Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-26

அத்தியாயம் – 26

“தெருவோரக் குழாயோ, அடைமழையோ… நிறைந்த பின் ஒரு துளியையும் ஏற்பதில்லை குடம். நிறைந்த மனதில் ததும்பி வழியும்.. காதல்”

பேராசிரியரின் சொற்கள் ஒவ்வொன்றும் ஆதிரையின் இதயத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. இத்தனை காலம் அவள் எதை ஒரு அலட்சியமாக, அல்லது மர்மமாகப் பார்த்தாளோ, அது ஒரு மாபெரும் தியாகத்தின் சிதைந்த பக்கங்கள் என்று இப்போது புரிந்தது. மித்ரன் ஒரு கல் நெஞ்சக்காரன் அல்ல.. அவன் ஒரு காயம் கண்ட இதயம்.

ஆதிரை விக்கித்து நின்றாள். பேராசிரியரின் கைகளைப் பற்றிக்கொண்டு அவள் தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள். ஒரு முதிர்ந்த மேதையின் கண்ணீர், ஒரு இளம் பெண்ணின் தேடலோடு சங்கமித்த தருணம் அது.



Advertisement

“அப்பா… என்னால தாங்க முடியலப்பா,” என்று ஆதிரை விம்மினாள். அவளது கண்கள் அருவியெனக் கொட்டின.

“அவர் ஒரு எரிமலையை உள்ள வச்சுட்டு வெளிய பனிப்பாறை மாதிரி நடிச்சிருக்காரு.”

ஆதிரை மெல்ல எழுந்து கண்கள் துடைத்துக் கொண்டாள். பேராசிரியரின் உடல்நிலை இப்போது மிக முக்கியம். அவர் உணர்ச்சிவசப்பட்டதில் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை மெல்ல நகர்த்தி, ஹாலின் நடுவே இருந்த ஜன்னல் அருகில் நிறுத்தினாள்.

Advertisement

அந்தச் சமையலறை நேர்த்தியாக இருந்தது. “இங்கே தானே ஒரு காலத்தில் சந்தியா தன் தந்தைக்காக சமைத்திருப்பாள்” என்று தோன்றியது. அந்த நினைவுகள் அந்த அறையின் சுவர்களில் ஒட்டியிருப்பதாக ஆதிரை உணர்ந்தாள். பால் கொதிக்கும் சத்தமும், இஞ்சியின் மணமும் ஆதிரைக்குச் சற்று ஆறுதல் அளித்தன. இரண்டு கோப்பைகளில் டீயை எடுத்துக் கொண்டு அவள் மீண்டும் ஹாலுக்கு வந்தாள்.

Advertisement

அவளும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவர் அருகில் அமர்ந்தாள். அந்த அமைதியான மாலைப் பொழுதில், டீயின் சூடு அவர்களின் கைகளுக்கும், உரையாடலின் ஆழம் அவர்களின் மனதிற்கும் இதமளித்தது.

ஆதிரை அங்கிருந்த மேஜை மீது இருந்த பழைய ஆல்பங்களை ஒவ்வொன்றாக எடுத்தாள். அது ஒரு காலப் பெட்டகத்தைப் போல இருந்தது.. அவங்க சிரிப்பை, அவங்க வாழ்ந்த வாழ்க்கையை இருவரும் கண் நிறையப் பார்த்தனர்.

“அப்பா… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் இந்த ரூமில் தங்கிட்டுமா? எனக்கு இந்த நினைவுகளோடவே இருக்கணும் போல இருக்கு.” 

Advertisement

அந்த ஆல்பங்கள், சந்தியா, லீ, மித்ரன்.. ப்ரபஸர் … அவங்க வாழ்ந்த வாழ்க்கை … அவங்க பேசின அந்த வார்த்தைகள்… எல்லாம் அங்கேயே இருப்பதாக  ஒரு உணர்வு.

