Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 4.2

“நம்பிக்கை வரலன்னு தெரியிது. ஒன்னும் அவசரமில்லை, மேடம் நீங்க பொறுமையா யோசிச்சு முடிவு சொல்லுங்க, வெயிட் பண்ணுவேன்.” என்றான் பார்த்திபன்.

“மேடம் இல்ல” ஆரபி வெடுக்கென பேசினாள், அந்நியமாய் தோன்றியது அது.

“என் பேர் ஆ…” ஆரபி பேசும் முன்பே கை நீட்டி தடுத்தான் பார்த்திபன் அவசரமாக.

“அன்னைக்கு சொன்னது தான் மாமி, உன் பேர் நான் கேட்டது உன்ன மனசுக்குள்ள கொஞ்சுறதுக்கு. உன் பேரை நீ சொல்றது எனக்கு உன் மேல முழு உரிமை தர்ற மாதிரி, முழு சம்மதம் இருந்தா மட்டும் சொல்லு.” என்றான் எழுந்து நின்று.



Advertisement

‘பெயரை கூறாவிட்டால் விட்டுவிடுவானா?’ என்ற கேள்வியும் உதித்தது மனதினில். அவள் வருவாள் என்று பார்த்திபன் வெளியேறியிருக்க, அவளோ இருந்த இடத்திலிருந்து அசையவில்லை. மீண்டும் உள்ளே வந்தவன்,

“இன்னும் எதுவும் பேசணுமா?” கேட்டான்.

கோவமாக எழுந்தவள், “பேர் சொல்லாம போனா விட்டுட்டு போய்டுவேளா?” சினம் குறையாது கேட்டாள்.

Advertisement

அவனை விட மனம் வரவில்லை, தன்னைக் காதலோடு பார்க்கும் அந்த கண்களின் கவனத்தை வேறு பக்கமோ, வேறு பெண்ணோ பெறுவது சுத்தமாக விருப்பமில்லை ஆரபிக்கு.

Advertisement

“நான் அப்படி சொல்லவே இல்லையே…” பொறாமை சற்று எட்டி பார்த்தவள் முகம் பார்த்து சிரித்தான்.

“சொல்லாதவா எதுக்கு என்ன விட்டுட்டு போகணும், போங்கோ…” அவனைத் தாண்டி வெளியேறியவள், வாசலின் அருகே சென்றதும் நின்று திரும்பி,

“என் நாமத்தை சொல்ல கூடாதுன்னு சொன்னேள்ல? நான் உம்மை விட பிடிவாதக்காரி. முரணா செய்றது தான் நேக்கு பிடிக்கும். ஆரபி என் பேர், என்ன பண்ணுவேள் பண்ணிக்கோங்கோ…”

Advertisement

உதட்டை சுளித்து கோவமாக அவள் வெளியேற, அந்த கன்னத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாக்கள் அவளது மனதின் எண்ணங்களைப் பார்த்திபனுக்கு பளிச்சிட்டு காட்டியது.

‘உன் கற்பனை முழுதும் என்னை நிரப்பிக்கொள்’ என்ற அவளது அனுமதியானது, பார்த்திபனுக்கு சிலிர்ப்பைத் தந்தது.

உறைந்த புன்னகை முகத்தில் மலர, தேனைப் பருகும் வண்டாய் வாசம் பிடித்து, சொக்கி போய் அவள் பின்னாலே வெளியே வந்தான். அந்த பூவோ அந்த வீதியின் பாதி தூரத்தை சுறுசுறுப்பாக கடந்திருந்தது. வந்த பொழுது இருந்த சுணக்கம் அவளிடமில்லை.

உடலில் தெம்பு கூடி, யானையே அடித்து வீழ்த்தும் சிறுத்தையின் பலத்தை ஒத்த நம்பிக்கையோடு இருந்தது அவள் நடை.

‘தன்னாலா? தான் உதிர்த்த வார்த்தைகளா அல்லது மனதில் குடிகொண்டிருந்த காதலா?’

கர்வம் தலை கோத, வெட்கம் மீசையை முறுக்கியது.

நாட்கள் அழகாக நகர்ந்தது இருவருக்கும். அதிகம் பேசாமல் பார்வையால் காதலை உறுதிப்படுத்திக்கொண்டு போயினர்.

