Skip to content
Post Views: 4,131
தீபா எழில் உடன் பாப்பாத்தி பூமாலை ஆகியோரும் சென்று குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வந்தனர்.
மறுநாள் மன்னர் விடுப்பு எடுத்துக்கொண்டு டாக்டர் பவானி தணிகாசலத்திடம் அப்பாயின்மென்ட் வாங்கி அண்ணன் அண்ணியை அழைத்து சென்றான்.
அவர் புதிதாக எதுவும் டெஸ்ட் எடுக்க சொல்லவில்லை. ஏற்கனவே எடுத்திருந்த டெஸ்ட் விபரங்களை கேட்டு அறிந்து கொண்டவர் எழிலுக்கு விந்து அணுக்களின் அளவை அதிகரிக்க மருந்து எழுதி கொடுத்தார்.
போதுமான அளவிற்கு கவுண்டிங் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள் என்று எழில் சங்கடம் கொண்டான். எந்த ஆணுக்குமே தன் ஆண்மையை பற்றி பேசுவது இழுக்கு என்ற ஒரு எண்ணம் இருக்கும் அல்லவா?
ஸீ மிஸ்டர் எழில் இதில் அசிங்கமா நினைக்கவோ வருத்தப்படவோ ஒண்ணுமே இல்ல…. மெடிக்கல் இன்னைக்கு அட்வான்ஸா இருக்கு எல்லாத்துக்குமே சொல்யூஷன் இருக்கு.நீங்க கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணனும் அவ்வளவுதான்! நீங்க படித்தவர் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
விந்து அணுக்கள் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியம் அல்ல அது எவ்வளவு வீரியமாக இருக்கிறது என்பதுதான் முக்கியம் இதை நாங்கள் ஆக்டிவ் மோட்டில் என்று சொல்வோம்.
Advertisement
உங்களுக்கு எதுவும் குறை இருப்பதாக அர்த்தமல்ல இது ஆரஞ்சு ஃப்ளேவர் ரஸ்னா பவுடர் மாதிரி தான் இருக்கும். நீங்க தண்ணியிலே கலந்து குடிக்கலாம். தொடர்ந்து பத்து நாள் குடித்து பாருங்க நல்ல ரிசல்ட் தெரியும். மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க எங்காவது ரெண்டு பேருமா வெளியில் போயிட்டு வாங்க. மற்றபடி நீங்க ரெண்டு பேருமே பர்ஃபெக்டா இருக்கீங்க.
எதையும் நம்பிக்கையோடு செய்யுங்க! மருத்துவராக இருந்தாலும் சரி, கடவுளாக இருந்தாலும் சரி நம்பிக்கை முக்கியம் என்றார் சிரித்த முகமாக.
மலர்ந்த முகமாக விடை பெற்று சென்றனர் தீபாவும் எழிலும். மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது பாப்பாத்திக்கு.
Advertisement
“————————–“
Advertisement
நல்ல நாளிலே நாலு வீட்டு வேலை செய்வாள் சுபி இப்போது கேட்கவும் வேண்டுமா?
அவள் எவ்வளவு சிணுங்கினாலும் மன்னர் கிடுக்கிப்பிடி போட்டு அவளை வேலை வாங்கி விடுவான். எவ்வளவு குமட்டினாலும் சத்தான ஆகாரம் கொடுப்பதை நிறுத்த மாட்டான்.
வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை சாப்பிட்டு எடு என்பான்.
Advertisement
போன் செய்து அக்கா,அம்மா, அண்ணி என்று ஒரு பாட்டம் புலம்பி தீர்த்து விடுவாள்.
உனக்கு மன்னர் தான் சரி என்று சிரிப்பார் நவமணி.
அட போ சுபி நீ உன் புருஷன் பெருமையை பீத்திக்கிற.. இங்கே உங்க அண்ணன் நான் சாப்பிட்டேனா இல்லையா என்று கூட கேட்கிறது இல்லை அவருக்கு நேரமில்லை. சார் அம்புட்டு பிசி…என்று அலுத்து கொள்வாள் சுகன்யா.
மாதம் இருமுறை மகளை வந்து பார்த்துவிட்டு சென்றுவிடுவார் நவமணி. அவளுக்கு தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கும் அல்லவா?அவளுக்கு பிடித்த பலகாரங்களாக செய்து கொண்டு வருவார்.
