Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 8.2

“உங்கிட்ட நிதானம் இருக்குற வரைதான் என்னோட வேகம் கன்ட்ரோல்ல இருக்கும்டா பார்த்தி, சோ நிதானமா இரு. அவன் கைலயே எந்நேரமும் அந்த பொருள் இருக்கும் போல, சோ அவன் நம்பிக்கையானவங்க தவர, யாராவது ஒரு ஆள்கிட்ட தான் கேக்க முடியும். சோ கொஞ்ச டைம் எடுக்கும்னு நினைக்கிறேன், நீ வீட்டுல இருக்கவங்கள கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோ.”

பின் கழுத்தை நீவி பொறுமையை அடக்க முயன்று தோற்று பார்த்திபன் நிற்க என்ன முயன்றும் முடியவில்லை அவனால். தன் மேல் கை வைத்திருந்தால் பரவாயில்லையே, குழந்தை மீதல்லவா கை வைத்துவிட்டான். சிகையை சரமாரியாக கோதி கைகளை மடக்கி நின்றான்.

“பொறுமையா பண்ணலாம் பார்த்தி. அந்த ஒரு விஷயத்தை மட்டுமே நம்பி ஒரு யூஸ் இல்ல. அவனை அடிக்கிற வேற எதாவது விஷயத்தையும் பாக்கலாம். நீ நிம்மதியா வீட்டுக்கு போ.”

விஷ்ணு கூறுவதும் சரியெனப்பட, “நீயும் கேர்ஃபுல்லா இரு விஷ்ணு, என் பலமே நீதான். அவன் உன்னையும் குறி வைக்க வாய்ப்பிருக்கு. அப்புறம் அவன் டீடையில்ஸ் எல்லாம் என்னோட பர்சனல் மெயில்கு ஷேர் பண்ணு. நான் கெளம்பவா, ஆபீஸ் பாத்துக்குறியா? நான் டெகரேஷன்ஸ் எல்லாம் எந்த அளவுல இருக்குனு பாத்துட்டு வீட்டுக்கு கிளம்புறேன்.”



Advertisement

“நாளைக்குனு தான் சொன்னாங்க, ஆனா இப்போதான் அம்மா சொன்னாங்க, பொண்ணுக்கு லீவ் கிடைக்கலையாம், அதனால ஞாயிற்றுக்கிழமை வர்றேன்னு சொல்லிருக்காங்களாம். சரி, நான் பாத்துக்குறேன் நீ கெளம்பு.”

நண்பனை அனுப்பி வைத்து மீதம் இருந்த சில அலுவலக வேலைகளை முடித்து அலுவலகத்தை விட்டு வெளியே வர, அங்கு நின்றது அந்த சிகப்பு நிற ஸ்கூட்டி.

அந்த வாகனத்தைப் பார்த்ததும் எக்கச்சக்கமான கோவம் விஷ்ணுவுக்கு. கண்களை சுழற்றி பார்க்க, அங்கு எதிரே இருந்த ஒரு ஜெராக்ஸ் கடையின் முன் பன்னை (bun) உண்டபடி நின்றிருந்தாள் அவள்.

Advertisement

அனாயா! சலிப்போடு மீண்டும் வாகனத்தைப் பார்த்தான். கடையின் முன் இருந்த போஸ்ட் கம்பத்திற்கு அருகில் அவன் வாகனம் நிற்க, அதனை ஒட்டி… மிக அருகே அதாவது விஷ்ணுவின் வாகனத்தை சிறிதும் நகர்த்த முடியாதபடி ஒட்டி நெருக்கமாக நிறுத்தியிருந்தாள். விஷ்ணு மீண்டும் அவளைக் கோவமாக பார்க்க, அவளோ கண்ணடித்து அசராமல் நின்றாள்.

Advertisement

“டேய்…” வாய் விட்டு ஏதோ சொல்ல வந்தவன், சிகையைக் கோதி தன்னை சமன்செய்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.

அவளுக்கோ உடல் எல்லாம் புத்துணர்ச்சியாக இருந்தது. அவனை விட அவன் வண்டியையும் தன்னுடைய வண்டியையும் தொட்டு மீண்டது அவள் பார்வை.

