Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நமக்காக வாழ்வோம் வா

நமக்காக💞3

மாப்பிள்ளை வீட்டார் வந்து கை நனைத்து சென்றுவிட்டனர். பெண்வீட்டாரும் படை பரிவராங்களுடன் சென்று கை நனைத்து வந்துவிட்டனர்.

கை நனைத்து விட்டால் ஏறத்தாழ சம்மந்தம் உறுதி என்று அர்த்தம்.

எல்லாமே கடகடவென நடந்தேறியது. எதற்கு இவ்வளவு அவசரம் என்ற கோபம் சுப்ரஜாவிற்கு.

மாப்பிள்ளைக்கு இன்னும் மூனு மாசத்துல குரு மூனாம் இடத்துக்கு மாறுதாம் அதுக்குள்ள கல்யாணம் முடிக்கணுமாம் என்றார் பூவராகன்.



Advertisement

அந்தாளுக்கு குரு இடம் மாறுதோ இல்லயோ எனக்கு சனி இடம் மாறி ஏழரையை கூட்டுது. உள்ளுக்குள் அவ்வளவு புலம்பினாள்.

அவள் கருத்தை யார் கேட்டது?  அடுத்தடுத்து திருமண வேலைகளை தொடங்கிவிட்டனர்

எதிர்பார்ப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவனை நினைப்போமா?

Advertisement

“——————“

Advertisement

அத்தை உங்க சின்ன புள்ளைக்கு இந்த பொண்ணு எப்படி பிடிச்சுதோ எழிலரசன் மனைவி தீபா கண்சிமிட்டி சிரித்தாள்.

அத்தை கொழுந்தனாரு அந்த புள்ளை கூடவாவது வாய் திறந்து கலகலன்னு பேசுவாரா? மூத்தவன் ஜெயராமன் மனைவி சங்கீதா சிரித்தாள்.

அவன் சுபாவம் அப்படி தான் விடுவீங்களா…. ஜெயராமன் அதட்டினான்.

Advertisement

என்னவோ மாமா எல்லார் வீட்டிலும் கடைக்குட்டி ரொம்ப வாலா இருக்கும். இந்த வீட்டுல தான் இவ்வளவு சமத்தா இருக்கு அஞ்சலி சிரிக்க பாப்பாத்திக்கு சங்கடமாய் இருந்தது.

உண்மை தான் மன்னர் மன்னன் அமைதியானவன் கொஞ்சம் அழுத்தமானவனும் கூட. யாருடனும் நெருங்கி வர மாட்டான். எல்லாவற்றையும் இயல்பாக ஏற்பவன். இந்த வயதில் இவன் ஏன் ஞானி போல் இருக்கிறான் என்று எண்ணாதவர்கள் இல்லை. அவன் சுபாவமே அப்படி தான். அதிகம் பேசமாட்டான் ஆனால் இரத்தின சுருக்கமாக நறுக்கென்று பேசிவிடுவான்.

மூத்த மகன்களிடம் அதிகார தோரணை காட்டும் பூமாலை இளையவனிடம் கொஞ்சம் பதமாக தான் பேசுவார். பாப்பாத்திக்கு கூட இளையவனை கண்டு கொஞ்சம் பயம்.

முகத்திற்கு நேரே சரி தவறை சொல்லிவிடுவான். வாயை திறந்து அம்மாவிடம் கூட இது வேண்டும் அதுவேண்டும் என்று கேட்க மாட்டான். குறிப்பறிந்து செய்தால் ஓகே. செய்யவில்லை என்றாலும் ஏன் என்று கேட்க மாட்டான்.

நட்பு வட்டம் கூட பெரிதாக இல்லை. சசிதரன் , கதிர்வேலு இருவர்மட்டுமே பள்ளிகாலத்தில் இருந்து நண்பர்கள்.

கல்யாணம் கட்டிக்கிட்டு வரப்போறவ எப்படி இவன் கூட குப்பை கொட்டுவாளோ என்று குடும்பத்தார் பயந்தனர்.

