Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 4.1

இரண்டு மாதங்கள் என இருந்த கண்ணாமூச்சி ஆட்டம் அடுத்த வாரத்திலே முடிவிற்கு வந்திருந்தது. ஆனால் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் உணவகமோ கோவிலோ இல்லாமல் நேரே அவள் வீட்டினை அடைந்துவிட்டான்.

திடீரென வீடு தேடி வாசலில் வந்து நின்ற பார்த்திபனை பார்த்த ஆரபிக்கு, அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. பயம் உடல் முழுதும் சூழ்ந்துகொள்ள, வீட்டின் உள்ளேயும் இவனையும் மாறி மாறி பார்த்தவள் கைகள், நடுக்கத்தோடு கதவின் கைப்பிடியை இறுக்கமாக பற்றியது.

“நீங்க என்…”

“ஆடிட்டர் ஆஃபீஸ்ல இருந்து வர்றோம்.” என்றான் சாதாரணமாக.



Advertisement

“இல்ல… நீங்க… நீங்க…”

“யார் தம்பி நீங்க?” என்ற ஆரபியின் அன்னை கேள்விக்கு,

“சில டாக்குமெண்ட்ஸ் வாங்க வந்தோம் ம்மா, சார் இங்க வாங்கிக்க சொன்னாங்க, ஒடனே தேவைன்னு…”

Advertisement

அவனை உள்ளே அழைத்து அவன் கேட்டது எதையும் புரிந்து கொள்ளாதவர், மகளின் கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.

Advertisement

பிறகு அவன் கேட்டவை அனைத்தையும் எடுத்துக் கொடுத்தது எல்லாம் ஆரபி தான். ஒரு பார்வை தவறவில்லை, ஒரு வார்த்தை தங்களைப் பற்றியும் கேட்கவில்லை.

வந்த வேலையைப் பார்த்தவன் உடனே விடைபெற்று சென்றுவிட, அளவிற்கு அதிகமாக அதன்பிறகு பார்த்திபன், ஆரபியின் மனதினில் உதிக்கத் துவங்கிவிட்டான்.

காரணம் பெண்ணுக்கு தெரியவில்லை. ஒரு வார இடைவெளி விட்டு, அவளது வேலை மீண்டும் துவங்கியது. கோவில், கடை என பயம் இல்லாது வர துவங்கினாள். அவன் மீதிருந்த பயமும் அகன்றது.

Advertisement

பார்த்திபனும் தான் விட்ட பணியைத் துவங்கினான். முன்பில்லாமல் இப்பொழுது ஆரபி பார்வை அவன் மேல் தினமும், கோவிலில் இருந்து கிளம்பும் பொழுது பட்டு மீண்டுவிடும்.

அந்த நேரம் பார்த்திபன் கொடுக்கும் அந்த சிறு வளைந்த சிரிப்பு என்னவோ, ஆரபியைப் பாடாய் படுத்திவிட்டு தான் போகும். புத்தகங்கள், புதிர் கணக்குகள் எல்லாம் எளிதாய் புரிந்தவளுக்கு, அவன் கண்களும் சிரிப்பையும் அறிவதற்குள் தலைசுற்றி போய் விடும்.

நாட்களும் உருண்டோட ஒரு நாள் கோவிலுக்குள் நின்றிருந்தான் பார்த்திபன். பயத்தோடு சன்னிதானத்தை சுற்றி வந்தவளைத் தாண்டி நடந்தவன் அவளை மறித்து, “உன் பேர் என்ன?” என்றான்.

வியர்த்துக் கொட்டியது ஆரபிக்கு, “என்ன பண்றேள், வழி விடுங்கோ…”

“விடுறேன், உன் பேர் சொல்லு.” பிடிவாதமாக நின்றான்.

“நேக்கு பேரே வைக்கல என் தோப்பனார்.” அவனைக் கடந்து நடக்க போனவள் பாதையை மறித்து நின்றான் மீண்டும்.

“ப்ச்… என்ன வேணும் நோக்கு?” சங்கோஜமாய் இருந்தது பெண்ணுக்கு, கோவிலில் வைத்து இது என்ன பிடிவாதமென்று.

