Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞26

பயண தூரம் முழுதும் அவன் எதுவும் பேசவில்லை.

அவளுக்கும் பேச வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

இடுப்பு வலி போலும் லேசாக வளைந்து நெளிந்து அமர்ந்து வந்தாள். அதற்காக தானே ஆசையாய் அக்கறையாய் கார் வாங்கினான்.

பழம், பருப்பு வகைகள்,இனிப்பு பூ எல்லாம் பார்த்து பார்த்து அவனே சென்று வாங்கினான்.



Advertisement

அவன் வாங்குவது கண்டு சுபிக்கு யோசனை…. மனதிற்குள் அவ்வளவு மகிழ்ச்சி!

இருவர் மனதிற்குள்ளும் அவ்வளவு அழுத்தம்.

பயண தூரம் மௌனத்தை சுமந்தே சென்றது.

Advertisement

எத்தனையோ முறை மன்னிப்பை யாசித்து விட்டான். இன்னும் அவன் என்ன தான் செய்ய முடியும்?

Advertisement

அவளுக்குள் ஒரு ஏக்கம், இயலாமை அது இல்லாமையால் வந்த ஏக்கமாக கூட இருக்கலாம்.

அவர்கள் அப்படி இருக்கிறார்கள், இவர்கள் இப்படி இருக்கிறார்கள் நான் மட்டும் ஏன் இப்படி இருக்க வேண்டும்?என்ற தாழ்வு மனப்பான்மையோ அவளுக்கு.

பயண தூரம் நீண்ண்ண்டதாகவே இருந்தது.  நான்கு மாதத்திற்குள் நாற்பது வருடம் வாழ்ந்து விட்ட அலுப்பு சலிப்பு. முகத்தை மலர்த்திக் கொள்ளவும் இல்லை முகத்தை திருப்பிக் கொள்ளவும் இல்லை.

Advertisement

ஏழரை மணிக்குள் குரும்பூர் வந்து சேர்ந்து விட்டார்கள்.

சற்று மெருகேறி பளிச்சென்றிருக்கும் மகளை கண்டதும் அவ்வளவு பூரிப்பு நவமணிக்கு.

குட்டி என்று ஆசையாய் கன்னம் வருடியவர் ஐயோ என்னம்மா இது கன்னிப்போய் இருக்கு! பதறினார்.

மன்னர் உடைந்துவிட்டான்.

அது…. அதும்மா மல்லிகை பந்தலில் பூ பறிக்கும் போது கதண்டு மாதிரி பூச்சு கடிச்சுடுச்சு நான் அரிக்குதுன்னு தேய்ச்சுட்டேன்.

என்ன சாமி இது…. கவனமா இருக்க கூடாதா? ஏதாவது மருந்து போட்டியா இல்லையா?

ம்ம்ம்ம்ம் என்று பலமாய் தலையாட்டினாள்.

வந்தவங்களை வாசலில் நிற்க வச்சே பேசுவியா? பூவராகன் கடிந்து கொண்டார்.

அண்ணி எங்கேம்மா? அண்ணிக்கு விசேஷமா?  ஆசையாய் உள்ளே ஓடினாள்.

ஆம் சுகன்யாவிற்கு நாட்கள் தள்ளி போயிருக்கிறது. மூன்றாண்டுகளாய் காத்திருந்த செல்வம் இப்போது கிட்டியிருக்கிறது.

வாங்க மாப்பிள்ளை என்று அறையில் இருந்து வந்த கிருஷ்ணா மன்னரின் கரம் பற்றினான்.

அப்பா ஆகிட்டீங்க வாழ்த்துக்கள் என்று மன்னர் கரம் பற்றி குலுக்கினான்.

கார் வாங்கின போட்டோலாம் அனுப்பினீங்க இப்போ பைக்கில் வந்திருக்கீங்க? ஆச்சரியமாய் கேட்டான்.

இல்லை…. இன்னும் RC மாத்தலை, இன்ஷூரன்ஸ் மாத்தணும்.

கார் நல்லா இருக்கு மாப்பிள்ளை…. நான் கூட செகன்ஸ் தான் வாங்கலாம்னு யோசிக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவங்க இருந்தா சொல்லுங்க. சீப் அன் பெஸ்ட்டா வந்தா பார்ப்போம் என்றான்

“—————————“

அண்ணி என்று சுகன்யாவை கட்டிக்கொண்டாள் சுபி.