பெத்தவர்கள் போலீஸ் வேலை வேண்டாம் என்றனர். மூத்த பிள்ளகள் மூன்றும் முத்தாய் படித்து நல்ல உத்தியோகம் தேடிக்கொண்டது.இவன் மட்டும் BA வரலாறு படித்துவிட்டு போலீஸ் வேலை தேடிக் கொண்டான்.

மூன்று பிள்ளைகளுக்கும் எளிதாய் பெண் அமைந்துவிட்டது. மன்னர் மன்னனுக்கு தான் இரண்டு வருடமாய் தேடுகின்றனர். இதுவரை பனிரெண்டு பெண் பார்த்தாயிற்கு எல்லா இடத்திலும் உதட்டை பிதுக்கியவன் சுப்ரஜாவை கண்டு தான் தலையை அசைத்தான்.

அப்பாடா நீ தலையாட்டியதே போதுமடா சாமி என்று உடனடியாக பேசி முடித்து விட்டார்கள்.

“———————-“

ஏய் சுபி சரியான அமுக்குனி நீ…. செல்லியம்மன் கோயிலில் விளக்கு போட போன இடத்தில் பிடித்துக் கொண்டாள் பள்ளி தோழி சங்கரி.

என்னடி சொல்ற?

வரன் பேசி முடிச்சுட்டாங்க போல…?

ம்ம்ம்ம் என்றாள் சலிப்பாய்.

கிராமத்தில் எதையும் ரகசியமாய் செய்துவிட முடியாது. இங்கெல்லாம் CCTV தேவையே இல்லை. ஒவ்வொரு சோடி கண்களும் ஆயிரம் CCTV க்கு சமம்.

ஈ,காக்கா பறந்தாலே தெரிந்துவிடும். இந்த சம்மந்தம் அமைந்தது தெரியாதா?

என்னடி சுபி நீ ரொம்ப தெளிவான ஆளாச்சே இப்படி சலிச்சுகிற…? மெல்லுவதற்கு அவல் கிடைத்தது என்று அவள் கைபிடித்து அழைத்து போய் வேப்பமரத்தடியில் அமர்த்தினாள்.

“மாப்பிள்ளை போலிசாமே?

“ம்ம்ம்ம்ம்”

கவர்மெண்ட் உத்தியோக மாப்பிள்ளை கிடைச்சிருக்கு இதை விட வேறென்னடி வேணும்? நான் எல்லாம் பாரு டைல்ஸ் ஒட்டுறவனை கட்டிக்கிட்டு காலம் தள்ளுறேன்.

அவள் வாய் திறக்கவேயில்லை.

மாப்பிள்ளை எப்படி இருக்காரு? உனக்கு விஜய் தேவரகொண்டா பிடிக்குமே அப்படி இருக்காரா? தோளில் இடித்தாள்.

ம்ம்ம்கும் “அனோகொண்டா கணக்கா இருக்கான்” உள்ளுக்குள் புலம்பிக் கொண்டாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சுப்ரஜாவின் போன் இசைத்து அழைத்தது. புது எண்ணாக இருந்தது.

யாரது? புருவம் நெறித்தவள் ஹலோ என்றாள்!

புதன் கிழமை புடவை வாங்கிடலாம்னு பிளான் பண்ணியிருக்கோம் உனக்கு ஓகே தானே என்றான்.

குரலை வைத்து இனம் கண்டு கொண்டாள். மிடுக்கான நறுக்கான குரல் அல்லவா? பதில் சொல்லாது அமைதியாக இருந்தாள்.

“சுப்ரஜா” குரலை உயர்த்தினான்

நீங்க அப்பாக்கு கால் பண்ணி பேசுங்க!

அது எனக்கு தெரியும்! உனக்கு தோதுபடற நாளா இருக்கான்னு கன்பார்ம் பண்ண தான் உனக்கு கால் பண்ணினேன்.

உனக்கு ஓகேன்னா உங்க வீட்டுல பேசுவேன்.

தெரியல என்றாள்.

என்ன தெரியல?

