Skip to content
Post Views: 1,858
“ஏன்டா உனக்கு பசிச்சா நீயே சாப்பாடு வச்சுக்க மாட்டியா, எப்ப பாரு இவனுக்கு நேரம் காலம் பாக்காம நாம தான் சாப்பாடு போடணும்”
விஷ்ணுவின் அன்னை சலிப்போடு சமையலறை உள்ளே செல்ல குளித்து இடையோடு ஷார்ட்ஸ் மற்றும் உள் பணியனோடு மட்டுமே வந்த விஷ்ணு அன்னையின் கொதிநிலையை வித்யாசமாக பார்த்தான்.
தந்தையை திரும்பி பார்க்க அவர் முகமும் ஏதோ சரியில்லை என காட்டியது.
“உங்க கையால ஒரு தோசை சாப்பிட்டாலும் அதோட ருசியே தனி தானே ம்மா” அன்னைக்கு காக்கா பிடித்த மகனை திரும்பி அவர் முறைக்க, அமைதியாக தம்ளரில் தண்ணீரை நிரப்பினான்.
Advertisement
‘ஏன் இவ்ளோ சூடு?’ பெரியவன் வாயை அசைத்து சகோதரனிடம் கேட்க புத்தகத்தில் ஒரு கண்ணும் சகோதரன் திட்டு வாங்குவதில் ஒரு கண்ணையும் வைத்திருந்த சிறியவன் தோளை குலுக்கி பதில் கொடுத்தான்.
கையில் தண்ணீரை ஊற்றியவன் அதை சகோதரன் நோக்கி தெளித்தான், “எப்ப பாரு புக்கும் கையுமாவே இரு” என்று குறைப்பட்டான்.
“ஏன் அவன் அப்டி இருக்குறதுல என்ன தப்பு, உன்ன மாதிரி ஏனோ தானோனு படிச்சு இருக்கணுமா?”
Advertisement
“என் படிப்புக்கு என்னவாம்?” – விஷ்ணு
Advertisement
“அவனோட அந்த ஏதோ தானோ படிப்பு தான் இப்ப நாம இருக்க இந்த வீட்டை கொடுத்துச்சு” என்றார் விஷ்ணுவின் தந்தை மனைவியை முறைத்து.
“வீடு வாசல் இருக்கு, இல்லைனு சொல்லலையே. இதோ அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையிதா?”
“மா அண்ணா சாப்பிடட்டும் ம்மா” என்றான் சகோதரனும்.
Advertisement
விறுவிறுவென உள்ளே நடந்தவர் ஏற்கனவே ஊற்றி வைத்திருந்த இட்லியை எடுத்து வந்து வைத்தார். அவர் சென்று வந்த வேகமே அவர் கோவத்தை இன்னும் எடுத்து கூறியது. விஷ்ணுவுக்கு தேவையானவை அனைத்தையும் தட்டில் வைத்தவர் அவன் உண்டு முடிக்கும் வரை தான் பொறுத்தார்.
“இப்ப சொல்லுங்க ஏன் இந்த கோவம்?”
“சொன்னா தீத்து வச்சிடுவியாடா” இதற்கும் முறைப்பு தான் அன்னையிடம்.
‘என்னடா இது கொடுமையா இருக்கு’ என நினைத்தவனோ அமைதியாகிவிட்டான்.
அவருக்கும் மகனிடம் உண்மையை கூற தயக்கம். அவன் மனம் நோகாதா என தவித்தார்.
“சொல்லி தானே ம்மா ஆகணும் எதுக்கு தயக்கம்” என்றார் மனைவியிடம் விஷ்ணுவின் தந்தை.
“சொல்லுங்க ம்மா” சலிப்பாக அன்னை முகம் பார்த்தான் விஷ்ணு.
“அந்த பொண்ணு வீட்டுல வேணாம் சொல்றாங்க விஷ்ணு”
“எந்த பொண்ணு?” தெரியாமல் விழித்தான்.
“உன்னக்கு பாத்த பொண்ணு தான்டா. அப்பயே சொன்னேன் பேசி முடிச்சிடலாம்னு பிடி குடுத்தே பேச மாட்டிக்கிறான். எப்ப பாரு அந்த குடவுன் குடவுன்னு அங்கையே கெடக்குறான். அதுனால தான் இந்த சம்மந்தம் போச்சு. நல்ல குடும்பம்” புலம்பி தள்ளினார் அன்னை.
