Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நமக்காக வாழ்வோம் வா

நமக்காக💞7

உறக்கமும் பிடிக்கவில்லை உண்ணவும் பிடிக்கவில்லை. வெகுவாய்  வாடி போய் இருந்தாள் சுபி.

மன அழுத்தம் அவள் முக பொலிவை குறைத்திருந்தது.

சுபி ஏன் டல்லா இருக்க? கல்யாண பொண்ணு இப்படி கலையே இல்லாம இருக்க… தங்கையை எண்ணி கவலை கொண்டாள் தேவிகா.

அதெல்லாம் ஒண்ணுமில்ல என்றாள் விரக்தியாய்.



Advertisement

அவள் மனம் என்ன சொல்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.

திருமண வாழ்வின் மீதான பயம், மாப்பிள்ளை மீதான பிடித்தமின்மை ஏதோ ஒன்று அல்லது எல்லாம் சேர்த்து அவளை அலைக்கழித்தது.

“———————–“

Advertisement

அதோ இதோ என்று திருமண நாளும் வந்துவிட்டது.

Advertisement

பெண் அழைக்க மாப்பிள்ளை வீட்டார் ஏழு பேர் வந்திருந்தனர்.

சாமி அறையில் வணங்கி சுப்ரஜாவிற்கு உறவினர்கள் விபூதி பூசி ஆசிர்வதித்து வழி அனுப்பினர்.

என் மகளாக இதோ இப்போது இந்த நொடி கிளம்பி போகிறாள் நாளை தாரை வார்த்து கொடுத்துவிட்டால் இன்னொரு வீட்டு மருமகளாகி விடுவாள்.

Advertisement

பூவராகன் மகளை ஆசிர்வதிக்க…. தந்தையை கட்டிக்கொண்ட சுப்ரஜா விம்மி விம்மி அழுதாள். அவருக்குமே நெஞ்சம் வலித்தது. அவரின் கடைக்குட்டி செல்லம் அவர் அம்மாவின் மருவுருவம்.

பெண் பிள்ளை இல்லாத வீடு வெறும் கூடு என்பது அவர் எண்ணம்.பெண் பிள்ளைகள் அப்பாவின் இளவரசி என்பது உண்மை தானே. சுபி தாயை விட தந்தையிடமே அதிக நெருக்கம்.

குட்டி போற இடத்துல நல்லதனமா குடும்பம்பண்ணி எங்களுக்கு பெருமை தேடித் தரணும் சாமி என்று மகளை கட்டிக் கொண்டு அழுது கரைந்தார் நவமணி.

அவர் கொஞ்சம் கண்டிப்பான தாய் தான். அதற்காக மகள் மீது அன்பு இல்லை என்றாகிவிடுமா?

உண்மையில் தந்தைகளை விட தாய்மார்களுக்கு தான் பெண்ணின் பிரிவு அதீத வலியை தரும்.

ஏம்பா பூவராகா பிள்ளையை சந்தோஷமா அனுப்பாம இப்படி ஆளுக்கு ஆளு அழுது கரையறீங்க. நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்புங்க! உறவுக்கார தாத்தா சப்தமிட அழுது வீங்கிய முகத்துடன் சுப்ரஜா பிறந்த வீட்டில் இருந்து விடைபெற்றாள்.

வாசலுக்கு வந்து நின்றவள் கண்கள் முழுதும் வீட்டை நிரப்பிக் கொண்டாள். ஏனோ இந்த நொடி இந்த வீட்டுக்கு அந்நியப்பட்டுவிட்டதாக ஒரு நினைவு அவளை வெகுவாய் விம்ம வைத்தது.

“———————“

குட்டி எல்லா பொண்ணுங்களுக்கும் இப்படி தான் தோணும். போக போக சரியாகிடும் என்று தங்கையின் கரம் பற்றி தேறுதல் கூறினாள் தேவிகா.

உண்மையில் திருமணமாகி போகும் வீடு அது மாமியார் வீடு ஆகிவிடுகிறது. திருமணம் முடிந்து விட்டாலே பிறந்த வீடு அம்மா வீடு ஆகிவிடுகிறது. என் வீடு என்று சொல்லிக் கொள்ள வீடற்ற பெண்களாகிவிடும் வினோதம் நிகழ்ந்துவிடும்.

ஊர் எல்லையை கடக்கும் வரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்தாள்.

பெண் பிள்ளைகளுக்கு திருமண நாள் நெருங்க நெருங்க கல்யாண கனவுகள் கடந்து ஒருவித அழுத்தம் உருவாகி விடுகிறது.

முற்றிலும் மாறுபட்ட சூழலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், எப்படி ஆனாலும் அங்கு தன்னை பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற நினைவே அச்சுறுத்தும்.