முழுதாய் பத்து மாதங்கள் கோவில், நூலகம் என காதலை வளர்க்க, இவளும் அவனிடம் சக காதலர்களைப் போல் மணி கணக்கில் பேசவில்லை. அவனுக்கும் படிக்கும் பெண்ணின் மனதை அதிகம் கெடுக்க மனம் வரவில்லை.

இதயத்தில் அடிக்கும் முதல் அலையின் தாக்கம், வாழ்க்கையை தடுமாற வைத்துவிடக் கூடாதென்ற பிடிவாதம், அவர்களை அழுத்தமாய் கால்களை வேரூன்ற வைத்தது.

கடையில் ஆரபியைப் பார்த்தாலே அங்கு வரும் சக வாடிக்கையாளராக மாறி, துரத்தில் நின்றே பார்த்து சென்றிடுவான். அந்த பத்து மாதத்தில் பார்த்திபனைப் பற்றியும் அவனது குணாதிசயங்களைப் பற்றியும், வெகுவாக அறிந்து போன ஆரபிக்கு முழு மகிழ்ச்சி.

சரியான கைகளில் வந்து சேர்ந்த திருப்தி. ஒரு நாள் பார்வையோ, வார்த்தையோ எல்லை மீறி சென்றதில்லை, கண்ணியமான காதலனாய் இருந்தான்.

அவளுக்கு ஒரே பயம், தன்னுடைய தந்தையை எண்ணிதான். தந்தையாய் தோள் கொடுத்தாலும், கண்டிப்புணர்வும் கூட. மகளுக்கு விருப்பம் போல் மாப்பிள்ளை தேட வேண்டும் என, மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுதே, மகளது மனதை விதி அவர் முன்பு திரையிட்டு காட்டியது.

அன்று ஒரு நாள் கல்லாவில் அமர்ந்திருந்த ஆரபி பணம் குறைவாக கொடுத்ததாக ஒருவன் சண்டையிட, அவள் பிடிவாதமாக தான் சரியாக கொடுத்ததாக கூற, அவளை நெருங்கி வந்து அவன் பேசவும், தூரம் நின்று பார்த்த பொறுமையிழந்த பார்த்திபனின் சமாதான பேசிச்சையும் உதறினான் அவன்.

ராஜ் கோபால் எதற்கு வீண் பிரச்சனை என யோசித்து பணத்தை எடுத்து கொடுக்க மகள் விடவில்லை.

“என் மேல தப்பிருக்குன்னு நீங்களும் சொன்னா தாராளமா குடுங்கோ ப்பா.” முகத்தைத் தூக்கி வைக்க, மகளை அத்தனை மனிதர்கள் முன்னிலையில் விட்டுக்கொடுக்க முடியவில்லை.

வார்த்தைகள் வளர பார்த்திபனால் தன்னவளை விட்டு ஒதுங்கி நிற்க முடியவில்லை. சிறுக சிறுக வளர்ந்த சண்டை கைகலப்பில் வந்து முடிய, பார்த்திபன் உடனே இடைபுகுந்து ஆரபியைக் கண்ணாலே அகல கூறி சண்டையில் ஈடுபட, அங்கிருந்தவர்கள் பிரித்து நிறுத்தவும் கோவம் குறையாமல் திமிறியவன் கை, சூடான எண்ணையில் பட்டு பொத்து போனது.

அதன்பிறகே அந்த சண்டை நின்று, சண்டையிட்டவனை கூட்டத்தினர் அப்புறப்படுத்தினர். ஆரபி துடித்துப் போனாள்.

கண்ணீர் மல்க கூட்டத்தின் மத்தியில் முகம் சுருங்க வேதனையைப் பொறுத்து நிற்பவனை, நெருங்க முடியாமல் அவள் தவித்த தவிப்பானது இன்றளவும் தனக்கே அடிபட்டது போல் வேதனைதான்.

உடனே ராஜ் கோபால், பார்த்திபனை அழைத்து அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை வழங்கி, அவன் இல்லத்தில் விட்டு வந்தார். வீட்டிற்கு வர அங்கு மகள் அன்னையின் மடியில் அழுத நிலையில் இருக்க,

“அந்த பையனுக்கு ஒன்னும் ஆவலல ன்னா. சௌரியமா தானே இருக்கா? சீக்கிரம் சரியாகிடுமோனோ?” மனைவியைக் காட்டிலும் மகளின் கண்களில் இருந்த தவிப்பு வேறாய் இருந்தது.

