Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-22

அத்தியாயம் –  22

“தன் இலை உதிர்த்து பிம்ப நிலவுக்குத் துணை சேர்க்கும் மரம். உள்ளே  நினைவுதிர்த்து அசைவாடி கிடக்கும்  பிரியம்! “


Advertisement

ஜெர்மனியின் அந்தப் பனி படர்ந்த  பொழுதில், பேராசிரியர் ராமநாதனின் இல்லம் ஒரு அமைதிப் பூங்காவாகக் காட்சியளித்தது. வரவேற்பறையில் இருந்த சந்தியாவின் ஆளுயரப் புகைப்படத்தைப் பார்த்தபடி ஆதிரை சிலையாக நின்றிருக்க, பேராசிரியர் மெல்லத் தன் சக்கர நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்தார்.

“ஆதிரை… அங்கே உறைந்து நிற்காதேம்மா, இங்கே வா,” என்ற பேராசிரியரின் குரலில் ஒரு தந்தைக்குரிய வாஞ்சை இருந்தது. ஆதிரை மெல்லத் தன் பார்வையைச் சந்தியாவின் படத்திலிருந்து விலக்கி அவரிடம் வந்தாள்.

“நாம பேசலாம்… முதல்ல லஞ்ச் சாப்பிடலாமா?” என்றபடி அவர் ‘லாரல்’ என்று அழைக்க, அந்த ஜெர்மானிய உதவியாளர் வந்து மதிய உணவை மேஜையில் நேர்த்தியாக அடுக்கினார். அந்த உணவின் மணம் அறையெங்கும் பரவ, அவர்கள் மெல்லச் சாப்பிடத் தொடங்கினர்.

Advertisement

அவர் மிக இலகுவாக உணவுகளை விவரிக்கத் தொடங்கினார். “இது ஜெர்மனியின் ஸ்பெஷல் டிஷ் மா… ‘சாவர்ப்ரேட்டன்’ (Sauerbraten)-னு இதோட பேரு. இறைச்சியை வினிகர் மற்றும் மசாலாக்களில் பல நாட்கள் ஊறவைத்துச் செய்றது. இதைப் பாரேன்… உருளைக்கிழங்கில் செய்த ‘க்னோடெல்’ (Knödel) உருண்டை, இதோ இது என்னன்னு சொல்லு… இதுதான் சிவப்பு முட்டைக்கோஸ் ஊறுகாயு. இதெல்லாம் இங்கே நல்லா இருக்கும் மா. ஒரு மாறுதலுக்கு இதைச் சாப்பிட்டுப் பார்.”

Advertisement

அருகில் இருந்த சோபி சிரித்துக்கொண்டே ஆதிரையின் தோளைத் தொட்டாள். “உனக்குத் தெரியாதா ஆதி? ப்ரொஃபஸர் வீட்டு கிச்சன் ஒரு குட்டி ஐக்கிய நாடுகள் சபை மாதிரி! ஒரு பக்கம் ஜெர்மன் மசாலா மணம் வீசும், இன்னொரு பக்கம் இண்டியன் அஸஃபெடிடா வாசம் தூக்கும். இன்னைக்கு நீ வர்றேன்னு தெரிஞ்சதும் ப்ரொஃபஸர் உனக்காகவே ‘சவுத் இந்தியன் டச்’ கொடுத்திருக்கார். அங்கே பாரு கர்ட் ரைஸ் ! இங்கே பாரு பிஸிபெலாபாத்!”

ஹெர்மன் ஒரு ‘க்னோடெல்’ உருண்டையைத் தட்டில் வைத்தபடி சீரியஸான முகத்துடன் கேட்டான், “அப்போ இந்த க்னோடெல் உருண்டையைத் தயிர் சாதத்துல தொட்டுச் சாப்பிடலாமா சோபி? புதுசா ஒரு ‘ஜெர்மன்-இந்தியா ஃப்யூஷன்’ ரெசிபி கிடைச்ச மாதிரி இருக்கும்!”

