Skip to content
Post Views: 2,148
பெரியப்பா பெரியம்மா என்கிற அழைப்பு அப்பா அம்மாவாக மாற பல மாதங்கள் ஆகியது. குறும்பு செய்தாலும் வித்யா ராஜேந்திரனுக்கு எந்த விதமான தொந்தரவும் அவனால் ஏற்படவில்லை.
அப்படி தான் அவன் இன்று வரை நினைத்தது. அப்படி இல்லை என வசந்தின் சொற்கள் இன்று நிரூபித்தது.
ராஜேந்திரன், வித்யா, கிரி என ஆளுக்கு ஒரு பக்கம் அவனை வார்த்தைகளால் தாக்க எதுவும் பார்த்திபனுக்கு கேட்கவில்லை. நடப்பதை எல்லாம் அமைதியாக மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
“எப்ப பாரு பார்த்திபன் பார்த்திபன் தான். என்னைக்கு அவன் வந்தானோ அன்னைக்கு என் நிம்மதி மொத்தமா போச்சு” வசந்தின் வார்த்தையை செவி கொடுத்து கேட்டான் பார்த்திபன்.
Advertisement
“அவன் உன்ன என்னடா பண்ணான்? இத்தனைக்கும் அவனை ஸ்பெஷலா கவனிச்சா அவன் மனசு பாதிக்கும்னு உங்கள போல தானேடா வளர்த்தோம், அவனுக்குனு நாங்க எதுவுமே தனியா பண்ணது இல்லையேடா” ஆதங்கமாக மகனை பார்த்தார் அன்னை.
“அதுல கூட அவனுக்காக தான். இது தான் என்னால ஏத்துக்கவே முடியல, அவனுக்காக செய்யலனு சொல்லி சொல்லியே அவனுக்காக தான் எல்லாம் செஞ்சீங்க. உங்க டைம், பாசம், கோவம் எல்லாத்துல இருந்தும் அவனுக்கும் பங்கு போச்சு.
அவன் வேலைக்கு போகாதப்பவும் அவனை தான் தலைல தூக்கி வச்சு கொண்டாடுனீங்க. அவன் நல்ல இடத்துக்கு வரவும் கொண்டாடுறிங்க. எல்லாமே அவனுக்கு தான் தெரியும். ஏன் நான் இப்போ வேலைக்கு தானே போறேன். என்கிட்டே உங்க எல்.ஐ.சி பணத்தை வச்சு என்ன செய்யலாம்னு கேக்க வேண்டியது தானே?”
Advertisement
“நீ சின்ன பையன் வசந்த், உனக்கு இன்னும் வெளி உலகம் தெரியாது” கிரி கூறியதை முகத்தை சுளித்து நிராகரித்தான்.
Advertisement
“சின்ன பையனுக்கு தான் கல்யாணம் பண்ணி வக்கிரீங்களா? உங்கள பொறுத்த வரை அவன் தான் எல்லாம். அவனுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். தெரிஞ்சவன் அதோட நிறுத்திக்க வேண்டியது தானே, எதுக்கு என் விசயத்துல வர்றான்?”
“அவன் என்னைக்கும் எதையும் போர்ஸ் பண்ணதில்ல வசந்த், நாம என்ன செய்றதுன்னு குழம்பி நின்னப்போ ஐடியா குடுப்பான்” அன்னையானவருக்கு பிள்ளைகளிடையே மனக்கசப்பு வந்துவிட கூடாது, அதற்காக மகனிடம் இயன்றமட்டும் தன்மையாக எடுத்துரைக்க முயன்றார்.
“எப்டி? நான் என்ன படிக்கிறது, என்ன வேலை பாக்குறது, யாரை கல்யாணம் பண்ணிக்கிறதுனு எல்லாத்துக்கும் குழம்பி நிக்கிறப்போ உங்க மகன்… சாரி உங்க தங்கச்சி மகன் எனக்கு ஐடியா குடுத்தானா?” நக்கலாக அன்னையிடம் கேட்டான்.
Advertisement
“அடிச்சேன்னு வை, காது கிழிஞ்சிடும்” வசந்த்தை நோக்கி நடந்த விஷ்ணு,
“நீ என்ன பெரிய உத்தமன் மாதிரி உன்ன காட்டிட்டு இருக்க, ஒவ்வொரு வருஷம் ஒவ்வொரு பொண்ணு கூட ஊர் சுத்துன பொறுக்கி தானேடா நீ? அதை மாத்தி உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு குடுக்க நினைச்சான் இவன்” இன்னும் இவனிடம் என்ன என்ன உள்ளதோ என பதறியது மனம், வளர்ப்பில் தவறினேனோ என வித்யா துவண்டு அமர்ந்துவிட்டார்.
