Skip to content
Post Views: 2,447
வித்யாவால் நம்பவே முடியவில்லை. மகன் மேல் எப்பேர்ப்பட்ட குற்றத்தை இவன் சுமத்திவிட்டான் என்கிற கோவம்.
சகோதரனாக வேண்டாம் ஒரு சாதாரண மனிதனாக சக மனிதனுக்கு இப்பேற்பட்ட குற்றத்தையா தன் மகன் இழைத்துவிடுவான் என்கிற ஆதங்கம் அவருக்கு.
“யார் வீட்டுக்குள்ள வந்து யாரைடா சொல்ற?” இத்தனை நாள் மகனாய் விஷ்ணுவை அவர் நடத்தாவிடினும் அவன் மேல் அவருக்கு எப்பொழுதும் பிரியம் தான்.
அவன் வந்தால் கவனிப்பு எப்பொழுதும் அதிகம் தான். இன்று மகனை பேசவும் விஷ்ணு எல்லாம் அவருக்கு தெருவில் நடக்கும் ஒரு சாதாரண மனிதன் தான்.
Advertisement
“உங்க வீட்டுல வச்சு நீங்க பெத்து வளர்த்துருக்கீங்களே அந்த நாதாரிய தான் சொல்றேன். இங்க பேச கூடாதுனா ரோடுல வச்சு பேசவும் நான் தயார்”
பெரியவர், பார்த்திபன் அன்னை என்னும் முறையெல்லாம் அவர் பேசிய வார்த்தைக்கு பின்பு அவனுக்கும் காணாமல் தான் போனது. காரமாகவே பேசினான் விஷ்ணுவும்.
“என்ன சொல்றான் பாருங்க நம்ம பையன, அவன் எப்படிங்க இப்டி மனசாட்சி இல்லாம பண்ணுவான்? பணம் குடுக்கலனு சொல்லவும் என் பையன் மேல எப்படி பழி போடுறான்” ஆதங்கமாய் அழுதுகொண்டே கணவனை நாடினார்.
Advertisement
வித்யாவை போல் ராஜேந்திரனால் உடனே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, அவருக்கு தான் மகன் மேல் கண் மூடித்தனமாக நம்பிக்கை இருக்கலாம், அதற்காக மற்றொரு மகனை விட்டுவிட முடியாதே.
Advertisement
“பணத்துக்காக இவ்ளோ தரம் தாழ்ந்து போகுற ஈன புத்தி எனக்கில்லை” உறுமினான் விஷ்ணு.
“விஷ்ணு அவ ஏதோ வருத்தத்துல பேசுறா, நீ ஏதோ தப்பா புரிஞ்சிருக்குற விஷ்ணு. எங்க வசந்த் அப்டி எல்லாம் செய்ய மாட்டான்” என்றார் ராஜேந்திரன்.
“சரி இத பாருங்க” ஒரு இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு பின்புறம் வசந்த் ஒருவரிடம் பணம் கொடுக்கும் புகைப்படம் அது.
Advertisement
“இது உங்க பையன் தானே, இவர் உங்க முன்னாடி தான அன்னைக்கு குடவுனை பாக்க வந்தார். உங்க கிட்டையும் தானே ஆக்சிடன்ட் பத்தி விசாரிச்சார். இப்ப சொல்லுங்க உங்க பையன் அப்டி எல்லாம் செஞ்சிருக்க மாட்டான்னு” விஷ்ணு கேட்கும் எந்த கேள்விக்கும் அவரால் பதில் கொடுக்க முடியவில்லை.
“ஏன்? என் பையன் அவன் அண்ணனுக்கு இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து கிடைக்கிற மாதிரி ஏற்பாடு பண்ண முயற்சி பண்ணிருக்கலாமே”
வித்யா பேசியதை கேட்டு கை தட்டி சிரித்தான் விஷ்ணு, “எவ்ளோ நம்பிக்கை… எவ்ளோ நம்பிக்கை மகன் மேல”
“அத்தை உங்க பையன் இது வர உங்களுக்கே ஒரு புடவை கூட எடுத்து கொடுத்தது இல்ல, இதுல பார்த்திபன் தம்பிக்கு செய்வார்னு மட்டும் எப்படி நம்புறீங்க?”
வித்யா திரும்பி பெரிய மருமகளை முறைக்க, “நான் வசந்த் தம்பி மேல தப்பு சொல்ல வரல அத்தை, நீங்க சொன்னது நடக்க வாய்பில்லனு தான் சொன்னேன்” இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் என கிரியும் மனைவியை பார்த்தான்.