“ஏன் உனக்கு தெரியாதா? தினமும் பாக்குறேன், பொழுது போகாம பாத்துட்டே இருக்கான்னு மட்டும் நினைக்காத. நீதான் இனிமே எனக்கு எல்லாமே. முடிவோடதான் உன்ன சுத்தி வர்றேன்.” என்றான் ஆணித்தரமாக.

ஆரபிக்கு நெஞ்சே அடைத்தது, அவனைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும், பெற்றோரை மீறி போவதற்கு? பெயர் கூட தெரியாது. அவள் முறைப்புகளின் குறிப்புகளை அறிந்துகொள்ள, பெண்ணின் சூடான சூடு சிறிது அவகாசம் தந்து,

“பார்த்திபன்.” என்றான் அவன்.

புரியாமல் விழித்தவளிடம், “பேர் சொன்னேன், என் பேர் பார்த்திபன்.”

“நேக்கு எதுக்கு உங்கள பத்தின தகவல், நான் கேட்டேனா உங்கட்ட?”

“நீ கேக்க மாட்டனு தெரியும், என்னை திட்டவாது என் பேர் உனக்கு வேணும்ல… ஆனா நான் கேக்குறது அதுக்கில்ல.” என்றான் உடனே தகவலாய்.

அவனிடமிருந்து எப்படியாவது தப்பிக்க எண்ணி, “சந்தியா!”

கால்களில் சக்கரம் கட்டி நடந்தவளை சிரிப்போடு பார்த்தவன், “மாமி…!” சத்தமாக அழைத்தான் நின்ற இடத்திலே.

கால்கள் வேரூன்ற நின்றவள் அவனைப் பார்க்காமல் மூச்சு வாங்க நிற்க, “ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ், பி.டெக் ஃபைனல் இயர். டெய்லி காலைல ஏழு இருபத்தி அஞ்சுக்கு பஸ், ஈவ்னிங் அஞ்சு முப்பத்தி அஞ்சுக்கு அதே ஸ்டாப்ல வந்து இறக்கி விடும்.

அங்க இருந்து நேரா இந்த கோவில், அப்றம் எட்டு மணி வரை உன் அப்பா சொந்த கடைல டெய்லி இருநூறு ரூபாய்க்கு வேலை. தம்பி பேர் ஸ்ரீனிவாசன், காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஹிந்துஸ்தான் காலேஜ்.” எச்சில் கூட்டி விழுங்கினாள் ஆரபி. அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறான்.

அனைத்தையும் தெரிந்தே கேட்கிறான். தோளில் இருந்த பையை சரி செய்கிறேன் என நேரத்தைக் கடத்த முயற்சிக்க, அவளுக்கு முன்பே வந்து நின்றான் பார்த்திபன் புருவத்தை உயர்த்தி.

இருவருக்கும் இடையே கணிசமான இடைவேளை இருந்தாலும், தன்னுடைய கண்களைத் துளைக்கும் பார்த்திபன் பார்வை பெண்ணுக்கு சலனத்தை உண்டு செய்ய,

“நேக்கு இதெல்லாம் பிடிக்காது, தோப்பனாருக்கு தெரிஞ்சா என்ன உண்டில்லைனு ஆக்கிடுவா. இப்டி எல்லாம் வராதேள் ப்ளீஸ்…”

“என்ன வர வேணாம், நான் உன் பின்னாடி இதுவரை வந்துருக்கேனா?”

“இல்லை…” என்றாள்.

“ம்… எனக்கு தெரிய வேண்டியது உன் பேர் மட்டும்தான்…”

“அதான் சொன்னேனே…”

“சரியா கேக்கலையா? உன் பேர் வேணும் எனக்கு.”

“எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கேள், அது என்ன பேர் தெரியாதா நோக்கு?”

“உன் மூலமா எனக்கு தெரியணும்.” என்றான் குழந்தையின் பிடிவாதத்தோடு.

ஆரபிக்கு உடல் நடுங்க துவங்கியது. அவன் குரலும் அவன் கண்களில் தெரிந்த அளவில்லா நேசம், பிடிவாதம் என பெண்ணுக்கு சுற்றத்தை மறக்க வைத்தது.

தவித்தாள், அவன் பார்வையைத் தவிர்க்க போராடி அதில் தோல்வியடைந்து தவித்தாள்.