ஒட்டி நின்றது இரண்டும்… நிறுத்தியிருந்தாள். அவன் கைகள் கோர்த்து, கால்கள் உரசி மார்பில் முகம் புதைத்து நிற்பது போல் மூச்சு முட்டியது.

Advertisement

அப்பப்பா! உயிரற்ற இரண்டு வாகனம் நெருங்கி நிற்பதற்கே இத்தனை உணர்ச்சியா? என அவள் கைகளிலிருந்த மிருதுவான ரொட்டி கேட்க, பெண்ணின் மனதினுள் மெல்ல சிரிப்பு சத்தம்.

பேசிக்கொள்ளட்டுமே, அதுக்கென்ன தெரியும் அவளது ஆசையும் அவனது குணமும்.

அவளைப் பொறுத்தவரை அவன் பொருட்கள் எல்லாம் அவன். அதை பார்த்தே மோட்சம் அடையும் பூங்காற்று.

கள்ளப் புன்னகை முகத்தில் தவழ, பல நேரம் தனக்கு அந்த ரொட்டியைத் தருவதாக கூறி போக்கு காட்டிக் கொண்டிருந்தவளை, ஏக்கமாக பார்த்த அந்த குட்டி நாய்க்கு பன்னை போட்டு வாகாக சாய்ந்து நின்றாள்.

விஷ்ணுவுக்கோ கோவம் இமயத்தைத் தொடும் உணர்வு, “ஏய்! வந்து வண்டிய எடு.” என்றான் கறாராக அவளிடம்.

அவன் சொல் பேச்சைக் கேட்டு, அவன் பொறுமையை சோதிக்கவே நிதானமாக வந்தவள் வாகனத்தை நகர்த்தாது, அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் உரிமையாக.

அதில் தீப்பிழம்பாய் வெடித்தவன், “அடிச்சு பல்ல உடைக்க போறேன். இறங்கு என் வண்டில இருந்து…” என்றான் பற்களைக் கடித்து.

“ஹலோ மிஸ்டர், இது என் வண்டி.” என்றாள் திமிரான உரிமையோடு.

“குடும்ப புத்திதான வரும், அடுத்தவன் பொருளை எப்படி அடிச்சு வாங்குறதுனு உன் தாத்தன் பிளான் போட்டு குடுத்தானா?”

அனாயா, “இப்டி எல்லாம் பேசி பாத்தா, நான் மசிய மாட்டேன்னு தெரியும்ல மிஸ்டர் விஷ்ணு. பின்ன ஏன் இன்னும் இதையே ட்ரை பண்றீங்க?”

விஷ்ணு, “சூடு, சொரணை இருந்தாதான அதெல்லாம் புரியும். உன்கிட்ட பேச எனக்கு நேரமில்லை, இன்னைக்கு வேகமா போய் தூங்குனா தான் நாளைக்கு காலைல பொண்ணு பாக்க போறப்போ ஃப்ரெஷ்ஷா இருக்கும். சோ கொஞ்சம் விலகிக்கோங்க மிஸ்…” உறைந்து நின்றாள் பெண்.

கால்கள் தடுமாற்றத்தை உணர, கண்களில் கடலே குடி போனது. பொய்யுரைக்கிறான் என மூளை கூறினாலும் இன்னமும் முட்டாளாய் இருக்க போகிறாயா என குற்றம் சாட்டியது மனம். தேடிச் சென்று காதலை யாசிக்காமல், தூரத்தில் நின்றே அவன் மனதை மாற்றிவிடலாம் என்ற எண்ணம் பொய்த்துப் போனது. மனதின் சிறு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கை, காத தூரம் சென்றுவிட்டது. தொலைத்து, தோற்றுப் போனாலும் என்றாவது தனக்கென தன்னவனாய் வந்து நிற்பான் என, கனா காணாத இரவுகள் இல்லை.

