நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-20
அத்தியாயம் – 20
“கனவின் உடைந்த துண்டுகளையும், கலைடாஸ்கோப் வானமாக்கிக் காட்டிவிடும் அதிசயம் . காதல்!”
விமானம் மேகக் கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு முன்னேறியபோது, ஆதிரையின் மனமும் கால இயந்திரத்தில் பின்னோக்கிப் பாய்ந்தது. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அந்த நீலப் பரப்பும், பஞ்சுப் பொதிகளாய் மிதந்த மேகங்களும் அவளுக்கு ஏதோ ஒரு மாய உலகிற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தந்தன.
Advertisement
சென்னை – மும்பை – ஃபிராங்க்ஃபர்ட் என நீண்ட பயணக் களைப்பு அவளது உடலில் தெரிந்தாலும், உள்ளுக்குள் ஒரு மின்னல் ஓடிக்கொண்டே இருந்தது. மும்பையிலிருந்து கிளம்பிய அந்தப் பிரம்மாண்டமான போயிங் விமானம் சுமார் பத்து மணி நேரப் பயணத்திற்குப் பிறகு ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தை அடைந்தது. ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கியபோது, அந்த இடத்தின் பிரம்மாண்டம் அவளை ஒரு நிமிடம் திகைக்க வைத்தது. உலகின் பல்வேறு திசைகளிலிருந்து வந்திருந்த மனிதர்கள், புரியாத மொழிகள், இயந்திரத்தனமாக இயங்கும் தானியங்கி படிக்கட்டுகள் என அனைத்தும் ஒரு புதிய உலகத்தின் கதவை அவளுக்குத் திறந்து காட்டின.
அங்கிருந்து ஸ்டட்கார்ட் செல்வதற்கான இணைப்பு விமானத்திற்காக காத்திருந்தபோதுதான், அவளுக்குள் அந்த இனம் புரியாத நடுக்கம் மீண்டும் தொடங்கியது. “நான் தனியாக இருக்கிறேன்…” இந்த உணர்வு அவளுக்குப் புதிது. எப்போதும் பிள்ளைகளின் கூச்சலோ, மித்ரனின் அரவணைப்போ அல்லது ஆய்வகத்தின் சத்தமோ அவளைச் சூழ்ந்திருக்கும். ஆனால் இப்போது, ஒரு அந்நிய தேசத்தின் விமான நிலையத்தில், தன் கையில் இருக்கும் கோப்புகளைத் தவிர அவளுக்கு அறிமுகமானவர் என்று யாருமில்லை.
சுமார் ஒரு மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, விமானம் ஸ்டட்கார்ட் தரையைத் தொட்டது. விமானத்தின் ஜன்னல் கதவு திறந்தவுடனேயே, ஜெர்மனியின் அந்த ஊடுருவும் குளிர்காற்று அவளை வரவேற்றது.
Advertisement
தன் உள்ளே நுழைந்த அந்த முதல் ஜில்லிப்பான காற்று ஆதிரையைச் சிலிர்க்க வைத்தது. மித்ரன் ஆசை ஆசையாகத் தேடித் தந்த அந்த அடர் சிவப்பு நிற கோட்டை அவள் இறுகப் போர்த்திக் கொண்டாள்.
Advertisement
இம்மிக்ரேஷன் சோதனைகளை முடித்துவிட்டு, தனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ஆதிரையின் கண்கள் கூட்டத்தைத் துழாவின. யாரைத் தேடுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை. மித்ரன் சொல்லியிருந்தான், “அங்கே உன்னை வரவேற்க ஆட்கள் இருப்பார்கள்” என்று.
தூரத்தில் ஒரு பெரிய அட்டையில் “DR. AADHIRAI – INDIA” என்ற எழுத்துக்கள் மின்னின. அதை ஏந்தியிருந்த ஜெர்மானியத் தம்பதி கண்டதும் ஆதிரையின் இதயம் ஒரு கணம் நின்றது.