“என்ன பெரிய நல்ல குடும்பம்? நல்லவங்கனா இந்த மாதிரி நேரத்துல தான் கூட நிக்கணும். அப்போ அவங்க சொத்து பணத்தை பாத்து தான் வந்துருக்காங்க” என்றார் விஷ்ணு தந்தை.
“அப்டி எல்லாம் இல்லைங்க, அவங்க சொன்னதே, அவங்க பொண்ணு வந்த நேரம் இப்டி ஆகிடுச்சுனு யாரும் பேசிட கூடாதுனு கவலை தான் பட்டாங்க”
“அதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்றதுடி. நாம சொன்னோமா, இல்ல தயங்கி அவங்ககிட்ட சம்மந்தம் வேணாம்னு சொன்னோமா?”
“ப்ச் விடுங்க ப்பா. வேணாம்னு சொன்னதை எதுக்கு இவ்ளோ தூரம் பேசணும்?” சிறு உணர்வுகளின் வெளிப்பாடும் அவனிடத்தில் இல்லை. யாருக்கோ வந்த செய்தி போல் எளிதாக கடந்துவிட்டான்.
“உனக்கு கவலையே இல்லையா ன்னா?” சகோதரன் விக்ரம் கூட வியந்து பார்த்தான் விஷ்ணுவை.
“கவலை பட என்ன இருக்கு. தொழில் இல்லாம நிக்கிறவன் தானே நான்? இதெல்லாம் முன்னாடியே எதிர் பாத்து தான் வச்சிருந்தேன்”
“என்னடா தொழில் இல்லாம இருக்க? சேதாரம் ஆச்சு அதுக்குன்னு எதுவுமே இல்லனு ஆகிடுமா?”
தந்தை கேட்ட கேள்வியில் அமைதியாக எழுந்து நின்றவன், “இனி இந்த கல்யாண பேச்சு வேணாம்” என்றுவிட்டான்.
பெற்றவர்களுக்கு மனம் நொந்துபோனது. பல வருடங்கள் அவனிடம் மன்றாடி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தனர். இப்பொழுது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாகி போய்விடுமா என அஞ்சிவிட்டனர்.
“யாரோ ஒருத்தி வேணாம்னு சொல்லவும் நீ எதுக்கு கல்யாணம் பண்ணாம இருக்கனும்? உனக்கு என்ன வயசாடா திரும்புது முப்பதை தொட போற இப்பவே வயசை சொல்ல ஆரமிச்சிட்டாங்க சிலர்,
அதையும் மீறி வந்து உன்ன பத்தி விசாரிக்கிறவங்க உன் கோவத்தை பாத்து பயந்து வரவே மாட்டிக்கிறாங்க. ஈஸியா வேணாம்னு சொல்ற, நான் அந்த பொண்ணு வீட்டுல மறுபடியும் பேசி பாக்குறேன்”
“ஒன்னும் வேணாம்” குரல் உயர்த்தி கத்தியவன் எழுந்த வேகத்தில் அன்னையே அரண்டு போனார்.
“இனிமேல் அவனுங்களே வந்து கால்ல விழுந்தாலும் எனக்கு அந்த பொண்ணு வேணாம். என் கோவத்தை தெரிஞ்சு, என் கஷ்ட காலத்துல என் பக்கத்துல நிக்கிற பொண்ணா பாருங்க.
அதுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் பிரச்சனை இல்ல, அது யாரா இருந்தாலும் கட்டிக்கிறேன்” பெற்றோர் இருவரையும் பார்த்தவன் தந்தை தலையை அசைத்த பிறகு தான் மேலேறி சென்றான்.
“எனக்கு இவனோட பிடிவாதம் நினைச்சா பயமா இருக்குங்க. மொத வேலைக்கு போகலனு கவலை இருந்துச்சு, அப்றம் ஊர் எல்லாம் வாங்குன கடனை அடைச்சு நிப்பானான்னு கவலை இருந்துச்சு.
