Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-6

அத்தியாயம் – 6

ஆசைகளின் தோரணங்களில்… கனவுகள் களைகட்டும்…
மனவீதிகளில் தேரோட்டும்.. ஒரு திருவிழாப் போல …காதல்”

மதுரை நகரம் அந்த நாளில் தெய்வீக மணவிழாவின் ஒளியில் மிதந்துகொண்டிருந்தது, மீனாட்சி திருக்கல்யாண தேரோட்ட நாள்.



Advertisement

சித்திரை வீதிகள், குறிப்பாக மாசி வீதிகளைச் சுற்றிய பகுதிகள், முழுவதும் வண்ணக் கொடிகள், தோரணங்கள், பூமாலைகள் கொண்டு அலங்கரிக்கப்படும். மல்லிகை, சம்பங்கி, ரோஜா போன்ற மலர்களின் வாசம் காற்றில் கலந்திருந்து, நகரம் முழுவதும் ஒரு இனிய மணத்தை பரப்பும்.. சித்திரை வீதிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து, ஒரு அடியெடுத்து வைக்க கூட இடமில்லாத அளவுக்கு அலைகடலாக மாறும். அதே சமயம் அந்த நிறைவு ஒரு சுமையாக இல்லாமல், பக்தியின் உயிரோட்டமாக உணரப்படும்

அன்றும் மதுரை அப்படித்தான் இருந்தது…
நிறைந்து, ஒளிர்ந்து, பக்தியால் உயிரோடு! மேலே பறக்கும் கொடிகள், காற்றில் கலந்த பூமாலையின் வாசம், சங்கு முழக்கத்தின் ஒலி ..எல்லாம் சேர்ந்து நகரத்தை ஒரு தெய்வீகத் தாளத்தில் ஆடவைத்தது போல இருந்தது.

அலங்கரிக்கப்பட்ட பெரிய மரத் தேர்கள் மெதுவாக நகரும் போது, அதன் சக்கரங்கள் தரையைத் தொடும் ஒவ்வொரு நொடியும் ஒரு புனித ஓசையாக ஒலிக்க “மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்க!” என்ற முழக்கங்கள் வானத்தைத் தாண்டி ஒலித்து, நகரத்தின் ஒவ்வொரு மூலையையும் நிரப்பியது

Advertisement

மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருமணத்தின் புனித நினைவாக நடைபெறும் இந்த தேரோட்டம், மதுரை மக்களின் வாழ்வோடு கலந்த ஒரு உயிர் கொண்ட பாரம்பரியம். மக்கள் தங்கள் கை கூப்பல்களிலும், கண்களில் கலங்கும் பக்தியிலும் அந்த தெய்வீக மணவிழாவை மீண்டும் வாழ்ந்தனர். குழந்தைகள் தோள்களில் அமர்ந்து தேரைப் பார்த்தனர்; மூத்தவர்கள் கண்ணீரோடு “இது நம்ம தெய்வம்” என்று முணுமுணுத்தனர். ஒவ்வொரு முகத்திலும் ஒரு நம்பிக்கை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் பக்தியின் நதி போல.

Advertisement

மாசி வீதியில் தான் மித்ரனின் ஆடிட்டர் பெரியப்பாவின் வீடும் இருந்தது. உயரமான மாடி வீடு ..சாமி தேரோட்டத்தை மிக அழகாக பார்க்க சிறந்த இடம். மித்ரனுக்கு அவனுடைய தாயின் அந்த நம்பிக்கை மிகவும் ஆழமாக பதிந்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வரும்போதும், பையன், மருமகள், பேரப்பிள்ளை என வீட்டிற்கு அழைத்து வந்து, “சாமியைப் பார்க்கணும்” என்ற அவளின் உறுதியான எண்ணம் ஒரு வழக்கமாகவே மாறியிருந்தது.