“விஷ்ணு அண்ணா நல்லா விசாரிச்சேளா? இன்னொரு தடவ…” ஆரபி தயங்கி இழுக்க அழுத்தமாக தலையை அசைத்தான்.
விஷ்ணு , “வெளி ஆள்னாவே ரொம்ப விசாரிப்பேன். பார்த்திபன் தம்பினு வர்றப்போ…”
“நான் அவன் தம்பி இல்ல” வீடே அதிர்ந்தது வசந்தின் அதீத ஒலியில்.
வாங்கிய அடி, விழுந்த பழிச்சொல் எதுவும் நினைவில் இல்லை, “என்ன சும்மா சும்மா பார்த்திபன் தம்பி பார்த்திபன் தம்பி? ஏன் எனக்குனு பேர் இருக்குல்ல”
ராஜேந்திரன், “என்ன பேசுனா நீ எதை பத்திடா கவலைப்படுற?”
“இல்ல இல்ல பேசட்டும் விடுங்க, அவன் அம்மா கேக்கணும்ல” நிதானமாக தலையை அசைத்து ராஜேந்திரனிடம் அமைதி காக்க கூறிய விஷ்ணு வித்யாவிடம்,
“கேளுங்க உங்க மகன் பார்த்திக்கு எப்படி உதவுறான்னு அவனே சொல்லுவான்” என்றான்.
அன்னைக்கோ மகன் பெயருக்கு கூட தன்னை தற்காத்து கொள்ளும் முயற்சியில் இறங்கவில்லையே என்கிற வருத்தம் மேலேறியது.
தடுமாற்றத்தோடு வசந்த் அருகே வந்தவர், சிவந்திருந்த அவன் கன்னம் தாங்கி, “தம்பி என்னடா இதெல்லாம், உன் பக்கம் தப்பில்லன்னு சொல்லு ப்பா” குரல் கரகரத்தது அவருக்கு.
அவர் கை பிடித்து விலக போனவன் கையை வேகமாக பிடித்துக்கொண்டார், பயம் நெஞ்சமெல்லாம் சூழ்ந்தது அன்னைக்கு.
“வசந்த்… அம்மாக்கு பயமா இருக்குடா, நான் உன்ன அப்டி வளர்க்கலடா” கண்ணீர் அருவியாய் கன்னம் தொட்டது.
ராஜேந்திரனோ மனம் தாளாமல் மகன் மேல் உருவான கோவத்தை அவனை கன்னம் பழுக்கும் வரை அடித்து குறைக்க முயன்றார். அந்தோ பரிதாபம் அவனது சிலையான உருவமும் இறுக்கமான முகமும் அவரை அதிகம் வேதனை படுத்த தான் செய்தது.
“என்னடா இது, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? உன் அம்மாவோட நம்பிக்கையை இப்டி கொன்னு நிக்கிறியேடா” இரும்பாக நின்ற மகனை அடித்தும் பயனில்லை என உணர்ந்தவர் தளர்ந்து அவனது சட்டையை பிடித்தார்.
“அவனுக்கு எப்டிடா இதெல்லாம் பண்ண உனக்கு மனசு வந்துச்சு? குடும்பத்தை கைக்குள்ள வச்சு தாங்குறவன்டா அவன்”
“அவன் அவன் அவன்… எல்லாத்துக்கும் உங்களுக்கு அவன் தானா? அப்போ நான் யாரு தான் இந்த வீட்டுல?”
“இந்த வீட்டோட உதவாக்கரை. ஒன்னத்துக்கும் லாய்க்கி இல்லாதவன்” ஆவேசமாக மகனின் சட்டையை உதறி தள்ளினார். ஆத்திரம், சொல்லில் அடங்காத ஆத்திரம் அவன் மேல்.
“ஆமா நீங்க பெத்த புள்ள நான் உங்களுக்கு ஒன்னத்துக்கும் ஆகாதவன், உதவாக்கரை. ஆனா எங்க இருந்தோ வந்த அநாதை இவன் இந்த வீட்டுக்கு எல்லாமா?” ஆவேசமாக தந்தையை பார்த்து கத்தினான்.
வசந்தின் வார்த்தைகள் வீட்டினரை மொத்தமாய் ஸ்தம்பித்துவிட்டது. நொடிகள் நகராமல் இருக்க காதில் விழுந்த தகவல், இங்கு நடக்கும் யாவும் ஒரு கெட்ட சொப்பனமாக மாறி போகாதா என்கிற ஆசையோடு தலையை சிலுப்ப, இல்லை எதுவும் மாறவில்லை.
அதே இடம்.
அதே அதிர்ச்சி மொத்த குடும்பத்தினருக்கும்.