அந்நியனின் நிலையை அறிந்துகொள்ளும் நிலை இல்லாது, தன்னுடைய உயிருக்கு நிகரான ஒரு உறவின் நிலை பற்றி அறிந்துகொள்ளும் வேட்கை அது.

“காயம் பெருசுதான், சரியாக ஒரு திங்கள் கூட ஆகும்னு சொல்லிருக்கா.”

தந்தையின் முன்பு என்ன முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அவளுக்கு. கணவன் பார்வை மகள் மீது அசையாமல் படிவதை உணர்ந்த க்ரிஷ்ணாம்பாள், “தன்னால ஒருத்தர் கஷ்டப்படுறானு மனசு பொறுக்கல உங்க பொண்ணுக்கு. சரியாகிடுவா ன்னா, நீங்க கடைக்கு கெளம்பலையா?”

 “ஆரபி!” என்றார் தந்தை.

“தோப்பனார்கிட்ட ஏதாவது சொல்லணுமா?” சந்தேகம் தேங்கி நின்ற அவர் பார்வையைத் தாங்க இயலாது, தலை தாழ்ந்து போனாள் ஆரபி.

“என்னடி ம்மா… அமைதியா இருக்க? பேசு…” அன்னைக்கு இன்னும் கூட நிலைமை புரியவில்லை. ஆனால் ராஜ் கோபால் மகளது தவிப்பை ஹோட்டலிலே கண்டுகொண்டாரே, அதற்காக தான் இந்த விசாரணை.

“ப்பா…” என்றாள் அழுகையோடு தலை நிமிராமல்.

“எத்தனை நாளா இது நடக்குது?”

“ஏன்னா என்ன சொல்றேள்…?” அன்னை பதறினார்.

“நீ பேசாதே ம்மா… பொண்ணு மனசுல என்ன இருக்குனு கேப்போம்.” மனைவியை நிறுத்தி மகளைப் பார்த்தார்.

அவளது தயக்கம், பயம் எல்லாம் விண்ணைக் கடந்தது, “என்ன மன்னிச்சிடுங்கோ ப்பா…” உடல் குறுக்கி விசும்பினாள் ஆரபி.

“பதில் வரல ஆரபி ம்மா…” கேட்டதற்கு மட்டும் பதில் வேண்டும் என நின்றார் தந்தை.

“ஒ… ஒரு வருஷம் ப்பா…”

“எப்படி பழக்கம்?” வியப்பை மறைத்து கேட்டார்.

“கோவில் எதிர்ல தான் அவரோட ஆஃபீஸ்.”

சில நிமிடங்கள் நாற்காலியில் சாய்ந்து ஆழ்ந்த சிந்தனையில் அவர் இருக்க மனைவி, மகளை நிறுத்தாமல் திட்டிக்கொண்டே இருந்தார். ஆரபி சிறிதும் அசையவில்லை, கண்ணீர் சிந்திக்கொண்டே இருந்தாள் ஒழிய, எந்த ஒரு எதிர்வினையும் வரவில்லை.

அதுவே அவளது உறுதியை கூற, கைப்பேசிக்கு வந்த அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் பேசியவர், “அந்த பையனை அழைச்சு, இங்க வர சொல்லு ம்மா.” என்றார்.

மகள் அதற்கும் தயங்க, “வண்டி ஓட்ட முடியாட்டி என்ன, ஏதாவது வண்டி புடிச்சு வர சொல்லு. நேக்கு இன்னைக்கே பேசியாகணும்.” பிடிவாதமாக நின்றார்.

“இல்ல ப்பா, நேக்கு அவரோட மொபைல் நம்பர் தெரியாது.”

“நடிக்காதடி ம்மா… ஒரு வருஷம் பழக்கமிருக்காம், ஆனா இவா ரெண்டு பேரும் போன்ல பேசிக்கிட்டதே இல்லையாம். யார் காதுலடி பூ சுத்த பாக்குற?”

மனம் பாரமாகியது, “என்ன நம்புங்க ம்மா, அவா நம்பர் என்கிட்ட இருந்ததே இல்ல. நான் காலேஜ் போறதால அவா என்னை அதிகம் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டா. நேர்ல கூட அதிகம் பேசிக்க மாட்டோம்.”