ஆனால் அவை யாவும் கனவாய் மட்டுமே முடிவு பெறுமா… ஒவ்வொரு முறை நீ எனக்கு வேண்டாம் என தூக்கி எறிபவன் வார்த்தை, தான் எப்பொழுது கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் மனதை உயிரோடு மாய்க்கும் சக்தி கொண்டது.

முகம் வாடி நின்றவளைப் பார்த்து, “இதுக்குதான் உரிமை இல்லாத இடத்துல அதிக உரிமை எடுக்க கூடாதுனு சொல்றது. வண்டி எடு…” என்றவன் குரல் மொத்தமாக அந்நியமாய் பட்டது.

இயந்திர கதியில் அவன் வாகனத்தை விட்டு நகர்ந்து நின்று, அவனையே அதிர்ச்சியோடு பார்த்தவள் சில நொடிகள் ஆகியும் நகரவில்லை.

அவள் கையில் தளர்வாய் தொங்கிய வண்டியின் சாவியை பார்த்தவன், அவள் கை தீண்டாது அதை வாங்கியது கூட அவள் எண்ணத்தில் பதியவில்லை.

அவள் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தி தன்னுடைய வாகனத்தை எடுத்தவன் அவளிடம், “கெளம்பு இங்க இருந்து…” என்றான்.

அவனுடைய ஒவ்வொரு செயலையும் பார்த்தவள் மனம் ரத்தக் கண்ணீர் சிந்தி வேதனையுற, அவனிடம் பேசும் திராணி இல்லாது மௌனம் காக்க அவளிடம் அசைவே இல்லை.

“ஹலோ உன்னைதான்… இந்த ஏரியாவே இன்னும் கொஞ்ச நேரத்துல வெறிச்சோடி போய்டும், கெளம்பு.” என்றான் மீண்டும்.

“அதான் வேணாம்னு சொல்லிட்டீங்கல்ல, நீங்க போய்க்கோங்க. என்னை நான் பாத்துக்குறேன்.” என்றவள் கடினப்பட்டு, அவனிடமிருந்து பார்வையை அகற்றி கண்ணீரைக் கட்டுப்படுத்தி நின்றாள்.

ஒரு சில நொடிகள் அவளை ஆராய்ந்த விஷ்ணுவின் விழிகள் பிறகு மாறி சாலையில் விழ, அவன் வாகனம் அங்கிருந்து தன்னுடைய வழக்கமான வேகத்தை எடுத்து பறந்தது.

மெய் மறந்து தன்னுடைய யாதுமானவன் கண்ணை விட்டு மறையும் வரை தவிப்போடு பார்த்தவள், அதற்கு மேல் அங்கு நின்று தன்னுடைய கண்ணீரை எவருக்கும் காட்சிப் பொருளாக காட்ட விரும்பாமல் கிளம்பினாள்.

வீட்டை நெருங்க நெருங்க அவள் உடலே நெருப்பில் எரிவது போல் தகித்தது. வேதனையில் நிற்காமல் விழுந்த கண்ணீர் எல்லாம், இப்பொழுது அதீத எரிச்சலில் கண்ணீராய் மாறியிருந்தது.

அந்த விஸ்தாரமான வீட்டினை அடைந்ததும் தானாக அந்த பெரிய இரும்பு கதவு திறக்க, வாகனத்தை வாசலிலே கோவமாக போட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

மகளின் வருகைக்காக காத்திருந்த அவளது அன்னை, “என்ன கண்ணு, இவ்வளவு நேரமா வீட்டுக்கு வர?”

கவலை தேய்ந்த முகத்தோடு அன்னை கேட்க, அவருக்கு பதிலளிக்க விருப்பமே இல்லை. ஆனாலும் மனமானது ரணப்பட்டு கிடக்க வார்த்தைகள் நெருப்பை விட சூடாக வந்தது.

“ஏன்மா, அடுத்தவங்க உழைப்புலதான் காலம் எல்லாம் இருக்கணும்னு முடிவோட இருக்கியா? கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா உனக்கெல்லாம்?” அன்னை மனம் அவமானத்தில் துடித்தாலும், வேறு வழியில்லாமல் அமைதியாகி போனது.

