Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-28

அத்தியாயம்-28

பவித்ராவின் உடலும் மனமும் களைத்திருந்தது.. அருகில் அமர்ந்து கார் ஓட்டிவருபவனைத் திரும்பிப்பார்த்தாள். அந்த இரவிலும் நெடுஞ்சாலையின் விளக்கொளியில் காலைச்சூரியனைப் போல் ஒளிர்ந்தான். தன்னையறியாமல் ஒரு ஏக்கப் பெருமூச்சுவிட்டாள்..

“என்ன பவி வச்சகண்ணு வாங்காம பாக்குற அவ்ளோ அழகாவா இருக்கேன்?” என்றான் விக்ரம் இவள் பக்கம் திரும்பி ஒற்றை புருவம் உயர்த்தி..



Advertisement

“ச்சு.. சும்மா இரு விக்கி.. பாவம் நமக்காக இவ்ளோ தூரம் வரானேன்னு பாவமா பார்த்தேன்..அவ்ளோதான்..” என்றாள்.

“ஓ இது பரிதாபப்பார்வையா..? நா கூட என்னமோன்னு நெனைச்சேன்.”

“என்ன நினைச்ச..?”

Advertisement

“ஒன்னும்மில்ல விடு..” என்றவன்

Advertisement

அதன் பிறகு ஆஃபீஸ் விஷயமாக பேச அதற்கு தக்க பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தாள்.

வீடு வந்து சேர்ந்ததும்.. அவன் அப்படியே கிளம்பிப்போய்விடாமல்.. அவர்களது ஃப்ளாட் வரை உள்ளே வந்து அவளுக்காக விழித்து காத்திருந்த அவளின் அம்மா மைதிலியிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டுதான் கிளம்பினான்.

வெளியே அவனை வழியனுப்புவதற்காக கிளம்பியவளைப் பார்த்தவன்..

Advertisement

“ஹேய் நீ ரொம்ப டயர்டா தெரியற.. கீழல்லாம் வர வேணாம் ரெஸ்ட் எடு..” என்றவன்,

“இன்னிக்கு அம்மாவுக்கு நீ இருந்தது ரொம்ப ஹெல்ப்பா இருந்தது..தாங்க்ஸ் பவி..” என்றான்.

“இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொல்லுவியா.. அப்புறம் ஃப்ரண்ட்ஸ் எதுக்கு இருக்காங்க..” என்றாள்.

“ஆமா வீடு வீடாப் போய் சாம்பர் வாளி தூக்கத்தானே இருக்காங்க..” என்றவனின் பாவனையில் லேசாக சிரித்தவள்

“அதுக்கும்தான்..” என்றுவிட்டு

“சரி நீ பார்த்துப்போ..” என்றாள் அக்கறையாக..

ஒரு வேகமூச்சை உள்ளிழுத்தவன்..

“எனக்கு பார்த்து போகத்தெரியும்.. நா ஒன்னும் சின்னபையன் இல்ல..” என்று சிறு கடுப்புடன் கூறியவன்..

“நீதான் இன்னும் கொஞ்சநேரம் நின்னாக்கூட மயங்கிவிழுந்துடுவ போல இருக்க..” என்றவன்

“ஃபீவர் எதாவது இருக்கா..?” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்து நெற்றியைத் தொட்டுப்பார்த்தான்.

அந்த தீண்டலில் ஒரு கணம் கண்ணைமூடியவள் அப்படியே அவன் கையைப்பிடித்து நெற்றியில் ஒட்ட வைத்துக் கொள்ளவேண்டும் போல உள்ளுக்குள் பேரலையாக எழுந்த உந்துதலை முயன்று அடக்கிக்கொண்டு..சற்று விலகி நின்றவள்.

“அதெல்லாம் இல்ல.. ஐயம் ஓகே..” என்றாள் மெதுவாக..

ஒரு பெருமூச்சுடன்..

“ஓகே டேக் கேர்..” என்றவன் விலகி நடந்துப்போனான்..

அவன் கண்மறையும் வரை  அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அழுகை அடக்கமுடியாமல் வர அப்படியே தன் அறைக்குள் ஓடிப்போய் அழுதுதீர்த்தாள்.

இந்தப் பொருந்தாக்காதலை சுமக்கும் வலியிலிருந்து என்றேனும் தனக்கு விடுதலை கிடைக்குமா என்று அவள் மனம் ஏங்கியது.

பவித்ரா சின்ன வயதிலிருந்தே ஆசையை அடக்கப் பழகியிருந்தாள்.

அப்பா இருந்தவரை ஓரளவு நல்ல நிலைமையில் இருந்த குடும்பம்.. அவரது திடீர் இழப்பினால் நட்டாற்றில் தத்தளிக்கும் படகுபோல் ஆனது.

பெரிதாக சொத்து, சேமிப்பு என்று எதுவும் இல்லாமல்,அப்பாவின் சொற்ப இன்சூரன்ஸ் பணமும் ஒரு மாத மளிகைசாமான், இரு மாத வாடகை பாக்கி மற்றும் கை நிறைய ஈஎம்ஐ கடன்கள் என்று பள்ளிக்குப்போகும் தன் இரு மகள்களுடன் தனி மரமாக நின்றார் அதுவரை வேலைக்கென்று சென்றறியாத அவள் அம்மா மைதிலி.

அந்த பதினைந்து வயதில் ஒரே இரவில் அவள் அந்த குடும்பத்திற்கு தலைவியாக மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாள்.