பாப்பாத்தியும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து அவள் விருப்பத்திற்கு கேட்டு செய்து கொடுப்பார்.
மற்ற மருமகள்களை விட அதிகம் கொடுத்து வைத்தவள் சுபிதான்.வேறு யாருக்கும் இவ்வளவு பணிவிடை பாப்பாத்தி செய்ததில்லை. அவர்கள் யாரும் கர்ப்ப காலத்தில் மாமியாரோடு இருந்ததில்லை.அந்த ஏக்கங்களை எல்லாம் போக்கும் விதமாக கண்ணுக்குள் வைத்து பொத்திக் கொண்டார் பாப்பாத்தி.
“——————–“
ஓரளவு வாழ்க்கைகான நெளிவு சுழிகளை மெல்ல புரிந்து கொள்ள தொடங்கி இருந்தாள் சுபி. ஒரேடியாக திருந்தி விட்டாளா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவளிடமிருந்த சிறு முன்னேற்றமே மன்னரை திருப்தி கொள்ள வைத்தது.
கர்ப்ப காலத்தில் என்னென்னவோ ஏக்கம் இருக்கும் பெண்களுக்கு என்று கேள்விப்பட்ட மன்னர், சுப்பம்மா உனக்கு ஏதாவது ஆசை இருக்கா? என்று கேட்டான்.
புளியம் பிஞ்சு பறிச்சு உப்பு வச்சு இடிச்சு கொடுக்குறீங்களா? ப்ளீஸ்…. அவ்வளவு ஆசையாய் கேட்டாள்.
நல்லா ஆசைப்பட்ட போ! முகவாயில் இடித்துக் கொண்டார் பாப்பாத்தி.
போங்கத்தை சற்று கோபத்துடனே முனங்கினாள்.
தம்பி மன்னரு கொஞ்சம் அசந்தா அடுப்பு சாம்பலை அள்ளி தின்னுடறா, இவ கேக்குறான்னு புளியம்பிஞ்சு பறிச்சு கொடுத்துடாதே! போன வாரம் செக்கப்புக்கு போகும்போது டாக்டர் அம்மா நல்லா திட்டி விட்டாங்க…. இரும்பு சத்து குறைவா இருக்காம்.
ஏன் சுப்பு இப்படி பண்ற?அம்மா உனக்காக பார்த்து பார்த்து சமைச்சு கொடுக்கிறாங்க தானே…? அது எனக்கு பிடிக்கணும் இல்ல?முகத்தை அவ்வளவு சுருக்கினாள்.
உண்மைதான், கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு விதமான மனநிலை இருக்கும்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் சாப்பிட தோன்றும். மண்வாசனை சிலருக்கு பிடிக்கும், புளிப்பு பிடிக்கும், சாம்பல் பிடிக்கும்…
அன்பாய் சொல்லி அதட்டி உருட்டி அருகில் இருந்து அவள் மேல் ஒரு பார்வை எப்போதும் வைத்துக் கொண்டுதான் இருப்பார் பாப்பாத்தி.
நீங்க போலீஸ்னா உங்கம்மா சிபிசிஐடி போங்க அவங்களை ஏமாத்தவே முடியல சலித்துக் கொள்வாள் சுபி.
“————————–“
தம்பி மன்னரு வர்ற வியாழக்கிழமை நாலு நல்லா இருக்கு. வளர்பிறையாவும் இருக்கு.ஐந்தாம் மாசம் சீர் கொடுத்துடலாம்னு இருக்கேன் நீ என்னப்பா சொல்ற?
இதெல்லாம் எனக்கு என்னம்மா தெரியும்? என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்துடுவோம்.
நம்ம ஊரு வழக்கப்படி முதல் சீரு மாமியார் கொடுக்கிற சீரு தான்.
சுபி அம்மா வீட்டுக்கு சொல்லணும்.அவங்க அக்காக்கு சொல்லணும். உன் அண்ணனுங்களுக்கு சொல்லணும். நம்ம அங்காளி பங்காளி அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களை அழைக்கணும்
ம்ம்ம்மா இப்போ பெருசா செய்ய வேணாமே….சிம்பிளா வீட்டோட செய்துக்கலாம். வளைகாப்பை நல்லா விமரிசையா செய்துடலாம் என்றான்.
அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ம்ம்மா தீபா வரமாட்டேங்கிறா. என்னை மட்டும் போய் வர சொல்றா…. எழில் வருத்தம் கொண்டான்.