அவளை நோக்கி அந்த இரண்டு பேர் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஆதிரைக்குள் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. மித்ரன் வர்ணித்ததை விடவும் அவர்கள் விசித்திரமாகத் தெரிந்தனர்.
Advertisement
ஹெர்மன் சுமார் ஆறரை அடி உயரம். ஒரு ராட்சத மனிதனைப் போல பிரம்மாண்டமான உடல்வாகு. அவனது தோள்கள் ஒரு கால்பந்து வீரனைப் போல விரிந்திருந்தன. வெளிர் நீலக் கண்கள் மற்றும் பொன்னிற முடி. பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தாலும், அவன் முகத்தில் ஒரு குழந்தைத்தனமான சிரிப்பு இருந்தது.
சோபி ஹெர்மனுக்கு நேர் எதிர். ஒரு சிட்டுக்குருவியைப் போல மிகச் சிறிய உருவம். ஹெர்மனின் தோள் உயரத்தைக் கூட அவள் தொடவில்லை. துறுதுறுவென மின்னும் கண்கள், குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி. அவள் பார்ப்பதற்கு ஒரு பள்ளி மாணவியைப் போலத் தெரிந்தாள்.
“டாக்டர் ஆதிரை? வரவேற்கிறோம்!” என்று ஹெர்மன் தனது கனத்த குரலில் சொன்னபோது, அந்த இடமே அதிர்வது போலிருந்தது. ஆனால் சோபி ஓடிவந்து ஆதிரையை இறுகக் கட்டிக்கொண்டாள்.
“ஓ மை காட்! நீங்கள் இவ்வளவு அழகாக இருப்பீர்கள் என்று மித்ரன் சொல்லவே இல்லையே!” என்று சோபி ஆங்கிலத்தில் படபடவெனப் பேசினாள்.
“மித்ரன் எப்படி இருக்கிறான்? பிள்ளைகள் சௌக்கியமா?” என ஹெர்மன் அக்கறையோடு விசாரித்தபடி ஆதிரையின் கனமான பெட்டிகளைத் தூக்கினான். ஒரு கையில் இரண்டு பெட்டிகளையும் அவன் அநாயாசமாகத் தூக்கியது ஆதிரைக்கு வியப்பைத் தந்தது.
வண்டியில் ஏறி அமர்ந்ததும் சோபி பேசத் தொடங்கினாள். “ஆதிரை, நீங்கள் ஒன்று தெரியுமா? நாங்கள் இருவரும் எங்கள் பி.எச்.டி (Doctoral degree) முடித்ததே மித்ரனின் வழிகாட்டுதலில் தான். அவன்தான் எங்களுடைய உண்மையான வழிகாட்டி. இங்கே எங்கள் ஆய்வு மேற்பார்வையாளர் ஒரு பெரிய புள்ளிதான், ஆனால் அவர் எப்போதும் பிஸியாக இருப்பார். அந்த இக்கட்டான நேரங்களில் மித்ரன் தான் எங்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் உதவி செய்தான். அவனது அறிவுத் திறன் இந்த பல்கலைக்கழகத்தையே வியக்க வைத்த ஒன்று.”
மித்ரனைப் பற்றி ஒரு அந்நிய தேசத்தில், அவன் நண்பர்கள் இவ்வளவு பெருமையாகப் பேசுவதைக் கேட்கும்போது ஆதிரையின் நெஞ்சம் குளிர்ந்தது.
அவர்கள் ஸ்டட்கார்ட் நகரை நோக்கிப் பயணித்தனர். அந்தச் சாலைப் பயணம் ஆதிரைக்கு புதிதாய் இருந்தது. இருபுறமும் அடர்ந்த மரங்கள், ஆங்காங்கே பனி படர்ந்த புல்வெளிகள், தூரத்தில் தெரிந்த ஐரோப்பிய பாணி கட்டிடங்கள். காரின் கண்ணாடியைத் தாண்டி வீசிய குளிர் காற்று ஆதிரையின் முகத்தை வருடியது.