யார் செய்த புண்ணியமோ அம்மாவுக்கு அப்பா வேலை செய்த கம்பெனியிலேயே கீழ் நிலையிலேனும் ஒருவேலை கொடுக்கப்பட..தலைக்கு மேல் இருந்த கூரைக்கு பிரச்சனை வராமல் தப்பித்தனர்.

ஆனாலும் வருமானம் முன்னைக்கு பாதிக்குமேல் குறைந்துவிட..தங்களது செலவை சுருக்கிக்கொள்ளத் தொடங்கினர்.

தங்கையை மட்டும் தனியார் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவள் அரசு பள்ளியில் சேர்ந்தாள். தன்னுடன் படிக்கும் பிள்ளைகளெல்லாம் மாலையில் டிவி, விளையாட்டு என்றிருக்க இவள் அக்கம்பக்கம் பிள்ளைக்களுக்கு டியூஷன் எடுத்தாள். பண்டிகை, நல்லநாள், விடுமுறை என்றால் துணிக்கடைக்கும் , ஹோட்டல் கடைக்கும் வேலைக்கு சென்றாள்.

தனக்கென்று புதிதாக ஒரு ஆடை வாங்கவும் வீட்டில் கேட்கமாட்டாள். அம்மாவுக்கு கஷ்டம் தரக்கூடாது என்று தன் ஆசைகளை எல்லாம் தனக்குள்ளேயே புதைத்துக்கொள்வாள்.

அவள் ஓரளவு நல்ல ஆடை அணிந்ததே வேலைக்குப் போன பிறகுதான்.

எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிவிடவேண்டும்..தன் அம்மாவையும் தங்கையையும் நன்றாக வாழ வைக்கவேண்டும் என்ற வைராக்கியம் மட்டுமே உந்தித்தள்ள வேறெதிலும் அவள் நாட்டம் செல்லவில்லை.

ஐடி துறையில் இருந்ததால் அமெரிக்கா சென்றால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று நினைத்தவள்..அதற்காக பல்வேறு முயற்சிகள் செய்துகொண்டிருந்தாள். அப்படிதான் ஒருநாள் விக்ரமாதித்யா அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பற்றி லின்க்டின்னில் எழுதியிருந்த ஒரு ஆர்ட்டிக்கிள்ஐ பார்த்தாள்.

அவன் சொல்வன்மை பிடித்ததா இல்லை ப்ரொஃபைலில் இருந்த அவன் வதனம் பிடித்ததா தெரியாது.. அவனைத் தொடர்பு கொண்டு பேசினாள்.

இவள் அமெரிக்காபோகத் துடித்துக்கொண்டிருக்க அவன் இந்தியா வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

அவன் லட்சியம் எதிர்காலக்கனவு அதை செயல்படுத்த அவன் வகுத்துள்ள திட்டம் என்று  பேசப்பேச அவனது கனவை இவளுள்ளும் தன் கனவாக ஸ்வீகரிக்கத் தொடங்கியிருந்தாள்.

விக்ரம் இந்தியாவிற்கு திரும்பி வந்து கம்பெனி தொடங்கப்போவதாக இவளிடம் கூறிய சமயம் அவளது கம்பெனியிலிருந்து அவளுக்கு அமெரிக்காவிற்கு ஆன்சைட் செல்லும் வாய்ப்பு வந்தது.

வாழ்வில் முதல் முறையாக தனக்கென்று யோசித்து ஒரு முடிவெடுத்தாள் பவித்ரா.

தனது ஆன்சைட் வாய்ப்பை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுத்தாள்.

விக்ரம் கம்பெனி தொடங்கும் வரை வெளியிலிருந்து ஆதரவு தந்தவள்.. அவன் கம்பெனி தொடங்கியதும் தன் நிலையான வருமானம் தரும் வேலையைவிட்டுவிட்டு அவனுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினாள்.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. ஆனால் ஒருநாள் எதேர்சையாக தன் வாழ்வையே தலைகீழாக மாற்றப்போகும் உண்மையை அறியும் வரை,

அவர்கள் கம்பெனி ஆரம்பித்த புதிதில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு எடுத்து அதில்தான் தங்கள் அலுவலகத்தை அமைத்திருந்தனர்.

இருந்த ஒரு ஃக்ளையண்டும் அடுத்த மாதத்திலிருந்து இவர்கள் ப்ராஜெக்டை வேண்டாம் என்று நிறுத்திவிட.. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நேரம்.

அப்போது மனதில் இன்றைய கவலையும் எதிர்காலத்தை பற்றிய அச்சமும் நிறைந்திருந்தாலும் இருவரும் நம்பிக்கையிழக்கவில்லை.

அன்றும் வழக்கம் போல இன்னொரு ரிஜெக்‌ஷன் மெயிலைப்படித்தவன்..

பவித்ராவைப் பார்த்து

“பவி..என்ன தைரியத்துல என்னை நம்பி அவ்ளோ பெரிய வேலைய விட்டுட்டு வந்த..?” என்றான் கேலியாக..

“அதைத்தான் நானும் டெய்லி கண்ணாடி முன்னாடி நின்னு என்னையே கேட்டுட்டு இருக்கேன்..” என்றாள் அவளும் விளையாட்டாக..

“உன்னை எப்படி காப்பாத்தி கரை சேர்க்கப்போறேனோ தெரியலயே பவி..” என்று  அவன் போலிப் பெருமூச்சுவிட்டான்.

