ்சம் வண்டியைத் திருப்ப சொல்லுங்க. என் ஹான்ட் பேகை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன். அதுல தான் என்னோட பாஸ்போர்ட் இருக்கு” என்றாள் அவசரமாக.
“திரும்ப அங்க போறது சரியில்ல.
உங்க அண்ணனும் யுவி சாரும் அங்க தானே இருக்காங்க.
Advertisement
அவங்க கிட்ட போன் பண்ணி எடுத்துட்டு வர சொல்லிடலாம்” என்று மதுரா சொல்லி விட்டு உடனே ரேவந்துக்கு போன் பண்ணி இந்த விபரம் சொல்ல,
“இப்ப நாங்க ரிசப்சனில் பில் கட்டிட்டு இருக்கோம். ரூமுக்கு போனவுடனே எடுத்துட்டு வந்திடறேன்” என்றான் ரேவந்த்.
“ஆமாடா. ரேஷ்மா உள்ள வந்தவுடன் அந்த ஆண்ட்டி அவ கையில் இருந்து வாங்கினாங்க!
Advertisement
ரேஷ்மா அவசரத்தில் திரும்ப வாங்கிக்க மறந்துட்டா போல!” என்றான் யுவியும்.
Advertisement
ஹாஸ்பிட்டல் பில்லை செட்டில் செய்து விட்டு, ராமநாதனை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிக் கொண்டு
பார்க்கிங்கில் டாக்சிக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருந்த போது, பார்வதியிடம் ரேஷ்மாவின் ஹேன்ட் பாகை கேட்டான் ரேவந்த்.
அவரோ, “எனக்கு தெரியாது. நான் இவர பார்ப்பேனா..
Advertisement
இல்ல உன் தங்கச்சி கையில் என்ன வச்சுட்டு இருக்கான்னு பார்த்தேனா?
அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது” என்று கடுப்புடன் சொல்லி விட அதற்கு மேல் அவரிடம் ஒன்றும் கேட்க முடியவில்லை அவனாலும்.
அந்த பேகை திறந்து பார்த்து விட்டு அதில் பாஸ்போர்ட் இருப்பதைக் கண்டு விட்டு தான்,
எதற்கும் இருக்கட்டும் என்று நைசாக அதை ஜெயந்திடம் கொடுத்து அவன் டூ வீலரில் மறைத்து வைத்து எடுத்து போக சொல்லி விட்டார் அவர் ஏற்கனவே!
ராமநாதனை டாக்ஸியில் ஏற்றிக் கொண்டு கூடவே பார்வதியையும் ஏற்றிக் கொண்டு அவனுக்கு தெரிந்த வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்த்து விட்டு அவர் கண் விழிக்க காத்திருந்தார்கள்! ரேவந்தும் யுவியும்.
யுவியை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே இருந்தார் பார்வதி!
அவ அதைக் கண்டு கொள்ளாது, மதுராவுக்கு போனில் இருந்து மெசேஜ் அனுப்பி விட்டான்.
பாஸ்போர்ட் பேக் பார்வதி ஆண்ட்டியால் ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு வாங்க முடியவில்லை என்ற செய்தியை!
டாக்டர்கள் வந்து ராமநாதனை சோதித்து விட்டு அவருக்கு பெரிதாக ஒன்றுமில்லை.
தூங்கி கண் விழித்தால் எல்லாம் சரியாகி விடும்.
பின் மண்டையில் உள்ள காயத்திற்கு மட்டும் வலி நிவாரணிகள் கொடுக்க சொல்லி விட்டு அவர் எழுந்தவுடன் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.
பார்வதியை அவர் அருகே இருக்க வைத்து விட்டு இருவரும் கேண்டீன் நோக்கி சென்றனர்!
“ரேவந்த்.. அப்ப அங்கிளுக்கு பெரிசா ஒண்ணும் பிரச்சினை இல்ல போல!
அவரை வேற யாரும் அடிச்சிருக்க மாட்டாங்கன்னு தோணுது எனக்கு!
எனக்கு என்னமோ இதுங்க தான் அவருக்கு என்னமோ பண்ணி அவருக்கு காயம் ஆகி இருக்குன்னு தோணுது!” என்றான் யுவி.
“ஆண்ட்டியால அவ்வளவு தூரம் எல்லாம் போக முடியாது!
