Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 24

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 24

கங்கா,உங்க அப்பா உன்னை வெட்டிருவேனு உங்க அம்மாகிட்ட சொல்லிருக்காங்க.
இப்போ அருளையும் கூட சேர்ந்து வெட்ட போறாங்க.. அப்பறோம் உங்க அப்பா காலம் ஃபுல்லா ஜெயில்ல தான் இருப்பாரு.

அதுவே நீ அருளை கல்யாணம் செஞ்சுட்டு அவரு முன்னாடி போனா, உங்க ரெண்டு பேரையும் சந்தோசமா ஆசிர்வாதம் பண்ணுவாரு.முடிவு உன் கையிலே தான் என்றார் அருளின் மாமா.

என்ன முடிவெடுப்பாள்? அப்பா ஜெயிலுக்கு போக கூடாது. திருமணம் செய்யவும் விருப்பமில்லை.அதிகாலை இரண்டு மணி வீட்டிற்கு எப்படி போவது.இவர்கள் நிச்சயமாக அப்பாவிடம் எந்த உண்மையையும் சொல்ல போவது இல்லை.கங்காவிற்கு உலகமே இருண்டு போனது.



Advertisement

இவளுக்கு பின் தங்கை உள்ளாளே. இன்று இவள் எடுக்கப்போகும் முடிவில்தான் மொத்த குடும்பத்தின் எதிர்காலமும் உள்ளது.

அவர்களை விட்டு விலகி,அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். நினைவுகளை தன் எண்ணங்களில் படற விட்டாள்.அப்போது கங்கா எட்டாவது படித்துக் கொண்டிருக்கிறாள்.

அது தீபாவளியோ, பொங்கலோ சரியாக நினைவில் இல்லை. இரவு எட்டு மணி இருக்கும்.லட்சுமி இருவருக்கும் சிக்கன் கிரேவியோடு ஆப்பம் பரிமாற, டீவியை பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர்.

Advertisement

சாப்பிட்டு முடித்தவுடன் அம்மா எனக்கு பழம் வேண்டும் என்றாள் கங்கா.லட்சுமி கடைக்கு பழம் வாங்க சென்றவர்,மூச்சு வாங்க உள்ளே வந்தார்.

Advertisement

கங்கா ,” அப்பா யாரைவோ அடிச்சுட்டு இருக்கு வா”

அவள் வேகமாக வெளியே வர, சிவராமன் தண்ணீர் காய வைக்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு குவியலில் இருந்து ஒரு நீளமான கட்டையை எடுத்துக் கொண்டு வெளியே போவதை பார்த்தாள்.

‘அப்பா அப்பா ‘என கத்திக் கொண்டே அவரை பிடிக்க போனாள்.அதற்குள் சிவராமன் அந்த கட்டையால் ஓங்கி எதிரில் இருபவனின் தலையில் அடிக்க, படாரென சத்தம்!அவன் ‘ஐயோ!அம்மா’ என தலையில் கைவைத்து ஓலமிட்டான்.

Advertisement

இந்த காட்சியை பார்த்த கங்காவிற்கு உடலெல்லாம் நடுக்கம்.

தடுக்க வந்தவர்களுக்கும் அடி விழுந்தது. இன்னமும் சிவராமனுக்கு கோபம் தீரவில்லை.அவனது கையிலும், காலிலும் அடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த கனமான கட்டை கூட இரண்டாக ஒடிந்து விட்டது.

அடிவாங்கியவன் கேபிள் கனெக்ஷன் கொடுக்க வருபவன். அங்குள்ள வீடுகளுக்கு செல்லும் கனெக்க்ஷன்களுக்கான செட்டாப் பாக்ஸ் சிவராமன் வீட்டில் இருந்தது.

ஒரு வீட்டில் திடீரென கனெக்ஷன் கட் ஆகி விட்டதாக தகவல் செல்ல,அந்த ஆப்ரேட்டர் சரி செய்ய வந்துள்ளான்.

சிவராமன் காற்று வாங்க வெளியே வந்து நிற்க,அந்த ஆப்ரேட்டர் ‘ஊமைச்சி வீடு’ இதுதானே? என்றான்.

சிவராமனுக்கு புரிந்து விட்டது.அவன் தன் தாயின் ஊனத்தை அடையாளப்படுத்தி கேட்கிறான் என.. அது என்ன ‘ஊமைச்சி வீடு’ஏன் எங்க அம்மாக்கு பேர் இல்லையா?

