Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-21

அத்தியாயம் – 21

“குவளை குவளையாய் அளந்து ஊற்றுகிற வெறுப்பின் முன், பெய்யெனப் பெய்து நிறையும்… அன்பு!”

ஜெர்மனியின் அந்தப் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் மாநாட்டு அரங்கம், நவீன அறிவியலின் உச்சக்கட்டத் தரம் வாய்ந்த அமைதியுடன் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. மெருகூட்டப்பட்ட அந்தப் பெரிய மேடையில், பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்த ஒரு இந்தியப் பெண்ணாக ஆதிரை நின்றிருந்தாள்.

குளிரூட்டப்பட்ட அந்த அறையின் செயற்கைக் காற்றையும் மீறி, அவளது நெற்றிப்பொட்டில் ஒரு மெல்லிய வியர்வைத் துளி அரும்பியிருந்தது. அவளுக்கு முன்னால், ஐரோப்பாவின் உலகத்தரம் வாய்ந்த சென்சார் தொழில்நுட்ப வல்லுநர்களும், மூத்த விஞ்ஞானிகளும் தங்களின் கூர்மையான பார்வைகளால் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தனர். அவர்களது மேசைகளில் இருந்த மடிக்கணினிகளும், கையிலிருந்த குறிப்பேடுகளும் ஆதிரை என்ன சொல்லப்போகிறாள் என்பதைத் தீர்மானிக்கக் காத்திருந்தன.

ஆதிரை தனது மடிக்கணினியைத் திறந்தாள். திரையில் மதுரை முதல் ராமேஸ்வரம் வரையிலான அந்த நீண்ட தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் ஒரு மின்னலைப் போலத் தோன்றியது. இன்டகிரேட்டட் ஸ்மார்ட் சென்சார் மாடல் – மதுரை ராமேஸ்வரம் காரிடார்! என டைட்டில் ஸ்லைடில் வந்து நின்றது.

ஆதிரை தனது விளக்கக்காட்சியைத் தொடங்க ஆயத்தமான அந்தத் தருணத்தில், அரங்கின் இடதுபுறக் கதவு மெல்லத் திறந்தது. சோபி ஒரு சக்கர நாற்காலியை மெதுவாகத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். அதில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். அவரது நரைத்த முடியும், முகத்தில் இருந்த அந்தத் தீர்க்கமான ரேகைகளும் ஒரு மேதமையைப் பறைசாற்றின. ஹெர்மன் அவருக்கு முன்னால் ஒரு இடத்தை ஒதுக்கி, மரியாதையோடு அமர வைத்தான்.



Advertisement

ஆதிரை அந்த முதியவரை ஒரு கணம் பார்த்தாள். அந்த முகம் அவளுக்கு எங்கோ பார்த்தது போல மிக நெருக்கமாகத் தெரிந்தது. “யார் இவர்? இந்தியச் சாயல் இருக்கிறதே?” என்ற எண்ணம் மின்னலாய் வந்து போனது. ஆனால், நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவள், அந்தச் சிந்தனையை ஓரத்தில் தள்ளிவிட்டுத் தனது உரையைத் தொடங்கினாள்.

“பேராசிரியர்களே…” ஆதிரையின் குரல் அந்த அரங்கெங்கும் ஒரு தெளிவான நீரோட்டத்தைப் போலப் பாய்ந்தது. “நான் இன்று விளக்கப்போகும் இந்த ‘ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சென்சார் மாடல்’ இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்காக – மதுரை – ராமேஸ்வரம் காரிடாருக்காக உருவாக்கப்பட்டது. இது வெறும் சாலை அல்ல; வைகை நதியின் நீரோட்டமும், கரிசல் மண்ணின் கடினமும், கடல் காற்றின் ஈரப்பதமும் சங்கமிக்கும் ஒரு நிலப்பரப்பு.