சுற்றியுள்ள குன்றுகளில் பச்சைப்பசேலென வரிசை கட்டி நின்றன தோட்டங்கள். “வைன்யார்ட்ஸ், வைன்யார்ட்ஸ்,” என ஹெர்மன் சுட்டிக் காட்டினான்.
ஸ்டட்கார்ட் நகருக்குள் நுழைந்ததும், நகரின் உயிர்நாடியான நெக்கர் (Neckar) நதி அவர்கள் கண்ணில் பட்டது. அதன் நீர் அமைதியாக, ஒரு கரிய நிறப் பளிங்குத் தளம் போலத் தெரிந்தது…” இதுதான் நெக்கர் நதி. உங்கள் பிரசன்டேஷன் முடிந்த பிறகு நாம் இங்கே ஒருமுறை வருவோம்,” என்றாள் சோபி.
கார் ஒரு பிரம்மாண்டமான, வளைந்த கண்ணாடி மாளிகையைக் கடந்து சென்றது. அதன் உச்சியில் அந்தப் புகழ்பெற்ற மூன்று முனை நட்சத்திரச் சின்னம் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்த “ஆதிரை, இதோ இதுதான் மெர்சிடிஸ் பென்ஸ் மியூசியம். உலகமே வியந்து பார்க்கும் கார்கள் உருவான இடம்,” என்றான் ஹெர்மன் பெருமிதத்துடன்.
“ஆமாம், ஸ்டட்கார்ட்தான் ஆட்டோமொபைல் நகரம். மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் போர்ஷே (Porsche) நிறுவனங்களின் பிறப்பிடம்,”
“மித்ரனுக்கு இந்த இடத்தை ரொம்பப் பிடிக்கும் ஆதிரை. அவன் டிசைன் செய்த சென்சார் ஐடியாக்கள் இந்த நிறுவனத்தின் சில நவீன மாடல்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவன் சொல்லுவான்,” என்று சோபி புன்னகையுடன் கூறினாள்.
அமைதியான சாலைகளில் கார் மென்மையாக நழுவிச் சென்றது. ஆதிரை ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அவளது மனதுக்குள் மித்ரனின் முகம் வந்து போனது. “இதே சாலைகளில் தானே அவனும் நடந்திருப்பான்? இதே குளிரைத் தானே அவனும் அனுபவித்திருப்பான்?”
சிறிது நேரத்தில் அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை அடைந்தனர். உலகப்புகழ் பெற்ற அந்த ஆராய்ச்சி நிறுவனம் ஆதிரையை பிரமிக்க வைத்தது. நவீனமும் பழமையும் கலந்த கட்டிடக் கலை. எங்கு பார்த்தாலும் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களின் பரபரப்பு.
ஹெர்மனும் சோபியும் அவளைப் பல்கலைக்கழகத்தின் வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவள் தனது வருகையை (Registration) உறுதிப்படுத்தினாள். மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்திலிருந்து வந்திருந்த அதிகாரபூர்வ அழைப்பை அவள் சமர்ப்பித்தபோது, அங்கிருந்த அதிகாரிகள் அவளை மிகுந்த மரியாதையுடன் பார்த்தனர்.
“வெல்கம் டாக்டர் ஆதிரை. உங்கள் ‘ஸ்மார்ட் சென்சார்’ ஆய்வு பற்றி இங்கே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது,” என்றார் ஒரு அதிகாரி.
தனது அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டபோது, ஆதிரைக்குள் இருந்த பயம் மறைந்து ஒரு விதப் போர்வீரனின் வேகம் பிறந்தது. ஆம், இது அவளது போர்க்களம். நாளை இங்கேதான் தனது ஆய்வுத் திட்டங்களை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்.