“இப்டி எல்லாம் பேசாத கண்ணு, எதுக்கு இந்த கொஞ்ச நாளா இப்படி ஒரு கோவம் உனக்கு தாத்தா மேல?” மகளின் கன்னம் பிடித்து, சிவந்திருந்த அவள் கண்களைப் பார்க்க, அன்னையாய் அவராலும் பார்க்க முடியவில்லை அவள் கஷ்டத்தை.

வாய் விட்டு இதுதான் பிரச்சனை, இதுதான் என் வலிக்கான காரணம் என கூறும் ரகமும் இல்லை அவள்.

“பேத்தி பாத்துட்டு வந்த ஆள் அப்படி ம்மா.” படிகளில் இருந்து இறங்கி வந்த தாமோதரன் பேத்தியை தீர்க்கமாக பார்க்க, அவரை சளைக்காமல் முறைத்தாள் அனாயாவும்.

“என்னை அப்படி சொல்லாதீங்க, எனக்கு அசிங்கமா இருக்கு…”

பற்களைக் கடித்து தந்தையிடம் பேசும் மகளை இதுவரை அவர் பார்த்ததே இல்லை, “என்ன கண்ணு இது, பெரியவங்ககிட்ட இப்படியா நடந்துக்க அம்மா சொல்லி குடுத்துருக்கேன்?” என்றார் குரலை உயர்த்தி.

அதில் சுருக்கென அவர் பக்கம் திரும்பியவர், “நீ மான, மரியாதையோட வாழணும்னும் தான் சொல்லி குடுத்த, மானம் கெட்டுதான இந்த வீட்டுல இருக்கேன்?”

நெருஞ்சி முள்ளாய் குத்திய மகளின் பேச்சு, தந்தையைப் பாதிக்குமோ என அவர் தாமோதரனைப் பார்க்க, அவரோ சுவாரஸ்யமாக பேத்தி, மகளின் உரையாடலைக் கேட்டு அமர்ந்திருந்தார்.

“என்னத்த நீ மானம் கெட்டு போய்ட்ட? நம்மள கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குற மாதிரி தாத்தா நமக்கு துணையா நிக்கிறாங்க.” மகளின் தோளைப் பிடித்து தன்னை நோக்கி திருப்பி கேள்வி கேட்டார் அவள் அன்னை.

“அதுதான் இங்க பிரச்சனையே… இவர் கண்ணுக்குள்ள ஒன்னும் நான் இருக்க ஆசைப்படலை. நீயும் வெளிய வந்து பார், தனக்காக எத்தனை மனுஷங்களோட வாழ்க்கையை அழிச்சு, அதுல இந்த நிம்மதியான வாழ்க்கையை உனக்கு உன் அப்பா குடுக்குறார்னு அப்போ தெரியும்.”

“தாத்தாவை தப்ப பேசாத கண்ணு…”

அனாயா, “என்னம்மா மிரட்டுறியா? மிரட்டிக்கோ பயமில்லை எனக்கு. தப்பு பண்ண கூடாது, பொய் சொல்ல கூடாது, அடுத்தவங்க காசுக்கு ஆசைப்பட கூடாதுனு ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு சொல்லி சொல்லி வளர்த்த, என்னோட பாட்டியோட வார்த்தை இப்ப வரை என் காதுல கேட்டுட்டே இருக்கு. எனக்கு நல்லதை மட்டுமே சொல்லி குடுத்த அவங்களுக்காக தான், இவரை நான் இத்தனை நாள் எதுவும் பேசாம இருந்தேன். இல்லனா இந்நேரம் இங்க நின்னுருக்க கூட மாட்டேன்.”

அன்னைக்கு கோவம் அதிகமெழுந்தது, “போ கண்ணு… இப்ப கூட உன்ன யாரும் இங்க இருந்தே ஆகணும்னு யாரும் சொல்லல. தாராளமா போ…”

அனாயா, “அப்போ உன் அப்பாவை எனக்கு வெளிய கிடைக்கிற வேலைய எல்லாம் கெடுக்காம இருக்க சொல்லு.” என்றாள் சத்தமாக இமாலயம் வரை கேட்கும்படி.