ஆதிரை அந்த அறையின் தரையில் ஒரு மெல்லிய விரிப்பை விரித்துப் படுத்துக் கொண்டாள். மின்விளக்குகளை அணைத்துவிட்டு, ஜன்னல் வழியே தெரிந்த ஸ்டட் கார்ட் நகரின் விளக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருட்டில் நிலவொளியில் சந்தியாவின் முகம் மின்னியது. ஆதிரை மெல்லக் கண்களை மூடினாள். அன்று இரவு அவளுக்கு உறக்கம் வரவில்லை. ஆனால் ஒருவிதமான அமைதி அவளைச் சூழ்ந்தது. காற்றில் சந்தியாவின் வாசமும், லீயின் சிரிப்பும் கலந்திருப்பதாக அவள் கற்பனை செய்து கொண்டாள்.

மாநாட்டின் நான்காம் நாள் – இறுதி நாள்.

சான் பிரான்சிஸ்கோவின் நினைவலைகளிலிருந்து விடுபட்டு, ஆதிரை இப்போது ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தின் பிரம்மாண்டமான ‘மகிழ் அரங்கம்’ (Aula) உள்ளே நுழைந்தாள்.

கடந்த மூன்று நாட்களாகப் பேராசிரியருடன் அவள் பகிர்ந்துகொண்ட அந்த ரணமான உண்மைகள், அவளுக்குள் ஒரு முதிர்ச்சியையும், அமைதியையும் தந்திருந்தன.

அவள் அணிந்திருந்த அடர் நீல நிறப் புடவை, அவளது முகத்தில் இருந்த அந்தத் தீர்க்கமான அமைதிக்கு மேலும் மெருகூட்டியது. பேராசிரியர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவளுக்குத் தூரத்தில் இருந்து கட்டைவிரல் உயர்த்தி வாழ்த்துச் சொன்னார்.

மாநாட்டின் இறுதி அமர்வில், உலகின் தலைசிறந்த 46 ஆய்வாளர்களின் கட்டுரைகளில் இருந்து மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்தது.

அரங்கம் அமைதியானது. நடுவர் மேடையேறினார்.

“இந்த ஆண்டுக்கான ‘சிறந்த ஆய்வாளர்’ விருது (Best Presenter Award), நவீனத் தொழில்நுட்பத்தையும் மண்ணின் ஆன்மாவையும் ஒன்றாக இணைத்துப் பார்த்த ஒருவருக்குச் செல்கிறது. அந்த ஆய்வு, ஒரு நிலத்தின் கதையை மட்டுமல்ல, அந்த மக்களின் வாழ்வியலையும் பேசுகிறது. அந்த வெற்றியாளர்… இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஆதிரை மித்ரன்!”

அரங்கமே அதிரும்படி கைதட்டல் ஒலித்தது. ஆதிரை திகைத்து நின்றாள். அவள் மெல்ல மேடையேறினாள். அவளது கால்கள் நடுங்கின.

விருதை வழங்கிய மூத்த பேராசிரியர் அவளது கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ச்சியுடன் சொன்னார், “ஆதிரை, நீங்கள் விளக்கிய அந்த ‘முப்பரிமாண நோக்கு’ வியக்கத்தக்கது. குறிப்பாக, மண்ணின் தாகத்தையும், மூச்சுத் திணறலையும் சென்சார்கள் மூலம் மொழிபெயர்த்த விதம்… அது தொழில்நுட்பம் அல்ல, அது மனிதாபிமான அறிவியல் (Humanitarian Science)!”