அவர்களின் இந்தக் குறும்புப் பேச்சு அந்த இறுக்கமான சூழலைச் சற்றுத் தளர்த்தியது. ஆனாலும் ஆதிரைக்குத் தான் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது.

Advertisement

உணவருந்தி முடித்தபின், சோபியும் ஹெர்மனும், “ஆதிரை, நாங்க 3 மணிக்கு உன்னை இன்ஸ்டிடியூட்டிற்கு கூட்டிட்டுப் போறோம்” என்று கூறி விடைபெற்றனர். ஆதிரை எப்போது வரும் என்று காத்திருந்த அந்தத் தனிமைத் தருணம் கனிந்தது. பேராசிரியர் அவளை முன் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறை முழுவதும் நிழற்படங்கள் நிறைந்திருந்தன.

பேராசிரியர் ராமநாதன் அந்த அறையின் சுவற்றில் இருந்த ஒரு பெரிய புகைப்படத்தைச் சுட்டிக்காட்டினார். அங்கே சந்தியாவின் அருகில் மணக்கோலத்தில் கம்பீரமாக ஒரு ஆண்மகன் நின்றிருந்தான். “ஆதிரை, இவர்தான் சந்தியாவின் கணவர் மிஸ்டர் லீ ,” என்றார் பேராசிரியர்.

ஆதிரை அந்தப் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தாள். மிஸ்டர் லீ முகத்தில் ஒரு முதிர்ச்சியும், அதே சமயம் ஒரு தலைவனுக்குரிய தேஜஸும் இருந்தது.  அவளது கண்கள் தானாக அடுத்திருந்த புகைப்படத்தைப் பார்க்க, அங்கே மணக்கோலத்தில் இருந்த லீ மற்றும் சந்தியாவிற்கு நடுவில், முகம் முழுக்க மலர்ச்சியுடன், அந்தத் தருணத்தை மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடும் ஒரு இளைஞனாக மித்ரன் நின்றிருந்தான்.

அதைத் தொடர்ந்து பல குழு புகைப்படங்கள் (Group Photos) இருந்தன. அனைவரும் ஒன்று கூடிச் சிரித்துக் கொண்டிருக்கும் படங்கள்… அவை அனைத்தும் வெறும் புகைப்படங்கள் அல்ல, ஒரு உன்னதமான நட்பின் மற்றும் காதலின் அடையாளங்களாக அந்த அறையில் ஜீவன் பெற்று நின்றன.

“சந்தியா… என் மகள். அவளும் மித்ரனும்… அவர்கள் வெறும் வகுப்புத் தோழர்கள் மட்டுமல்ல, ஒரு காலத்தின் காவியங்கள். அவங்க ரெண்டு பேரும் M.Sc படிச்ச காலக்கட்டம் மா…” என்று அவர் விவரிக்கத் தொடங்கியதும், அந்த அறையின் அந்த மதிய நேரச் சூழலே மாறத் தொடங்கியது.

ஜெர்மனியில் இப்போது மதியம் 1 மணி. இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே உள்ள 3 மணி நேரம் 30 நிமிடங்கள் கால வித்தியாசப்படி, இப்போது இந்தியாவில் நேரம் மாலை நான்கரை மணி.

மதுரையின் தல்லாகுளம் பகுதியில் 140 ஆண்டு கால வரலாற்றைச் சுமந்து கம்பீரமாக வீற்றிருக்கும் அந்த கல்லூரி. சிவப்பு செங்கல் கட்டிடங்கள், அடர்ந்த பசுமை போர்த்திய மரங்கள், மற்றும் ஆங்காங்கே அமர்ந்து விவாதிக்கும் மாணவர்கள் என அந்த இடமே ஒரு தனி உலகமாகத் தெரிந்தது.

மித்ரன், அ  நேரம்,  காலேஜ் வளாகத்தில் இருந்த அந்தப் பழைய கல் பெஞ்சில் (Stone Bench) அமர்ந்திருந்தான்.

