நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-11
அத்தியாயம் -11
“ஒரு ராகமும் அறியா பிஞ்சு விரல்களில் இதம் அதிரும் வீணையாய் உனை கிளர்த்தவா, மடிகிடக்க வா.. என வான் பார்த்தே பூப்பூத்து கிடக்கும் பூமிக்குள்ளும் … காதல்” .
திரையில் டாம், ஒரு பெரிய இரும்புப் பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு ஆக்ரோஷமும் ஆசையுமாக ஜெர்ரியைத் துரத்திக் கொண்டிருந்தது. ஜெர்ரியோ, தன் குறும்புத்தனமான விழிகளில் மின்னல் தெறிக்க, மிக லாவகமாக ஒரு நடனக் கலைஞனைப் போல அந்தச் சிறிய ஓட்டைக்குள் மின்னல் வேகத்தில் புகுந்து மறைந்தது. அடுத்த நொடி, வேகம் கட்டுப்படுத்த முடியாமல் டாம் ஏந்தி வந்த அந்த இரும்புப் பாத்திரம் சுவரில் மோதித் தெறிக்க, அதன் முகமும் அந்தப் பாத்திரத்தின் அச்சில் அப்படியே வார்க்கப்பட்டது போல தட்டையாக மாறிப்போனது. “அப்பா… இதைப் பாருங்கப்பா! பாவம் டாம்… எப்பவுமே அதுதான் மாட்டிக்குது,” என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தாள் கண்மணி.
Advertisement
மித்ரன் சிரித்துக்கொண்டே, “அது பாவம் இல்ல குட்டிமா… அது பண்ற ஓவர் ஆக்ஷன் தான் அதுக்கு வினையா முடியுது. ஆனா பாரு, அடி வாங்கினாலும் அடுத்த செகண்டே அது பழையபடி ஆகிடுது. அதுதான் இந்த கார்ட்டூனோட ஸ்பெஷாலிட்டியே,” என்றான்.
அப்போது மித்ரனின் பாக்கெட்டில் இருந்த போன் உரக்க ஒலித்தது.
ஆதிரையை ஒரு கணம் ஏறிட்டு நோக்கினான். பிறகு மெல்ல பேசினான்.
Advertisement
மறுமுனையில் அவன் தாயார். மித்ரனின் குரல் இப்போது தழைந்திருந்தது. “சொல்லுங்கம்மா… ஆமா, வந்துட்டேன்… ஆதிரையப் பார்த்தேன்மா,” என்றான். அவன் குரலில் ஒரு நிம்மதியும், அதே சமயம் ஒரு பாரமும் தெரிந்தது. “கவின் எப்படி இருக்கான்? சாப்பிட்டானா? சரிம்மா… நான் கிளம்பும்போது கூப்பிடுறேன். நேர்ல வந்து எல்லாத்தையும் சொல்றேன்,” என்று சுருக்கமாகப் பேசிவிட்டு போனை அணைத்தான்.
Advertisement
ஆதிரை அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ‘கவின்’ ? யார் இந்த கவின்? சந்தியாவைப் பற்றி ஏற்கனவே இருந்த சந்தேகத் தீயில், இப்போது இந்தப் புதிய பெயர் எண்ணெய் ஊற்றியது. அதைவிட அவளை அதிகம் பாதித்தது, ‘நான் காலையில கிளம்பும்போது கூப்பிடுறேன்’ என்ற அவனது வார்த்தைகள். ‘வந்த சில மணி நேரத்திலேயே கிளம்புவதைப் பற்றிப் பேசுகிறாரா?’ என்ற எண்ணம் வந்ததும், அதுவரை மலர்ந்திருந்த ஆதிரையின் நிலவு முகம் சட்டென்று கூம்பிப் போனது.
அந்தப் பாதிப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், “கண்மணி, மணி பத்து ஆகுது பாரு… தூங்கப் போலாம். நாளைக்கு ஸ்கூல் போகணும்ல?” என்றாள் ஆதிரை.
கண்மணி லேசாக முகம் சுளித்தாள். “அம்மா… இப்பதான் ஏப்ரல் மாசம் ஸ்டார்ட் ஆகியிருக்கு. இன்னும் ஒரு மாசம் ஃபுல்லா ஸ்கூல் போகணும். அதுக்கப்புறம் மே மாசம் லீவ் வந்தாத்தான் எனக்கு நிம்மதி,” என்று செல்லமாகச் சலித்துக் கொண்டாள்.