ஆதிரையை முதன்முறையாக சாமி பார்க்க கூட்டி வந்த அந்த நாள்… அவனுக்குள் இன்னும் உயிரோடிருந்தது. கூட்டத்தின் பரபரப்பில் அவள் சிறிய கையைப் பிடித்தபடி அவன் நடந்த அந்த நொடி,. “இது தான் நம்ம மதுரை… இது தான் நம்ம நம்பிக்கை” என்று அவன் உள்ளம் துள்ளிய அந்த உணர்வு இன்னும் மனதில் இனிமையாகத் தங்கியிருந்தது. இன்று “எப்படி டீ… எப்படி டீ…என்னை விட்டு போன?” என மனம் அறற்றியது. முழக்கங்கள், மங்கள ஓசைகள், குங்கும வாசம் என அந்த சூழலில்தான்  ஆதிரையின் முகம் ஒளிரும் அலைபேசி திரையை
வெறித்திருந்தான் மித்ரன்!

““அப்பா அப்பா… இந்த தேர் எதுக்காக இவ்வளவு பெரிய மரத்துல கட்டியிருக்காங்க?” மித்ரனின் கையை இறுக்கமாகப் பிடித்திருந்த சிறியவன் கவின் முகிலின் கேள்விகளில் நிகழ்காலத்துக்கு வந்தான் மித்ரன்.

Advertisement

அந்த கூட்டத்தின் நடுவில், அவன் கண்களில் பயமில்லை, அளவற்ற ஆச்சரியம் மட்டுமே. அவன் சுற்றி பார்த்து கேள்விகளைத் தொடங்கினான்:

மித்ரன் மெதுவாக, “இது சாமி கல்யாண ஊர்வலத்துக்காக.”

சாமி கல்யாணமா?

“ஆமாடா…, சாமிக்கும் சாமிக்கும் கல்யாணம்..”
“சாமிக்கும் சாமிக்கும் கல்யாணம் மா? அப்போ ரொம்ப பெரிய வெட்டிங் தானே பா…

கவி மீண்டும் கேட்டான் , “கூட்டமெல்லாம்… எல்லாரும் மேலே கையெழுப்புறாங்க… யாரை பார்க்குறாங்கப்பா?”
“அவங்க நம்பிக்கையோட சாமியை பார்க்கிறாங்க… கண்களால மட்டும் இல்ல மனசால”.

“அப்போ பா… சாமி உள்ள இருக்காரா? நாம பார்த்துட முடியுமா?”

மித்ரன் ஒரு நொடி அமைதியாக இருந்து, “சாமி சிலை வடிவமா இருக்காங்க… ஆனா மக்கள் நம்பிக்கையில தான் அவரை உணர்றாங்க” என்றான்.

அதைச் சொல்லும்போதே “என் நம்பிக்கை என்ன ஆனது இறைவா?” என்று அவனுக்குள் ஒரு நொடி தோன்றியது.

பதினேழாயிரத்து இருபத்து மூன்றாவது தடவையாக அவன் இரண்டு வருடங்களுக்கு முன்பான அந்த செப்டம்பர் இருபதாம் நாளை நினைத்துப் பார்த்தான். விமான நிலையத்திலிருந்து இறங்கி தாய் மண்ணை மிதித்த அந்த மறுநொடியிலேயே, “ஆதிரையை எப்போது பார்ப்போம்?” என்ற ஏக்கம் அவனுள் துவங்கியது. இந்த அளவு காத்திருப்பைத் தாங்கியவனுக்கே, பொறுமையும் ஒரு பாரமாகவே மாறி, ஆறுதலாக இருக்க வேண்டிய மனமே அவனை மேலும் வாட்டியது.