“என் வாழ்க்கையை பத்தி கவலைப்பட இவன் யாரு?”
விஷ்ணு, “உன்னோட நிச்சயத்துக்கு லிஸ்ட் போட்டியே சாப்பாட்டுல இருந்து டெக்கரேஷன் வரை, அப்போ தெரியலையா இவன் உனக்கு ஆகாதவன்னு?
அன்னைக்கு நீ கேட்டனு ரெண்டு லட்சத்துக்கு புது சரக்கு இறக்குனான். ஒரு பைசா நீ குடுத்துருப்பியா, இல்ல அவனும் தான் கேட்டானா? அவனை பாத்து இப்டி மனசாட்சியே இல்லாம பேசுறியேடா”
“என்னமோ அவன் பெருசா தியாகம் பண்ண மாதிரி பேசுறீங்க, அவன்கிட்ட கேளுங்க” என்றவன் பார்த்திபனிடம்,
“பேர் தான் என்னோட பங்க்ஷன் ஆனா அங்கையும் உன்னோட பிஸ்னஸ்க்கு விளம்பரம் பண்ணி ஆதாயம் தேடுனவன் தானேடா நீ. நான் அன்னைக்கு போட்ட டிரஸ், டை, ஷூனு எல்லாமே இவன் விருப்பம். என்னோட வாழ்க்கையை இவன் வாழ்ந்தா அப்போ நான் என்ன மயித்துக்கு இருக்கனும்?”
பார்த்திபன் நிச்சயம் வசந்த் கூறிய வகையில் இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்திருக்க மாட்டான் என வீட்டினர் அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் புரிந்தாலும் புரிந்துகொள்ள மாட்டேன் என நிற்பவனிடம் என்ன விளக்கம் கொடுத்தாலும் அது வீண் என மொத்தமும் அமைதியாகிவிட்டனர்.
“இவன் இங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு உடம்பெல்லாம் எரியிது. அவன் பிஸ்னஸ் சக்ஸஸா போறதால தானே இவனை நீங்க எல்லாரும் தலைல தூக்கி வச்சு ஆடுறிங்க அப்போ அதை கெடுத்து விடணும்னு வெறியே வந்துச்சு.
அதுக்காக மட்டும் தான் இவன் எனக்கு குடுத்த வேலைக்கு போய் பணம் சம்பாதிச்சு அதை வச்சு இவனை அடிக்க நினைச்சேன். முதல் தடவ இவன் அசிங்கப்பட்டு கோர்ட் கேஸ்னு அலையணும்னு தான் அந்த மாதிரி நடிக்க ஆள உள்ள சேர்த்தேன். நடக்கல. சொதப்பிட்டானுங்க”
கையை தனக்கு அருகில் இருந்த இருக்கையில் ஓங்கி குத்த அது கிட்டத்தட்ட உடைந்தே போனது.
“அப்றம் லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் வேற ஏதோ ஒரு மகராசனால வர அதை வச்சு அவனை சாய்க்க பாத்தேன். எதுக்காக மொத்த சம்பளத்தையும் சேர்த்து வச்சேனோ அது யூஸ் ஆச்சு. யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்றான் சிறிதும் வருத்தம் கொள்ளாமல்.
ஆரபிக்கு அழுகையாக வந்தது, கோவம் உருமாறி அழுகையாக மாறிய வேதனை அது.
“ரொம்ப மனசை கஷ்டப்படுத்திடேள் தம்பி” வசந்த் அவளை எதிர்கொள்ள விரும்பாமல் முகத்தை திருப்பிக்கொண்டான்.
“உமக்குள்ள இப்டி எல்லாம் இவா மேல வெஞ்சினம் இருக்கும்னு நேக்கு கனவுல கூட தோணல. சொல்லி காட்டுறேன்னு தப்பா எடுத்துக்காதேள், அவா உம்ம என்னைக்கும் டாமினேட் பண்ணனும் நினைச்சதே இல்ல. நிச்சயத்துக்கு நாங்க ரெண்டு பேரும் அஞ்சு ஆறு கடை ஏறி இறங்கிருப்போம்.
அவாளுக்கு அவா தம்பி எல்லாத்துலயும் பெஸ்ட்டா நிக்கனும்னு ஆசை. அதான் அத்தனை கடையையும் அலசிண்டா. பாத்து பாத்து நோக்கு எது செட் ஆகும்னு தேடி எடுத்தது நீர் போர்ஸ் பண்ணி திணிக்கிறதா சொன்ன டை, ஷூ எல்லாம்”
“ஆரபி வா” பார்த்திபன் வேகமாக அவன் அறையை நோக்கி சென்றுவிட கணவன் சொல்லை பின்பற்றி இவளால் செல்ல முடியவில்லை.