அவன் கேலியாகப் பேசினாலும் அதன் பின் மறைந்திருந்த அவனது கவலையும் தெரிந்தது..

“போற போக்க பார்த்தா நான்தான் வேற நல்ல கம்பெனிக்கு வேலைக்குப் போய் உன்னை காப்பாத்தனும் போல..” என்றாள் அவள்..

“அப்படிலாம் விட்டுட மாட்டேன்.. என் பதினெட்டு வயசுல இருந்து இந்த ஆறு வருஷமா  வீட்ல கூட செலவுக்கு காசு வாங்காமதான் இருக்கேன் தெரியுமா..?” என்று காலரைத் தூக்கிவிட்டான்.

“அவ்ளோதானா.. நான் பதினைஞ்சி வயசுல இருந்து பதினோறு வருஷமா என் குடும்பத்தையும் சேர்த்துப் பார்த்துக்கறேன் தெரியுமா..?” என்றாள் அவனைவிட கெத்தாக..

அதைக்கேட்டு அவன் கைகளை மேலே உயர்த்தி இடைவரைக்குனிந்து அவளுக்கு சல்யூட் செய்வது போல் பாவனைக்காட்ட அதைக்கண்டு சிரித்தவள் முகம் மாறியது..

“ஏய் விக்கி ஆறு வருஷம்ன்னா சொன்ன? இப்ப உனக்கு என்ன வயசாகுது..” என்றாள்.

“24 ஏன்..?” என்றான்.

“நீ அஞ்சி வருஷமா ஐடி வேலைல இருக்கறதாதானே சொன்ன..?” என்றாள் அதிர்ச்சி நீங்காமல்

“ஆமா என்னோட பத்தொன்பது வயசுல இருந்து நான் பார்ட் டைமா அமெரிக்காவுல இருக்க ஒரு கம்பெனிக்கு கோடிங் வர்க் பண்ணிட்டுத்தான் இருந்தேன்..” என்றான்.

அவளுக்கு தலை சுற்றியது..

அவன் அவளைவிட இரண்டு வயது சிறியவன்.. இந்த உண்மைத் தெரியாமல் அவள் ஏதேதோ மனக்கோட்டைக் கட்டிவிட்டாளே..

“என்னாச்சு.?” என்றான் அவள் அதிர்ந்த முகத்தைப்பார்த்து

“டே அப்போ நீ எனக்கு தம்பியாடா..” என்று சட்டென்று வாய்க்குவந்ததைக் கேட்டுவிட்டாள்.

“நான்சென்ஸ் மாதிரி பேசாத.. தம்பியாம்..தம்பி..” என்று கடுப்பைக்காட்டினான்.

“நீ என்னைவிட ரெண்டு வயசு சின்னவன்னா அப்போ தம்பிதானே..”

“நீ என்னைவிட ரெண்டு வயசு சின்னவளா இருந்தா எனக்கு தங்கச்சி ஆயிடுவியா?” என்று கேட்டான் சூடாக

கிராமத்தில் வளர்ந்ததாலோ இல்லை சமூகம் வகுத்த விதிமுறைகளை மீற மனம் வராமலோ,இல்லை ஊரார் வாய்க்கு பயந்தோ..அவளால் அந்த வயது வித்தியாசத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை..

“எனக்கு 26 வயசுடா..” என்றாள்.

“எத்தனை வயசானா என்ன உனக்கு இங்க நான் தான் பாஸ்..” என்றான் அதிகாரமாக..

“சரிங்க பாஸ்..” என்று அப்போதைக்கு அவள் கேலி பேசி முடித்துவிட்டாலும் .. அதன் பிறகு அவர்களின் உறவின் பரிமாணமே மாறிப்போனது.

பவித்ரா எத்தனை முறை அவன் தன்னைவிட சின்னவன் அவன் மீது ஆசைக்கொள்வது தவறு என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும் அவனிடத்தில் காதல் கொண்ட மனம் அதையெல்லாம் கேட்பதாகத் தெரியவில்லை. அதை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை நாளுக்கு நாள் அவன்மேல் வைத்த காதல் நிலத்தின் நீரையெல்லாம் உறிஞ்சி வளரும் கருவேலஞ்செடிபோல அவள் உயிரையே உணவாக உறிஞ்சி வளர்ந்து கொண்டேதான் போனது..

ஒருவேளை விக்ரம் இந்த வயது வித்தியாசத்தை எல்லாம் பெரிதாக நினைக்காமல் அவனுக்கும் என்னைப்பிடித்திருந்தால்..? என்ற ஆசைக்கனலை மூட்டியது.

ஆனால் விக்ரம் ஏற்கனவே பேச்சுவாக்கில் தனது முன்னால் காதலைப்பற்றி கூறியிருந்தான். கல்லூரியில் படிக்கும்போது தன்னுடைய ஜூனியர் பெண்ணைக் காதலித்ததாகவும் அது இவன் அமெரிக்கா போனதும் முறிந்துவிட்டது என்றும்.

அடுத்து அமெரிக்காவில் தன்னுடன் வேலைப்பார்த்த பெண்ணை விரும்பியதாகவும் அது அவன் இந்தியா வந்ததும் முடிந்தது என்றும் கூறியிருந்தான். அந்த பெண்ணும் அவனைவிட இளையவள் தான்.

இப்படி ஒரே வயதில் கூட இல்லாமல் தன்னை விட இளம்வயது பெண்கள்தான் அவனது டைப் என்று தெரியவந்ததும்.

அந்த நப்பாசையும் போனது..