அவனுக்கோ அவளின் அவஸ்தை சிரிப்பாய் இருந்தது போல், வசீகரிக்கும் அவன் மெல்லிய சிரிப்பில் அவளுக்கு அழுகையே வந்தது.

பெண்ணின் உணர்ச்சியற்ற பார்வையிலே பாதி வீழ்ந்திருந்தவன், அவளது மூக்குத்திக்கு இணையாக சிவக்கும் மூக்கினையும், உணர்வுகளைக் கட்டுப்படுத்த போராடும் அழுகையையும் கண்டபிறகு முக்கால்வாசி வீழ்ந்திருந்தான்.

“ஏன் என்ன சித்திரவதை பண்றேள்? பெருமாள் சன்னதில வச்சு இப்படியெல்லாம் பேசலாமா? இங்க இருக்க குருக்கள் வேற தோப்பனாருக்கு ரொம்ப வேண்டப்பட்டவா.”

“இடம்தான் உனக்கு பிரச்சனைனா வேற எங்கையாவது பேசலாம்னு சொல்ல எனக்கு ஆசையா இருந்தாலும், உன்னோட முழு சம்மதம்தான் எனக்கு முக்கியம். இப்ப நான் வந்து நிக்கிறது உன்னோட பேரை தெரிஞ்சுக்க மட்டும்தான்.” என்றான் பார்த்திபன் இன்னும் இடைவேளையை உருவாக்கி.

ஆரபிக்கோ கோவம், “அப்டி என்ன என் பேரை தெரிஞ்சுக்குற ஆர்வம் நோக்கு?”

“சொன்னா நீ கோவிச்சுப்ப.” என்றான் மெல்ல சிரித்து.

அது அவளுக்கு இன்னும் அவஸ்தையை கொடுக்க, கோவமும் கூடியது. “காரணம் தெரியாம என்னோட நாவுல இருந்து ஒரு வார்த்தை நீங்க எதிர்பாக்குறது வராது.” என்றாள் முகத்தைத் திருப்பி.

“சரி திட்ட கூடாது…” என்றவன் கிசுகிசுக்கும் குரலில், “மனசுக்குள்ள மாமி மாமினு சொல்லி கொஞ்சுறது, யாரையோ சொல்ற மாதிரி இருக்கு. உன் பேர் சொன்னா கொஞ்சம் கிக்கா இருக்கும்ல?”

கண்ணடித்து சிரித்த அவன் மேல் பார்வையாலே கனலை வீசியவள், அதற்கு மேல் அவன் என்ன தடுத்தும் அங்கு நிற்கவில்லை.

‘என்ன பேசுறா இவா!’ கனலாய் எறிந்த தீ பந்தம் அணையவே ஆரபிக்கு பல வாரங்கள் தேவைப்பட்டன. பார்த்திபன் இன்பமாக சுற்றி திரிந்தான்.

அனுபவத்தில் அல்லாத அன்பின் தேடல் மட்டுமே முற்றுப் பெறுகிறது. அவன் காதல் முற்று பெற்றது போல், அவள் அமைதியும் அவள் தவிப்பும் கூற, ஆரபிக்கு பார்த்திபன் பக்கமிருந்து எந்த தொந்தரவும் இல்லாமல் போனது.

அவனைக் காண்பதே அரிதாகி போக, தன்னையும் மீறி அவனது பார்வைத் தேவைப்பட்டது மனதிற்கு. அந்த தவிப்பே அவனை வெறுக்க தூண்டியது. எப்படி ஒருவரை பேசாமலே தன் பக்கம் ஈர்க்க முடிகின்றதென சந்தேகம் ஆரபிக்கு.

அவன் வரும் நேரங்களில் கடையில் எதிர்பார்ப்போடு காத்திருப்பதே, உடல் முழுவதும் மின்சாரத்தைக் கொடுத்தது.

அவனோ அவளுக்கு அதிகம் போக்கு காட்டினான். ஒரு மாதம் அவள் முன்பு வரவே இல்லை. தான் செய்ததை தனக்கு செய்ய நினைக்கிறானா என்ற கோவம், அழுகை ஆரபிக்கு. அவனைப் பிடித்திருந்தது.

அவன் கண்ணியமான பார்வை பிடித்திருந்தது. தான் எங்கு சென்றாலும் தன் முன்பு வந்து நிற்காமல், முழுதாய் மறைந்திருந்து குத்தும், பார்த்திபனின் ஆசை பார்வை பிடித்திருந்தது.