நீ அவகிட்ட போனை கொடு!
த்தை… அவள் குரல் நடுங்கியது.
யாரு என்ன சொல்லுவாங்கன்னு இப்படி அஞ்சி நடுங்குற? யாராவது நாலு பேர் விசேஷம் இல்லையான்னு கேட்பாங்களா? அவ்வளவுதானே கேட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போக போறாங்க. அதுக்காக குடும்பமா சேர்ந்து செய்கிற விசேஷத்தில் நீ கலந்துக்காம இருப்பியா?
யாரு என்ன சொல்லுவாங்களோனு பயந்து வீட்டு மனுஷங்க மனசை கலங்க வைக்காதே…
வீட்டோட தான் செய்யப் போறோம் நம்ம மனுஷ மக்கள் தான் இருப்பாங்க நான் இருக்கேன் நீ வா…!
மாமியாரின் வார்த்தை அத்தனை பலம் கொடுத்தது தீபாவிற்கு.
“————————–“
சங்கீதா, அஞ்சலி, தீபா என்று குடும்பமே முதல் நாளே வந்து சேர்ந்து விட்டனர்.
அஞ்சு வகை சாதம் செய்யணும். அஞ்சு வகை ஊறுகாய் செய்யணும். மருமகள்களோடு கலந்தாலோசித்து கொண்டிருந்தார் பாப்பாத்தி.
அத்தை புளி சாதம்,தயிர் சாதம், எலுமிச்சை சாதம் , பிரிஞ்சி சாதம் இன்னொன்னு என்ன செய்ய? சங்கீதா சந்தேகம் கேட்டாள்.
கறிவேப்பிலை சாதம் செய்தால் நல்லதுக்கா என்றாள் தீபா.
அதெல்லாம் நம்ம சைடில் யாரும் செய்யறது இல்லை என்றாள் அஞ்சலி.
கறிவேப்பிலை சாதம் செய்தால் நல்லது தான். கர்ப்பிணி பொண்ணுக்கு கறிவேப்பிலை சேர்த்துகிட்டா இரும்பு சத்து அதிகமாகும்னு நர்சம்மா சொல்லி இருக்காங்க என்றார் பாப்பாத்தி.
வளையல் எல்லாம் வேணு கடையில் வாங்கிட்டேன்.
அதிரசம்,சோமாஸ் செய்துட்டேன், லட்டு, ரவா உருண்டை பிடிக்கணும்.விமலா அக்கா நல்லா ஜாங்கிரி சுத்தும்,உதவிக்கு கூப்பிடிருக்கேன் என்றார் பாப்பாத்தி.
வீட்டில் விசேஷக் கலை பார்த்து குழந்தைகளுக்கு குதூகலம்.
அங்காளி பங்காளி பெண்கள் வந்து இரவே பூக்கட்டி வைக்க, நலங்கு வைப்பதற்கு தேவையான பொருட்கள் எடுத்து வைக்க, ஊறுகாய் சாப்பாடு வகைகள் தயார் செய்ய என்று ஆளுக்கு ஆள் உதவியாக இருந்தனர். கதிரும் சசியும் கூட வாழை இலை கொண்டு வந்து அடுக்க… தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து வைக்க என்று நண்பன் குடும்பத்திற்கு உதவிக்கு களத்தில் இறங்கி விட்டனர்.
“—————————“
என்ன சுப்பு முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?பூரிப்பில் விரிந்திருக்கும் மனைவியின் மலர்முகம் கண்டு காதலுடன் கன்னம் வருடினான் மன்னர்.
மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!
இழுத்துப் போட்டு ஆளுக்கு ஆள் வேலை செய்கிற உரிமை என்ன? நிமிஷத்துக்கு ஒரு முறை உனக்கு என்ன வேணும்? அது சாப்பிடறியா?இது சாப்பிடுறியா? என்று கேட்கும் சொந்த பந்தம் என்ன… ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குங்க.
கணவனின் கை வளைவிற்குள் நிம்மதியாய் அடைக்கலம் புகுந்தாள்.
தாய்மை என்பது சாதாரண விஷயமா என்ன?
சொந்த பந்தம் சூழ நடக்கிற விசேஷம் எவ்வளவு ஆனந்தத்தை கொடுத்து பாருங்களேன்!
