Skip to content
Post Views: 4,065
தங்கை உண்டாகியிருக்கும் செய்தி கேட்டு அந்த வாரம் ஞாயிற்று கிழமையே ஓடோடி வந்து விட்டாள் தேவிகா.
குடும்பத்தில் கொஞ்ச நாளாகவே அவளுக்கு அழுத்தம் இருந்தாலும் தங்கையை கண்டவுடன் அவ்வளவு மகிழ்ச்சி.
அக்கா நீ கூட இன்னொன்னு பெத்துக்கோ! என்றாள் சுபி.
இன்னொன்னா? சிரித்து வைத்தாள் தேவிகா.
Advertisement
அவள் குடும்பத்தில் இருக்கும் குளறுபடியும்,பிரச்சனைகளும் அவளுக்குத்தானே தெரியும்.
தன் கணவன் ஒரே பிள்ளையாய் இருந்து விட்டது போல் தன் குழந்தை தனியாய் இருந்து விடக்கூடாது என்ற எண்ணம் அவளுக்கு இல்லாமல் இல்லை.
இருக்கும் பொருளாதார பிரச்சினையில் அவளால் தற்சமயம் இன்னொரு குழந்தையை எண்ணிப் பார்க்க இயலாது. மிகச் சரியாக முப்பதாம் அகவையில் இருக்கிறாள் தேவிகா. சீக்கிரம் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளும் பேரவா இருக்கிறது. அவளுக்கும் ஆசையும் ஏக்கமும் இருக்கிறது தான் என்ன செய்ய?
Advertisement
செய்தி கேள்விபட்டு அண்ணி சுகன்யா போன் செய்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.
Advertisement
சுபி எனக்கு ஆண் பிறந்தால் உனக்கு பெண் குழந்தை பிறக்கணும். எனக்கு பெண் பிறந்தால் உனக்கு ஆண் குழந்தை பிறக்கணும். அப்போ தான் நாம சம்மந்தி ஆக முடியும் என்று சிரித்தாள் சுகன்யா.
அண்ணி உங்களுக்கு பையன் பிறந்தா பொண்ணு கொடுக்கிறேன். எங்கண்ணன் உங்களை தாங்குற மாதிரி என் மருமகனும் பொண்டாட்டியை தாங்குவான்.ஆனா பொண்ணு பிறந்தா என் பையனுக்கு வேண்டாம். கல கலவென்று சிரித்தாள்.
ஏய் சுப்பம்மா என் பொண்ணு உனக்கு அவ்வளவு இளப்பமா?
Advertisement
ஹா ஹா…. அப்படி இல்ல அண்ணி. என் பையன் பாவம்.
நீ மாமியாரா இருக்க வீட்டில் பொண்ணு கொடுக்கிறது கொஞ்சம் ரிஸ்க் தான். மாமியார் அப்படி இப்படினாலும் மாமனார் நல்ல டைப். அதுக்காக பொண்ணு கொடுத்தால் தான் உண்டு.
அண்ணி இவள் கொஞ்சம் கோபமும்,கொஞ்சம் சிரிப்புமாய் சிணுங்கினாள்.
ம்ம்ம்ம் என்ன சிணுங்கல்?
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா நான் உனக்கு பொண்ணு கொடுக்க ஒத்தை காலில் நிற்கிறேனா? செல்லமாய் வம்பிழுத்தாள். நாங்க மட்டும் பரிசம் போட தட்டு தூக்கிட்டு நிற்கிறோமா? இவளும் வம்பிழுத்தாள்.
“———————-“
மன்னர் முடிந்த அளவிற்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுகிறான். மனைவியை கவனித்து கொள்வதில் அப்படி ஒரு நிம்மதி அவனுக்கு. மனைவிக்கு பதில் குழந்தையை சுமக்க முடியாது என்றாலும் மசக்கையில் உபாதைகளோடு இருக்கும் அவளுக்கு அரவணைப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பெரிது தானே….?
எப்போதுமே மனைவி மீது அக்கறை கொண்டவன் தான் இப்போது தன் மகவை சுமப்பத்தால் கூடுதல் அக்கறை.
மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டாளா? சரிவிகித உணவு உட்கொள்கிறாளா? நடைப்பயிற்சி செய்கிறாளா? என்று பொறுப்பாய் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
பாப்பாத்தி பெத்த தாயைப்போல் அருகில் இருந்து கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்கிறார். வயலில் வேலை என்றால் கூட அவர் மருமகளை விட்டு செல்வது இல்லை.
எழில்,தீபா கோவையில் இருந்து பார்க்க வந்திருந்தனர். தீபாவின் முகம் கொஞ்சம் இறுக்கமாக இருந்தாலும் அவளுக்கு மகிழ்ச்சி தான். உள்ளுக்குள் கொஞ்சம் வருத்தம் இல்லாமல் இல்லை, அதை பொறாமை என்று ஏன் சொல்ல வேண்டும்? இல்லாதவர்களின் ஏக்கம் என்று கூட சொல்லலாமே…
தீபா இந்த வருஷம் சஷ்டி விரதம் இரும்மா! நானும் குலதெய்வத்துக்கு நேர்ந்துகிட்டு காசு முடிஞ்சு வச்சிருக்கேன் என்றார் பாப்பாத்தி.
சரிங்கத்தை என்றாள் உயிர்ப்பில்லாமல்…
தீபா இப்போ என்ன உங்களுக்கு வயசாகிடுச்சு? என் சின்ன மாமியாருக்கு பத்தொன்பது வருஷம் கழிச்சு குழந்தை உண்டாச்சாம். என் கொழுந்தன் என் மகன் ஜெயராமனை விட ரெண்டு வயசு தான் மூத்தவன். அவர் ஆறுதளுக்காய் கூற….
அப்போ எங்களுக்கும் இன்னும் நிறைய வருஷம் இருக்குன்னு சொல்றீங்களா அத்தை? வெடுக்கென்று கேட்ட மருமகளை இயலாமையுடன் பார்த்தார் பாப்பாத்தி.
அவளும் நக்கலாகவெல்லாம் பதில் கூறவில்லை அவளுடைய வேதனை ஏதோ மனதில் பட்டதை உடனே உளறி விட்டாள்.
சுபி பேச்சு போக்கும் திசையை சங்கடமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பூமாலை மனைவியை பார்த்து கண் காட்ட கண்கலங்கி மனம் வெதும்பி நின்ற பாப்பாத்தி வா சுபி மிளகாய் பஜ்ஜி போடுவோம் என்று கையோடு அவளையும் அடுப்படிக்கு அழைத்து சென்றுவிட்டார்.
எழில் மனைவியை முறைக்க…. அவனை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டாள்.
தங்கள் அறைக்குள் நுழைந்த மனைவியை பிடி பிடி என்று பிடித்துக்கொண்டான்.
உன்னை என்ன சொல்லி கூட்டிட்டுவந்தேன்? நீ என்ன பேசி வைக்கிற?
நான் என்ன பேசிட்டேன்?
அடி பைத்தியம். உனக்கு பொறாமைன்னு நினைப்பாங்க.
படிச்சவ மாதிரி பிஹேவ் பண்ணு! நாளைக்கு கிளம்புற வரைக்கும் பொத்துன மாதிரி இருக்கணும்! கிட்டத்தட்ட மிரட்டல் தான்.
அவனுக்குமே மிகுந்த சங்கடம் மனைவி என்ன பேசி வைப்பாளோ என்ற பயத்துடன் தான் அழைத்து வந்தான். அவன் பயந்த மாதிரியே அவளும் நடந்து கொள்கிறாளே…
“———————“
வாண்ணா, வாங்க என்றான் தீபாவை பார்த்து….
ம்ம்ம்ம் என்று தலை அசைத்து ஏற்றுக் கொண்டனர் அவன் வரவேற்பை.
வாழ்த்துக்கள் மன்னரு. தம்பியின் கரம் பற்றி குலுக்கினான் எழில்.
தேங்க்யூ என்றான் சற்று சங்கடமாய்.