அவனை தூரத்திலிருந்து ரசித்துக்கொண்டே இப்படியே வாழ்ந்துவிடலாம் என்று அவள் நினைத்தபோதுதான்,

அவன் அதிதி மேல் ஆர்வம் காட்டுவது போல் தெரிந்தது.

என்னதான் அவனைவிட்டு விலகிவிடுவதாக நினைத்திருந்தாலும், அவன் அதிதியிடம் பழகுவதை அவளால் தாங்க முடியவில்லை.. பொறாமை தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அதனாலேயே அவன் மீது தேவையில்லாமல் கூட எரிந்துவிழுந்தாள்.

என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அவனிடம் எப்படியாவது தன் மனதை தெரிவித்துவிடலாம் என்று கூட நினைத்திருக்கிறாள் ஆனால்

ஏதோ ஒரு வாய்ப்பாக அவன்

“உன்னைவிட சின்னப்பையன காதலிக்கறேன்னு சொல்றியே” என்றோ

“உன்னை நான் அப்படி பார்க்கலை” என்றோ சொல்லிவிட்டால் அதன் பிறகு அவள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் பேசமுடியும்..?

ஐந்து வருடமாக இருவரும் உருவாக்கியிருந்த உறவுகளுக்கும் அப்பாற்பட்ட இந்த பந்தம் உடைந்து போனால் அவளால் தாங்கவே முடியாது..

அவன் விருப்பப்பட்ட பெண்ணை விரும்பட்டும் தான் ஒதுங்கிக்கொள்ளலாம் என்று தான் நினைத்திருந்தாள்.

ஆனால் அன்று ஆஃபீசில் அதிதியை வசீகரனுடன் பார்த்ததிலிருந்து அவள் மனம் மீண்டும் குழம்பிப்போனது.

ஒருவேளை விக்ரம் சாதாரணமாகத்தான் அதிதியுடன் பழகுகிறானோ அவள்தான் தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறாளோ என்ற யோசனையாகவே இருந்தது.

ஆனால் அன்றைய கொலுவில் பார்த்தபோதுகூட விக்ரம் அதிதியிடம் அதிக பற்றுதல் காட்டுவதாகத்தான் தெரிந்தது..

ஏன் விக்ரமின் தாயார் கூட அவர் மகன் விரும்பும் பெண் அதிதியாக இருக்குமோ என்று தானே கேட்டார். ஒரு பேச்சுக்குக்கூட இவளாக இருக்கக்கூடுமோ என்று யோசிக்ககூட இல்லையே.. அப்போது அவருக்கும் அவளது வயது ஒரு தடையாகத்தானே இருக்கிறது.. என்றெல்லாம் எண்ணி மனம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றது .

இப்படியே எத்தனைகாலம் இந்த ஒருதலைக்காதலைத் தூக்கி சுமப்பது என்று மனம் அலுத்துப்போனது அவளுக்கு..

அதிதி காலையிலிருந்து நூறாவது முறையாக ஃபோனை எடுத்துப்பார்த்திருந்தாள்.

அன்று இரவு அவளை வீட்டுவாசலில் விட்டுப்போனதிலிருந்து வசீகரன் ஒரு வார்த்தை அவளிடம் பேசவில்லை.

அவளின் அழைப்புகள், அனுப்பிய குறுஞ்செய்திகள், வாய்ஸ் நோட்கள் என்று எதற்குமே பதிலில்லாமல் போனது..

வேலை விஷயமாகக் கூட இப்போதெல்லாம் மெயிலில் தான் தொடர்பு கொள்கிறான்.. இனி ஃபோன் தகவல் பரிமாற்றங்களை நாகராஜ் பார்த்துக்கொள்வான் என்று மெயில் அனுப்பியிருந்தான்.

ஒருவாரம் ஆகிவிட்டது.. இன்னும் அவன் கோபம் குறைந்தபாடில்லை..

அதிதி என்நேரமும் அழுதுவிடுவாள் போல இருந்தாள்.

வேலையிலாவது மனதைக் கொஞ்சம் மாற்றலாம் என்று பார்த்தால், அவள் வேலை செய்வதே அவனுடைய கம்பெனிக்குத்தான்.. அப்புறம் எங்கே அவனை மறப்பது..?

இப்படி மெயிலில் தகவல் அனுப்பி அதை அவன் பார்த்து பதிலளிப்பதற்குள் இவள் இன்னும் வேலையே தொடங்காமல் தாமதம் ஆகிக்கொண்டே போனது.

அவளுக்கும் கோபம் வரத்தொடங்கியது..

‘அப்படி என்ன நான் மன்னிக்க முடியாத தப்பு செய்துவிட்டேன்?? அவன் என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் நான் உடனே மன்னித்துவிடுகிறேனே.. அவன் மட்டும் ஏன் இப்படி வீம்பு பிடிக்கிறான்..?’ என்று பொறுமையிழந்து ஆத்திரம் வரத் தொடங்கியது..

‘போறான்..’ என்று கோபமாக மனதில் நினைத்துக்கொண்டு ஆஃபீஸ் கிளம்பிப்போனாள்.

அங்கே போனால் விக்ரமிடம் செம டோஸ் விழுந்தது..

“என்னதான் பண்ணிட்டு இருக்க..? இன்னும் லிங்கா மெஷினரீஸ் வொர்க் ஆரம்பிக்கவே இல்லை..சும்மா வந்துட்டு டைம் பாஸ் பண்ணிட்டு போறியா..?” என்றான் கோபமாக..