சுபி என்ன ஆளு டல்லா இருக்க? நாத்தனாரை அடி முதல் நுனி வரை நோட்டம் விட்டாள்.

வீட்டுல அக்காங்க எல்லாம் வந்திருக்காங்க கொஞ்சம் வேலை அதிகம் அவ்வளவு தான் அண்ணி.

ஏன் அவங்க என்ன விருந்தாளியா? ஆக்கி அரிச்சு தின்னுட்டு சந்தோஷமா போய் சேரவேண்டியது தானே…?

ஆளா ஒரு வேலை செய்தால் சுமை தெரியாது. அவங்க சிம்மாசனத்துல உட்கார்ந்து தீர்ப்பு சொல்லிட்டு இருப்பாங்க நீ சேடிப்பொண்ணு வெஞ்சாமரம் வீசினியோ? பொங்கி விட்டாள்.

அட அண்ணி அதை விடுங்க! எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நான் அத்தை ஆகப் போறேன். டாக்டரை பார்த்தீங்களா?  எனக்கு மருமகள் தான் வேணும் சொல்லிட்டேன். ஆமா தேவி அக்காக்கு செய்தி தெரியுமா?

பட படவென பேசும் சுபியை உன்னிப்பாய் கவனித்தாள் சுகன்யா.

சுபி நீ அங்கே சந்தோஷமா இருக்க தானே….? முகத்தை வைத்து படிக்க முனைந்தாள்.

எனக்கு என்ன அண்ணி குறை? ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள் மலர்ச்சியுடன்.

உங்க அண்ணா கூட சொல்றாங்க மாப்பிள்ளை தங்கமானவராம். கருத்தான பையன்னு மாமா கூட பெருமையா தான் பேசுறாரு.

மாமியார் நல்லத்தனமா நடந்துக்குறாங்களா?

ம்ம்ம்ம்ம்ம் என்றாள் விழி அசைத்து தலையாட்டி.

எத்தனை நாள் அண்ணி லீவ் போட்டிருக்கீங்க?

உங்க அண்ணா வேலையை ரிசைன் பண்ண சொல்றாரு! நான் தான் ரெண்டுவாரம் மெடிக்கல் லீவ் போட்டிருக்கேன். சூழ்நிலை பார்த்து அப்புறம் முடிவு எடுப்போம் என்றாள்.

“—————————“

இரவு உணவின் போது பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.

அத்தை சுபி வேணா நாலு நாள் தங்கிட்டு வரட்டும் நான் நாளைக்கு கிளம்புறேன் என்றான்.

இல்லை மாப்பிள்ளை அங்கே உங்க அண்ணிங்க வந்திருக்கும் போது….. நவமணி அவ்வளவு தயங்கினார்.

அதுக்கென்னத்தை சுபி அவங்க அண்ணியை பார்க்க வந்திருக்கா…. அவங்களோட நாலு நாள் சந்தோஷமா இருக்கட்டும் என்றான்.

கணவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

உண்மையில் அவள் ஓய்வு எடுக்கட்டும் என்று தான் இங்கே கொண்டு வந்து விட்டான்.

மூத்த மருமகள்கள் ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க சுப்புரஜா ஓடி ஓடி வேலை செய்வது அவனுக்கு பிடிக்கவில்லை.

சாருக்கு என்னை பார்த்தா அவ்வளவு கடுப்பு ஏறுது….! அது தான் தள்ளிவிட்டு போக வந்திருக்காரு. உள்ளம் வெதும்பினாள்.

இரவு படுக்கையில் கூட அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

இவள் என்னை புரிந்து கொள்ளவே மாட்டாளா? மனம் வலித்தது. ஆசையாய் அள்ளி அணைக்க நீண்ட கரத்தை அடக்கிக் கொண்டான்.

வாழ்க்கை என்பது அமைவது அல்ல அமைத்துக் கொள்வது! அது ஒரு தாராக மந்திரம் சிலருக்கு மட்டுமே அந்த சூட்சுமம் விளங்கும்.