Advertisement
மித்ரன் சிரித்துக்கொண்டே, “ஸ்கூலுக்குப் போய்தானே ஆகணும் குட்டிமா? அப்போதானே நல்லா படிக்க முடியும்?” என்றான்.
கண்மணி சட்டென்று எழுந்து அமர்ந்து, மித்ரனின் கையைப் பிடித்துக் கொண்டாள். “சரிம்மா… சரிப்பா… வாங்க வாங்க, மூணு பேரும் ஒண்ணாத் தூங்கலாம். அப்பா… இன்னைக்கு நான் நினைச்சே பார்க்கலப்பா, உங்க ரெண்டு பேர் கூடவும் ஒரே பெட்ல தூங்குவேன்னு!” என்றாள் உற்சாகமாக. அவளது அந்தச் சின்னஞ்சிறு சந்தோஷம் அந்த அறையின் பாரத்தை ஒரு நொடி குறைத்தது.
அவர்கள் மூவரும் படுக்கையறைக்குள் நுழைந்தனர். நிலவொளி ஜன்னல் வழியே இவர்களுக்கு முன் உள்ளே வந்து, படுக்கையில் வெண்ணிறப் போர்வையாய் விரிந்து காத்துக் கிடந்தது.
ஆதிரை “நீங்க ரெண்டு பேரும் பெட்ல படுங்க… நான் கீழே படுத்துக்கிறேன்,” என்று தாழ்ந்த குரலில் கூறிவிட்டு, தரையில் ஒரு போர்வையை விரித்துப் படுத்துக் கொண்டாள்.
கண்மணி ஏதேதோ பேசத் தொடங்கினாள். “ஆமாப்பா… எனக்கு, அம்மாவுக்கு எல்லாம் என்ன கிஃப்ட் வாங்கி வந்தீங்க? என்று கேட்க, மித்ரன் சிரித்துக்கொண்டே, கிஃப்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டேன் குட்டிமா… ஆனா ஜெர்மனில இருந்து கிளம்பும்போது ரொம்ப அவசரமா கிளம்பிட்டேனா, அதனால அங்க வாங்கின எல்லாத்தையும் அப்படியே நம்ம பெங்களூரு வீட்ல வச்சுட்டு வந்துட்டேன். இங்க வரும்போது எதையும் எடுத்துட்டு வர முடியல. ஆனா உனக்கும் அம்மாவுக்கும் பிடிச்ச நிறைய விஷயங்கள் அங்க இருக்கு. நாம அங்க போகும்போது எல்லாத்தையும் எடுத்துக்கலாம்,” என்றான் மித்ரன்.
‘நம்ம பெங்களூரு வீடு’ – அந்த வார்த்தை ஆதிரையின் காதுகளில் ஒரு ரீங்காரமாய் ஒலித்தது. பல வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டை ‘நம்முடையது’ என்று அவன் உரிமையோடு சொன்னது அவளுக்குள் ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்கியது. ஆனாலும், அவன் அம்மாவோடு போனில் பேசிய ‘கிளம்புகிறேன்’ என்ற வார்த்தையும், ‘கவின்’ என்ற பெயரும் அவள் நெஞ்சில் முள்ளாய் தைத்துக் கொண்டிருந்தன.
சற்று நேரத்தில் கண்மணி சீரான மூச்சுக்காற்றுடன் உறக்கத்திற்குச் சென்றாள்.
மித்ரன் மெல்ல எழுந்தான். கட்டிலில் கண்மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஆதிரை ஒருக்களித்துப் படுத்திருந்தாள். ஜன்னல் வழியே கசிந்த நிலவொளியில், ஆதிரை ஒரு தத்ரூபமான கோட்டோவியம் போலத் தெரிந்தாள். அவள் கண்கள் மூடிக்கிடந்தாலும், கருமணிகள் இமைக்குள் அசைந்து கொண்டிருந்தன. அவள் தூங்கவில்லை என்பதும், ஏதோ ஒரு போராட்டத்தை மனதுக்குள் நடத்திக் கொண்டிருக்கிறாள் என்பதும் மித்ரனுக்குப் புரிந்தது. மித்ரன் அவளையே பார்த்திருந்தான். அந்த நள்ளிரவு அமைதியில், நிலவொளியின் பின்னணியில், இத்தனை காலப் பிரிவும், மௌனமும் அவனுக்குள் ஏற்படுத்திய தவிப்பு இப்போது கட்டுக்கடங்காமல் பெருகியது.