ஆதிரையை ஜெர்மனிக்கு வழி அனுப்பி வைத்துவிட்டு, அவன் வீடு வந்து சேர்ந்த மூன்றாம் நாள் இன்று. குழந்தைகள் இருவரும் அப்பம்மாவுடனும் மற்றவர்களுடனும் மிக நன்றாக ‘ஜெல்’ ஆகிவிட்டனர். பிரசன்டேஷன் நல்லபடியாக முடிந்தது என்ற ஆதிரையின் மெசேஜ் மித்ரனுக்கும் இத்தனை நாட்களாக இருந்த அந்தப் பதற்றம் தணிந்து, மனது முற்றிலும் ரிலாக்ஸ் ஆகியிருந்தது.

சிறிது நேரத்தில் சோபியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது: “ராம் சார் எங்களை மதிய உணவிற்கு அழைத்துச் செல்கிறார்…” அந்த மெசேஜைப் பார்த்ததும் மித்ரன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். அந்த நொடியை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் தவித்தவன், சட்டென்று ஏதோ ஒரு உந்துதலில் கார் சாவியை எடுத்தான். எங்கு செல்கிறோம் என்று யோசிக்காமலேயே வண்டியை ஓட்டி வந்தவன், இதோ இப்போது… அதே கல்லூரி வளாகத்தில், அந்த வரலாற்றுப் புகழ்மிக்க ஜேம்ஸ் பிளாக் (James Block) முன்னால் அமர்ந்திருந்தான்.

அவன் காதுகளில் அந்தப் பழைய காலடிச் சத்தங்கள் கேட்டன. “மித்ரா… இந்த ஸ்பெக்ட்ரோமீட்டர் ரீடிங் தப்பா வருதுடா!” என்று கோபித்துக் கொள்ளும் சந்தியாவின் குரல் காற்றில் மிதந்து வந்தது. அவன் கண்களை மூடினான். சந்தியாவை அவன் முதன்முதலில் இதே வளாகத்தில் பார்த்த அந்தத் தருணம் அவன் மனத்திரையில் ஓடியது.

முதுகலை இயற்பியல் நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அறிவிப்புப் பலகையில் மித்ரன் தன் பெயரை இரண்டாம் இடத்தில் பார்த்த அந்த நொடி, அவனது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகத் தெரிந்தது. ஆனாலும், தனக்கு மேலே முதலிடத்தில் இருக்கும் அந்த ‘சந்தியா’ யார் என்ற தேடல் அவனுக்குள் இருந்தது. “யார் இது என்னை பீட் பண்ணினது?” என்று நினைத்தபடியே அவன் பலகையை விட்டு விலகி வர, அங்கே ஒரு பெண் தன் தந்தையுடன் நின்றிருந்தாள்.

“டாடி, நான் ஃபர்ஸ்ட் டாடி!” என அந்தப் பெண் போர்டைப் பார்த்தபடியே அத்தனை மகிழ்ச்சியில் கூவ, மித்ரன் திகைத்து நின்றான். அவள் அருகில் நின்றது அவன் வியந்து போற்றும் உலகப் புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ராமநாதன்! அவனுடைய கல்லூரி நாட்களில், ஒருமுறை முதன்மை விருந்தினராக (Chief Guest) வந்தவரின் உரையைக் கேட்டிருக்கிறான்.  “ஆஹா… இந்த சாரோட பொண்ணா இவ? அப்போ கண்டிப்பா புத்திஜீவியாதான் இருப்பாள்,” என மித்ரன் நினைக்கும்போதே, அவள் மலர்ச்சியுடன் திரும்பினாள்.

உடனே ஒரு ஸ்பார்க்! மித்ரனுக்கு அவள் முகம் எங்கே பார்த்தோம் என உள்ளே குடைந்தது. ஆமாம்! போன வருடம் மதுரையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் திருவிழா (Science Fest). மேடையில் ‘பெண் ஐன்ஸ்டீன்’ ஆக அவள் நின்ற கோலம் அவனுக்குத் தெள்ளத்தெளிவாக நினைவுக்கு வந்தது.