“உங்க பங்ஷன் வச்சு அவா விளம்பரம் படுத்தி ஆதாயம் தேடுறாளா?” கசப்பாக சிரித்தாள்,
“ரொம்ப தப்பு தம்பி. அவாளோட மனசு புரியாமலே பேசுறேள். நீர் நாலஞ்சு படத்தை காட்டி இது இது வேணும்னு சொல்லிண்டு போய்ட்டேள். நானும் பார்த்தியும் அன்னைக்கு நைட் எல்லாம் செத்த நேரம் கூட தலையை சாய்க்கல.
நான் டிசைன் பண்ண கூடவே இருந்து, ‘வசந்த் இப்டி சொன்னான், இங்க இது வேணும்னு சொன்னான்’ னு உங்க சித்தி பையன் தான் என்ன கரெக்ட் பண்ணின்டே இருந்தா.
விடிஞ்சும் விடியாம தேவையான எல்லாம் அலைஞ்சு திரிஞ்சு வாங்கி வந்தா. பொட்டு தூக்கமில்லை, ஆனா அவாளுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. முகம் சுளிக்காம சந்தோசமா செஞ்சா.
அதை கூட அவாளோட ஆதாயத்துக்காகனு மனசாட்சியே இல்லாம பேசிட்டேள். நேக்கு அவாளோட பாஸ்ட் பத்தி தெரியாது, நீர் எந்த மனநிலைல அவாளோட பழகுனேள் கூட தெரியல. ஆனா என்னோட பார்த்தி மனசு சுத்தம்”
கண்ணீர் கன்னத்தை நனைக்க பசிக்காக தன்னுடைய காலை சுருண்டும் மகளை கூட மறந்து போனாள் அந்த தாய்.
“என்னோட தோப்பனார் எங்களுக்கு கல்யாணம் ஆக முன்ன ஏதோ இவாளா சொல்லிண்டா, அதை மனசுல வச்சு என் ஆத்துல போட்ட நகையை கூட பார்த்தி வாங்கல. அவ்ளோ ரோசம் அவாளுக்கு. இப்போ கூட என் தோப்பனார் பணத்துக்கு ஏற்பாடு பண்ணவானு கேட்டுண்டு தான் இருந்தார்.
ஒரே வார்த்தைல மாட்டேன்னு சொல்லிட்டா அத்தம்மா, இந்த வீட்டு ஆட்கள் மேல இருக்க நம்பிக்கைல. ஒரு தடவை ஏமாத்துன அவர் குடும்பம் இன்னொரு தடவை அதை செய்ய வாய்ப்பில்லன்னு உறுதியா இருந்தார். காரணம் என்ன அவா அவாளை இந்த ஆத்து பிள்ளையா நினைச்சிண்டார்.
அப்டி இல்ல நீ இந்த ஆத்து பிள்ளை இல்லனு இவ்ளோ ஹார்ஷா புரிய வச்சிருக்க வேண்டாம். உங்க புள்ளைக்குனா இந்நேரம் கொடுத்திருப்பேள் தானே? ரொம்ப நொந்து பொய்ட்டா பார்த்தி. எப்படி அவாளை இதுல இருந்து மீண்டு வர போறான்னு நேக்கு தெரியல”
கோவம் அவளுக்கு. அத்தை, மாமா, கிரி, வசந்த், கமலவல்லி என அனைவர் மீதும் கோவம். உதவி என கேட்டு நிற்பவனை இப்படிப்பட்ட ஒரு சூழலிலா தள்ளிவிடுவார்கள்?
ஏன் அவன் உடன் பிறந்த சகோதரன் வசந்த் திருமணத்திற்கு பணம் கொடுக்க மாட்டேன் என்ற பொழுது அவன் மனம் நோக கூடாதென தன்னுடைய பணத்தை எடுத்து கொடுக்கிறேன் என கூறியவன் அல்லவா தன் கணவன்?
அந்த ஒரு வார்த்தைக்காக, அந்த கள்ளமில்லா பாசத்திற்காக ஒரு முறை சிந்தித்திருக்கலாமே என்கிற வேதனை அவளுக்கு. கணவன் வெறுத்தானோ இல்லையோ பெண்ணவள் வெறுத்து போனாள்.