கொண்டவள் துணை இருந்தால் தான் குபேரன் ஆக முடியும்!  தொண்ணூறு ரூபாயோடு இறுக்கி பிடித்து பத்து ரூபாய் சேர்த்து நூறாக்கவும் ஒரு பெண்ணால் முடியும்! தொண்ணூறு ரூபாய் தானே ஒரே நொடியில் அலட்சியமாய் உதறி விடவும் முடியும்.ஒரு குடும்பத்தின் நிம்மதி மட்டுமல்ல பொருளாதாரமும் கொண்டவளின் கையில் அல்லவா இருக்கிறது?

இவள் என்று உணர்ந்து திருந்தி யதார்த்தம் புரிந்து கொள்வாளோ? ஆயாசமாய் இருந்தது அவனுக்கு.

என்று நான் கஞ்சனாய் இருந்திருக்கிறேன்? எதில் அவளுக்கு குறை வைத்தேன்? அவனுக்கே விளங்கவில்லை.

உங்க பொண்ணு சரியில்லை என்று அவளை பெற்றவர்களிடம் முறையிட முடியுமா?

உண்மையில் லட்சங்களில் சம்பாதிக்கும் அண்ணன்களோடு அவன் ஈடு கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறான். என்றுமே அவர்களை விட அவன் தாழ்ந்து விடவில்லை.

அவர்களுக்கு சம்பளம் என்ற ஒரே வருமானம் பெரிதாய் வருகிறது என்றால் இவன் சம்பளத்தோடு ஆடு வளர்ப்பு, காய்கறி பயிர், விவசாயம் என்று கடினப்பட்டு சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

அவனுக்கு உறக்கமே வரவில்லை. ஆழ்ந்து குழந்தை போல் உறங்குபவளை கண்டு சிரிப்பாகவும் இருந்தது கொஞ்சம் வேதனையாகவும் இருந்தது.

என்னை புரிந்து கொள்ளேன் என் தேவதை பொண்ணே!  என்னை நம்பி என் கரத்தை மட்டும் பற்றிக்கொள் நான் உன்னை காதலுடன் கௌரவமாய் கரை சேர்க்கிறேன்!  தனக்குள்ளே ஏங்கினான்.

நெற்றியில் முத்தமிட்டு விலகி படுத்துக் கொண்டான்.

“———————–“

சாப்பிட்டு போவீங்களாம் என்றாள் அவன் முகம் பாராமல்.

இல்லை காபி போதும்! நான் சீக்கிரம் கிளம்பணும் இன்னைக்கு ஒரு முக்கியமான கேஸ் இருக்கு என்றான்

உங்க மாமியார் ஓடி ஓடி சமைச்சுகிட்டு இருக்காங்க போய் சொல்லிட்டு கிளம்புங்க! வெடுக்கென்று பேசிவிட்டு கிளம்பினாள்.

இட்டலி இரண்டு வகை சட்னி சாம்பார் என்று அவசரமாய் நவமணி தாயார் செய்துவிட்டார். மறுக்க முடியாமல் சாப்பிட்டு கிளம்பினான்.

சரி நான் கிளம்புறேன்….. எப்போ வரேன்னு போன் பண்ணு நான் வந்து அழைச்சுட்டு போறேன் என்றான்.

ம்ம்ம்ம்ம் என்றவளுக்கு தொண்டை அடைத்தது.

அவனுக்குமே அவளை விட்டு செல்ல மனசில்லை. இதுவரை பிரிந்தது இல்லை.

கிளம்பும் அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

போய் விடுவாயா என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்

வறியா என்றான் சிரிப்புடன்.

ம்ம்கூம் என்று மறுப்பாய் தலையாட்டினாள்.

நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு! பொறுமையாவே வா! என்றவன் கிளம்பிவிட்டான்.

“————————–“

நேரே ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டவன் இரவு தான் வீட்டிற்கு வந்தான்.

என்னப்பா சுபி வரலையா?  பாப்பாத்தி தோசை ஊத்திக் கொண்டே கேட்டார்.

இல்லமா அவங்க அண்ணி கர்ப்பமா இருக்காங்க…. அவங்க கூட ரெண்டு நாள் தங்கிட்டு வரேன்னு சொன்னா.

அப்படியாப்பா ரொம்ப சந்தோஷம். நாலு நாள் தங்கிட்டு வரட்டும் என்ன இப்போ என்றார்.

அதெல்லாம் உங்க பிள்ளையே அங்கே இருக்கட்டும்னு விட்டுட்டு வந்திருப்பாரு என்றாள் அஞ்சலி.