அன்று மேடையில் அச்சு அசலாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போலவே ஒரு உருவம். நரைத்த வெள்ளை தலைமுடி பிசிறிப் பிசிறி நிற்க, தடிமனான பிரேம் போட்ட கண்ணாடிக்கு பின்னால் அந்த அறிவுச் சுடர் வீசும் கண்கள்.. முகத்தில் ஒட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய வெள்ளை மீசை அவ்வப்போது பேசும்போது ஆடிக்கொண்டிருக்க, அந்த ‘பெண் ஐன்ஸ்டீன்’ நடுவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் தன் கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு பதில் சொன்ன விதம் இப்போதும் மித்ரனின் கண்ணுக்குள் ஆடியது.

குறிப்பாக, ‘ஒளிமின் விளைவு’ (Photoelectric effect) பற்றி அவள் விளக்கியபோது, அந்த ஒட்டப்பட்ட மீசை ஒரு பக்கம் லேசாகக் கழலத் தொடங்கியது. அதைச் சரி செய்துகொண்டே அவள் அசாத்தியமாகப் பேசிய அந்தக் காட்சி… நினைத்தாலே மித்ரனுக்கு சிரிப்பும் வரும்.

அன்று நடுவர் கேட்ட அந்தக் கேள்வியைக் கேட்டார்: “மிஸ் ஐன்ஸ்டீன், ஒளியை அலை (Wave) என்றுதானே உலகம் சொல்லிக் கொண்டிருந்தது, நீங்கள் ஏன் அதைத் துகள்கள் (Photons) என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்? அப்படி என்னதான் நடக்கிறது அந்த ஒளிமின் விளைவில் (Photoelectric Effect)?”

சந்தியா, தன் ஒட்டப்பட்ட மீசையைச் சரி செய்துகொண்டு, ஐன்ஸ்டீனின் அதே மேதமையுடன் பதில் சொன்னாள்: “சார்… இது ஒரு பந்து விளையாட்டு மாதிரி! ஒரு உலோகத் தட்டில் எலக்ட்ரான்கள் எல்லாம் அமைதியாகப் படுத்துக் கொண்டிருக்கும். நீங்கள் ஒளியை வீசும்போது, அது அலையாக வந்து மென்மையாக வருடினால் அந்த எலக்ட்ரான்கள் எழுந்திருக்காது. ஆனால், ஒளியைப் பாக்கெட் பாக்கெட்டாக, அதாவது ஃபோட்டான்களாக (Photons) வேகமாகக் கொண்டு வந்து அந்த எலக்ட்ரான்கள் மீது மோதினால்… அந்த மோதலில் கிடைக்கும் ஆற்றலில் எலக்ட்ரான்கள் தெறித்து வெளியே ஓடும்!”

அவள் விளக்கிய அந்த விதம், கடினமான இயற்பியலை ஒரு அழகான கதையாக்கியது. மித்ரன் அவளை உற்று கவனித்தான்.

அன்று பார்த்த அந்த மேக்கப் போட்ட ஐன்ஸ்டீனுக்கும், இன்று நேர்த்தியான டாப், ஜீன்ஸ் மற்றும் ஸ்டைலான ‘போனி டெயில்’ உடன் நிற்கும் இந்தச் சந்தியாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

கல்லூரி துவங்கிய முதல் வாரம். மெல்ல மெல்ல கல்லூரி வாழ்க்கை புரியத் தொடங்கியது. பள்ளிக்கூடத்தைப் போலப் பாடங்களை விரல் பிடித்து நடத்தாமல், ‘லெக்சரிங்’ (Lecturing) முறை அவர்களுக்குப் புதிதாக இருந்தது. மாணவர்கள் தாங்களாகவே தேடிப் படிக்க வேண்டிய சூழல்.

