Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

குட் லக் சுந்தரி

குட் லக் சுந்தரி….3

குட் லக் சுந்தரி….3

தஞ்சாவூர் பெரிய கோவில் முன்னே நின்றது அவர்களின் கார்.காரிலிருந்து முதலில் இறங்கியது சுந்தரி தான்.இன்று கோவிலுக்கு வருகிறோம் என்று மெரூன் கலர் மென் பட்டு உடுத்தியிருந்தாள், கூந்தலை தளர பின்னி அதில் பூச்சரம் ஏறியிருந்தது,கழுத்தில் சிறிய நெக்லஸ் போன்ற அமைப்புடைய செயின் அணிந்திருக்க வசந்தி தன் பெண்ணை கண்டு சற்று பூரித்து தான் போனார்.

“ம்மா…நான் போய் அர்ச்சனைக்கு சாமான் வாங்கிட்டு வரேன்….நீங்க முன்னாடி போங்க….”என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட,மற்றவர்கள் கோவிலின் உள்ளே செல்ல தொடங்கினர்.

“என்னம்மா என் பேத்தியை இப்படி வச்ச கண்ணு வாங்கமா பார்க்குற….”என்று நேசன் கேலி செய்தபடி முன்னே நடக்க,



Advertisement

“இன்னைக்கு தான் பொண்ணு போல இருக்கானு பார்த்திருப்பா….”என்று லச்சு கூற,

“லட்சுமி…..”என்று கோபத்தில் கத்திவிட்டார் நேசன்.லட்சுமி இப்படி தான் பட்டென்று பேசும் ரகம் அதுவும் சுந்தரி என்றால் சற்று அதிகமாகவே பேசுவார்.ஆனால் இன்று அவர் பேசியது அதிகபடியாகவே தோன்ற உடனே அதட்டிவிட்டார் நேசன்.இன்று காலையில் இருந்து லட்சிமிக்கு மனதே சரியில்லை இதில் கணவர் மீண்டும் தன்னிடம் கடிந்துவிட லட்சுமிக்கு கண்கள் கலங்கிவிட்டது.

“ப்பா என்னதிது விடுங்க….அம்மா சரியா தான சொல்லுறாங்க….”என்று வசந்தியும் லட்சுமிக்கு ஆதரவு கொடுக்க,

Advertisement

“அப்படி சொல்லு வசந்தி….இவருக்கு வர வர என்னை கண்டாலே பிடிக்கலை….அதான் எரிஞ்சு எரிஞ்சு விழறார்….நான் உங்ககூட வரலை போங்க….”என்று சிறுபிள்ளை போல் அவர் முறுக்கிக் கொண்டு திரும்பி நடக்க,

Advertisement

“என்ன லச்சு நான் இல்லாம இருக்க முடியலையா அதுக்குள்ள திரும்பிட்ட….”என்று அவரின் தோள் அணைத்து திருப்பியவாரே சுந்தரி அழைத்துவர,

“அட போடீ அங்கிட்டு….எனக்கு வேற வேலையில்லை உன்னை நினைக்கிறாங்க….நானே என் புருஷன் என்னை திட்டிடாருனு திரும்பி போயிக்கிட்டு இருக்கேன்….”என்று லட்சுமி மூக்கை சிந்திக் கொண்டு கூற,

“பார்த்தியா வசந்தி எப்படி அழுதிக்கிட்டே என்னை போட்டுக் கொடுக்குறா பாரு….இவளை…”என்று நேசன் பல்லை கடித்தார்.

Advertisement

“சும்மா இருங்கப்பா….”என்ற வசந்தி,லட்சுமியை சமாதான படுத்தும் நோக்குடன் ஏதோ பேச வர,

“நீ ஒண்ணும் பேச வேண்டாம் மீ…என்னோட லச்சு பேபியை அழ வச்சிட்டீங்க….உங்க ரெண்டு பேர் கூடேயும் நாங்க கா….”என்று கட்டை விரலை காட்டிவிட்டு,

“வா லச்சு நாம போகலாம்….”என்று லட்சுமியை கோவில் நோக்கி இழுத்தாள் சுந்தரி.

“போடி உன் கூட எவன் வருவான்….ஏதோ என் புருஷன் என்கிட்ட கோப்பபட்டுடார் அதுக்காக அவர்கிட்ட பேசக்கூடாதுனு சொல்ல நீ யாரு…..”என்று முறுக்கிக் கொண்டவர் நேசனிடம் வந்து,

“வாங்க போகலாம்…”என்று கை பிடித்து அழைக்க,

“இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம் இல்ல மீ…..”என்று சுந்தரி வசந்தியிடம் கேட்க,

“சேட்டை சேட்டை கழுதை…..”என்று அவர் தலையில் கொட்டினார்.

