Skip to content
Post Views: 3,624
வைலட் நிற ஷிபான் புடவை அழகாய் அவளை தழுவி இருக்க கண்ணாடி வளையல் குலுங்க சற்று உலர்ந்திருந்த கூந்தலில் சிக்கு உடைத்து தளர பின்னலிட்டு குங்குமம் வைத்துக்கொண்டிருந்தவளை ஆசையாய் பார்த்திருந்தான்.
நேற்று இரவினுடைய நீட்சி அவன் கண்களில் இன்னும் ஒ(மி)ளிர்ந்து கொண்டிருந்தது.
சுப்பு…. தலையணையில் கையூன்றி கிறக்கமாய் அழைத்தான்.
அவன் சிணுங்கல் அவளுக்குள் குறுகுறுப்பை கொடுத்தாலும்என்ன என்பதாய் இயல்பாய் திரும்பி பார்த்தாள்.
Advertisement
அழகா இருக்க. பார்த்துட்டே இருக்கணும் போல இருக்குடி.
இருக்கும்…. இருக்கும். கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருக்கும்! வெட்கத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அப்படியா சொல்ற?டே டைம் விட நைட்ல தான் இன்னும் அழகா… அவன் சொல்லி முடிக்கவில்லை சரியாய் சீப்பு வந்து விழுந்தது அவன் மீது.
Advertisement
சொல்லலையேன்னு நீ வருத்தப்படுவியேன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான்.
Advertisement
ரொம்ப வழியுது! சன்னமாய் சிரித்தாள்.
துடைச்சு விடேன் என்றான் கண் சிமிட்டியபடி.
கொன்னுடுவேன் என்று சுட்டுவிரலை நீட்டி மிரட்டினாள்.
Advertisement
சத்தமின்றி தாராளமாய் குலுங்கி சிரித்தவன் புடவை கட்டத் தெரியுமா? கொஞ்சலாய் கேட்டான்.
தெரிஞ்சதினால் தான் கட்டிஇருக்கேன். மடிப்பை அழகாய் நீவி விட்டாள்.
இந்த கதையில, சினிமால எல்லாம் ஹீரோயினுக்கு புடவை கட்ட தெரியாம சிணுங்கிட்டு நிப்பாங்க. ஹீரோ ஹெல்ப் பண்ண போய் அங்கே… லல லாலா… லாலா… வயலின் பீஸ் இசைக்குமே?
நினைப்பு தான் போலீசுக்கு! நானெல்லாம் டென்த் படிக்கும் போதே சூப்பரா புடவை கட்டுவேன். யூடியூப் பார்த்து பார்த்து கட்ட கத்துக்கிட்டேன் தெரியுமா?
எங்க சொந்த பந்தத்தில் பங்க்ஷன் இருந்தா நான் தான் எல்லாருக்கும் புடவை கட்டிவிடுவேன்.
சுப்பு உனக்கு புடவை கட்ட தெரியும் ஆனா எனக்கு தெரியாதே…. நான் உன்னை வச்சு கத்துக்கட்டுமா? விழிகளை மேலேற்றி உதடு கடித்து சிரித்தான்.
இது போலீஸ் இல்லை பொறுக்கி போலிருக்கே…. அவள் இடுப்பை ஆட்டி முகத்தை கொணட்டி சொல்ல…
யாரடி பொறுக்கின்னு சொல்ற? உன்னை… கட்டிலில் இருந்து அவன் துள்ளி எழ…
விடு ஜுட் என்று அவள் ஓடிவிட்டாள்.
சோபையுடன் வந்து நின்ற மருமகளை கண்டு கொண்டவர் வாம்மா என்று புன்னகையுடன் வரவேற்றார்.
அழகாய் தொடுத்து வைத்திருந்த மல்லிசரத்தை மருமகளுக்கு சூட்டி அழகு பார்த்தார் பாப்பாத்தி.
அழகா இருக்கம்மா… அது தான் எம்பிள்ளைக்கு பிடிச்சு போச்சு! கன்னம் வருடி நெட்டை உடைத்தார்.
இவங்க பிள்ளை அஜித் குமாரு, அரவிந்சாமி உள்ளுக்குள் சிறு கடுப்பு தான் அவளுக்கு.
“—————-“
அத்தை நான் சமைக்கவா? ஒரு பேச்சுக்கு தான் கேட்டாள்.
சரி என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு.