ஒரே முறை பேசியிருந்தாலும் அவ்வேளையிலும் அவளைப் புரிந்து இடைவேளை காத்தது மிகவும் பிடித்தது. அந்த சிரிப்பு, அந்த திமிர், தன்னைப் பார்க்கும் பொழுது சிகையை நாசம் செய்யும் அவன் விரல்கள் என எல்லாமே…

எல்லாமே…!

பார்த்திபனுக்கு அவள் தவிப்பு இனித்தது.

பெரிதாக ஆசைப்பட்டவன் இல்லை. இருப்பதை வைத்து மகிழ்ச்சியாய் வாழ்ந்தவன். தேர்வுகள் என்றும் கடினமாக இருந்தது உண்டு. இது தேவை, இது தேவையில்லை என்பதை ஆராயவே நேரம் எடுப்பவனை ஒரே நாளில் ஒரே கண்ணசைவில் திருப்பியிருந்தாள்.

பிடிவாதக்காரனாய் உடனே முடிவெடுக்க வைத்து, அவள்தான் தன்னுடைய வாழ்க்கை என்பதை நித்தம் மனதில் பதிய வைத்திருந்தது பார்த்திபனுக்கு பிடித்தது.

அவளோ அமைதி, அவனோ நண்பர்களோடு இணைந்து வாழ்க்கையை அடாவடியாக வாழ்பவன். இருவருக்கும் வெவ்வேறு வண்ணங்கள் இருக்க, இருவரும் இணைந்து நிச்சயம் வானவில்லாய் உருமாறுவோம் என்ற நம்பிக்கை அவனுள்.

உற்சாகமாய் வேலைகளைக் கற்க துவங்கினான். அவள் வந்த பிறகு தன்னைப் போல் தோளில் பொறுப்புகள் கூடியது போல் இருந்தது.

பார்த்திபன் ஒரு பக்கம் தன்னைத் தானே மெருகேற்ற, ஆரபி கீழே இறங்க துவங்கினாள்.

கவனம் அதிகம் சிதறியது. அதற்கு மேல் பொறுக்க முடியுமென்று நம்பிக்கையில்லை. அன்று கோவிலுக்கு வெளியே வந்து நின்றவள், வேண்டும் என்றே தன்னுடைய செருப்பை அணியாமல் நிமிடங்கள் பல காத்திருந்தாள்.

நிதானமாக அவளைப் பார்த்திருந்தவன் விறுவிறுவென அவள் முன்பு வந்து நிற்க, அந்த காலனியை அணிந்து வேறு பக்கம் நடக்க துவங்கினாள்.

அவனோ அசையவில்லை, பக்கவாட்டில் திரும்பி பார்த்தவள் சிலையாய் நிற்பவனை பார்வை ஒன்று பார்க்க, பார்த்திபன் கால்கள் அவளைத் தொடர்ந்தது தேவையான இடைவெளி விட்டு.

இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த நூலகத்தினுள் நுழைய, வேறு வழியில்லாமல் தானும் சென்றான் பார்த்திபன். கைக்கு கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்து ஆரபி அமர, பார்த்திபன் தேடி தேடி ஒரு புத்தகம் எடுத்து வந்து அமர்ந்தான்.

அவனை முறைத்துப் பார்த்தவளுக்கு தனக்கு முன்னே இருப்பவனிடம், எப்படி இப்படி உரிமை வந்ததென வியப்புதான். கல்லூரி காலங்களில் கூட படிக்காதவன் அன்று தீவிரமாக படித்தான்.

தொண்டையை செருமினாள் தானாக பேச தயங்கி. விழியை மட்டும் உயர்த்தி என்ன என பார்த்தான். ஆரபிக்கு ஐயோ என்றானது.

‘என்ன எதிர்பார்க்கிறான் இவன், தான் பேச வேண்டும் என்றா?’ ஆரபியின் பரிதவிப்பைப் பார்த்தவன் புத்தகத்தை மூடி வைத்து மெல்லிய குரலில், “என்ன சொல்லு…” என்றான்.

“ஏன் இப்டி பண்றேள்?” என்றாள் இயலாமையோடு.

“எப்படி பண்றேன்?” கன்னத்தில் கை வைத்து சாவகாசமாக கேட்டான்.