நீ சொல்றது தான் சரி! தங்களோட விருப்பத்துக்கு லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு குடும்பத்தை எதிர்த்து போறவங்க இதையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க இல்ல… அவனுமே நெகிழ்ந்திருந்தான்.
என் குழந்தையை நீ சுமக்கிறாய் உன்னை நான் சுமக்கிறேன் என்பதாகவே அவனது நடவடிக்கை இதுவரை இருந்து வருகிறது.
சுப்பு ஒன்னு சொல்லவா?
என்னவாம்?ஓர விழியை சுழட்டி புருவத்தை ஏற்றி கிறக்கமாய் கேட்டாள்.
நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க! கன்னம் தாங்கி நெற்றியில் நிறைவாய் இதழ் பதித்தான்.
அட நீங்க வேற… நல்லா வெயிட் ஏறிட்டே போகுதுன்னு நானே கவலையில் இருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் குழந்தை பிறந்த உடனே ஆன்ட்டி மாதிரி ஆயிட்டாங்க…. இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி வடிந்து முகம் கவலையை அப்பிக் கொண்டது.
அடி அசடு,தாய்மையை விட பேரழகு உலகத்தில் வேற என்ன இருக்கு? குண்டாகிறது ஒல்லியாகறதா பிரச்சனை?
உன்னால் ஒரு ஜீவன் இந்த உலகிற்கு வரப்போகிறது என்பதைவிட ஆனந்தம் வேறென்ன? உன் கருவில் உருவாகி உன் ரத்தத்தை பாலாய் குடித்து உன் மூலமாக வளர்ந்து உன் பெயர் சொல்லும் பிள்ளையை விட வெளி தோற்றம் தானா அழகு?
அப்படியா சொல்றீங்க? கொஞ்சம் தெளிந்து கணவனை கட்டிக் கொண்டாள் என்ன வயிறு தான் லேசாய் இடித்தது.
சரி நான் போய் வெளியில் என்ன வேலை என்று பார்க்கிறேன்….
நானும் வரேன்! பின்னோடு எழுந்து வந்த மனைவியை அதட்டி அமரவைத்தான்.
பலகாரம் செய்யுற இடத்துக்கு வரவேண்டாம் எண்ணெய் வாடை ஆகாது,வாந்தி வரும்னு அம்மா அவ்வளவு தூரம் சொன்னாங்க இல்ல.. என்ன சொல் பேச்சை கேட்காமல் அடம் பிடிக்கிற…!
என்னைக்கு அவ யார் சொல்ற பேச்சை கேட்டு இருக்கா? செல்லமாய் அலுத்துக் கொண்டே உள்ளே வந்தார் நவமணி.
அம்மா! என்று ஓடிப்போய் கட்டிக் கொண்டாள் ஆசையுடன்.
வாங்கத்தை என்று வரவேற்கும் முகமாக பேசிவிட்டு வெளியில் கொஞ்சம் வேலை இருப்பதாக விடை பெற்று சென்று விட்டான்.
கன்னம் உப்பி,நிறம் கூடி எடை கூடி… சற்று மேடிட்ட வயிற்றை இரு கைகளால் பிடித்துக் கொண்டு நிற்கும் மகளை பார்க்க பார்க்க ஆச்சரியமாய் இருந்தது நவமணிக்கு.
பொட்டு பொடுசுகளுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டு நின்ற மகளா இது? ஆச்சரியம் தாளவில்லை அவருக்கு. தாய்மை தான் எத்தகைய மாற்றத்தை ஒரு பெண்ணுக்குள் விளைவிக்கிறது.
தான் கொண்டு வந்த பைகளை மகளின் அறையில் வைத்தவர் சம்பந்திக்கு உதவி செய்வதற்காக வெளியே சென்று விட்டார்.
சற்று நேரத்தில் தேவிகா தன் குடும்பத்துடன் வந்து விட்டாள்.
அண்ணா வரலையா அக்கா?
இல்லை சுபி, சுகன்யா உண்டாகி இருக்கா இல்ல எதிர்சூல் ஆகிடும்னு அம்மா சொன்னாங்க.
அப்படின்னா? புரியாமல் கேட்டாள்.
நீயும் சுகன்யாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க கூடாதாம். பொண்டாட்டியை தனியா விட்டுட்டு கிருஷ்ணா மட்டும் எப்படி வருவான்?
ஓ இப்படி எல்லாம் வேற இருக்கா?ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டாள்.