இது அந்த ஜெயந்த் வேலையா தான் இருக்கணும்.
எப்ப ரேஷ்மாவை கல்யாணம் பண்ண, பெத்த அப்பாவையே காயப்படுத்த நினைச்சானோ,
அப்ப அவன் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவான்.
சும்மா சும்மா அவன் அம்மாவோட வந்து ரேஷ்மா முன்னாடி நின்னு,
அவளை கல்யாணத்துக்கு கம்பல் பண்ணிட்டே இருப்பாங்க.
ரேஷ்மாவுக்கு எங்க அப்பா இறந்த பின்னே ராம் அங்கிள் தான் எல்லாம்!
அவர் மேல ரொம்ப பாசம் வச்சுருக்க அவளை ஏதாச்சும் இமோசனல் ப்ளாக் மெயில் பண்ணி,
அவளை ஸ்ட்ரெஸ்ல கொண்டு வந்துடுவாங்க.
அவளுக்கு எப்போதுமே ராம் அங்கிள் நம்மள நல்லபடியா பார்த்துட்டு இருந்துட்டு அவர் பிள்ளைய கோட்டை விட்டுட்டார்ன்னு எப்பவும் ஒரு கில்ட்டி கான்சியஸ் இருக்கும்.
அத நல்லா யூஸ் பண்ணிப்பாங்க பார்வதி ஆண்ட்டி!
அந்த அளவுக்கு எல்லாம் அவங்கள விடக் கூடாது.
இதுகளுக்கு பயந்துட்டுகிட்டு எல்லாம் ஓடி ஓளியனுமான்னு கொஞ்சம் தோணினாலும்,
துஷ்டனைக் கண்டால் தூர விலகு.. இது தான் இப்ப என்னோட திங்கிங்!
அதனால அவங்களுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.
சீக்கிரம் உங்க ரெண்டு பேத்தோட கல்யாணம் நடக்கணும்.
அதுக்கு முன்னாடி, கொஞ்ச நாள் ரேஷ்மாவை எங்கியாச்சும் அப்ராட் அனுப்பலாம்னு பார்த்தா,
இந்த ஆண்ட்டி இப்படி பாஸ்போர்ட்டை எடுத்து வச்சுகிட்டு தர மாட்டேங்கிறாங்க!
ரொம்ப கேட்டா, உங்கள வளர்த்து ஆளாக்கின பாவத்துக்கு எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுறீங்களான்னு அதுக்கு ஒரு டிராமா பண்ணுவாங்க!
ஒரே எரிச்சலா இருக்கு!
ரேஷ்மாவை, அவங்க அடிக்கடி போய் பார்த்து திரும்பவும் தொல்லைப் பண்ணாத இடத்துல போய் கொஞ்ச நாள் இருக்க வைக்கணும்!
திருப்பூர் அனுப்பினா, அந்த ஜெயந்த் அங்கயும் வந்து நிப்பான் அவன் அம்மாவோட!
என்ன பண்றதுன்னு தெரியலடா..” ரேவந்த் புலம்ப,
“அப்ப ஒண்ணு பண்ணலாமா? பேசாம என் வீட்டுக்கு அனுப்பி வச்சுடு” என்றான் யுவி!
“அது எப்படிடா முடியும்! அவளை நான் கல்யாணம் பண்ணி உன் ஒய்ஃபா தான் முறைப்படி அனுப்புவேன்!
அதுவும் இல்லாம இப்ப பத்மா ஆண்ட்டி வேறே ஊரில் இல்லன்ற!”
“ஆமா அவங்க ஆன்மீக சுற்றுலான்னு சீரடி, சனி சிங்க்னாப்பூர் எல்லாம் போய் இருக்காங்க”. என்றான் யுவி.
“அப்ப வேறே எதாச்சும் தான் பண்ணனும். இரு. ஸ்வீட்டி கிட்ட கேப்போம்” என்று அவளை அழைத்து விபரம் சொல்ல,
“இப்ப நாங்க ஆபிசில் தான் இருக்கோம்” என்ற மதுரா, போனை ஸ்பீக்கரில் போட்டாள். ரேஷ்மாவும் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க,
“எனக்கு ஒரு ஐடியா இருக்கு.