பதிவு வேலைகளை முடித்ததும், ஹெர்மன் சொன்னான், “ஆதிரை, இன்று நீங்கள் எங்கள் வீட்டில்தான் தங்கப் போகிறீர்கள். ஹோட்டலில் தங்குவதை விட, ஒரு குடும்பத்தோடு இருப்பது உங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்று மித்ரன் கட்டளையிட்டிருக்கிறான்.”
அவர்கள் ஹெர்மன்-சோபி தம்பதியினரின் அழகான வீட்டிற்குச் சென்றனர். அது ஒரு மர வீடு. உள்ளே நுழைந்ததும் ஒரு இதமான வெப்பம் அவளைத் தழுவியது. வீட்டின் சுவர்களில் மித்ரனும் அவர்களும் சேர்ந்து எடுத்த பழைய புகைப்படங்கள் இருந்தன. அவள் ஒவ்வொரு புகைப்படமாக நின்று நின்று பார்த்தாள். யாரையோ தேடுவாளோ என்னவோ…..😉
சோபி சூடாக ஒரு காபியை ஆதிரையிடம் நீட்டினாள். “ஆதிரை, நீங்கள் இன்று ஓய்வெடுங்கள். நாளை முதல் உங்கள் லட்சியப் பயணம் தொடங்குகிறது. கவலைப்படாதீர்கள், நாங்கள் இருக்கிறோம்,” என்றாள்.
ஆதிரை ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். மெல்ல மெல்லப் பனி விழத் தொடங்கியிருந்தது. உள்ளிருந்து ஒரு அறைக் கதவைத் திறந்து கொண்டு, கொஞ்சம் வயதான தாய் ஒருவர் வெளியே வந்தார். சோபியின் அதே சாயல் அவரிடம் இருந்தது. பார்த்ததுமே அவர் சோபியின் அம்மாவாகத்தான் இருக்கக்கூடும் என்று ஆதிரை ஊகித்தாள்.
அந்நிய தேசம் என்றாலும், தனது கலாச்சாரம் மாறாமல் ஆதிரை கைகளைக் குவித்து “வணக்கம்” கூறினாள். அந்த மொழியும் செய்கையும் அவருக்குப் புரியவில்லை என்றாலும், அது மரியாதையின் நிமித்தம் என்பதை அவர் புரிந்துகொண்டார். ஒரு மெல்லிய புன்னகையுடன் தலையை ஆட்டி அவளது வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்.
கண்டம் தாண்டி வந்திருந்தாலும், அன்பு என்பது எல்லா இடங்களிலும் ஒரே மொழியைத் தான் பேசுகிறது என்பதை ஆதிரை உணர்ந்தாள்.
இரவு உணவிற்குப் பிறகு, சோபி அவளுக்கு ஒரு மாடி அறையை காட்டினாள்.
இரவு உணவிற்குப் பிறகு, ஹெர்மன் ஆதிரையின் இரண்டு பிரம்மாண்டமான பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு மாடிப்படி ஏறினான். அவன் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் அந்த மரப் படிக்கட்டுகள், “ஐயோ… விட்டுடு…” என்று கதறுவது போல ‘மறுக்… முறுக்…’ என்று சத்தம் போட்டன.
பின்னாடியே வந்த சோபி கத்தினாள், “ஹெர்மன்! மெதுவா போ… படிக்கட்டு மேல நட, அதை உடைச்சிடாத!!”
ஹெர்மன் மேலே நின்றபடி “நான் பூனை மாதிரிதான் நடக்கிறேன். ஆனா இந்த ஜெர்மன் மரக்கட்டைகள் எல்லாம் ரொம்ப ‘சென்சிட்டிவ்’ போல!”
சோபி கிண்டலாகச் சிரித்தாள். “பூனையா? நீ ‘மவுண்டைன்’!
