Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 22.1

சகோதரன் ஒரு பக்கம், நண்பன் ஒரு பக்கம் இருக்க மாறி மாறி கால்கள் அல்லாடிக்கொண்டிருந்தது. விஷ்ணுவுக்கு காயங்கள் அதிகமாக தான் இருந்தது, ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறிவிட்டனர்.

ஆதலால் வசந்த் இருந்த மருத்துவமனைக்கு ஒரே மணி நேரத்தில் மாற்றிவிட்டான்.

வசந்த் நிலை தான் இன்னதென இன்னும் தெளிவாக தெரியவில்லை. கிரிக்கும், தன்னுடைய தந்தைக்கும் அழைத்து தகவல் கூறிவிட்டாள் ஆரபி. கேட்ட உடனே இரண்டு வீட்டினரும் திரண்டு வந்துவிட்டனர்.

எவர் முகத்திலும் விழிக்கும் தைரியம் இல்லாமல் பார்த்திபன் தனியே மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்துவிட்டான்.



Advertisement

‘இதில் இறங்கியே இருக்க கூடாது’ என்பது மட்டுமே அவனது ஒரே எண்ணமாக இருந்தது. ஸ்ரீனி நிலையும் அது தான், அன்று மாமனை இழுத்திருக்க கூடாதோ என யோசித்தான்.

தன் தோளில் பிரச்னையை எடுத்து போட்டு இப்பொழுது இவர்கள் இருவரும் படும் பாட்டை பார்க்க முடியவில்லை. அமைதியாக சென்ற வாழ்க்கையில் எத்தனை சூறாவளிகள். இவர்கள் நிலையே இப்படி எனில் அனாயா கூறவே வேண்டாம்.

அனைவரையும் விட்டு தூரம் நின்றவள் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்தாள். தன்னையே இதுவரை இப்படி சிறுமையாக உணர்ந்தது இல்லை.

Advertisement

ஆசை இருந்தாலும் தாமோதரன் பேத்தியாக இருந்ததற்கு காதல் வயப்படுவது கூட தகுதியில்லை என மீண்டும் ஒருமுறை நிரூபணமான சாட்சியாக விஷ்ணுவின் நிலை.

Advertisement

அதிலும் விஷ்ணுவின் பெற்றோரை பார்க்க கூட கண்கள் கூசியது. அவள் துணைக்கு அன்னையும் வந்திருந்தார் தான். இருந்தும் என்ன பயன், மொத்த பழியும் அவர் தன் தலையில் போட்டுகொண்டு உள்ளுக்குள் மருகினார்.

ஒரு பக்கம் மகள், ஒரு பக்கம் அவளை முழுதும் அறிந்து விரும்பி மனைவியாய் ஏற்க வந்த மருமகன் பெரிய அடிகளோடு, மற்றொரு பக்கம் காரணமே இல்லாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வசந்த், இறுதியாக கெளரவம் பிடித்த தந்தையின் உப்பில்லா பாசம்.

அருவருப்பில் முகத்தை சுருக்கினார். எத்தனையோ தவறுகளை தாமோதரன் செய்திருந்த பொழுதெல்லாம் மெல்லிய வருத்தம் மட்டுமே இழையோடியது. இன்று மகளின் வாழ்க்கை அதனால் அந்தரத்தில் தொங்குவதை பார்த்த பிறகு தான் நெற்றியில் அடித்தது போல் நிதர்சனம் உரைத்தது.

Advertisement

இதை போல தானே அனைத்து குடும்பமும் தவித்திருக்கும், இவர்கள் தூற்றியதை விட பல மடங்கு தந்தைக்கு சாபம் கிடைத்திருக்கும், அது தான் இப்பொழுது மகளின் வாழ்க்கையை துரத்துகிறதா?

அவ்விடத்தில் நிற்கவே மூச்சு வாங்க, தள்ளாடி ஒரு நாற்காலியை பற்றி அமர்ந்துகொண்டார். மகன் நிலை என்னவோ ஏதோ என பதறி வந்த விஷ்ணுவின் பெற்றோர் இருவருக்கும் அவனது நிலை அவ்வளவு மோசம் இல்லை என தெரிந்த பின்னர் சற்று நிம்மதியே.