பட் ரேஷ்மாவுக்கு ஒத்து வருமான்னு தெரியல” என்று அவளைப் பார்த்துக் கொண்டே மதுரா சொல்ல,
“என்னன்னு சொல்லு” என்றான் ரேவந்த்.
“நாம பேசாம ஸ்ரீரங்கம் போய்ட்டா என்ன? நம்ம கிராமத்து வீட்டுக்கு!
ஆனா சிட்டியில வளர்ந்த ரேஷ்மாவுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்” என்று இழுத்தாள் மதுரா.
“இல்ல..பரவாயில்ல.. நான் அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி இருந்துப்பேன்.
எனக்கே எங்கியாச்சும் கொஞ்ச நாள் அமைதியா இந்த சிட்டி ஆரவாரம் இல்லாத,
சோசியல் மீடியா எல்லாத்தையும் விட்டுட்டு பீஸ்ஃபுல்லா இருக்கணும் போல இருக்கு” என்றாள் ரேஷ்மா!
“அப்ப ஸ்ரீரங்கம் ஒகேய்யா?” என்று மதுரா கேட்க,
“ஸ்ரீரங்கம்னா ஸ்ரீரங்கமே இல்ல..பக்கத்துல வில்லேஜ்! பரவாயில்ல தானே?”
“டபுள் ஓகே எனக்கு!” ரேஷ்மா சம்மதம் சொல்ல, அடுத்து வேகமாக வேலையில் இறங்கினாள் மதுரா.
ஆபிசில் ஒரு ஸ்டான்ட் அப் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து, மாதேஷிடம் தற்காலிகமாக எல்லா பொறுப்புகளையும் கொடுத்து மற்றவர்களை எல்லாம் அவனுக்கு ஒத்துழைக்க சொல்லி கேட்டுக் கொண்டு,
வார இறுதிகளில் எல்லோரையும் ஆன்லைன் மீட்டிங்கில் சந்திப்பதாகவும் சொல்லி விட்டு அடுத்து லக்கிக்கு போன் பண்ணினாள்.
“லக்கி.. உனக்கு நாளையில் இருந்து செமஸ்டர் ஸ்டடி ஹாலிடேஸ் தானே!
நாம இன்னிக்கே ஸ்ரீரங்கம் போறோம்! ரேஷ்மாவோட!
ஒரு அர்ஜென்ட் ட்ரிப்!
நீ உனக்கும் எனக்கும் ஒரு பத்து செட் டிரஸ் எடுத்து பேக் பண்ணி வச்சுடு.
பிரிட்ஜில் இருக்கும் பால், தயிர், மாவு காய்கறிகளை எல்லாம் வாட்ச்மேனிடம் கொடுத்து காலி பண்ணிடு.
பவர் பேங்க், சார்ஜர், எமர்ஜென்சி லைட், அப்புறம் கிராமத்து வீட்டு ரூமில் இருக்கும் பீரோவின் சாவிக் கொத்து, கெட்டில், புல்லட் மிக்சியும் கூட எடுத்து வச்சுடு.
கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரை ஆஃப் பண்ணி வச்சுடு.
பால்கனி கேட்டை பூட்டு போட்டு பூட்டி வச்சுடு.
அப்புறம் மறக்காம உன்னோட புக்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு ரெடியா இரு.
நான் ரேஷ்மா வீட்டில் போய் அவங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்து உன்னை பிக்கப் பண்ணிட்டு திருச்சி போறோம்!
நான் சொன்ன எல்லாத்தையும் மறக்காம எடுத்து வச்சுட்டு ரெடியா இரு! மறந்துடாதே!
வேணுமின்னா ஒரு செக் லிஸ்ட் எழுதி வச்சுக்கோ!
ரெடியா இரு. காரை நிக்க வச்சுட்டு துழாவிக் கிட்டு இருக்க கூடாது” என்று நீண்ட கட்டளைகள் இட்டாள்!
“ம்ம் அக்கா..அதெல்லாம் நான் பக்காவா எடுத்து வச்சுடறேன்! நோ ஒர்ரிஸ்!
அப்புறம் அக்கா ரேவந்த் அத்தானும் நம்ம கூட வரப் போறாரா?”
“ம்ம் அது ஏன் உனக்கு? அவருக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு!