“இல்ல பாஸ் க்ளையண்ட் கிட்ட இருந்து கம்யூனிகேஷன் ரொம்ப டிலே ஆகுது அதான்..”என்று இழுத்தாள்.

“சரி அப்போ அடுத்த வருஷம் வரைக்கும் அவங்க மெயில் அனுப்புவாங்கன்னு உக்காந்து சிஸ்டமையே பார்த்துட்டு இருக்கியா..? நான் உனக்கு வெட்டியா சம்பளம் தரேன்..” என்றான் ஏளனமாக.

அவள் தலை குனிந்து நின்றிருக்க..

“ஃபோன்னு ஒன்னு இருக்குல்ல? அதை யூஸ் பண்ணு இல்லைன்னா நேர்ல கிளம்பிப்போ.. எனக்குத் தெரியாது இன்னும் ஒரு வாரத்துல நீ வேலைய ஸ்டார்ட் பண்ணியிருக்கனும்..” என்றான் கடுமையாக..

அதிதி அவசரமாக

“எஸ் பாஸ்..” என்று மொழிந்துவிட்டு விட்டால் போதும் என்று வெளியேறினாள்.

அதிதிக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.. இது அவர்கள் பாஸ்தானா?இல்லை வேறு ஆவியேதும் அவர் உடம்பில் புகுந்துவிட்டதா?

கோபத்தில் கூட குரல் உயர்த்தி பேசாத விக்ரம் சார் இப்படி டென்ஷன் ஆகி அவள் பார்த்ததே இல்லை.. அவள் என்ன யாருமே பார்த்ததில்லை..

இவள் அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்திருப்பதைப்பார்த்த லிடியா..

“என்ன உன் பங்கு டோஸ் வாங்கிட்டியா..?” என்றாள்

“என்ன சொல்ற…?” என்று கேட்டவளிடம்

“நான் வந்ததுமே வாங்கிட்டுதான் உக்காந்திருக்கேன்..” என்றாள்.

தன்னிடம் மட்டும் இல்லையா எல்லாரிடமும் இப்படித்தான் நடந்து கொள்கிறானா? என்ன காரணமாக இருக்கும்? என்று வியந்தாள்.

அப்போது லிடி

“ஸ்ஸ்..” என்று சைகை செய்து அருகே அழைத்தாள்

“யாருகிட்டயும் சொல்லாத..  ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்..” என்றாள் கிசுகிசுப்பாக..

“என்னது” என்றாள் அவளும் அதே ரகசியம் பேசும் குரலில்

“பவி மேம் பேப்பர் போட்டுட்டாங்களாம்..”

“என்னது..” என்று அதிர்ச்சியில் குரல் உயர்த்தியவள் சட்டென்று கைவைத்து தன் வாயை மூடினாள்

“ஒளறாத லிடி.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. பவி மேமாவது ரிசைன் பண்றதாவது..அதுவும் கம்பெனி இப்படி எக்ஸ்பான்ஷன் டைம்ல இருக்கும் போது.. உனக்கு யாரோ தப்பான நியூஸ் சொல்லியிருக்காங்க..”

“இல்ல அதி நிஜமாதான்.. காலைல அவங்க பேசிகிட்டத நானே கேட்டேன்.. பாஸ் எவ்ளவோ பவி மேம கன்வின்ஸ் பண்ண பார்த்தாரு ஆனா மேம் ரிசைன் பண்றதுல உறுதியா இருந்துட்டாங்க.. அப்ப இருந்துதான் சார் இப்படி ருத்ரதாண்டவம் ஆடிட்டு இருக்காரு..” என்றாள்.

அதிதி பவித்ராவைப் பார்த்தாள், தன்னை சுற்றி நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் தன் கணினித்திரையை வெறித்தபடி கடமையே கண்ணாக வேலை செய்துகொண்டிருந்தாள்.

சற்று நேரம் பொறுத்து..

பவித்ரா விக்ரமின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே போனாள்.

“விக்கி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..” என்றாள்.

“ஏன் ரெண்டு மாசம் நோட்டீஸ் பீரியட் கூட வொர்க் பண்ணமுடியாது இப்பவே போறேன்னு சொல்லப்போறியா..?” என்றான் ஏளனமாக

“என்மேல இருக்கற கோபத்த நீ ஏன் எல்லார் மேலயும் காட்டிட்டு இருக்க..” என்றாள்.

“அதான் விட்டுட்டு போறதுன்னு முடிவெடுத்துட்டல்ல.. அப்புறம் நான் என்ன பண்ணா உனக்கு என்ன..?” என்றான் விட்டேத்தியாக

“நம்ம ஸ்டாஃப்ச நீ இப்படி நடத்தமாட்டியே விக்கி..”

“விக்ரம்ன்னு சொன்னா போதும்..” என்றான் வெடுக்கென்று

“அதோட அவங்க என்னோட ஸ்டாஃப்ஸ் அவங்கள எப்படி நடத்தனும்னு எனக்கு நீ கிளாஸ் எடுக்கவேண்டாம்..” என்றான் கோபமாக

“நான் ஏன் போறேங்கற காரணத்ததான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேனே விக்கி..” என்றாள் மன்றாடும் குரலில்

“எது உங்க அம்மா ட்ரீட்மெண்ட்காக அமெரிக்கா போறதா? அந்த கதையெல்லாம் நம்புறதுக்கு நான் ஒன்னும் எல்கேஜி குழந்தை இல்லை..”என்றான் ஆத்திரத்துடன்.