நான் தான் சாம்பார் வைக்கணுமாம். ரொம்ப நாளாகிடுச்சாம் நான் டிபன் சாம்பார் வைத்து. இன்னைக்கு சாம்பாரும் வடையும் செய்ய சொல்லி உன் புருஷன் சொல்லிட்டாரு என்று சிரித்தவர் சிறுபருப்பும் துவரம்பருப்பும் சேர்த்து களைந்து கழுவி பூண்டுபல், சின்ன வெங்காயம், பழுத்த தக்காளி, பச்சை மிளகாய் மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து குக்கரில் போட்டு விசில் வைத்தார்.
மாமியார் சாம்பார் வைப்பதை உடன் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுப்ரஜா. எங்கம்மா வேற மாதிரி பண்ணுவாங்கத்த என்றாள்.
சமையல் ஒவ்வொருத்தர் ஒருமாதிரி பண்ணுவாங்கம்மா என்று சிரித்தார்.
கொஞ்சம் தேங்காய் சட்னி அரைச்சுடுவோம் தேங்காய் துருவி தரியா என்றார்.
சரிங்கத்தை என்று தேங்காய் துருவி கொடுத்தாள்.
பச்சை மிளகாய் போட்டு தேங்காய் சட்னி அரைத்து தான் அவள் பார்த்திருக்கிறாள். பாப்பாத்தி வரமிளகாய், ரெண்டு பூண்டுப்பல். கொட்டைபாக்கு அளவு புளி போட்டு அரைத்து எடுத்தார்.
பிரிஜ்ஜில் உளுந்து மாவு இருக்கு எடும்மா… வடை போட்டு எடுத்தா சமையல் முடிஞ்சுது என்றார்.
மாவு சூடு குறைந்தால் எண்ணெய் குடிக்காது அது தான் பிரிஜ்ஜில் வைத்து எடுப்பேன் என்று மருமகளுக்கு டிப்ஸ் கொடுத்தார்.
மாமியாருக்கு இஞ்சியும், பச்சை மிளகாய் வெங்காயமும் வெட்டிக் கொடுத்துவிட்டு காய்கறி நறுக்கிய தோலை முறத்தில் அள்ளினாள்.
அம்மாடி இந்த தோலை கொண்டுப்போய் தோட்டத்துல ரோஜா செடிக்கு கொட்டிடு என்றார்.
தோட்டத்திற்குள் நுழைந்தவள் மயங்கி நின்றுவிட்டாள். பெரிய தோட்டம். நிறைய பூச்செடிகள், மரங்கள்,கீரை பாத்திகள் என்று இருந்தது.
இவ்வளவு கனகாம்பரம் பூத்திருக்கு! ஆசையாய் செடிகளை வருடிப் பார்த்தாள்.
செடியை தான் வருடி பார்ப்பியா? செடியை வைத்து வளர்க்கிறவனை தொட்டு பார்க்க மாட்டியா? வெகு அருகில் குரல் கேட்க பயத்துடன் திரும்பி நின்றாள்.
கிங் தான் மலர்ச்சியாய் நின்றிருந்தான்.
இந்த செடியெல்லாம் நீங்க தான் வச்சீங்களா?
ம்ம்ம்ம்ம். என் வருங்கால குயினுக்காக நான் வளர்த்துட்டு வரேன்.
நிஜமாவா?
ஏன் போலீஸ்காரனுக்கு செடிக் கொடி மேல காதல் வராதா? கண்சிமிட்டியவன் நெருங்கி வந்து அவள் இடையை பற்றி தன்னோடு இழுத்து கன்னத்தில் கடித்து முத்தம் வைத்தான்.
இந்த ரோஜாவை விட நீதான்டி அழகா இருக்க… மீண்டும் இடையை பிடித்து இறுக்கி தன்னோடு பிணைத்துக் கொண்டான்.
அய்யோ…. இந்த போலீசு பண்ற அட்டகாசம் இருக்கே….யாராவது பார்ப்பாங்க… அவள் ஓட முனைய….
ஓய்…. சுப்பு நில்லு!ஒரு பன்னீர் ரோஜாவை கிள்ளி அவள் கையில் கொடுத்து மீண்டும் ஒரு முத்தம் வைத்தான்.
வாங்கிக் கொண்டவள் வெட்கத்துடன் ஓடிவிட்டாள்.
“———————“
என்ன பாப்பாத்தி சமையல் வேலை முடிஞ்சுதா? வயலுக்கு போய் வந்த பூமாலை முகம் கழுவி வந்து நீராகாரத்துக்கு அமர்ந்தார்.