அதுல இருந்து வெளிய வந்து பொண்ணு பாக்கலாம்னு பாத்தா இன்னும் பெருசா தொழில் பண்ணிட்டு தான்னு சொல்லிட்டான், அப்றம் வீடு. எல்லாம் முடிஞ்சு நல்லது நடக்க போற நேரமா இப்டி ஆகணும்? என் புள்ள மனசு எவ்ளோ வருத்தத்துல இருக்கும்?” மன வேதனையில் வாட வாய்விட்டு கணவனிடம் அழுதார்.
“அவன் அதை பெருசா எடுத்துக்கலமா நீ ஏன் இவ்ளோ வருத்தப்படுற? அவனுக்கு பெருசா ஆசை கூட இல்ல போல” ஒரு யூகமாக மகன் சென்ற வழியை பார்த்து கூறினார்.
“அவன் வெளிய காட்டல, அவனை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான். வைராக்யம் புடிச்சவன், எதையும் மனச திறந்து சொல்ல மாட்டான். நமக்காக உள்ளேயே வச்சுக்குவான்.
அவன் கூட இருக்க எல்லாரும் கல்யாணம் ஆகி குழந்தை குட்டினு இருக்குறத பாத்து அவன் மனசு ஏங்காதா? இல்ல ஆசை இல்லாம தான் அன்னைக்கு பொண்ணு பாக்குறப்போ அவ்ளோ சந்தோசமா வந்தானா? இப்போ பாருங்க இத்தனை கண்டிஷன் வேற, நா எங்க போய் பொண்ணு தேடுவேன்? கிறுக்கன்.”
விக்ரம், “ம்மா அண்ணனை திட்டுறீங்களா இல்ல பாராட்டுறீங்களா?” இளையவன் சூழலை இலகுவாக்க சிரிப்போடு கேட்க அன்னை அதற்கும் முறைத்தார்.
“சரி முறைக்காதீங்க, உங்களுக்கு என்ன பொண்ணு தானே வேணும்? நல்ல சாய்ஸ் அனாயா அக்கா தான்”
மனதில் பல நாட்களாக உருவாகியிருந்த எண்ணத்தை போட்டு பெற்றோரின் முன்பே அடித்து உடைத்தான் இளையவன்.
பெற்றவர்கள் அதிர்ந்து போயினர், அந்த எண்ணத்தில் அவர்களுக்கு துளியும் யோசனை கூட தேவைப்படவில்லை. உடனே சிந்தனையின் சாயல் பெற்றவர்கள் கண்களில்.
“நடக்குறத பேசு” என்றார் தந்தை உடனே.
அன்று இளைய மகன் கூறும் பொழுதே அனாயாவை ஆராய தான் செய்தார். எந்த குறையும் கூறும் நடவடிக்கை இல்லை. ஆனால் மனைவியை எண்ணி அந்த எண்ணத்தையே ஓரம் வைத்துவிட்டார்.
“இதான் ப்பா நாம. விஷ்ணு அண்ணாக்கு ஏத்த ஜோடிய ஊர் மொத்தமும் தேடுறீங்க, ஆனா கண்ணனுக்கு முன்னாடி இருக்குறத விட்டுடுறிங்க. பகைய தாண்டி அவங்க மனசை பாருங்க ம்மா” என்றான்.
“பெரிய மனுஷன் பேச்சு தான். அதுக்குன்னு யாரை வேணாலும் என் பையனுக்கு கட்டி வைக்க முடியுமா, குணம் இருக்கட்டும்டா. உன் அண்ணனுக்கு நாள பின்ன போக வர ஒரு இடம் வேணாம்?”
“ஏன் இல்லாம, அவங்க தம்பி இருக்கான். அம்மாக்கு அம்மாவா, அப்பாக்கு அப்பாவா கூடவே நின்னு அக்காவை அவன் தாங்குவான். என்னைக்கும்…” இளையவனுக்கு நண்பன் மேல் சொல்லில் அடங்காத நம்பிக்கை.
“பெரியவங்க வேணாமா?” விடவில்லை அன்னையும்.