அவள் திரையில் இருந்த சிவப்பு நிறப் புள்ளிகளைச் சுட்டிக்காட்டினாள். “ஆனால், இன்று இந்தப் பகுதி ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் போர்க்களமாக மாறியுள்ளது. சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும், கடல் நீர் உட்புகுவதால் ஏற்படும் உப்புத்தன்மையும் இந்த மண்ணின் ஆன்மாவைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

Advertisement

இதை மீட்டெடுக்கவே எங்கள் ஸ்மார்ட் சென்சார்கள் ‘முப்பரிமாண நோக்குடன்’ (Triple Sensing) வடிவமைக்கப்பட்டுள்ளன.” ஆதிரை அதன் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக ஒரு உரையாடலைப் போலவே தொடர்ந்தாள்:

Advertisement

மண்ணின் தாகம்: “இந்தச் சிவப்புக் கோடுகளைப் பாருங்கள். இவை சீமைக் கருவேல மரங்கள். இவை மண்ணின் ஆழம் வரை வேர்களை அனுப்பித் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கின்றன. என் சென்சார்கள் அங்கே என்ன செய்யும் தெரியுமா? அந்தப் பகுதி நிலத்தடி நீர் மட்டம் எப்போது அதலபாதாளத்திற்குச் சரிந்து ‘மண்ணுக்குத் தாகம் எடுக்கிறது’ என்பதைத் துல்லியமாகப் படம் பிடித்து எச்சரிக்கும்,” என்றாள்.

மண்ணின் மூச்சுத் திணறல்: அடுத்ததாக அவள் மண்ணின் சத்துக்களைக் காட்டும் வரைபடத்தைத் திறந்தாள். “இந்த மரங்கள் மண்ணை இறுகச் செய்து, மற்ற உயிர்களை வளரவிடாமல் கழுத்தை நெருக்குகின்றன. மண்ணின் நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் சத்துக்களை இவை எப்படிக் கொள்ளையடிக்கின்றன என்பதை ஒரு எக்ஸ்-ரே எடுப்பது போல என் சென்சார்கள் காட்டிக் கொடுத்துவிடும். இது வெறும் டேட்டா இல்லை… மண்ணின் மூச்சுத் திணறலை நாம் கேட்கும் வழி.”

உப்பின் ஊடுருவல்: இறுதியாக அவள் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியைக் காட்டினாள். “இங்கே பாருங்கள், கடல் நீர் நிலத்தடிக்குள் ஊடுருவி மண்ணையே உப்பாக்கி வருகிறது. எங்கள் மாடல், அந்த உப்பின் அளவைக் கணக்கிட்டு, ‘இந்த உப்பு மண்ணிலும் எதை விளைவிக்கலாம்’ என்று விவசாயிகளுக்குக் காதருகில் வந்து ரகசியம் சொல்லும்,” என்று அவள் முடித்தபோது, அரங்கில் ஒரு நிமிடம் மௌனம்.

Advertisement

“இந்த ஸ்மார்ட் சென்சார்கள் மணல் அரிப்பினால் வீணாகிவிடாதா?”

இது, முன்பு ஒருமுறை ஆதிரை மித்ரனிடம் கேட்ட அதே கேள்வி. இப்போது அதே கேள்வி ஒரு சர்வதேச அரங்கில் பேராசிரியர்களிடமிருந்து வந்தபோது, ஆதிரையின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

அவள் சற்றும் தயக்கமின்றி, தங்கள் ஆய்வகத்தில் இதற்காகவே பிரத்யேகமாக அவர்கள் உருவாக்கியுள்ள ‘ஹார்டுவேர்’ (Hardware) பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விளக்கமளித்தாள்.

அப்போது ஒரு பேராசிரியர் எழுந்து வியப்புடன் கேட்டார், “டாக்டர் ஆதிரை, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய அளவில் இந்தக் கருவேல மரங்கள் பரவின?”