மகள் பேசியதை சிறிதும் சகிக்க முடியாதவர், ஓங்கி மகளை அறைந்துவிட்டு தான் கண்ணீர் வடிக்க, மகளோ இன்னும் இரும்பானாள்.

“சுஜாதா என்ன இது, பேத்தி மேல கை வைக்கிற பழக்கம்?”

தாமோதரன் மகளை அதட்ட, “ப்பா அவ நல்லதுக்கு தானே நீங்க சொல்றிங்க. உங்க கம்பெனில வந்து வேலை செய்றதுல அப்டி என்ன இவளுக்கு பிரச்சனை?”

“எனக்கு பிரச்சனைதான். பாவத்துலயே ஊறி போன அந்த இடத்துக்கு வந்து அந்த பாவத்தை என்னால சுமக்க முடியாது.” அன்னையை இடையிட்டு இரண்டு பெரியவர்களையும் முறைத்தாள்.

சுஜாதா, “அந்த ஆஃபீஸ் தான் இப்பவரை உனக்கு சோறு போடுது.”

மூச்சை வேகமாக இழுத்தவள், “அது நீ என்னை பெத்த கடமைக்கு செய்றது. அதுவும் செய்ய புடிக்கலயா சரி, ஒரு மாசத்துல இந்த வீட்டை விட்டு நான் போயிடுறேன்.”

தாமோதரன், “என்ன ம்மா நீ இப்டி பேசுற? இந்த சொத்து சுகம் எல்லாமே உனக்கு தானே…!”

அனாயா எதுவும் பேசாது தன்னுடைய அறைக்குள் சென்றிட, “ஏன் ப்பா இவ இப்டி இருக்கா, யாரை பாத்துட்டு வர்றா?” என்றார் அன்னை கவலையாக.

“பேத்திய மட்டும் நீ நல்லா கவனிச்சுக்கோ ம்மா. நான் எல்லாம் பாத்துக்குறேன்.” என்றார் மனதில் பல குரூரமான எண்ணங்களைத் தீட்டி.

அனாயா! தாமோதரனின் ஒரே மகள் சுஜாதாவின் முதல் புதல்வி. இரண்டாவதாக ஒரு மகன், பெயர் ஆரிவ். டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மூன்றாவது வருடம் மருத்துவம் பயில்கிறான். அதே மருத்துவமனையில் அவனோடு பயிலும் விக்ரம் என்னும் நண்பன் மூலம் அனாயாவுக்கு அறிமுகமாகியதுதான் விஷ்ணு.

விக்ரமுக்கு சகோதரன் மேல் அளவு கடந்த பாசம், மதிப்பு, மரியாதை அனைத்தும். கல்லூரி காலங்களில் இருந்தே அவனது சகோதரன் தன்னுடைய குடும்பத்தை முன்னேற்றி கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு, கிடைக்கும் வேலைகளை எல்லாம் இழுத்து போட்டு செய்யும் ரகம்.

அதிகம் ஆராய்ந்தான் விஷ்ணு. இதில் அதிக லாபம் ஈட்டலாம், அதே நேரம் எதை படித்து பெரிய அளவில் சாதிக்கலாம் என்கிற முடிவில் கிடைத்ததுதான் அந்த சிஏ படிப்பு. வெறித்தனமாக படித்தவன் முதல் முயற்சியிலே வெற்றி பெற்று சொந்தமாக தொழில் துவங்கவே, இரண்டு வருடம் பல வேலைகளை செய்தான்.

சேமித்த பணத்தை வைத்து தொழில் துவங்க முடிவெடுத்த நேரம்தான், பார்த்திபன் பங்கு கிடைக்க, நண்பன் மேல் இருந்த நம்பிக்கையில் தானே பெரிய தொகையை வெளியில் கடன் வாங்கி, இந்த ஆடிட்டிங் வேலையைத் துவங்கியது.