விமான நிலையத்தில் “ஆதிரை இங்கே இல்லை” என்று அறிந்தவுடன் அவன் முகம் திடீரென சோர்ந்து போனது. வீடு வந்து, கதவின் முன் நின்றான். அழைப்பு மணி அழுத்திய கை கூட சற்றே நடுங்கியது. விமான நிலையம் வீட்டு அருகிலேயே இருந்ததால், அவன் சோதனைகள் முடிந்து ஐந்தரை மணிக்கே வீட்டை அடைந்திருந்தான். “ஆதிரை எங்கே… எங்கே இருப்பாள்?” என்று மனம் இடைவிடாமல் கேள்வி எழுப்பியது. கண்டவுடன் அவள் என்ன செய்வாள்? அவளது அந்த சின்ன கோப முகம்… நிச்சயம் அழுகையோடு கலந்து வரும் ஒரு பார்வை. அப்படியே அவளை பிடித்து, அறைக்குள் தூக்கிக்கொண்டு போய் விட வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுள் ஒரு நொடி மின்னலாக ஓடி ஒரு மென்மையான புன்னகை வந்து போனது. “பாப்பா இப்போ எப்படி இருப்பா? வளர்ந்திருப்பாளா? இல்லையா?” என்று தன்னையே கேட்டுக்கொண்டான். “மை பேபீஸ் … மை டார்லிங்ஸ் …” என்ற நினைவு அவன் மனதை மகிழ்ச்சியில் இன்னும் கனமாக்கியது.

அந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக கதவு திறந்தது.

“மித்ரா…” என்று அத்தம்மாவின் குரல்  ஒலித்தது. “மித்ரா… வாப்பா…” என்று அத்தம்மா பாசமாக அழைத்தார். அவனோடு கூடவே, அந்தச் சிறுவன் அவன் கையைப் பிடித்துக்கொண்டு நின்றான் “யாருப்பா இந்தக் குழந்தை?” என்று அத்தம்மா கேட்டார். மித்ரன் ஒரு நொடி தயங்கி நின்றான். அந்தச் சிறுவனின் கையை இன்னும் பிடித்தபடியே மெதுவாக சொன்னான்.

“கவின்முகில்மா..” அத்தம்மா மீண்டும், “யாருப்பா?” என்று கேட்டார். மித்ரன்  ஒரு நொடி., “பிறகு சொல்றேன்…” என்று சைகை காட்டினான்.

பின் உற்சாகமாக வீட்டுக்குள் நுழைந்தான். “ஆதீ….. ஆதியும் பாப்பாவும்… எங்கேமா?”

அத்தம்மா ஒரு நொடி தயங்கினார். பிறகு மெதுவாக சொன்னார், “ஆதியையும் பாப்பாவையும் ட்ரிப் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு… அவள் கிளம்பிப் போயிட்டாளே பா…”. அந்தப் பதிலை கடந்த மறுநொடியிலேயே அவன் நெஞ்சில் ஒரு வெற்றிடம் போல உணர்வு பரவியது. அவன் சுவாசம் தேடிய அந்த உயிர்கள் அங்கே இல்லாததை அவன் உடனே உணர்ந்தான். எப்போ கிளம்பினாங்க?” என்ற அவன் குரல் மிகவும் மெலிதாக வெளிவந்தது.

அத்தம்மா, “… நீ வர்றதுக்கு முன்னாடி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் போனாங்கடா…” என்றார். உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடினாலும், எந்த வார்த்தையும் வெளியில் வரவில்லை. “என்னாச்சு பா?”  ஒன்னுமில்லை… மா தா… வர்றேன்…” என்று மித்ரன் மெதுவாக பதிலளித்தான்.

படுக்கை அறைக்குள் சென்றான்.. வழக்கமாக அவள் உட்கார்ந்து எழுதும் அந்த மேசையைப் பார்த்தான்.

எப்பொழுதும் போல செய்தி சொல்லும் ஒரு சிறிய குறிப்பேடு இருந்தது ….ஒரு செய்தியும் இருந்தது.

உள்ளே எழுதியிருந்த வரிகள் அவன் நெஞ்சை கிழித்தன. “எங்களை தேட வேண்டாம். ஒரு இடைவெளி வேண்டும்……”.  அதிலும் அவள் அடித்திருந்த அந்த ‘’அன்புள்ள’’ அவனை இன்னுமாய் குத்தி கீறியது. ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவன், அத்தம்மாவை மேலும் கவலையில் ஆழ்த்த வேண்டாம் என்று நினைத்தான். தற்போதைய சூழ்நிலையில் எதையும் வெளிப்படையாக சொல்லாமல் இருக்கலாம் என முடிவு செய்தான். “அவள் வந்திருவாமா … என்று மெதுவாக வெளியில் வந்தவன் சொன்னான்.