ஊமைய ஊமைனுதானே சொல்லனும்..

சிவராமனுக்கு கோபம் தலைக்கேற வெளுத்து விட்டார்.இனிமே என் மண்டயே உடைச்ச சிவராமன் வீடு இதுன்னு ஞாபகம் வெச்சுக்கோ என்றார்.

இந்த காட்சிகளை பார்த்த கெளசிக்கு கை,கால் எல்லாம் ஒரே நடுக்கம். அவளை உணர்ந்த லட்சுமி தன் வீட்டிற்கு சென்று ஆட்களை அழைத்து வர முடிவெடுத்தார்.

கங்கா நீயும் வா, அப்புச்சி வீட்டுக்கு போய் யாராச்சு கூட்டிட்டு வரலாம் -லட்சுமி

நான் வரலம்மா, நான் அப்பா கூட இருந்துக்கறே என மறுத்து விட்டாள்.

சிவராமன் ஜாதி மல்லி மரத்தின் கீழே ஒரு சேரை போட்டு,இடது கையை,இடது காலில் மீது முட்டு கொடுத்து அமர்ந்து கொண்டார். கங்கா வாசல் படியில் அமர,பாப்பம்மாள் இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

இரவு பத்து மணி தங்கள் தேவைக்கு பறித்தது போக மீதமுள்ள பூக்களை செடியில் விட்டு விடுவர்.அந்த பூக்கள் ஒவ்வொன்றாக மூவர் மீதும் விழுந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் கதவு தட்டும் சத்தம். அடிபட்ட பாம்பு ஊரில் தன்னை போலவே விஷம் கக்கும் நாலைந்து பாம்பை பிடித்து வந்தது.

சிவராமன் அரிவாளை எடுக்க, கங்காவும், பாப்பம்மாளும் தங்களால் ஆன முழு பலத்தையும் கொண்டு அவரை தடுக்க, முடியவில்லை. இருந்தும் விடாமல் எப்படியோ வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டு போட்டனர் இருவரும்.

நடந்த தள்ளுமுள்ளுவில் அரிவாள் கீழே விழுந்திருக்க கங்கா அதை எடுத்து ஆட்டாங்கல் பின்புறம் மறைத்து வைத்தாள்.

வெளியே கேபிள் ஆப்ரேட்டர்கள் கதவை உடைக்கும் சத்தம்..

‘கங்கா கதவை திற என’ உள்ளே இருந்து சிவராமனின் சத்தம்..

இல்லப்பா நான் திறக்க மாட்டே..

அவர்கள் ஆக்ரோசமாக கதவை உடைக்கும் சத்தம் உள்ளே மாட்டி இருக்கும் சிவராமனுக்கும் நன்றாகவே கேட்டது.

இதற்கு மேல் வேலைக்கு ஆகாது என சிவராமன் சுத்தியலை எடுத்து தாழ்பாளை உடைக்க ஆரம்பித்தார்.

வெளியே அவர்கள் உடைக்க,உள்ளே சிவராமன் உடைக்க, கங்காவும் பாப்பம்மாளும் ஜாதிமல்லி மரத்தின் அடியில்…

நல்ல வேளையாக சிவராமனே முதலில் கதவை உடைத்து விட்டார்..

வேண்டாம்ப்பா.. வெளியே போகாதே என கங்கா கெஞ்சினாள்.

அவள் கெஞ்சலை எல்லாம் காதில் வாங்க வில்லை.அவளையும் பாப்பம்மாளையும் அடுத்த வீட்டில் உள்ளே தள்ளி தாழ்ப்பாள் போட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.

வெளியே கைகலப்பு நன்றாகவே கேட்டது. பாப்பம்மாள் அவளது சக்திக்கு மீறி ‘சிவ்வரா’ என கூக்குரலிட்டார்.

அப்பா அப்பா! என தொண்டை தண்ணீ வற்ற கத்தியவள் அரை மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.

சிறிது நேரம் தன்னை சுற்றி அனைத்தும் இருட்டாக இருக்க, யாரோ வந்து தண்ணீர் குடிக்க தருவதை உணர்ந்து மெல்ல விழித்தாள்.

லட்சுமியின் அண்ணன் அருணாச்சலம் கங்காவை எழுப்பி வீட்டின் உள்ளே கூட்டிச் சென்றார்.இயல்பு நிலைக்கு திரும்பியவள் சிவராமனை தேட, நல்ல வேளை அவருக்கு ஏதும் ஆகவில்லை.