உறவில் திருமணம் செய்து கொள்பவர்கள் காதல் திருமணம் செய்பவர்களுக்கு இந்த பயமும் பதட்டமும் கொஞ்சம் மட்டுப்படும். மற்றபடி எல்லா பெண்களுக்கும் ஏட்டில் எழுத முடியாத பதட்டமும் நடுக்கமும் இயல்பு தான்.

இலங்கையில் எல்லாம் மாப்பிள்ளை தான் பெண் வீட்டுக்கு வந்து குடும்பம் நடத்த வேண்டுமாம். தமிழ் நாட்டில் இந்த நடைமுறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

“————————“

சித்தி விநாயகர் கோயிலில் வைத்து பெண்ணழைப்பு நடைபெற்றது.

கோட் சூட் அணிந்து மாப்பிள்ளை மிடுக்குடன் அருகில் நின்ற மன்னரை கண்டவளுக்கு லேசான நடுக்கம்.

வீங்கிய அவள் முகம் கண்டவன் லேசாய் சுணங்கினான்.

எனக்கு கூட தான் கல்யாணம் ஆகப்போகுது என் சுதந்திரம் பரிபோகப் போகுது நான் இப்படியா அழுதுட்டு இருக்கேன். அவள் காதுக்குள் ரகசியமாய் கேட்டு வைத்தான்.

இவனை…. நிஷ்ட்டுரமாய் முறைத்து வைத்தாள். இவன் மொக்கை பேச்சுக்கு வேறென்ன செய்ய முடியும்?

அவளுக்கு லேசாய் படபடப்பு.

கோயிலில் சாமி கும்பிட்டு ஐயர் கொடுத்த மாலையை சுபிக்கு அணிவித்தான். அவள் மாலையை அவனுக்கு அணிவித்தாள்.

மேள தாள வாத்தியங்கள் முழங்க கண்கவர் வான வேடிக்கையுடன் பெண்ணழைப்பு நடைபெற்றது.

பெண்ணும் மாப்பிள்ளையும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அமர்ந்து மண்டபம் வந்து சேர்ந்தனர்.

மன்னரின் அண்ணிகள் மூவரும் மேக்கப் பதுமைகளாய் நகைகளை அள்ளி அணிந்து கொண்டு டாம்பீகமாய் வரவேற்பில் நின்று பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

பொறுப்பாக கொழுந்தன் கல்யாணத்தில் வேலை பார்க்கிறார்களாம்.

அண்ணன்மார்கள் மூவரும் குறுக்கும் நெடுக்குமாய் அதிரிப்புதிரியாய் நடந்து கொண்டிருந்தனர். ஏன் நடக்கிறோம் எதற்கு நடக்கிறோம் என்று அவர்களுக்கே புரியவில்லை என்பது தான் வேடிக்கை.

ரிசப்ஷன் தொடங்கிவிட்டது. மன்னரின் நட்பு வட்டம், காவல் துறையினர் என ரிசப்ஷனில் நிறைய கூட்டம்.

தன் நட்பு வட்டத்தை அறிமுகம் செய்து வைத்தான். அவள் தோழிகளை அவளுடனே நிற்க சொல்லி வேண்டுகோள் வைத்திருந்தான்.

எங்க மன்னர் அருமையான கேரக்டர் என்று நட்பு வட்டம் புகழ்ந்து தள்ளியது.

சிஸ்டர் மன்னர் பயமுறுத்தாத போலீஸ். உங்களுக்கு கவலையே வேண்டாம் என்றான் மன்னருடன் பணிபுரியும் காவலன் ஒருவன்.

இவ்வளவு நேரம் மனதை அழுத்திய பாரம் மெல்ல மெல்ல தளர்வதாய் ஒரு இலகுவான உணர்வு அவளுக்கு. சூழலை ரசிக்கும் மனோநிலை இப்போது தான் வந்தது அவளுக்கு.

உரசிக் கொண்டு இடித்துக் கொண்டு நிற்கவில்லை ஆயினும் அவ்வப்போது அவள் முகம் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்படி துளைக்கும் பார்வை பார்க்கிறானே அவளுக்கு தான் லஜ்ஜையாகி விட்டது.

கொஞ்சம் பதட்டம் கொஞ்சம் சிலிர்ப்பு என்று இதவரை உணர்ந்திராத உணர்வில் நின்றாள்

அருமையான விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இன்னும் ஒரு சப்பாத்தி வச்சுக்கோ! தேங்காய் சட்னி வைக்காதீங்க குருமா ஊத்துங்க. அவள் உணவில் அவ்வளவு கவனம் வைத்தான்.

ஹே…. மச்சி எப்புட்ரா…. அவன் நண்பர்கள் அவ்வளவு கிண்டல் செய்து ஒரு வழியாக்கிவிட்டனர்.