ஏன் அதனால் உங்களுக்கு என்ன கஷ்டம் என்றான்.

நாங்களாம் அப்படி விபரமா இருந்தவங்க இல்லை. கூட்டு குடும்பத்துல அனுசரித்து இருந்தோம்….

தெரியுமே…. நீங்க எப்படி இங்கே அனுசரித்து இருந்தீங்கன்னு ஆனி மாசம் கல்யாணம் ஆகி ஆடி மாசம் அம்மா வீட்டுக்கு போய் அப்படியே தனிக்குடிதனம் போனவங்க தானே…. சுருக்கென்று கேட்டான்.

அவர் பொண்டாட்டிக்கு நோகும்னு கொண்டு போய் விட்டுட்டு வந்திருக்காரு அது அவர் இஷ்டம் நீ வாயை மூடு அஞ்சலி! நியாயம் பேசுகிறாளாம் சங்கீதா.

நீங்க ரெஸ்ட் எடுக்க மாமியார் வீட்டுக்கு வந்த மாதிரி அவ ரெஸ்ட் எடுக்க அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா.

தம்பி ரொம்ப பேசாதீங்க!  நாங்க வந்ததே உங்களுக்கு பிடிக்கல போல…இது என்னவோ உங்களுக்கு மட்டும் தான் வீடு மாதிரி…. இதை நீங்க தான் தலையில் சுமக்கிற மாதிரி…. வெடு வெடுவென்று பேசிவிட்டாள் சங்கீதா.

நீங்க வந்தா எனக்கு ஏன் பிடிக்கல?இது எனக்கு மட்டும் வீடு இல்லை என்னோட வீடும் கூட…. இங்கே என் பொண்டாட்டி மட்டும் மருமகள் இல்லை. சாப்பிட்டு கைகழுவியவன் உள்ளே போய்விட்டான்.

மகனின் இவ்வளவு பேச்சுக்கும் பாப்பாத்தி அமைதியாகவே இருந்தார்.

வந்து ஐந்து நாட்களில் துரும்பை கூட கிள்ளி போடவில்லையே அவர்கள்.

சுபி போனில் மாமியாரிடம் பேசினாள். நான்கு நாட்களில் வந்துவிடுவதாக  கூறினாள்.

நீ பொறுமையாவே வாம்மா! இங்கே உனக்கு ஓய்ச்சல் ஓய்வே இல்லை. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து உடம்பை தேத்திகிட்டு வா என்றார்.

நீங்க தனியா என்ன பண்ணுவீங்க? கவலை கொண்டவள் அக்காங்களை ஹெல்புக்கு கூப்பிட்டுக்கோங்க என்றாள்..

நான் போய் என்ன கூப்பிட? வயாசன மாமியார் ஒத்தையில வேலை செய்றாங்கன்னு அவங்களே வந்து ஒத்தாசை பண்ணனும்.

“————————“

சங்கிக்கா எவ்வளவு நேக்கா பொண்டாட்டியை கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டான் பார்த்தியா? பேசி பேசி மாய்ந்தாள் அஞ்சலி.

இந்த கிழவி அனுப்பி வச்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி டபுள் கேம் ஆடுது பாரு! சங்கீதா பொருமினாள்.

வருஷத்துக்கு மூனு நாலு முறை வரோம்…. அந்த பத்து நாளு நம்மை சந்தோஷமா வச்சு பார்த்துக்க அவங்களுக்கு மனசு இல்லை பாரு!

அவங்க ராஜ்ஜியமாவே இருக்கணும்!  அவங்க ஆண்டு அனுபவித்த மீதி மிச்சத்தை நாம கவ்விகிட்டு போகணும்! சங்கீதா கொதித்துக் கொண்டிருந்தாள்.

மன்னர் பின்னால் நிற்கிறான் என்று தெரிந்து தான் பேசினாள்.

வாய் இருக்குன்னு பேசாதீங்க! யாரு எதை ஆண்டு அனுபவிச்சதை நீங்க பார்த்தீங்க? கோபமாய் மீசையை முறுக்கிக் கொண்டு வந்து நின்றான்…

மன்னரு வேண்டாம் சாமி இடையில் வந்து நின்று கெஞ்சினார் பாப்பாத்தி. இதை கொண்டு சண்டை பெரிதாகி மனஸ்தாபம் ஆகிவிடுமோ என்ற பயம் அவருக்கு.