அதில் அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது பிராக்டிகல் லேப் (Practical Lab) செஷன்கள். முதல் செஷன் டெமோ முடிந்ததும், லேப் ப்ரொஃபஸர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “எக்ஸ்பெரிமென்ட்ஸ் எல்லாம் ரெண்டு ரெண்டு பேரா சேர்ந்துதான் செய்யணும். அந்த பார்ட்னர் யார்னு இப்போ குலுக்கல் (Lot) போட்டுத் தேர்ந்தெடுப்போம்.”

வகுப்பறையில் ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டது. மித்ரன் தன் நண்பன் பாரதியுடன் சேர வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்க, ப்ரொஃபஸர் சீட்டுகளைக் குலுக்கிப் போட்டார். ஒவ்வொரு பெயராக வாசிக்கப்பட்டது.

மித்ரனின் பெயர் வந்தபோது, அவனுடன் இணைக்கப்பட்ட அந்தப் பெயர் – சந்தியா.

அவன் லேப் மேட்டாக மித்ரனின் வாழ்க்கைக்குள் நுழைந்தாள் சந்தியா. “சரி, ஒரு வழியா அந்த ஐன்ஸ்டீன் கூடவே மாட்டிக்கிட்டோம்,” என மித்ரன் தனக்குள் சிரித்துக்கொள்ள, விதி அங்கேதான் தன் முதல் பெரிய கணக்கை ஆரம்பித்தது.

தியரி வகுப்புகளை விட, பிராக்டிகல் லேப் தான் மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. அதிலும் மித்ரனுக்கும் சந்தியாவுக்கும் வந்த முதல் சோதனையே ஒரு விசித்திரமான ‘போட்டோகிராபி’ எக்ஸ்பெரிமெண்ட்.

அன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு முந்தைய அந்த நாட்களில், நெகட்டிவ் பிலிம்களை வைத்து இருட்டு அறையில் (Dark Room) புகைப்படம் உருவாக்குவது ஒரு கலை.

” “மித்ரன், சந்தியா, இதுதான் ‘என்லாஜர்’ (Enlarger). ஒரு சின்ன ப்ரொஜெக்டர் மாதிரி இது செயல்படும். நெகட்டிவ் பிலிமில் இருக்கிற உருவத்தைப் பெரிய போட்டோ பேப்பரில் விழச் செய்ய இதைத்தான் அட்ஜஸ்ட் பண்ணணும்,” என்று லேப் புரொஃபஸர் சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

“இதோ இந்த ரெட் லைட் மட்டும் தான் எரியணும். வெள்ளை வெளிச்சம் ஒரு துளி பட்டாலும் இந்த நெகட்டிவ் எக்ஸ்போஸ் ஆகி வீணாயிடும், ஜாக்கிரதை!” என்று லேப் அட்டெண்டர் எச்சரித்துவிட்டு வெளியேறினார்

அந்தச் சிறிய இருட்டறைக்குள், சிவப்பு நிற ‘சேஃப் லைட்’ மட்டும் எரிந்து கொண்டிருந்தது. மித்ரன் முதலில் சந்தியாவைச் செய்ய விட்டுவிட்டு, பிறகு தான் செய்து கொள்ளலாம் என்று ஒதுங்கி நின்றான். சந்தியா மிகவும் கவனமாக அந்த என்லாஜரின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முயன்றாள். அது சற்றுப் பழமையான கருவி என்பதால், அதன் ஸ்க்ரூக்கள் சரியாகப் பிடிக்காமல் திடீரென நழுவியது.

கனமான அந்த என்லாஜர் பாகம் நேராகச் சந்தியாவின் விரல்கள் மீது விழப் போனது. “சந்தியா, தள்ளிக்கோ” என மித்ரன் மின்னல் வேகத்தில் பாய்ந்து, அவள் கையை அப்புறப்படுத்திவிட்டு, விழ வந்த அந்த இரும்புக் கருவியைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்தான். அந்த வேகத்தில், என்லாஜரின் கூர்மையான விளிம்பு மித்ரனின் விரல்களை ஆழமாகக் கிழித்தது.