“ஆஆ…என்னை ஏன் மீ கொட்டுற….உங்களை எல்லாம் ஒரு கோவிலுக்கு கூப்பிட்டு வர முடியுதா அதுக்குள்ள சின்ன பிள்ளை மாதிரி சண்டை…வாங்க நேரம் ஆகுது…..”என்று தலையை தேய்த்துக் கொண்டே முன்னே சென்றாள்.

“முடியை கலைக்காதடீ….ஒழுங்கா போ….இன்னைக்கு தான் பார்க்க லட்சணமா இருக்க….”என்று லட்சுமி கூற,அவரை திரும்பி முறைத்தவள் அவருக்கு ஒழுங்கு காட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

“இதை முன்னாடியே சொல்லுறதுக்கு என்ன…..”என்று நேசன் மனையாளிடம் கேட்க,

“ம்க்கும்…அவ என்னை சீண்டிக்கிட்டே இருக்கா அதை யாரும் கேட்காதீங்க நான் எதாவது சொன்னா மட்டும் கோபம் வந்திடும்….”

“வார்த்தையில கவனம் வேணும் லட்சுமி….நீ பேசுனது சரியா…வசந்தி என்ன நினைப்பா…அவளே இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைனு வருத்தப்பட்க்கிட்டு இருக்கா….இதுல நீயும் இப்படி பேசினா….நல்லாவா இருக்கு….”என்று நேசன் கூற லட்சுமிக்கு அவர் கூறுவதில் உள்ள நியாயம் புரிந்தாலும்,

“நான் என்ன பண்ணட்டும் அவளை பத்தி பேசும் போது என்னை அறியாம வார்த்தை வந்திடுது….”

“தப்புமா திருத்திக்கோ…..நாம வயசுல பெரியவங்க நாமளே இப்படி இருந்தா நல்லது இல்லை….அதோட சுந்தரி ஏன் உன்னை சீண்டிக்கிட்டு இருக்கானு உனக்கே தெரியும்….அவளுக்கு நீ எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருக்கனும் அது தான் வேணும் அதுக்கு உன்னை சீண்டி விளையாடுவா ஆனா அது கூட நம்ம வீட்ல தான்….இன்னைக்கு கூட உனக்காக அவ்வளவு சண்டை போட்டா போன்ல…..அவ தான் பேச சொல்லி சொன்னா….”என்று நேசன் கூற,

“ஓஓ அந்த குட்டி சொன்ன பின்னாடி தான் என்கிட்ட பேசினீங்களா….”என்று மற்றதை விட்டுவிட்டு லட்சுமி மீண்டும் சண்டையை தொடங்க,

“லச்சு பேபி அர்ச்சகர் கூப்பிடுறார் வா…..”என்று சுந்தரி ஓடி வந்து அவரை இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.

“ப்பா தப்பிச்சேன்….”என்று நெஞ்சில் கை வைத்து தன்னை சமன் செய்தார் நேசன்.இப்படியாக இவர்கள் அர்ச்சனை செய்துவிட்டு கோவில் பிராகரத்தை சுற்றி வரும் போது அவர்களின் முன்னே வந்தார் கல்யாண தரகர் செல்வம்.

“என்னை வர சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டீங்க….”என்று வந்தவுடன் அவர் வசந்தியிடம் எகிற,

“நீங்க தூக்கிட்டு வர போட்டோ புக்கை பார்க்கறதுக்காக வெயிட் பண்ணனுமா….எங்களுக்கு வேற வேலை இல்லை…”என்று சுந்தரி பல்லை கடித்துக் கொண்டு கூறினாள் இது கடந்த இரண்டு வருடங்களாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு.

“பார்த்தியாமா எப்படி பேசுது உன் பொண்ணு….இப்படி இருந்தா எப்படி உனக்கு வரன் கூடி வரும்….ஏற்கனவே உங்க குடும்ப பின்னனிக்கு உனக்கு அமையறது கஷ்டம்….”என்று மேலும் கூற வந்தவரை,

“யோவ்….”என்று சட்டையை பிடிக்க வந்துவிட்டாள் சுந்தரி.அவளின் கைகளை இறுக பிடித்த வசந்தி,

“சுந்தரி சும்மா இருக்க மாட்ட…பெரியவங்க கிட்ட இப்படியா நடந்துகிறது அமைதியா இரு…..”என்று கைகளை முறுக்க,அவளோ இது எதையும் காதில் வாங்காமல் எதிரில் இருந்தவரை வெறித்தபடி நின்றிருந்தாள்.