க்ரிஷ்ணாம்பாள், “இவ பேசுறத வச்சு புரிஞ்சுகோங்கோ ன்னா, இது காதலே இல்ல. காலம் கெட்டு போய் கெடக்குது. ஆர்வத்துல ஏதோ பண்ணிட்டா, அப்டியே மூடிடுங்கோ.” என்றார்.

மகள் அழுகையோடு தந்தையை நாடினாள், “தினம் பாத்து பேசிட்டாதான் காதலா ப்பா? மணி கணக்கா பேசி தான் எங்க காதலை வளர்க்கணும்னு, எங்க ரெண்டு பேருக்கும் தோனாம போனது எங்க தப்பில்லையே ப்பா?

இன்னைக்கு எனக்காக அவர் முன்ன வந்து நின்னது போதுமே ப்பா. ஈர்ப்புல உருவானது இல்ல ப்பா, என்னையும் மீறி எல்லாம் நடந்துத்து. மன்னிச்சிடுங்கோ ம்மா, அவாளை தாண்டி ஒருத்தரை என்னால எப்பவும் நித்தரைல கூட யோசிச்சு பாக்க முடியாது.”

வாயடைத்து போயினர் பெற்றோர். ஒரு வார்த்தை எதிர்பேச்சு பேசாதவள் இன்று பிடிவாதமாக நிற்கவும், அதற்கு மேல் அவளிடம் பேசுவது வீண் என அறிந்தனர்.

தந்தையிடம் கைப்பேசியை நீட்டினாள், “என் மேல சந்தேகம் இருந்தா பாத்துகோங்கோ, அவர் செல் நம்பர் என்கிட்ட இல்ல.” தந்தை வாங்கவில்லை.

அடுத்த பதினைந்து நாட்கள் இது பற்றிய பேச்சுகள் வீட்டில் எதுவும் நிகழவில்லை. ஆரபிக்கு பார்த்திபனை பார்க்கும் ஆசை அதிகம் பிறந்தது. அவன் நலனைப் பற்றி அறிய, அவனோ காயத்தின் காரணமாக அவள் கண்ணிலே படவில்லை.

பதினைந்து நாட்கள் பிறகு வந்தான் கோவிலுக்கு. அவன் கைகளைக் கண்ணீர் பெருக பார்க்க கையை காட்டினான், “சரியாகிடும் மாமி, வலி கொஞ்சம்தான் இருக்கு, நீ ரிலாக்ஸ் ஆகு.”

“உங்களுக்கு என்ன பாக்கணும்னு தோனவே இல்லைல?”

“வண்டி ஓட்ட முடியல மாமி, வெளிய எங்கையும் வர முடியல. இப்போ கூட விஷ்ணு கூடதான் வந்தேன்.”

“அண்ணா நல்லா இருக்காளா?”

“ம்ம்ம்… நல்லாதான் இருக்கான், உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும் மாமி.”

“செத்த அங்க ஒக்காந்து பேசலாமா?” இருவரும் அங்கிருந்த முருகன் ஆண்டாள் சந்நிதானத்திற்கு சென்று அமர்ந்தனர்.

பார்த்திபன் கரம் பற்றியவள் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க, கொப்பளித்து கை முழுதும் சிவந்து போயிருந்ததைப் பார்க்கவே மனம் தாளவில்லை.

“இதுக்கு தான் உன்னை பாக்க வரல.”

கண்ணீரைத் துடைத்தாள், “ஏதோ சொல்லணும்னு சொன்னேளே, சொல்லுங்கோ.”

“உன் அப்பா என்னை பாக்க கூப்பிட்டார்.”

“தோப்பனார் எதுக்கு அழைச்சார்? உங்கள எதுவும் சொல்லலேல?” பதறினாள் ஆரபி.

“என்ன மாமி, என் மாமனாரை என்ன வில்லன்னு நினைச்சியா?”

“நான் ஏன் அவரை அப்…” அவன் பேசியது புரிய திகைத்தவள், “ஏன்னா அப்பா நம்ம கல்யாணத்துக்கு சரி சொல்லிட்டாளா?” நம்ப முடியாமல் தடுமாறியது ஆரபி இதயம்.

“திருத்தம், காதலுக்கு ஓகே சொல்லிருக்கார். கல்யாணத்துக்கு இல்ல.” என்றான் புதிர் போட்டு.