அதெல்லாம் முடிச்ச பின்னே தான் அவர் அங்க வர முடியும்!”
“சரிக்கா” என்று சொல்லி போனை வைத்து விட்டு அக்கா சொன்னபடி தேவையானதை எல்லாம் பேக் பண்ணினாள் லக்கி.
மதுராவும் சொன்ன படியே ரேஷ்மாவுடன் வீட்டுக்கு சென்று அவளுக்கு மிகவும் தேவையானவைகளை எடுத்துக் கொண்டு,
லக்கியை அழைக்க அவள் வீட்டுக்கு சென்று அவளை அழைத்துக் கொண்டு,
அப்படியே பக்கத்து வீட்டு ஆண்ட்டியிடம் சொல்லிக் கொண்டு, அமேசான் பார்சல் வரும்.
வந்தால் வாங்கி வைக்கவும் கேட்டுக் கொண்டு காருக்கு விரைந்தாள் மதுரா!
ரேஷ்மாவின் காருக்கு ஆக்டிங் டிரைவர் ஒருவனை ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பினார்கள்.
கார் பயணத்தின் போதே, மதுரா, அவர்கள் வீட்டில் தற்போது குடியிருந்து கொண்டு வீட்டை, பூஜையறையை, பின் பக்கம் உள்ள கோவிலை பராமரித்துக் கொண்டிருக்கும் மணியை அழைத்து தாங்கள் அங்கு வந்து கொண்டிருப்பதை சொன்னாள்!
“டவுனில் இருந்து வீட்டை கிளீன் பண்ண ஆள் பேசியிருக்கேன் அத்தை!
அவங்களுக்கு ரூமை திறந்து விடு.
அவங்கள வச்சுகிட்டு பாத்ரூம் பெட்ரூம் எல்லாம் நல்லா கிளீன் பண்ணி வச்சுடு அத்தை!
அப்படியே மாடியையும் சுத்தம் பண்ண சொல்லு.
வேற எதாச்சும் வேலை இருந்தாலும் அவங்க கிட்ட சொல்லி சரி பண்ணிடு.
அப்புறம் ரெண்டு மூணு கேன் தண்ணீர் வாங்கி வச்சுடு.
ஏசியை ஒரு வாட்டி போட்டு பாரு அத்தை.
நல்லா கூலிங் வரலைன்னா உடனே சொல்லு.
அதுக்கும் ஆள் அனுப்புறேன்”. என்று மணிக்கும் பல்வேறு வேலைகள் சொல்லிக் கொண்டே போனாள் கார் பயணத்தின் போதே.
“எல்லாம் ரெடி பண்ணிடுறேன் பெரிய பாப்பா!” என்றார் அவர்.
சென்னை திருச்சி ஹை வேஸில் போகும் போது வழியில் நிறுத்தி ஒரு முழு பலாப்பழம் வாங்கி கொண்டாள் மதுரா!
“இது எதுக்குக்கா?” என்ற லக்கியிடம்,
“முதன் முதலா நம்ம வீட்டுக்கு வராங்க ரேஷ்மா!
அவங்களுக்கு சக்க பிரதமன் பண்ண சொல்லலாம்! மணி அத்தை சூப்பரா செய்யும்!”
“இவ்வளவு ரண களத்திலும் உனக்கு ஒரு குதூகலம் உனக்கு? இல்ல!” என்று அக்காவை கிண்டலடித்தாள் லக்கி!
“ஏய்.. சக்க பிரதமன்.. அப்படின்னா..ஜேக்ஃப்ருட்ல பண்ற பாயாசம் தானே!
அது ரேவந்துக்கு ரொம்ப பிடிக்கும்!” என்றாள் ரேஷ்மா!
“ஓ.. அது தான் காரணமா! பாருங்க.. அக்கா..
நானெல்லாம் எப்படி இன்னாசெண்டா இருக்கேன்னு!
யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிக் கிட்டு!” என்று கிண்டலடித்த லக்கியின் தொடையில் கிள்ளினாள் மதுரா!
விடியற்காலை ஸ்ரீரங்கம் அடைந்தார்கள்!