“இதோ இதுதான்… இந்த அசட்டுத்தனம்தான்… இதுதான் என்னை பாடா படுத்துது. நோக்கு எந்த பிரச்சனையும் இல்ல, அதான் அத்தனையையும் தூக்கி என் சிரத்துல நீங்க வச்சிட்டேளே…”

“நான் என்ன மாமி பண்ணேன்?”

கண்களை சித்திரவதையாய் மூடி திறந்தவள், “இவ்ளோ உரிமையா மாமி சொல்லாதேள்…”

“ஏன், எனக்கு உரிமை இல்லையா?”

ஆரபி கண்களில் சட்டென நீர் கோர்த்தது, “அவ்வளவு உரிமை இருக்கவா, எதுக்காக ஒரு மாசமா என் கண்ணுல படாம இருக்கேள்? நான் வாட்டுக்கு என் ஸ்டடிஸ் உண்டு, நான் உண்டுன்னு தானே இருந்தேன்?

நீங்களா வந்தேள், ஏதேதோ பேசி மனச குழப்பிவிட்டு இருந்த சுவடே தெரியாம மறைஞ்சிட்டேள். நேக்குதான் எதுலயும் கவனம் செலுத்த முடியல. ஆத்துல என்னை எல்லாரும் விசித்திர ஜீவன் போல பாக்க ஆரமிச்சிட்டா.

நேக்கு ஒரு மாதிரி ஆயிடுத்து. நோக்கு அதைப் பத்தின கவலை எதுவுமில்லை. ஏதோ ஒரு மூலைல நின்னு வேடிக்கை பாத்துண்டு போய்டுவேள்…”

“அது எல்லாம்…”

“நேக்கு உங்கள பத்தி ஒரு துளியும் தெரியாது. உங்க நாமத்தை தவர. அதுவும் அன்னைக்கு நீங்க வந்து சொல்லாம இருந்தா, புதிராவே தான் இருந்துருக்கும். எந்த நம்பிக்கைல இப்படி வந்து உங்கட்ட பேசிண்டு இருக்கேன்னும் நேக்கு தெரியல…”

அவள் முன்பே கைப்பேசியை எடுத்து வைத்தான் தன்னுடைய குடும்ப புகைப்படத்தோடு, “அம்மா, அப்பா, அண்ணன், தம்பி இதுதான் என் குடும்பம். அம்மா, அப்பா கவர்ன்மென்ட் வேலை. அண்ணன் ஐடி வேலை.

நான் உனக்கே தெரியும், ஆடிட்டர் முடிச்சிட்டு இருபத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு வேலை பாக்குறேன். தண்ணி, சிகரெட் எந்த பழக்கமும் இல்ல. இத தவர சிறப்பா என்னை பத்தி சொல்ல எதுவுமில்லை. நம்பி குடும்பம் நடத்த வரலாம் மேடம் நீங்க…” சொகுசாக சாய்ந்து அவளைக் கண் சிமிட்டாமல் பார்த்தான் பார்த்திபன்.

ஆரபிக்கு உறைந்தது உலகம். துவங்காத அத்தியாயத்தில் அதற்குள் இறுதி வரை சென்றுவிட்டான். அதற்கு தான் தயாரா என்ற சந்தேகம் வேறு, வீட்டினரை எதிர்க்க வேண்டி வரும்.

இவனை இன்னும் முழுதாய் நம்ப முடியவில்லை. எல்லாம் நடிப்பாய் இருந்தால் என்ன செய்வது? உண்மையாக இருப்பானா? கூறியது போல் அல்லாது கெட்ட பழக்கங்கள் ஏதேனும் இருந்துவிட்டால்?

தன்னிடம் பழகவே இது போல் நாடகம் நிகழ்த்தி படத்தில், செய்திகளில் வருவது போல் ஏமாற்றி ஓடிவிட்டால்? தறிகெட்டு ஓடிய மனதினைக் கடிவாளமிட்டு நிறுத்தினாள் ஆரபி ஆணவனின் குறுகுறு பார்வையில்.

ச்சீ… ச்சீ… அப்படியெல்லாம் இருக்காது என்றது ஆழ்மனம். ஏதோ அதற்கு அவன் மேல் கண்மூடித்தனமான…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!