டேய்…. போங்கடா…. அவன் சிவந்து விட்டான்.

அவள் முகம் சிவந்து ஓரவிழியால் நோக்க… நல்லா தூங்கு! என்றான்.

ம்ம்ம்ம்ம் என்றவளுக்கு தலை ஆட்ட கூட முடியவில்லை. சிகை அலங்காரம் அவ்வளவு தலைவலியை கொடுத்தது.

முகூர்த்தத்துக்கு கொஞ்சமா பூ வச்சுக்கோ என்றான்.

தன்னிடமா பேசினான் அவள் விழி விரிந்தது.

கை கழுவிக் கொண்டு அவள் சுற்றிலும் பார்க்க… தன் கையில் இருந்த கைக்குட்டையை அவள் கையில் திணித்து விட்டு முன்னே சென்று விட்டான்.

“—————-“

கல்யாண மண்டபம் தனக்கே உரிய சலசலப்பில் இருந்தாலும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் சுபி.

உறக்கம் வரும் என்று அவளே நினைக்கவில்லை. பயமாவது பதட்டமாவது அப்படி ஒரு அசதி அவளுக்கு.

மணி நள்ளிரவு ஒன்றரை. உறக்கம் தழுவாத மனிதர்கள் ஆங்காங்கே சலசலத்துக் கொண்டிருந்தனர். சமையல் கூடத்தில் காலை உணவுக்கான ஆயத்தம் இப்போதே நடைபெற்றுக் கொண்டிருந்தது. மணவறை அலங்காரம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சமையல் கூடத்திற்கு சென்றவன் மளிகை எல்லாம் போதுமானதாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டான்.

தாம்பூலம் போட்டு முடித்த நண்பர்களிடம் எத்தனை பை போட்டிங்க என்று கேட்டறிந்தான்.

அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சுற்றிலும் ஒருமுறை  பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

என்னப்பா தூங்காம என்ன பண்ணிட்டிருக்க? மகனை கடிந்து கொண்டார் பூமாலை.

எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு போறேன் என்றான்.

அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம் நீ போய் கொஞ்சம் தூங்கி எழுந்திரு என்றார்.

அண்ணன்கள் யாரும் பொறுப்பாக செய்யவில்லை எனினும் நண்பர்கள் சசியும், கதிரும் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்துக் கொண்டிருந்தனர்.

கிங்கு மேனேஜர் வந்து பார்த்து சுடு தண்ணி வர குழாயை சரி பண்ணி கொடுத்துட்டாரு என்றான் கதிர்.

மணமகள் அறையில் கீசர் வேலை செய்யவில்லை என்று அறிந்து கொண்டவன் கதிர்வேலுவிடம் சொல்லி சீக்கிரம் பார்க்க சொல்லியிருந்தான்.

அதிகாலையில் மணநலுங்கு வைத்து அவள் எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டுமே…  பச்சை தண்ணீரில் குளித்தால் ஒத்துக் கொள்ளுமோ என்னவோ?

வாடகையில் சலிக்காச்சு குறையாம அவ்வளவு கரார் காட்டறீங்க… மெயிண்டனன்ஸ் இவ்வளவு அலட்சியமா இருக்கு. மேனேஜருக்கு போன் செய்து பிடிபிடி என பிடித்து விட்டான்.

சார் இன்னைக்கு ஈவினிங் கூட நல்லா இருந்துச்சு! ஏதாவது மைனர் பால்ட் தான் இருக்கும். நான் இப்போ சரி பண்ணிடறேன் என்றார் குழைவாக.

சொன்னபடி இந்த நள்ளிரவில் வந்து சரி செய்து கொடுத்துவிட்டார்.

மன்னரு இப்போல்லாம் ட்ரெண்ட் என்ன தெரியுமா? கண் சிமிட்டலுடன் கேட்டான் சசி.

என்ன?

பேச்சுலர் பார்ட்டி…. அவன் எச்சில் விழுங்கினான்.

செருப்பு! பல்லை கடித்தான்.

விடு மச்சி அவன் சரியான நாட்டுப்புறத்தான் அவனுக்கு இதெல்லாம் புரியாது என்று சிரித்த கதிர் மீது 200ml வாட்டர் பாட்டிலை தூக்கி வீசினான்.

டேய் பேச்சு பேச்சா இருக்கணும்! வலியில் சிணுங்கினான் கதிர்.

எரும இது கல்யாண வீடு.

யாரு மேன் இல்லன்னது? மீசையை நீவினான் சசி.

மரியாதையா இங்கே இருந்து எல்லா வேலையும் எப்படி நடக்குதுன்னு பாருங்கடா. உரிமையாய் கட்டளைபிறப்பித்து விட்டு கிளம்பினான்.