ஆதிரையின் முகத்தில் ஒரு மெல்லிய சோகம் படர்ந்தது. “1950-களின் இறுதியில் தமிழகம் கடும் வறட்சியையும், விறகுத் தட்டுப்பாட்டையும் சந்தித்தது. அப்போதைய முதலமைச்சர், ஏழை மக்கள் சமைக்க எளிதாக விறகு கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், வறட்சியிலும் வளரக்கூடிய இந்தத் தாவரத்தைத் தேடினார். அதன் விளைவாக கிட்டிய  இந்தக் கருவேல விதைகள் தான் வானில் இருந்து தூவப்பட்டன.”

அவளது குரல் தழுதழுத்தது. “அன்று வானில் இருந்து தூவப்பட்ட விதைகள் மண்ணை மலடாக்கின. ஆனால், இன்று மண்ணுக்கு அடியில் நாம் புதைக்கப்போகும் இந்தச் ‘ஸ்மார்ட் விதைகள்’ (Sensors) என் மண்ணை மீண்டும் நன்னிலமாக்கும்!”

பின்னர், அந்த ஸ்மார்ட் சென்சார்களின் டிசைன் மற்றும் அவை செயல்படும் விதம் குறித்த சிமுலேஷன் விரிவாக எடுத்துரைத்தாள். திரையில் மின்னிய துல்லியமான தரவுகளும், விளக்கப்படங்களும் அவளது ஆய்வை அத்தனை தெள்ளத்தெளிவாகக் காட்ட, நேர்த்தியாக அவள் தன் உரையை முடித்தாள்.

அவள் பேசி முடித்ததும், ஒரு நொடி மயான அமைதி நிலவியது. அடுத்த நொடி, அணை உடைந்தது போன்ற கரகோஷம்!

ஒரு மூத்த பேராசிரியர் மேடைக்கு வந்து ஆதிரையின் கைகளைப் பற்றிக் கொண்டார். “ஆதிரை, நீங்கள் உங்கள் நாட்டின் வரலாற்றுக் பிழையை அறிவியலின் துணையோடு திருத்தப் போகிறீர்கள். இது வெறும் தொழில்நுட்பம் அல்ல… இது மனிதாபிமான அறிவியல்!” என்றார்.

வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் வியப்புடன் அவளது ஆய்வு அறிக்கையைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, ஆதிரையின் நினைவுகள் ஒரு நிமிடம் மதுரைக்குச் சென்றன. லேப்பில் கழித்த இரவு நேரங்கள், தூக்கத்தைக் கலைத்துவிட்டு அவள் செய்த ஆய்வுகள், மித்ரனின் ஊக்கம்… இவை அனைத்திற்கும் இன்று ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

ஜேர்மனியின் அந்த நவீன அறையில், மதுரையின் கரிசல் மண் வாசனையை ஆதிரை உணர்ந்தாள். அவள் கண்கள் கலங்கினாலும், உதடுகளில் ஒரு வெற்றியின் புன்னகை அரும்பியது.

ஆதிரை மேடையிலிருந்து மெல்ல இறங்கி வந்தாள். அடுத்த உரை தொடங்குவதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை விடப்பட்டது. அவளது கண்கள் சோபியையும் ஹெர்மனையும் தேடின. கூட்ட நெரிசலுக்கு நடுவே, அவர்கள் இருவரும் ஓடி வந்தனர்.

அவர்களது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி உண்மையானது. ஹெர்மன் தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டி,  “ஆதிரை! எங்களால் நம்பவே முடியவில்லை. நீங்கள் கலக்கிவிட்டீர்கள்! எங்கள் மித்ரனுக்கு நீங்கள் தான் சரியான ஜோடி (Perfect pair),” என்று உற்சாகத்தில் கத்தினான். சோபி “ரியலி கிரேட் ஜாப்!” என்று பாராட்டி, மகிழ்ச்சியின் மிகுதியால் ஆதிரையை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“வா ஆதிரை, உன்னை ஒருவரிடம் அறிமுகப்படுத்த வேண்டும்,” என்று சோபி அவளை மெல்ல அந்த முதியவரிடம் அழைத்துச் சென்றாள்.