நீங்க பெரியவங்கட்ட பேசி முடிவு பண்ணுங்க.

சரி நான் புதன் கிழமை பிக்ஸ் பண்ணிடறேன். திருச்சி சாரதாஸ் உனக்கு ஓகே தானே?

என்னை கேட்டா? சலிப்பாக இருந்தது அவளுக்கு.

நீ தானே கட்டப்போற?

அடேங்கப்பா ரொம்ப தான் என் விருப்பத்தை கேட்குறான். மாப்பிள்ளையை பிடிச்சிருக்கானே கேட்கல இதுல புடவை பிடிக்குதான்னு கேட்கிறது தான் குறை… உள்ளம் குமுறியது.

என்ன யோசனை? பதில் சொல்ல மாட்டியா?

உங்க இஷ்டம் போல செய்யுங்க! எங்க வீட்டில் பேசி முடிவு பண்ணிக்கோங்க. நான் கோயிலுக்கு விளக்கு போட வந்திருக்கேன். கடுப்புடன் அழைப்பை துண்டித்தாள்.

ஹேய் சுபி மாப்பிள்ளையாடி?

ம்ம்ம்ம்!

பரவாயில்லையே போன் பண்ணி ரொமான்ஸ் எல்லாம் பண்றாரு.

“இவ ஒருத்தி” பல்லைக்கடித்தாள்.

பெண் பார்த்துவிட்டு போய் இருபத்து நான்கு நாள் ஆகிறது. கை நனைத்து உறுதி செய்து பத்து நாள் ஆகிவிட்டது. நிச்சயத்திற்கு தேதி குறித்து விட்டார்கள். ஒரு வார்த்தை போன் செய்து அவன் பேசவில்லை. இன்று அதிசயத்திலும் அதிசயமாய் துப்பறிந்து அவள் கைபேசி எண்ணை கண்டுப்பிடித்து அழைத்து விட்டான்.  அவளுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. தோழிகள் வட்டத்தில் வரன் பேசி முடித்து விட்டாலே போனும் கையுமாய் கடலை வறுத்துக் கொண்டிருப்பார்கள்.

எப்படி இருக்க? என்ன பண்ற? இப்படி ஒரு நல விசாரிப்பு கிடையாது. எடுத்த எடுப்பிலே புடவை வாங்க போகணும்னு தகவல் சொல்ல வந்துட்டாரு. சரியான மங்குனியா வந்து அமைந்திருக்கு பாரு. இந்த போலீசைகட்டிக்கிட்டு…. அவள் பெருமூச்சு விட்டாள்.

அவ்வளவு தான், அதன்பிறகு அவன் அழைக்கவே இல்லை. இவ்வளவு நாள் தன் அலைபேசி எண் தெரியவில்லை அதுதான் அழைக்கவில்லை என்று எண்ணியிருந்தாள். இப்போது தெரிந்தும் அழைக்கவில்லை ஒரு குருஞ்செய்தி கூட அனுப்பவில்லை என்று வருத்தம் கொண்டாள்.

அவனுடனான வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

“————————-“

திருச்சி, சிங்காரதோப்பு நேதாஜி சாலையில் அமைந்துள்ள சாரதாஸ். ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலே பெரிய ஜவுளிகடல். இன்றளவும் புகழ் குறையாத கடைதான்.

பெண் வீட்டார் தனியே மாப்பிள்ளை வீட்டார் தனியே வேன் வைத்து நெருங்கிய உறவுகளுடன் வந்திருந்தனர்.

மாப்பிள்ளையை காணோம்? பூவராகன் சம்மந்தியிடம் கேட்டார்.

வந்துடுவான். இங்கே தான் எங்கேயோ போனான். நீங்க வாங்க! பூமாலை அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்.

நம்ம சொந்தத்தில் யாரும் போலீஸ்காரனுக்கு பெண் கொடுக்கல நம்ம தான் பலியாடு போல… உள்ளம் நொந்தாள்.