அவர்கள் கிராமத்துக்கு போகுமுன்னர்,
ஸ்ரீரங்கத்தில் இருந்த அந்த புகழ்ப்பெற்ற ஃபில்டர் காபி கடையில் காபி வாங்கி கொடுத்து குடிக்க வைத்து விட்டு,
அப்படியே அங்கே இருந்தே ராஜ கோபுரத்தை மட்டும் தரிசனம் செய்து விட்டு அவர்களின் கிராமம் நோக்கி சென்றார்கள்!
போகும் போது ரேஷ்மா அதிசயித்தாள்!
“என்ன இது கிராமம்னு சொன்னீங்க. ஆனா இங்க இத்தனை அப்பார்மென்ட்ஸ் இருக்கு?”
“எல்லாம் எக்ஸ்டென்ட் பண்ணி பண்ணி இவ்வளவு தூரம் வந்திட்டாங்க!
முன்னாடி இருந்த நிறைய கொய்யா தோப்புகள், மாந்தோப்புகள் இப்ப இல்ல! எல்லாம் வீடாகிடுச்சு” என்றாள் மதுரா வருத்தமுடன்!
“கிராமத்தில் கூட வீட்டுக்கு வீடு ஏசி, ஒய்ஃபை கனெக்சன்!
ஏன் இப்ப எங்க வீட்டுக்கு கூட இனியா கல்யாணத்தின் போது ரெனோவேட் பண்ணி,
வெஸ்டர்ன் பாத்ரூம் ஏசி, வீடு முழுக்க டைல்ஸ் எல்லாம் போட்டு வச்சுருக்கேன்!
எங்க அப்பாயி இருந்தப்போ இருந்த மாதிரி இப்ப இருக்காது வீடு!
வீட்டோட ஸ்ட்ரைக்சர மாத்தல! ஆனா வேணும்கிற வசதி பண்ணி வச்சுருக்கேன்.
ஆனா வர்ற தான் முடியறது இல்ல! ஏதோ மணி அத்தை இருக்க போய் வீடு வீடா இருக்கு!
அவங்க காலத்துக்கு அப்புறம் என்ன பண்ண போறேன்னு தெரியல” என்றாள் மதுரா!
கார் வீட்டை அடைந்தது!
வீட்டை கண்டவுடன் அசந்து போனாள் ரேஷ்மா!
வீட்டு வாசலில் குறைந்த உயரத்தில் காம்பவுண்ட் சுவர்! அதற்கு வெளியே ஒரு புறம் வேப்ப மரம்! இன்னொரு புறம் புங்க மரம்!
அந்த இடமே இயற்கையாக ஏசி செய்யப்பட்டது போல அவ்வளவு குளிர்ச்சி!
வாசலில் செம்மண் இட்டு பெரிய கோலம்!
உள்ளே சென்றால் வீட்டின் முன்னே கொஞ்சம் இடம்!
அதில் இருபுறமும் வகை வகையான வாசனை பூச்செடிகள்! மல்லிகை, முல்லைக் கொடிகள்!
கூடவே செம்பருத்தி, நந்தியாவட்டை சங்கு புஷ்பம் போன்ற பூஜைக்குரிய பூக்களும்!
வீட்டின் பக்க வாட்டிலோ சீத்தா, மாதுளை, கொய்யா, சப்போட்டா எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் மரங்கள்!
கை எட்டும் தூரத்தில் இருந்த குட்டி குட்டி கொய்யா பழங்களை சட்டென்று பறித்தே விட்டாள் ரேஷ்மா ஆசையாக!
வீட்டின் பின்பக்கம் ஒரு மாமரம்!
இரண்டு வயதான தென்னை மரங்கள்!
பின்பக்கம் முருங்கை மரம்! அதில் மூன்றடி நீளமுள்ள முருங்கைக்காய்கள்!
அவரை, புடலை, பாகல், என்று பந்தல் காய்கறிகளோடு பச்சை மிளகாய், தக்காளி வெண்டை போன்ற காய்கறி செடிகளும்!
“அப்பா.. நிஜமாலுமே ஹெவன் தான் இந்த இடம்” என்றாள் ரேஷ்மா!
“அப்படியா உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் லக்கி!
“ம்ம்.ரொம்ப!” என்றாள் ரேஷ்மா!
“அப்படியே பக்கத்து வீட்டைப் பாருங்க. உங்களுக்கு ஏதாச்சும் நினைவு வருதா?” என்றாள் மதுரா!