வீட்டில் உள்ள இரண்டு மருமகளுக்கும் இது புது செய்தி. பார்த்திபனும் ஆரபியிடம் இதுபற்றி கூறியிருக்கவில்லை, கிரிதரனும் கமலவல்லியிடம் இதனை சார்ந்து இதுவரை வாய் திறந்ததே இல்லை.
சொல்லப்போனால் கிரி இதனை மறந்தே போயிருந்தான். பார்த்திபன் அவன் சகோதரன் தான், அதை தாண்டி கடந்த காலம் எதுவும் அவனுக்கு தேவைப்படவில்லை. வெறுத்து ஒதுக்கும் போல் செயலும் பார்த்திபனிடம் இருந்ததில்லை.
“பார்த்தி…” நா தழுதழுக்க பயம் ஊடுருவிய இதயத்தோடு கணவனை வேகமாக ஆரபி திரும்பி பார்க்க இறுகிய தாடையோடு கண்ணை சில நொடிகள் மூடி திறந்தவன் கண்களில் அப்பட்டமாக வலியின் சாயல்.
விஷ்ணுவுக்கு சொல்லில் அடங்காத ஆத்திரம் நண்பனை பற்றி அவன் கூறிய உண்மையில். விஷ்ணுவுக்கு இந்த உண்மை பல வருடங்கள் முன்பே தெரியும், அன்று கேட்டத்தோடு நிறுத்திக்கொண்டான், இன்று வரை அதை பற்றி பேச்சு வரவேயில்லை இருவருக்கும்.
அதனாலே வீட்டில் அவனுக்கு இதை பற்றி எந்த நிகழ்வும் இல்லை என எண்ணியிருக்க அதெல்லாம் பொய்த்துப்போனது வசந்தின் செயலில்.
வசந்தின் கன்னம் பழுக்கும் அளவிற்கு முகம் சிவந்து போனது வித்யா கொடுத்த அரையில். மகனை விடாமல் அடித்தவருக்கு இவனிடம் இப்படியொரு இரட்டை வேடத்தை எதிர்பார்க்கவில்லை.
அவருக்கு பார்த்திபனின் முகத்தை பார்த்தே தெரிந்தது குடும்பத்தில் விரிசல் விழப்போவது என்று.
“என்னன்னுடா உன்ன பெத்தேன், இப்டி மனசாட்சியே இல்லாம இருக்கியேடா” அவனை அடித்து அவர் தான் ஓய்ந்து போனார்.
“பார்த்திபன் உங்க தம்பி இல்லையா?” கமலவல்லி கிரிதரனிடம் கிசுகிசுக்க,
“அவன் எப்பவும் என் தம்பி தான்டி” என்றான் பற்களை கடித்து.
பார்த்திபனின் தாய் தந்தையும், வித்யா ராஜேந்திரனின் உடன் பிறந்த சகோதரி சகோதரர்கள். அண்ணன் தம்பி இருவரும் அக்கா தங்கையை திருமணம் செய்திருந்தனர்.
பார்த்திபன் தந்தை தாய் இருவரும் மின்சார துறையில் பணிபுரிபவர்கள் ஆதலால் பார்த்திபன் வாசம் ராஜேந்திரன் இல்லத்தில் தான். பெற்றோர்கள் வீடு வந்த பிறகு தான் இவனும் இல்லம் செல்வான். அதுவரை சகோதரர்கள் இருவரோடும் ஒரே சேட்டை தான்.
அப்படியான ஒரு நாளில் பார்த்திபன் தாய் தந்தை ஒரு கட்டிடத்தை மேற்பார்வை சென்ற சமயம் அந்த பழைய கட்டிடமானது இடிந்து விழ இருவருமே சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.
அனைத்தும் கண் இமைக்கும் நொடியில் நடந்துவிட, பெற்றவர்களுக்கு இறுதி காரியங்கள் கூட பார்த்திபன் கையாலே நிகழ்ந்தது. எட்டு வயது சிறுவன், ஓரளவிற்கு அனைத்தும் தெரியும், தாய் தந்தை இனி வரவே போவதில்லை என்பது அந்த பிஞ்சு மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தத்தளித்தான் அவர்கள் அன்பிற்காக ஏங்கி தவித்து. ஒரே பிள்ளை, செல்ல பிள்ளையாக வளர்ந்தவன் உலகம் வித்யா ராஜேந்திரன் இல்லத்தோடு இணைந்தது.
பணி நேரத்தில் உயிர் இழந்ததால் அவர்களது வேலை ராஜேந்திரன் வித்யா கைக்கு மாறியது. வெளியில் குறும்போடு சுற்றுபவன் உள்ளத்தில் முதிர்ந்து போனான்.
error: Content is protected !!