“என் விக்கி எந்த சூழ்நிலையிலையும் நிதானம் இழக்கமாட்டான்.. எல்லார்கிட்டயும் கருணையோட நடந்துக்குவான்.. தன்னோட ஸ்டாஃப்ச ப்ரொடெக்ட் பண்ணுவான்.. இப்படி நிதானமிழந்து கத்தற,டென்ஷனாகி எரிஞ்சிவிழுற இந்த விக்கி யாருன்னே எனக்குத் தெரியல.” என்றாள் பவி

“என்னோட பவி எந்த நிலைமையிலயும் என்கூட துணையா நிப்பா, நான் கீழவிழுறதுக்கு முன்னாடி தாங்கிப்பிடிப்பா.. இப்படி பொறுப்பைத்தட்டி கழிச்சிட்டு இவன் எப்படியோ போகட்டும்ன்னு பாதில விட்டுட்டு ஓட மாட்டா..” என்றான் அவனும் பட்டென்று..

ஒருகணம் அமைதியாக நின்றவள்..

“சாரி விக்கி..” என்றாள்.

ஒரு வேகப்பெருமூச்சை உள்ளிழுத்தவன்

“டோண்ட் பீ சாரி.. விட்டுட்டு போறவங்க யாரும் எனக்காக கவலைப்பட வேண்டாம். நீ இன்னிக்கே  வேணாக்கூட கெளம்பலாம்..” என்றான் உணர்ச்சி துடைத்த குரலில்..

அவனை ஒருமுறை அழாக்குறையாகப் பார்த்துவிட்டு வெளியேறினாள் பவித்ரா.

கண்களில் கண்ணீருடன் பவித்ரா விக்ரமின் கேபினைவிட்டு வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அதிதி..

பவித்ரா மொட்டை மாடியில் நின்று கண்ணீர் உதிர்த்துக்கொண்டிருந்தாள்.

பின்னால் ஆள் வரும் அரவம் கேட்டதும் சட்டென்று கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

அதிதி அவள் அருகில் வந்து தயங்கி நின்றவள், சற்று பொறுத்து..

“மேம் நீங்க ஏன் மேம் வேலைய விட்டுப்போறீங்க..” என்று கேட்டாள்..

“அதெல்லாம் என்னோட ரெசிக்னேஷன் லெட்டர்ல எழுதியிருக்கேன்.. உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..” என்றாள் வெடுக்கென்று.. ஏற்கனவே அவள் இருக்கும் கடுப்பில் இவள் வேறு என்றிருந்தது அவளுக்கு..

“ஆனா நீங்க இந்த கம்பெனிய விட்டுப் போவீங்கன்னு நான் கனவுலயும் நெனைச்சதில்ல..” என்றாள் அதிதி,பவித்ராவின் உதாசீனத்தை கண்டுகொள்ளாமல்..

“ஏன் எனக்கு இங்க விட்டா வேற கம்பெனில வேலைக்கிடைக்காதுன்னு நினைச்சியா..” என்றாள் குத்தலாக..

“இல்ல விக்ரம் சாரை விட்டு நீங்க போகமாட்டீங்கன்னு நினைச்சேன்..”

“ஏன் அவனுக்கு நான் ஒன்னும் அடிமை சாசனம் எழுதி குடுக்கலையே.”

“மேம் எனக்குத் தெரியும் மேம்..” என்றாள் அவளை நேரே பார்த்து குரலில் நிதானத்துடன்..

அந்த பார்வையும் குரலும் உள்ளே ஒரு குளிர் பரப்ப..

“என்ன தெரியும் உனக்கு..? சும்மா எதாவது ஒளறிட்டு இருக்காம போ..” என்று வெளியே சிடுசிடுத்தாள்..

“கூட்டதுல ஆயிரம் பேர் இருந்தாலும் அந்த ஒரு முகத்த மட்டுமே தேடுற அந்த கண்கள்.. மகா விஷ்ணுவ பார்த்த அடியார்கள்  மாதிரி முகத்துல அந்த தேஜஸ்.. உலகத்துலயே அவங்க ஒருத்தர்தான் இருக்கற மாதிரி பார்க்குற அந்த பார்வை.. அது எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும் மேம்..”

“என்ன உளறுற..?”

“நீங்க விக்ரம் சார பார்க்குற பார்வை.. அதை என்னைவிட நல்லா தெரிஞ்சவங்க வேற யாரும் இருக்க முடியாது…

நான் வசிய பார்த்த அதே பார்வை.. உங்ககிட்ட பார்த்தேன்.” என்றாள்.

“என்ன சினிமா கதை எழுதுறியா..?” என்றாள் கிண்டலாக.

“மேம் நீங்க விக்ரம் சாரை லவ் பண்றீங்க தானே..” என்று நேரடியாகவேக் கேட்டாள்.

“இங்க பாரு.. என்னோட பர்சனல் விஷயம் பேசுற அளவுக்கு உனக்கு இன்னும் நான் உரிமைதரலைன்னு நினைக்கறேன்..”