அவளை அப்படியே அள்ளிக் கட்டிக்கொள்ள அவன் மனம் பரபரத்தது. ‘என்னவளே…’ என இத்தனை காலம் தவித்த அந்தத் துடிப்பான இதயம், “இனி தாமதிக்காதே… ” என்று அவனுக்குள் கட்டளையிட்டது
அவன் அவள் அருகில் குனிந்து, “ஆதி…” என்று மிக மெல்ல அழைத்தான். அவள் உடல் லேசாக அதிர்ந்தது. அந்த ஒற்றைச் சொல்லுக்காகத்தானே இத்தனை காலமும் அவள் தவம் கிடந்தாள்? அவள் மனதில் இருந்த அத்தனை கேள்விகள், கனத்த கோபம், கண்ணீர் என ஒவ்வொன்றும் அவனது இந்த ஒரு அழைப்பிற்காகத்தான் இத்தனை காலம் காத்திருந்தது.
“ஆதி… வாயேன், வெளியில போய் பேசலாம். குழந்தை தூங்குறா, இங்க பேசினா அவளுக்கு டிஸ்டர்பன்ஸ் ஆகும்,” என்றான்.
ஆதிரை பதில் பேசாமல் மெல்ல எழுந்து அவனுடன் நடந்தாள். இருவரும் அந்த டூப்ளக்ஸ் வீட்டின் முன்புறம் இருந்த முல்லைக்கொடி அருகே மெல்ல நடந்து வந்து வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்தனர்.. அந்த நள்ளிரவு காற்றில் முல்லைப்பூக்களின் வாசம் மனதை மயக்கும் விதத்தில் பரவியிருந்தது. மித்ரன் மிக உரிமையுடன் ஆதிரையின் கரங்களை எடுத்துத் தன் விரல்களோடு பிணைத்துக் கொண்டான்.
அந்த முல்லைக்கொடியின் நிழல், அவர்களுக்குத் துணையாக இருக்க, ஆதிரை மெல்லத் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் அவனைப் பார்த்த அந்தப் பார்வையில், ஆயிரம் புகார்கள் இருந்தன.
“ஆதி… நீ ஏன் என்னைப் பார்க்காம, சொல்லாம கொள்ளாம இப்படி கண் காணாத இடத்துக்கு ஓடி வந்திட்டன்னு எனக்குத் தெரியும்மா…”
மித்ரன் ஒரு கணம் நிறுத்தினான். ஆதிரை திடுக்கிட்டு அவனை ஏறிட்டு நோக்கினாள். அவளது விழிகளில் ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
மித்ரன் தொடர்ந்தான், “அத்தம்மா சொன்னாங்க ஆதி… நீ சொன்னியாமே, நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ ஒன்னு ‘விட்டுப் போச்சு’ன்னு… ஏண்டா… நான் ஜெர்மனி கிளம்புறேன்னு உன்கிட்டக் கேட்காம முடிவு பண்ணது, அந்த அவசரத்துல உன்னைத் தவிக்க விட்டுட்டுப் போனது எல்லாம் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிருச்சுல்ல?”
அவன் குரலில் இருந்த அந்த ‘ஏண்டா’ என்ற உரிமையான அழைப்பு, ஆதிரையின் அத்தனை பிடிவாதத்தையும் ஒரு நொடியில் தகர்த்தது.
மித்ரன் ஆதிரையின் கைகளைத் தன் கன்னத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவனது கண்கள் கலங்கியிருக்க, அந்தக் குரலில் ஐந்து வருடத் தவிப்பு மொத்தமும் வழிந்தது.
“நான் நல்லா யோசிச்சுப் பார்த்தேன் ஆதி. ஜெனரலாவே நீ பயங்கர எமோஷனல்… சாஃப்ட் ஹார்டட். ஒரு கவிதை மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் யோசிப்ப. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் குடுங்கப்பான்னு சொல்லிட்டே இருப்ப. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் எப்பவும் மூஞ்சி தூக்கி வச்சுப்ப… நான் வந்து உன்னைச் சமாதானம் பண்ணுவேன். அந்தப் ‘பேம்பரிங்’ எனக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது… ஐ ஜஸ்ட் லவ்ட் இட்… ம்ம்ம்…”
மித்ரன் ஒரு கணம் நிறுத்தி, அவளது முகத்தைப் பார்த்தான். நிலவொளி அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை மின்னச் செய்தது.