அதோடு அவர்களது சோதனை நிற்காமல் பல சிக்கல்கள். லைசன்ஸ் வாங்குவதிலிருந்து புது வாடிக்கையாளர்களை நிலையாக பிடிப்பது வரை பல சிக்கல்கள். அத்தனையும் எவர் துணையும் இல்லாமல் தனியே நின்றவன், சில மாதங்களுக்கு முன்புதான் தங்களை இளக்காரமாக பார்த்த சொந்தங்கள் அனைவரையும் அழைத்து, பிரம்மாண்டமான தன்னுடைய வீட்டின் புதுமனை புகுவிழாவை நிகழ்த்தி வெற்றியோடு நின்றான்.

தந்தையின் ஆதரவு கிடைத்தாலும் அதில் விஷ்ணுவின் பங்கு அதிகம் இருக்க, சகோதரன் முயற்சி, உழைப்பு என அனைத்தையும் பெருமையாக பகிர்வான் விக்ரம்.

இயல்பிலே பாட்டியோடு அதிகம் வளர்ந்த ஆரிவ் மற்றும் அனாயா இருவருக்கும் நேர்மை, எளிமை இயல்பாகவே இருக்க, தாத்தாவின் அடாவடி, பொய் எதுவும் பிடிக்காமல் போனது. அதனாலோ என்னவோ நண்பன் கூறிய அனைத்தையும் சகோதரியோடு பகிரும் பழக்கம் கொண்ட ஆரிவ், அதையும் மறைக்காமல் கூற ஏதோ அந்த முகம் தெரியாதவன் மேல் மரியாதை தாண்டிய பிடித்தம் உருவானது.

அந்த புகழ்ச்சி நிறைந்த முகத்தை பார்த்தே தீர வேண்டும் என்கிற முனைப்பில், அவனைத் தேடி அவன் அலுவலகமே ஒரு நாள் வந்துவிட்டாள் அனாயா.

கேட்ட அனைத்து தகவல்களில் அவனை ஒருவாறு அவள் சித்தரித்து வைத்திருக்க, அதனை சிறிதும் மாற்றி விடாமல் நேரில் அவ்வளவு வசீகரித்தான் விஷ்ணு.

கதிரவனின் கதிரினைப் போல் பிரிந்து விழுந்த கூந்தல், பார்வையாலே வேலை செய்ய வைக்கும் அவன் கண்கள், ஓரக்கண்ணால் சுற்றி இருந்ததை எளிதாக படித்தவன் கூர்மை, தான் கண் சிமிட்டாமல் பார்த்ததை கூட உணர்ந்தவனாய், அவளை ஒரு நொடி பார்வையாலே மிரட்டிய அந்த திமிர் என எல்லாமே அழகாக தெரிந்தது அவளுக்கு.

ஏதோ சந்தேகம் என கேட்க வந்தவள் அவனை தள்ளி நின்று பார்த்ததிலே சரணாகதியடைந்திருக்க, அடுத்த நாள் தோழி ஒருத்தியை வம்படியாக இழுத்து வந்து அவனிடம் சந்தேகம் கேட்க வைத்து, அங்கேயே அவனுக்கு ஒரு வாடிக்கையாளரை சேர்த்துவிட்டாள்.

அடுத்த ஒரு வருடம் ஏதேதோ காரணங்கள் கூறி அவனை பார்க்க வருவது, வெளியில் அவனை அதிகம் நோட்டம் விடுவது என அனாயாவின் வாசம் விஷ்ணுவின் பின்னால் போவதாகியது. அப்படி இருக்கையில் ஒரு நாள் விஷ்ணு அவளை கையும் களவுமாக பிடித்துவிட, வேறு வழியே இல்லாமல் தன்னுடைய மனதை அவனிடம் தெரிவித்துவிட்டாள்.

எடுத்த எடுப்பிலே அவளைத் துரத்துவதே வேலையாக விஷ்ணு பார்க்க, தளராமல் அவன் பின்னே சிரிப்போடு வலம் வருவாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, வார நாளில் சொல்லாமல் வீட்டிற்கு வந்த ஆரிவ், சகோதரியின் மடியில் சோர்வாக படுத்து கிடக்க, என்ன என விசாரித்து பார்த்த அனாயாவிற்கு இடியாய் இருந்தது சகோதரன் கூறிய செய்தி.