பழைய சோத்தில் மோர் விட்டு உப்பு போட்டு கரைத்து கொண்டுவந்து கொடுத்தவர். சமையல் முடிஞ்சுது என்றார்.
மருமகளை காணும்? என்றார்.
தோட்டத்துக்கு போயிருக்கா!
புது மருமக ஏதாவது கூடமாட ஒத்தாசை பண்ணுதா?
ம்ம்ம்ம்ம் இவ்வளவு நேரம் அடுப்படியில் கூட தான் இருந்தா.
சமையல் யாரு பண்ணினா? வியப்பாய் கேட்டார்.
மன்னரு உஷாராச்சே… அவன் பொண்டாட்டிக்கு சரியா சமைக்க தெரியாதுன்னு நினைக்கிறேன். அதுதான் இன்னைக்கு சாம்பார் வேணும், நீ தான் வைக்கணும்னு என்கிட்ட சொல்லிட்டான்.
இதுவரைக்கும் வாயை திறந்து அது வேணும் இது வேணும்னு கேட்காதவன் இன்னைக்கு அவன் பொண்டாட்டியை சமைக்க விட்டுடுவேன்னு பயந்து எப்படி சமாளிக்குறான் பாருங்க! என்று சிரித்தார்.
வீட்டுக்குள் நுழைந்தவள் மாமனார் மாமியார் உரையாடலில் அப்படியே நின்று விட்டாள்.
தனக்காக இவ்வளவு யோசிக்கிறானா? வியப்பாகவும் உவப்பாகவும் இருந்தது.
“———————“
காலை உணவை முடித்துக் கொண்டனர்.
ம்மா…சுப்ரஜாவை வயலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன் என்றான்.
வெயில் ஏறுதுப்பா…. என்றார் பூமாலை.
போயிட்டு உடனே வந்துடுவோம்பா என்றான்.
பைக்கில் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் அவர்களின் வயல்.
வண்டி அதற்கு மேல் போகாது. கொஞ்ச தூரம் நடந்து தான் உள்ளே போக வேண்டும்.
வா சுப்பு…. என்று அவள் கரம் பற்றி வரப்பில் நடக்கத் தொடங்கினான்.
ஒன்பது ஏக்கர் கிட்ட வரும். கிணத்துக்குள்ளே சைடு போர் போட்டிருக்கோம். அதோ தெரியுது பாரு மோட்டார் கொட்டகை அது நம்மோடது தான்.
மரவள்ளி, கரும்பு, நெல் பயிரிட்டிருந்தனர்.
மாமரம், தேக்கு,தென்னை, எலுமிச்சை, நெல்லி, கொய்ய மரம் என்று வைத்திருந்தனர்.
பசுமையாய் குளுகுளுவென்று இருந்தது.
மோட்டார் கொட்டகையில் நாடாக்கட்டில் ஒன்று போடப்பட்டிருந்தது. அவளை உட்கார வைத்துவிட்டு வெளியே சென்றவன் சீவிய இளநீருடன் வந்தான்.
எங்க வயல் இப்படி இருக்காது. நாங்க மிளகாய், சோளம் பருத்தின்னு போடுவோம் என்றாள்.
இது செழுமையான பூமி சுப்பு…. என்ன போட்டாலும் விளையும் என்றான் பூரிப்பாய்.
“——————–“
சரி வா அங்கே ஒரு வயல் இருக்கு பார்ப்போம் என்று அழைத்து போனோம்.
ஹை… புடலை, பாகல், கோவைக்காய் எல்லாம் போட்டிருக்கு .
ம்ம்ம்ம்ம் இது நம்மோட வயல். ஐ மீன் என்னோட உன்னோட வயல் என்றான்.
புரியல என்றாள்.
நான் சம்பாதிச்சு தனியா வாங்கினது என்றான். அவன் கண்களில் அவ்வளவு பூரிப்பு.
ஆச்சரியமாய் அவனை பார்த்தாள்.
இந்த அரைக்காணி வாங்கி ரெண்டு வருஷம் ஆகுது என்றான்.
பயிர் யாரு பண்றது? சந்தேகமாய் கேட்டாள்.
நான் தான்..
அப்படினா?
அப்படினா… நான் தனியா பயிர் வைக்கிறேன்னு அர்த்தம். இந்த வரவு செலவு என்னோடது மட்டும்னு அர்த்தம்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
காய்கறி பயிர் பண்ணினா தினமும் கையில் காசு புழங்கும். அதுக்கு தான் காய்கறி பயிர் பண்றேன். அதிலும் வெண்டை கத்திரி போட்டா மார்க்கெட் ரேட்டுக்கு நஷ்டம் வர வாய்ப்பிருக்கு. கோவை, புடலை பாகல் பயிர் பண்ணினா கண்டிப்பா நஷ்டம் வராது.