“அன்னைக்கு அந்தப் ப்ராஜெக்ட் விஷயத்துல நீ என்கிட்ட சொல்லலையேங்கிற வருத்தம் எனக்குள்ள ஒரு சின்ன ஈகோவை வளர்த்துடுச்சுங்கிறது நிஜம்தான். ஆனா அதுக்காக மட்டும் நான் உன்கிட்ட இருந்து அப்படியே போயிடலடா. போயிடவும் முடியாது.
அவன் ஒரு நிமிடம் மௌனமாகி, அவளது விழிகளை நேராகப் பார்த்தான். “ஆனா அதெல்லாம் ஒண்ணுமே இல்லை ஆதி… எனக்கு ஜெர்மனி போயிட்டு உன்னையும் பாப்பாவையும் விட்டுட்டு இருந்த காலம் எல்லாம் எவ்வளவு கொடுமை தெரியுமா? ஒரு நிமிஷம் கூட உங்க ஞாபகம் இல்லாம நான் அங்க இருந்தது இல்லை. சரி, ஜஸ்ட் ஒன் இயர் தான்… எல்லாத்தையும் சால்வ் பண்ணிட்டு வந்திடலாம்னு தான் நினைச்சேன். ஆனா விதி வேற மாதிரி இருந்தது. ஒண்ணு மாத்தி ஒண்ணு அங்க பிரச்சனைகள் வந்துட்டே இருந்தது.”
ஆதிரை அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளது ஆழ்மனதில் ஒரு பெரும் போர் நடந்து கொண்டிருந்தது. இத்தனை காலத் தவிப்புக்கு மருந்தாக அவனது வார்த்தைகள் அமைந்தாலும், அவளது உள்ளுணர்வு ஒரு பெயரைச் சொல்லி அவளைத் துளைத்துக் கொண்டே இருந்தது.
எப்போது அவனது வாயால் அந்த **’சந்தியா’**வின் பெயர் வரும்?
“நீ இங்க படுற கஷ்டம் புரியாம இல்ல ஆதி… ஆனா அங்க ஒவ்வொரு நிமிஷமும் உன்னையும் கண்மணியையும் நினைச்சு நான் செத்து செத்து பிழைச்சிருக்கேன்”
மித்ரன் பேசப் பேச அவனது குரல் கம்மியது.
சாரிடா கண்ணம்மா… ஐ மிஸ் யூ… மிஸ் யூ… மிஸ் யூ வெரி மச்!” என்று கம்மிய குரலில் கதறியபடி, அவளை அப்படியே கட்டிக் கொண்டான்.
ஐந்து வருடத் தவிப்பு, ஏக்கங்கள், சொல்ல முடியாமல் தவித்த வார்த்தைகள் என அனைத்தும் அந்த ஒரு அணைப்பில் வெளிப்பட்டன. அவன் அவளை இறுகக் கட்டிக்கொண்ட அந்த வினாடியில், ஆதிரைக்கு அவன் இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பது புரிந்தது.
அவன் தோளில் முகம் புதைத்திருந்த ஆதிரையின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. மித்ரனின் அணைப்பில் ஒரு கணம் உறைந்து போன ஆதிரை, மெல்லத் தன்னை மீட்டுக்கொண்டு அவனைப் பார்த்தாள். அவனது கண்களில் தெரிந்த அந்தத் தவிப்பும் காதலும் அவளுக்குள் ஒரு நிம்மதியைத் தந்தாலும், இன்னும் முழுமையாகத் தீராத சில கேள்விகள் அவளுக்குள் கனன்று கொண்டுதான் இருந்தன.
“மித்ரன்… ப்ளீஸ்… விடுங்க,” என்று அவனை மெல்ல நகர்த்தினாள்.
அவன் அவளைக் கேள்வியோடு பார்க்க, “ரொம்ப லேட் ஆகிடுச்சு பாருங்க. நீங்க காலையில சீக்கிரமா எழுந்து அத்தையைப் பார்க்கப் போகணும்ல? ஏற்கனவே ரொம்ப டயர்டா இருப்பீங்க… வாங்க, தூங்கப் போலாம்,” என்று நிதானமாக உரைத்துவிட்டு முன் நடந்து அறைக்குள் சென்றாள்.