“நான் சொல்லிருக்கேன்லக்கா, விக்ரம் தாத்தாவை ஏமாத்தி அவங்க கார்மெண்ட்ஸ ஒருத்தர் எழுதி வாங்குனாங்கனு. அது நம்ம தாத்தா தான்க்கா.”

“இல்… இல்ல ஆரிவ்… நீ தப்பா எதுவும் நினைச்சிருக்க வாய்ப்பிருக்கு. அவங்க கார்மெண்ட் ஷாப், நாமளும் கார்மெண்ட் ஷாப் வச்சிருந்ததால நீ… நீயா கனெக்ட் பண்ணிக்காத…” திணறியது அவள் வார்த்தைகள்.

ஏற்கனவே தன்னை நிமிர்ந்தும் பார்க்காதவன் இனி இந்த விஷயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தன்னுடைய காதல் அவ்வளவு தானா என்ற பயம் பெண்ணுக்கு.

“இல்ல க்கா… அவன் சொன்னான், தாமோதரன்னு… நம்ம தாத்தா தான்க்கா.”

“அப்போ… அப்போ அவங்களுக்கு நம்ம ஃபேமிலி பத்… பத்தி தெரியுமா ஆரிவ்?”

“இல்லக்கா, அவங்க ஃபேமிலி ரொம்ப நல்லவங்க. தேவையில்லாத பிரச்சனை வேணாம்னு நம்ம ஃபேமிலி டீடையில்ஸ் எதையும் பசங்ககிட்ட ஷேர் பண்ணிக்கல போல. தப்பு பண்ணவங்க தண்டனையை அனுபவிப்பாங்கனு…”

ஒரு நிமிடம் கண்ணை மூடி வேதனையை உள் இழுத்தவன், “அப்போ நம்ம தானக்கா அந்த சாபத்தை எல்லாம் வாங்கி கஷ்டத்தை அனுபவிக்க போறோம்?” சகோதரன் குரல் கரகரத்து வர, இங்கு அனாயாவிற்கு கண்ணீர் கன்னம் தொட்டது.

‘நான் ஏற்கனவே அனுபவிக்க ஆரம்பிச்சிட்டேன் ஆரிவ்’ மனதினுள்ளே புலம்பியவள், சகோதரனைத் தேற்றவே பல நாட்கள் ஆகியது.

இந்த குற்ற உணர்ச்சியில் விஷ்ணுவை சென்று பார்க்கவும் மனம் வரவில்லை.

அதே சமயம் அவனிடம் இதனை எப்படியாவது கூறி, தன்னுடைய மன சஞ்சலத்திற்கு விடுப்பு கொடுக்க நினைத்தவள் அவனைத் தேடி செல்ல, அங்கு அவன் கையில் தாமோதரன் பற்றிய மொத்த தகவலும் இருந்தது, அனாயா தகவல் உட்பட.

அவள் விஷ்ணுவிடம் கண்ணீர் பாதி, கமறல் பாதியாக தான் யார் என்ற உண்மையை உரைக்க, உணர்ச்சிகளற்று நின்ற விஷ்ணுவும் தனக்கு புதிதாக கிடைத்துள்ள எதிரி உன்னுடைய தாத்தா என்ற தகவலை அவள் முன்பு வைத்தான்.

எத்தனை சோதனையை தான் தாங்கும் அந்த காதல் மனம், “ஒரு விசயம் நமக்குள்ள பிரச்சனையா வந்து நிக்கும்னு நினைச்சேன், ஆனா விதி ரெண்டா காட்டிருக்கு. இதுக்கும் மேல நம்பிக்கை வச்சு ஆசைய வளக்காம வேலையை பாரு.”

சிறிதும் அலட்டாமல் அவன் சென்றுவிட்டான், அன்று முதல் இன்றுவரை. இப்பொழுதும்… அறையில் மெத்தையை துணையாக அணைத்து அவள் மட்டுமே… அழுது அழுது தலை வலியோடு மனமும் அதிகம் வலித்தது மங்கைக்கு.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!