“மேம் உங்க பர்சனல் உங்களோட இருக்கற வரைக்கும் பிரச்சனை இல்லை அது கம்பெனிய பாதிக்கும் போது பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது இல்லையா..?” என்றாள் அன்று அவள் அதிதியிடம் சொன்ன அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி

அவளது புத்திசாலிதனத்தில் லேசாக சிரித்தவள்

“அதி நீ எழுதுற ஸ்கிரீன் ப்ளேக்கு நான் நடிக்க முடியாது.. நீ சொல்ற மாதிரி எதுவும் இல்லை..” என்றாள்

“மேம் பார்த்தா நம்பமுடியாட்டியும் நான் ஒன்னும் அவ்ளோ தத்தியில்லை.. விக்ரம் சாரும் உங்கள விரும்பறாருன்னு தான் நினைக்கறேன்..”என்றாள்

“அதிதி உனக்கு இதெல்லாம் விளையாட்டாக போயிடுச்சா.. உனக்கு ஃபேரி டேல்(fairy tale) லவ் அமைஞ்சதுன்னா அதே மாதிரிதான் மத்தவங்களுக்கும் இருக்கும்னு அவசியமில்லை..” என்றாள் கொஞ்சம் கண்டிப்புடன்..

“எனக்கு ஃபேரி டேல் லைவ்வா? அட ஏங்க மேம்.. நாங்களே ஒரு வீணாப்போன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல பிரிஞ்சி.. படாதபாடு பட்டு.. அஞ்சிவருஷம் கழிச்சி இப்பதான் மீட் பண்ணோம்.. நாங்க நல்லா பேசினத விட சண்டைப்போட்டதுதான் அதிகம்,இப்ப கூட சண்டைப்போட்டு ஒரு வாரமா பேசாமதான் இருக்கோம்.. இந்த லட்சணத்துல இது ஃபேரி டேல் லவ் ஸ்டோரின்னு சொல்றீங்க..” என்று குறைப்பட்டாள்.

“உங்க விஷயம் வேற.. எங்க விஷயம் வேற அதிதி..” என்றாள் பவித்ரா சோர்வுடன்..

“சிட்டுவேஷன் வேணா வேறயா இருக்கலாம் ஆனா ஃபீலிங்ஸ் எல்லாம் ஒன்னுதான் மேம்..”

“நீ நினைக்கற மாதிரி இது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்லை.. உனக்கு புரியாது..” என்றாள் பவித்ரா

“சரி சொல்லுங்க நான் புரிஞ்சிக்க ட்ரை பண்றேன்… அட்லீஸ்ட் யார்கிட்டயாவது உங்க மனசுல இருக்கற பாரத்த இறக்கி வைச்சிடுங்க மேம்.. அதுக்கு என்னைவிட சரியான ஆளு உங்களுக்குக் கிடைக்காது..”

“ஏன் அப்படி..?”

“ஏன்னா என்னோட ரகசியம் ஏற்கனவே உங்ககிட்ட மாட்டிகிட்டு இருக்கு.. அதனால உங்க ரகசியத்த வச்சி நான் ப்ளாக்மெயில் பண்ணக்கூட முடியாது.” என்றாள் அதிதி,

அதைக்கேட்டு லேசாக சிரித்தவள்..

“விக்ரம் என்ன விட ரெண்டுவயசு சின்னவன்..” என்றாள் மிகவும் சீரியஸான குரலில்

“ம்ம்..” கொட்டிவிட்டு அடுத்து அவள் சொல்வதற்காக காத்துக்கொண்டிருந்தவள் அவள் அதோடு நிறுத்திவிடவும்

“என்ன மேம் மேல சொல்லுங்க..”என்றாள் அதிதி.

“இன்னும் என்ன சொல்றது..? அவ்ளோதான்..” எனவும்

“அவ்ளோதானா..? சீரியஸா இதான் உங்க பிரச்சனையா..? மேம் விக்ரம் சார் இதெல்லாம் ஒரு மேட்டரா நினைப்பாருன்னு எனக்குத் தோணல…”

“உனக்கு விக்ரம தெரிஞ்சது அவ்ளோதான் நான் அவனோட டைப் இல்ல..

அவன் இதுக்குமுன்னாடி லவ் பண்ண ரெண்டு பேருமே அவனைவிட வயசுல சின்னவங்கதான்..” என்றாள்

“இப்படி யோசிச்சி பாருங்க.. ஒருவேள அது அவரோட டைப்பா இல்லாம கூட இருக்கலாம்.. அதனால தான் ரெண்டும் ப்ரேக்-அப் ஆகிடுச்சு.. அவருக்கு உங்கள மாதிரி மெச்சூரிட்டியோட அவர புரிஞ்சிகிட்டு, அவர பாத்துக்குற மாதிரி ஒரு பொண்ணுதான் வேணுமா இருக்கலாம்..” என்றாள்

“ப்ளீஸ் என்னோட மனசுல ஆசைய விதைக்காத..அதிதி.. நான் ஏற்கனவே நிறைய பட்டுட்டேன்..” என்றாள் சலிப்புடன்..

“மேம் முயற்சி பண்ணிப்பார்க்காமலே எப்படி மேம் கிவ் அப் பண்றீங்க.. நீங்க சொல்லிட்டா உங்க மனசும் லேசாகிடும் இல்லையா?”

“விக்ரம் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டான்னா அதுக்கப்புறம் அவன நான் எப்படி ஃபேஸ் பண்றது? என்னால தாங்க முடியாது..இப்ப இருக்கற நட்பும்போயிடும்” என்றாள் கவலையாக..

“இப்ப மட்டும் என்ன வாழுது..?விட்டுட்டு போகதானே போறீங்க.. போறதுக்கு முன்னாடி சொல்லிட்டா பின்னாடி ‘அய்யோ சொல்லாம போயிட்டோமே’ன்னு ரெக்ரெட்(regret) இல்லாமயாவது இருக்கலாம்.” என்று வாதாடினாள்..