இன்னும் அரைக்காணி வாங்கணும்! அதில் பூவெல்லாம் பயிர் வைக்கணும்னு ஒரு ஆசை இருக்கு என்றான்.
இவன் இவ்வளவு பேசுவானா? இவ்வளவு யோசிப்பானா? மலைத்து நின்றுவிட்டாள்.
சரி சம்பளம் வாங்கி வீட்டில் கொடுக்க மாட்டிங்களா? சந்தேகமாய் கேட்டாள்.
மாட்டேன் என்பதாய் தலை அசைத்தான்.
நிஜமாவா? சந்தேகமாய் கேட்டாள்.
ம்ம்ம்ம்…. மளிகை சாமான் வாங்கி போடுவேன். தீபாவளி பொங்கலுக்கு,அப்பா அம்மா கல்யாண நாளுக்கு துணி மணி வாங்கி கொடுப்பேன்.
அத்தை மாமா செலவுக்கு?
வயலில் இருந்து வரும் வரவு செலவை நாங்க நாலு பேருமே கேட்டுக்கிறது இல்லை.
அம்மாக்கு அப்பப்போ ஆயிரம் ரெண்டாயிரம் கொடுப்பேன்.
பெரிய செலவு வரும்போது நாலு பேரும் ஷேர் பண்ணிப்போம். வீடு கட்டும்போது நாலு பேருமே பணம் கொடுத்திருக்கோம்.
கில்லாடி தான்… கொஞ்சம் பயம் தான் அவளுக்கு. இவன் எப்படிப்பட்டவன்?
“——————–“
சனிக்கிழமை மாலை கல்பாக்கத்தில் இருந்து சரவணன் மனைவி குழந்தை யுடன் வந்திருந்தான்.
அஞ்சலிக்கு அவ்வளவு ஆர்வம் புது ஓர்ப்படி எப்படி குடும்பம் நடத்துகிறாள் என்று பார்க்க வேண்டும். கணவனை நச்சரித்து அழைத்து வந்துவிட்டாள் முடியனூருக்கு.
வாங்கக்கா, வாங்க மாமா என்று வரவேற்று குடிக்க தண்ணீர் கொடுத்து அவர்கள் மகன் ஆயுஷுடன் விளையாடத் தொடங்கி விட்டாள் சுபி.
சோளமாவில் காரப்பணியாரம் செய்து தேங்காய் சட்னி அரைத்து எடுத்து வந்தார் பாப்பாத்தி.
பணியாரத்தில் இருக்கும் மிளகாயை நீக்கி ஊதி ஊதி ஆயுஷுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள் சுப்ரஜா.
அப்புறம் மன்னரு எப்போ டியூட்டியில் ஜாயின் பண்ண போற? தம்பியிடம் பேசத் தொடங்கினான் சரவணன்.
திங்கள் கிழமை ஜாயின் பண்றேன் என்றான்.
மற்றவர்கள் பேசிக் கொண்டே சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்க…
சுப்பு நம்ம பீரோவில் சாரதாஸ் ஸ்டோர் பை ஒன்னு இருக்கும் எடுத்துட்டு வா என்றான்.
அவள் எடுத்து வந்து கொடுத்தாள்.
அப்பா இது என் கல்யாண வரவு செலவு விபரம் என்று தந்தையிடம் நீட்டினான்.
என்கிட்ட…. அவர் தயங்கினார்.
வாங்கி பாருங்க என்று அஞ்சலி கணவனுக்கு ஜாடை காட்டினாள்.
சரவணன் வாங்கி சத்தமாகவே வாசித்தான்.
பெண் பார்க்க வேன் அமர்த்திய செலவில் இருந்து முகூர்த்த புடவை வாங்கியது, பரியத்துக்கு பூ பழம் தட்டு வரிசை வாங்கியது தொடங்கி பத்திரிகை அச்சடித்தது மண்டபம், மளிகை சாப்பாட்டு செலவு எல்லாம் தேதி வாரியாக பில்லுடன் இருந்தது. நயா பைசா விடாமல் கணக்கு எழுதியிருந்தான்.
இது மொய் பணம் வந்தது, இது சேர்ந்த நகை… எல்லாம் ஒப்படைத்தான்.