அனாயா ஒரு பக்கம் அமைதியாகி நிற்பதையும் அவள் அன்னை தனக்குள்ளே மருகுவதையும் பார்த்த விஷ்ணுவின் தந்தை மனைவியை சற்று தள்ளி தனியாக அழைத்து வந்து, “இதுக்கு காரணம் யாருனு தெரியும் தானே ம்மா?” கேட்டார்.

அவர் தலை அசைக்கவும், “அந்த பொண்ணு…”

“எப்பவும் என் மருமக தான்ங்க” என்றார் மகனை மட்டுமே மனதில் வைத்து.

“அந்த பொண்ணுகிட்ட பேசும்மா, எதையாவது போட்டு குழப்பிக்க போகுது” அவர் தான் மனைவியை அனுப்பி வைத்தார்.

அனாயா அருகே சென்ற விஷ்ணுவின் அன்னை அவள் கையை பிடிக்க, குற்றம் சுமந்த விழிகளை தாழ்த்தி கண்ணீர் வடித்தாள், “சாரி அத்தை… எல்லாமே என்னால தான. சத்தியமா அவர் இவ்ளோ கீழ்தரமா போவார்னு நான் நினைக்கவே இல்ல”

அதற்குள் அவரிடம் வந்த அவள் அன்னை விஷ்ணுவின் அன்னை கை பிடித்து, “மன்னிப்பு இதெல்லாம் சரி செய்யாது தான். ஆனா இதுனால என் பொண்ண கை விட்றாதீங்க. உங்க கால்ல கூட”

என்றவர் யோசிக்காமல் விஷ்ணு அன்னை காலில் விழுந்துவிட பதறியவர், “ஐயோ அண்ணி என்ன பண்றீங்க நீங்க”

அவரை கடினப்பட்டு பிடித்து நிறுத்தி, “அனாயா தான் என் பையனுக்கு பொண்டாட்டினு வாக்கு குடுத்துருக்கேன். அதை எப்பவும் யாருக்காகவும் மாத்த மாட்டோம்”

“இல்ல அத்தை என் தாத்தா பண்ண பாவத்தை நான் சுமக்கலாம் அவருக்கு என்ன தலை எழுத்து?”

விஷ்ணு தந்தை, “உன்ன அந்த தாமோதரன் பேத்தினே நாங்க பாக்கலம்மா, நீ விஷ்ணு மனசுக்கு புடிச்ச பொண்ணு அது மட்டும் தான் நாங்க பாக்குறோம். இந்த கல்யாணத்தை ரெண்டு மூணு மாசம் தள்ளி வைக்கலாம், ஆனா கண்டிப்பா நடக்கும்” என்றுவிட்டார்.

கணவன் கூறியதையே விஷ்ணுவின் அன்னையும் கூறி மருமகளை தேற்ற முயன்றார். தலை அசைத்து விட்டாலும் அனாயா மனம் இன்னும் தவிப்பில் தான் இருந்தது.

“இங்க யாருக்காவது ஓ நெகடிவ் பிளட் குரூப் இருக்கா?”

பதற்றத்தோடு கிரி வந்து கேட்க, “பார்த்திபன்” என்றார் விஷ்ணு தந்தை.

“அவன் எங்க போனானு தெரியல அங்கிள், பிளட் ஹாஸ்பிடல்ல இருந்து ஏற்பாடு பண்ணிட்டாங்க ஆனா நாம குடுக்கணும்ல, கிடைக்க மாட்டிக்கிது” என்றான் பயத்தில் முகம் எல்லாம் வியர்வையோடு.

அனாயா அன்னையை பார்க்கும் முன்பு அவரே முன் வந்து தான் தருவதாக கூறினார்.

கிரி தயங்கி நிற்கவும், “யோசிக்காத கிரி” அவனை விஷ்ணு தந்தை வறுபுறுத்தவும் அழைத்து சென்றுவிட்டான்.