சுபி நீ நல்லா படிச்சிருக்கலாம். தன்னைதானே நிந்தித்துக் கொண்டாள். ஜாடிக்கு ஏத்த மூடி தானே தேடமுடியும்? கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். மனதின் வேதனை இதயத்தை அழுத்தியது.

எதற்கும் கலங்காத இயல்பான குணம் கொண்டவள் சுபி. சிரித்த முகமும் படபட பேச்சும் தான் அவள் அடையாளம். இப்போது இரண்டும் மிஸ்ஸிங்.

என்ன கலர் பார்க்க போற? தங்கையிடம் கேட்டாள் தேவிகா.

தெரியலைக்கா என்றாள் விட்டேற்றியாக.

உனக்குன்னு ஆசை இருக்குமில்ல.

அப்படி எல்லாம் இல்லை என்றாள் நைந்த குரலில்.

இப்போல்லாம் லைட் கலர் தானே எடுக்குறாங்க என்றாள் அஞ்சலி. கல்பாக்கத்தில் இருக்கும் சரவணன் அஞ்சலி மட்டுமே வந்திருந்தனர். மற்றவர்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. தொலைவில் உள்ளவர்களை ஏன் தொல்லை செய்ய வேண்டும் என்று விட்டுவிட்டனர்.

இதோ உங்க புள்ள வந்துட்டாரு என்றாள் அஞ்சலி.

மெல்ல ஓரக்கண்ணால் பார்த்தாள் சுப்ரஜா. அவன் கண்டுகொள்ளவே இல்லை.

சாம்பல் வண்ண டிஷர்ட் அணிந்திருந்தான். காலர் வைத்த டிஷர்ட்டில் குறுக்காக கறுப்பு வண்ண கோடு போட்டிருந்தது. நீல நிற ஜீன்ஸ். கையில் வாட்ச் கூட கட்டவில்லை. பெண் பார்க்க வந்ததை விட இன்று நன்றாக தான் இருந்தான்.

என்னம்மா இன்னும் பார்க்கவே ஆரம்பிக்கலையா? என்றான் தாயை பார்த்து.

நீ வரட்டுமேன்னு தான்….

சுப்ரஜாக்கு பிடித்த மாதிரி பார்க்க சொல்லுங்க!

நாங்களாம் மெரூன், ராயல் ப்ளூ, மாம்பழ கலர் இப்படி தான் வாங்குறது வழக்கம் என்றார் மன்னர் மன்னனின் சித்தி.

சித்தி அவங்களுக்கு பிடித்த மாதிரி பார்க்கட்டும் என்றவன் நீங்க பாருங்க என்றான் தேவிகாவிடம்.

அத்தை எங்களுக்கெல்லாம் இருபத்தஞ்சாயிரத்துக்குள்ள தான் எடுத்தீங்க!  வந்த வேலையை சிறப்பாக தொடங்கினாள் அஞ்சலி.

இன்னைக்கு விக்கிற விலைவாசிக்கு அந்த ரேட்ல பார்க்க முடியுமா?என்று நியாயமாய் பேசினார் பூமாலை.

நவமணிக்கு மாப்பிள்ளையின் அண்ணி பேசியது பிடிக்கவில்லை. எவ்வளவு கறார் பேர்வழியா இருக்கு இந்த பொண்ணு?  சுபி எப்படி அங்கே தாக்கு பிடிப்பாளோ!

“அப்பா அந்த ரேட்டிலே பாருங்க போதும்” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் சுப்ரஜா.

புடவையை பாரு என்று கண்களால் ஜாடை காட்டினான்.

ஆளுக்கு ஆள் அவரவர் விருப்பப்படி எடுத்துக்காட்டி அவளுக்கு ஆலோசனை கூறி ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தனர்.

அவள் குழம்பிப்போய் தவித்து அமர்ந்துவிட அந்த கோல்ட் கலர் சாரி எடுங்க! அது இல்ல மெரூன் ஷேட் அது தான் மூனாவதா இருக்கே… அது தான். இது பாருங்க தேவிகா கையில் கொடுத்தான்.