தீபா உள்ளே போய்விட, பொதுவான விஷயம் பேசிக் கொண்டு அண்ணன் தம்பி இருவரும் செய்தி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அண்ணா ஒரு விஷயம் சொல்லவா? தவறாக நினைக்க கூடாது. இப்போ உன் ஜாப்பில் பிரஷர் அதிகம்னு சொன்ன தானே… லீவ் எடுத்துக்கிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோ! அண்ணியை எங்காவது வெளியில் கூட்டிட்டு போ..!
கோவை ஆபிஸ் செட் ஆகலைன்னா வேற எங்காவது டிரான்ஸ்பருக்கு ட்ரை பண்ணு!
ஆமா மன்னரு…. ஒர்க் லோட் ரொம்ப அதிகம். டிரான்ஸ்பர் வாங்கற ஐடியா இருக்கு. கொஞ்சம் செலவு பண்ணி தான் வாங்கணும்!
செலவை பத்தி யோசிக்காதே… நம்ம சைடு எங்காவது ட்ரை பண்ணு.
தீபாக்கு கோயம்புத்துத்தூர் ரொம்ப பிடிச்சிருக்கு.
அதுக்கு என்ன செய்ய முடியும்? வாழ்க்கை முக்கியம் என்றான்.
கணவனை உணவிற்கு அழைக்க வந்தவள் அவர்கள் பேச்சில் நின்றுவிட்டாள்.
அண்ணன் தம்பி இருவருமாய் அமர்ந்து இரவு உணவை முடித்துக் கொண்டனர்.
“————————–“
உங்களோட வழிகாட்டி, அறிவு மிகுந்த தம்பி எப்படி பிரைன் வாஷ் பண்றாரு பார்த்தீங்களா? கோயம்புத்தூரில் நாம நிம்மதியா இருக்கிறது பார்த்து அவருக்கு பொறாமை…. பொரிந்துவிட்டாள் தீபா.
ஏய் அவன் என்ன சொன்னான்… நீ என்ன புரிஞ்சிகிட்ட? என்
தம்பிக்கு யாரை பார்த்தும் எப்போதும் பொறாமை வராது. அவன் நம்மோட நல்லதுக்கு தான் சொன்னான்.
எல்லாம் சரியா தான் புரிஞ்சுகிட்டேன் நம்ம சைடு வரவாமே எதுக்கு? அடிக்கடி உங்க அம்மா அப்பா வந்து நிற்க வா?
அடித்து பல்லை உடைப்பேன் ராஸ்கல்.ஏன் எங்க அம்மா அப்பா சோத்துக்கு உன்கிட்ட வந்துடுவாங்கன்னு பயமா இருக்கா?
எங்க அம்மா அப்பாவை பத்தி என்ன நினைச்ச? பார்க்க பேக்கு மாறி இருக்காங்கன்னு நினைச்சியா…? யாரையும் கஷ்டப்படுத்தி பார்க்கும் பழக்கம் எங்க அம்மாக்கு இல்ல… அடிக்கடி சொல்லுவாங்க கை, கால் நல்லா இருக்க வரைக்கும் வாழணும்… முடியாத நிலை வரப்போ நம்ம கதையை முடிச்சுக்கணும்.பிள்ளைகளுக்கு தொல்லையா போய் நிற்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.
கோயம்புத்தூர் கிளைமேட் நல்லா இருக்குன்னு உங்க அம்மா அப்பா மாசம் இரண்டு முறை வந்து டேரா போடும் போது இனிக்குதா?
அவங்களுக்கு பொண்ணு வீட்டில் உரிமை இருக்கும்போது என்னை பெத்தவங்களுக்கு மகன் வீட்டில் உரிமை இருக்கக் கூடாதா?
உண்மையில் தீபா அரண்டுவிட்டாள். எழில் இப்படி பேசும் ஆள் இல்லை.
எனக்கு புரிஞ்சிடுச்சு! எனக்கு குழந்தை இல்லைன்னு தானே எல்லாரும் இப்படி பேசுறீங்க… துடைக்க துடைக்க வழிந்து ஓடியது அவளுக்கு கண்ணீர்.
எருமை எதையும் உனக்கு சரியான கோணத்தில் யோசிக்கவே தெரியாதா?