கண்களால் எல்லாவற்றையும் அஞ்சலி பார்த்துக் கொண்டிருக்க… அப்பா நம்ம சொந்தக்காரங்க சீர் செய்த மோதிரம், கோல்ட் காயின் எல்லாம் கொடுத்துட்டேன். என் மாமனார் வழியில் எனக்கு செய்த நகைங்க என் பிரண்ட்ஸ் எனக்கு தனிப்பட்ட வகையில் செய்ததை நான் எடுத்துக்கிட்டேன் என்றான்.
யாரும் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் அவனே தொடர்ந்தான். என் மாமனார் வழி சொந்தத்தில்,என் பிரண்ட்ஸ் வீட்டில் பங்க்ஷன்னா நானே செய்துக்குவேன். சொந்தத்தில் விசேஷம்னா பொதுவில் செய்யறது தானே வழக்கம்?என்றான்.
மத்த மூனு பேருக்கும் எப்படி கல்யாணம் நடந்ததோ அப்படி தான் என் கல்யாணமும். எக்ஸ்ட்ரா செலவு நிறைய வந்ததெல்லாம் என் தனிப்பட்ட செலவு.
என் கல்யாணத்தில் ஸ்பெஷல் எதுவும் இல்லை. அண்ணிங்களுக்கு வாங்கின மாதிரி தான் புடவையும் நகையும் என் பொண்டாட்டிக்கும் வாங்கினீங்க. அதே மாதிரி மண்டபம் அதே மாதிரி தான் சாப்பாடு. அஞ்சலியை பார்த்து அழுத்தமாகவே கூறினான்.
அவ்வளவு தான் பேசி முடித்து விட்டேன் என்பது போல் பணியாரம் சாப்பிடத் தொடங்கிவிட்டான்.
அஞ்சலிக்கு கடுப்பு முட்டிக் கொண்டு வந்தது. எவ்வளவு விவரம் பாரு? இவ்வளவு உஷாரா இருக்கான்? இந்த மாமியார் கிழவி தான் எம்புருஷனையும் பெத்து வளர்த்துச்சு. இவன் மட்டும் எப்படி இப்படி?
யாரும் எதுவும் பேசவில்லை. பேச வழியும் இல்லை. பாப்பாத்தி இதை கொண்டு போய் நம்ம மரபீரோவில் வை! என்றார் பூமாலை.
இதை தான் இரண்டு நாளாக கூட்டி கழித்துக் கொண்டிருந்தானா?
சித்திரகுப்தன் கணக்கை விட பலமா போடறானே… வியந்து பார்த்தாள் சுப்ரஜா.
உண்மையில் அவனை பார்த்து கொஞ்சம் ஜெர்க் ஆனது அவளுக்கு.
“———————“
தங்கள் அறைக்கு வந்த அஞ்சலி இரவு உணவை கூட துறந்து ஓர்ப்படிகளுக்கு அழைத்து புலம்பி தள்ளிவிட்டாள்.
இவன் மட்டும் எப்படிக்கா இம்புட்டு விவரமா இருக்கான்? சங்கீதாவிடம் அங்கலாய்த்தாள்.
அவன் காசு விஷயத்தில் எமகாதகன் என்றாள் அவள்.
அதுக்குன்னு இப்படியா? சிங்கிள் டீ குடிச்சதை கூட கணக்கில் எழுதியிருக்கான்.
அவன் விவரமா இருக்க போய் தான் தனியா வயல் வாங்கி சமத்தா பயிர் பண்ணி சம்பாதிக்கிறான்.
பொண்டாட்டிக்கு செலவு செய்யவும் கணக்கு பார்ப்பானோ? தீபா சிரித்தாள்.
அதிலென்ன சந்தேகம்? பொல்லாத கஞ்சப்பய… அஞ்சலி கடுகடுத்தாள்.
எப்படி இருக்கா நம்ம வீட்டு கடைசி மருமக? சங்கீதா ஆர்வமாக கேட்டாள்.
நல்லா தான் பேசுறா… போக போக தானே தெரியும்! புது தொடப்பம் நல்லா பெருக்குது! என்று அதற்கும் ஒரு நொடிப்பு நொடித்தாள்.
இவன் கூட குப்பை கொட்டிடுவாளா? தீபா நக்கலாய் கேட்டாள்.
அதெல்லாம் மாமியார் கிழவி சின்ன மருமகளை தாங்குமே? அந்த மகன்னா ஸ்பெஷல் ஆச்சே அதுங்களுக்கு. தீபா ராமாயணத்தை தொடுத்தாள்.
————தொடரும்——–
error: Content is protected !!