மித்ரனுக்கு அந்த நிமிடம் தன் இதயத்தைச் சுற்றியிருந்த ஒரு பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல இருந்தது. அவன் மனம் ஒரு சிறகைப் போல இலகுவாக மாறியிருந்தது..
“ஆனாலும் என் பழைய ஆதிரை இல்லையே இவள்…” என்று மித்ரனுக்குத் திடுமெனத் தோன்றியது.
முன்னால் இருந்த ஆதிரையாக இருந்தால் இந்நேரம் என்னவெல்லாம் செய்திருப்பாள்? தன்னை விட்டுப் பிரிந்ததற்காக அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, பின் தன் மார்பில் சாய்ந்து அணைத்து, சரமாரியாக முத்தமிட்டுத் தன் அன்பைக் கொட்டியிருப்பாள். எதையும் ஒளிக்கத் தெரியாத, உணர்ச்சிக் குவியலாய் இருக்கும் அந்த ஆதிரை எங்கே?
இப்போது இந்த புதிய ஆதிரையிடம் ஒருவித விலகலும், ஒரு முதிர்ச்சியும், நிதானமும் தெரிந்தது. அந்த மாற்றம் அவனுக்குள் ஒரு மெல்லிய வலியைத் தந்தது. அடிபட்ட இதயம் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட கவசம் போல அது அவனுக்குத் தோன்றியது.
“நீங்க காலையில எத்தனை மணிக்குக் கிளம்பணும்?” என்று ஆதிரை கேட்க…
“இல்லம்மா… 6 மணிக்கெல்லாம் கிளம்பினாதான் நான் இன்னைக்கு இருக்கிற செகண்ட் டே ரிவ்யூக்கு (second day review) ரீச் ஆக முடியும். சோ… வேக் மீ அட் 6 ஓகே ?” என்று கூறிவிட்டு படுக்கையில் அமர்ந்தான் மித்ரன்.
ஆதிரை விலகிச் செல்ல முயல, மித்ரன் அவளது மென்மையான கரங்களைப் பற்றிப் பின்னோக்கி இழுத்தான். அந்த இழுப்பில் ஒரு பிடிவாதத்தை விட, “என்னை விட்டு விலகிவிடாதே” என்ற கெஞ்சலே அதிகம் இருந்தது. அவளைத் தன் பக்கம் திருப்பியவன், “என் கண்ணம்மா…” என்றபடியே அழுத்தமாக அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தான். அவனது இதழ்களின் வெப்பம் அவள் நெற்றியில் பட்ட அந்த நொடி… ஆதிரைக்குள் அத்தனையும் சிலிர்த்தது!. ஆயிரம் சொற்கள் சொல்ல முடியாத ஆறுதலை ஆதிரைக்கு அந்த ஒரு ஸ்பரிசம் தந்தது. எதையும் பேசாமல், தன் நெற்றியில் எஞ்சியிருந்த அவனது இதழ்களின் ஈரத்தை இதயத்தில் சுமந்தபடி, விலகிச் சென்று படுத்துக் கொண்டாள்.
ஆதிரை கண்களை மூடிய அந்த வினாடி, அவளுக்குள் இருந்த ‘வேதாளம்’ மீண்டும் முருங்கை மரம் ஏறியது. ஒருவிதக் குற்றவுணர்வு தலைதூக்கியது. “சே… நான் இவ்வளவுதானா? ஒரு முத்தம்… அதுவும் வெறும் போர்ஹெட் கிஸ் கே இப்படியா இளகிப் போய்விட வேண்டும்?” என்று தன்னைத் தானே கடிந்துகொண்டாள். இத்தனை கால வைராக்கியம், அஞ்சு வருடத் தனிமை, அந்தப் பிரிவின் வலி எல்லாம் ஒரு நொடித் தீண்டலில் காணாமல் போனதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
தன் மனம் மித்ரனிடம் சரணடைவதைத் தடுக்க, “மறந்துட்டியா ஆதி? என வழுக்கட்டாயமாகச் சந்தியாவின் முகத்தை மனக்கண்ணின் முன் கொண்டு வந்து நிறுத்தினாள். “கூடவே அந்த ‘Cant wait anymore’-ம் வந்து நின்றது!