ஒர்க் பிரஷர் அதிகம் இருக்குன்னு சொன்னியே வேற ஆஃபீஸ் ட்ரை பண்ணு அப்படின்னு அவன் சொன்னது பொறாமையில் இல்லை…. இடம் மாறி கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தா குழந்தை உருவாகும் என்ற நம்பிக்கையில்.
போன வாரம் ஹாஸ்பிடல் போனோமே அப்போ கூட டாக்டர் என்ன சொன்னாங்க மைண்டை ரிலாக்ஸா வச்சுக்கோங்கன்னு சொன்னாங்க தானே?
அட்லீஸ்ட் லீவ் போட்டுட்டு எங்காவது ரிலாக்ஸா போய் வாங்கன்னு சொன்னான். அவனுக்கு என்னை பார்க்கவே ஒரு சங்கடம்.
சஞ்சீவி ஹாஸ்பிடல் பவானி தணிகாசலம் கைராசியான டாக்டர்.இருந்து காட்டிட்டு போங்கன்னு கூட அக்கறையா சொன்னான்.
மன்னர் எப்போதும் யார் விஷயத்திலும் மூக்கை நுழைக்க மாட்டான். அவன் எனக்கு அட்வைஸ் பண்ணலை ஆலோசனை சொன்னான். கேட்டுக்கிறதும் விட்டுடுவதும் நம்மோட விருப்பம்.
இதை ஒரு பிரச்சனைன்னு இழுத்து பேனை குத்தி பெருச்சாளியாக்கி நீ ஒன்னு கிடக்க ஒன்னு பேசி ஏழரையை கூட்டாதே உனக்கு புண்ணியமா போகும் கையெடுத்து கும்பிட்டான் எழில்.
தம்பிக்கு ஆதரவாக எழில் இவ்வளவு பேசுகிறான் என்று நினைத்தால் அது தவறு. இன்றுதான் மன்னரை சரியாக புரிந்து பேசுகிறான்.
“———————“
என்ன சுப்பு,அம்மா முகம் வாடி போய் இருக்கு. தீபா அண்ணி ஏதாவது பேசிட்டாங்களா?
ஒத்துக்கறேன் நீங்க சிரிப்பு போலீஸ் இல்லை சீரியஸ் போலீசு தான்…. சலுகையாய் அவன் மீசையை முறுக்கி மார்பில் செல்லமாய் குத்தினாள் அவன் கண்ணான கண்ணாட்டி.
சாப்பிடும் பத்து நிமிடத்தில் தாயின் முகத்தை கூர்ந்து நோக்கி இருக்கிறான். ஏதோ நடந்திருக்கிறது என்று தெளிவாக கணித்திருக்கிறான். இந்த போலீசுக்கு என்ன மூளை! வியந்து தான் போனாள் சுப்பம்மா.
பெருமையும் கனிவுமாய் கணவன் முகத்தை அவள் ஆழ்ந்து நோக்கி இருக்க…. சுப்பு தீபா அண்ணி கிளம்பற வரைக்கும் அவங்க எது பேசினாலும் நீ மைண்ட் பண்ணிக்க கூடாது சரியா? அவங்க ஏதோ ஒரு ஆதங்கத்தில் பேசினால் நீயோ அம்மாவோ அதை பெரிசு படுத்த கூடாது. மென்மையாய் அவள் நெற்றியை நீவினான் காதலுடன்.
பாப்பாத்தி அக்கறையுடன் பேசியதும் அதற்கு தீபா சுள்ளென்று பதில் கொடுத்ததையும் கணவனிடம் வருத்தத்துடன் கூறினாள்.
அவங்க மனநிலை உனக்கு புரியலையா சுப்பு? குரல் தழுதழுத்தது அவனுக்கு. வழக்கம்போல் சுபி இதையும் தவறாக எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டால் ?அந்த கவலை அவனுக்கு .
ஏன் புரியாம? குழந்தை பாக்கியம் இல்லை என்றால் ஆணைவிட பெண்ணுக்குத்தான் மன அழுத்தம் அதிகம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும், சொந்த பந்தங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் ,வெளி உலகத்தை சமாளிப்பது பெரும் பாடாக இருக்கும்.