பல குடும்பங்களில் பெண்களில் தொடங்கும் சண்டை ஆண்களின் அடிதடியில் முடிவடைவதுண்டு.

ம்மா அவங்க என்ன பேச்சு பேசறாங்க! நான் கேட்டுட்டு இருக்கணுமா?பத்து காசு இந்த குடும்பத்து வருமானத்தை நாங்க சாப்பிட்டது இல்லை.

என் அப்பா அம்மாக்கு நான் தான் செய்றேன். அது என் கடமையும் கூட.  கரண்ட் பில், தண்ணிவரி,கேபிள், கியாஸ் சிலிண்டர்,மளிகைன்னு நான் வாங்கி போடறேன். நயா பைசா விடாம தேதி வாரியா கணக்கு எழுதி வச்சிருக்கேன். காட்டவா? எரிமலையாய் சீறிவிட்டான்…

உனக்கு ஆதாயம் இல்லாமலா இங்கே இருக்க? உனக்கு நிலம் வாங்கி பயிர் வைக்கணும், ஆடுமாடு வளர்த்து காசு பார்க்கணும்! அதுக்கு தான் இங்கேயே பழியா கிடக்குற…. இவ்வளவு நாள் மனதில் பிராண்டியதை இன்று கொட்டிவிட்டாள்.

வார்த்தையை பார்த்து பேசுங்க! கொட்டிட்டு அள்ள முடியாது.என் அப்பா அம்மா கூட லாபத்துக்காக  நான் இல்லை. வயதான காலத்தில் அவங்களுக்கு தனிமை எண்ணம் வந்துடக்  கூடாதுன்னு தான் அவங்களோட இருக்கேன்.

எனக்கு போலீஸ் குவாட்டர்ஸ் ரெடியா இருக்கு ” நீங்க எல்லாம் விட்டு கிடாசிட்டு சுக போகமா வாழணும்னு போன மாதிரி நானும் போயிருந்தா இவங்க நிலைமை?

சென்னையில் இருந்தா அடிக்கடி வந்து பார்க்கணும் ஏன் தொல்லைன்னு பெங்களூரு போய் செட்டிலான நீங்க  நியாயம் பேச என்ன இருக்கு? செருப்பால் அடித்தது போல் கேட்டான் சங்கீதாவை.

என்ன அத்தை இவ்வளவு பேசுறாரு உங்க பிள்ளை வேடிக்கை பார்த்துட்டு நிற்கறீங்க. மாமியாரிடம் பாய்ந்தாள்.

மன்னரு எது பேசினாலும் உங்க அண்ணனுங்க கூட தான் பேசணும்! பொம்பளைங்கட்ட பேசறது முறையில்லப்பா என்றார்.

அப்போ எதுவா இருந்தாலும் எங்க அண்ணனுங்க தான் கேட்கனும்…. இவங்க கேட்டிருக்க கூடாது.

இவன் பொண்டாட்டிக்கு காவடி தூக்க எப்படி பேசறான் பார்த்தியா அஞ்சலி? அவளை கொண்டு போய் அம்மா வீட்டுல விட்டுட்டு வந்து இங்கே கச்சேரி வைக்கிறான்.

என் பொண்டாட்டிக்கு தூக்காம எவன் பொண்டாட்டிக்கு தூக்கணும்?

ஏன் என் பொண்டாட்டி உங்களுக்கு வேலைகாரியா? உங்களுக்கு சேவகம் செய்யவா அவளை கட்டிக்கிட்டு வந்தேன்? சுரீரென்று கேட்டான்..

 அண்ணிகளுடன் அவனுக்கென்ன வாய்த்தால் தகராறா?அவர்கள் வாய்க்கு வாஸ்து சரியில்லை.. எதையாவது பேசி சுபியை குழப்பி விட்டுவிடுகிறார்கள். அந்த அரைவேக்காடும் ஓரகத்திகளின் வாக்கையே வேதவாக்காக எண்ணிக்கொண்டு வம்பு செய்து வைக்கிறாள். அண்ணிகள் மீது இருந்த கோபத்தை இன்று காட்டிவிட்டான் அவ்வளவு தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!