“ஆதிரை, இவரைச் சந்திப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இவர் எமரிட்டஸ் பேராசிரியர் ராமநாதன் (Emeritus Professor Ramanathan). உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி,” என்று சோபி அறிமுகப்படுத்தினாள்.

ஆதிரை ஒரு கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தாள். அந்தப் பெயரும் முகமும் அவளுக்குள் ஏதோ ஒரு பழைய ஞாபகத்தைத் தட்டியது.

அவர் மிக வாஞ்சையுடன் ஆதிரையின் தலையைத் தொட்டு வருடினார். “எப்படிமா இருக்க? மித்ரன் உன்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பான். உன்னைப் பார்த்ததில் எனக்குத் தான் ரொம்பச் சந்தோஷம்,” என்று ஒரு தந்தைக்கே உரிய கனிவுடன் கேட்டார். தொடர்ந்து, “ரொம்ப நல்ல பிரசன்டேஷன் மா… மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ள ஒன்று இது,” என்று பாராட்டினார்.

ஆதிரை மிகவும் மரியாதையுடன், “ரொம்ப நன்றிங்க சார்…” என்றாள். அந்தப் பெரிய அரங்கில் அத்தனை மேதைகளுக்கு முன்னால் தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை விட, இந்த முதியவரின் பாராட்டு அவளுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.

பேராசிரியர் ராமநாதனின் அந்தப் பார்வை ஆதிரையை என்னவோ செய்தது. அவர் அவளைப் பார்ப்பது, இன்றுதான் முதன்முதலாகப் பார்க்கும் ஒரு அந்நியப் பெண்ணைப் பார்ப்பது போல இல்லை.  பல காலமாய்த் தெரிந்த, தன் வீட்டுப் பிள்ளையைப் பார்க்கும் அத்தனை வாஞ்சை அவரிடம் இருந்தது. ஆதிரைக்கு அது ஒரு வியப்பான ஆறுதலைத் தந்தது.

ஆனால், அவர் அடுத்ததாகக் கேட்ட அந்தக் கேள்வி அவளை அப்படியே உரைய வைத்தது. அவர் எதையோ கேட்டுத் தீர வேண்டும் என்ற பிடிவாதத்துடன், “கவின் எப்படிமா இருக்கான்?” என்றார்.

ஆதிரைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நெஞ்சு பாரமாகி, தொண்டை அடைத்தது.

அந்தக் கணத்தில் ஆதிரைக்குப் புரிந்தது… இந்த முதியவர் யாருடைய ஜாடை என்று! அந்தத் தீர்க்கமான கண்கள், அந்தப் பார்வையில் இருந்த ஆழம்… புன்னகைக்கும்போது மட்டும் சுருங்கும் அந்த இமை ஓரங்கள்,  அப்படியே கவினின் கண்கள்! கவினின் ஒவ்வொரு அசைவிலும், அவனது புத்திசாலித்தனத்திலும் ஆதிரை தேடிய அந்த ‘இன்னொரு முகம்’ இப்போது அவளுக்கு முன்னால் ஒரு முதியவரின் உருவில் நின்றிருந்தது.

சோபி மெல்லக் குனிந்து அவள் காதில் சொன்னாள், “ஆதிரை, இவர் தான் சந்தியாவின் தந்தை!”

அந்த ஒரு வார்த்தை ஆதிரையின் இதயத்தில் இடியென இறங்கியது. ‘சந்தியா!’ – மித்ரனின் வாழ்க்கையில் ஒரு மர்மமாக, ஆதிரையின் மனதில் ஒரு வலியாக இருந்த அதே பெயர். ஆதிரை திடுக்கிட்டு அந்த முதியவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

வெள்ளை நிறக் கேசம் சூழ்ந்த அந்த வட்ட வடிவ முகத்தினுள், இப்போது அவளுக்கு அந்த தேவதை போன்ற பெண் சந்தியா தெரிந்தாள். ஆமாம், அதே சாயல்!