“ம்ம்.. இல்லையே” என்று உதட்டைப் பிதுக்கினாள் ரேஷ்மா!
“அது தான் உங்கம்மா மதி அத்தை பிறந்த வீடு! இப்ப உங்க தாய் மாமாக்கள் இருக்காங்க!
ஆனா இங்கயே இருக்க மாட்டாங்க!
என்னை மாதிரி தான் எப்பவாச்சும் வருவாங்க. போவாங்க.
ஆனா நான் அவங்களை எல்லாம் பார்த்து ரொம்ப வருஷமாச்சு!” என்றாள் மதுரா!
ஆனால் அவள் நினைத்து இருந்தால் அவர்கள் வரும் நாள் பார்த்து இங்கே வந்து பார்த்து இருக்க முடியும் தான்!
அதே மாதிரி அவர்கள் போன் நம்பர் கூட மணி அத்தை மூலம் வாங்கி பேசி, அடிக்கடி தொடர்பில் இருந்திருக்கலாம் தான்!
ஆனால் அவள் வேண்டுமென்றே தான் அதை செய்யவில்லை!
அப்படி தொடர்பில் இருந்து, அவர்கள் மூலம் ஒருவேளை அவளின் ரேவந்திற்கு திருமணமும் ஆகி இருந்து
அந்த தகவலை அவர்கள் இவளிடம் சொல்லி வைத்து விட்டால்
அதை எல்லாம் தாங்கிக் கொள்ளும் சக்தி அவளிடம் இல்லாமல் இருந்ததே காரணம்!
ஆனால் இப்போது அவர்கள் யாராவது பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாள் அவள்!
பார்ப்போம்! .. மணி அத்தைக்கு ஒரு வேளை அவர்கள் நம்பர் தெரிந்து இருக்கலாம்! என்று நினைத்த படியே ரேஷ்மாவுடன் உள்ளே நுழைந்தாள்.
அவர்கள் வரும் நேரம் கணக்கிட்டு, ரூமில் ஏசியை போட்டு தயாராக வைத்து விட்டு,
வந்தவுடன் குளிக்க தயாராக எல்லாம் வைத்து விட்டு, பில்டரில் டிகாக்ஷன் போட்டு வைத்து இருந்தார் மணி!
ரேஷ்மாவுக்கு எல்லாமே புதிய அனுபவங்கள்!
ஆனால் அதை ரசிக்கவே செய்தாள்!
அவளின் வழக்கமான டயட்டை எல்லாம் விட்டு விட்டு,
மணியும் மதுராவும் சேர்ந்து சமைத்த,
முருங்கை, மாங்காய் கத்திரிக்காய் சாம்பார், ரசம், அவரைக்காய் பொரியல், நாட்டுப் புடலைக் கூட்டு, தயிர் என்று ஒரு பிடி பிடித்து விட்டாள் அவள்!
“இந்த காய் எல்லாமே நம்ம வீட்டில் காய்ச்சது தான் பாப்பா! எப்படி இருக்கு?” மணி கேட்க
“சூப்பர் ஆண்ட்டி!” என்று பாராட்டினாள்!
சாப்பிடும் போது மணி சொன்னார்.
“போன மாசம் உங்க சூர்யா சித்தி குலதெய்வம் கோவிலுக்கு போய் விட்டு இங்க அப்படியே வீட்டு சாமியை கும்பிட்டு போக வந்துச்சு!”
“ஓ.. அப்படியா! என்ன சொன்னாங்க?” என்றாள் மதுரா!
அந்த வீடு பாகப்பிரிவினை மூலம் அருளுக்கு சொந்தமாகி விட்டாலும், இப்படி வீட்டு சாமி கும்பிட வரும் அவர்களை மறுத்ததில்லை அவள்!
“ம்ம். அவங்க எல்லாம் மாறவே இல்லை பாப்பா! பெரியவங்க சொல்லுவாங்க இல்ல.. நாய் வாலை நிமிர்த்த முடியாதுன்னு! அது சரியா தான் இருக்கு!
வந்தவங்க உங்க ரூமில் போய் ஏசியை போட்டுக்கிட்டு படுத்துக்கிட்டு,
கொண்டு வந்த சாப்பாடை அங்க வச்சே சாப்பிட்டு ஒரே குப்பையா போட்டுட்டு போய்ட்டாங்க!