அந்தச் சிவப்பு ஒளியில், அவன் விரல்களிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. அதைப் பார்த்ததும் சந்தியா “மித்ரன்! ரத்தம்… ஐயோ ரத்தம்!” என்று சொல்லும்போதே அவள் கண்கள் கலங்க,

“ஹேய்… ஒண்ணுமில்ல சந்தியா, இது சாதாரணக் காயம் தான்,” என்று

அவன் சமாதானப்படுத்த முயன்றான்.

அந்தக் காட்சியெல்லாம் அவன் மனக்கண்ணில் அப்படியே தத்ரூபமாக விரிந்தது. அந்த விரல் காயத்தைப் பார்த்தபடி, காலத்தின் பக்கங்களைப் பின்னோக்கித் திருப்பி, தன்னையே அந்த பழைய இருட்டறைக்குள் தொலைத்தபடி அமர்ந்திருந்தான்.

இங்கு ஜெர்மனியில் பேராசிரியரின் அறையில் நிலவிய நிசப்தம் ஆதிரையின் மனதுக்குள் ஒரு பெரிய அலையை உருவாக்கிக் கொண்டிருந்தது. பேராசிரியர் ராமநாதன் தன் மகளின் நினைவுகளில் மூழ்கியபடி “அவ அன்னைக்கு லேப் முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ அவ கண்ணுல ஒரு புது வெளிச்சம் தெரிஞ்சுது மா. என்கிட்ட வந்து சொன்னா… ‘அப்பா, இன்னைக்கு அந்தப் போட்டோகிராபி லேப்ல, அந்த இருட்டு அறைக்குள்ள மித்ரன் ரொம்ப கண்ணியமா தள்ளி நின்ன விதம், அவன் நடந்துகிட்ட முறை… எனக்கு உங்க கூட இருக்கும்போது கிடைக்கிற அதே பெரிய பாதுகாப்பு உணர்வைக் கொடுத்துச்சுப்பா’ அப்படின்னு.”

ஆதிரை எதையும் பேசாமல் நிசப்தமாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பெண்ணுக்குத் தன் தந்தை கொடுக்கும் அதே பாதுகாப்பை, ஒரு அந்நிய இளைஞன் அந்த இருட்டு அறையில் கொடுத்திருக்கிறான் என்றால், சந்தியாவின் மனதில் மித்ரன் எந்த இடத்தில் அமர்ந்திருப்பான் என்பதை அவளால் உணர முடிந்தது.

பேராசிரியர் தொடர்ந்தார், “அன்னைக்கு அவளுக்கு விழ வேண்டிய காயத்தைத் தன் கைல வாங்கினான் பாரு… அன்னைக்கே சந்தியாவோட மனசுல மித்ரன் அவளோட ஆத்மார்த்தமான நண்பன் ஆயிட்டான். “

“சந்தியாவுக்கு சின்ன வயசுலயே அம்மா இல்லாத குறை. அவளை ரொம்ப பாதிச்சிருந்தது மா. அதனாலயே அவ சீக்கிரம் யார்கிட்டயும் நெருங்க மாட்டா. ஒரு பாதுகாப்பற்ற உணர்வு அவளுக்குள்ள எப்பவும் இருக்கும்.” அதுவரைக்கும் யாரிடமும் சீக்கிரம் பழகாம,  எங்கேயோ அந்நியப்பட்டுத் தனிமையில நின்ன என் பொண்ணு, அன்னைக்கு அந்த விபத்துக்கு அப்புறம் மித்ரன் கிட்ட மட்டும் ஒரு அசாத்தியமான உரிமையை எடுத்துக்கிட்டா. அந்த லேப் விபத்துதான் அவங்க ரெண்டு பேரோட ஆத்மார்த்தமான பந்தத்துக்கு முதல் புள்ளியா இருந்துச்சு மா.”