விக்ரம், “ம்மா சும்மா ஏதாவது குறை சொல்லணும்னு சொல்லாதீங்க ம்மா. அண்ணாவை டாப் டு பாட்டம் தெரிஞ்சவங்க அவங்க ஒருத்தர் தான். அவர்கிட்ட எல்லாம் இருந்தப்பவும் இதே அன்பு தான், அண்ணன் கொஞ்சம் சறுக்குனப்பவும் அதே அன்பு தான் வச்சிருக்காங்க”
“லவ்வா தெரியலனு சொன்ன?” தந்தையிடமிருந்து இம்முறை கேள்வி வந்தது.
“அவங்கள நான் அன்னைக்கு மண்டபத்துல கவனிச்சேன் ப்பா. அண்ணன் பக்கமே திரும்பல. அப்றம் பயர் ஆக்சிடென்ட் நடந்தப்ப விஷ்ணு அண்ணா முகத்தை அப்டி பாத்துட்டே இருந்தவங்க.
அது எந்த மாதிரி பீலிங்ஸ்னு எனக்கு சரியா வார்த்தை வச்சு சொல்ல தெரியல. வேலைக்கு வந்த ஆள் மாதிரி இல்ல, பரிதாபப்பட்டு போக.
விஷ்ணு அண்ணா துடிச்சப்ப இவங்களுக்கு ஏன் ப்பா அழுகை வரணும், அண்ணனை பாத்து பாத்து கண்ணை துடைச்சிட்டே இருந்தாங்க. இது பத்தலயா ப்பா அண்ணனோட லைப்ல அவங்களுக்கு மட்டும் தான் இருக்க தகுதி இருக்குனு சொல்ல?”
அவ்விடமே மௌனத்தில் மூழ்கியது. பெரியவர்கள் இருவரும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தனர், ஆனாலும் ஏதோ ஒரு உறுத்தல் மனதின் ஓரத்தில். உடனே சரி சென்றுவிட முடியாதே.
“அதிகபடியா பாத்தா அவங்க தாத்தா காலம் எவ்ளோ நாள் இருந்துட போகுது, அஞ்சு பத்து வருஷம். அதுக்காகவா அவங்களுக்கு இவ்ளோ பெரிய தண்டனை?
விஷ்ணுண்ணா கோவமும் தெரியும், அவரோட உழைப்பை பத்தியும் தெரியும். அவரோட பாசத்தை மட்டும் அனுபவிக்க வழி செஞ்சு குடுங்க அண்ணா வாழ்க்கை சொர்க்கமா இருக்கும்”
மறுப்புகள் வந்த அன்னையின் நாவானது இப்பொழுது அமைதியாக இருக்க பேச வேண்டியதை எல்லாம் பேசி முடித்தவன் தன்னறைக்கு சென்றான்.
சென்றவன் உடனே அழைத்தது நண்பனுக்கு தான், “சொல்லு விக்ரம்” சுரத்தையே இல்லாமல் வந்தது அனாயா சகோதரன் ஆரிவ் குரல்.
“அண்ணாக்கு பாத்த பொண்ணு வீட்டுல இருந்து வேணாம் சொல்லிட்டாங்கடா அண்ணா கம்பெனி லாஸ் பாத்து”
“உன் அண்ணன் ரொம்ப பீல் பன்றாரா விக்ரம்?” இதானே, இந்த குணம் தானே சகோதரனுக்காக பெரிய மனிதன் போல் பேச வைத்தது விக்ரமை.
இவர்களை நம்பி எந்த இடத்திலும் பேசலாம், அத்தனை உயர்ந்த குணம் என மனம் ஆனந்தம் கொண்டது. அனாயாவை அன்று பார்த்ததிலிருந்து விக்ரம் ஆரிவ்வோடு பேச வேண்டும் என நினைத்திருக்க இரண்டு நாட்கள் முன்பு தான் அனாயாவின் நிலை தெரிய வந்தது.
வீட்டோடு முடக்கி வைக்கப்பட்டுளாள் என்பது. அப்பொழுது பேச முடியாதவன் இப்பொழுதும் அனாயாவின் நிலையை கேட்டறிந்து அமைதியாகிவிட்டான்.
எப்படியும் தெரியும் நண்பன் மூலம் அனாயாவிற்கு நம்பிக்கை செய்தி ஒன்றை தான் அனுப்பி வைத்ததே அவளுக்கு போதுமானதாக இருக்குமென்று.
*****
error: Content is protected !!