“——————————-“
புதினா, மல்லி ஊறுகாய் அரைக்க இலைகளை பார்த்து கிள்ளி கொண்டிருந்தாள் தீபா.
என்ன தீபா ஆஸ்பத்திரிக்கு போறியா? இன்னும் கொஞ்ச காலம் ஃப்ரியா இருக்கலாம்னு பிளான் பண்ணி இருக்கியா? இங்கிதம் தெரியாமல் கேட்டு வைத்தாள் இளவரசி,.மன்னரின் பெரியப்பா மகள்.
என்ன சொல்வது என்று தெரியாமல் முகம் கன்றி தலை குனிந்து அமர்ந்திருந்தாள் தீபா.
இளவரசிக்கா உங்க பொண்ணை சேர்த்துக்கிட்டிங்களாமே அப்படியா…? பெத்த மனம் பித்துன்னு இதைத்தான் நம்மூர்ல சொல்லுவாங்க. என்ன இருந்தாலும் உனக்கும் மாமாவுக்கும் பெரிய மனசு தான்! சுருக்கென்று கேட்டான் வாழை இலையை அறுத்துக் கொண்டிருந்த மன்னர்.
அவ்வளவுதான் இளவரசி வாயை திறக்கவே இல்லை. இளவரசி மகள் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போதே வேறு சாதி பையனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள் அதைத்தான் இப்போது சொல்லி காட்டுகிறான் மன்னர்.
நன்றியுடன் மன்னரை நிமிர்ந்து பார்த்தாள் தீபா.
கிச்சனுக்குள் சென்றவன் இரவு டிபனுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த அம்மாவிடம் போய்…. ம்மா தீபா அண்ணியை உங்க பக்கத்திலே வச்சுக்கோங்க என்றான்.
மகன் பேச்சில் பொருள் உணர்ந்து,தீபா இங்க வாம்மா இட்லி ஊத்து…. கிச்சனுக்குள் மருமகளை அழைத்துக் கொண்டார் பாப்பாத்தி.
“———————————-“
வீட்டுக் கூடத்திலே ஜமுக்காளம் விரித்து சீர்வரிசை தட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டது.
ஐந்து வகை கலவை சாதம், ஐந்து வகை ஊறுகாய்,ஐந்து வகை இனிப்பு, பூ,வெற்றிலை பாக்கு,தேங்காய், பழம் என்று வரிசைகள் குவிந்திருந்தது.
மஞ்சள் பிள்ளையார், பசுஞ்சாணத்தில் பிடித்த பிள்ளையார் என்று இரண்டு பிள்ளையார் அருகம் புல்லுடன் வீற்றிருக்க பிள்ளையாருக்கு வெற்றிலை பாக்கு பழம் வைத்து தலைவாழை இலை விரித்து ஐந்து வகை சாதமும்,ஊறுகாயும், இனிப்பும் பிள்ளையாருக்கு படையலிட தயாராய் இருந்தது.
மயில் தோகை விரிக்கும் இரு பெரிய குத்து விளக்குகள் மங்களகரமாய் மஞ்சள் குங்குமம் தீட்டி பூவைத்து ஏற்றப்பட்டிருந்தது.
நல்ல நேரத்திலே விசேஷத்தை தொடங்குங்க என்றார் சரசு.
பூமாலை தோளில் கிடந்த துண்டை எடுத்து பவ்யமாய் இடுப்பில் கட்டிக்கொண்டு பிள்ளையாருக்கு ஊதுபத்தி காண்பித்து அதை வாழைப்பழத்தில் சொருகி வைத்து கற்பூர தீபம் காண்பித்தார்.
மன்னரு சுப்ரஜா ரெண்டு பேரும் பிள்ளையாரை கும்பிடுங்க. சாமி கும்பிட்டு நீ மனையில் உட்காருமா என்றார் சரசு.
தேங்காய் உடைக்கலையா என்று தேவிகா கேட்க ஐந்து மாதம் ஆகிவிட்டது இனி பூசணிக்காயோ தேங்காயோ உடைக்கக்கூடாது எங்களுக்கு அது பழக்கம் இல்லை என்றார் பாப்பாத்தி.
பயபக்தியுடன் மன்னரும் சுப்ரஜாவும் பிள்ளையாரை வணங்கிக் கொண்டனர்.
கரம் பிடித்து அழைத்து சென்று மனையில் அமர்த்தினான் தன் மனதில் வீற்றிருக்கும் மனையாளை.