வசந்த் இருந்த ஐ.சி.யூ முன்பு தான் அனைவரும் இருந்தனர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை. அறுவை சிகிச்சை முடிந்தது என்கிற தகவல் மட்டுமே தந்தனர், வேறு எதுவும் இன்னும் தெளிவாக கூறவில்லை.

வித்யா ஒரு பக்கம் அழுதுகொண்டிருக்க, மற்ற அனைவரும் அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் பெரும் கலக்கம் ஆட்கொள்ள தான் செய்தது.

போதா குறைக்கு துருவ் பூர்வியிடம் வசந்த்துக்கு தான் உடல் நிலை சரியில்லை என கூறிவிட, என்ன நினைத்தாளோ சிறியவள் சித்தப்பனிடம் செல்ல வேண்டும் என அழுகை வந்தது.

ஸ்ரீனி மருமகளை சமாதானம் செய்தும் பயனில்லாமல் போனது. ஆரபிக்கு கண்கள் கணவனை அடிக்கடி தேடி தோல்வியை அடைந்தது.

“அத்திம்பேர் தான் க்கா இவளை சமாதானம் பண்ண முடியும். எங்க தான் போனார்?” அவன் கேட்க அழுகையோடு உதட்டை பிதுக்கினாள் ஆரபி.

“அவர் ஹாஸ்பிடல் வெளிய தான் ம்மா இருக்கார். உள்ள வர மாட்டிக்கிறார்” தந்தை கூறிய பிறகு தான் பார்த்திபன் நிலை அவளுக்கு புரிந்தது.

குற்றஉணர்வில் தவிக்கிறான் என்பது உணர்ந்தும் அவனிடம் செல்ல முடியவில்லை, வசந்த் மட்டுமே இப்பொழுது அனைவரின் கவனமாக இருந்தனர். இவர்கள் பேச்சை கேட்ட வித்யா தனியாக எழுந்து மகனிடம் சென்றார்.

மனம் எச்சரித்தது போல தான் இருந்தது அவன் நிலை. மருத்துவமனையின் கோவில் தூணில் கண் மூடி அமர்ந்திருந்தான்.

அவன் அவனாக கோவில் சென்ற காலம் இதுவரை அவர் அறிந்ததில்லை. இறைவனை எந்நாளும் மனமுருகி வேண்டுபவன் அல்ல, கோவிலுக்கு உடன் வந்தாலும் அவன் வேண்டுதல் வைத்து பார்த்தது இல்லை.

அப்படிப்பட்ட மகன் தானாக இங்கு வந்து நிற்கவும் அன்னை மனம் அவனை எளிதாக பிடித்துவிட்டது.

சுமந்து ஈன்றெடுத்தால் தான் மகனா, உண்மையான நேசம் வைத்தாலே மகனாகி தான் போவர். மற்ற இரண்டு புதல்வர்களுக்கு இவனுக்கும் என்றும் அவர் பாகுபாடு பார்த்தது இல்லை. கிரி அம்மா என அழைத்த நாளை விட பார்த்திபன் அம்மா என அழைத்த நாளை இன்று வரை நினைவில் வைத்திருக்கிறார்.

உடல் எங்கும் பரவியிருக்கும் பயத்தை புதைத்து அங்கு அமைதியாக வீட்டிற்கும் இறைவனை வணங்கியவர் பிறகு மகன் அருகே வந்தமர்ந்தார்.

நன்கு இருட்டி இருந்த நிலையிலும் அவன் முகத்தின் வேதனை தெளிவாக தெரிந்தது.

“பார்த்தி”

அன்னையின் மெதுவான குரலில் சட்டென விழித்தவன், “வசந்த்?” கேட்டான்.

“இன்னும் எதுவும் சொல்லலப்பா” என்றார் வித்யா.

மீண்டும் கண்களை மூடி சாய்ந்துக்கொண்டான்.

“என் மேல உங்களுக்கு கோவம் வரல?”