விற்பனை பிரிவு பெண் முந்தியில் அழகாக  மடிப்பு வைத்து சுப்ரஜாவின் தோளில் வைத்து காண்பித்தாள். கண்ணாடி முன் நின்று பார்த்த சுப்ரஜாவிற்கு திருப்தியாய் இருந்தது. தேவிகாவும் தங்கைக்கு இந்த புடவை பொருத்தமாக இருப்பதாக சூப்பர் என்று காட்டினாள்.

மற்றவர்களுக்கும் தேவையான துணி மணிகள் வாங்கி கொண்டிருந்தனர். நேரம் போய் கொண்டே இருந்தது. சுப்ரஜா அசௌகரியமாய் இருந்தாள். முகத்தில் சோர்வு கண்களில் அவ்வளவு களைப்பு தெரிந்தது.

ஏன் ஒருமாதிரி இருக்காங்க? தேவிகாவிடம் கேட்டான்.அந்த மூன்று நாட்களாக இருக்குமோ என்ற எண்ணம் அவனுக்கு.

காலையில் அவ சாப்பிடல.. அது தான் டல்லா இருக்கா.

ஏன்?

இயலி மார்னிங் டிராவல் பண்றது அவளுக்கு சம்டைம்ஸ் வாமிட் வந்துடும். அதுதான் சாப்பிடாமலே வந்துட்டா.

வரச்சொல்லுங்க! நான் கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கி கொடுக்கிறேன்.

தங்கையை தனியே அழைத்த தேவிகா இவரோட போய் ஏதாவது சாப்பிட்டு வா என்றாள்.

இல்லக்கா பசிக்கல…ஒரு மாதிரி இருக்கு. அவள் மறுத்தாள்.

வா! என்றான் அழுத்தமாய் அவள் காதோரம் குனிந்து.

அவள் தேவிகாவை பார்க்க…. “வாடி என்றான் பல்லைக்கடித்து சின்ன குரலில்”.

ஷாக் அடித்தார் போல் நின்றுவிட்டவள். பதட்டத்துடன் அவன் பின்னே நடந்தாள்.

இப்படியே இழுத்துட்டு ஓடிட மாட்டேன். தாலி கட்டிதான் கூட்டிட்டு போவேன் என்றான் அழுத்தமான குரலில்.

அவளுக்கு படபடவென இருந்தது.

“—————————“

ஏதாவது ஜூஸ் மாதிரி போதும் என்றாள்.

அவன் எதுவும் பேசவில்லை. ரங்க விலாஸ் என்னும் சைவ உணவகத்திற்கு அழைத்து போனான்.

இரண்டு மீல்ஸ் ஆர்டர் பண்ணினான்.

ஜூஸ் மட்டும் போதும்…. அவனை நிமிர்ந்து பார்க்காமலே சொன்னாள்.

மணி பனிரெண்டே கால் ஆகுது. இது லன்ச் டைம் தான் என்றான்.

ஜூஸ் குடித்தால் மதியம் உண்ண மாட்டாளே…அதுதான் சாப்பாடு ஆர்டர் பண்ணிவிட்டான்.

பேபி பிங்க் வண்ண சுடிதாரில் அவ்வளவு அழகாக ரோஜாப்பூ போல இருந்தாள். எதிரில் அமர்ந்திருந்தவன் இப்போது பக்கத்தில் வந்து அமர்ந்தான். அவளுக்கு மூச்சு முட்டியது.

ஏதாவது கேட்கணுமா? சன்னமான குரலில் கேட்டான்.

எங்கிருந்து குரல் வந்தது? அவள் தடுமாறிவிட்டாள். உதடு பெரிதாய் நீங்கவே இல்லை. ஆனால் இவன் தான்.

பேசினானா? குழம்பி விட்டாள்.

புடவை பிடித்திருக்கா? மீண்டும் அதே தொணியில் கேட்டான்.

ம்ம்ம்ம்ம் என்றாள்.

சாப்பாடு வந்துவிட்டது.