மைக் முன் நின்ற ஆதிரை பேசத் தொடங்கினாள் ..“இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமானதல்ல. என் மண்ணின் ஈரத்தை நான் இங்கு உள்ளவர்களிலும் உணர்ந்தேன். அறிவு என்பது புத்தகங்களில் மட்டும் இல்லை, அது நாம் நேசிக்கும் மனிதர்களின் நினைவுகளிலும் இருக்கிறது. இந்த அவார்டு எனக்கு மட்டும் சொந்தமானது இல்லை, என் பேராசிரியர் முனைவர் பொற்சோழன், என் டீம் மெம்பர்ஸ்கும், எனக்கு இந்த வாய்ப்பை நோக்கி என்னைக்கரம் பிடித்து வழிநடத்திய என் கணவர் மித்ரன் அவர்களுக்கும், இதைச் சமர்ப்பிக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக இது என் ஊர் கரிசல் மண்ணுக்கும், அங்க வீசும் உப்புக் காற்றுக்கும் சொந்தமானது.”

அரங்கத்தின் ஒரு மூலையில் சோபி தனது அலைபேசியில் அந்த வினாடிகளை மிக நுணுக்கமாகப் பதிவு செய்து கொண்டிருந்தாள்.

அந்த நேரலைத் தரவுகள் அப்படியே கடல்தாண்டி, கண்டம்தாண்டி இந்தியாவின் ஒரு மூலையில் இருந்த மித்ரனின் அலைபேசியைச் சென்றடைந்தன. அவனது கண்கள் அலைபேசித் திரையில் உறைந்திருந்தன.

மித்ரனின் உடல் மட்டும்தான் அங்கே இருந்தது. ஆனால் அவனது உயிர், அவனது எண்ணம், அவனது ஒட்டுமொத்த உணர்வும் ஆதிரையின் அருகில், அந்த மேடையில் அவளது நிழலாகவே நின்றிருந்தது.

அவள் மேடையை விட்டு இறங்கியபோது, ஹெர்மனும் சோபியும் ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டார்கள்.

அந்த மாலைப்பொழுது ஸ்டுட்கார்ட் நகரின் வான்பரப்பில் ஒரு மெல்லிய ஊதா நிறத்தைத் தெளித்திருந்தது. மாநாட்டின் பரபரப்புகள் அடங்கி, பேராசிரியர், ஹெர்மன் மற்றும் சோபி மூவரும் ஆதிரையுடன் இல்லம் திரும்பினர். அனைவரது மனதிலும் ஒரு மாபெரும் நிறைவு.

ஆதிரை அன்று பேராசிரியருடன் நீண்ட நேரம் பேசினாள். அது வெறும் உரையாடல் அல்ல… எதிர்காலத்தைப் பற்றிய சில தீர்க்கமான முடிவுகள்! 

பேராசிரியர் அவளது கைகளைப் பற்றிக்கொண்டார். அந்த முதிர்ந்த பேராசிரியரின் கைகளில் ஒரு பெரிய பெட்டி இருந்தது.

“ஆதிரை… இது கவினுக்காக நான் சேர்த்து வச்ச பரிசுகள். உன் பொண்ணு கண்மணி குட்டிக்கும் கிப்ட்ஸ் இருக்கு…அப்புறம்… இதில சந்தியாவோட சில ஞாபகங்கள் மித்ரனுக்கானது.  இதைப் பத்திரமா கொண்டு போம்மா.”

அவள் பேராசிரியரின் கால்களில் விழுந்து வணங்கினாள்.

அந்த தந்தை, தனது கைகளை ஆதிரையின் தலை மீது வைத்தார். “இனி நீ தான்மா எல்லாம்… சந்தியாவோட இடத்துல உன்னைத்தான் நான் பார்க்குறேன். போயிட்டு வா…”

அந்த நெகிழ்ச்சியான விடைபெறுதலுக்குப் பிறகு, ஆதிரை ஹெர்மன் மற்றும் சோபியுடன் அவர்கள் இல்லத்திற்கு வந்தாள். அங்கு அவளது உடைமைகள் அனைத்தும் நேர்த்தியாகப் பேக் செய்யப்பட்டுத் தயாராக இருந்தன.