பரவாயில்லையே என் சுப்பம்மா இவ்வளவு பக்குவமா யோசிக்கிறாளா ? நம்ப மாட்டாமல் தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டான்.
இப்படிக் கிள்ளினா வலிக்காது போலீசு ….எப்படி கிள்ளனும்னு நான் சொல்லித் தரேன் பாருங்க! நறுக்கென்று பிடித்து கிள்ளி விட்டாள்.
ஸ் ஆ என்று வலியில் சத்தமிட்டான்.
யோவ் இப்போ எதுக்கு இப்படி கத்தி மானத்தை வாங்குற? பக்கத்து ரூமில் இருந்து உங்க அண்ணன் அண்ணி வந்து நின்னுட போறாங்க… சிரிப்புடன் அவன் வாயை பொத்தினாள்.
வரவர பயம் என்பதே இல்லாம போச்சு… செல்லமாய் முறைக்க முயன்றான். சிரிப்பு தான் வந்தது.
என்னதான் உலகம் நவீனமா மாறிட்டாலும் குழந்தை இல்லைனா அந்த ஆணிடம் எதுவும் கேட்க மாட்டேங்கிறாங்க. அந்த பெண்ணை பிடித்து துருவி துருவி விசாரிக்கிறாங்க எல்லாரும். அக்கறை என்ற பெயரில் ஆள் ஆளுக்கு அந்த பெண்ணை பிடித்து விசேஷம் இல்லையா? இந்த கோயிலுக்கு போ!அந்த விரதம் இரு!இந்த டாக்டரை பாரு …. ப்பா எவ்வளவு வலி வேதனை.
குழந்தை இல்லைனா அந்த பெண்ணுக்கு மட்டுமா குழந்தை இல்லை,ஆணுக்கும் சேர்த்து தானே? உங்க அம்மா கூட பாருங்க சஷ்டி விரதம் இருக்க சொல்லி தீபா அக்காவை தான் சொன்னாங்க.ஏன் எழில் மாமா விரதம் இருந்தால் ஆகாதா?அவருக்கும் தானே குழந்தை வேணும்?
அடியே சுப்பம்மா பெண்ணுரிமை பேசி என் அண்ணன்காரனுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துறாதே…. தீபா அண்ணி சும்மாவே வில்லங்கம்.
உண்மையை சொன்னா யார் ஏத்துக்கிறாங்க? கணவனை கடுமையாய் முறைத்து வைத்தாள்.
அண்ணன்கிட்ட பேசியிருக்கேன். நம்ம டாக்டர் பவானி தணிகாசலம் நல்ல கைராசியான டாக்டர் முடிந்தால் ஒருமுறை பார்த்துட்டு போங்கன்னு சொல்லி இருக்கேன்.
எனக்கும் தோணுச்சுங்க. அவங்க கோயம்புத்தூரில் பெரிய ஹாஸ்பிடலில் எல்லாம் டிரீட்மென்ட் பார்க்கிறாங்களாம். நான் ஏதாவது சொல்லி அவங்க தவறாக புரிந்துகிட்டா? அந்த சங்கோஜத்தில் நான் எதுவும் சொல்லலை.
அம்மாக்குமே ரொம்ப கவலை சுப்பு…. எல்லா மகனுக்கும் வாரிசு இருக்கு. எழிலுக்கு மட்டும் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கலையே என்ற ஒரு வருத்தம் அவங்களுக்கு.
இல்லாம எங்கே போயிடப் போகுது கல்யாணம் ஆகி 2 1/2 வருஷம் தானே ஆகுது. பாருங்க ஒரு குழந்தை உண்டானா அந்த வீட்டில சீக்கிரமே அடுத்த குழந்தை உருவாகுமாம்.
உடனேவா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை? நீ தாங்குவியா? நமட்டு சிரிப்புடன் அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தான்.
யோவ் உன்னை…..பட் பட் பட்டென்று நான்கு ஐந்து அடிகளை முதுகில் அப்பிவிட்டாள்.
“———————-“
கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த அம்மாவின் பின்னால் சென்று நின்றான் எழிலரசன்.