“வசந்தி விடு அவளை….”என்று லட்சுமி சத்தம் போட்டார்.

“செல்வம்….வார்த்தையை அளந்து பேசு….”என்ற நேசனின் குரலில் தன்னை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தார் மனிதர் இல்லையேல் அவரின் வார்த்தைகள் நிச்சயம் முற்றியிருக்கும்.வசந்திக்கு அதுவரை இருந்த இனிமையான மனநிலை மறைந்து இறுக்கம் குடி கொண்டது.

“இல்லிங்க ஐயா….இப்படி இருக்கும் போதே இப்படி பேசுது….”என்றவரை தடுத்த நேசன்,

“இங்க பாரு நீ திரும்பி திரும்பி தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க…..நீ வந்த விஷயத்தை மட்டும் சொல்லிட்டு கிளம்பு உனக்கு ஆதாயம் இல்லாம இவ்வளவு தூரம் நீ வர போறது இல்ல….”என்று கூற,

“ஆமாங்க ஐயா….சுந்தரிக்கு நல்ல வரன் ஒண்ணு வந்திருக்கு….அதை சொல்ல தான் வந்தேன்….”

“அதை போன்ல சொல்லியிருக்க வேண்டியது தான…..அதுக்கு இவ்வளவு துரம் வர வேண்டிய அவசியம் என்ன…..”என்று நேசன் கேள்வி கேட்க,செல்வம் சற்று தடுமாறினார்.சுந்தரி முணுமுணுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தாள் இனி அவளால் எதுவும் பேச முடியாது மீறி பேசினால் வசந்தியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் அதோடு அவருக்கு மனவருத்ததையும் கொடுக்கும் என்று கருதி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.

“என்ன செல்வம் பதிலை காணும்….சரி அதை விடு மாப்பிள்ளை யாரு….அவங்க விவரத்தை சொல்லு….நான் பேசனும்…..”என்று நேசன் கூற,

“நீங்க எதுக்கு பேசனும் ஐயா….அது நான் எல்லாம் பேசிட்டேன்…அவங்க நாளைக்கு வரேன்னு சொல்லிட்டாங்க….”என்று கூற,

“என்ன எங்க கிட்ட எதுவும் சொல்லாம எதுக்கு அவங்களை வர சொன்ன….நீ முதல்ல மாப்பிள்ளை பத்தின விபரத்தை சொல்லு….”என்று நேசன் சந்தேகத்துடன் கேட்டார்.

“அதெல்லாம் நல்ல இடம் தாங்க….”என்று ஏதோ கூற வந்தவரை தடுத்த லட்சுமி,

“அந்த நல்ல இடத்தை பத்தி தான் ஐயா கேட்குறாங்க….அதை ஏன் சொல்லமாட்டேங்குற….அப்ப அதுல ஏதோ வில்லங்கம் இருக்கு அப்படி தான…”என்று கேட்டுவிட,

“இல்லமா அப்படினு சொல்ல முடியாது…..”என்று செல்வத்தின் தடுமாற்றமான பதிலே அது தான் என்று கூறிவிட்டது.

“இப்ப சொல்ல போறியா இல்லையா செல்வம்….”என்று நேசனின் குரல் கர்ஜனையாக ஒலிக்க,

“தாத்தா….”

“ப்பா….”

“என்னங்க….”என்று மூன்று பெண்களும் ஒருசேர கத்திவிட்டனர். ஆனால் அவரோ இதை எதையும் பொருட்படுத்தாமல்,

“ம்ம்….உன்கிட்ட தான் கேட்குறேன்….”என்று செல்வத்தை உறுத்து விழித்தபடி கேட்க,

“அது மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது கல்யாணம்…..”என்று முடித்திருக்க மாட்டார் அவரின் சட்டை பிடித்துவிட்டார் நேசன்.

“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு வரனை கொண்டு வருவ….”என்றவரின் கோபத்தில் லட்சுமியும்,வசந்தியும் பயப்பட,

“தாத்தா விடு….”

“விடுறதா….எவ்வளவு தைரியம் இருக்கனும் இவனுக்கு என்னோட பேத்திக்கு எப்படிபட்ட வரன் கொண்டுவந்திருக்கான்….இவனைஐஐஐ….”என்று பல்லை கடிக்க,

“ஐஐஐஐயா….நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க….”என்ற செல்வத்தின் வார்த்தைகள் அவரின் காதில் விழவில்லை.