“என்ன ஆரபி இப்டி எல்லாம் பேசுற, அவன் ஏதோ புத்தி பேதலிச்சவன் என்ன என்னமோ பேசிட்டான். நான் பணம் தர்றேன் ம்மா என் பையனுக்கு” ராஜேந்திரன் வேகமாக கூறினார்.
“வேணாம் ப்பா” பார்த்திபன் கையில் இரண்டு பெரிய ட்ராளிகள், “நான் பாத்துக்குறேன்” உறுதியாக மறுக்கும் குரல் மகனிடம்.
“பார்த்திபா என்ன இது” ஆரபி, கணவன் அனைவரையும் தாண்டி மகன் முன்பு நின்றார் வித்யா.
அவர் முகமே அரண்டு போய் தெரிந்தது, யூகித்தது தான் ஆனால் அது கண் முன்பு நடக்க ஏற்றுக்கொள்ளும் வலிமை தான் மனதிற்கு இல்லாமல் போனது.
சகோதரியின் மகன் தான், பெற்ற பிள்ளையாக அல்லவா இந்த இடைப்பட்ட வருடங்களில் மாறி போனான். அவன் இல்லாத இவ்வீட்டை சுத்தமாக நினைத்து கூட பார்க்க மனம் வரவில்லை.
“நாங்க கெளம்புறோம் ம்மா” என்றான் தனயன்.
“வெளி ஊர் எங்கையாவது போறியா ப்பா? சரி தம்பி நீ வருத்தப்படாம போய்ட்டு வா, நீங்க வர்றதுக்குள்ள அம்மா இங்க எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்”
தானே ஒன்றை யூகித்து அதற்கு தானே ஒரு பதிலும் மனதை சமாதானம் செய்யும் வகையில் கூறிக்கொண்டார். மகனோ அவருக்கு விளக்கம் கூட கொடுக்க விரும்பவில்லை.
ஏமாற்றம் தாண்டிய துரோகத்தை உணர்வது போல் மனம் வேதனையில் உழன்றது. இதற்கு மேலும் இந்த இடத்தினில் இருந்தால் மனம் துடித்தே மடிந்து விடுமோ என்கிற பயம் அவனுக்கு.
அவனாக மட்டும் இருந்தால் பரவாயில்லையே எப்படியோ போ மனமே என விடலாம், அவனை நம்பி மூன்று உயிர்கள் அல்லவா அவனோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
அதற்காக ஆவது தனித்து சுயமாய் நிற்க கிளம்பிவிட்டான். மனைவியை பார்த்தான், நிறைய அழுத்திருப்பாள் போல அதிகப்படியான சோர்வு. மசக்கை படுத்தும் பாடு இல்லை இது என அவனுக்கு நன்கு தெரிந்து தான் இருந்தது.
கணவன் பார்வை உணர்ந்து, “பார்த்தி…” அழைத்தாள்.
“என்ன நம்புற தானே ஆராம்மா?” கால்கள் அவனை நோக்கி ஓடாத குறையாக விரைந்து அவன் கரம் பற்றியது, ‘என் உயிருக்கும் மேல’ என செய்தியோடு.
கடினப்பட்டு மெல்லிய புன்னகை சிந்தி விஷ்ணுவை பார்த்தவன், “மேல ரெண்டு பேக் இருக்கு விஷ்ணு…”
உடனே விஷ்ணு மேலே செல்ல பயம் நெஞ்சை கவ்வியது குடும்பத்தினருக்கு. கமலவல்லி கண்கள் கூட பார்த்திபனின் நிலையில் கலங்கியது.
“பார்த்திபா என்ன பண்ற நீ? எங்க போவ? அவன் எல்லாம் ஒரு ஆள்னு அவன் பேசுறதை பெருசா எடுத்துட்டு கெளம்பிடுவியா? நீ இந்த வீட்டு பையன்டா. என் தம்பி. எங்கையும் போக கூடாது நீ”
“அவசரப்பட்டு முடிவெடுக்காதிங்க தம்பி. கொஞ்சம் ஆறப்போடலாம் இதை” கமலவல்லி கூட பேசி பார்த்தாள், பார்த்திபன் சிறிதும் அசையவில்லை.
விஷ்ணு பையோடு கீழே வர, குழந்தையிடம், “பூர்வி எல்லாருக்கும் பாய் சொல்லிட்டு வாடா” என்றான்.
பசியின் பிடியில் இருந்தவளோ வாடிய முகத்தோடு அனைவருக்கும் பொதுவாய், “எல்லாதுக்கும் பாய்” என மழலை மொழியில் கூற வித்யா குழந்தையை வாரி அணைத்துக்கொண்டு அழுதார்.
error: Content is protected !!