அதோட இல்ல, அவங்களால பறிக்க முடிஞ்ச அளவு எலுமிச்சை , நார்த்தாங்காய், கொய்யா, சப்போட்டா, எல்லாம் பறிச்சுகிட்டு போனாங்க.
மாதுளை எல்லாம் ஒரே பிஞ்சா இருந்துச்சு பாப்பா! அதைக் கூட விடல! பறிச்சுட்டாங்க.
முருங்கைக்காய் எப்படியும் அம்பது காய் இருக்கும்!
அவ்வளவு காயையும் பறிச்சுக்கிட்டு கூடவே கீரை வேணுமின்னு அவ்வளவு பூவோட அதையும் ஒடச்சு எடுத்துக்கிட்டு போனாங்க.
நல்ல வேளையா பின்னாடி பக்கம் இருந்த சுண்டைக்காய் செடி அவங்க கண்ணுல படல! அதனால தப்பிச்சுச்சு!
அப்புறம் .. எங்க ஊரில் கட்டு முப்பது ரூவா சொல்றான். இங்க பாரு கேப்பாரு இல்லாம கிடக்குன்னு, வாசல் ஓரமா நல்லா படர்ந்து இருந்த வல்லாரை கீரையையும் விடல அவங்க!
வந்ததுக்கு என்ன என்ன பீராஞ்சு கொண்டு போக முடியுமோ அத்தனையும் எடுத்துட்டு போய்ட்டாங்க!
இவ்வளவு எடுத்துட்டு வந்து என்னடி பண்ண போறேன்னு உங்க சதீஸ் சித்தப்பா திட்டியும் கூட கண்டுக்கல அவங்க” என்றார் அவர் ஆதங்கத்துடன்!
இந்த தோட்டத்தை பராமரித்து அதில் விளையும் காய்கறிகளை விற்று அவரின் செலவுக்கு வைத்துக் கொண்டிருந்ததை பிடுங்கிக் கொண்டு போனால் இருக்காதா பின்னே!
“விடுங்க அத்தை! அவங்கள பத்தி தான் உங்களுக்கு நல்லா தெரியுமே! நான் அதுக்குள்ள பணத்தை வேணா நான் தர்றேன்” என்று மதுரா சொல்ல,
“அட நீ சும்மா இரு பாப்பா அதெல்லாம் வேண்டாம்!” என்று அவசரமாக தடுத்தவர்,
“ஆனா ஒண்ணு மட்டும் செஞ்சிட்டு போ பாப்பா.
உன் சூர்யா சித்தியாச்சும் எப்பவாச்சும் வருது. அப்படி வர்றப்ப இப்படி செஞ்சா செஞ்சுட்டு போகட்டும்!
ஆனா அதோட அம்மா உள்ளூர்ல இருந்துகிட்டு, அடிக்கடி வந்து இதே மாதிரி செஞ்சுட்டு போவுது!
ரொம்ப கேட்டா என் சம்பந்தி வீட்டுல எனக்கு இல்லாத உரிமையான்னு சொல்லுது!
நீ ஊருக்கு போகும் போது அதை மட்டும் கண்டிச்சு வச்சுட்டு போ!”
“சரி அத்தை!” என்று சொல்லி விட்டாள் மதுரா!
இரவு ஏழு மணி!
கோடையின் வெக்கை மிகவும் தாக்கியது!
ஏசி இருந்தும் பயன் இல்லை!
ஏனென்றால் கிராமமாக இருந்த போதும்,
அந்த நேரம் பெரும்பான்மை விடுகளில் ஏசியைப் போட்டு விட,
அந்த கிராமத்துக்கு மின்சார துறையால் அனுப்பப்பட்ட குறைந்த மின்சார லோட் பற்றாமல் போய்,
லோஓல்டேஜ் ப்ராப்ளம் வந்தது!
புழுக்கம் தாங்க முடியாமல், முன் வாசலில் மடக்கும் ஓயர் கட்டிலை, சில சேர்களை கொண்டு வந்து போட்டு காற்றாட உட்கார்ந்தார்கள் பெண்கள் அனைவரும்!
அப்போது காம்பவுண்டின் கேட்டை திறந்து கொண்டு வந்தார் ரேவந்தின் பெரிய தாய் மாமா!
error: Content is protected !!