“ஆதிரை! இப்படி சோகமா இருந்தா நாங்க விடமாட்டோம். இன்னும் சில மணிநேரம் நீ எங்க கூடத் தான் இருக்கணும். வா… நாங்க உன்னை ஸ்டுட்கார்ட்டின் ‘மோஸ்ட் ஃபேவரைட்’ டூரிஸ்ட் ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போறோம்!” என்றாள் சோபி கண்சிமிட்டி.

ஹெர்மன் தனது காரின் சாவியைச் சுழற்றிக்கொண்டே, “ஆமாம் ஆதிரை, ஜெர்மனிக்கு வந்துட்டு இங்க இருக்கிற புகழ்பெற்ற இடத்தைப் பார்க்காம போனா அது இந்த மண்ணுக்குச் செய்யுற துரோகம். கிளம்பு!” என்று அவளை அன்போடு கட்டாயப்படுத்தினான்.

அவர்கள் ஆதிரையை அழைத்துச் சென்றது ‘ஸ்டுட்கார்ட் டிவி டவர்’ (Stuttgart TV Tower – Fernsehturm) மற்றும் அதன் அருகிலுள்ள பசுமை படர்ந்த மலைப்பகுதிகளுக்கு.

அந்தப் பிரம்மாண்டமான கோபுரத்தின் உச்சியில் நின்றபோது, ஒட்டுமொத்த ஸ்டுட்கார்ட் நகரமும் ஆதிரையின் காலடியில் விரிந்து கிடந்தது. மாலை நேரத்துச் சூரியன் மெல்ல மறையத் தொடங்க, நகரின் விளக்குகள் ஒவ்வொன்றாக மின்னத் தொடங்கின..

அந்த உச்சியில் இருந்து, ஸ்டுட்கார்ட் நகரத்தின் அழகை மெய்மறந்து பார்த்தபடி மூவரும் நின்றனர். சில்லென்ற காற்று முகத்தில் மோத, அந்த ரம்மியமான மௌனத்தை ரசித்தபடி நின்றவர்கள், பின் மெல்லப் பேசத் துவங்கினர்.

“இங்கிருந்து பார்த்தால் எல்லாமே எவ்வளவு அழகாகத் தெரிகிறது இல்லையா?” என்று ஆதிரை வியப்புடன் கேட்டாள். பேச்சு மெல்ல மெல்ல குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பற்றித் திரும்பியது. “சோபி, ஹெர்மன்… நீங்க ரெண்டு பேரும் ஒருமுறை இந்தியா வரணும், ஒருவேளை இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம், உங்க குழந்தைகளோடவே நீங்க வரலாம்”… என்று ஆதிரை  ஆசையாகக் கேட்டாள்.

அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது. சோபியும் ஹெர்மனும் ஒருவரையொருவர் ஆழமாகப் பார்த்துக்கொண்டனர். அந்த மௌனம் ஆதிரையைச் சற்றுத் தடுமாறச் செய்தது.

மெல்லத் தலைநிமிர்ந்த சோபி, ஒரு மெல்லிய புன்னகையுடன் ஆனால் கம்மிய குரலில் சொன்னாள், “ஆதிரை… என்னால ஒருபோதும் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாது (I can’t bear a child). எனக்கு இருபது வயதிலேயே எண்டோமெட்ரியோசிஸ்  என்ற பாதிப்பு இருந்தது. அது காலப்போக்கில் தீவிரமடைந்து, கருப்பையில் பல சிக்கல்களை உருவாக்கியது. பல சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. இறுதியில், ஒரு பெரிய அறுவை சிகிச்சை மூலம் எனது கருப்பையை அகற்ற வேண்டிய சூழல் (Hysterectomy) ஏற்பட்டது. அந்த நிமிடமே, ஒரு தாயாகும் வாய்ப்பு எனக்கு நிரந்தரமாகப் பறிபோய்விட்டது.”