கவின், சந்தியாவின் மகன், இந்த மாபெரும் விஞ்ஞானியின் பேரன்!

அந்தத் தருணத்தின் பாரம் தாங்க முடியாமல் ஆதிரை நிலைதடுமாறினாள். தன் நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, பக்கத்தில் நின்றிருந்த சோபியின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

பேராசிரியர் ராமநாதன் அவளது பதிலுக்காகக் காத்திருந்தார். அவரது கண்களில் கவினைப் பார்க்கத் துடிக்கும் ஒரு தாத்தாவின் ஏக்கம் தெரிந்ததா? அல்லது தன் மகளின் நினைவுகளை ஆதிரையிடம் தேடும் ஒரு தந்தையின் தவிப்பு தெரிந்ததா?

“நல்லா இருக்கான்… அப்பா,” என்று அவளை அறியாமல் அவள் வாய் விட்டும் அழைத்துவிட்டாள்.

அவள் ‘அப்பா’ என்று சொன்ன அந்த ஒரு நொடி, பேராசிரியர் ராமநாதனின் முகத்தில் மின்னல் வெட்டியது போன்ற ஒரு உணர்ச்சி.

“நல்லா இருக்கான்னு சொல்லிட்ட இல்ல… அது போதும்மா. வா, வீட்டுக்குப் போய் நிதானமா பேசுவோம்,” என்றபடி அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அவளது கைகளைப் பற்றிக் கொண்டார்.

” லெட்ஸ் ஹேவ் லஞ்ச் டுகெதர் அட் மை ஹோம் (Let’s have lunch together at my home). என் வீட்டிற்கு வாருங்கள், நாம் நிதானமாகப் பேசலாம்,” என்று அவர் அன்போடு அழைத்தார்.

பேராசிரியர் ராமநாதனின் இல்லம் ஸ்டட்கார்ட் நகரின் ஒரு ஒதுக்குப்புறமான மலைச்சரிவில் இருந்தது. அடர்ந்த ஓக் மரங்களுக்கு இடையே அந்த அழகிய ஐரோப்பிய பாணி வீடு தனித்துத் தெரிந்தது. சுற்றிலும் பனி படர்ந்த புல்வெளிகள், ஒரு ஓவியத்தைப் போலக் காட்சியளித்தன.

சோபியும் ஹெர்மனும் அமைதியாக வர, ஆதிரை பேராசிரியரின் அருகில் அமர்ந்து வந்தாள். கார் நின்றதும், ஹெர்மன் பேராசிரியரின் சக்கர நாற்காலியை லாவகமாக இறக்கினான். ஆதிரை அந்த வீட்டின் மரப்படிகளில் மெல்ல ஏறினாள். ஒவ்வொரு படியும் அவளுக்குள் ஒரு இனம் புரியாத நடுக்கத்தை ஏற்படுத்தியது.

வீட்டின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்ததும் ஒரு இதமான வாசனை பழைய புத்தகங்களும், சந்தனமும் கலந்த ஒரு இந்திய மணம் அவளை வரவேற்றது.

வரவேற்பறையில் அவள் கண்ட அந்தத் தோற்றம், ஆளுயரத்தில் நின்றிருந்தாள் அந்த தேவதை பெண் சந்தியா. ஆளுயர புகைப்படம் அது! மின்னொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்தப் புகைப்படத்தில் இருந்த சந்தியாவின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது போல ஆதிரைக்குத் தோன்றியது.

அப்போது ஜன்னல் வழியே வீசிய குளிர்ந்த காற்று, வரவேற்பறையில் இருந்த திரைச்சீலைகளை மெல்ல அசைத்தது.

“என்னைப் பார்க்க ஒரு வழியா வந்துட்டேல்ல?” என்று கேட்டது காற்றின் அந்த வருடல். “இத்தனை காலம் நான் உன்னைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்… நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்” என்று அவள் மௌனமாகச் சொல்வது போல் ஆதிரை உணர்ந்தாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!