மெனுவில் என்னென்ன இருக்கிறது என்று முதலில் பார்த்துக் கொண்டான்.

சாதம் வைத்து சாம்பார் ஊற்றி கோசு கேரட் பீன்ஸ் கலந்த கலவை பொரியல் இன்றைய மெனுவில் இருந்தது அதை ஓரமாக வைத்துக்கொண்டு கீரைக் கூட்டை மறுபுறம் வைத்து சாப்பிட தொடங்கிவிட்டான்.

தீனி மூட்டை எப்படி சாப்பிடறான் பாரு! எச்சில் விழுங்கினாள்.

பார்த்துட்டே இருக்க போறியா? என்றான்.

கீ கொடுத்த பொம்மை போல் அவளும் சாப்பிட தொடங்கிவிட்டாள்.

வேற? கேட்டுக்கொண்டே தண்ணீர் எடுத்து அருந்தினான்.

உங்களுக்கு சம்பளம் எவ்வளவு?

புரையேறி தலையில் தட்டிக் கொண்டவனை அவள் தயக்கமாய் நிமிர்ந்து பார்க்க.

உன்னை சந்தோஷமா வச்சு பார்த்துக்குற அளவு சம்பாதிக்கிறேன் என்றான்  மீசையை நீவிக் கொண்டு.

சாரி…. அவளுக்கு தொண்டை வற்றிவிட்டது.

எதுக்கு சாரி? என்னோட பேஸிக்  பே 18200 கிரேடு பே 2400 என்றான் சிரித்தபடியே.

அப்படின்னா? அவளுக்கு புரியவில்லை.

ம்ம்ம்ம்ம்…. பிடித்தம் எல்லாம் போக கையில் நாற்பத்தெட்டாயிரம் வாங்குறேன் என்றான்.

நம்ம குடும்பம் பண்ண போதும் தானே…? ஆழ்ந்து பார்த்தான்.

அது… சும்மா நான் அது…. சோத்தை பிசைந்து கொண்டிருந்தாள்.

பிசைந்தே பொங்கல் ஆக்கிடாத!

சற்றுநேரம் அவள் எதுவும் பேசவில்லை.

அவன் சாப்பிடுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

நீங்க என்ன போலீஸ்?  தயக்கமாய் கேட்டாள்.

அவனுக்கு சிரிப்பு பொங்கி வந்துவிட்டது.

காமெடி போலீஸ் இல்லம்மா என்றான் இதழ் ஓரம் சிரிப்பை அதக்கி.

தவறாக பேசிவிட்டோமோ என்று அவள் படபடப்புடன் பார்த்தாள்.

உங்க வீட்டுல சொல்லலையா? டேபிளில் கையை ஊன்றி அதில் கன்னம் சாய்த்து அவளை குறுகுறுப்பாய் பார்த்தான்.

இல்லை என்பதாய் உதடு பிதுக்கினாள்.

கிரேடு 2 கான்ஸ்டபில் என்றான்.

கான்ஸ்டபிலா? குரல் உள்ளே போனது அவளுக்கு.

ஏன்? ஆர்வமாய் கேட்டான்.

SI கூட இல்லையா?

ம்கூம் என்று தலையாட்டினான்.

குவார்டர்ஸ் உண்டா?

ம்ம்ம்ம்ம் ஆனா நான் தான் வாங்கிக்கலை.

ஏன்?

என் ஒருத்தனுக்கு எதுக்கு குவார்ட்டர்ஸ்.

ஓ….. என்றாள்.

வேற… தாராளமாய் சாம்பார் ஊற்றி சோற்றை பிசைந்தவன் SI தான் வேணுமா? என்றான்.

இல்ல ACP….

எதே…. அவன் அதிர்ந்து விட்டான்.

அது… சினிமால ஹீரோலாம்

ACP யா இருப்பாங்களே…. தலை தாழ்த்தி கொண்டாள்.

சரிதான்….சூர்யா படம் பார்ப்பியோ?

அவள் பதிலே பேசவில்லை.

——–தொடரும்——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!