பக்கத்தில் நிழலாட திரும்பி பார்த்தவர், என்ன சாமி ஏதாவது வேணுமா? அவ்வளவு கரிச்சனை அவர் குரலில்.
அதுதான் பாப்பாத்தி…. பிள்ளைகள் தான் அவர் உயிர், உலகம்.
அன்னையின் அன்பில் நெங்கிழ்ந்தவன் ம்மா தீபா ஏதோ விரக்தியில் பேசிட்டா தயவு செய்து மனதில் வச்சுக்காதம்மா…. தாயின் முக வாட்டம் உணர்ந்து கெஞ்சுதலாய் பேசினான் எழில்.
அட ஏம்பா… இது எல்லாம் நான் பெருசுபடுத்துவேனா? பொம்பளைபிள்ளை பெறலைன்னாலும் அந்தப் பொண்ணு வலியும் வேதனையும் எனக்கு புரியும்.
அம்மா ஒன்னே ஒன்னு சொல்றேன் கேளு சாமி. நம்ப சுபியை காட்டுற ஆஸ்பத்திரியில ஒரு முறை காட்டிட்டு,குலதெய்வம் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு ஊருக்கு கிளம்புங்கப்பா. வருஷத்துக்கு ஒரு முறையாவது குல தெய்வத்தை போய் கும்பிடனும் சாமி. சொன்னா எங்க கேக்குறீங்க…
எங்க தலைமுறையில் நாங்க மனசறிஞ்சு யாருக்கும் எந்த பாவமும் பண்ணலை. கண்டிப்பா கடவுள் கண்ணு திறப்பாருய்யா.
சரி மா நான் ரெண்டு நாள் லீவு போடுறேன். மன்னரும் இதை தான் சொன்னான் கைராசியான டாக்டர் ஒருமுறை பாருங்கன்னு.
சந்தோஷம்பா! நீ போய் படு!
ம்மா என்று தழுதழுப்புடன் கலங்கியவன் அவர் தோள் சாய்ந்தான்.
ஆண் பிள்ளைகள் எட்டு பத்து வயதானாலே தாயிடமிருந்து மெல்ல விலகி விடுகின்றனர்.
பாப்பாத்திக்கு பெண் பிள்ளை இல்லை என்ற வருத்தம் அதிகம் தோன்ற இதுவே காரணம்.
உனக்கென்ன நாலு சிங்கக்குட்டியை பெத்து வச்சிருக்க என்று எல்லோரும் சொன்னாலும் அவருக்கு உள்ளுக்குள் ஏக்கம் தான்.
ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால் நம்மிடம் நெருக்கமாக இருந்திருக்குமே…
கிராமத்து சூழலில் வளர்ந்த பிள்ளைகள் அவரிடமிருந்து தள்ளியே நின்றனர். மன்னர் மட்டும் கொஞ்சம் நெருக்கம்.
சினிமாவில் காட்டுவது போல் தாயிடம் கேலி பேசி கொஞ்சி கெஞ்சி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து என்றெல்லாம் அவர்கள் இல்லை.
எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோள் சாய்ந்த மகனை அணைத்தவருக்கு மளுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.
என்ன சாமி….. நெகிழ்வுடன் அவன் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டார்.
ம்ம்மா என்றவன் மெல்ல விசும்பி விட்டான். தாயின் ஒற்றை முத்தம் தான் வளர்ந்துவிட்ட ஆண்மகன் என்ற கர்வத்தை தூள் தூளாக நொறுக்கிவிட்டது.
அம்மாவின் புடவை வாசம் சஞ்சலபட்டு கிடந்த அவன் மனதிற்கு சாமரம் வீசியது.
“———————“
தாயிடமிருந்து பெற்ற ஸ்பரிசமும், தம்பியிடம் பேசியப்பின் கிடைத்த தெளிவும் அவ்வளவு ஆசுவாசம் கொடுத்தது அவனுக்கு.
நீண்ட காலத்திற்கு பிறகு தன் சொந்த வீட்டில் நிம்மதியான இரவு உறக்கமும், அமைதியான விடியலும்,தாயின் கையால் செய்த நாட்டுக்கோழி குழம்பும், மெத்தென்ற இட்டலியும் அவ்வளவு அனுபவித்து ரசித்தான் எழில்.