ம்ம்ம்ம்க்கம்… இப்படி ஒரு பழம் பஞ்சாங்கம் நமக்கு பிரண்ட் தலையில் அடித்துக் கொண்டான் கதிர்.

டேய் மச்சி பந்தியில் வைக்கிற தண்ணி வேஸ்ட் ஆகக் கூடாதுனு 200 ml தண்ணி பாட்டில் போதும்னு பட்ஜெட் போடுறவன் நமக்கு தண்ணி வாங்கி தருவானா? அடக்கி வைத்த சிரிப்பை அவிழ்த்து விட்டான் சசி.

“——————–“

கொட்டாவி விட்டபடி தலைமாட்டில் இருந்த மொபைலை எடுத்து பார்த்தாள் சுபி. மணி நாலு.

மொபைலை திறந்தவளுக்கு வந்து விழுந்த மெசேஜ் Have a happy day Mrs King. என்ற மெசேஜ் வந்திருந்தது மன்னரிடமிருந்து.

விழி விரித்து அவள் படிக்கையிலே

என்ன சுபி எழுந்துட்டியா? சுகன்யா புரண்டு படுத்தாள்.

ரெஸ்ட் ரூம் போகணும் அண்ணி என்றாள்.

பனிரெண்டு மணிக்கு வந்து கீசர் சரிப்பண்ணிட்டு போனாங்க. உன் ஆளு பொறுப்பு தான் என்றாள் சிரிப்புடன்.

வெட்கத்தில் அவள் நெளிந்து நிற்க…. கொஞ்சமா பூ வைத்து ஜடை அலங்காரம் பண்ணினா போதுமாம். இதுவும் மாப்பிள்ளை தான் என்கிட்ட சொன்னாரு அண்ணி என்றாள் சுபியின் தோழி சங்கரி.

காலையில் எழும்போதே மனம் நிறைந்து விட்டது நவமணிக்கு.  கோடீஸ்வர மாப்பிள்ளை வேண்டும் அவர் கேட்கவில்லை. தன் பெண்ணை ராணி மாதிரி தாங்கிக் கொள்ளும் மாப்பிள்ளை வேண்டும் என்று தான் வேண்டினார்.

“_—————–“

அடுத்து அங்கே பரபரப்பான விடியல்.

மங்கள வாத்தியங்கள் முழங்கி சுபமாய் விடியலை தொடங்கி வைத்தது.

சடங்குகள் தொடங்கி விட்டது. உறவினர்கள் வருகை, பூக்களின் வாசம், குழந்தைகளின் குதூகலம்.

கை காலில் லேசான நடுக்கம் அவளுக்கு. அவனுக்கு அப்படி இல்லையோ? லேசாய் அவனை அளவிட்டாள் அவன் இயல்பாய் ஐயர் சொல்வதை செய்து கொண்டிருந்தான்.

இந்த கங்கனத்தை பொண்ணோட இடது கையில் கட்டுங்க!

ஐயர் கொடுத்த கங்கனத்தை( மஞ்சள் கொம்பு கட்டிய கயிறு) அவள் வளைகரத்தில் கட்டும்போது அவள் நடுக்கத்தை உணர்ந்து கொண்டான்.

அழுத்தமாய் அவள் கரத்தை விடுவித்து நேர்கொண்டு ஒரு பார்வை பார்த்தான்.

பாதபூஜை, தாரை வார்த்தல் என்று சடங்குகள் தொடர்ந்து கொண்டிருந்தது.

தேங்காயில் சுற்றிய திருமாங்கல்யம் ஆசீர்வாதத்திற்கு சென்று வந்தது.

இருதரப்பு குடும்பத்தினர் மேடையில் சூழ்ந்து நிற்க ஐயர் நீட்டிய மாங்கல்யத்தை வாங்கிக் கொண்டு அவள் மதிமுகம் கண்டான்.

அவளுக்கு ஏன் என்றே தெரியாத அழுகை. உள்ளம் நடுங்க அவனை பார்த்தாள்.

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா   கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

வேத மந்திரங்களை ஓதிய ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்றார்.

அவள் கண்களையே பார்த்துக் கொண்டு தன் தோளில் அவள் தலை சாய்த்து இரண்டு முடிச்சு போட்டான். மூன்றாவது முடிச்சை போட நாத்தனார் முறைமைக்கு பெரியம்மா மகள் குனிய… வேண்டாம் என்பதாய் தலையசைத்து அவனே மூன்றாவது முடிச்சும் போட்டான்.

படபட வென்று எண்ணிலடங்கா முறை தவித்து துடித்த அவளின் இதயத்துடிப்பு அவனுக்கு அத்தனை துல்லியமாய் கேட்டது.

————–தொடரும்————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!