ஆதிரையின் இதயம் விம்முவது அவளுக்கே கேட்டது. ஒரு பெண்ணாக அந்த வலியின் ஆழம் அவளுக்குப் புரிந்தது.

ஆதிரை என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அந்த நொடியில், பக்கத்தில் இருந்த ஹெர்மன் குறுக்கிட்டான். அவன் சோபியின் தோளை மிக நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.

” ஷீ இஸ் மை சைல்ட் . இவளே என் குழந்தை . எனக்குத் தாய், தோழி, மனைவி, என் குழந்தை.. எல்லாம்! நான் அவளோட குழந்தை. எங்க காதலுக்கு நடுவுல ஒரு மூன்றாவது உயிர் வரணும்னு எங்களுக்கு அவசியமே இல்லை. எங்க ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கிற இந்த அன்பே ஒரு முழுமையான உலகம்,” என்றான் ஹெர்மன்

ஆதிரை அங்கேயே உறைந்து நின்றாள்.

இதுவரை ஹெர்மனைப் பார்க்கும்போது, ஒரு அழகான தோற்றம் கொண்ட, எப்போதும் சிரித்த முகத்துடன் சோபியைச் சுற்றிச் சுற்றி வரும் ஒரு ‘பீம்பாய்’ போலத்தான் அவளுக்குத் தோன்றியிருந்தது. ஆனால், அவனது அந்த ஒற்றை வாக்கியம் அவனது பிம்பத்தையே ஆதிரையின் மனதில் தலைகீழாக மாற்றிவிட்டது. எதைக் குறை என்று உலகம் சொல்லுமோ, அதையே தன் அன்பால் ஒரு வரமாக மாற்றிய ஹெர்மனின் அந்தப் பெரும் அன்பைக் கண்டு அவள் வியந்து போனாள்.

“காதல் என்பது வெறும் கவர்ச்சியோ அல்லது கொடுக்கல் வாங்கலோ கிடையாது… ஒருவரை அவரது குறைகளோடே முழுமையாக ஏற்றுக்கொள்வதுதான்”.

ஆதிரையின் மனம் இப்போது மித்ரனை இன்னும் ஆழமாகத் தேடியது.

ஆதிரை தன் கைகளை விரித்துக் குளிர்ந்த காற்றை அணைத்துக் கொண்டாள். கீழே ஆயிரக்கணக்கான விளக்குகள் மின்னின. அவை ஒவ்வொன்றும் ஒரு கதையைச் சொல்லின.

காதல் எவ்வளவு உயர்வானது என்று அந்தக் கோபுர உச்சியில் நின்று பார்த்தாள்.

“நற்காதல் ஒருவரை கோபுர உச்சிக்குத்தான் கூட்டிப் போகிறது. உயரத்திற்குச் செல்லச் செல்ல மூச்சுக்காற்று குறையலாம், ஆனால் பார்வை தெளிவாகிறது.எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் ஒரு கழுகின் பார்வையை அது தருகிறது.”

எல்லாவற்றிற்கும் மேலாக… காதல் நிலைத்திருக்கிறது… காதல் வெல்கிறது ….love stays…love wins!

இந்தக் கோபுரத்தின் உச்சியில் அவள் கண்டது ஸ்டுட்கார்ட் நகரை மட்டுமல்ல, தன் இதயத்தின் ஆழத்தில் புதைந்திருந்த மித்ரனின் மீதான அந்த மாறாத காதலை!

ஆதிரையின் இதயம் ஒரு இயந்திரத்தைப் போலத் துடிக்கத் தொடங்கியது.

‘இனி ஒரு நிமிடம் கூடக் காத்திருக்க முடியாது’ , Can’t wait any more… என்கிற அந்த உணர்வு அவளைப் பிழிந்தெடுத்தது.

பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து, விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறும்போது ஆதிரையின் கைகள் லேசாக நடுங்கின. விமானம் மெல்ல ஓடுதளத்தில் நகரத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!