ஆனால் கேபிள் ஆப்ரேட்டர்களில் சிலருக்கு கைகளிலும் கால்களிலும் சிறு சிறு ரத்தக் காயம்.முதலில் அடிவாங்கியவன் மட்டும் கவலைக்கிடமான நிலையில் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப் பட்டிருப்பதாக தகவல்.

அருணாச்சலம் பீரோ உள்ளில் இருந்து பதினைந்தாயிரம் பணத்தை எடுத்து எண்ணி, சிவராமனை ஒருமுறை சரிபார்க்க சொன்னார். பின் அந்த பணத்தை ஆபரேட்டர்களிடம் கொடுத்து இனி எந்த வம்பு தும்பிற்கும் இந்த பக்கம் வரக் கூடாது என பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

சிவராமன் தன் வீட்டின் உள்ளே இருந்த செட்டாப் பாக்ஸ்களை கொத்தாக இழுத்து நடு ரோட்டில் கொண்டு போய் எறிந்து விட்டு வந்தார்.

இந்த நிகழ்வுகளை இன்று நினைத்தாலும் கங்காவின் உள்ளூர ஒரு நடுக்கம் ஏற்படும். இந்த அருள் குடும்பத்தையும் அவர்களின் சூழ்ச்சியையும் சிவராமனிடம் சொன்னால் ஒரு நிமிடம் ஆகாது. அனைவரையும் துவம்சம் செய்து விடுவார்.ஆனால் அதன் பின் நடக்கும் விசயங்களை நினைத்தால் தலை சுற்றுவது போல இருந்தது கங்காவிற்கு.

இவள் நினைப்பது போல் ஏதாவது
தவறாக நடந்துவிட்டால்,தன் குடும்பத்தின் நிலை. தனக்கு பின் இன்னொருவள் உள்ளாளே அவளின் எதிர்காலம் இதையெல்லாம் நினைத்து குழம்பி இதோ முடிவெடுத்து விட்டாள். அதுவும் ஒரு கோழைத்தனமான முடிவு. ஆனால் இந்த முடிவை எடுப்பதற்குள் அவளுள்தான் எத்தனை போராட்டங்கள்.

சரி நான் அருளை கல்யாணம் செய்துகிறேன்.அவர்களுக்கு ஆனந்தம். உடனே கார் வரவழைக்கப்பட்டது. சேலத்தை அடுத்த ஒரு குக்கிராமம் தான் அருளின் ஊர்.எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாத ஊர்.சில தூரங்களுக்கு முன்பே தார் ரோடு முடிவடைந்து ,மண் ரோடு மட்டுமே உள்ள வளர்ச்சியடையாத கிராமம்.

காலையில் வழக்கம் போல பள்ளி சென்றவள், இப்படிப்பட்ட ஒரு நிலையை எண்ண வில்லை.கட்டிய புடவை,ஹேண்ட் பேக்,அதன் உள்ளே லன்ச் பாக்ஸ்,வாட்டர் பாட்டில்..இதோடு மட்டும் அவள் சென்றிருந்தாள் கூட அவளை விட்டு இருப்பர்.கலுத்தில் மின்னிய இரண்டு பவுன் ஜெயின் அவர்களின் கண்ணை மறைத்தது.

விடியற் காலை அருள் ஏதோ சாதித்தது போல இந்த விசயத்தை ஊர் முழுவதும் பரப்பி விட, இவளை காண எல்லோரும் வந்தனர்.

இதெல்லாம் கங்காவிற்கு சுத்தமாக பிடிக்க வில்லை. சுவற்றோடு ஒட்டி அமர்ந்து கொண்டாள். அருளின் பெரியம்மா என ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

உங்க வீட்டுல எத்தனை புள்ளைங்க?

இரண்டு பேருங்க

நீதான் மூத்தவளா?

ஆமாங்க

உங்க அப்பா என்ன வேலை?

ரீடு கடை வெச்சிருக்காரு (அந்த மேதாவிக்கு அது என்னவென புரியவில்லை.)

சொந்த வீடா? வாடகை வீடா?

சொந்த வீடுங்க

ஓட்டு வீடா ?மாடி வீடா ?

ஓட்டு வீடுங்க

வித்தா எவ்வளவு தேறும்?

அதெல்லா எனக்கு தெரியாதுங்க.. அப்பாக்குதான் தெரியும்.அதுமட்டுமல்ல விக்கறே ஐடியா எல்லா இல்லைங்க ..