மூடியிருந்த விழிகளில் நடனமாடிய கருவிழிகள் அவனது தவிப்பை கூற, “நான் எதுக்குப்பா உன் மேல கோவமா இருக்கனும்?”

“என்னால தானேம்மா வசந்த்…”

“இல்ல தம்பி. உன்னால இல்ல, அவன் மனசுக்கு என்னதோணுச்சோ அந்த நேரம் அதை பண்ணிட்டான். இதுல நீ என்ன பண்ணுவ, உண்மைய சொல்ல போனா எனக்கு சந்தோசம்டா. என் பசங்க ஒருதனுக்காக இன்னொருத்தன் உயிரை குடுக்க கூட தயங்கலனு” கண்ணை திறந்து அன்னையை நம்பாமல் பார்த்தவன்,

“அதுக்காக இப்படியா? அவனை இப்டி பாக்க முடியல ம்மா, இப்டி பண்ணதுக்கு அவன் என்கூட சண்டை போட்டுடலாம். கிறுக்கன் பைத்தியம் எனக்கு ஷீல்ட் மாதிரி வந்து நின்னதுக்கு அவனுங்கள தள்ளி விட்ருக்கலாமே ம்மா. ஏன் இப்டி பண்ணான். இதுனால தான் அவனை திட்டுறேன், என்ன பண்ணாலும் யோசிச்சு பண்ணுடான்னு”

தலையில் அடித்து பார்த்திபன் முகத்தை சுருக்கினான். அவனால் என்ன சமாதான வார்த்தைகள் கூறியும் அமைதியாக முடியவில்லை. எப்பொழுதடா சகோதரன் எழுந்து வருவான் என இருந்தது.

“அந்த நேரத்துல அவனுக்கு தோணுனத்தை செஞ்சிட்டான் பார்த்திபா… நீயா இருந்தாலும் இத தானே செஞ்சிருப்ப?”

“சரி இவன் செஞ்சிட்டான்… என்னால இப்போ யார் முகத்துலையும் முழிக்க முடியலம்மா, குற்ற உணர்ச்சி நெஞ்சை குடையிது. அந்த பொண்ணு வந்து உன்னால தானடானு என்னை கேட்டா நான் அதுக்கு என்ன பதில் சொல்லுவேன்?”

தலையை பிடித்து மீண்டும் கண் மூடினான். பார்த்திபனின் தவிப்பை உணர்ந்தவர் அவனை இடையிடவே இல்லை.

“இதுக்கு அவன் என்னையே செத்து போக விட்ருக்கலாம்”

“என்ன பேசுறடா பார்த்திபா, நடந்து முடிஞ்சதையே பேசிட்டு இருக்குற பார்த்திபன் என் பையன் இல்ல. இனி என்ன நடக்கணுமோ அதை பாரு. உன் மேலயே எல்லா தப்பையும் போட்டுக்க பாக்குற, அப்போ உண்மையா தப்பு பண்ணவன் அங்க நிம்மதியா இருக்கணுமா?”

அன்னை கேட்கவும் தான் சூழலில் சிக்கியிருந்த அவன் எண்ணம் மீண்டிருந்தது.

அவன் கொடுத்த தண்டனை ஓரிரு நாட்களில் அந்த வயதானவருக்கு அவரது நியாபக சக்திகளை போல நீர்த்துப்போனது போல, நேர்மையாக தண்டனை கொடுக்க நினைத்து எடுத்து வைத்த எட்டுகள் தடம் புரண்ட ரயிலாய் வீழ்ந்துவிட்டது.

“நீ நிக்க வேண்டியது இங்க இல்ல பார்த்திபா…” எழுந்தவர் கோவிலில் இருந்த திருநீறை எடுத்து மகனின் நெற்றியில் வைத்துவிட்டு, “வேலைய தெளிவா முடிச்சிட்டுவா… உன் தம்பி கண் முழிச்சிருப்பான்”

அமைதியாக கிடந்த சங்கை ஊதி விட்டு அவர் சென்றுவிட, அதற்கு பிறகும் பார்த்திபன் அங்கு நிற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!