பச்சை வண்ண பட்டு உடுத்தி ஆடை ஆபரணங்களுடன் தலை நிறைய பூச்சூடி பொலிவோடு அமர்ந்திருக்கும் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் மன்னர்.
அவனுமே பட்டு வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாய் அவளுக்கு குறையாத பூரிப்புடன் அவனும் நின்றிருந்தான்.
சரசு அக்கா நீ வா முதல் நலங்கு நீ வை! என்று தன் மூத்த ஒரகத்தியை அழைத்தார் பாப்பாத்தி. குடும்பத்திற்கு மூத்தவர் அவர் என்பதால் அந்த முதல் மரியாதை அவருக்கு.
சந்தனம் தீட்டி குங்குமம் வைத்து கண்ணாடி வளையல் அணிவித்து கலவை சாதத்தில் ஒரு வாய் ஊட்டி விட்டார் சரசு.
தேவதை போல் ஜொலிக்கும் மனையாளை ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான் மன்னர். எந்த கோணத்தில் பார்த்தாலும் அவள் அழகாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவன் மனைவி அழகா? அவன் பிள்ளையை தாங்கி நிற்பதால் கர்ப்பிணியாய் அவள் அழகா?அவனுக்கு புரியவில்லை.
தன்னை அணு அணுவாய் ரசிக்கும் கணவனை கண்டு கன்னம் செம்மையுற்றது சுபிக்கு.
சரசு அக்கா அப்படியே உன் கையால் தீபாக்கும் வளையல் போடு!என்று உரிமையாக அழைத்தார் பாப்பாத்தி.
ஆறு குழந்தைகள் பெற்றவர் சரசு. குடும்பத்திற்கும் மூத்தவர் என்பதால் சரசுக்கு ஒரு தனி கெத்து தான்.
தீபா சங்கடமாய் நெளிந்து நிற்க பாப்பாத்தி கைபிடித்து அழைத்து சென்று சுப்ரஜாவின் அருகில் அமர்த்தினார்.
சங்கடத்தில் தலை குனிந்து அமர்ந்திருக்கும் மனைவியை வேதனையுடன் பார்த்து நின்றான் எழிலரசன்.
தீபா என் கை ராசியான கை! நீ பாரு சுப்ரஜா வளைகாப்புக்குள்ள நீ வாந்தி எடுக்கிறியா இல்லையான்னு….. சிரித்துக்கொண்டே தன் மருமகள் உறவான தீபாவிற்கு வளையல் அணிவித்து நலங்கு வைத்தார் சரசு.
அந்த சொல்லும் செயலுமே தீபாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது. எப்போதுமே நேர்மறை எண்ணங்களே மன நிம்மதியை கொடுக்கும்!
தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தீபாவை பார்த்து கண்களால் ஆறுதல் சொன்னாள் சுப்ரஜா.
சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவராய் வந்து நலங்கு வைத்து வளையல் அணிவித்து சாதம் ஊட்டினார்கள்.
எங்க ஊரு பக்கம் எல்லாம் நாத்தனார் தான் முதலில் பூ முடிப்பாங்க என்றாள் பக்கத்து வீட்டிற்கு மருமகளாய் வந்திருக்கும் பெண்ணொருத்தி.
எங்க பக்கமெல்லாம் மாமியார் தான் முதல் கட்டுசோறு கட்டிக் கொடுப்பாங்க.அவங்க வீட்டு வாரிசுக்கு முதல் சோறு அவங்க சோறா தான் இருக்கணும்னு எங்க சம்பிரதாயம் என்றார் சரசு.
நலங்கு வைத்து தாம்பூலம் பெற்றுக் கொண்டு வயிறார விருந்து உணவை சாப்பிட்டே சென்றனர் அக்கம் பக்கத்தினர்.
“—– தொடரும் —-=-“
இந்த எபி உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த சடங்கு சம்பிரதாயம் எங்கள் கடலூர் மாவட்டத்திற்கானது. செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் எல்லாம் நாத்தனார் தான் முதலில் பூ முடிப்பார்.ஆனால் கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் மாமியார் வீட்டில் தான் முதல் சோறு கொடுப்பார்கள். ஒவ்வொரு ஏரியாவிற்கு ஒவ்வொரு சம்பிரதாயம்.
பிடித்திருந்தால் மறக்காமல் கமெண்டில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
error: Content is protected !!