ஹெர்மன் ஆதிரையிடம் ரகசியமாகச் சொன்னான், “இவளைப் பாத்தீங்களா ஆதிரை? ஒரு சிட்டுக்குருவி மாதிரி இருக்கா. ஆனா இவளுக்குக் கோபம் வந்தா, நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? இவளை அப்படியே தூக்கி மேல இருக்கிற அந்த செல்ஃப்ல உட்கார வச்சிடுவேன். அப்புறம் நான் வர்ற வரைக்கும் அங்கேயே இருந்து ‘கிச் கிச்’னு கத்த வேண்டியதுதான்!”
ஆதிரை இவர்களின் கலாட்டாவைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள்.
ஹெர்மன் தன் அகலமான கைகளை விரித்து, “தெரியுமா ஆதிரை? போன வாரம் ஒரு ஹோட்டலுக்குப் போனப்போ, கூட்டத்துல சோபியைக் காணோம்னு தேடுனேன். அப்புறம் பார்த்தா, என்னோட கோட் பாக்கெட்டுக்குள்ளேயே இவ புகுந்து குளிர் காயுறா …
“ரொம்பத்தான் கிண்டல்!” என்று சோபி.
ஆதிரை, ஹெர்மன் மற்றும் சோபி தம்பதியினர் ஒதுக்கியிருந்த அந்த அழகான விருந்தினர் அறைக்குள் நுழைந்தாள்.
” மித்ரன் வரும்போதெல்லாம் இந்த அறையில்தான் தங்குவான்,”என்றாள் சோபி.
ஆதிரை நுழைந்தாள். அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஒரு ஜன்னல் , அதில் வெளியே பனி!
மேஜையில் ஒரு சிறிய புத்தகம். அதன் முதல் பக்கத்தில் மித்ரனின் கையெழுத்து தெரிந்தது. ஆதிரை அந்தப் புத்தகத்தை எடுத்தாள்.
ஆதிரை அந்தப் புத்தகத்தை எடுத்துப் பக்கங்களைப் புரட்டியபோது, ஒரு பக்கத்தில் “ஆதிரையின் மித்ரன்” என்று கிறுக்கப்பட்டிருந்தது. ஆதிரையின் விரல்கள் அந்த வரிகளை மெல்ல தடவின. அவன் இந்த அறையில் அமர்ந்து, தன்னை நினைத்திருந்தான் என்பது ஒரே நொடியில் புரிந்தது.
ஜன்னலுக்கு வெளியே பனி மெல்ல மெல்லக் கூரைகளின் மேல் ஒரு மெல்லிய போர்வை போலப் படரத் தொடங்கியிருந்தது. அவள் தனது மடிக்கணினியைத் திறந்து, முதலில் மித்ரனுக்கு ஒரு மின்னஞ்சல் எழுதத் தொடங்கினாள். மின்னஞ்சலை அனுப்பிவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினாள். பிள்ளைகளிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அங்கிருந்த நேர வித்தியாசமும், தனது நாளைக்கான தயாரிப்பும் அவளைத் தடுத்தன.
ஆதிரை மேஜையில் அமர்ந்து தன் லேப்டாப் திறந்தாள். பிரசன்டேஷனை ஒரு முறை பார்த்தாள். அந்தச் சென்சார் தரவுகளில், அந்த ஆராய்ச்சி வரிகளில் — இரண்டு வருடங்களின் உழைப்பு இருந்தது.
ஒரு தாயின் கண்ணீர் இருந்தது.ஒரு மனைவியின் காத்திருப்பு இருந்தது.ஒரு விஞ்ஞானியின் வைராக்கியம் இருந்தது.
அவள் லேப்டாப் மூடினாள்.
நாளை அந்த மேடையில் நின்று, உலகிலுள்ள சிறந்த விஞ்ஞானிகள் முன்னால் பேசப் போகிறாள்.
நாளை…. அவளுக்காகக் காலமும் காத்திருந்தது!