“புரியிற மாதிரி சொல்லுங்கோ ப்ளீஸ்…”

பார்த்திபன், “காலைல போன் பண்ணார், உங்க ஜாதகம் எடுத்துட்டு வாங்கனு. உங்க கடை ஆஃபீஸ் ரூம்ல வச்சு தான் பேசுனோம். உன் ஜாதகம் வச்சு பாத்ததுக்கு அப்றம் தான் முகமே தெளிச்சியாச்சு. நல்லா இருந்துச்சு போல பொருத்தம். ஆமா உன் தோப்பனார் ஜாதகம் எல்லாம் பாப்பாரா?”

ஆரபி, “அது இப்போ முக்கியமா? தோப்பனார் என்ன சொன்னார், அதை சொல்லுங்கோ.” அவசரப்படுத்தினாள்.

“உனக்காக சரினு சொல்றேன்னு சொன்னார். ஆனா சொசைட்டில நல்ல இடத்துல இருக்கேன், நீங்க ஒரு இடத்துல கை நீட்டி சம்பளம் வாங்குறது எனக்கு புடிக்கல. சின்னதோ பெருசோ சொந்தமா ஒரு தொழில் ஆரமிச்சிட்டு வந்து பொண்ணு கேளுங்க, அந்த தொழில் நஷ்டப்பட்டா கூட நம்ம ஹோட்டல் பாத்துக்கலாம்னு சொல்றார்.”

ஆரபி அமைதியாகி விட்டாள்!

“என்னடி வீட்டோட மாப்பிள்ளை பாக்குறாரா உன் அப்பா?” என்றவன் கேள்வியில் சினம் எட்டி பார்த்தது.

இருவருக்கும் இடையில் சிக்கி தவித்தவள் மௌனம் புரிந்தவன், அவள் கைகளில் ஆறுதலாய் தட்டி,

“உன் அப்பா என்னோட திறமையை ஈகோவை தட்டி விட்டார். இனி அவருக்கு நான் யாருனு காட்டாம இருக்க போறதில்ல. என்னோட தொழில்ல லாபம் பாக்காம உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டு வந்துருக்கேன்.”

இயலாமையோடு அவனை நோக்க, “கவலைப்படாத, ஹார்ஷா பேசல, ஜெய்ச்சிடுவேன்ல மாமி?”

“உமக்காக இல்லனாலும், எனக்காக கண்டிப்பா நீங்க ஜெயிச்சு வருவேள். தைரியமா வேலைய ஆரமிங்கோ…”

***

அன்று அவள் கொடுத்த நம்பிக்கையில் தான் இன்று இவ்வாறு உயர்ந்து பறக்கிறான் பார்த்திபன். அவனது கையை எடுத்து கன்னத்தில் வைத்து சாய்ந்தவள் அதே கையில் முத்தம் கொடுத்து, “இந்த ஒன்னு போதாதா, உங்கள விடாம இறுக்க புடிச்சுக்க?”

பல வருடங்கள் முன்பு ஏற்பட்ட காயம் மாறியிருந்தாலும் அந்த தழும்பு அவன் கைரேகையாக மாறியது.

“திருப்தியா இல்ல பதில்.” மனைவியின் நெற்றியில் முத்தம் பதித்து நேரமானதைக் கூறி வெளியேறினான்.

மகளின் அருகே படுத்த ஆரபி, அன்னையிடம் கணவன் இடத்திற்கு கொடுத்த பணத்தைப் பற்றி பகிர்ந்து உறங்கிவிட, மாலை தந்தையின் அழைப்பில் தான் கண் விழித்தாள்.

“என்ன ம்மா ஆரபி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்ருலாமோன்னோ? உன்னோட ஆம்படையான் பணம் குடுத்துட்டு வந்த நேரம், எமகண்ட நேரம். அதோட அவர் ஜாதக கட்டத்துல இன்னும் நாலு மாசம், எந்த முயற்சியும் புதுசா எடுக்க கூடாதுனு இருக்கு.

அவர் நேரமும் சரியில்ல, உயிருக்கே ஆபத்து நடக்கவும் வாய்ப்பிருக்கு. இப்படிப்பட்ட நேரத்துலயா இதெல்லாம் யோசிக்காம பண்ணுவேள்?” தந்தை கொடுத்த தகவலில் உலகமே தட்டாமாலை சுற்றியது ஆரபிக்கு.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!