“தாத்தாஆஆஆஆ விடு…..விடு….”என்று அவரின் கையை பிடித்து இழுத்த சுந்தரி,

“நீங்க சொன்ன வரைக்கும் போதும் கிளம்புங்க….இனி நீங்க வரவே வேண்டாம்….”என்று பல்லிடுக்கில் கூற,அவரோ நேசனை கோபம் போல பார்த்துவிட்டு நகர்ந்தார்.அதை தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியாது.

தங்களின் வீட்டை அடைந்தவுடன் வசந்தி வேகமாக மாடி ஏறி போய்விட்டார்.

“சுந்தரிமா போடா….அவளை சமாதானம் செய்… நல்ல நாளை நாசமாக்கிட்டான்……”என்று பல்லை நறநறவென கடித்துக் கொண்டே நேசன் கூற,

“எல்லாம் உங்க பொண்ணை சொல்லனும் தாத்தா….இவங்க தான அவனை வர சொன்னது….”என்று சுந்தரி முகம் சிவக்க கூறினாள்.

“ஏய் வாயாடீ முதல்ல போய் அம்மாவை பாரு….கலங்க மாட்டா தான் ஆனாலும் மனசு கஷ்டப்பட்டிருப்பா போ போய் அவளை பாரு….”என்று லட்சுமி அவளை விரட்ட,

“இது இது தான் என் லச்சு பேபி…..பாரு எனக்கு ஒண்ணு உடனே துடிக்கிறதை…..”என்று அவரின் கன்னம் கிள்ளி முத்தமிட்டுக் கொண்டு அவள் செல்ல,

“இவ அப்படியே வசந்தி தான்….”என்று லட்சுமி கூறிக் கொண்டே தன் வீட்டின் உள் நுழைந்தார்.

“அதனால தான் இத்தனையும் தான்டி வந்திருக்கா லட்சுமி இதே வேற பொண்ணா இருந்தா மனசொடிஞ்சி போயிருப்பா….வசந்தி வளர்ப்பு அப்படி…”என்று நேசன் கூற லட்சுமிக்கு அவர் கூறுவதில் உள்ள உண்மை தான் புரிய ஆம் என்று தலையாட்டினார்.

சுந்தரி தன் வீட்டின் உள்ளே நுழைந்து நேராக பூஜை அறைக்கு செல்ல வசந்தி அங்கு தான் கை கூப்பி நின்று கொண்டிருந்தார்.அதை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் கோடாக இறங்கியது தன் இதய பகுதியை மெல்ல நீவி விட்டவள்,

“ம்மா…..”என்று அழைத்தபடி அவரின் தோள் தொட,கண்களை திறந்த வசந்தியின் கண்களும் கலங்கி தான் இருந்தது.

“ம்மா பிரேவ் வுமென் நீ….நீயே இப்படி அழலாமா….”என்று கூறியபடியே அவரின் கண்களை துடைத்துவிட்டவாரே அவரை வரவேற்பறைக்கு அழைத்துவர,

“ச்சு போடீ….”என்றவர் தளர்வாக அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்துவிட்டார்.அவரின் முன்னே மண்டியிட்டு அமர்ந்த சுந்தரி,

“இதுக்கு நீ என்னை ஆசரமத்திலேயே விட்டுட்டு வந்திருக்கலாம்…..”என்று கூற அவளை சப் என்று அறைந்திருந்தார் வசந்தி.

“சென்டிமென்டா பேசுறோம் நினைப்பா நாய….போ போய் எனக்கு ஒரு கப் காபி எடுத்துட்டுவா….”என்று ஏவ, பே என்று கன்னத்தில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.

“என்னடீ முழிக்கிற போ….”என்று அவளை சமையலறை பக்கம் தள்ளிவிட,கன்னத்தில் கை வைத்துக் கொண்டே சென்றாள் சுந்தரி.மகள் உள்ளே சென்றவுடன் மீண்டும் வசந்தியின் முகம் இருளடைந்துவிட்டது.மனதில் சொல்லானா வலி கண்கள் அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த தன் தந்தை வேதாச்சலத்தின் புகைப்படத்தில் நிலைத்தது.

“ப்பா….ஏன்பா எங்களை யாரும் புரிஞ்சிக்கமாட்டேங்குறாங்க…..”என்றவரின் நினைவு சுந்தரியை முதன் முதலில் பார்த்த தினத்திற்கு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!