எழிலின் எழில் முகம் கண்ட பாப்பாத்திக்கு அவ்வளவு நிம்மதி.
மன்னரு வயலுக்கு போய் வருவோமா?
போலாம்ணா.
நானும் வரவா? தீபா ஆர்வமாய் கேட்டாள்.
நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க என்று பைக் சாவியை கையில் கொடுத்தான் மன்னர்.
வயலுக்கு போய் கணவனுடன் சிரித்து பேசி சந்தோஷமாய் இளநீர் குடித்து, கொய்யாக்காய் பறித்து கடித்து ருசித்து…. மோட்டாரில் குளியல் போட்டு புத்துணர்வாய் உணர்ந்தாள் தீபா.
அக்ரி ஆபிசர் எழிலரசன் இன்று முற்றிலும் வேறொரு எழிலாக இருந்தான். காத்தானும் அவன் மனைவியும் மிளகாய் நாற்று நட்டுக் கொண்டிருக்க… அவர்களுடன் போய் கொஞ்ச நேரம் நடவு நட்டான். மண்வெட்டி எடுத்து மடை திருப்பி அடுத்த வயலுக்கு தண்ணீர் திருப்பினான்.
அப்பா இந்த எழிலு இவ்வளவு நாளா எங்கே இருந்தாரு? தீபா காதல் பொங்க கண்சிமிட்டி சிரித்தாள்.
எங்கேயும் போகல… இந்த முடியனூர் எழிலு தான் ஒரிஜினல். நான் எங்கே போனாலும் என் ஆதியும் அந்தமும் இதுதான்.
நானும்,மன்னரும் போட்டி போட்டு அண்டை வெட்டுவோம், வரப்பு செதுக்குவோம். இப்போ கொஞ்சம் குனிந்து நிமிர்ந்தாலே மூச்சு வாங்குது.
இந்த வயலில் நான் செய்யாத வேலையே இல்லை. ஜெய் அண்ணா மட்டும் தான் ஷோக்கா வளர்ந்துச்சு! மூத்த பிள்ளை செல்ல பிள்ளை. நாங்க எல்லாரும் அப்பாவோட சேர்ந்து கடினமா பாடுப்பட்டவங்க. இந்த வயல்களில் என் காலடி படாத இடமே இல்லை.
பெருமையாய் கணவன் மலரும் நினைவை பகிர்ந்து கொள்ள நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இவ்வளவு பேசியிருக்கிறோம் என்று இருவருமே உணர்ந்தனர்.
அடிக்கடி ஊருக்கு வரணும்ங்க என்றாள் அவன் கரம் கோர்த்து.
ம்ம்ம்ம்ம் என்றான் விரிந்த புன்னகையுடன்.
காய்கறி, கீரை பறித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினர்.
“———————–“
பார்த்து பார்த்து கவனமாய் பேசினாள் சுபி. நாம் இயல்பாக எதையாவது பேசி அதற்கு அனர்த்தமாய் தீபா ஏதாவது புரிந்து கொண்டால்? மாமியாரிடமே அப்படி பொரிந்தவள் நம்மை சும்மா விடுவாளா என்ற பயமும் ஒரு காரணம்.
சுபியின் பதட்டம் புரிந்தவள் இலகுவாக பேச தொடங்கினாள்.
சுபி நீ உட்காரு நான் வீடு பெருக்குறேன் அவள் கையில் இருந்த துடைப்பத்தை வாங்கினாள்.
தீபா சுபி பெருக்கட்டும் நீ இந்த சுழியம் உருண்டையை பொரிச்சு எடு என்றார் பாப்பாத்தி.
அவள் புரியாமல் பார்க்க… அவ குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கட்டும் என்றார்.
அப்போ சரி என்று சிரித்தவள் கிச்சனுக்கு சென்றுவிட்டாள் மாமியாருக்கு உதவி செய்ய.
மருமகள்களோடு இணைந்து பாப்பாத்தியும் பூ பறித்து சரமாய் தொடுத்து மருமகள்களுக்கு சூடி அழகு பார்த்தார்.
————தொடரும்———-
error: Content is protected !!