வெளியில் அவன் அமைதியாக இருந்தாலும், “அவள் வந்திருவா… அவள் வந்திருவா…” மனதுக்குள் அந்த நம்பிக்கை மட்டும் சோர்வடையாமல் தொடர்ந்து முணுமுணுத்துக்கொண்டே இருந்தது.தேடாத இடமே இல்லை என்ற அளவுக்கு அவன் அலைந்திருந்தான்.

அத்தம்மாவை மீண்டும் மீண்டும் கேட்டு பார்த்தான். ஒரு நிமிடம் அத்தம்மா அமைதியாக இருந்தார். பிறகு கண்கள் கலங்கியபடி

“ஒருமுறை அவள்… ‘எங்களுக்குள் ஏதோ விட்டுப் போனது போல இருக்கு…’ன்னு சொல்லி அழுதிருந்தா பா…”

அந்த வார்த்தைகள் மித்ரனின் நெஞ்சில் ஆழமாக இறங்கின. “அப்படியா சொன்னா…?” என்று அவன் குரல் மெதுவாக உடைந்தது. ஏதோ விட்டுப் போனது போல இருக்கிறது…” . அந்த வரியின் அர்த்தம் இப்போதும் அவனை கொன்றது போல வலித்தது
““என்னடி… மண்டைக்குள்ள சுத்திக்கிட்ட இருந்தது? என்ன விட்டுப் போச்சுன்னு… என்னை விட்டு போயிட்ட?”
மனம் அரற்றியபடி இருக்க, வெறுமை மட்டும் இன்னும் ஆழமாக அவனைச் சூழ்ந்துகொண்டிருந்தது.அத்தம்மாவை அவர் ஊருக்குப் புறப்படச் செய்து அனுப்பி வைத்தான்.

ஆண்டுகள் இரண்டு ஓடிவிட்டது ஆனால் அவனுக்கு அது இன்னும் நேற்று நடந்ததுபோலவே இருந்தது.
அவளைப் பற்றி அறிய அவன் கல்லூரிக்குச் சென்று விசாரித்தான். அங்கு, அவள் விடுப்புக்காக விண்ணப்பித்ததாகவும், அது ஏற்கப்படாத நிலையில் வேலையையே ராஜினாமா செய்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். ஆதிக்கு அவன் மட்டும்தான். சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்தாள்; தாயும் கண்மணிக்குட்டியின் இரண்டாவது பிறந்தநாளுக்குப் பிறகு இரண்டு நாட்களில் பரலோகம் சென்றிருந்தார்.  “அவள் வந்திருவா…” என்பது ஒரு மந்திரம் போல, ஒரு நம்பிக்கை போல, அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் தானே சொல்லிக்கொண்டாலும், அவளை தேடும் அவன் முயற்சியை விடவில்லை.

ஆனாலும் பலன் ஒன்றும் கிட்டாத இந்த இரண்டாம் வருடத்தில் கவின் குட்டியை பள்ளி போட்டிக்காக திருச்சிக்கு அழைத்து வந்து…. போட்டி முடிந்ததும், அந்த வழியிலேயே மதுரை வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.

“இதோ சித்திரைத் திருநாள் காலம்…மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் நிமித்தமாய் நகரம் முழுவதும் விழாக்கோலம்.  உற்சவக் கூட்டம், பக்தர்கள் கூட்டம் என எங்கும் பரபரப்பு இருந்தது. ஆனால் அந்த கூட்டத்தின் நடுவிலும், மித்ரனின் மனம் மட்டும் அமைதியின்றி அவளைத் தேடிக்கொண்டே இருந்தது. தேர் ஓட்டத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணக் கோலம் அவனை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக, அவன் இழந்ததை இன்னும் ஆழமாக உணர வைத்தது போல இருந்தது. ஆனாலும் ஏதோ நல்லது நடக்க இருக்கிறதுபோல, ஒரு சங்கொலி மனதுக்குள் உரைத்துப் போனது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!