பேராசிரியர் ராமநாதன் அந்த நினைவுகளில் ஆழ்ந்தபடி மெல்லப் புன்னகைத்தார். ஆதிரை இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்படித்தான் மா அவங்க ரெண்டு பேரும் நல்லா பேசிப் பழக ஆரம்பிச்சாங்க. ஆரம்பத்துல யார்கிட்டயும் பேசத் தயங்குற அந்தத் தாயில்லாதப் பொண்ணுக்கு, மித்ரன் ஒரு நல்ல நண்பனா இருந்து அவளுக்குள்ள ஒரு பெரிய தைரியத்தை வளர்த்துவிட்டான். சந்தியா ரொம்ப புத்திசாலி ஆனா, ரொம்ப  மென்மையானவ, சின்னச் சின்ன விஷயத்துக்கும் பயப்படுவா. ஆனா மித்ரன் அவகூட இருக்கும்போது அவளுக்குத் தனி தைரியம் வந்துடும்.”

பேராசிரியர் ஒரு மெல்லிய சிரிப்புடன் தொடர்ந்தார், அவ குரூப்ல இருந்த எல்லா கேர்ள்ஸுமே ஒரு லேப் அட்டெண்டர் ‘முசுடு’ அண்ணாவுக்கு ரொம்ப பயப்படுவாங்க. அவர் சும்மா சும்மா எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எல்லாரையும் திட்டிட்டே இருப்பாராம்.” “சந்தியா என்கிட்ட வந்து சிரிச்சுக்கிட்டே சொல்லுவா… ‘அப்பா, மித்ரன் என்கிட்ட என்ன என்ன சொல்றான் தெரியுமா? லேப் அட்டெண்டர் உன்னை அதட்டுனாலோ இல்ல பயமுறுத்துற மாதிரி நடந்துக்கிட்டா, நீ ஏன் பயப்படுற? கைல இருக்கிற அந்தப் பழுக்கக் காய்ச்சின சோல்டரிங் ராட (Soldering Rod) வச்சுச் சுட்டுடுவேன்னு சொல்லு! பயப்படாதே, நான் உன் கூடவே நிக்கிறேன்’னு சொல்லுவானாம்.”

ஆதிரை இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் புன்னகைத்தாள். மித்ரனின் அந்தப் குறும்புத்தனமான அதே சமயம் அதீதப் பாதுகாப்பு உணர்வு கொண்ட பக்கம் அவளுக்குப் புதியதாக இருந்தது.

“மித்ரன் அவகிட்ட எப்பவும் சொல்ற ஒரே வார்த்தை இதுதான்… ‘நான் நிக்கிறேன் கூட’. அந்த ஒரு வார்த்தைதான் சந்தியாவோட உலகத்தையே மாத்துச்சு மா.

‘அப்பா, மித்ரன் கிட்ட ஒரு நிழல் இருக்குப்பா… அது எனக்கு அம்மாவோட மடியில தலை வச்சுப் படுக்குற மாதிரி ஒரு அமைதியைக் கொடுக்குது’ன்னா.

ஆதிரையின் கண்கள் கலங்கின.

“உன் மித்ரன் இருக்கானே… அவன் அப்படிதான்மா! எல்லோருக்குமே அவனை உடனே பிடிச்சுடும். அவங்களுக்கு சீனியரான லீ க்கே மித்ரனை அவ்வளவு பிடிக்கும் தெரியுமா?” என்று சொல்லிச் சிரித்தார் ப்ரொஃபஸர்.

ஆதிரை ஆச்சரியமாகப் பார்க்க, “சரி, நாளைக்கு நாம் தொடரலாம், டைம் ஆச்சு. போஸ்ட்-நூன் செஷன்  க்கு நாம இன்ஸ்டிடியூஷனுக்குப் போலாமா?” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!