“இல்ல என்னால முடியாது..” என்றாள் பவி தீர்மானமாக

“சரி மேம்.. நீங்க சொல்ல வேண்டாம் நானே சொல்றேன்..” என்றவளை

“வேண்டாம் அதிதி..” என்று அவசரமாக தடுத்தாள்

“ஏற்கனவே அவனுக்கு உன்மேல ஒரு ஈர்ப்பு இருக்குன்னு தோணுது..” என்றவளைக் குறுக்கிட்டு

“என்ன நீங்களும் இதையே சொல்றீங்க.. வசியும் இதைதான் சொல்றாரு..” என்று கடுப்பானாள் அதிதி.

“ஏய் அதனால தான் உங்களுக்குள்ள சண்டையா?” என்று பதறிப்போய் கேட்டாள் பவித்ரா.

“அதெல்லாம் இல்ல.. அது வேற பிரச்சனை..நாங்க பாத்துக்கறோம்..” என்றுவிட்டு

“இப்ப நீங்க லவ் பண்றத சொன்னாதானே உங்களுக்கு பிரச்சனை.. நான் அத சொல்லாம.. விக்ரம் சார் உங்களப்பத்தி என்ன நினைக்கறாருன்னு கேட்டு சொல்றேன்.. அப்புறம் அதுக்கு தகுந்த மாதிரி நீங்க முடிவு எடுங்க.. என்ன சொல்றீங்க..?” என்று ஆலோசனை வழங்கினாள்.

பவித்ராவின் முகம் கொஞ்சம் யோசனைக்காட்டவும்

“இதுல உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது..இதெல்லாம் எதுக்கு கேக்குறன்னு பாஸ் திட்டுனாலும் அது எனக்குதான் விழும்..”

என்றாள் அதிதி.

“எனக்காக நீ ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்கற?”

“இது உங்களுக்காக மட்டும் இல்ல.. விக்ரம் சாருக்காகவும் தான்.. அவரும் உங்கள லவ் பண்றாருன்னு என்னோட இன்ஸ்டிங்க்ட் சொல்லுது.. இல்லைன்னா நீங்க போறேன்னு சொன்னதும் அவரு இப்படி வேற ஆளா மாறி நிப்பாரா..?” என்று கேட்டாள்.

பவித்ரா அமைதியாக இருக்க அந்த மௌனத்தையே சம்மதமாக கொண்டு அதிதி களத்தில் இறங்கினாள்.

முதலில் வசீகரனிடம் விஷயத்தை சொல்லி என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கேட்கலாமா என்று யோசனை ஓடியது.

இந்த சாக்கில் அவனிடம் பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால் அதை ஏன் தவறவிடவேண்டும் என்று நினைத்து.. அவனுக்கு அழைத்தாள்..

வழக்கம் போல அவன் எடுக்கவில்லை..

அவள் முகம் வாடிப்போனது..

‘ரொம்பதான் பண்றான்..’ என்று திட்டியவள்..

நாகராஜுக்கு அழைத்தாள்..

“ஹலோ மேடம் சொல்லுங் மேடம்..” என்றான் அந்தப்பக்கம்

இவனிடம் என்ன சொல்லுவது என்று சட்டென்று யோசித்து..

“வசீகரன் சாருக்கு லைன் போகல.. கொஞ்சம் அர்ஜெண்டான விஷயம்.. அவரு இருந்தா கொஞ்சம் பேச சொல்ல முடியுமா..?” என்று நயமாகக் கேட்டாள்

“அய்யோ சார் இப்பதானுங் வெளிய போனாரு.”. என்றவன்..

பக்கென்று சிரிக்கவும்

‘இதுல சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?’  என்று நினைத்தவள்,

“ஏன் சிரிக்கிறீங்க..” என்று கேட்டுவிட்டாள்..

“இதுவே வேற ஒருத்தரா இருந்தா சொல்லமாட்டேனுங்க.. மேடம் சாரோட ஃப்ரண்டுங்கறதால சொல்றேன்..” என்று நீட்டி முழக்கவும்..

ஒன்றும் வேண்டாம் என்று வைத்துவிடலாமா என்று தோன்றியது..

ஆனால் அதற்குள் அவனே தொடர்ந்து பேசினான்.

“சார் பொண்ணு பாக்கறதுக்கு போயிருக்காருங்க..” என்றான் நமுட்டு சிரிப்புடன்..

“வாட்….!!” என்று அவள் அதிர்ந்து கேட்டதை அவளின் ஆவல் என்று கருதி அவன் மேலும் விளக்கினான்..

“இல்லங் மேடம் ரொம்ப நாளா இந்த பொண்ணுபாக்கற டாப்பிக் பெரிய ஐய்யாவும் சாரும் பேசிகிட்டுதான் இருக்காங்க..

நம்ம அசோசியேஷன் சேர்மேன் பொண்ணு அமெரிக்காவுல படிச்சிட்டு இப்பதானுங்க ஊருக்கு வந்திருக்கு.. அதான் இப்ப பொண்ணு பார்க்கறது வச்சிருக்காங்க.. இதெல்லாமே யாருக்கும் தெரியாத ரகசியமுங்க. நீங்களும் யாருகிட்டயும் சொல்லிக்காதீங்க..” என்று பேசிக்கொண்டே போனான் அந்த பக்கம் இருந்தவள் இதயம் நின்றுவிட்டதை அறியாமல்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!