ஒஹோ.. இதெல்லா கேட்டு தெரிஞ்சு வெச்சுக்க மாட்டே.. என்ன புள்ளையோ. அது சரி .எத்தனை பவுன் சேத்திருக்காரு உங்க அப்பா?

பதினைஞ்சு பவுன்

அப்பறோம் ஏன் இந்த ரெண்டை மட்டும் கழுத்துல போட்டுட்டு வந்துருக்கே? எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடி வந்துருக்கலாம்ல

இல்லைங்க நான் இந்த ரெண்டு பவுனையும் எங்க அப்பா கிட்டையே கொடுத்துருவே..

அட கிறுக்கு புள்ளே! உனக்கு என்ன பைத்தியமா இதையும் கொண்டு போய் கொடுக்கறேங்கற..
மிச்சமிருக்கற நகையும் வாங்க பாரு.எங்காது உன் தங்கச்சிக்கு உங்க அப்பா கொடுக்கப் போறாரு.

இந்த பேச்சு எதுவும் கங்காவிற்கு சுத்தமாக பிடிக்க வில்லை. எழுந்து வெளியே வந்து விட்டாள்.

சிறிது நேரத்தில் அருள் வந்தான்.

கங்கா! என தயங்கினான்.

என்ன ?சொல்லுங்க …

நீ இந்த ரெண்டு பவுன் ஜெயினை உங்க அப்பாகிட்ட தரேனு சொன்னியாமே

ஆமாங்க. சொன்னே..இதை உங்களுக்கு யாரு சொன்னா?

எங்க அப்பா…

வேண்டா கங்கா. அதே கொடுக்காதே. நீ இங்க வரும்போது எதுமே கொண்டு வரலேனு ஒரு பேச்சு எதிர் காலத்துல வரக் கூடாது.அதனால அந்த ரெண்டு பவுனே நாம்மளே வெச்சுக்கலாம்.

சரிங்க என பேச்சை முடித்து விட்டாள்.

அங்கே சிவராமன் வீட்டில்….. உலகத்திலேயே மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் எதுனா தன்னை கண்ணை போல,தேவதை போல பார்த்து பார்த்து வளர்த்து ஆளாக்கிய அப்பாவை ஏமாற்றிவிட்டு,அவமான படுகுழியில் தள்ளி விட்டு,சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு மகள்கள் ஓடிப் போவதுதான்.அந்த துரோகத்தை கங்கா சிவராமனுக்கு கொடுத்தாள். மற்ற எல்லா துரோகத்தை விடவும் உச்சம் இதுதான்.

சிவராமன் இரவு தூங்க வில்லை. யாரிடமும் எதுவும் பேச வில்லை. நடந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.விடிந்ததும் கலாவிற்கு ஃபோன் அடித்து நடந்ததை சொல்ல…

மொத்த குடும்பமும் பதறியடித்து வந்து சேர்ந்தது.நம்ம கங்கா வா இப்படி?என நம்பிக்கை இல்லாமல் கேட்டனர்.

சிவராமன் கங்காவிற்கு எடுத்த நகைகளை எல்லாம் எடுத்து காட்டி அழுது விட்டார்.தன் தாயின் இறப்பிற்கு அழாதவர். தன் மொத்த உழைப்பும் வீண் போன போது அழாதவர்.இன்று கங்காவிற்காக அழ… பழனியம்மாளிற்கும் மனம் கேட்காது அழுதுவிட்டார்.

மாமா நாம போய் கங்காகிட்டே பேசி கூட்டிட்டு வரலாம் -கலா

வேண்டா கலா. கங்காக்கு அந்த வாழ்க்கை புடிச்சு இருந்தா வாழட்டும் நான் குறுக்க நிக்கல என தன் முடிவை சொல்லி விட்டார்.

யாரும் மேற்கொண்டு எதுவும் பேச வில்லை. ஆனால் ராதா விற்கு மனம் கேட்க வில்லை. யாருக்கும் தெரியாமல் தன் மகனை அழைத்துக் கொண்டு கங்காவை காண சென்று விட்டார்.

அங்கிருப்பவர்களுக்கு சிவராமன் எல்லாம் தேவையில்லை.கங்கா மட்டும் உண்மையை கூறினால் போதும், ராதாவே போதும் சண்டையிட்டு தன் மகளை அழைத்து வந்து விடுவார்.

–தலைவன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!